என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆலயங்களில் பெண்கள் கூட்டாக நடத்தும் விளக்கு பூஜையை சுமங்கலிப்பெண்கள் விரதம் இருந்து மேற்கொள்வதால் இந்த பூஜையை சுமங்கலி பூஜை என்றும் திருவிளக்கு பூஜை என்றும் கூறுவார்கள்.
    ஆலயங்களில் பெண்கள் கூட்டாக நடத்தும் விளக்கு பூஜையை சுமங்கலிப்பெண்கள் விரதம் இருந்து மேற்கொள்வதால் இந்த பூஜையை சுமங்கலி பூஜை என்றும் திருவிளக்கு பூஜை என்றும் கூறுவார்கள். இந்த பூஜை செய்வதன் மூலம் நம் குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராமல் இருப்பதாகவும், பெண்களின் தாலி பாக்கியம் நிலைத்து இருக்கும் என்பதும் பெண்களின் நம்பிக்கை.

    விரதம் இருந்து பூஜையை மேற்கொள்ளும் முறை

    வாழை இலையை விரித்து, அதன் மேல் பச்சரிசியை பரப்பி, குத்துவிளக்கை பச்சரிசியில் மேல் வைத்துதான் இந்த விளக்கு பூஜை செய்யப்படுகிறது. இதன் அர்த்தம் வாழையடி வாழையாக நம் வம்சம் வளரவேண்டும் என்பது தான். குத்து விளக்கு என்பது ஒரு மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. முதலில் விநாயகரை வழிபட வேண்டும் என்பது வழிபாட்டு மரபு என்பதால், மஞ்சளில் விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையின் மீது அமர வைத்து பின்பு தான் விளக்குப் பூஜையை தொடர வேண்டும்.

    அம்பாள் வழிபாடு நடக்கின்ற போது 108 1008 என்று அம்பாளின் மந்திரங்களைச் சொல்லி வழிபடுகின்ற வேளையில் மலர் அல்லது குங்கும் அர்ச்சனை நடைபெறும். இவ்வாறு அர்ச்சனை செய்யப்படும் போது ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் சேர்த்து குங்குமத்தையோ அல்லது பூவையோ எடுத்து விளக்கின் மீது போட வேண்டும். இந்த அர்ச்சனை முடிந்தவுடன் அம்மனுக்கு நைவேத்தியம் படைக்கப்பட்டு ஆரத்தி காட்டப்படும்.

    பின்பு பெண்கள் அனைவரும் திருவிளக்கின் முன்னால் நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.  திருவிளக்கு வழிபாட்டின் போது எவர்சில்வர் விளக்குகளை வழிபாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது. பித்தளை அல்லது வெங்கல விளக்குகளை பயன்படுத்தலாம். உடைந்த கீறல் விழுந்த விளக்குகள் வழிபாட்டிற்கு உகந்தது அல்ல.

    விளக்கை துணை விளக்கின் உதவியோடுதான் ஏற்றவேண்டும். தீக்குச்சியால் ஏற்றக்கூடாது. விளக்கு பூஜை முடிந்தபின்பு தீபத்தினை கையால் விசியோ, வாயால் ஊதியும் அணைக்கக் கூடாது. பூவின் மூலமாகத்தான் குளிர வைக்க வேண்டும். குத்துவிளக்கையும், பெண்களையும் ஒப்பிட்டு கூறுகின்றார்கள். குத்து விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் பெண்களின் ஐந்து குணங்களை குறிக்கின்றது. அதாவது அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை. திருவிளக்கு பூஜை ஆனது பெண்களையும் பெண் தெய்வத்தையும் போற்றும் வகையில் நம் கோவில்களில் நடத்தப்படுகின்றது.
    சுவாமி ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 13 விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    தெரிந்து கொள்ள வேண்டியவை :

    1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

    2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.

    3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.

    4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.

    5. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.

    6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.

    7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.

    8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.

    9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதமான பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.

    10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

    11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

    12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.

    13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்!
    நாமும் சஷ்டி விரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வுபெற முயலுவோமாக.
    கந்தனுக்கு கந்த விரதமாகிய கந்தஷஷ்டி விரதமனுஷ்டிப்போர்; பெறும் பேற்றை “ஏழையர்,வதுவை வேண்டினேற்ற கன்னி யரைச் சேர்வர் வாழு” நன் மகவு வேண்டின் மக்களைப்பெறுவரெ ன்றும், பாழிவாய் மணிச்செஞ் சூட்டுப் பஃறலை யனந்தன் றாங்கு மாழிசூழுலகமெல்லாம் வேண்டினு மடைவர் மாதோ”

    இதன் பொருள் ஏழைகள், விவாகஞ் செய்ய விரும்பினால் இயைந்த கன்னியர்களைமணஞ்செய்வர், நீடுழி வாழ்கின்ற நல்லபுதல்வரை விரும்பினால் எந்நாளும் அவரைப் பெறுவர்.பருத்தவாயையும் இரத்தினம் பொருந்திய சிவந்த சுடிகையையுமுடைய பலதலைகள்பொருந்திய ஆதிசேடன் சுமக்கின்ற கடல்சூழ்ந்த உலகத்தையெல்லாம் பெறுவர்.

    பலன் விழையாது நோக்கிற் பாவம் தொழிந்து சிந்தை நலமுற முமுட்சு வாகிக் குருவினால்ஞானம் பெற்றுப் புலன்வழிச் செலவு நீக்கிப் போதபூ ரணவானந்த வலைகடல் வடிவாங் கந்தனடியிணை நீழல் சேர்வார் (இதன்பொருள்:- யாதொரு பலனையும் விரும்பாது விரதம் அனுட்டிப்போர் பாவம் நீங்கி சித்தசுத்தியுடையவர்களாய் இயல்பாய் முத்தி விருப்பம் எழப்பெற்று, பின்ஞான சற்குருவையடைந்து, ஐம்புலப் பகைவராதியோரை வென்று, பூரண ஞானானந்தசொருபராகும் முருகப் பெருமானின் திருவடி நிழலில் பிறப்பிறப்பு நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்).

    எனவே நாமும் இவ்விரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வுபெற முயலுவோமாக.
    சனி கிரகத்தை கட்டுப்படுத்துவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகள் உகந்த நாட்கள். இந்த நாட்களில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் பிரச்சனைகள் படிப்படியாக தீரும்.
    சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை விரதம்

    saturday Viratham

    saturday Viratham, Perumal, Viratham, பெருமாள், விரதம்,


    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கம் பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகள் உகந்த நாட்கள்.

    சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமே நாராயணாய ” என்று உச்சரித்து விரத்தை ஆரம்பிக்கலாம். அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ண வேண்டும். அசைவம் கூடாது. அதன் பின் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடுதம் அவசியம்..மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிப்பாட்டை செய்யலாம். சனிக்கிழமை இருக்கும் விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்.

    இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். அன்று விரதம் இருக்கும்போது தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, அவர்களும் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
    ரம்பா திரிதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வழி வகுப்பார்கள்.
    குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை செய்த நாள் என்பதால், இந்த நாளுக்கு ரம்பா திருதியை நாள் என்று பெயர்.

    தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருக்கும் அரம்பையர்கள், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது தோன்றியதாகப் புராணம் சொல்கிறது. இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார்கள்.

    சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத்தைப் படைத்தார். அது “அப்சரஸ் லோகம்’ எனப்பட்டது. அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் அப்சரஸ் பெண்களும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை. அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற் கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமையவளுக்கும் தோழியராகவும் இருந்தார்கள்.

    இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, கனகை, மேனகை, திலோத்தமை, சந்திரலேகை என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை அப்சகணம் என்று சொல்வர்.

    இந்த அழகான அப்சரஸ்கள் பல வகையான இசைக் கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். ஆடல் கலையில் வல்லவர்கள். “பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது.ஆனி மாதத் திரிதியை இவர்களுக்குரிய நாள். இந்நாளில் அப்சரஸ்களை வழிபடும் வழக்கம் முற்காலத்திலேயே இருந்துள்ளது. இது, காலம் செல்ல செல்ல வழிபடும் வழக்கம் மறுவி தற்பொழுது, வடநாட்டில் மட்டும் இந்நாளில் ஸ்ரீலட்சுமி பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.

    ஆனி மாத வளர்பிறை திரிதியை அன்று ரம்பா திரிதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள். கார்த்திகை சுக்ல பட்ச திருதியையிலும் சிலர் இவ்விரதத்தைக் கடைபிடிக்கின்றனர்.

    கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.

    திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.

    திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.

    சீரடி சாய்பாபாவை வேண்டிக் கொண்டு, வியாழக்கிழமை தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்தால்... நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை சாய் பக்தர்களிடையே சமீபகாலமாக மிக வேகமாக பரவி வருகிறது.
    குஜராத் மாநிலத்தில் ஒரு ஊரில் மகேஷ்-கோகிலா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். மகேஷ் சற்று முரட்டுக்குணம் கொண்டவர். கோபம் வந்து விட்டால் வரை முறை இல்லாமல் பேசுவார்.

    சிடுமூஞ்சியாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் அனைவரிடமும் அவர் சண்டையிட்டார். இதனால் அவர் குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நல்ல உறவு இல்லாமல் இருந்தது. இது மகேஷ் செய்து வந்த வியாபாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாளடைவில் அவர் வருமானம் இல்லாமல் தவித்தார். குடும்பத்தில் அமைதியே இல்லாமல் போய்விட்டது. மகேஷ் குணத்தால் குழப்பம் அதிகரித்தது.

    இந்த நிலையில் ஒரு நாள் அவர்கள் வீட்டு முன்பு சாது ஒருவர் வந்து நின்றார். அவர் கோகிலாவிடம், சாதம், பருப்பு கேட்டு வாங்கினார். பிறகு அவர், ஆசீர்வாதம் செய்தார்.

    அப்போது கோகிலா, “என் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் உள்ளது” என்று கூறினார். அவர் கண்ணீர் விட்டதால் இரக்கப்பட்ட அந்த சாது, “சாய்பாபாவை வேண்டிக் கொண்டு 9 வாரம் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால், நீ நினைத்தது நடக்கும்” என்றார். அதோடு 9 வாரம் வியாழக்கிழமை எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.

    மேலும், “இந்த விரதம் கலியுகத்துக்கு ஏற்ற மிக உன்னதமான அற்புதங்கள் நிகழ்த்தும் விரதம். இந்த விரதத்தை தூய மனதுடன், நம்பிக்கையோடு யார் இருக்கிறார்களோ, அவர்களது அத்தனை ஆசைகளையும் பாபா நிறைவேற்றி வைப்பார். ஆனால் விரதம் இருப்பவர்கள் சாய்பாபா மீது உறுதியான நம்பிக்கையும், பொறுமையும் வைக்க வேண்டியது மிக, மிக அவசியம்” என்றும் தெரிவித்தார்.

    அந்த சாது கூறியபடி கோகிலா 9 வாரம் வியாழக்கிழமை விரதம் இருந்தார். அதன் பிறகே மகேஷ் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டது. அவர் குணம் மாறியது. அவர் கடையில் வியாபாரம் அதிகரித்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

    இந்த நிலையில், கோகிலாவின் உறவினர்கள் சூரத்தில் இருந்து வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகள் ஒழுங்காக படிப்பது இல்லை என்றும் இதனால் தேர்வில் தோற்று விட்டனர் என்றும் கூறி வருத்தப்பட்டனர்.

    அவர்களிடம் கோகிலா தான் மேற்கொண்ட 9 வார வியாழக்கிழமை விரதம் பற்றி கூறி அந்த விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றார். சூரத் குடும்பத்தினரும் அந்த விரதத்தை கடைபிடித்தனர். 9 வார முடிவில் அவர்களின் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காணப்பட்டது.

    இதற்கிடையே சூரத் குடும்பத்தினர் மூலம் தோழி ஒருவர் குடும்பத்தினருக்கு சாய்பாபாவின் 9 வார வியாழக்கிழமை விரதம் தெரிய வந்தது. அவர்களுக்கும் வெற்றி கிடைத்தது. சாய்பாபாவின் 9 வார வியாழக்கிழமை விரதம் இப்படித்தான் கொஞ்சம், கொஞ்சமாக பரவி நாடு முழுவதும் பக்தர்கள் மத்தியில் இரண்டற கலந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விரதம் இருப்பவர்கள் 9 வாரம் வியாழக்கிழமையும் ஒரு வேளை உணவு அருந்தி விரதம் இருக்க வேண்டும். பழவகைகள், குளிர் பானங்கள் சாப்பிடலாம் என்றெல்லாம் விரதத்துக்கு விதிமுறைகளை உருவாக்கியுள்ளனர். இது தவிர மேலும் சில விதிமுறைகள் உள்ளன.

    ஒரு தூய ஆசனத்தில் மஞ்சள் துணியை விரித்து, சாய் பாபா படத்தை வைக்க வேண்டும். சந்தனம் பூச வேண்டும். மஞ்சள் நிறப்பூ சாத்த வேண்டும். பிறகு பாபாவுக்கு விளக்கு ஏற்றி, ஊதுபத்தி காட்டி வழிபட வேண்டும். ஆரத்தி எடுக்க வேண்டும். இதையடுத்து பாபாவின் மூல மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும்.

    இந்த விரதத்தை ஆண்-பெண் இரு பாலரும் கடை பிடிக்கலாம். விரதம் இருக்கும் 9 வியாழக்கிழமைகளில் காலை- மாலை இரு நேரமும் ஆலயத்துக்குச் சென்று பாபாவை வழிபடுவது நல்லது. வெளியூர் பயணம் செய்ய நேரிட்டாலும் இந்த விரதத்தை தொடரலாம்.

    பெண்களுக்கு விலக்கு தொடர்பான உபாதைகள் ஏற்பட்டால் அந்த வாரம் விட்டு விட்டு, அடுத்த வாரம் விரதத்தை தொடரலாம். பெண்கள் இடையில் ஒரு வாரம் விரதம் இருக்க இயலாமல் போனாலும் பிரச்சினை இல்லை. இப்படி 9 வார விரதத்துக்கு சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    9-வது வாரம் விரதம் நிறைவு பெறும் போது, 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. ஆனால் நிறைய பேரால் நேரடியாக உணவு அளிக்க முடிவதில்லை.

    அத்தகைய நிலையில் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்படும் பாபா ஆலயங்களில், அதற்கான பணத்தை வழங்கலாம் என்று விரத விதிமுறைகளில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விரத முறைகளின் படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக நினைத்தது நடக்கும் என்பது சாய் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    சில பக்தர்கள், வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால், நாள் முழுக்க பாபா நினைவுடன் இருக்க முடிகிறது. எனவே பாபாவை நெருங்குவதற்கு இந்த விரதம் உதவியாக இருக்கிறது என்கிறார்கள்.

    ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். விரதம் இருங்கள் என்று பாபா சொன்னதே இல்லை. எனவே பாபாவை வேண்டிக் கொண்டு விரதம் இருப்பதும், இருக்காததும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. சாயிடம் நெருங்க வேண்டுமானால், அவர் அன்பை பரிபூரணமாக பெற வேண்டுமானால், அவர் மீது நம்பிக்கை வைப்பது ஒன்றே போதுமானது.
    ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள கருட பகவானின் விரத வழிபாடு நமக்கு கைகொடுக்கிறது.
    காக்கும் கடவுள் என்று போற்றப்படுபவர் மகாவிஷ்ணு. இவருடைய வாகனமாக இருப்பவர் கருடன். இவர் ‘பெரிய திருவடி’ என்றும் புகழப்படுகிறார். வானத்தில் வட்டமிடும் கருடனை கண்டு தரிசிப்பவர்களுக்கு, அவர்களைப் பிடித்த தோஷங்கள் அனைத்தும் அகலுவதாக ஐதீகம். அதனால்தான் பலரும், வானத்தில் கருடனைப் பார்த்ததும் ‘கிருஷ்ணா.. கிருஷ்ணா..’ என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதைப் பார்த்திருப்போம்.

    ஏழரைச் சனி, அஷ்டமச் சனி போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள கருட பகவானின் விரத வழிபாடு நமக்கு கைகொடுக்கிறது. நவக்கிரகங்களினால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களையும் விலக்குபவராகவும் கருடன் திகழ்கிறார்.

    இவரை எந்தத் திதிகளில் வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    வளர்பிறை பிரதமை: கண் திருஷ்டி, செய்வினை தோஷங்கள் அகலும்.

    தேய்பிறை பிரதமை: வறுமை நீங்கி, குபேர சம்பத்து ஏற்படும்.

    வளர்பிறை திருதியை: சந்திரனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

    வளர்பிறை சஷ்டி: செவ்வாய் தோஷம் அகலும்.

    வளர்பிறை சப்தமி: சூரிய பகவானால் உண்டான தோஷங்கள் நீங்கும்.

    வளர்பிறை சதுர்த்தி: விநாயகப் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும்.

    வளர்பிறை நவமி: கல்வி ஞானம், தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

    தேய்பிறை நவமி: மரண பயம் நீங்கும்.

    தேய்பிறை தசமி: குரு தோஷம் விலகும், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    வளர்பிறை துவாதசி: புதன் தோஷம் விலகும். அறிவாற்றல் பெருகும்.

    தேய்பிறை துவாதசி: மகாவிஷ்ணுவின் நெஞ்சில் குடியிருக்கும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

    அமாவாசை: ஆண் குழந்தை பிறக்கும் வரம் கிடைக்கும்.

    பவுர்ணமி: மகாலட்சுமியின் அம்சமான பெண் வாரிசு பிறக்கும் யோகம் வாய்க்கும்.

    வானத்தில் வட்டமிடும் கருடனை நாம் அனைத்து நேரங்களிலும் காண இயலாது. எனவே வைணவத் தலங்களில் அருளும் கருடாழ்வாரை வணங்கி, அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்யலாம்.

    தஞ்சை தொல்காப்பியன்
    கார்த்திகை மாத அமாவாசை தினமான இன்று விரதம் இருந்து முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.
    கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.

    கார்த்திகை மாதம் ஒரு ஆன்மீக சிறப்பு மிக்க மாதம் ஆகும். இந்த மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த தடை, தாமதங்கள் நீங்கும். திருமணமாகாமல் தாமதம் ஆனவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடக்கும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டவர்களுக்கு, அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை விரைவில் கிடைக்கும். வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கி, பொன், பொருள் போன்றவற்றின் சேர்க்கை அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்கள் நீங்கப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
    கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காரணம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம்.
    திங்கட்கிழமை விரதம் இருப்பதனால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காரணம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம். இந்த விரதம் அனுஷ்டித்த சந்திரன் தனது நோய் நீங்கி சிவனின் தலையிலேயே இடம் பெறும் பேறு பெற்றுள்ளார்.

    சோமவார விரதம் அனுஷ்டித்தால் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமடையும். சந்திரன் மனோகாரகன், திங்கட்கிழமை சந்திரனுக்கு உரியது. சந்திரனுக்கு உரிய இந்த விரதத்தை சந்திரன் ஆட்சி பெற்று கடகம் ராசியில் அமர்ந்துள்ள இந்த நாளில் தொடங்குவது சிறப்பானது. இந்த விரதம் ஏன் தோன்றியது? இதை கடைபிடிப்பதால் என்ன நன்மை என்று யோசிப்பவர்களுக்கு புராண கதை ஒன்று உள்ளது.

    குஷ்ட ரோகத்தால் பாதிக்கப்பட்டு சாபம் பெற்ற சந்திரன் கார்த்திகை சோமவார விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம் பெற்று சிறப்பு பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவன், தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள்.

    அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படவும் நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

    சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.

    இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் முன் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
    அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
    ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும்.

    15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

    1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்

    3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

    4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

    5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது

    6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

    7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

    8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது

    9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்

    10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்

    11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

    12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்

    13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

    14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

    15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

    16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

    17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்

    18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்

    19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

    20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்

    21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்

    22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

    23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

    24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

    25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும் 
    பெண்கள் தங்களின் சுமங்கலி பாக்கியத்தை வலுப்படுத்தவும், கணவரின் ஆயுளை அதிகரிக்கவும் ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘வரலட்சுமி விரதம்’, ‘கேதார கவுரி நோன்பு’ போன்ற விரதங்களை கடைப்பிடிக்கிறார்கள்.
    இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும், அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன் - பேத்திகள் பார்த்தவர்களின் சுமங்கலித்துவத்திற்கு சிறப்பு கவுரவமும் உண்டு. திருமாங்கல்யமானது ஒரு பெண்ணின் கழுத்தில் எப்போதும் இருப்பதால், அது அவளது சுமங்கலித்துவத்தைக் கட்டிக்காக்கும். பெண்களுக்கு திருமாங்கல்யமே ‘பிரம்ம முடிச்சு’ ஆகும்.

    திருமணமான அனைத்து பெண்களும், தங்கள் ஆயுள் முழுவதும் தீர்க்க சுமங்கலியாக வாழவே விரும்புவார்கள். அதனால்தான் பெண்களுக்கு ஆசி வழங்கும் பெரியவர்கள் “தீர்க்க சுமங்கலி பவா” என்று வாழ்த்துவார்கள். பெண்களின் சுமங்கலி பாக்கியத்தில் தான் கணவரின் ஆயுள் அடங்கியுள்ளது என்பதே இதன் சூட்சுமம். பெண்கள் தங்களின் சுமங்கலி பாக்கியத்தை வலுப்படுத்தவும், கணவரின் ஆயுளை அதிகரிக்கவும் ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘வரலட்சுமி விரதம்’, ‘கேதார கவுரி நோன்பு’ போன்ற விரதங்களை கடைப்பிடிக்கிறார்கள்.

    இதையே நமது முன்னோர்கள் ஆண்களின் 60 வயதில் ‘சஷ்டியப்த பூர்த்தி’, 70 வயதில் ‘பீமரத சாந்தி’, 80 வயது சதாபிஷேம், 96 வயதில் ‘கனகாபிஷேகம்’ போன்ற மணவிழா சடங்குகளை செய்து ஆயுள் நீட்டிப்பு பெற்றார்கள். ஜனன கால ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாமிடமும், பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் இடமும் பலம் பெற்றவர்களுக்கு இந்த மணவிழாக்களைக் காணும் பாக்கியம் அமைகிறது. பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டு செய்யப்படும் இந்த சடங்குகளில், சகல தேவர்களையும் மகிழ்விக்கும் வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

    ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடமும், 8-ம் அதிபதியும், 8-ல் நின்ற கிரகமுமே ஆயுள், மாங்கல்ய பலத்தை தீர்மானிக்கும். 8-ம் அதிபதி சுப கிரக சம்பந்தத்துடன் வலுப்பெற்று விட்டால், அந்தப் பெண் தன் கணவனுடன் தீர்க்க சுமங்கலியாக தனது சொந்த பந்தங்களுடன் நீண்ட நெடுங்காலம் வாழ்வார். அத்துடன் செவ்வாயும், சுக்ரனும் பலம் பெற்றால், லட்சுமி கடாட்சம் நிறைந்த தீர்க்க சுமங்கலியாக அவர் இருப்பார். இத்தகைய அம்சம் நிறைந்த சுமங்கலிகள் ஆசி வழங்கினால் எத்தகைய திருமணத் தடையாக இருந்தாலும் அது அகன்றுவிடும்.

    நமது முன்னோர்கள் மாங்கல்ய கயிற்றைதான், சுமங்கலித்துவம் நிறைந்த மங்களப் பொருளாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதில் பஞ்சபூத சக்திகள் நிறைந்து இருப்பதால் சுமங்கலித்துவம் அதிகரிக்கும். அதிலும் பருத்தி இழைகளால் ஆன மாங்கல்ய கயிற்றிற்கு பஞ்ச பூத தெய்வீக சக்தி களை ஈர்த்து, சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி அதிகம். அதனால்தான் நமது முன்னோர்கள் மாங்கல்யத்தை மாங்கல்யச் சரடில் கோர்த்து பயன்படுத்தினார்கள். இன்றும் பலர் திருமாங்கல்யத்தை மாங்கல்ய கயிற்றில் பூட்டியே அணிவிக்கிறார்கள். இந்த நவீன காலத்தில் நாகரிகமாக திருமாங்கல்யத்தை தங்கச்சங்கிலியில் சேர்த்து அணிபவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

    “தங்கத்தில் திருமாங்கல்யம் அணிபவர்களுக்கு சுமங்கலித்துவம் குறைவாகவும், கயிற்றில் சரடினால் திருமாங்கல்யம் அணிபவர்களுக்கு சுமங்கலித்துவம் அதிகமாகவும் இருக்குமா?” என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். மஞ்சள் கயிற்றிற்கு நேர்மறை சக்தி அதிகம் என்பதால் தீவினை தோஷங்கள் எளிதில் அண்டாது. கர்ம வினைகளின் தாக்கம் குறையும். திருமாங்கல்யத்திற்கு இவ்வளவு மகத்துவம் இருந்தும், பல பெண்கள் தொழில், உத்தியோகம் மற்றும் கணவனுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக திருமாங்கல்யம் அணியாமலும் இருக்கிறார்கள்.

    திருமாங்கல்யம் என்பது ஒரு மங்கலப் பொருள். அதனால் அதை அணிகலன்களைப் போல் தினமும் கழற்றி வைப்பது, தேவைப்படும்போது அணிந்து கொள்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். பல பெண்கள் கோபத்தில் டி.வி. சீரியல் நடிகை போல் தாலியை கழட்டி வீசுவார்கள். இப்படிச் செய்வதால், அந்தப் பெண்களின் பெண் பிள்ளைகளுக்கு மாங்கல்ய தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மனக் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

    சுமங்கலித்துவத்தை அதிகரிக்கச் செய்யும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்..

    ஜனன ஜாதகத்தில் 8-ம் அதிபதி, அசுப கிரக சம்பந்தம் பெற்றவர்களும் செவ்வாய் பலம் இழந்தவர்களுமே மாங்கல்யத்திற்கு தகுந்த மரியாதை தராமல் இருப்பார்கள். அந்தப் பெண்கள், 60 வயதிற்கு மேற்பட்ட சுவாசினிகளிடம் வெள்ளிக்கிழமைகளில் நல் ஆசி பெற வேண்டும். ரெடிமேடாக தங்கச் சங்கிலி கிடைப்பதால் நேரம் கிடைத்த நேரத்தில் தங்க சங்கிலி வாங்கி திருமாங்கல்யத்தில் சேர்க்க கூடாது. நேரம், பணம் இருக்கும் போது சங்கிலி வாங்கினாலும், பெண்ணின் ஜாதகத்தின் அடிப்படையில் சுபயோக தினத்தில்தான் அதைச் செய்ய வேண்டும். இதன் மூலம் சுமங்கலித்துவம் அதிகரிக்கும். கணவருக்கு உடல் ஆரோக்கிய குறைபாடு இருந்தாலும் அது சீராகிவிடும். கணவன் - மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர்.

    திருமாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி ஆகிய மூன்று இடங்களில் எப்பொழுதும் குங்குமம் இட, அது சுமங்கலித் தன்மையை பெற்றுத் தரும். தினமும் காலையில் ஆதித்திய ஹிருதயம் கேட்பதாலும், சுமங்கலி பாக்கியம் அதிகரிக்கும். ஆதித்திய ஹிருதயத்தின் 5-வது வரியை 9 முறை உச்சரிக்கும்போது, சுமங்கலி பாக்கியத்தோடு, சகல சவுபாக்கியங்களும் சேரும். பாவங்கள் நீங்கும். சிந்தையில் உள்ள கவலை நீங்கி, ஆயுள் அதிகரிக்கும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் “வியாழக்கிழமை விரதம்”. 3 ஆண்டுகள் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.
    வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

    பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

    விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை வறிய நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.
    ×