என் மலர்tooltip icon

    மற்றவை

    • வாசிப்பில் சுருதி, தாளம், ராகம் எதுவுமே சரியாக அமையவில்லை.
    • நிகழ்ச்சி முடிந்ததும் கலைவாணர் நாதஸ்வரம் வாசித்தவரை அருகில் அழைத்து கைநிறைய பணம் கொடுத்தனுப்பினார்.

    ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை சந்திக்க ஒருவர் வந்தார்.

    "ஐயா நான் நன்றாக நாதஸ்வரம் வாசிப்பேன்" என்றார்.

    "அப்படியா சரி. இப்போதே வாசி பார்க்கலாம்..." என்று வாசிக்கச் சொன்னார் கலைவாணர்.

    அவரும் வாசித்தார்... ஆனால் வாசிப்பில் சுருதி, தாளம், ராகம் எதுவுமே சரியாக அமையவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் கலைவாணர் நாதஸ்வரம் வாசித்தவரை அருகில் அழைத்து கைநிறைய பணம் கொடுத்தனுப்பினார்...

    அவர் சென்றபின் உடனிருந்தவர்கள், "அவர்தான் சரியாக வாசிக்கவிலையே.. அப்புறம் ஏன் அவருக்கு அவ்வளவு பணம் கொடுத்தீர்கள்" என்றபோது ...

    "அவர் நாதஸ்வரம் வாசிக்கவில்லை.. தன் வறுமையைதான் என்னிடம் வாசித்துக் காட்டினார் அவர்... அது எனக்கும் வாசித்த அவருக்கும் மட்டும்தான் தெரியும்..." என்றார் கலைவாணர்...

    -பி.சுந்தர்

    • ஐஸ்லாந்து பகுதியில் கிடைக்கும் க்ரில்மீன்களை உண்ண பூமத்தியரேகை பகுதியில் இருந்து நீலதிமிங்கிலங்கள் ஐஸ்லாந்துக்கு வருகின்றன.
    • நீலதிமிங்கிலங்கள் உலகின் மிகப்பெரும் உயிரினமாகும். அவை மிக எக்ஸ்ட்ரீம் ஆன உண்ணாவிரதத்தை கடைபிடிக்கின்றன.

    பெயர்தான் ஐஸ்லாந்து என்றாலும் இங்கே 200-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. உலகம் முழுவதிலும் இருக்கும் எரிமலைக்குழம்பில் 66% இங்கே தான் உள்ளது. எரிமலை வெடிப்பில் ஏராளமான மினரல்கள் இதன் மண்ணில் சேர்ந்துள்ளன.

    ஐஸ்லாந்து துருவபகுதியில் இருந்தாலும் அதை சுற்றி வெப்ப நீரோட்டம் இருப்பதால் அதன் கடல் உறைவதில்லை. நீரோட்டம் காரணமாக ஏராளமான மினரல்கள் அதன் பாறைகளில் அடித்து கொண்டு வரப்படுவதால் அதை உண்ண ஏராளமான அளவில் க்ரில் (Krill) எனப்படும் மீன்கள் கூடுகின்றன.

    ஏராளம் என்றால் எந்த அளவு?

    உலகில் உள்ள மனிதர்கள் அனைவர் எடைக்கும் சமமான அளவு எடையுள்ள க்ரில்மீன்கள்.

    இத்தனை சத்தான ஊட்டசத்து கிடைக்கையில் அதை உண்ண உயிரினங்கள் வராமலா இருக்கும்?

    ஐஸ்லாந்து பகுதியில் கிடைக்கும் க்ரில்மீன்களை உண்ண பூமத்தியரேகை பகுதியில் இருந்து நீலதிமிங்கிலங்கள் ஐஸ்லாந்துக்கு வருகின்றன.

    நீலதிமிங்கிலங்கள் உலகின் மிகப்பெரும் உயிரினமாகும். அவை மிக எக்ஸ்ட்ரீம் ஆன உண்ணாவிரதத்தை கடைபிடிக்கின்றன.

    க்ரில் மீன்கள் கிடைக்கும் சீசனில் அவற்றை உண்டு கொழுக்கின்றன. அதன்பின் பூமத்தியரேகை பகுதிக்கு திரும்பி மாதகணக்கில் அடுத்த க்ரில்மீன் சீசன் வரும்வரை முழுபட்டினியாக உள்ளன.

    நீலதிமிங்கிலங்கள் எடை 200 டன். அதன் நாக்கின் எடை ஒரு யானையின் எடைக்கு சமம்.

    அதன் இதயநாளத்தின் வழியே ஒரு மனிதன் தாராளமாக நீந்தி செல்லும் அளவு இடம் உள்ளது. அதன் இதயத்தின் எடை மட்டும் 1000 கிலோ.

    அது பாலூட்டிவகை. அதன் பால் தான் உலகிலேயே அதிக கொழுப்பு நிரம்பிய பாலாகும். அதை மட்டுமே உண்டுவளரும். அதன் குட்டிகள் ஒரு நாளைக்கு 90 கிலோ அளவு எடை அதிகரித்து வளரும்.

    - நியாண்டர் செல்வன்

    • சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும்.
    • அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

    தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை..

    தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை...

    தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை.

    தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும். செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.

    மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்? தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான்..

    நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும்.

    ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ இது சாத்தியமில்லை!

    எங்கே தவறு நடந்தது?

    நாக்கு தான்.

    வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து, பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாக்கு ருசி நமக்கு இன்னும் மாறவில்லை. மறையவில்லை!

    மாமிசம் மனித உணவா? ஆராய்ச்சி செய்வோம்.

    சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனைபோல் தட்டையாக அமைந்துள்ளன. அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.

    சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம் தட்டையாகவும் இருக்கும். அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள் நீளமாகவும், கூர்மையான நகங்களுடனும் இருக்கும்.

    சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப்போன்றே பதினைந்து அடி வரை நீளமான குடலாக உள்ளது. காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத் தன்மை குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும்இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு.

    அசைவ ஜீவராசிகளுக்கு அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில் குடலை விட்டு வெளியேறு ஏற்றாற்போல ஐந்து அடிகள் மட்டுமே குடலின் நீளம் உள்ளது.

    சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை குளிர்விக்கிறது.

    அசைவ ஜீவராசிகளுக்கு இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.

    சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக அதாவது கூட்டம் கூட்டமாக வாழும். மனிதனும் அவ்வாறே வாழஆசைப்படுகிறான்.

    அசைவ ஜீவராசிகள் தனித்தனியாக வாழும் இயல்புடையது. தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு விலங்கினைஅனுமதிக்காது.

    சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கும். அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்.

    சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும். அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள் எதுவும் செய்ய இயலாது.

    மனிதன் அதிக சக்தியும், பலமும் வேண்டியே தான் அசைவம் சாப்பிடுவதாக எண்ணுகிறான். சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது. சைவம் சாப்பிடும் யானைக்கு பலத்தில் என்ன குறை?

    உதாரணமாக சோயா பீன்ஸில் நாற்பது சதவீதம் சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதை விட இரு மடங்கும், முட்டையில் உள்ளதை விட நான்கு மடங்கும் அதிகமாகும்.

    மேற்கண்ட இந்த ஆராய்ச்சியில் அறிய வேண்டியது. இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது சைவமே!

    எனவே, மனிதன் ஆரோக்கியமாக, அமைதியாக, நிம்மதியாக, பொறுமையாக, பலசாலியாக, ஒற்றுமையுடனும், கோபம் இல்லாமல், மன இறுக்கம், மலச்சிக்கல், நோய் இல்லாமலும் வாழ ஆசைப்படுவான் எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.

    -சசிகலா ராமகிருஷ்ணன்

    • திருவாரூரில் பெரிய கோவிலில் மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்த்தினார் திருமுருக கிருபானந்த வாரியார்.
    • யாரை எப்படி எந்த இடத்தில் பாராட்டினால் அவர்கள் நிறைவடைவார்கள் என்று கண்டறிந்து வைத்திருக்கும் அனுபவம் வாரியாருக்கு உண்டு.

    எத்தனையோ பேர் கதைசொல்லிகளாக இருக்கிறார்கள் என்றாலும் திருமுருக கிருபானந்த வாரியார் போன்று மக்கள் உள்ளங்கவர்ந்தவர் இன்னொருவர் தெரியவில்லை. இசை, இலக்கியம், புராணங்கள் என எல்லாவற்றிலும் நிறைஞானம் அவருக்கு வாய்த்திருந்தது. எல்லாவற்றையும் மிஞ்சி அவருடைய நகைச்சுவை, பேச்சுக்கு மெருகூட்டியது எனலாம்.

    திருவாரூரில் பெரிய கோவிலில் மகாபாரதச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மு.ரா.சன்ஸ் என்ற துணிக்கடை அன்று திருவாரூரில் பிரபலம். அவர்கள் அன்றைய நிகழ்ச்சியின் உபயதாரர்.

    வாரியார் கதைசொல்ல ஆரம்பித்த சிறிது நேரத்தில் விழா ஏற்பாட்டாளர் அவரிடம் சென்று "சாமி இன்று மு.ரா.சன்ஸ் உபயம், பெரியமுதலாளி வந்திருக்கிறார். அவங்களைப் பாராட்டி ரெண்டு வார்த்தை சொல்லுங்க" என்றார்.

    "சரி, சரி போய்யா" என்ற வாரியார் அதுபற்றி எதுவும் சொல்லாமல் கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

    அமைப்பாளர் மறுபடியும் வாரியாரிடம் சென்று, 'சாமி அவரு போயிருவாரு.. இப்பவே கொஞ்சம் பாராட்டுங்க என்றார்.

    வாரியார், 'கதை சொல்லும்போது இடைஞ்சல் பண்ணாதே போய்யா' என்று சிடுசிடுத்தார்.

    பிறகு, கதையில் திரௌபதியை துச்சாதனன் சபையில் அவமானப்படுத்தும் இடம் வந்தபோது, துச்சாதனன் இழுக்க இழுக்க பாஞ்சாலி புடவை வளர்ந்த வண்ணமாகவே இருந்தது. அதை அன்று வாரியார் இவ்வாறு கூறினார்.

    "கலர் கலரா சேலை வந்தது. பச்சையில மஞ்ச பார்டர் மயில் முந்தி, அரக்கு கலர் பச்சை பார்டர், கூஜா முந்தி.. இப்படிப் பலப்பல கலரிலே வந்ததும் துரியோதனன் நினைச்சான், அட இது மாதிரி கிடைச்சா பானுமதிக்கு வாங்கித் தரலாமேன்னு.. துச்சாதனன் இழுக்கறதை மறந்து சேலையை ரசிக்க ஆரம்பிச்சிட்டான்.

    இவனுக கிடக்கானுங்க.. கண்ண பரமாத்துமாவே அசந்துட்டாரு போங்க. பாமாவுக்கு ஒன்னு ருக்மணிக்கு ஒன்னு வாங்கித் குடுத்துட வேண்டியதுதான்னு நினைச்சு, புடவையை அனுப்புற தேவதைகிட்ட கேக்குறாரு, 'சேலையெல்லாம் எங்கேருந்து வருது'?

    தேவதை சொல்லுது 'சுவாமி எல்லாம் மு.ரா.சன்ஸ்லேருந்து வருது'.. இதை வாரியார் சொன்னவுடன், கூட்டம் கலகலத்தது, சிரிப்பும் கைதட்டலும். மு.ரா.சன்ஸ் முதலாளி வாழ்நாளில் அப்படி ஒரு மகிழ்ச்சியை அடைந்ததே இல்லை.

    யாரை எப்படி எந்த இடத்தில் பாராட்டினால் அவர்கள் நிறைவடைவார்கள் என்று கண்டறிந்து வைத்திருக்கும் அனுபவம் வாரியாருக்கு உண்டு.

    - இரா. சண்முகவடிவேல்

    • இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்.
    • நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி.

    இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன் என்ற இசைக்கலைஞர் "தீபக்" என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

    நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

    *அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம்.

    பாடல்: சலங்கயிட்டால் ஒரு மாது..

    பாடல்: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..

    *அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்.

    பாடல்: கண்மணி நீ வர காத்திருந்தேன்.. – மலையமருதம் ராகம்.

    பாடல்: நீ பாதி நான் பாதி கண்ணே.. – சக்கரவாகம் ராகம்

    பாடல்: பூப்பூக்கும் மாசம் தை மாசம்.. – மலையமாருதம்

    பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம்.. – சக்கரவாகம்

    பாடல்: ஓராறு முகமும் ஈராறு கரமும்..

    பாடல் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..

    * சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி.

    பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு..

    * கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி.

    பாடல்: கண்ணுக்கு மை அழகு..

    பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்..

    பாடல்: ஒரே பாடல் உன்னை அழைக்கும்..

    பாடல்: பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்..

    *மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி.

    பாடல்: நாதம் எழுந்ததடி.. – ஸ்ரீ ரஞ்சனி

    பாடல்: வசந்த காலங்கள் இசைந்து.. – ஸ்ரீ ரஞ்சனி

    பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு.. – ஆனந்த பைரவி

    பாடல்: கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள்.. – ஆனந்த பைரவி

    பாடல்:வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி.. – நீலாம்பரி

    பாடல்: பூவே இளைய பூவே.. – நீலாம்பரி

    பாடல்: சித்திரம் பேசுதடி என் சிந்தை.. – கமாஸ்

    * மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்.

    பாடல் : காலம் மாறலாம் நம் காதல் .. – அம்சத்வனி

    பாடல்: சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம்.. – பீம்பிளாஸ்

    பாடல்: தோகை இளமயில் ஆடி வருகுது.. – அம்சத்வனி

    பாடல்: வா…வா…வா… கண்ணா வா.. – அம்சத்வனி

    பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை.. – பீம்பிளாஸ்

    பாடல்: பன்னிரு விழிகளிலே பணிவுடன்..

    பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா..

    பாடல்: வாராய் நீ வாராய்..

    *இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்.

    *நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி.

    *பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான.

    பாடல்: யார் தருவார் இந்த அரியாசனம்.. – அடான

    பாடல்: வருகிறார் உனைத் தேடி.. – அடான

    *மனதை வசீகரிக்க, மயக்க – ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா.

    பாடல்: தானா வந்த சந்தனமே.. – கரகரப்பிரியா

    பாடல்: கம்பன் எங்கே போனான்.. – கரகரப்பிரியா

    பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு.. –ஆனந்த பைரவி.

    பாடல்:சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா.. – கரகரப்பிரியா

    பாடல்: மாதவிப் பொன் மயிலாள்.. – கரகரப்பிரியா

    *சோகத்தை சுகமாக்க – முகாரி , நாதநாமக்கிரியா.

    பாடல்: கனவு கண்டேன் நான்.. – முகாரி

    பாடல்: சொல்லடி அபிராமி..

    பாடல்: எந்தன் பொன் வண்ணமே அன்பு..

    * வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்.

    * வயிற்றுவலி தீர – நாஜீவதாரா ராகம்..

    -சமரன் நாகன்

    • நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து, வெயில்படும்படியாக துவைத்த புடவையை அதன் மேல் காயப்போட்டிருந்தார்.
    • புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ. “இது என்ன புடவை தெரியுமா”? என்று நண்பரிடம் கேட்டார்.

    ஒரு நண்பரின் வீட்டிற்கு தமிழ் அறிஞர் கி.வா.ஜகன்நாதன் சென்றிருந்தார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெயில் படுகிற வகையில் வசதியான இடம் வீட்டில் இருக்கவில்லை... வாசல் பக்கத்தில் தான் வெயில் அடித்துக் கொண்டிருந்தது.

    நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து, வெயில்படும்படியாக துவைத்த புடவையை அதன் மேல் காயப்போட்டிருந்தார்.

    புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ. "இது என்ன புடவை தெரியுமா"? என்று நண்பரிடம் கேட்டார்.

    "ஏன் இது சாதாரண புடவைதானே!" என்றார் நண்பர்.

    "இல்ல... இந்த புடவைக்கு ஒரு விஷேச சிறப்பு உண்டு. இது தான் உண்மையான வாயில் புடவை" என்றார் கி.வா.ஜ.

    -பே.சண்முகம்

    • சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை.
    • அந்த மாணவன் வேறு யாருமில்லை ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்.

    வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று.

    ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.

    ஆசிரியர் : அப்படியெனில்,சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?

    மாணவன் அமைதி காக்கிறான்.. சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப்பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

    ஆசிரியர் அனுமதிக்கிறார்..

    மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா?

    ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது. நீ குளிரை உணர்ந்தது இல்லையா?

    மாணவன்: மன்னிக்கவும். தங்கள் பதில் தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.

    மாணவன் : இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

    ஆசிரியர் : ஆம், இருக்கிறது.

    மாணவன் : மன்னிக்கவும். மீண்டும் தவறு. இருள் என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல.

    அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை.

    அந்த மாணவன் வேறு யாருமில்லை ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்.

    -அகர முதல்வன்

    • மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.
    • புலியின் தலையை ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

    அசோக சக்கரவர்த்தி குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    போரே வேண்டாம்…

    போரோ மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம் .

    இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

    அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

    ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

    'எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!' என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

    அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

    "மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்றார் மன்னர்.

    நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

    ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

    புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

    ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

    மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் அமைச்சரிடம், "சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்," என்றார்.

    மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

    புலியின் தலையை ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

    இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது.

    அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

    மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

    "அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்", என்றார் மன்னர்.

    ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக்கொள்ள யாருமே முன் வரவில்லை.

    விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

    "மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?" என்றார்.

    அமைச்சர் மவுனம் காத்தார்.

    "மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா…

    ஆனால் நடைமுறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

    இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது!

    செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.

    ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!" என்றார்.

    அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

    - ஆனந்த்

    • சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்தால், எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும்.
    • எலும்பின் அடர்த்தி அதிகரிக்க, எலும்புகளுக்கு அவ்வப்போது உடற்பயிற்சி, உடல் உழைப்பு என வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    நமது எலும்புதான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, உட்கார, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன.

    இதனால்…நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது, மூட்டு வலி உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும்.

    எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்க 10 அருமையான வழிகள் பற்றிதான் இங்கே பார்க்கபோகிறோம்.

    1. எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம். வைட்டமின் டி, நம் உடலில் உள்ள தசைகள் வலிமை பெறுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.

    2. கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்து உள்ளது . எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்துவந்தால் எலும்பு வலுவாகும்.

    3. மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன... அதேபோன்று பெரும்பாலான தாது சத்துக்கள் முட்டையில் உள்ளது. இயற்கையாக கிடைக்கும் வைட்டமின் டி முட்டையில் கிடைக்கிறது.மேலும் முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமை பெறச் செய்கின்றன.

    4. ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிறைவாக உள்ளன. இதுவும், எலும்புக்கு வலிமை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

    5. உடலை வலுவாக்கும் உன்னதமான சிறுதானியம் உளுந்து. இதில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப்பெயர் பெற்றது எனக் கூறுவார்கள். அதனால் வாரம் ஒரு முறையாவது உளுந்தை கஞ்சியாகவோ களியாகவோ கட்டாயம் சாப்பிட வேண்டும்.

    6. முருங்கை கீரை எலும்புகளுக்கு பலம் தரும் மருந்தாகிறது. இது கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி, டி மற்றும் நார்சத்துக்களை உள்ளடக்கியது. எனவே அடிக்கடி முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    7. கேழ்வரகு 100 கி கேழ்வரகில் 35 மி.கி கால்சியம் உள்ளது. அவ்வப்போது ராகி கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத ராகி தோசை சாப்பிடலாம்.

    8. கார்பனேட்டட் குளிர் பானங்களில் அளவுக்கு அதிகமான பாஸ்பேட் இருக்கும். இது எலும்புகளை சிதைத்து விடும். இத்தகைய பானங்களைத் தவிர்த்து ஆரோக்கியமான பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    9. பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனால், எலும்புக்குத் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான எலும்புக்கு உதவிபுரிகின்றன.

    10. சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்தால், எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும். எலும்பின் அடர்த்தி அதிகரிக்க, எலும்புகளுக்கு அவ்வப்போது உடற்பயிற்சி, உடல் உழைப்பு என வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    இந்த 10 வழிகளையும் பின்பற்றினால் எலும்பில் பிரச்சனை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

    -வைத்தியர் யாஸீன்

    • மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும்.
    • சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.

    சித்திரையில் ஆண் பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது. அந்த பிள்ளை தலை எடுக்கும் போது தகப்பனின் தலை சாயகூடும். ஆகையால் தான் ஆடியில் திருமணமும் செய்வதில்லை, தம்பதிகளையும் பிரித்து விடுகின்றனர் என்று கூறுகின்றனர். இந்த கூற்றுக்கு ஏற்றார் போல "சித்திரை அப்பன்தெருவிலே" என்று ஒரு பழமொழியே உள்ளது.

    வான்மண்டலத்தில் சூரியன் தனது முழு சக்தியை வெளிப்படுத்தும் மாதம்(உச்சம்) சித்திரை. அந்த மாதத்தில் பிறக்கும் அனைத்தும் ஆளுமை செலுத்தும் என்பதே மறுக்க முடியாத உண்மை. காரணம் ஆளுமை திறன் என்பது சூரியனின் குணம்.

    அதாவது சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் இயற்கையாகவே ஆளுமை திறனோடு தான் பிறக்கும். ஆகையால் தான் அது அவனின் தந்தைக்கு ஆபத்தாகிவிடுகிறது.

    மகன் ஆளுமை செலுத்துவது எப்படி தந்தைக்கு ஆபத்தாகும் என்றால், ஒருவன் நாட்டிற்கு இராஜா ஆக வேண்டும் என்றால் முதலில் அவன் தந்தைக்கு ஓய்வு தர வேண்டும். ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதே விதி. ஆகையால் தான் சித்திரையில் பிறக்கும் ஆண் பிள்ளைகள் எந்த அளவிற்கு வளர்ச்சியின் உச்சிக்கு செல்கிறதோ அந்த அளவிற்கு அவனின் தந்தை வீழ்ச்சியின் உச்சிக்கே சென்று விடுவார்.

    ஆனால் அவர்கள் சொல்வது போல உயிர் பலி கேட்பதற்கு எல்லாம் வாய்ப்பு மிக மிக குறைவு. ஒருவேளை அக்குழந்தை ஆயிரத்தில் ஒருவன், லட்சத்தில் ஒருவன், கோடியில் ஒருவன் போன்ற நிலைக்கு உயருமேனில் அப்படி நடக்க வாய்ப்புள்ளது. அதுவும் 100% கிடையாது.

    இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் உங்கள் பலம் கூட கூட உங்கள் தந்தையின் பலம் குறைந்துவிடும். நீங்கள் ஒரு தலைவனை போல உங்கள் குடும்பத்தை வழிநடத்துவீர்கள். உங்கள் தந்தை ஒரு பிள்ளையை போல உங்கள் நிழலில் வாழ தொடங்கிவிடுவார், அவ்வளவுதான்.

    ஆனால் இவ்விதி பெண்பிள்ளைகள் பிறந்தால் பொருந்தாது. காரணம் சூரியன் என்ற கிரகத்தை குறிக்கும் உறவு காரகத்துவங்கள் யாதெனில் தந்தை மற்றும் மூத்த மகனே. ஆகையால் சித்திரையில் பெண்பிள்ளைகள் பிறந்தால் தகப்பனுக்கு நன்மையே அன்றி தீமை கிடையாது.

    ஆடியில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்வதும் சித்திரையில் ஆண்குழந்தை பிறப்பதும் ஒரு தந்தைக்கு வேண்டுமானால் பெரிதளவு நன்மையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிறக்கும் அக்குழந்தைக்கு அது நன்மையே.

    என்னதான் நாம் தவிர்த்தும் பிரித்தும் வந்தாலும் இதை எல்லாம் மீறி சிலர் ஆடியில் சேர தான் போகிறார்கள், சித்திரையிலும் குழந்தை பிறக்க தான் போகிறது. காரணம் இயற்கையின் கட்டமைப்பு அப்படி. அதை மீற இங்கு யாரால் முடியும்?

    -கோகுல மணிகண்டன்

    • பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
    • ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு.

    ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நீரே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம்.

    வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

    சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்? முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

    சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

    ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

    பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

    இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்!

    -அம்ரா பாண்டியன்

    • வனத்தில் புலிகளின் இயற்கையான இரை விலங்குகள் குறையும் போது மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வேட்டையாடுவது நடக்கும் வாய்ப்புகள் அதிகம்.
    • இரை விலங்குகள் குறைய மனிதர்கள் வேட்டையாடுவது, வனத்தின் இயல்பான சூழல் மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை என சில காரணங்கள் உண்டு.

    புலிகள் இருக்கும் காடுகளில் மனிதன் நடமாட்டம் இருக்காது. அதனால் மரங்கள் வெட்டப்படமாட்டாது. மரங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்போது பறவை முதல் அனைத்து விலங்குகளும் அங்கே வாழத்தொடங்கும். இது ஒரு சங்கிலி தொடர்போல் இருக்கும். ஒன்றை ஒன்று சார்ந்தது.

    காடுகளை நம்மை சுற்றியிருக்கும் அரண்போல மனதில் நிறுத்திப் பாருங்கள். இந்தக் காடுகள் இன்றுவரை பிழைத்திருக்க புலிகளே காரணம். இல்லை என்றால் என்றோ அழித்து ஒழித்து இருப்போம். நமக்கு கிடைக்கும் தண்ணீர் முதல், காற்று வரை காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது.

    ஒரு புலி ஒரு வருடத்தில் சுமார் 45 முதல் 55 வரையிலான இரை விலங்குகளை உணவாகக்கொள்ளும். இரை விலங்குகளின் எண்ணிக்கையை சரியான அளவில் வைத்திருக்க கொன்றுண்ணிகள் பெரும் உதவி செய்கின்றன. இரை விலங்குகள் பெருகி, வேட்டை விலங்குகளின் எண்ணிக்கை குறைந்தால் காடுகளின் தரம் வெகுவாக குறையும். இறுதியில், அனைத்தையும் இழக்க வேண்டி வரும். சமநிலை இருப்பது மிக முக்கியம்.

    வனத்தில் புலிகளின் இயற்கையான இரை விலங்குகள் குறையும் போது மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வேட்டையாடுவது நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இரை விலங்குகள் குறைய மனிதர்கள் வேட்டையாடுவது, வனத்தின் இயல்பான சூழல் மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை என சில காரணங்கள் உண்டு. இது போன்ற காரணங்களால் உணவில்லாமல், வேறிடம் செல்லவும் வழி இல்லாமல் ஒரு பகுதியில் உள்ள மொத்த புலிகளும் தனிமைப்பட்டு முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகலாம்.

    அழிந்து போனால் என்ன.. நல்லது தானே என்று நீங்கள் நினைத்தால், உங்களை சுற்றியுள்ள வனங்கள் தங்கள் இயல்புகளை இழந்து விட்டன என்பதையும் மனதில் கொள்ளுங்கள். வனத்தின் இயல்புகள் தொலைந்தால் அது நம் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

    -ஆற்றல் பிரவீன்குமார்

    ×