search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    தமிழரின் பாரம்பரிய சமையல்
    X

    தமிழரின் பாரம்பரிய சமையல்

    • இறைச்சி உணவை கறி என்று சொல்லும் பழக்கம் இதனால் தான் வந்தது.
    • இறைச்சியோடும் மிளகு சேர்த்து சமைப்பதால் அது இறைச்சி கறி என்று அழைக்கப்பட்டது.

    பண்டைய தமிழர்கள் சமைக்கும் முறையானது அவித்தல், வறுத்தல், சுடுதல் என்ற வகையில் இருந்தது. எண்ணெயில் போட்டு பொரிக்கும் பழக்கம் விஜயநகர பேரரசுகள் வந்ததுக்கு அப்புறம் தான் வந்தது.

    எண்ணெய் என்றால் ஆரம்பத்தில் அது நல்லெண்ணெய்யைத் தான் குறிக்கும். எள் என்பது தமிழர்களின் பாரம்பரிய தானியம். அதனால் அதிலிருந்து பெறப்பட்ட நெய்யைத் தான் எண்ணெய் என்று அழைத்திருக்கிறார்கள்.

    எள் +நெய்= எண்ணெய்.

    அதனால் நெய் என்பது எண்ணெய்க்கு முன்பாகவே வந்து விட்டது. பாலில் இருந்து பெறப்படும் நெய், அதேபோல எள்ளிலிருந்து பெறப்படும் நெய்.

    நல்லெண்ணெய்க்கு பிறகு வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், புன்னை எண்ணெய் பயன்படுத்தினார்கள். அதன் பின்னரே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். கடலை எண்ணெய் என்பது கிபி 15 ஆம் நூற்றாண்டில் வந்தது. அப்போதுதான் நிலக்கடலையும் இங்கு வந்திருக்கும்.

    அதேபோல உணவின் காரத்திற்கு அப்போது மிளகு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்று நாம் பரவலாக பேசும் காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்து குறிக்கும்.

    கறி=மிளகு. கருங்கறி=கருப்பு மிளகு.

    இறைச்சி உணவை கறி என்று சொல்லும் பழக்கம் இதனால் தான் வந்தது. இறைச்சியோடும் மிளகு சேர்த்து சமைப்பதால் அது இறைச்சி கறி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் ஆட்டு இறைச்சி உணவை நாம் கறி என்று அழைக்கத் தொடங்கி விட்டோம். இன்று நாம் சமையலில் அதிகம் பயன்படுத்தும் மிளகாய் என்பது கிபி 15 ஆம் நூற்றாண்டில் சிலி என்ற நாட்டில் இருந்து தான் வந்தது. அதன் பின்னரே இங்கு சமையலில் மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.

    அதேபோல இட்லி, தோசை, பஜ்ஜி, காராசேவு போன்ற உணவுகள் விஜயநகர பேரரசு காலத்திலே இங்கே தோன்றின.

    அடுத்ததாக உப்பு. உப்பு என்பது நெருப்புக்கு பிறகான மனிதனின் இரண்டாவது கண்டுபிடிப்பு. உப்பு என்பதை சுவை என்று கூறுகிறார்கள். உப்புக்கு மிகப்பெரிய பாரம்பரியம் உண்டு. அந்த காலத்தில் உப்பு நெல்லுக்கு இணையான விலையைக் கொண்டது. இன்று உப்பு விற்கப்படும் விலையை விட அந்த காலத்தில் ஐந்து மடங்கு அதிக விலை விற்கப்பட்டது.

    ஒருவருக்கு சம்பளமாக உப்பும், நெல்லும் அந்த காலத்தில் கொடுக்கப்பட்டது. அதனால் தான் Salary என்ற ஆங்கில சொல் salt என்ற சொல்லிலிருந்து பிறந்தது.

    மற்றபடி காப்பி, தேநீர், பாமாயில் ரீபைண்ட் ஆயில், வெள்ளை சர்க்கரை இவையாவும் வல்லரசு நாடுகளின் கண்டுபிடிப்புகள் தான். அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை. இவையாவும் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய பொருட்கள்.

    -தொ.பரமசிவன்

    Next Story
    ×