என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.
    மனிதர்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் தாம் செய்யும் செயல்கள் விருத்தியுடையதாக இருக்க வேண்டும் என்பதே. ஒரு சிலருக்கு காரிய சித்தி, காரிய விருத்தி இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு சிறு செயலை சாதிப்பது கூட, குதிரைக்கு கொம்பு முளைத்தது போல் ஆகிவிடும். அது ஏன் ஒரு சிலர் செய்யும் செயல் மட்டும் விருத்தியாகிறது? என்ற ரகசியம் தெரிய வேண்டுமா.

    காரிய விருத்தி நேரம் என்று ஒரு குறிப்பிட்ட கால நேரம் தினமும் உண்டு. அதனை குளிகை நேரம் என்பார்கள். அந்த குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    பலருக்கு தினமும் ராசி பலன் பார்க்கும் வழக்கம் உண்டு. அது பத்திரிகையோ, வார இதழோ, காலண்டரோ, டி.வி.யோ எதுவாக இருந்தாலும் குளிகை நேரம் என்று ஒன்றை குறிப்பிடுவதைக் காண முடியும். ராகு காலம், எம கண்டம் தெரிந்த அளவு, பலருக்கும் குளிகை நேரம் பற்றி தெரிந்திருக்காது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் ‘குளிகன்’ என்றும், இரவில் ஒரு குழந்தை பிறந்தால் ‘மாந்தி’ என்றும் சொல்லப்படுகிறது. குளிகன் என்பவர் சனி மற்றும் ஜோஷ்டா தேவியின் புதல்வன்.

    வாரத்தில் இருப்பது 7 நாட்கள். ஆனால் 9 நவக்கிரகங்கள் உள்ளன. 7 கிரகங்களுக்கு 7 நாட்கள் சென்று விடும். ஆனால் ராகு, கேதுவுக்கு கிழமை கிடையாது என்பதால், தினமும் 1½ மணி நேரம் ராகு காலம், எம கண்டமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அது போலத் தான் குளிகனுக்கும் தினமும் 1½ மணி நேரம் பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.

    குறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள், குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியைக் கொடுத்தால், அந்த கடன் விரைவில் அடைபட்டுவிடும். கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள், அல்லது சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடனில் ஒரு பகுதியை செலுத்தினால் அந்த கடன் எளிதில் குறைந்து விடும். பெரிய பாக்கி இருக்கும் போது, சிறிய தொகையை வாங்க மறுப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட நிலையில் வீட்டில் சிவப்பு நிற உண்டியல் அல்லது சிவப்பு நிறத் துணியில், தினமும் குளிகை நேரத்தில் பணம் கொடுக்க வேண்டியவரின் பெயரை உச்சரித்து கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வர வேண்டும். குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கடன் அடைபடுவதை கண் முன் காணலாம்.



    குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும், தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும். குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன், ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டது என்று ஒரு புராண கதையே உண்டு.

    குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனி பகவானை வணங்கும்போது மனதில் குளிகனையும் எண்ணி வழிபடலாம்.

    குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், அசுப காரியங்களுக்கு இது பொருத்தம் இல்லாததாகவும் கருதப்படுகிறது.

    குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்தால், அது எந்தத் தடையும் இல்லாமல் நடப்பதுடன், நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகன் என்ற மாந்தியின் நேரத்தை பயன்படுத்தி காரிய விருத்தி, காரிய சித்தி பெறுங்கள்.

    செய்யக்கூடியவை

    குளிகை நேரத்தில் செய்யக் கூடிய செயல்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். சுபச் செயல்களான நகை, நிலம், வீடு, வாகனம் வாங்குவது. பத்திரப்பதிவு செய்வது. புதிய தொழில் தொடங்குவது. வங்கிக் கணக்கில் பணம் போடுவது. அடமானப் பொருளை மீட்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் தாராளமாகச் செய்யலாம். மேலும் விவசாயப் பணிகளான விதை விதைத்தல், நாற்று நடுதல், மகசூல் அறுவடை செய்தல் போன்ற செயல்களையும் செய்யலாம். இந்த கால நேரத்தில் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உண்டியலில் தினமும் பணம் போட்டு வந்தால், சேமிப்பு மலை போல் வளரும். புதிய ஆடை, ஆபரணங்கள் அணியலாம். பிறந்தநாள் கொண்டாடலாம். ஆயுள் ஹோமம் செய்யலாம்.

    செய்யக்கூடாதவை

    குளிகை நேரத்தில் செய்யக் கூடாத சில செயல்களையும் இங்கே பார்ப்போம். பெண் பார்க்கச் செல்வது, திருமணம் செய்தல், வேலைக்கு முயற்சி செய்வது, நேர்காணல்களை சந்திப்பது போன்றவற்றை குளிகை நேரத்தில் தவிர்க்க வேண்டும். அது போல் கடன் வாங்குவது, வீட்டை மாற்றுவது, சவ அடக்கம் போன்ற அசுப நிகழ்ச்சியை இதுபோன்ற நேரத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதே போல் நோய்க்கு மருத்துவரை அணுகுவதற்கும் இது சரியான நேரம் அல்ல. கொடிய நோய்க்கு முதன் முதலில் மருந்து எடுத்துக் கொள்ளவும் இந்த நேரம் சரியானது கிடையாது.

    பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
    உச்சிஷ்ட கணபதிக்கு தேங்காய் மாலை அணிவிப்பது வேண்டிக்கொண்டால் திருமணம் தடைப்படுபவர்கள் ஏற்படும் தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது.
    நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி. விநாயகருக்கு தனி கோயில் கொண்ட இங்கு மட்டுமே ராஜகோபுரம் உள்ளது. இதனால் ஆசியாவிலேயே ராஜகோபுரம் கொண்ட தனி விநாயகர் ஆலயம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.

    ராஜகோபுரத்தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள இக்கோயிலில் நாயக்கர், பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன. மூர்த்தி விநாயகர் தனது இடப்பக்க மடியில் ஸ்ரீநீலவாணியை அமர்த்தியபடி அருளுகிறார். ஸ்ரீநீலவாணி என்பது லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய தேவியரை உள்ளடக்கிய தெய்வமாக கருதப்படுகிறது.

    ஆனந்த நிலையில் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் பல்வேறு பலன்களை பெறமுடிகிறது. குறிப்பாக இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விஷேசமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்களுக்கு தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது. இதற்காக தேன் கலந்த மாதுளை மாலை மற்றும் தேங்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர். இக்கோயிலில் உள்ள பைரவர் சன்னதியில் உள்ள தீர்த்த கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் 3 நாட்கள் சூரிய ஒளி நேராக விநாயகர் சன்னதியில் படுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

    இந்தத் தலத்து இறைவன்... வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம். இந்த கோவிலில் வாஸ்து பரிகார பூஜையும் விசேஷம்.
    திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில், சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீபூமிநாதர் கோவில். இந்தத் தலத்து இறைவன்... வீடு- மனை வாங்குகிற யோகத்தை அருள்கிறார் என்பதால், இவருக்கு ஸ்ரீபூமிநாதர் என்கிற திருநாமம் அமைந்ததாம். அம்பாள்- ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி.

    மனை அல்லது நிலம் வாங்குபவர்கள், 'இவ்ளோ காசு- பணம் சம்பாதிச்சு என்ன பயன்? சொந்தமா ஒரு வீடு வாங்கற யோகம் அமைய மாட்டேங்குதே..’ என்று புலம்புவர்கள், இங்கு வந்து சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு, அம்பாளையும் ஸ்வாமியையும் பிரார்த்தித்தால், விரைவில் வீடு- மனை வாங்கும் யோகம் கிடைப்பது உறுதி எனப் பூரிக்கின்றனர், பக்தர்கள். அமாவாசை நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. அதிலும், அமாவாசையும் புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாளில், வீடு- மனை தொடர்பான சிக்கல்களில் இருப்பவர்களும், வாங்க வேண்டுமே என்கிற ஆவலில் இருப்பவர்களும் வழிபடுவது கூடுதல் பலனைத் தரும் என்பது நம்பிக்கை.

    இங்கே, வாஸ்து பரிகார பூஜையும் விசேஷம். நிலம் வாங்கும் முன்போ அல்லது கட்டட பணியில் தடை என்றாலோ, நிலத்தின் வட கிழக்கு மூலையில் இருந்து பிடிமண் எடுத்து, அதை மஞ்சள் துணியில் கட்டி, பூஜையறையில் வைத்து வணங்கி வரவேண்டும். பிறகு, வாஸ்து நாளில் இங்கு அந்தப் பிடிமண்ணை வைத்து ஸ்ரீபூமிநாதருக்கு பூஜை செய்து விட்டு, அந்தப் பிடிமண்ணுடன் பிராகார வலம் வந்து இங்கேயுள்ள மண்டபத்தில் கட்டிவிடவேண்டும். கட்டுமானப் பணிகள் தொடங்கியதும் கோயிலுக்கு வந்து, மண்டபத்தில் கட்டிய பிடிமண்ணை துணியில் இருந்து எடுத்து, கோயிலின் வில்வமரத்தடியில் கொட்டி விட்டு வணங்கினால், பிரச்னைகள் விலகி, கட்டடப் பணிகள் குறைவின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.

    பிராகாரத்தில் உள்ள வன்னிமரத்தடியில் இருந்து மண் எடுத்துக்கொண்டு, ஸ்ரீபூமிநாதரை வணங்கிவிட்டு, மனையின் வடகிழக்கு மூலையில் போட்டுவிட்டு வேலையைத் துவக்கினால், வீடு மற்றும் கட்டடப் பணிகள் தடையின்றி நடைபெறுமாம்.
    பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.
    பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது பாலாரிஷ்ட தோஷமாகும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகளே பிறந்த காலத்திலிருந்து 1 அல்லது 2 ஆண்டுகள் வரை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

    பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். பிறந்த குழந்தை உயிருடன் இருக்குமா? எத்தனை காலம் இருக்கும்? இந்தக் குழந்தை பிறப்பினால் தாய்க்கும் ஏதாவது கஷ்டங்கள் இருக்குமா என்பதை பாலாரிஷ்ட தோஷம் சுட்டிக் காட்டும்.

    அன்றைய காலகட்டத்தில் குழந்தை பிழைத்திருக்குமா, தாயும் உயிருடன் இருப்பாளா என்பதை கணிப்பதற்காக ஜோதிடத்தில் சில வழிமுறைகள் சொல்லப்பட்டன. சுருக்கமாக சந்திரன் வலுவுடன் இருக்கும் நேரத்தில் பிறந்த குழந்தைகள் ஆயுள்பலம் உள்ளவனாகவும், சுகப் பிரசவமாகவும், தாய்க்கும் நன்மைகளைச் செய்வதாகும் அமைப்பில் இருப்பதாக சொல்லப்பட்டது.

    சந்திரன் பாபக் கிரகங்களுடன் இணைந்து, தேய்பிறைச் சந்திரனாகவோ அமாவாசையன்றோ, கிரகண அமைப்பிலோ பிறக்கும் குழந்தைகளுக்கு பாலாரிஷ்டம் என்கின்ற ஆயுள் தோஷம் உண்டாகி அதனுடைய தாயாரும் அதன் குழந்தைப் பருவத்திலேயே மரணமடைவார் என்பது விதி.

    பரிகாரம்

    இந்த தோஷம் நீங்க மிருத்யுஞ் ஹோமம், அல்லது பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு இயற்றலாம், அல்லது ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டு செய்யலாம். விஷ்ணு சகஸ்வரநாமம் லலிதா நாமம் பாராயணம் செய்து வரலாம். இந்த மந்திரத்தை வழிபட்டு விபூதியை குழந்தையின் நெற்றியில் பூசலாம். 
    ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.
    அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.

    பித்ரு தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பதும், பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறும் என்பதும், பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை.

    ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.

    ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

    நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. 
    கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.
    கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை, தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய், திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.

    பசுவுக்கு வெள்ளி கிழமை அன்று அகத்திக்கீரை வழங்கினாலே இந்தப்பிரச்னைகள் படி படியாக தீர்ந்துவிடும்.

    பசுவை இன்று கிராமங்களில் பார்க்கலாம் அல்லது பால் பண்ணைகள், மாட்டுப் பண்ணைகள், பசு மடங்கள், பெரிய கோவில்களில் உள்ள பசு மடங்களில் இவ்வாறு அகத்திக்கீரையை வழங்கலாம். அல்லது வாழைப்பழங்களையும் தானமாக வழங்கலாம்.

    கோயிலுக்குள்ளேயே உட்பிரகாரத்தில் பசுமடம் அமைந்திருக்கிறது. அந்த பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரைக் கட்டு ஒன்று ரூ.10/-க்கு விற்பனை செய்கிறார்கள்.

    நாம் அதை வாங்கி உள்ளே இருக்கும் பசுக்களுக்கு வழங்குவது மாபெரும் புண்ணியம். சாதாரணமாக நமது ஊரில் தெருவில் இருக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வழங்கினாலே செய்த பாவங்கள் தீர்ந்துவிடும். இதைவிட பழமையான கோயில்களில் செய்தால் மிக மிக சிறப்பு.
    நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, அதற்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
    நமது பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்காக பரிகாரங்கள் செய்வோம். ஆனால் சில சமயங்களில் அந்த பரிகாரங்கள் பலனளிக்காது, இதற்கு காரணம் நமது கர்மவினைகளாகும். ஒருவரின் ஜாதகத்தில் தற்போது எந்த கர்மவினையானது நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்தால் மட்டுமே பரிகாரங்கள் பலனளிக்கும்.

    மூன்று வகையான கர்மாக்கள் உள்ளது. அவை ’த்ருத கர்மா’ தெரிந்தே செய்த பாவம், ’த்ருத அத்ருத கர்மா’ தெரிந்தே செய்த தப்பினை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்பது, ’அத்ருத கர்மா’ தெரியாமல் செய்த தவறு.

    பரிகாரங்கள்

    த்ருத கர்மா

    தெரிந்தே முன் ஜென்மத்தில் பிறருக்கு துன்பம் தரக்கூடிய குற்றங்களை செய்த பாவமாகும். பிறரின் சொத்தினை அபகரித்து கஷ்டப்படுத்தியது, பணத்திற்காக கொலை செய்தது, தாய் தந்தையரை கஷ்டப்படுத்தியது இவற்றிற்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது. இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன், குரு ஆகியோர்க்கு தொடர்போ அல்லது பாகியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் அனுபவித்துதான் தீர வேண்டும். பாவங்கள் அடுத்த தலைமுறையினரை பாதிக்காமல் இருக்க அன்னதானம் அடிக்கடி செய்யவேண்டும்.

    த்ருத அத்ருத கர்மா

    முற்பிறவியில் நல்லது நடக்கும் என நினைத்து செய்திருப்போம். ஆனால் அது தீங்கினை விளைவித்திருக்கும். தீயவர்களின் குணம் அறியாமல் நாம் செய்த உதவி மற்றவர்களை பாதித்ததை அறிந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு இருப்போம். இந்த ஜென்மத்தில் ஜாதகரீதியாக தெய்வபரிகாரங்கள் செய்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோர்க்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வை இருக்கும்.

    அத்ருத கர்மா

    மன்னிக்ககூடிய சிறிய குற்றங்களை தெரியாமல் மறுபிறவியில் செய்வதாகும். இதற்கு பரிகாரங்கள் தேவை இல்லை. மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்பு கேட்டாலே போதுமானதாகும். இவர்களின் ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருக்கும்.
    திருமணம் தடை ஏற்படுபவர்கள் காளகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து ஜாதகத்தை அர்ச்சனை செய்தால் அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில், காளகஸ்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. ஒரு சமயம் சப்த ரிஷிகளாகிய மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர், இறைவனின் சாபத்திற்கு ஆளானார்கள். அதில் இருந்து விடுபடுவதற்காக, 48 நாட்கள் இந்தக் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராடி, இத்தல இறைவனான காளகஸ்தீஸ்வரரை வழிபட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சாபம் நீங்கப் பெற்று, கடுமையான நோயும் நீங்கப் பெற்றனர் என தலபுராணம் கூறுகிறது.

    இந்த ஆலயம் திங்கட்கிழமைகளில் பக்தர்களால் நிறைந்திருக்கும். அன்று ராகு கால வேளையான காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, இறைவனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர். அப்படிச் செய்தால், அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அன்று வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.

    இங்கு குடும்ப ஒற்றுமைக்கு அர்த்தநாரீஸ்வரர் வழிபாடும், நோயற்ற வாழ்வுக்கும் குறைவற்ற செல்வத்திற்கும் கால பைரவர் வழிபாடும், சிறப்பான பிரதோஷ வழிபாடும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம்.
    பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும்.
    பூச புதன் நேசம் தரும் என்பது பழமொழி. புதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும், எமதர் மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார்.

    பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளங்குளத்தில் அமைந்துள்ளது அட்சயபுரீஸ்வரர் கோவில். தலத்துக்கு வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்த நாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனி வாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது.

    அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சி தந்து, திருமண பாக்கியமும் தந்தார். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது. விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது. பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார்.

    அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று. இந்த சித்தர் சூரிய லோகத்துக்கும் கூட தினமும் சென்று வரும் அரிய சக்தியை உடைய பிதர்சாய் என்னும் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

    பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும், உடல் நலக்குறைவு, கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம்.

    இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியரு டன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் செல்வ வளம் உண்டாகும்.
    பசுவுக்கு நாம் அகத்திக்கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.
    பசுவுக்கு நாம் அகத்திக்கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

    பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். பசுவை பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.

    பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது.



    இது மிக புண்ணியமான காலமாகும். பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள். ‘மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

    மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு, எமன், எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இத்துன்பம் இல்லை. அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

    உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடத்தில் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது. கோமாதாவை காப்போம், நேசிப்போம், பூஜிப்போம்.

    முத்தங்கி அணிவித்து நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக திருமணம் நடை பெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க கவசம் அலங்காரமும் முத்தங்கி அலங்காரமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு அடையும்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்தில் வித்தியாசமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.3ஆயிரம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முத்தங்கி அணிவித்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக திருமணம் நடை பெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
    சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
    கோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவ நாயகர்களின் அருள் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப்போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நவக்கிரகங்களை பற்றியும், அவற்றின் தோஷங்கள் விலகுவதற்கான எளிய பரிகாரங்களையும் இங்கே பார்க்கலாம்.

    சூரியன்: காசியப முனிவரின் மகன். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை நட்பு கிரகங்கள். புதன் சமமான கிரகம், சுக்ரன், சனி, ராகு-கேது ஆகியவை பகை கிரகமாகும். அதி தேவதை அக்னி, உச்ச ராசி மேஷம், நீச்ச ராசி துலாம். சூரியனுக்கான நட்சத்திரங்கள் உத்திரம், கிருத்திகை, உத்திராடம். தசாபுத்தி காலம் 6 ஆண்டுகள். நைவேத்தியம் சர்க்கரை பொங்கல்.

    சூரியன் லக்னத்தில் இருந்து 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்று நின்றால், அதிக அளவில் சுப பலனைத் தருவார். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் உயர்வான இடத்தில் இருந்தால், அந்த நபர் ஆரோக்கியம், ஐஸ்வரியம், சந்தான பாக்கியம், நீண்ட ஆயுள், அரசு வேலைவாய்ப்பு, அரசியல் யோகம் பெறுவார். அதே நேரம் நீச்சம் பெற்றிருந்தால் ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, உஷ்ண ரோகம், எலும்பு பிரச்சினை வரலாம்.

    சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க, ஞாயிற்றுக்கிழமையில் கோதுமை, செம்பு பாத்திரங்களை தானம் செய்யலாம். பார்வை இழந்தவர்களுக்கு உணவளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை கோதுமை மீது 10 தீபம் ஏற்றி வழிபட சூரியனின் அருளைப் பெறலாம்.

    சந்திரன் : பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி. சூரியன், புதன் இருவரும் சந்திரனின் நட்பு கிரகங்கள். செவ்வாய், குரு, சுக்ரன் ஆகியவை சமமான கிரகங்கள். ராகுவும் கேதுவும் பகை கிரகங்கள். சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், சித்திரை. சந்திரனின் தசா புத்தி காலம்- 10 ஆண்டுகள். இவரது அதி தேவதை நீர் ஆகும். உச்ச ராசி ரிஷபம், நீச்ச ராசி விருச்சிகம்.

    சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் 1, 2, 3, 4, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் நின்று உச்சம் பெற்றால், நல்ல சுப பலன்களை அதிக அளவில் கொடுப்பார். தாய் பாசம், குடும்ப பாசம், விவசாய விருத்தி, கடல் வணிகம், கல்வி ஸ்தாபனம், பால் மற்றும் உணவு வணிகள் சிறப்பான லாபத்தை அளிக்கும். அதே நேரம் 6, 8, 10, 12 ஆகிய இடங்களில் தேய்பிறை சந்திரனாக நின்று நீச்சம் பெற்றால், ரத்த சோகை, நீர் சம்பந்தமான வியாதி, தொண்டை பிரச்சினை, விரும்பிய வாழ்க்கை அமைய கால தாமதம் ஏற்படும்.

    சந்திரனின் தோஷம் நீங்க, திங்கட்கிழமை அம்பாள் சன்னிதி முன்பு நெல் மீது 11 தீபம் ஏற்றுங்கள். திங்கட்கிழமைகளில் அசைவத்தை தவிர்ப்பது, பவுர்ணமி விரதம் இருப்பது நல்லது. பச்சரிசியை தானம் தரலாம்.

    செவ்வாய்: இவர் வீரபத்திரர் அம்சம். சுப்பிரமணியரை தெய்வமாக கொண்ட இவர், பாவ பலனை கொடுக்கும் குரூரர். இவருக்கு சூரியன், சந்திரன், குரு நட்பு கிரகங்களாகும். சுக்ரனும், சனியும் சமமான கிரகங்கள். புதன், ராகு-கேது பகை கிரகங்கள். செவ்வாய் கிரகத்தின் நட்சத்திரங்கள் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம். இவரது தசாபுத்தி காலம் 7 ஆண்டுகள். இவருக்கு உச்ச ராசி மகரம், நீச்ச ராசி கடகம் ஆகும்.

    செவ்வாய் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில், 3, 6, 11 ஆகிய இடங்களில் இருப்பது 100 சதவீத சுப பலன்களைத் தரும். செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தால் தலைமை பதவி, ரியல் எஸ்டேட், சகோதர உதவி, எதிரியை வெல்லும் துணிச்சல் வந்து சேரும். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தால், சிறைவாசம், உடலில் ஆறாத காயம், திருமண தடை, பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருப்பது, பித்த நோய் உண்டாகக்கூடும். செவ்வாய்க்கிழமைகளில் வெண் பொங்கல் நைவேத்தியமாக படைத்து வைத்து, செண்பக மலர் தூவி 108 முறை செவ்வாய் கிரக துதியை படியுங்கள்.

    புதன்: இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. இவருக்கு சூரியனும் சுக்ரனும் நட்பு கிரகங்கள், செவ்வாய், குரு, சனி, ராகு-கேது சமமான கிரகங்கள், சந்திரன் மட்டும் பகை கிரகமாகும். புதன் கிரகத்தின் நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவையாகும். புதனின் தசாபுத்தி காலம் 17 ஆண்டு. புதனின் அதி தேவதை திருமால்.

    புதன் கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் உச்சம் பெற்றிருந்தால், அந்த நபர் 100 சதவீதம் சிறப்பான பலனைப் பெறுவது உறுதி. புதன் நல்ல இடத்தில் இருந்தால் கல்வியில் வெற்றியும், இசை, கவிதை, ஞானம் ஏற்படும். பூர்வீக சொத்து சேரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். நீதி துறையிலும், கணிதத் துறையிலும் மேதையாகும் யோகமுண்டு. புதன் நீச்சம் பெற்றிருந்தால், மந்த புத்தி, குடும்ப பிரச்சினை, தொழில் தடை, மனக்குழப்பம், தோல் வியாதி வந்து சேரும். புதன் கிரக தோஷங்கள் அகல, மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். புதன்கிழமை புதன் ஓரையில் புதன் காயத்ரி மந்திரம் சொல்லி வருவது நல்லது. மதுரை மீனாட்சி வழிபாடு நன்மை தரும். புதன்கிழமை அசைவத்தை தவிர்த்து, துளசி பொடி சாதம் சாப்பிடவும்.

    குரு: இவர். பூரண சுப கிரகம் என்பதால், இவரது பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சூரியன், சந்திரன், செவ்வாய் இவருக்கு நட்பு கிரகங்கள். சனி, ராகு-கேது சமமான கிரகங்கள். புதனும் சுக்ரனும் பகை கிரகங்கள். குருவின் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. இவரது தசாபுத்தி காலம் 16 ஆண்டுகள் ஆகும். குருவின் அதி தேவதை பிரம்மன், உச்ச ராசி கடகம், நீச்ச ராசி மகரம்.

    குரு, லக்னத்தில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடத்தில் நின்றால் அதிக சுப பலன்களைத் தருவார். அவரே உச்சம் பெற்றிருந்தால் நல்ல ஞானம், படிப்பில் உயர்வு, அரசுப் பணி, பணப்புழக்கம், நல்ல மண வாழ்க்கை, குழந்தை பாக்கியம், நிரந்தர பணி, உடல் ஆரோக்கியம், ஜோதிட ஞானம், லட்சுமி கடாச்சம் ஏற்படும். அதே வேளையில் நீச்சம் பெற்றிருந்தால் மறதி, பக்தி குறைவு, மூளைக்காய்ச்சல், புத்திர பாக்கியம் தடை, உடல் சோர்வு, பணப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை தோன்றும். வீட்டில் பொன் பொருள் தங்காது.

    குருவின் தோஷம் விலக, வியாழக்கிழமை அசைவத்தை தவிர்த்து, 16 வியாழக்கிழமை இரவு கொண்டை கடலையை மஞ்சள் துணியில் முடிந்து, தலையணை அடியில் வைத்து படுத்து, 17-வது வாரம் ஓடும் நீரில் விடவேண்டும்.

    சுக்ரன்: அசுர குருவான இவரும் சுப கிரகம் தான். புதன், சனி, ராகு-கேது ஆகியவை இவருக்கு நட்பு கிரகங்கள். செவ்வாய், குரு போன்றவை சமமான கிரகங்கள். சூரியன், சந்திரன் இருவரும் பகை கிரகங்கள். சுக்ரனின் நட்சத்திரங்கள் பரணி, பூரம், பூராடம் ஆகும். சுக்ரனின் தசாபுத்தி காலம் 20 வருடங்கள். இவரது அதிதேவதை லட்சுமி, உச்ச ராசி மீனம், நீச்ச ராசி கன்னி.

    சுக்ரன் ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 2, 3, 4, 5, 8, 9, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலன் களைத் தருவார். நீச்சம் பெற்றிருந்தால் உயிர் அணுக்கள் குறைபாடு, திருமண கால தாமதம், அவப்பெயர், சிறை தண்டனை, உறவில் பிரிவு, தொழில் நஷ்டம் உண்டாகும்.

    சுக்ரனின் தோஷம் விலக, வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஓரையில் ராஜராஜேஸ்வரியை வழிபடுவதோடு விரதம் இருப்பது சிறந்தது. வெள்ளை நிற ஆடை, மொச்சை தானம் வழங்கலாம்.

    சனி: இவர் சூரியனுடைய குமாரர். இவருக்கு புதன், சுக்ரன், ராகு-கேது ஆகியோர் நட்பு கிரகங்கள். குரு சமமான கிரகம், சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் பகை கிரகங்கள். சனியின் நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. சனியின் தசா புத்தி காலம் 19 ஆண்டுகள். சனியின் அதி தேவதை எமதர்மன், உச்ச ராசி துலாம், நீச்ச ராசி மேஷம்.

    சனி கிரகமானது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து, 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலனைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் தீர்க்க ஆயுள், விவசாயம், இரும்பு, எண்ணெய் தொழிலில் யோகம், கல்வி ஞானம், பொன், பொருள் சேர்க்கை, வாகன யோகம், வெளிநாட்டு யோகம், தலைமைப் பதவி, சுயதொழில் யோகம் தருவார். அதுவே நீச்சம் பெற்றிருந்தால், தீராத பிணி, நரம்பு சோர்வு, மனைவி, குழந்தை வழியில் அவப்பெயர், தொழிலில் பின்னடைவு, வழக்குகள் உண்டாகும்.

    சனியின் தோஷம் விலக, அண்டங் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைக்க வேண்டும். பாதாள சனியையும், குடும்பத்துடன் உள்ள சனியையும் ஒரே நாளில் வழிபட வேண்டும்.

    ராகு: இவர் அசுரத் தலையும், நாக உடலும் கொண்டவர். மிகுந்த வீரம் உடையவர். ‘கருநாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவருக்கு சனியும், சுக்ரனும் நட்பு கிரகங்கள். புதன், குரு சமமான கிரகங்கள். சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் பகை கிரகங்கள். ராகுவின் நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவையாகும். இவரது தசாபுத்தி காலம் 18 ஆண்டுகள். அதிதேவதை காளி மற்றும் துர்க்கை, இவரது உச்ச ராசி விருச்சிகம், நீச்ச ராசி ரிஷபம் ஆகும்.

    ராகு ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலனைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மறைமுக வருமானம், குடும்ப ஒன்றுமை, வெளிநாட்டு பயணம், நல்ல மண வாழ்க்கை, பூர்வீச சொத்து, அரசியல் ராஜ்ஜிய சுகம் போன்றவை கிடைக்கும். அதே நேரம் நீச்சம் பெற்றிருந்தால் பாம்பு தீண்டுதல், சிறைவாசம், பொருள் களவு போகுதல், குடிப்பழக்கம், தோல் சார்ந்த நோய்கள், மனக்குழப்பம் தோன்றும்.

    ராகு தோஷம் விலக, இரண்டு சர்ப்பம் சேர்ந்து உள்ள கருங்கல் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும். ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்யலாம்.

    கேது: இவர் நாகத் தலையும், அசுர உடலும் கொண்டவர். சிகி என்றும், செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர். இவருக்கு சனியும், சுக்ரனும் நட்பு கிரகங்கள். புதனும், குருவும் சமமான கிரகங்கள். சூரியன், செவ்வாய், சந்திரன் பகை கிரகங்கள். கேதுவுக்குரிய நட்சத்திரங்கள் அசுவினி, மகம், மூலம் ஆகும். கேதுவின் தசாபுத்தி காலம் 7 ஆண்டுகள். கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன். உச்ச ராசி விருச்சிகம், நீச்ச ராசி ரிஷபம்.

    கேது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் நின்றால் அதிக சுப பலன்களைத் தருவார். உச்சம் பெற்றிருந்தால் ஞான மோட்சம் ஏற்படும். ஆன்மிகம், ஆலய சேவை, மருத்துவ சேவை, பொன் பொருள், பூமி, வாகன யோகம் கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சியுறும். ஆசிரம சேவை செய்வீர்கள். நீச்சம் பெற்றால் எதிரியால் பயம், தீய பழக்கம் ஏற்படும். கலைத் துறையில் பின்னடைவு, குடும்ப பிரிவு உண்டாகும்.

    கேது தோஷம் விலக, செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் கதம்ப சாதம் வைத்தும், கதம்ப பூ வைத்தும், கேது கவசம் படிப்பது நல்லது. மேலும் குதிரைக்கு எமகண்ட நேரத்தில் கொள்ளு தானம் செய்வதன் மூலம் நினைத்த எல்லா சுபகாரியம் தடையின்றி நடக்கும்.

    நாடி ஜோதிடர் பாஸ்கர்
    ×