என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகவும், பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதுதான், ஹரிஷ்சந்திரகாட் கோவில். இது மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கிரேஷ்வர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
    இந்தியாவில் அதிசயங்களும், ஆச்சரியங்களும் மிகுந்த ஆலயங்கள் பல இருக்கின்றன. சில ஆலயங்கள் புராணங்களோடும், யுகங்களோடும், கலியுகத்தோடும் தொடர்புடையவையாகவும் அறியப் படுகின்றன. அப்படி ஒரு சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றாகவும், பல ஆச்சரியங்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதுதான், ஹரிஷ்சந்திரகாட் கோவில். இது மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கிரேஷ்வர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

    இந்த ஆலயமானது கலாசூரி என்ற மன்னனால், கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக குறிப்புகள் சொல்கின்றன. இந்த கோவிலுக்கு அருகாமையில் ‘கேதாரேஸ்வரர்’ என்ற சிவலிங்கம் அமைந்த குகை ஒன்றும் இருக்கிறது. இது புராணக் கதைகளோடும், கலியுகத்தின் முடிவு பற்றிய குறிப்புகளைச் சொல்லும் அதிசயம் மிகுந்த கோவிலாகவும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இந்த கேதாரேஸ்வரர் சிவலிங்கம் அமைந்த குகையானது, நீரால் நிரம்பியதாக இருக்கிறது. இதில் எப்போதும் முழங்கால் அளவு நீர் நிரம்பிய நிலையிலேயே காணப்படும். மழை காலங்களில் இடுப்பளவு தண்ணீர் இருக்கும்.

    நீர் நிரம்பிய இந்த குகையில் நீரின் மையத்தில் 5 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று காணப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் பெயர்தான், ‘கேதாரேஸ்வரர்’ என்பதாகும். இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. அந்த நான்கு தூண்களும், குகையின் மேல் பகுதியையும், பூமியின் அடிப்பகுதியையும் இணைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும், கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.

    இந்த தூண்களில் தற்போது ஒற்றைத் தூண் மட்டுமே எந்தவித சேதாரமும் இன்றி முழுமையாக காணப்படுகிறது. மற்ற மூன்று தூண்களும் உடைந்து போய்விட்டன. ஒவ்வொரு யுகம் முடியும் போதும் ஒவ்வொரு தூண் அழிந்து விடுவதாகவும், தற்போது கலியுகத்தைக் குறிக்கும் தூண் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், கலியுகம் முடியும் தருவாயில், அந்த யுகத்தின் கடைசி நாளில் எஞ்சியிருக்கும் ஒற்றைத் தூணும் அழிந்துவிடும் என்பது இங்குள்ள ஐதீகமாக உள்ளது.

    தூண்களுக்கு நடுவே அமைந்த சிவலிங்கத்தை சுற்றியுள்ள நீர் மிகவும் குளிர்ச்சியானது. இந்த நீருக்குள் இறங்கினால்தான், சிவலிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். மழைக்காலங்களில் இந்தக் குகைக்குள் இறங்கிச் சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்வது என்பது கொஞ்சம் சிரமமான காரியம்தான். கலியுகத்தைக் குறிக்கும் வகையில் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் அமைந்த இந்த ஆலயத்திற்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்குடித்திட்டை கிராமத்தில் அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரர் கோவில் ஒன்பது அதிசயங்களை ஒருங்கே அமையப்பெற்றது.
    1 ஒவ்வொரு யுகம் முடியும் போதும் பிரளயம் (வெள்ளப்பெருக்கு) ஏற்பட்டு, புதிய யுகம் தோன்றும். அப்படி ஒரு யுகத்தின் முடிவில் பூமியில் அதீத மழை பெய்து, வெள்ளப்பெருக்கு உண்டானது. உயிர்கள் அனைத்தும் அழிந்தன. அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கிப் போயின. ஆனால் பூமியின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் மேடாக (திட்டு) காணப்பட்டது. ஏனெனில் அங்கு இறைவனின் அருள் இருந்தது. அந்த தலமே ‘தென்குடி திட்டை.’

    2 பரம்பொருள் பல அல்ல.. ஒன்றுதான். ஆனால் அந்தப் பரம்பொருளே தன்னில் இருந்து ஒரு பகுதியை சக்தியாகப் பிரித்து உமாதேவியை உண்டாக்கினார். பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால், திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் சன்னிதிக்கு மேல் உள்ள விதானத்தில் 12 ராசிக்கான கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

    3 பிரளயத்தின் முடிவில் பரம்பொருளும், உமையும் இணைந்து மீண்டும் உலகையும், உயிரினங்களையும் படைக்க மும்மூர்த்திகளை தோற்றுவித்தனர். அவர்கள் இருண்ட பிரபஞ்சத்தைக் கண்டு அஞ்சினர். அலைந்து திரிந்து திட்டையை அடைந்து இறைவனை தொழுதனர். அப்போது பரம்பொருள், உடுக்கையை முழங்கினார். அதில் இருந்து வெளிப்பட்ட மந்திர ஒலிகள், மும்மூர்த்திகளின் அச்சத்தைப் போக்கி அமைதிப்படுத்தியது. அவர்களின் மாயை நீங்கி வேத அறிவை பெற்றனர். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழிலை செய்தனர்.

    4 தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், தினம் ஒரு கலையாக தேய்ந்து வந்தார். அதில் இருந்து மீள திங்களூர் கயிலாசநாதரை வணங்கினார். இதையடுத்து சந்திரனின் சாபம் போக்கி, மூன்றாம் பிறையாக தன் சடைமுடியில் இறைவன் சூடிக்கொண்டார். சாபவிமோசனம் அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக, திட்டையில் அருளும் இறைவனுக்கு மேலே, சந்திரகாந்த கல்லாக சந்திரன் வீற்றுள்ளான். மேலும் காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு (24 நிமிடம்) ஒரு சொட்டு என்ற ரீதியில் இறைவனை நித்திய அபிஷேகம் செய்கிறான்.

    5 ‘நமசிவய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவமே, சிவலிங்கம். திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆலயத்தின் மூலவரான வசிஷ்டேஸ்வரர், பிரதானமான ஐந்தாவது லிங்கமாக இருக்கிறார். எனவே இந்த ஆலயம் பஞ்ச லிங்க தலமாக போற்றப்படுகிறது. பஞ்ச பூதங்களும், பஞ்ச லிங்கங்களாக வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

    6 பொதுவாக ஒரு ஆலயத்தில் மூலவர் மட்டுமே பிரதானமாக வழிபடப்பட்டு, வரம் தரும் நாயகனாக விளங்குவார். ஆனால் திட்டை திருக்கோவிலில், சிவன், அம்பாள், விநாயகர், முருகப்பெருமான், குரு, பைரவர் ஆகிய 6 பேரும் தனித் தனியே அற்புதங்கள் நிகழ்த்தி, தனித்தனி வழிபாட்டுக்குரிய சன்னிதிகளோடு அருள்கிறார்கள். இவர்கள் பிரதான மூலவரைப் போல, பிரதான தெய்வமாக விளங்குவது சிறப்புக்குரியது.

    7 பெரும்பாலான ஆலயங்களின் கட்டிடங்கள் கருங்கற்களாலும், சில செங்கற்களாலும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவற்றில் இருக்கும் கொடிமரம், விமானத்தில் உள்ள கலசம் போன்றவை உலோகங்களால் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால் இந்த திட்டை திருத்தலத்தில் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் கூட கருங்கற்களினால் உருவாக்கப்பட்டவை ஆகும்.

    8 பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டார். அதன் ஒரு பகுதியாக திட்டைக்கு வந்து, மூலவரான வசிஷ்டேஸ்வரரை ஒரு மாத காலம் பூஜித்தார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. எனவே இது காலபைரவ ஷேத்திரமாகவும் திகழ்கிறது. சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலக இந்த பைரவரை வணங்கலாம்.

    9 நவக்கிரகங்களில் முதன்மையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். தான் பார்க்கும் இடங்கள் தோஷம் நிறைந்ததாக இருந்தாலும், தன் பார்வை பலத்தால் சுபமாக மாற்றுபவர். உலகத்தின் தனம், தான்யம், பொன், பொருள், பணம் உள்ளிட்டவற்றுக்கு அதிபதி. இப்படிப்பட்ட குரு, திட்டை தலத்தில் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி இங்கு வெகு விமரிசையாக நடைபெறும்.
    தமிழகத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 9-வது தலம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. காசிக்கு நிகராக சொல்லப்படும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது, சாயாவனம் என்ற ஊர். இந்த ஊரின் சாலைஓரத்திலேயே, மிகவும் பழமையான சாயாவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், இது 9-வது தலம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. காசிக்கு நிகராக சொல்லப்படும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று.

    தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் தாய் அதிதிக்கு, பூலோகத்தில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாக இருந்துவந்தது. அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, அதிதி பூமிக்கு வந்தாள். தாயை காணாமல் தேடிய இந்திரன், தனது தாய் சாயாவனத்தில் இருப்பதையும், அந்த வனத்தில் இருக்கும் இறைவனின் சிறப்பையும் பற்றி அறிந்துகொண்டான்.

    அவன் தன் தாய் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, தனது தாய் தினமும் வழிபாடு செய்யும் வகையில் சாயாவனேஸ்வரர் ஆலயத்தை, சொர்க்கலோகத்திற்கே கொண்டு சென்று விடுவது என்று முடிவெடுத்தான். இதற்காக தன்னுடைய வாகனமான ஐராவதம் என்ற பெயர் கொண்ட வெள்ளை யானையை வைத்து, கோவிலை இழுத்துச் செல்ல முயற்சித்தான். அப்போது பார்வதி தேவி, குயில் போல இனிமையாக கூவினாள். இதன் காரணமாகத்தான் இத்தல அம்மனுக்கு ‘குயிலினும் இனிமொழியம்மை’ என்ற பெயர் வந்தது. இனிமையான சத்தம் கேட்டதும், அந்த இடத்தில் தோன்றிய சிவபெருமான், இந்திரன் செய்யும் தவறை சுட்டிக்காட்டினார். பின்னர், “நீயும் உன் தாயாரும் இங்கேயே வந்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். தேவலோகத்திற்கு ஆலயத்தை எடுத்துச் செல்வது என்பது நடக்காத காரியம்” என்றார். இதையடுத்து இந்திரனும், அவனது தாய் அதிதியும் பூலோகத்திற்கு வந்தே ஆலயத்தை தரிசனம் செய்து சென்றனர்.

    ‘சாய்’ என்பதற்கு ‘கோரை’ என்று பொருள். இந்தப் பகுதியில் பசுமையான கோரைப்புற்கள் மிகுந்திருந்த காரணத்தால், இது ‘சாய்காடு’ என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள சாயாவனேஸ்வரர் ஆலயத்தை, சோழ மன்னர்களில் ஒருவனான கோச்செங்கட் சோழன் கட்டியிருக்கிறான். அவன் அமைத்த பெரும்பாலான கோவில்கள் மாடக்கோவில் அமைப்பைக் கொண்டதாகும். அதாவது யானையால் ஏறிச் செல்ல முடியாத வகையில் கட்டப்பட்ட ஆலயங்கள். அப்படிப்பட்ட மாடக்கோவில்களில் ஒன்றுதான், சாயாவனேஸ்வரர் கோவிலும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த திருத்தலம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதாக விளங்குகிறது. சிவனடியார்கள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத இயற்பகையார் பிறந்து, முக்தி அடைந்த திருத்தலம் இதுவாகும். மேலும் இந்த ஆலயத்தில் வில்லேந்திய திருக்கோலத்தில் வித்தியாசமான தோற்றத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார். பஞ்சலோகத்தால் ஆன திருமேனி இதுவாகும். நான்கு கரங்களுடன் உயர்ந்த மயிலுடன் வீற்றிருக்கும் இந்த சிலையை, நெடுங்காலத்திற்கு முன்பு கடலில் இருந்து கண்டெடுத்ததாகக் சொல் கிறார்கள். எதிரிகள் பயம் விலக இந்த வில்லேந்திய வேலவனை வழிபடலாம் என்கிறார்கள்.

    இத்தல இறைவனான சாயாவனேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். வாழ்வில் அனைத்து இன்பங்களும் கிடைக்க, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். தங்களின் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள், இறைவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், புத்தாடை அணிவித்தும் சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயத்தில் சித்திரை மாத பவுர்ணமி அன்று தொடங்கி 21 நாட்கள் நடைபெறும் இந்திர விழா பிரசித்தமானது. அதே போல் ஆடி அமாவாசையில் நடைபெறும் அன்னமளிப்பு விழா, இயற்பகை நாயனார் திருவிழா போன்றவையும் விமரிசையாக நடைபெறும்.
    பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை ஒன்றாக வழிபடும் ஒரே கோவில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவில் ஆகும்.
    மிக புகழ் பெற்ற இந்த கோவில் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே தொடங்குகிறது.

    மகரிஷிகள், துறவியர்கள், சுற்று வட்டாரத்தை ஆண்ட சிற்றரசர்கள், முன்கால சேர, சோழ, பாண்டிய நாட்டு அரசர்கள், வேணாட்டு அரசர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சியாளர்கள், பிற்கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள், திருவிதாங்கூர் மன்னர்கள், முன்னாள் கோவில் நிர்வாகிகளாக இருந்த யோகஸ்தானிகர்கள், ஊர் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோரால் இந்த அழகான கோவிலின் பல பாகங்கள் பல காலங்களில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

    கல்வெட்டுகள்

    கொன்றையடி மிகவும் பழமை வாய்ந்தது. அங்குள்ள கொன்றை மரம் 2000 வருடங்களுக்கு முன் உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியில் அறியப்பட்டது. ஆலயத்தின் உள் கருவான இந்த மையத்தை வைத்துதான் இந்த கோவில் எழுந்துள்ளது. முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது. வடகேடம் என்ற அதில் தாணு மாலய மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். தெக்கேடம் என்ற மகாவிஷ்ணு திருவெங்கிடபெருமாளாக காட்சி தருகிறார். பாறையின் மேல் உயரமாக அமைந்துள்ள கைலாய நாதர் கோவில் மண்டபம் 5-ம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாக கல்வெட்டுகள் சாட்சியம் அளிக்கிறது.

    மணிமண்டபம்

    1238-ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் கண்டியூர் உண்ணி என்பவரால் கட்டப்பட்டு அதன் நித்திய செலவுக்கு உள்ள வஸ்து வகைகள் விட்டுக் கொடுக்கப் பட்டதற்கு ஆதாரம் உள்ளது. அறம் வளர்த்தம்மன் கோவில் 1444-ம் ஆண்டு தேரூரில் உள்ள பள்ளியறை நாச்சியார் குடும்பத்தாரால் கட்டப்பட்டதாகும். வீர பாண்டியன் மணி மண்டபத்திற்கு முன்பாக மிகப்பெரிய அரிய வகை கலை சிற்பங்கள் நிறைந்த செண்பக ராமன் மண்டபம் வேணாட்டு ராஜாவான ராமவர்ம ராஜாவால் 1471-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

    ராஜகோபுரம்

    1545-ம் ஆண்டு மிகவும் எழில்மிக்க ராஜகோபுரம் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. 1888-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் கோபுரம் சீர் செய்யப்பட்டது. 1587-ம் ஆண்டு கோவில் நிர்வாகிகளான யோகஸ் தானிகர் தெற்கு மண்டபத்தில் புருஷோத்தமரு நீலகண்டரு என்பவரால் பெரிய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. முக்குறுணி பிள்ளையார் என்று கூறும் அந்த கணபதியின் நித்திய செலவுக்கு தேவையான வஸ்து வகைகளையும் விட்டுக் கொடுத்துள்ளார்.

    அதனால் அது “நீலகண்ட விநாயகர்” என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. அவரது செயல்களை பெருமைப்படுத்த கோவில் மேலாளர் அலுவலகத்திற்கு முன்னால் தெற்கு பக்கமாக அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.
    சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இந்த உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் கைலாயம் செல்வது நிச்சயம்.
    பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் என்றால் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் மங்கள நாயகி திருக்கோவில். இங்கு தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவானது.

    திருஉத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்புலிங்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. திரு உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது. திருஉத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இத்தலத்துக்கு உமாமகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும் என்று நம்பப்படுகிறது. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும். மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

    சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இந்த உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் கைலாயம் செல்வது நிச்சயம்.

    மூலவருக்கு மங்கள நாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவிக்கு மங்களேஸ்வரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன. திருவிளையாடல் புராணத்தில் வரும் வலைவீசி மீன் பிடித்த படலம் இந்த தலத்தில்தான் நடந்தது.

    உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்திருக்கிறது. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம், தெட்சிண கைலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப்பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது.
    இதனை பழங்காலத்தில் உத்தரங்கம் அல்லது ஆதிரங்கம் என்று அழைத்துள்ளனர். தற்போது இது ‘ஆதி திருவரங்கம்’ என்று வழங்கப்படுகிறது.
    வைணவ சமயத்தினரின் வழிபாட்டு தெய்வமாக இருக்கும், திருமாலுக்கு 108 திவ்ய தேசங்கள் மிகவும் பிரபலமானவையாக இருக்கின்றன. ஆனாலும் அதைவிடவும் சிறப்பு வாய்ந்த, பழமையான ஒரு திருக்கோவில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரத்தின் போதே நிறுவப்பட்ட கோவிலாக இந்த ஆலயம் பார்க்கப்படுகிறது. இதனை பழங்காலத்தில் உத்தரங்கம் அல்லது ஆதிரங்கம் என்று அழைத்துள்ளனர். தற்போது இது ‘ஆதி திருவரங்கம்’ என்று வழங்கப் படுகிறது.

    தல வரலாறு

    அசுரா வம்சாவளியைச் சேர்ந்த சோமுகன் என்ற அரக்கன் கடுமையான தவம் செய்ததன் மூலம் அழியாமையையும், பல ஏற்றங்களையும் பெற்றான். ஆணவத்தையும், அசுரர்களைப் போன்ற மிருகத்தனத்தையும் கொண்டிருந்தான். பூமியையும், வானத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முனிவர்களையும், தேவர்களையும் கீழ்ப் படுத்தி சேவிக்கச் செய்ய விரும்பினான். பூமியையும் வானத்தையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி, தனக்குக் கீழ்ப்படியும் படி கட்டளையிட்டான்.

    அவன் பிரம்மாவையும் சிறையில் அடைத்து, அவரிட மிருந்து வேத மந்திரங்களை பறிமுதல் செய்தான். பிரம்மா, தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஸ்ரீ நாராயணன் (விஷ்ணு) அவர்களிடம் சென்று சோமுகனைக் கட்டுப்படுத்தி தங் களைப் பாதுகாக்கும்படி பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீ நாராயணன் சோமுகனுடன் சண்டையிடச் சென்றார். அவர் களுக்கு இடையே பயங்கர யுத்தம் வெடித்தது. சோமுகன் தனது மந்திர தந்திரங்கள் அனைத்தையும் இழந்து சோர்வடைந்தான். இனி அங்கேயே தங்கியிருந்தால் தன்னை ஸ்ரீநாராயணன் கொன்று விடுவார் என்று அவன் அஞ்சினான்.

    கடலுக்குள் சென்று தன்னை மறைத்துக்கொண்டான். ஸ்ரீநாராயணன் ‘மத்ஸ்யா’ அவதாரத்தை எடுத்து சோமுகனை அடக்கி வேதங்களை மீட்டெடுத்தார். தேவர்களும் முனிவர்களும் உற்சாகமடைந்து ஸ்ரீ நாராயணனை ஆதி திருவரங்கத்தில் வணங்கினர். இந்த கோவிலில் புரட்டாசி, பவுர்ணமி, வைகுண்ட ஏகாதசி போன்றவை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    அமைவிடம்

    திருவண்ணாமலைக்கும், மணலூர்பேட்டிற்கும் இடையில் ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மணலூர்பேட்டிலிருந்து மினி பஸ், ஆட்டோ, வேன், பேருந்து மூலம் கோவிலை சென்றடையலாம். திருக்கோவிலூரில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.
    பௌர்ணமியன்று மாலை 6.00 மணியளவில் அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம் பக்தர்களின் வாழ்கையை மேன்மை அடைய செய்யும் என்பது சான்றோர் வாக்கு.
    தலச்சிறப்பு :

    சோழ மன்னர்களால் வழிபட்ட தெய்வம் வெக்காளி. இத்தலத்தில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை ஒரு சீட்டில் எழுதி அம்பாளின் பாதத்தில் வைத்து பின்னர் அம்மன் சன்னதியில் உள்ள சூலத்தில் கட்டி வைப்பது வழக்கம். பக்தர்களின் கோரிக்கையை அம்பாளின் திருவருளால் நிறைவேறிய பின்னர் இத்தலத்திற்கு வந்து பிராத்தனையை செலுத்துவது கண்கூடு. இத்தலத்தில் வீற்றிருக்கும் வெக்காளியம்மனுக்கு விமானம் கிடையாது.

    வெயிலிலும் மலையிலும் நனைந்து "இப்படி தான் இருப்பேன்"என்று அருள்பாலித்து வருகிறார். பிரதி பௌர்ணமியன்று மாலை 6.00 மணியளவில் அம்பாளுக்கு நடைபெறும் அபிஷேகம் பக்தர்களின் வாழ்கையை மேன்மை அடைய செய்யும் என்பது சான்றோர்வாக்கு.

    தலவரலாறு :

    ஊர்களை அமைக்கும்போது ஊர்க்காவல் தெய்வங்களை ஊர்களின் எல்லையில் எழுந்தருளச் செய்வதும், வீரமும், வெற்றியளிக்கும் தெய்வங்களையும் வடக்கு நோக்கி அமைப்பார்கள். அதன்படி ஊர் எல்லையிலும், வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்.இக்கோயில் அமைந்துள்ளதற்கு மற்றொரு காரணம் கூறப்படுகிறது.

    உறையூரில் வன்பராந்தகன் என்னும் அரசன், தனது மனைவி புவனமாதேவியுடன் ஆட்சி செய்த காலத்தில், சாரமாமுனிவர் என்பவர் நந்தவனம் அமைத்து பல்வகை மலர்ச்செடிகளையும் பயிரிட்டு, மலர் கொய்து தொடுத்துத் தாயுமானசுவாமிக்கு அணிவித்து அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.

    இந்தநிலையில், பிராந்தகன் என்னும் பூ வணிகண் அரசரிடம் ஆதரவு பெற எண்ணி, நந்தவனத்து மலர்களைப் பறித்து அரசர்க்கு அளிக்கத் தொடங்கினான், அரசரும் உயர்வான மலர்களைக் கண்டு உளம் களித்து, தாயுமானவருக்கு மட்டுமே அணிவிப்பதற்கென சாரமாமுனிவர் அமைத்த நந்தவனத்து மலர்கள் என்று அறிந்தும்கூட, தவறான ஆசையால் வணிகனிடம் நாளும் மலர்களைப் பறித்துவர ஆணையிட்டான்.

    நந்தவனத்தில் நாளும் மலர்கள் குறைவதைக் கண்ட சாரமாமுனிவர், ஒருநாள் வணிகன் மலர் கொய்யும் போது பிடித்துவிட்டார். தாயுமானவருக்குரிய மலர்கள் அரசனுக்கு செல்வதைக் கண்டு சினந்து மன்னரிடம் முறையிட்டார். மன்னனோ முனிவரை அலட்சியம் செய்து மலர் வணிகனது செயலை ஊக்குவிக்க, மனம் நொந்து முனிவர் தாயுமானவரிடமே முறையிட்டார்.

    தனக்குச் செய்யும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், அடியார்க்குச் செய்கின்ற இடர்களைத் தாங்குவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கியதால், மண்மாரி பொழியத் தொடங்கியது. இதனால் ஊரை மண் மூடியது.

    மக்கள் தங்களைக் காக்க எல்லைத் தெய்வமாக விளங்கிய வெக்காளி அம்மனை விட்டால் வேறுவழியில்லை என்று ஓலமிட்டுச் சரண் அடைந்தனர்.அன்னை இறைவனை வேண்டினாள். மண் மாரி நின்றது. ஆனாலும், மக்கள் வீடிழந்தனர். வெட்ட வெளியே தங்குமிடமானது. மக்கள் துயர்கண்டு அன்னை வெக்காளியம்மன், உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களைப் போல வெட்ட வெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக வரலாறு கூறுகிறது.

    இன்றைக்கும் பலர் வெட்ட வெளியே வீடாகக் கொண்டிருக்கின்றனர். அன்னையின் உறுதிமொழி நிறைவேறாததால் இன்றைக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் வானமே கூரையாகக் கொண்டு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    நடைதிறப்பு :

    காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை.

    திருவிழாக்கள் :

    சித்திரை - ஐந்துநாட்கள்திருவிழா, வைகாசி – கடைசி வெள்ளி " மாம்பழஅபிஷேகம்" , ஆனி – கடைசி வெள்ளி காய்கனிகள் அலங்காரவழிபாடு.ஆடி – அனைத்து வெள்ளிகளும் சிறப்புவழிபாடு. ஆவணி - "சண்டிஹோமம்". புரட்டாசி - நவராத்திரிவிழா. கார்த்திகை - தீபம்.

    தை – பொங்கல் சிறப்பு வழிபாடு, தைப்பூசம் புறப்பாடு. மாசி – கடைசி ஞாயிறு "லட்சார்ச்சனை". பங்குனி – முதல் வெள்ளியில் பூச்சொரிதல் விழா.

    கோயில் முகவரி :

    அருள்மிகு உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவில்.
    உறையூர், திருச்சி-620003.

    இங்கு வந்து கருணாகரப் பெருமாளை வணங்கி பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய தீராத வியாதிகள் மட்டுமல்ல, மனக்குறைகளும் நீங்கி வாழ்வாங்கு வாழ்வார்கள்.
    மூலவர்: கருணாகரப் பெருமாள்
    தாயார்: பத்மாமணி நாச்சியார், ரமாமணி நாச்சியார்
    உற்சவர்: கருணாகரப் பெருமாள்
    தீர்த்தம்: அக்ராய தீர்த்தம்
    ஊர்: காஞ்சிபுரம்

    தலவரலாறு:

    திருக்காரகத்திலுள்ள கருணாகரப் பெருமாள் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலின் உள்ளேயே தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இத்தலத்திற்கு திருக்காரகம் என்று பெயர் வந்ததன் காரணத்தை அறிய முடியவில்லை. கார்க முனிவர் செய்த தவத்தின் பயனால் இறைவன் திருக்காட்சியை காட்டி அருளியது போல் தெரிகிறது.

    இதன் காரணமாகவே “திருக்கார்கம்” என்று ஆனதாகவும் பிற்காலத்தில் அப்பெயர் மருவி “திருக்காரகம்” என்று ஆனதாகவும் தெரிகிறது. திருமங்கையாழ்வார் “உலகமேத்தும் காரகத்தாய்” என்று மங்களாசாசனம் செய்திருப்பதால் அக்காலத்தில் தனியாக மிக பிரம்மாண்டமான கோவில் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

    அக்காலத்தில் பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சி பகை அரசர்களின் படையெடுப்பின் போது, இக்கோவில் அழிக்கப்பட்டிருக்கலாம். அழிவுற்ற ஆலயத்தின் இறைவனின் திருமேனியை மட்டும் வேறொரு கோவிலில், அதாவது தற்போது உள்ளதைப் போல சன்னிதி அமைத்து வழிபாடு செய்திருக்கலாம்.

    மூலவர் தரிசனம்:

    இத்தல இறைவனை கார்க முனிவர் தரிசனம் செய்துள்ளார். இங்கு மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம் வாமன விமானம் ஆகும். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

    அக்ராயர் என்ற அரசனுக்கு ஏற்பட்ட கொடுமையான நோய் குணமாகாமல் தவித்த பொழுது இந்த தலத்திலுள்ள புஷ்கரணியில் நீராடி கருணாகரப் பெருமாளை பிரார்த்தனை செய்தால் கொடிய நோய் விலகிவிடும் என்று சொன்னதின் பேரில் இந்ததலத்திற்கு வந்தார் அக்ராயர்.

    தனக்கென்று ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு அதில் நீராடி பெருமாளை பிரார்த்தித்தார். பெருமாளும் அக்ராயருக்குத் தரிசனம் கொடுத்து அவரது தீராத நோயினை நீக்கியதாகச் செவிவவழிச் செய்தி உண்டு.

    பரிகாரம்:

    தீராத நோய் என்று வந்தால் மருத்துவரிடம் செல்வதை விட திருமாலிடம் சரணடைவது தான் புத்திசாலித்தனம். அக்ராயர் அப்படிச் செய்து தான் கொடிய நோயிலிருந்து குணமானார்.

    தீராத நோய் கொண்டவர்கள், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், மன நோயாளிகள், எதிர்பார்த்து ஏமாந்து போனவர்கள், அதிர்ச்சியினால் பேச முடியாமல் போனவர்கள், நரம்புத்தளர்ச்சி, தோல் வியாதி போன்ற தோல் சம்பந்தமான வியாதி உள்ளவர்கள் சரணடைய வேண்டியது இந்த கருணையே வடிவான “ஸ்ரீமந் நாராயணரான எம்பெருமான் கருணாகரப் பெருமாளைத் தான்”.

    இங்கு வந்து கருணாகரப் பெருமாளை வணங்கி பிரார்த்தனை செய்தால் அவர்களுடைய தீராத வியாதிகள் மட்டுமல்ல, மனக்குறைகளும் நீங்கி வாழ்வாங்கு வாழ்வார்கள்.

    கருணாகரப் பெருமாள் :

    எம்பெருமானின் திருநாமம் இத்திருக்கோவிலில் “கருணாகரப் பெருமாள்”. எம்பெருமானின் அருளையும், தரிசனத்தையும் நினைத்த மாத்திரத்திலேயே நாம் பெற்றிடலாம். அவ்வளவு கருணை மிகுந்தவன். ஏன்? எதற்காக?

    உண்மையான பக்தர்கள் தன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டாலே, அவர்களுக்கு வரும் துன்பங்களையும் கண்டு தனக்கு வந்தது போல் ஏற்றுக்கொண்டு உடனே அவர்களுக்கு ஓடோடி உதவி புரிவதில் எம்பெருமானுக்கு நிகர் அவர் மட்டுமே.

    தன் பக்தனுக்காக மட்டுமின்றி தன்னை நினைப்போர்க்கே கருணை செய்யும் எம்பெருமான் பூலோகத்தில் இத்திருத்தலத்தில் கருணையே உருவான “கருணாகரப் பெருமாளாக” நமக்கு அருள் செய்வதற்குக் காட்சி கொடுத்துக் கொண்டிஅருள்மிகு கருணாகரப் பெருமாள் திருக்கோவில்:-  திருக்காரகம்.ருக்கிறார்.

    இத்தல இறைவனை வணங்கினால் நமக்கு சகல நோய்களையும் நீக்கி, மனக்குறைகளையும் நீக்கி நல்வாழ்வு வாழ அருள்புரிவார் என்பதில் ஐயமில்லை.

    ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருளும் திருத்தலம். உலகளந்த பெருமாள் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.

    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் உள்ளது இந்த திருக்கோவில். நடந்து சென்றே இந்த கோவிலை அடையலாம்.
    கர்நாடக மாநிலத்திலுள்ள ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் அதிசய கற்சிலை அமைந்திருக்கிறது. இந்த கற்சிலையின் நகைகளும், மத்தளமும் உலோகத்தால் செய்யப்பட்டது போல் காட்சி அளிக்கும்.
    ஹோய்சலேஸ்வரர் கோவில் ஒரு சிவன் கோவில் ஆகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோவில் கி.பி 1121 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த டெல்லி சுல்தானகப் படைகள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது, இக் கோவிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. முன்னர் துவாரசமுத்திரம் என அழைக்கப்பட்ட ஹளபீடு, பேளூரில் இருந்து 16 கிமீ தொலைவிலும், ஹாசனில் இருந்து 31 கிமீ தொலைவிலும் உள்ளது. மைசூரில் இருந்து இதன் தூரம் 149 கிமீ ஆகும்.

    வரலாறு

    அக்காலத்தில் போசளப் பேரரசை ஆண்டுவந்த விஷ்ணுவர்த்தன ஹோய்சலேஸ்வரன் என அழைக்கப்பட்ட விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னனின் பெயரைத் தழுவியே இக் கோவிலின் பெயர் ஏற்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. இருந்தாலும், இக் கோவில் மன்னனால் அன்றி நகரத்தின் செல்வந்தர்களான குடிமக்களாலேயே கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கேதமல்லன், கேசரசேத்தி என்னும் இருவர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.

    இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் பேலூரில் கட்டப்பட்டு வந்த வைணவக் கோவிலான சென்னகேசவர் கோவிலுக்குப் போட்டியாகவே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இக் கோவில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்றை நோக்கியபடி அமைந்துள்ளது. இதற்கு யகாச்சி ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. இக் குளம் ஹோய்சலேஸ்வரர் கோவில் கட்டப்படுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக் கோவில் தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோவில்களுள் ஒன்றாகும்.

    இக்கோவில் எளிமையான இரட்டை விமானக் கோவில் ஆகும். ஒரு விமானம் ஹோய்சலேஸ்வரருக்கும், மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது. சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும். நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    கோவில் முழுவதும் ஜகதி எனப்படும் மேடையொன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோவில்களும் கிழக்கு நோக்கியவையாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில்கள் ஒவ்வொன்றுக்கும் முன் மண்டபங்கள் உள்ளன. இரண்டு மண்டபங்களும் இணைக்கப்பட்டனவாய்ப் பெரிதாகக் காட்சியளிக்கின்றன. தனித்தனியே இரண்டு கோவில்களும் பேலூரில் அமைந்துள்ள சென்னகேசவர் கோவிலிலும் சிறியவை.

    கருவறைகளில், சிவனைக் குறிக்கும் எளிமையான லிங்க வடிவங்கள் உள்ளன. உட்பகுதியில் கோவிலின் தளவடிவம் எளிமையாகத் தோற்றம் அளித்தாலும், சுவர்களில் உட்பதிந்தும், வெளியே துருத்திக் கொண்டும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ள பகுதிகளால் வெளிப்புறம் வேறுபாடாகக் காட்சி தருகின்றது. கருவறைகளுக்கு மேல் அமைந்திருந்து இன்று அழிந்து போய்விட்ட சிகரங்கள் இதன் கருவறையைப்போலவும், நல்ல நிலையிலிருக்கும் பிற ஹோய்சாலக் கோவில்களில் காணப்படுவது போலவும் நட்சத்திர (நாள்மீன்) வடிவு கொண்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இக் கோவில்களின் வெளிச் சுவர்களில் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. ஹளபீட்டில் உள்ள இக் கோவில், இந்தியக் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பான எடுத்துகாட்டு எனப்படுகின்றது.
    பரக்கலக் கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரக்கலக் கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தவம் புரிந்த முனிவர்களுக்கு வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் அருள் காட்சி தந்து,அவர்களுக்கு பொதுவான தீர்ப்பு வழங்கி பின்பு அந்த மரத்திலேயே சிவபெருமான் ஐக்கியமானார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். தல விருட்சமாக கருதப்படும் ஆலமரத்தைச் சுற்றி கருவறை சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆல மரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது.

    மரமே மூர்த்தி

    சுவாமியே ஆலமரத்தின் வடிவில் தோன்றி பக்தர்களுக்கு அருள் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும். ஆலமரத்தின் அடிப்பகுதியில் சந்தனக்கலவையைப் பூசி அதன் மேல் வெள்ளியில் ஆன நெற்றிப்பட்டம்,திருக்கண் மலர்கள், திருநாசி, திருவாய் முதலியன பதிக்கப்பெற்று திருவாட்சி பொருத்தப்பட்ட கோலத்தில் இறைவன் எழுந்தருளியிருக்கிறார். எதிரே மரத்தைச் சார்ந்துள்ள முகப்புமேடை உள்ளது. அதன் எதிரில் பொன்னார் திருவடிகள் மிளிர்கின்றன.

    சோமவாரவழிபாடு

    பரக்கலக் கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றில் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய்கறிகள் போன்ற பல்வேறு பொருட் களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
    உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்.
    இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிய பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி காட்சி தருவார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம்.

    முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான்.

    தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் எமனை தவிர அனை வரையும் தோற்கடித்தான்.

    எமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க எமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் எமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் எமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது எமன் நின்றார். எமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார்.

    எமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். எமனும் சம்பாசுரனை கொன்று தேவர்களின் குறையை தீர்த்தார். பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.

    இங்கே கருவறையில் இறைவன் தலைகீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். அதாவது சிரசை பூமியில் பதித்து பாத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார். அருகிலேயே அன்னை வேறு எங்கும் இல்லாத வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார். எமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல எம பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சினைகள், திருமண தடை, குழந்தையின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள எனமதுரு கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
    பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
    108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாக விளங்குகிறது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில். இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோவிலை எடுத்துக் கட்டினார் என்று வரலாறு கூறுகிறது.

    பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்களை கடல் சூழ்ந்து கொண்டது. கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

    நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக் கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து அருள் பாலிக்கிறார். இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

    இத்தல உற்சவர் திருநாமம் ‘உலகுய்ய நின்றான்’ என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான்.

    கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம் இதுதான்.

    மாமல்லையில் பெருமாளின் கவுமோதகி என்ற கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார் அவதரித்தார். அவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதன்மை ஆழ்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர். இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். இதில் பெருமாளைப் போற்றும் நூறு வெண்பாக்கள் உள்ளன. பூ என்ற வேர்ச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து அறிவு என்று பொருள். பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார்.

    திருமாலின் கதாயுத அம்சமான பூதத்தாழ்வார் கி.பி. 7ம் நூற்றாண்டில் ஐப்பசி வளர்பிறை நவமியில், அவிட்டம் நட்சத்திரத்தில் கோவில் முன்பு உள்ள பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    கலியுகத்தின் முடிவில் தான் மேற்கொள்ளப்போகும், கல்கி அவதாரத்தை இந்த ஸ்தல சயனப் பெருமாள் முன்னதாகவே திருமங்கையாழ்வாருக்குக் காண்பிக்க ஆழ்வாரும் ஞானக் கண்ணால் கண்டு, ‘கடும்பரிமேல் கல்கியை நான் கண்டு கொண்டேன், கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே’ என்று தனது பாசுரத்தில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஸ்தல சயனப்பெருமாளே கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    பூமி பிராட்டியை கடலின் அடியில் சென்று அழுத்திய அசுரனை, வராஹ அவதாரம் எடுத்து மீட்டருளினார் பகவான். வராஹமூர்த்தி யால் மீட்கப்பட்ட பூமிப்பிராட்டி, நிலமங்கை என்ற பெயருடன் இங்கே எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பாகும். இவர் களோடு, பூமிப் பிராட்டியை தன் வலப்புறம் தாங்கி ‘திருவல எந்தை’யாக, ஞானப் பிரானான வராஹ மூர்த்தியும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.

    கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இத்தலத்தில் தனிச் சன்னிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர், ராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

    லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.

    அரசன் மல்லேஸ்வரன் நாள்தோறும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தான். இதனால் அவன் ஆட்சியை மக்கள் போற்றி வந்தனர். மன்னனிடம் ஒரு கட்டத்தில் இந்த அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யப் பொருளில்லை. அதனால் அன்னதானம் செய்வதை நிறுத்திவிட்டான். இதனால் மக்கள் பசி பட்டினியில் வாடினர். மன்னனையும் வசைபாடினர். இதனைக் கண்டு அங்கே வந்த முனிவர்கள், அங்கிருந்த குளத்தைக் காட்டி இதோ இந்தக் குளத்து முதலையாக ஆவாய் என்று மன்னனுக்குச் சாபமிட்டார்கள்.

    மல்லேஸ்வரன் மீளும் வழி தெரியாமல் குளத்திலேயே முதலையாக இருந்து காலத்தைக் கழித்து வந்தான். அக்குளம் தாமரைக் குளமானதால் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் பூத்திருந்தன. அக்குளம் நோக்கி வந்தார் புண்டரீக மகரிஷி.

    பூக்களைக் கண்டார், புளங்காகிதம் அடைந்தார். அதன் கரையில் நின்று பூக் களைப் பறிப்பது எப்படி என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்.

    அழகிய அத்தாமரைப் புஷ்பங்களை கண்டதும் பெருமாளுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அப்போது நீருக்கு மேல் மூக்கை நீட்டிக் கொண்டு வந்தது, அந்த சாபம் பெற்ற முதலை. ரிஷியைக் கண்டதும் தன் துயரைச் சொல்லி வருந்தியது. சாப விமோசனம் அளிக்கக் கோரியது.

    இம்மன்னன் செய்த குற்றத்தினை ஞான திருஷ்டியில் கண்ட ரிஷியும், ஆயிரம் பேர் பசி பட்டினியால் வாடிய பாவத் தினால் இந்த சாபத்தைப் பெற்றதால், அது நீங்க இக்குளத்தில் பூத்துள்ள ஆயிரம் தாமரை மலர்களை பறித்துத் தந்தால் அதனை இங்குள்ள பெருமாளுக்குப் பூஜித்து, சாப விமோசனம் பெற்றுத் தருவதாகக் கூறினார்.

    மன்னனும் அவ்வாறே செய்ய, புண்டரீக மகரிஷி பெருமாளுக்குப் பூக்களால் பூஜை செய்தார். அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த பெருமாள், வரம் கேட்கக் கோரினார். மகரிஷியும் உலக மக்கள் பசி, பட்டினி இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும், மன்னன் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார்.

    பெருமாளும் அவ்விதமே அருள்பாலித்தார். மன்னனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை மீண்டும் பெற்றான். இக்குளத்திற்கு மகரிஷியின் பெயரையொட்டி, புண்டரீக புஷ்கரணி என்ற பெயரும் ஏற்பட்டது. இக்குளத்தில்தான் ஆண்டுதோறும் ஸ்தல சயனப் பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத்தலமாக இக்கோவில் உள்ளது.

    இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடுதல் மிகச் சிறப்பானது.
    ×