என் மலர்
மற்றவை
- என் ராசாவின் மனசிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கேரக்டருக்கு ஆள் தேவைப்பட்டது.
- ரொம்ப சின்ன கேரக்டர். ரெண்டே ரெண்டு சீன் மட்டும்தான்.
"அறைக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார் ராஜ்கிரண்.
ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார் அவர்.
காலையில் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டது. இனி இரவு ரெயிலில்தான் சென்னை திரும்ப வேண்டும்.
பகல் முழுவதும் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில், தனிமையில் இருந்து கொண்டு என்ன செய்வது? நேரம் போகாமல் போர் அடித்தது.
அப்போதுதான் கல்யாணத்துக்கு அவரை மதுரைக்கு அழைத்திருந்த மாப்பிள்ளை இளங்கோ அங்கு வந்தார்.
"என்ன அண்ணே, ரொம்ப போர் அடிக்கிறதா?"
"ஆமா தம்பி."
"ராஜ்கிரண்அண்ணே... ஒண்ணு செய்யட்டுமா?"
"என்ன ?"
"என் ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான். நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான்."
"அப்படியா ?"
"ஆமாண்ணே. அவனை உடனே வரச் சொல்றேன். நீங்க அவன்கிட்ட பேசிக்கிட்டு இருங்க. அவன் பேச ஆரம்பிச்சா உங்களுக்கு நேரம் போறதே தெரியாது."
ஆச்சரியத்துடன் கேட்டார் ராஜ்கிரண். "அந்தப் பையன் பெயர் என்ன தம்பி ?"
"வடிவேலு."
அடுத்த ஒரு சில நிமிடங்களில்...
"வணக்கம்ணே."
வெள்ளந்தியாய் சிரித்தபடி வந்து நின்றார் வடிவேலு.
"என்னப்பா வேலை பண்றே ?"
வடிவேலு பேச ஆரம்பித்தார்.
ஃபோட்டோவுக்கு ஃபிரேம் போடும் ஒரு கடையில், தான் வேலை செய்வதைப் பற்றி... தன்னுடைய நண்பர்களை பற்றி... தெருவில் தாங்கள் செய்யும் சேட்டைகளை பற்றி... ஊருக்குள் நடக்கும் வேடிக்கைகளை பற்றி, நிறுத்தாமல் வடிவேலு பேசிக் கொண்டே இருக்க...
ராஜ்கிரணும் நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். பொழுது போனதே தெரியவில்லை.
ரெயிலுக்கு நேரமாகவே ராஜ்கிரண் புறப்பட்டு விட்டார். வடிவேலுவும், தான் வேலை பார்க்கும் கடைக்கு கிளம்பி போய்விட்டார்.
இதை ஒரு பேட்டியில் சிரித்தபடியே சொன்னார் ராஜ்கிரண் அவர்கள். தொடர்ந்து அவர் சொன்னதுதான் ஆச்சரியமான விஷயம்.
"ஒரு விஷயம் சொல்லட்டுமா ?
அந்த சந்திப்பில் வடிவேலு என்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்கவே இல்லை. எனக்கும் வடிவேலுவை முதன்முதலாக பார்க்கும்போது அவரை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை."
அப்புறம் எப்படி நடந்தது அந்த மேஜிக்?
அதை சுவாரசியமாகச் சொல்கிறார் ராஜ்கிரண்.
"என் ராசாவின் மனசிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கேரக்டருக்கு ஆள் தேவைப்பட்டது. ரொம்ப சின்ன கேரக்டர். ரெண்டே ரெண்டு சீன் மட்டும்தான்.
யாராவது ஒரு புது ஆளை நடிக்க வைக்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். அப்போதான் ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால, மதுரையில நான் சந்திச்ச அந்தப் பையன் ஞாபகம் வந்தது. உடனே அவனை ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு வரச் சொன்னேன்.
ஆரம்பத்துல இரண்டு சீன்ல மட்டும்தான் நடிக்க சொன்னேன். அதை நடிச்சு முடிச்சிட்டு நான் புறப்படறேண்ணேன்னு கிளம்பிட்டான்.
கொஞ்சம் இருன்னு சொல்லி, என் கூடவே இருக்க வச்சேன். ஏன்னா வடிவேலு நடித்த இரண்டு காட்சிகளிலேயும், நாங்கள் சொல்லிக் கொடுத்ததற்கு மேலாகவே சிறப்பாக நடித்திருந்தார்.
எனவே அந்தக் கேரக்டரை கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் செய்தோம். ஒரு பாட்டு காட்சியில் கூட அவரை நடிக்க வைத்தோம். அதுதான் "போடா போடா புண்ணாக்கு..."
இதை புன்னகையோடு அந்தப் பேட்டியில் சொன்னார் அண்ணன் ராஜ்கிரண்.
அதற்கு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு தன்னை வளர்த்துக் கொண்டது ஒரு வரலாறு.
-ஜான்துரை ஆசிர் செல்லையா
- 2018 செப்டெம்பரில் ஜப்பானிய அமைச்சு அறிக்கை ஒன்றின் பிரகாரம் 100 வயதை எட்டிப்பிடித்தவர்கள் தொகை 69,785 என்று அறிவித்திருந்தார்கள்.
- தொகையில் 88 சதவீதமானவர்கள் பெண்கள் என்பது நம்மை ஆச்சரியப்படுத்தும் புள்ளி விபரம்.
உலகிலேயே ஜப்பானியர்கள் தான் நீண்டகாலம் உயிர் வாழ்கிறார்கள். அவர்களின் சராசரி ஆயுள்காலம் பெண்களுக்கு 86 ஆகும். ஆண்களுக்கு 79 ஆகும். இதற்கு காரணம் ஆரோக்கியமான உணவு முறைதான் எனறு கூறப்படுகிறது. அவர்கள் அரிசியையும், மீனையும் அதிக அளவில் சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 செப்டெம்பரில் ஜப்பானிய அமைச்சு அறிக்கை ஒன்றின் பிரகாரம் 100 வயதை எட்டிப்பிடித்தவர்கள் தொகை 69,785 என்று அறிவித்திருந்தார்கள். இத்தொகையில் 88 சதவீதமானவர்கள் பெண்கள் என்பது நம்மை ஆச்சரியப்படுத்தும் புள்ளி விபரம்.
சாப்பாட்டை தவிர, வேறு காரணங்களும் 100 வயது வரை வாழ கைகொடுக்கின்றன.
வயதைப் பற்றியே நினைத்து அலட்டிக் கொள்வதும், மன அழுத்தங்களுக்கு உட்படுவதும், ஒழுங்கற்ற தூக்கமும், குறைந்த பட்சம் நடந்தாவது உடற்பயிற்சி செய்யமாலிருப்பதும் உங்களை நீண்ட காலம் வாழவிடாதிருக்க தடையாகவுள்ள பொதுக் காரணங்கள்.
ஜப்பானில் "ஒக்கினாவா" என்ற ஒரு பிராந்தியமுண்டு. உலகிலேயே நீண்ட காலம் வாழும் அதிகமானவர்கள் இங்குதான் உள்ளார்கள். தமக்கு 55 வயது வரும் வரை, தங்களை "பிள்ளைகளாகவே" இவர்கள் நோக்குகிறார்கள். 97 வயதை எட்டும்போது, இளமை திரும்புவதாக கூறி, "கஜிமாய" என்ற பெயரில் ஒரு சடங்கு நடத்தப்படுகின்றது.
-மைதிலி
- 100 யூனிட் வரை இலவசம் என்பது மிகவும் குக்கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு நிச்சயம் உதவும்.
- நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு, நகரச் சூழ்நிலைக்கு ஏற்ப மின்சார பயன்பாடு சற்று அதிகமாகவே இருக்கும்.
உயர் அழுத்தம்...
மின்சாரத்திலும் இருக்கிறது. மின்சார கட்டண உயர்விலும் இருக்கிறது.
தமிழக அரசு மின்சார கட்டணத்தை சற்று உயர்த்தியது உயர் மின் அழுத்தத்தை போல மக்கள் மத்தியில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எட்டு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின்வாரியம் கடனில் தவிக்கிறது. எனவே மின் கட்டணத்தை உயர்த்துங்கள் என்ற அழுத்தம் அரசுக்கு... அரசும் உயர்த்தி விட்டது. இருக்கிற சூழ்நிலையில் இந்த உயர்வு எங்களுக்கு கூடுதல் அழுத்தமாகவே மாறும் என்பது மின் நுகர்வோர்களாக இருக்கும் மொத்த தமிழக மக்களின் ஆதங்கம்.
இந்த சூழ்நிலையில் குஜராத்தை விட குறைவு, கர்நாடகத்தை விட குறைவு என்று அரசியல் ரீதியாக அணுகி நியாயப்படுத்துவது சரியாக இருக்காது. ஏற்கனவே சுமந்து பழக்கப்பட்ட கழுதைக்கு கொஞ்சம் சுமையை கூடுதலாக ஏற்றி வைத்தாலும், அது சமாளித்து நடக்கும். பழக்கம் இல்லாவிட்டால் சற்று சுமை அதிகரித்தாலும் தடுமாறத்தான் செய்யும். அதே நிலைமைதான் இதுவும். இது மக்கள் செய்த தவறு ஆகாது.
100 யூனிட் வரை இலவசம் என்பது மிகவும் குக்கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு நிச்சயம் உதவும். ஆனால் சென்னை போன்ற நகரங்களில் வாழும் சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கூட ஆண்டில் ஆறு மாதங்கள் வரை சராசரியாக ரூ. 4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு கட்டணத்தில் 500 ரூபாய் கூடுவது என்பது எவ்வளவு பெரிய சுமையாக தெரியும்? ஏனெனில் இந்த வர்க்கத்தினர் பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தி சமாளித்துக் கொண்டிருப்பவர்கள்.
இந்த கட்டண உயர்வு மின்வாரியத்தோடு நின்று விடாது. இனி வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் அழுத்தம் கொடுப்பார்கள். ஏற்கனவே யூனிட்டுக்கு அரசு கட்டணம் ஒருவகையாக இருக்கும், வீட்டு உரிமையாளர்கள் வசூலிப்பது வேறு வகையாக இருக்கும். அந்த அடிப்படையில் இன்னும் கட்டணத்தை உயர்த்துவார்கள்.
200 யூனிட்டுகளுக்குள் பயன்படுத்துபவர்கள் சாதாரணமானவர்கள். அதற்கு மேல் பயன்படுத்துபவர்கள் வசதி படைத்தவர்கள் என்று கணக்கிட்டு விட முடியாது, ஏனெனில் சென்னை போன்ற நகரங்களில் குடியிருப்பவர்களுக்கு, நகரச் சூழ்நிலைக்கு ஏற்ப மின்சார பயன்பாடு சற்று அதிகமாகவே இருக்கும்.
ஆனால் மின் கட்டணத்தை பொறுத்தவரை யூனிட் பயன்படுத்துவதை பொருத்து கட்டணமும் மாறுபடுவது ஒரு பக்கம். தற்போது இந்த கூடுதல் கட்டணம் ஒரு பக்கம் என்பது அவர்களுக்கு கூடுதல் அழுத்தமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே தான் கூட்டணி கட்சிகளும் இந்த விஷயத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளன.
மின்வாரிய கருத்துக் கூட்டங்களிலும் சரி பொதுவாகவே மின் பயன்பாட்டை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடுவதை கைவிட்டு மாதம்தோறும் கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் யூனிட்டுகள் அதிகரிக்கும் போது கட்டணங்களும் இரண்டு மடங்காகி விடுகிறது.
குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை மின் பயன்பாட்டை கணக்கிட்டாலாவது மக்களுக்கு இந்த அழுத்தம் பெரும் பிரச்சினையாக தெரியாது. இந்த மாதிரி செய்தால் எந்த அழுத்தத்தையும் தாங்கும் மனநிலைக்கு மக்களும் வருவார்கள்.
மின்வாரியம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், எல்லா தரப்பு மக்களுக்கும் ஒரே சீரான மின்சாரத்தை போல, சீரான மின் கட்டணமும் இருக்கும் என்று கருதுகிறார்கள்.
- யாரோ திருடர்கள் எங்கிருந்தோ வந்து கைவரிசை காட்டி சென்று விட்டார்கள் என்பதை நம்புவதற்கில்லை.
- சிலைகள் மீட்கப்படுவதை பாராட்டினாலும் அதை களவாடி கொண்டு சென்றவர்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும். கலைச் செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று சுதந்திரத்துக்கு முன்பு பாரதி பாடியது சுதந்திரத்துக்கு பிறகு எட்டுத்திக்கும் சென்று களவாடப்பட்ட நமது கலைச் செல்வங்களை மீட்டு கொண்டு வாருங்கள் என்று மாற்றி பாடி இருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.
காலத்தால் அழிக்க முடியாத நமது கலைப் பொக்கிஷங்களான பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. பாராட்டுக்கள்.
அந்த வரிசையில் இப்போது கும்பகோணம் அருகே சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்த 3 ஐம்பொன் சிலைகள் வெளிநாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலையும், டெக்சாஸ் அருங்காட்சியகத்தில் விஷ்ணு சிலையும், புளோரிடா ஹில்ஸ் ஏல மையத்தில் ஸ்ரீதேவி சிலையும் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்.
களவாடி கடல் கடந்து கொண்டு செல்லப்பட்ட கலை செல்வங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருவது வரவேற்கத் தக்கது. இதற்காக சிரத்தை எடுத்து செயல்படும் ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
சிலைகள் மீட்கப்படுவதை பாராட்டினாலும் அதை களவாடி கொண்டு சென்றவர்களும் வெளிச்சத்துக்கு வர வேண்டும். இந்த 3 சிலைகளும் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போய்விட்டது. அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்புதான் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில்தான் எங்கோ இடிக்கிறது! அதாவது கோவில் பூட்டை உடைத்து திருடவில்லை. விலை உயர்ந்த ஒரிஜினல் சிலையை எடுத்துவிட்டு போலி சிலையை வைத்துள்ளார்கள். இது யாரோ திருடர்கள் எங்கிருந்தோ வந்து கைவரிசை காட்டி சென்று விட்டார்கள் என்பதை நம்புவதற்கில்லை. 60 ஆண்டுகளாக வெளியே தெரியாத... இல்லை... இல்லை. வெளியே சொல்லாத ஒரு உண்மை இப்போது வெளியே சொல்லப்பட்டுள்ளது.
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று சிலை கடத்தல் பிரிவின் நெருக்கடி அல்லது குற்றம் நிகழ்ந்தது பற்றிய குறுகுறுப்பாக இருக்கும். இனி சிலையை மீட்பதோடு பிரச்சினை தீர்ந்து விட்டது என்று கருதாமல் சம்பந்தப்பட்டவர்களையும் அடையாளம் காண முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் இந்த தேடல், மீட்பு என்பதெல்லாம் முழுமை அடையும்.
ஏனெனில் இந்த சிலைகள் சாமானிய ஒன்றிரண்டு பேரால் எடுத்து செல்லப்பட்டிருக்காது. போலி சிலைகள் தயார் செய்வது, கோவிலில் இருந்து எடுப்பது, போலி சிலையை வைப்பது, எடுக்கப்பட்ட சிலைகளை விமானத்தில் கொண்டு செல்வது என்பதெல்லாம் சாதாரண விஷயமா? அவர்களையும் கண்டுபிடித்து `காப்பு' போட்டால்தான் சிலைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். அது மட்டுமல்ல நமது முந்தைய நாகரீகங்களை அகழ்வாராய்ச்சிகள் மூலம் தேடிக் கொண்டிருக்கிறோம்.
நம் கண் முன்னால் இருக்கும் நமது பாரம்பரிய நாகரீகத்தையும், கலையையும் காப்பாற்றி பாதுகாக்க வேண்டியதும் நமது கடைமையல்லவா? அந்த கடமையில் தவற கூடாது.
- ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக இருக்கும்.
- ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.
கடல் என்பது ஆதியில் இருந்தே மனித இனத்திற்கு ஒரு புரியாதப்புதிராகவே இருந்து வந்துள்ளது.
சிறிது சிறிதாக அச்சம் நீங்கி கடலைத்தாண்டி இருக்கும் நாடுகளை, கடலைக்கடந்து சென்று அறிந்து கொண்டனர்.
கடலைத்தாண்டியதும் தான் பூகோளம் எனும் நிலவியல் தோன்றியது. உலகில் இருக்கும் இதரப்பகுதிகள் தெரிய ஆரம்பித்தது.
கடலைக்கடந்தார்களேத்தவிர கடலின் ஆழத்தை மனிதனால் அவ்வளவு எளிதில் யூகித்து அறிய இயலவில்லை. கடல் மிகுந்த ஆழம் கொண்டது என்பது மட்டுமே புரிந்தது.
கடலின் ஆழத்தைக் கண்டறிய 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் முயற்சிகள் மேற்கொண்டனர்.
ஆனால் அப்போது அதற்கு நவீனக் கருவிகள் இல்லையாதலால் மிக நீளமான கயிற்றை அல்லது சங்கிலியைக் கடலின் உள்ளே ஆங்காங்கே இறக்கி மிகவும் பழமையான முறையை மேற்கொண்டு, சுமார் 7000 இடங்களில் இவ்வாறு ஆழம் கண்டறிந்தனர்.
இந்த முறையில் குறிப்பிட்ட இடத்தின் ஆழத்தை மட்டும் அறியமுடிந்ததே தவிர, கடலின் அடிமட்டம் குறித்து அறிய வரைபடம் தயாரிக்க இது உதவவில்லை.
பிறகு ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றத்தின் பலனாக ஒலி அலைகளைப் பயன்படுத்திக் கடல் ஆழத்தை அறிய முயன்றனர்.
இந்த உத்தி அடிப்படையில் எக்கோ சவுண்டிங், சைட் ஸ்கேன் ஸ்கேனர் ஆகிய கருவிகள் உருவாக்கப்பட்டு கடலின் நில அமைப்பை வரைபடமாகக் காட்டுகின்றன.
இந்தக் கருவிகள் தயாரித்துள்ள பதிவேடுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பெரியதொரு படமாக்கிப் பார்த்தால் கடல்கள் அனைத்தும் வற்றிப் போனால் அவை எவ்வாறு காட்சி அளிக்குமோ அப்படிப்பட்ட காட்சியை அப்படம் அளிக்கும்.
அப்படத்தைப் பார்த்தால் கண்டத்திட்டு (Continental Shelf). கண்டச் சரிவு (Continental Slope) ஆழ்கடல் (Abyss) ஆகிய மூன்று பகுதிகளை நீர் உலகம் கொண்டது எனத் தெரியவரும்.
ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக இருக்கும். ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.
சுமார் ஒரு மைல் ஆழம் உள்ள சேறு மாதிரிப் படிவுகள் கடலின் அடித்தளத்தில் உள்ளன. மடிந்த கடல்வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரியான படிவுகள்.
இவ்வாறு ஆண்டுதோறும் 500 கோடி டன் வண்டலை ஆறுகள், நதிகள் கொண்டு வந்து சேர்க்கின்றனவாம்.
கடலடியில் அனேக செங்குத்தான மலைகள் உள்ளன. அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் ஆகியன கடலடி மலைகளின் உச்சிகளே.
கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்திற்குச் சங்கிலித் தொடர்போல் மலைகளும், வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன. இவ்விதம் சுமார் 20 ஆறுகள் உள்ளனவாம்.
அந்தமான் தீவுகள் அருகே 1,700 மைல் நீளமும் 25 மைல் அகலமும் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது. பிற இடங்களிலும் இவ்வாறு பள்ளத்தாக்குகள் உள்ளன. சில இடங்களில் இதன் ஆழம் சுமார் 3 மைல்.
கடல்களில் மிக ஆழமான இடங்கள் கடலுக்கு அடியில் உளள அகழிகள் ஆகும். இந்த அகழிகள் குறுகலானவை. நீளமானவை. கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும்.
இந்த அகழிகளின் ஆழத்துடன் ஒப்பிட்டால் உலகின் கடல்களின் சராசரி ஆழம் 12,556 அடி. அதாவது, இரண்டரை மைல்.
பிலிப்பைன்சுக்குக் கிழக்கே உள்ள மின்டானாவோ அகழியில் அமைந்துள்ள குக்மடு தான் உலகின் கடல்களில் மிக ஆழமான இடமாகும். இதன் ஆழம் 37,782 அடி. அதாவது சுமார் 7 மைல். குக்மடுவில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கினால் அச்சிகரம் மூழ்கி அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி.தான் .
-அண்ணாமலை சுகுமாரன்
- மன நோயில் பல வகைகள் இருக்கின்றன. மனச்சிதைவு , மனபிறழ்வு பைபோலார் டிஸார்டர், ஃபோபியா, மனப்பதட்டம், என பல வகைகள்.
- பொத்தாம் பொதுவாக மன அழுத்தம், டிப்ரஷன் எனச் சொல்வதற்கு முன் அதற்குரிய நிபுணரை அணுக வேண்டும்.
நமது மனம் சாதாரணமாக இருக்கும் போது சிந்திப்பதற்கும் அதீதமாக உணர்ச்சிவசப்படும் போது சிந்திப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
ஒரு சண்டையின் போது கோபத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்றெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் போகிறதல்லவா? கொஞ்ச நேரம் கழித்து இதற்காகவா இப்படியெல்லாம் நடந்து கொண்டோம் என உணர்கிறோம் அல்லவா? காரணம் உணர்ச்சி வசப்படும்போது நமது மூளை தாறுமாறாக இயங்குகிறது.
தீவிர மனச்சோர்வும் அப்படித்தான். அது தீவிரமான உணர்வு நிலை. அப்போது நமது உணர்வுகள், எண்ணங்கள், செயல்பாடுகள் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. எல்லாமே எதிர்மறையாகத் தோன்றும். எதுவுமே செய்யப் பிடிக்காது. ரசிக்காது. தற்கொலை எண்ணங்கள் தோன்றும். அந்த சமயம் எத்தனை அறிவுரை சொன்னாலும், பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளச் சொன்னாலும் முடியாது.
பொறுமையாக அந்த காலகட்டத்தைக் கடப்பது, மனதை அமைதிப்படுத்தத் தேவைப்பட்டால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே அதற்கான சிகிச்சை.
இசை, இயற்கையை ரசித்தல், உடற்பயிற்சி செய்தல், யோகா, பாசிட்டிவ் எண்ணங்கள் இதெல்லாம் லேசான மனச்சோர்வுக்குப் பயனளிக்கும். தீவிரமான மனச்சோர்வு இருப்பவரை இதையெல்லாம் பண்ணச் சொல்வது பிரயோசனப்படாது.
இவற்றை எல்லாம் மனச்சோர்வு வராமல் காக்கும் தடுப்பு முறைகளாகக் கொள்ளலாம். வந்தபின் செய்யும் சிகிச்சைகள் அல்ல. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் தினமும் வாக்கிங், உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். ஆனால் மாரடைப்பு வந்த ஒருவரை வாக்கிங் போனால் போதும் மருத்துவமனைக்குப் போக வேண்டாம் எனச் சொல்வது அபத்தமாக இருக்கும் அல்லவா? அது போலத்தான் தீவிர மனச் சோர்வும்.
நமக்கு இருப்பது தீவிர மனச்சோர்வுதான் என எப்படி அறிவது? மேலே சொன்ன எந்த வழிமுறைகளாலும் பலனளிக்கவில்லை என்றால் அல்லது செய்ய முடியவில்லை என்றால் அது தீவிர மனச்சோர்வாக இருக்கலாம்.
மேலும் மன நோயில் பல வகைகள் இருக்கின்றன. மனச்சிதைவு , மனபிறழ்வு பைபோலார் டிஸார்டர், ஃபோபியா, மனப்பதட்டம், என பல வகைகள். பொத்தாம் பொதுவாக மன அழுத்தம், டிப்ரஷன் எனச் சொல்வதற்கு முன் அதற்குரிய நிபுணரை அணுக வேண்டும்.
-டாக்டர் ஜி. ராமானுஜம்
- பணம் என்கிற ஒரே பண்டத்தால் மட்டுமே பெண்ணின் தேவைகள் பூர்த்தியாகி விடுவதில்லை.
- பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளின் பணமும் ஒன்று.
நிம்மதியும், மகிழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மகிழ்ச்சி காணாமல் போகும் போது நிம்மதியும் காணாமல் போகிறது.
காற்று, நீர், உணவு, உறக்கம், பாலின்பம் இவை தான் ஒரு மனித உடலுக்கான அடிப்படைத் தேவைகள். இவற்றில் ஒன்றில்லையென்றாலும் உடல் துன்பப்படுவது உறுதி. அந்த உடற்துன்பம் காரணமாக மனநலமும் கெடுவது உறுதி.
நடைபாதையில் வசிப்பவனின் மனைவியும் சரி. அரசாங்க அதிகாரியின் மனைவியும் சரி. நட்சத்திர விடுதி போன்ற மாளிகையில் வசிப்பவனின் மனைவியும் சரி. மகா கோடீஸ்வரனின் மனைவியும் சரி. தங்கள் கணவனுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்க தயங்குகிறார்கள்.
மனித உடலின் அடிப்படைப் பசியான காமம் தணிக்கப்படாத போது ஆழ்மனதில் ஏக்கம் பிறக்கிறது. ஏக்கம் பூர்த்தியடையாத போது ஏமாற்றம் உருவாகிறது. தொடர் ஏமாற்றம் மனநிலையை விரக்தியடையச் செய்கிறது. நாள்பட்ட விரக்தியே வெறுப்பாக மாறுகிறது. இந்த வெறுப்பு தான் மன நிம்மதியை வேரறுத்து, மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்திச் செல்லும். மனைவியின் மனநலத்தை பொறுத்தே கணவனின் மகிழ்ச்சியும், அவன் பெறக்கூடிய வெற்றியின் அளவும், சமூக மதிப்பும், அவனுடைய ஆயுட்காலமும், குழந்தைகளின் எதிர்காலமும், குடும்பத்தின் தரமும் தீர்மானிக்கப்படுகின்றன.
குடும்ப வாழ்க்கையில் நிகழும் அவலங்களுக்காக கூறப்படுகின்ற காரணங்கள் அனைத்துமே சாக்குப் போக்குகள். உண்மையான காரணம் பாலின்ப ஆற்றாமை. தாம்பத்ய வாழ்வில் காமம் தணிக்கப்படாத போது, பாலின்ப ஆற்றாமை பெண்ணின் உடலில் உருவாகிறது. இந்த ஆற்றாமை நுண்ணிய அளவிலான மன நோயாக மாறுகிறது. அந்த மனநோயின் விளைவாக அப்பாவி பெண் கூட பிடாரியாக மாற வாய்ப்புண்டு. அதன்பின் தன்னுணர்வற்ற நிலையில் கணவனை சகட்டு மேனிக்கு வதைக்கத் தொடங்குகிறாள்.
பணம் என்கிற ஒரே பண்டத்தால் மட்டுமே பெண்ணின் தேவைகள் பூர்த்தியாகி விடுவதில்லை. பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளின் பணமும் ஒன்று. மற்றபடி, பணம் மட்டுமே பாலின்பப் பஞ்சத்தால் ஏற்படும் மன வக்கிரங்களைப் போக்கி விட முடியாது. பாலின்பத்துக்கு மாற்றுப் பொருளாக பணத்தைப் பயன்படுத்த முடியாது. பணம் அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரக்கோல் அல்ல.
ஆகவே காமத்தின் புனிதத்தை புரிந்து கொள்ள முடியாத கணவனால் மனைவிக்குரிய இன்பங்களை நிச்சயம் வழங்க முடியாது. பாலின்பங்களை வழங்காத வரை மனைவியின் மனம் மலர முடியாது. மனைவியின் மனம் மலராத வரை, குடும்ப விவகாரச்சண்டைகள் முடிவிற்கே வராது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாகக் குடியேற முடியாது.
படித்ததில் பிடித்தது
- எவ்ளோ நெருங்கிய சொந்தமா இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர் வீட்டில் விருந்தாளியாக இருக்கக்கூடாது . அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு.
- நோய்வாய் பட்டால் 3 நாள் மருந்து சாப்பிட்டாலே குணம் ஆக வேண்டும். அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு .
"விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத் தான்" என பழமொழி இருக்கும்பொழுது மாதக்கணக்கில் மருந்து எடுத்துக் கொள்வது சரியா?
இந்த பழமொழியை கேள்விப்படும் போதெல்லாம் ஒரு அருமையான கதை என் நினைவுக்குவரும். கதையை சொன்னவர், எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நிகழ்ந்த வந்த பரவை முனியம்மா அவர்கள்.
ஒருத்தன் தன் தாயிடம் சென்று "அம்மா என்னை என் மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். போயிட்டு வரட்டுமானு அனுமதி கேட்டான்.
தாயும் சரி என்று சொல்ல... அம்மா எப்போ நான் திரும்பி வர என்று மகன் கேட்க , அதற்கு அந்த தாய் "எப்பொழுது உன் முகம் உனக்கு தெரிகிறதோ அன்று வந்துரு.. அதற்கு மேல் ஒரு நாள் கூட அங்கே தங்க வேண்டாம்"னு சொல்லியனுப்பினாள்.
தாய் என்ன சொன்னாள் என்று புரியாமல் மகனும் மனைவியை அழைத்துக் கொண்டு விருந்துக்கு சென்றான். அங்கே தடல்புடலாய் விருந்து உபசரிப்பு. இலையில் வைக்க இடம் இல்லை, அத்தனை வகைகள். கோழி, முட்டை, மட்டன், மீன் என்று அனைத்தும் பரிமாறப்பட்டன. அவனுக்கு சந்தோஷமோ சந்தோசம்.
2ஆம் நாளும் நல்ல விருந்து, இலையில் எல்லாம் இருந்தது மட்டனை தவிர.
3ஆம் நாள் இலையில் மீன் இல்லை.
4ஆம் நாள் இலையில் கோழி இல்லை.
5ஆம் நாள் இலையில் முட்டையும் இல்லை.
6ஆம் நாள் இலையில் சைவ உணவு சாம்பார் ஒரு கூட்டு,ஒரு பொரியல்.
7ஆம் நாள் இலையே இல்லை, தட்டில் சோறு சாம்பார் உடன் ஒரே ஒரு பொரியல்.
8 ஆம் நாள் சாம்பார் சாதம் மட்டுமே.
இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவனும் அதை சாப்பிட்டான். 9 ஆம் நாள் அவனுக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது. தட்டில் கஞ்சி சோறு, தொட்டுக்க ஊறுகாய்.
பசியில் அதையும் சாப்பிடுவதற்கு தலையை குனிஞ்சா அந்த கஞ்சி தண்ணியில் அவன் முகம் தெரிந்தது. அப்போ தான் அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அவனும் இனிமேல் இங்கே இருந்தா நமக்கு மரியாதை இல்லை என்று உணர்ந்து தன் வீட்டுக்கு கிளம்பி விட்டான் .
எவ்ளோ நெருங்கிய சொந்தமா இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர் வீட்டில் விருந்தாளியாக இருக்கக்கூடாது . அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு. அதை போல் நோய்வாய் பட்டால் 3 நாள் மருந்து சாப்பிட்டாலே குணம் ஆக வேண்டும். அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு .
-மைதிலி
- எங்களுக்கு சாமாசார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.
- எங்கள் நாகூரில் அவர் ஒரு முக்கியப்புள்ளி. எல்லார் வீட்டு விழாக்களிலும் அவருக்கே முதன்மை. ஏன் அப்படி?
செப்டம்பர் 5 டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் பிறந்தநாள். அவர் விரும்பியவாறு இது ஆசிரியர் நாளாக மலர்ந்துள்ளது.
ஆசிரியராகத் தொடங்கிக் குடியரசுத் தலைவர் பொறுப்பு வரை அனைத்தையும் பொறுப்புடன் நிறைவேற்றிய பெருந்தகை அவர்.
'வருங்கால இந்தியா வகுப்பறையில்தான் உள்ளது' என்று கல்வியின் பெருமையைக் கவின்மிக உரைத்தவர்.
என் ஆசிரியர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இரண்டாம் வகுப்பு ஆசிரியர் அருமையாகப் பாடம் நடத்துவார். இனிய கருத்துகளை எளிமையாக விளக்கும் ஆற்றல் உடையவர். மதியம் உணவு உண்ட களைப்பில் சற்றே அவர் கண்ணயர்வார். இந்தப் பழக்கத்தை மட்டும் அவரால் விடமுடியவில்லை. இதனால் தலைமையாசிரியரிடம் பலமுறை திட்டுவாங்கியிருந்தார்.
ஒருநாள் மதியம் சட்டாம் பிள்ளையான என்னை ஆத்திசூடி சொல்ல வைத்துவிட்டுத் தூங்கிப்போனார். என்னிடம் 'அந்த ஹச்.எம் வந்தார்னா என்னை எழுப்பிவிடுடா' என்று சொல்லியிருந்தார்.
தலைமையாசிரியர் இவரைக் கையுங்களவுமாகப் பிடிக்கவேண்டுமென்றே வருவது தெரிந்தது. இரண்டு மூன்றுமுறை எழுப்பினேன். அவர் விழிப்பதாயில்லை.
ஓங்கி ஒரு தட்டு தட்டி எழுப்பினேன். அவர் விழித்தெழவும் தலைமையாசிரியர் வகுப்பில் நுழையுவும் சரியாக இருந்தது. தலைமையாசிரியர் சினத்துடன், 'என்னாய்யா பண்ணிக்கிட்டு இருக்கீங்க' என்று பொறிந்தார்.
எங்கள் ஆசிரியர் கவலையே படாமல், "ஒன்னுமில்லே சார், சிங்கமும் சுண்டெலியும் கதை சொன்னேனா, சிங்கம் எப்படித் தூங்கும்னு பையங்க கேட்டாங்க. அதைத்தான் செஞ்சு காட்டிகிட்டு இருந்தேன். நீங்களும் கரெக்டா வந்துட்டீங்க." என்ற சொல்லிச் சமாளித்தார்.
பையன்களாகிய நாங்கள் மிகவும் ரசித்தோம்.
எங்களுக்கு சாமாசார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.
எங்கள் நாகூரில் அவர் ஒரு முக்கியப்புள்ளி. எல்லார் வீட்டு விழாக்களிலும் அவருக்கே முதன்மை. ஏன் அப்படி?
மாணவர்களுக்கு அவர் ஆசான் மட்டுமல்ல. ஆலோசகர் மற்றும் வழிகாட்டி.
மேலே எவ்வளவு படித்தபின்னும் அவரிடம் வந்து யோசனை கேட்டு, அதன்படி முன்னாள் மாணவர்கள் நடப்பார்கள்.
உடல் நலமில்லாமல் இருப்போருக்கு அவர் மருத்துவ ஆலோசகர், பள்ளிமுடிந்து அவர் தெருவில் நடந்து போகும்போது அழைத்துக் காட்டுவார்கள்.
அவர் நாடி பிடித்துப் பார்ப்பார். "உடனே ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போங்க" என்பார். நோயாளி பிழைப்பார்.
சில பேர் நாடி பார்த்த பின் "ரெண்டு நாள் பார்த்துட்டு அப்புறமா ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகலாம்" என்று சொல்லுவார். அந்த ரெண்டு நாளில் நோயாளி பரமபதம் அடைந்து விடுவார்.
நிலை உணர்ந்து கருத்துச்சொல்லி உதவுவார். ஊர் மக்கள் அவரிடம் உயிரையே வைத்திருந்தனர்.
சாமிநாத அய்யர் என்ற அவர் ஒவ்வொரு நாளும் நாகூர் தர்காவுக்குப்போவார். அவர் போவதை பார்த்து வெற்றிலைப் பாக்குக் கடை உசேன் ராவுத்தர் வெற்றிலை சீவல் எடுத்து பொட்டலம் கட்டி வைப்பார்.
அவர் திரும்பி வரும்போது தெருவில் இறங்கி வந்து அவரிடம் பணிவோடு வழங்குவார். சாமாசார் பையில் கைவிடுவார், காசுகொடுக்க. உசேன் ராவுத்தர் "போயிட்டு வாங்க சார்" என்று வழிஅனுப்புவார். இந்த நாடகம் ஒவ்வொருநாளும் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
கணவர் அனுப்பிய பணத்தை சரியாக தரவில்லை என்று போஸ்ட்மேன் மீது குறை சொல்லுகிறார் ஓர் இஸ்லாமிய மாது. சாமாசார் அதை கேட்டு, அந்த போஸ்ட்மேனை வரவழைத்து, அவரைக் கண்டித்து பணத்தை வாங்கி அம்மையாரிடம் கொடுத்து அனுப்பி விட்டு, போஸ்ட் மாஸ்ட்டருக்குத் தெரிஞ்சா உன் வேலையே போய்விடும். இனிமே இப்படிச் செய்யாதே என்று எச்சரித்தார்.
ஊரில் முக்கியமானவராக ஆசிரியர் இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த சாமாசார் ஓர் உதாரணம்.
ஆசிரியர் என்பவர் எல்லோராலும் மதித்து போற்றப்படுபவர். எனவே ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து நடப்பது அவசியம்.
ஆசிரியர் என்பவர் பணியாற்றுபவர் அல்லர். அவர் சிறந்தப் பொறுப்பினை வகுத்து நிறைவேற்றுபவர்.
-புலவர் சண்முகவடிவேல்
- இறைச்சி உணவை கறி என்று சொல்லும் பழக்கம் இதனால் தான் வந்தது.
- இறைச்சியோடும் மிளகு சேர்த்து சமைப்பதால் அது இறைச்சி கறி என்று அழைக்கப்பட்டது.
பண்டைய தமிழர்கள் சமைக்கும் முறையானது அவித்தல், வறுத்தல், சுடுதல் என்ற வகையில் இருந்தது. எண்ணெயில் போட்டு பொரிக்கும் பழக்கம் விஜயநகர பேரரசுகள் வந்ததுக்கு அப்புறம் தான் வந்தது.
எண்ணெய் என்றால் ஆரம்பத்தில் அது நல்லெண்ணெய்யைத் தான் குறிக்கும். எள் என்பது தமிழர்களின் பாரம்பரிய தானியம். அதனால் அதிலிருந்து பெறப்பட்ட நெய்யைத் தான் எண்ணெய் என்று அழைத்திருக்கிறார்கள்.
எள் +நெய்= எண்ணெய்.
அதனால் நெய் என்பது எண்ணெய்க்கு முன்பாகவே வந்து விட்டது. பாலில் இருந்து பெறப்படும் நெய், அதேபோல எள்ளிலிருந்து பெறப்படும் நெய்.
நல்லெண்ணெய்க்கு பிறகு வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், புன்னை எண்ணெய் பயன்படுத்தினார்கள். அதன் பின்னரே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். கடலை எண்ணெய் என்பது கிபி 15 ஆம் நூற்றாண்டில் வந்தது. அப்போதுதான் நிலக்கடலையும் இங்கு வந்திருக்கும்.
அதேபோல உணவின் காரத்திற்கு அப்போது மிளகு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்று நாம் பரவலாக பேசும் காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்து குறிக்கும்.
கறி=மிளகு. கருங்கறி=கருப்பு மிளகு.
இறைச்சி உணவை கறி என்று சொல்லும் பழக்கம் இதனால் தான் வந்தது. இறைச்சியோடும் மிளகு சேர்த்து சமைப்பதால் அது இறைச்சி கறி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் ஆட்டு இறைச்சி உணவை நாம் கறி என்று அழைக்கத் தொடங்கி விட்டோம். இன்று நாம் சமையலில் அதிகம் பயன்படுத்தும் மிளகாய் என்பது கிபி 15 ஆம் நூற்றாண்டில் சிலி என்ற நாட்டில் இருந்து தான் வந்தது. அதன் பின்னரே இங்கு சமையலில் மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல இட்லி, தோசை, பஜ்ஜி, காராசேவு போன்ற உணவுகள் விஜயநகர பேரரசு காலத்திலே இங்கே தோன்றின.
அடுத்ததாக உப்பு. உப்பு என்பது நெருப்புக்கு பிறகான மனிதனின் இரண்டாவது கண்டுபிடிப்பு. உப்பு என்பதை சுவை என்று கூறுகிறார்கள். உப்புக்கு மிகப்பெரிய பாரம்பரியம் உண்டு. அந்த காலத்தில் உப்பு நெல்லுக்கு இணையான விலையைக் கொண்டது. இன்று உப்பு விற்கப்படும் விலையை விட அந்த காலத்தில் ஐந்து மடங்கு அதிக விலை விற்கப்பட்டது.
ஒருவருக்கு சம்பளமாக உப்பும், நெல்லும் அந்த காலத்தில் கொடுக்கப்பட்டது. அதனால் தான் Salary என்ற ஆங்கில சொல் salt என்ற சொல்லிலிருந்து பிறந்தது.
மற்றபடி காப்பி, தேநீர், பாமாயில் ரீபைண்ட் ஆயில், வெள்ளை சர்க்கரை இவையாவும் வல்லரசு நாடுகளின் கண்டுபிடிப்புகள் தான். அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை. இவையாவும் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய பொருட்கள்.
-தொ.பரமசிவன்
- கண்களில் பெருகிய நீரால் அப்பனை அபிஷேகித்தார். தன்னுள் தன்னைக் கண்டவர், அன்று தன்னுள் அவனையும், அவனுள் தன்னையும் கண்டார்.
- அவனருளாலே அவன் தாள் வணங்கி, தன்னையே அவனுக்களித்து வெளியே வந்தார்.
விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் ரெயில் வண்டி திருவண்ணாமலை ஸ்டேஷனில் வந்து நின்றது.
வேகமாக அதிலிருந்து இறங்கினார் அவர். ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை அவரை ஈர்த்தது.
அண்ணாமலையை தரிசித்தவாறே ஓட்டமும் நடையுமாக விரைந்தார்.
அண்ணாமலையார் ஆலயத்தின் ராஜகோபுரம் கண்ணில் பட்டது. உடல் பூரித்தது.. உள்ளம் பரவசப்பட்டது.
ஆலயத்துள் விரைந்தார். எப்போதும் கூட்டமாக இருக்கும் அவ்வாலயம் அன்று தனிமையில் ஆழ்ந்திருந்தது.
வல்லாள கோபுரம், கிளிக்கோபுரம் எல்லாம் கடந்து அண்ணாமலையார் சன்னதி நோக்கி விரைந்தார்.
அதிசயமாய் அன்று கருவறையில் குருக்கள் இல்லை. ஆலயத்தில் பரமாரிப்புப் பணி நடந்து கொண்டிருந்ததால் அவர் வேறெங்கோ சென்றிருந்தார்.
அந்தத் தனிமையின் இனிமையில் அம்மைக்கொரு பாகம் தந்த அப்பனை ஆசை தீரப் பருகினார்.
"மகனே வந்தாயா?" என்று அப்பன் கேட்பது போல இருந்தது.
"அப்பா வந்துட்டேன்" என்று சொல்லி, ஆசை தீர அருணாசல லிங்கத்தைக் கட்டிக் கொண்டார். அதுவரை மேனியில் ஒருவித எரிச்சலும் அரிப்பும் அவருக்கு இருந்தது. அது அன்றோடு நீங்கியது.
கண்களில் பெருகிய நீரால் அப்பனை அபிஷேகித்தார். தன்னுள் தன்னைக் கண்டவர், அன்று தன்னுள் அவனையும், அவனுள் தன்னையும் கண்டார். அவனருளாலே அவன் தாள் வணங்கி, தன்னையே அவனுக்களித்து வெளியே வந்தார்.
ஐயன் குளத்தை நோக்கி நடந்தார்.
அன்பர் ஒருவர், 'சாமி, முடியெடுக்கணுமா?' என்று கேட்க, 'அப்பனின் கட்டளையே இது!' என எண்ணித் தலையசைத்தார் அவர்.
நாவிதரிடம் அழைத்துச் சென்றார்.
அன்னை பாராட்டிச் சீராட்டி, தலை வாரி உச்சி மோர்ந்து வளர்த்த சிகை கழிந்தது.
பிறப்பை வென்றவனுக்கு பூணூல் எதற்கு? தந்தையால் அதி ரகசியமாய் ஓதி அணிவிக்கப் பெற்ற பூணூலைக் கழற்றி குளத்து நீரில் எறிந்தார்.
முற்றும் துறந்தவனுக்கு மறுவேளை உணவு தேவையா என்ன? கையில் இருந்த தின்பண்ட மூட்டையையும், வேட்டியில் முடிந்து வைத்திருந்த மீதிப் பணத்தையும் குளத்தில் விட்டெறிந்தார்.
மானத்தை மறைக்க ஓராடை போதாதா? மேலே போர்த்தியிருந்த துண்டைக் குளத்தில் எறிந்தார்.
வேட்டியைக் கிழித்தார். சிறிய கௌபீணமாக்கி அதை உடுத்திக் கொண்டார். மீதித் துணியை அங்கேயே போட்டுவிட்டு குளக்கரையை விட்டு வெளியேறினார்.
எல்லாம் துறந்தவரை தானும் வாழ்த்தும் பொருட்டு வருணன் கண்களைத் திறந்தான். மாமழையாய்ப் பொழிந்தான்.
உடலும், உள்ளமும் மாமழையால் நனைந்தவாறே அவர், அண்ணாமலை ஆலயத்துள் இருக்கும் ஆயிரம் கால் மண்டபத்துள் சென்றார். தனித்த ஓரிடத்தில் அமர்ந்தார். தன்னுள் தான் ஆழ்ந்தார்.
வேங்கடராமன் என்னும் இயற்பெயர் கொண்ட பகவான் ரமண மகரிஷி, பால ரமணராய் அண்ணாமலையில் கால் பதித்த தினம் இன்று.
ஆம். இன்றைக்குச் சரியாக 126 ஆண்டுகளுக்கு முன்னால், (01-09-1896) இதே நாளில்தான் பகவான் ரமணர் அண்ணாமலை தலத்தில் கால் பதித்தார். அதன் பின் அவரது கால்கள் அண்ணாமலையை வீட்டு நீங்கவேயில்லை.
-ஆர்.எஸ். மனோகரன்
- கர்ணன் மீது வலுவாக நான்கு குற்றங்களை பேராசிரியர் இராசகோபால் சுமத்தினார்.
- நடுவர் பேராசிரியர் சத்தியசீலன், “அவரின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் என நினைக்கிறேன்” என பேராசிரியர் அறிவொளியை நோக்கிக் கூறினார்.
ஒரு சமயம் திருச்சியில் பேராசிரியர் சத்தியசீலன் தலைமையில், 'கர்ணன் குற்றவாளியா இல்லையா?' என்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது.
குற்றவாளியே என பேராசிரியர் இராசகோபால் அவர்களும், மறுத்து பேராசிரியர் அறிவொளி அவர்களும் பேசினார்கள்.
கர்ணன் மீது வலுவாக நான்கு குற்றங்களை பேராசிரியர் இராசகோபால் சுமத்தினார். நடுவர் பேராசிரியர் சத்தியசீலன், "அவரின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் என நினைக்கிறேன்" என பேராசிரியர் அறிவொளியை நோக்கிக் கூறினார்.
பேராசிரியர் அறிவொளி எழுந்து , "உண்மையில் பலவிதம் இருக்கு நடுவர் அவர்களே..." என்றார்.
"புரியும்படி சொல்லுங்கள். அதென்ன பலவித உண்மை?" என்றார் நடுவர்.
"தெரியாத உண்மை இருக்கிறது, பொய்யான உண்மை இருக்கிறது , புரியாத உண்மை இருக்கிறது" என அடுக்கிக் கொண்டே போனார் அறிவொளி..
"நிறுத்துங்கள் , நிறுத்துங்கள் ... இரண்டு உதாரணம் கூறுங்கள்" என்றார் நடுவர் சத்தியசீலன்.
"நடுவர் அவர்களே, உலகத்திலேயே மனிதருக்கு ஏற்படும் வலிகளில் வேதனையான வலி எது தெரியுமா?"..
"பிரசவ வலி தான்.."
"தங்களுக்கு அந்த வலி ஏற்பட்டிருக்கிறதா ?" எனக் கேள்வி எழுப்ப , சங்கடத்துடன் , புன்னகை புரிந்தவாறே , " இல்லை, கேள்விப்பட்டது தான்" என்றார்.
அப்படியெனில் , "இதுதான் தெரியாத உண்மை" என்றார்.
கூட்டத்தில் கரவொலி வானை பிளந்தது.
அடுத்து , " உலகில் இரண்டு மடங்கு நீரும், ஒரு மடங்கு நிலமும் இருக்கிறது என கூறுகின்றனர்... இல்லையா ? "..
'ஆமாம் '
" இப்ப நீங்க, கடலில் குதிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்..."
' நானா? '...
"சரி ! நாமிருவரும் என வைத்துக்கொள்வோம். நீருக்கடியில் போக , போக என்ன இருக்கிறது ?"..
"நீர் தான் ".
" நீரின் அடியில் என்ன இருக்கிறது ?"
" தரை இருக்கிறது".
"அங்கேயும் நிலம் தானே இருக்கு..."
"ஆமாம் ".
"அப்போ எப்படி இரண்டு பங்கு நீரும், ஒரு பங்கு நிலமும் என்று சொல்வது சரியாகும்?....இதுதான் பொய்யான உண்மை?
இப்படி சொன்னதும் அடக்கமாட்டாத சிரிப்புடன் , "போதும் போதும்.. வழக்காடுங்கள்" என்றார் நடுவர் சத்தியசீலன்.
-வசந்தன்






