என் மலர்
மற்றவை
- நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும்.
- 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும்.
"சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின் படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது. அதாவது தாமிரபரணி போல 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும்.
ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும்.
இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.
48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தானிய வாசத்தில் வைக்கிறார்கள்.அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம்.இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது.
ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.
ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும்.
இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.
சரி… ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும்.
நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக் கொடுத்து விடும்.
ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெறும். அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும்.
அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள். பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது.
புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது.
இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது.
பின்னர் கும்பாபிஷேகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.
ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக ஆக்கப்படுகிறது.
-கீர்த்திவர்மன் ஸ்தபதி
- 1846ல் நேபாளத்தை பிடிக்க சென்ற பிரிட்டிஷ் படைக்கு கூர்க்காக்கள் கடுமையான அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார்கள்.
- இந்தியா- நேபாளம்- பிரிட்டன் போட்ட ஒப்பந்தத்தின்படி நேபாளிகள் இந்திய ராணுவத்தில் சேரலாம்.
இந்திய ராணுவத்தில் வெளிநாட்டவர் சேரமுடியுமா? ஒரே ஒரு நாட்டவருக்கு தான் அந்த உரிமை உண்டு. நேபாளிகள், குறிப்பாக கூர்க்காக்கள்.
1846ல் நேபாளத்தை பிடிக்க சென்ற பிரிட்டிஷ் படைக்கு கூர்க்காக்கள் கடுமையான அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார்கள்.
தோற்று பின்வாங்கிய பிரிட்டிஷ் படை, தான் பிடித்த சிக்கிமை வைத்துக்கொன்டு நேபாளத்துக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்கள் நஷ்ட ஈடு கொடுக்கவும் ஒப்புக்கொண்டது.
அதன்பின் கூர்க்காக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்க அனுமதி கேட்டது பிரிட்டன். நேபாளமும் அனுமதித்தது. சுதந்திரத்துக்கு பின் இந்தியா- நேபாளம்- பிரிட்டன் போட்ட ஒப்பந்தத்தின்படி நேபாளிகள் இந்திய ராணுவத்தில் சேரலாம். பீல்ட்மார்ஷல் ஜெனெரல் கூட ஆகலாம்.
பிறப்பால் பார்ஸி மதத்தை சார்ந்த சாம் மானேக்ஷா கூர்க்கா ரைபிள்ஸ் ரெஜிமெண்டில் தான் பணியாற்றினார். அவர் அந்த ரெஜிமெண்டை பற்றி சொன்னது "எனக்கு மரணத்தை கண்டு பயமில்லை என ஒருத்தன் சொன்னால் ஒன்று அவன் பொய் சொல்லணும் அல்லது அவன் கூர்க்காவாக இருக்கணும்"
இன்றும் 30,000 கூர்க்காக்கள் இந்திய ராணுவத்தில் உள்ளார்கள்.
- நியாண்டர் செல்வன்
- தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
- பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரி உத்தரவிட்டார்.
ஒரு மாணவன் முழு ஆண்டுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில்..
தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.
இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை.
வகுப்புல பாடம் நடத்தும்போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியான்னு கோபமாக திட்டினார்.
அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.
இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார்.
அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான்.
உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
ஒரு புதிய சிந்தனை உருவானது.
தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான்.
ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.
அதன் பெயர் இயர் மஃப் (Ear muff)
பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள்.
இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.
ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.
அந்தச் சமயம் முதலாம் உலகப்போர் ஆரம்பமானது.
பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேண்டும் என அதிகாரி உத்தரவிட்டார்.
போர் வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவமைத்து கொடுத்தான்.
கோடீஸ்வரனானான்.
அவர்தான் செஸ்டர் கீரின் வுட்.
சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்.
- அருண் நாகலிங்கம்
- தாயென்ற மகிழ்வோடும் தன்மகனின் நினைவோடும், வாயொன்று இருப்பதனை வஞ்சித்தே உனக்காக...
- ஓயாது தேய்கின்ற உருவத்தை உற்றுப் பார் காயாது உன்னுள்ளம் கரங்கூப்பு அதுபோதும்!
கருவுற்ற நாள் தொட்டு கலந்திட்ட சுகக்கேடை
உருவுற்று மண்மீது உலகெட்டும் நாள்வரையில்
ஒரு உற்ற சுமைபோல உள்ளத்தும் உடலாலும்
வரம்பெற்று சுமக்கின்ற வல்லமையே தாய்மையடா!
நிறமுற்று நீ ஆள நின்நிழலாய் நிலந்தன்னில்
சரிவுற்று வீழும்வரை சளைக்காமல் உழைக்கின்ற
பரிவுற்ற தாய்க் காணும் பல நோன்பும் உனக்காக
நிறைவுற்று அவள் வாழ நினைக்காத தெய்வமடா!
துளிப்பெற்ற சுகத்துக்காய் துணை பெற்ற நலத்துக்காய்
வலிப்பெற்று நோய்ப்பெற்று வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
களிப்புற்ற சில காலம் கண்ணுக்கே வந்தாலும்
அலுப்புற்று ஒரு நாளும் அவள் சாய்ந்ததில்லையடா!
தாயென்ற மகிழ்வோடும் தன்மகனின் நினைவோடும்
வாயொன்று இருப்பதனை வஞ்சித்தே உனக்காக
ஓயாது தேய்கின்ற உருவத்தை உற்றுப் பார்
காயாது உன்னுள்ளம் கரங்கூப்பு அதுபோதும்!
-பொன்மணிதாசன்
- மளமளவென்று சிவாஜியுடனும் எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முடித்தார் எம்.ஆர். ராதா.
- தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பல்வேறு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து, பல சாதனைகளையும் சரித்திரங்களையும் படைத்தார்.
ரத்தக்கண்ணீர்.. எம்.ஆர். ராதாவின் அட்டகாசமான நடிப்பில் 1954-ல் வெளியான அந்தப்படம் அபாரமான வெற்றியை பெற்று ஆரவாரத்தோடு அதிக நாட்கள் ஓடியது.
ஆனாலும் அதற்குப் பின்னரும் எந்த பட அதிபரோ இயக்குனரோ எம்.ஆர்.ராதாவை நடிக்க அழைக்கவில்லை.
ஒரு பக்கம் பயம்.
எம்.ஆர். ராதாவை நம்மால் சமாளிக்க முடியுமா ?
இன்னொரு பக்கம் சந்தேகம்.
ரத்தக்கண்ணீரில் நடித்தது போல இன்னொரு வேடத்தில் அவரால் சிறப்பாக நடிக்க முடியுமா?
ஓரிரு மாதங்கள் அல்ல. மூன்று ஆண்டுகள் இப்படியே ஓடிப் போனதாம். எவரும் அவரை நடிக்க கூப்பிடவில்லை.
எம்.ஆர்.ராதாவும் அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஆனாலும் அவரது நண்பர்கள் கவலைப்பட்டார்கள்.
"அண்ணே, இவ்வளவு சிறப்பா நடிச்சும் உங்களை யாரும் நடிக்க கூப்பிடலியே, அதனால ஏதாவது கோவிலுக்கு போய் நீங்க வேண்டிக்கிட்டா..."
இடை மறித்தார் எம்.ஆர்.ராதா.
"கோவிலுக்கு போய் வேண்டிக்கிட்டா..? பூசாரி புரொடுயூசர் ஆகி சான்ஸ் கொடுப்பாரா? இல்ல சாமி பைனான்ஸ் பண்ணி படம் எடுக்குமா ?"
நண்பர்கள் வாயடைத்து நின்றார்கள்.
"ஏண்டா பேச மாட்டேங்கறீங்க ?டேய், கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் இருந்தாலும் இருப்பேனே தவிர கோவிலுக்குள்ளே போய் ஒரு நாளும் நிக்க மாட்டேண்டா !"
ஆம். எம்.ஆர்.ராதா சொன்னது போலவே தனக்கான சினிமா வாய்ப்புகளை வேண்டி எந்தக் கோவிலுக்கும் போகவில்லை. எந்த சாமியையும் கும்பிடவில்லை.
அவர் முன் அப்போது இருந்த கடமைகளை குறைவில்லாமல் நிறைவுடனே செய்து கொண்டிருந்தார் எம்.ஆர். ராதா. இடைவிடாமல் தொடர்ந்து தனது குழு மூலம் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் ஏ.பி.நாகராஜன், வி.கே.ராமசாமி இருவரும் சேர்ந்து 'லட்சுமி பிக்சர்ஸ்' என்ற பெயரில் எம்.ஆர்.ராதாவை கதாநாயகனாக நடிக்க வைத்து "நல்ல இடத்து சம்பந்தம்" என்ற படத்தைத் தயாரித்தார்கள்.
குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம், நிறைய நாட்கள் ஓடி ஏகப்பட்ட லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு சம்பாதித்து கொடுத்து இருக்கிறது.
அவ்வளவுதான்.
காலம் மாறியது.
கதவுகள் திறந்தது.
"மாறுபட்ட வேடங்களிலும் எம்.ஆர். ராதா சிறப்பாக நடிப்பார். குறுகிய காலத்தில் படத்தைத் தயாரிக்க ஒத்துழைப்பு தருவார்" என்ற நம்பிக்கை பட அதிபர்களிடையே ஏற்பட ஆரம்பித்தது.
அப்புறம் என்ன ?
போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்து எம்.ஆர்.ராதாவை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தார்கள் தயாரிப்பாளர்கள்.
1959-ல், சிவாஜி கணேசனுடன் எம்.ஆர்.ராதா இணைந்து நடித்த "பாகப்பிரிவினை" வெளி வந்தது.
படம் சூப்பர் ஹிட்.
எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையிலும் அது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மளமளவென்று சிவாஜியுடனும் எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து முடித்தார் எம்.ஆர். ராதா.
தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பல்வேறு கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து, பல சாதனைகளையும் சரித்திரங்களையும் படைத்தார்.
கடமையை கண்ணும் கருத்துமாக செய்வது என்பதுதான், ஆழ்மனதுக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் பிடித்த அற்புதமான பிரார்த்தனை. அதை மட்டும் சரியாக செய்து வந்தால் காலம் ஒரு நாள் கை கொடுக்கும்...
-ஜான்துரை ஆசிர் செல்லையா
- புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
- புரட்டாசி மாதம் வடக்கில் இருக்கும் சூரியன், தெற்கு நோக்கி பயணிக்கிறது.
ஜோதிடத்தில் 6-வது ராசி கன்னி. கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.
புரட்டாசி மாதம் வடக்கில் இருக்கும் சூரியன், தெற்கு நோக்கி பயணிக்கிறது. இதனால் சூரிய கதிர்வீச்சால் தட்பவெட்பம் மாறுபடுகிறது. இந்த திடீர் மாறுபாடால் நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்க சொன்னார்கள்.
- ஜோதிடர் சுப்பிரமணியன்.
- சில நேரங்களில் காற்றும் புயலாகி விடுவதை போல் காய்ச்சலும் விபரீதமாகி விடுகிறது.
- தற்காத்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நாம்தான் பின்பற்ற வேண்டும்.
இயற்கையை தடுக்க முடியாது. ஆனால் அதில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என்பார்கள். இயற்கை என்பது புயல், மழை என்பதையும் தாண்டி நோய்களும் அதில் இணைந்து இருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று என்பது மிகப்பெரிய இயற்கை பேரிடராக உலகையே தாக்கியது. அதில் இருந்து உலகம் மீண்டது. லட்சக்கணக்கானவர்களை வாரி சுருட்டி சென்றாலும் எஞ்சியவர்கள் மருந்து, முகக்கவசம் என்று சில வழிமுறைகளை கடைபிடித்து தற்காத்து கொண்டோம் என்பதே உண்மை.
புயல், மழையை வானிலை முன்கூட்டியே முன் எச்சரிக்கை செய்யும். அதேபோல் இனி மருத்துவ உலகம் அவ்வப்போது அறிவிக்கும் முன்னெச்சரிக்கைகளை கண்டிப்பாக கடைபிடித்தே ஆகவேண்டிய சூழல். தவறினால் அதற்கான விலையை நாம்தான் கொடுக்க வேண்டும்.
இப்போது ஒரு புதிய எச்சரிக்கையை சுகாதாரத்துறை விடுத்துள்ளது. காய்ச்சல் என்பது சாதாரணமாக எல்லோரும் சந்திக்கும் நோய்தான். சில நேரங்களில் காற்றும் புயலாகி விடுவதை போல் காய்ச்சலும் விபரீதமாகி விடுகிறது.
அந்த வகையில் காய்ச்சலில் புளூ காய்ச்சல் காலநிலை காய்ச்சலாக இருந்தாலும் அது பரவும் தன்மை கொண்டது. இருமல், தும்மல் ஏற்படும்போது காற்றில் வைரஸ் பரவுகிறது. எனவே காய்ச்சல் அறிகுறி இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்.
பண்டிகை காலம் வேறு வருகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே வெளியே செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்லுங்கள் என்று எச்சரித்துள்ளனர்.
இது ஏற்கனவே கொரோனா காலத்தில் நாம் கடைபிடித்த பழக்கம்தான். எனவே இதை கடைப்பிடிப்பது சிரமமானது அல்ல.
காய்ச்சலோடு கொரோனாவும் சற்று அதிகரித்துள்ளது. தொற்றுக்கான அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை இலவசமாக செய்துகொள்ள சென்னையில் 16 சமுதாய நலக்கூடங்களும் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அரசு உதவி செய்யும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டியது நம் கைகளில்தான் உள்ளது.
தொற்று ஏற்படலாம் என்று அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் அதில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் நாம்தான் பின்பற்ற வேண்டும்.
இயற்கை அச்சுறுத்தல் என்பது எப்படி எந்நேரமும் வரலாம் என்பதை போல் இனிமேல் இந்த மாதிரி தொற்றுக்களும் எந்நேரமும் வரலாம்.
வைரசில் உருமாற்றம் ஏற்படுவது போல் நோயிலும் அதன் தாக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். எந்த சூழலிலும் அதனிடம் இருந்து நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சளி, காய்ச்சல் இருந்தால் சுய சிகிச்சை மேற்கொள்ளாதீர்கள். மருத்துவர்களின் ஆலோசனையை கேளுங்கள். அதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அது மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும்.
காலம் மாறிவிட்டது. அதற்கேற்ப நாமும் நமது வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
- உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் பிரபஞ்சத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
- அந்த பிரபஞ்சம் உடல் உறுப்புகளின் வழியே நம்மோடு பேசும்.
ஓய்வுக்கு மாற்றமாக மருத்துவத்தை தேடுபவர்கள் தான் நிரந்தர நோயாளியாகிறார்கள்.
ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.. வருடத்தில் 365 நாட்களும் ஆரோக்கியமாக இருக்கமுடியாது.
உலகில் ஒவ்வொரு உயிரும் உடலும் தனிதன்மையானது, ஒவ்வொரு உடலில் ஏற்படும் உடல் தொந்தரவுகளும் தனிதன்மையான காரணத்தால்தான் ஏற்பட்டிருக்கும்.
இந்த நோய்களுக்கெல்லாம் பெயர் வைத்து வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை விட சிறிது நாட்கள் ஓய்வு எடுத்து பாருங்கள், இயற்கையின் குணமாக்குதல் புரியும்.
உடலுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு புரிந்தாலே உங்கள் தனிதன்மையான நோய்க்கு உங்கள் உடலே மருத்துவர்.
உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் பிரபஞ்சத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அந்த பிரபஞ்சம் உடல் உறுப்புகளின் வழியே நம்மோடு பேசும். ஓய்வில் மட்டும்தான் இதை உணரமுடியும்.
எதிர்காலம் என்னவாகும் என்று நம் அறிவுதான் நம்மை பயமுறுத்தி கொண்டே இருக்கும். நேரம் பார்த்து வேலை செய்ய சொல்வதும் இந்த உலக அறிவுதான். இந்த அறிவை கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு ஓய்வெடுத்து கொண்டே பிரபஞ்சத்தோடு பேசி பாருங்கள். உடல் உறுப்புகளின் வழியே பிரபஞ்சமும் நம்மோடு பேசும். நிரந்தர நோயாளியாவதையும் தவிர்க்கலாம்.
ஆழ்மனதின் அற்புத சக்தியை புரிந்துகொண்டாலே குணமாக்குதல் தன்னாலே நடக்கும் இதற்கு தேவையும் ஓய்வுதான்.
-ரியாஸ்
- இறைச்சியோடும் மிளகு சேர்த்து சமைப்பதால் அது இறைச்சி கறி என்று அழைக்கப்பட்டது.
- நாளடைவில் ஆட்டு இறைச்சி உணவை நாம் கறி என்று அழைக்கத் தொடங்கி விட்டோம்.
பண்டைய தமிழர்கள் சமைக்கும் முறையானது அவித்தல், வறுத்தல், சுடுதல் என்ற வகையில் இருந்தது. எண்ணெயில் போட்டு பொரிக்கும் பழக்கம் விஜயநகர பேரரசுகள் வந்ததுக்கு அப்புறம் தான் வந்தது.
எண்ணெய் என்றால் ஆரம்பத்தில் அது நல்லெண்ணெய்யைத் தான் குறிக்கும். எள் என்பது தமிழர்களின் பாரம்பரிய தானியம். அதனால் அதிலிருந்து பெறப்பட்ட நெய்யைத் தான் எண்ணெய் என்று அழைத்திருக்கிறார்கள்.
எள் +நெய்= எண்ணெய்.
அதனால் நெய் என்பது எண்ணெய்க்கு முன்பாகவே வந்து விட்டது. பாலில் இருந்து பெறப்படும் நெய், அதேபோல எள்ளிலிருந்து பெறப்படும் நெய்.
நல்லெண்ணைக்கு பிறகு வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், புன்னை எண்ணெய் பயன்படுத்தினார்கள். அதன் பின்னரே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். கடலை எண்ணெய் என்பது கிபி 15 ஆம் நூற்றாண்டில் வந்தது. அப்போதுதான் நிலக்கடலையும் இங்கு வந்திருக்கும்.
அதேபோல உணவின் காரத்திற்கு அப்போது மிளகு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்று நாம் பரவலாக பேசும் காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்து குறிக்கும்.
கறி=மிளகு. கருங்கறி=கருப்பு மிளகு.
இறைச்சி உணவை கறி என்று சொல்லும் பழக்கம் இதனால் தான் வந்தது. இறைச்சியோடும் மிளகு சேர்த்து சமைப்பதால் அது இறைச்சி கறி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் ஆட்டு இறைச்சி உணவை நாம் கறி என்று அழைக்கத் தொடங்கி விட்டோம்.
இன்று நாம் சமையலில் அதிகம் பயன்படுத்தும் மிளகாய் என்பது கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் சிலி என்ற நாட்டில் இருந்து தான் வந்தது. அதன் பின்னரே இங்கு சமையலில் மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல இட்லி, தோசை, பஜ்ஜி, காராசேவு போன்ற உணவுகள் விஜயநகர பேரரசு காலத்திலே இங்கே தோன்றின.
அடுத்ததாக உப்பு. உப்பு என்பது நெருப்புக்கு பிறகான மனிதனின் இரண்டாவது கண்டுபிடிப்பு. உப்பு என்பதை சுவை என்று கூறுகிறார்கள். உப்புக்கு மிகப்பெரிய பாரம்பரியம் உண்டு. அந்த காலத்தில் உப்பு நெல்லுக்கு இணையான விலையைக் கொண்டது. இன்று உப்பு விற்கப்படும் விலையை விட அந்த காலத்தில் ஐந்து மடங்கு அதிக விலை விற்கப்பட்டது.
ஒருவருக்கு சம்பளமாக உப்பும், நெல்லும் அந்த காலத்தில் கொடுக்கப்பட்டது. அதனால் தான் Salary என்ற ஆங்கில சொல் salt என்ற சொல்லிலிருந்து பிறந்தது.
மற்றபடி காப்பி, தேநீர், பாமாயில் ரீபைண்ட் ஆயில், வெள்ளை சர்க்கரை இவையாவும் வல்லரசு நாடுகளின் கண்டுபிடிப்புகள் தான். அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை. இவையாவும் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பொருட்கள்.
-தொ.பரமசிவன்
- தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத காலத்தில், பேச்சையும் எழுத்தையும் வைத்து ஓர் இயக்கத்தை சாத்தியப்படுத்தியவர் அண்ணா.
- வாழும்போது கிளையாக விரிந்து, நிழலையும் கனிகளையும் தமிழர்க்கு தந்த பெருமகன். இன்று மண்ணுக்குள் வேராக தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கிறார்.
பெரியார் சூரியன் என்றால் அண்ணா மழை. பெரியார் லட்சியவாதி. அண்ணா யதார்த்தவாதி. பெரியார் நாளையைப் பற்றி சிந்தித்தார். அண்ணா இன்றைய பொழுதை தமிழர்க்கு கையளிக்க செயல்பட்டார்.
இரண்டு அறிவுசீவிகள் ஒரே கட்சியில் இருக்க முடியாது என்கிற நடைமுறை யதார்த்தத்திலிருந்து உருவானதே தி.மு.க. பெரியார் திருமணம் என்பதெல்லாம் பிரிவதற்காக உருவாக்கப்பட்ட காரணங்களே.
அதிகாரத்துக்கு வெளியே இருந்ததால்தான் பெரியாரால் சமரசமின்ற சமராட முடிந்தது. சிறிய அளவில் தேர்தல் ஜனநாயகத்தோடு சமரசம் செய்து கொண்டதால்தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த பல முட்களைப் பிடுங்க முடிந்தது அண்ணாவால்.
கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார். எந்த பக்தி இலக்கியங்களை பெரியார் கழுவி ஊற்றினாரோ அதே திருமூலரிடமிருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்' என்கிற பதத்தை உருவி கையாண்டார் அண்ணா.
மாநிலங்களவை கன்னிப் பேச்சிலேயே திராவிட நாடு குறித்து அனல் கக்கினார். ஆனாலும் சீனப்போர் வந்தபோது, திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டார். வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என அதற்கொரு விளக்கமும் தந்தார்.
தான் நிதானமானவன். அவசரப்பட்டு குழிக்குள் விழுந்து விடமாட்டேன். அதற்காக அச்சப்பட்டு அடங்கிப்போகவும் மாட்டேன் என அரசியல் நுட்பம் கூடியவர் அண்ணா.
ஈரடி முன்னே, ஓரடி பின்னே எனும் யுக்தியை வகுத்தவர். இத்தகைய சாதுர்யத்தால்தான் முதல்வராக பதவி வகித்த குறுகிய காலத்தில் (2 ஆண்டுகள்) மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்ற முடிந்தது. சுயமரியாதை திருமணத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்க முடிந்தது.
தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மனதில் கொண்டு, தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழி திட்டம் கொண்டுவர முடிந்தது.
ஆகாஷ்வாணி வானொலியாக மாறியதும். ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசியும் சாத்தியமானது. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்ய முடிந்தது.
பேருந்துகள் அரசுடைமை ஆகியது. ஏழை பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிந்தது. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற்றன.
சென்னை செகரட்டேரியட், தலைமைச் செயலகமானது.
விதவைகளைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க முடிந்தது.
கூட்டத்தில் நின்றால் கண்டுபிடிக்க முடியாத தோற்றம். குள்ளமான உருவம். மாற்று சிந்தனை, தீவிரமாக செயலாற்றும் திறன், ஜனநாயகப் பண்பு, நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், ஆங்கில அறிவு, எளிமை, நேர்மை இத்தகைய எல்லா படிக்கட்டுகளிலும் அயராது ஏறி, தன்னை உயரமாக்கி, உலகுக்கு காண்பித்தார் அண்ணா.
பிறர் பேச அஞ்சியதைப் பேசியவர். மாநில சுய உரிமை பற்றி மாநிலங்களவையில் அவர் பேசியபோது நம் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அண்ணாவுக்கு ஆதரவாக இல்லை.
தனித்து களமாடியவர். இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசை நிறுவிய இரண்டாவது முதல்வர் அண்ணா. மாநிலக் கட்சியொன்றின் முதல் முதல்வர்.
தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத காலத்தில், பேச்சையும் எழுத்தையும் வைத்து ஓர் இயக்கத்தை சாத்தியப்படுத்தியவர் அண்ணா.
வாழும்போது கிளையாக விரிந்து, நிழலையும் கனிகளையும் தமிழர்க்கு தந்த பெருமகன். இன்று மண்ணுக்குள் வேராக தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கிறார்.
-கரிகாலன்
- கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது போல மக்கள் மனதைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.
- அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை” என்றார்.
அவர்கள் ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் "கடவுளைக் காணலாம்" என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்.
அப்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிஷியிடம் வந்தார்.
ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப்படுத்தி விட்டுப் போயிருக்கிறார்.
பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே" என்றார்.
அதற்கு மகரிஷி அவர்கள், "அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைநிலையை எல்லை கட்டி ஒரு இடத்தில் ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார்.
அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.
நானும் அதைத்தான் சொல்கிறேன். இறையாற்றல் எங்கும் நிறைந்த பரம்பொருள். இறையாற்றல் தான் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளது.
அவனுள் இறையாற்றலே அறிவாகவும் இருக்கிறது. இதை யோகப் பயிற்சியின் மூலமும் தத்துவ விளக்கங்களையும் கொண்டு சிந்தித்து அறியச் சொல்கிறேன்.
கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது போல மக்கள் மனதைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.
அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை" என்றார்.
-ஆர்.எஸ்.மனோகரன்
- வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
- ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.
வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?
எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.
தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.
நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்.
தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.
நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.
- ஆறுமுகம்






