என் மலர்
மற்றவை
- வழக்கமாக தேவர் பிலிம்ஸ் தயாரித்த எல்லாப் படங்களுக்கும், கே.வி. மகாதேவன்தான் இசை அமைத்து வந்தார்.
- மொத்தப் பணத்தையும் எம்.எஸ்.வி.யிடம் நீட்டி, தனது அடுத்த படத்திற்கு இசை அமைக்கும்படி கூறினார் தேவர்.
ரொம்பவே என்னை சிந்திக்க வைத்தன அந்த வரிகள்!
'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..."
'நம் நாடு' படப்பாடல், டி.எம்.எஸ். குரலில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது.
பாடலின் கடைசி சரணத்தில்,
"கிளி போல பேசு
இளங்குயில் போல பாடு
மலர் போல சிரித்து
நீ குறள் போல வாழு..."
ஒரு கணம் சிந்தித்தேன்.
குறள் போல வாழ்வது சாத்தியமா?
ஏன் முடியாது?
இந்தப் பாடலுக்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், என் நினைவுக்கு வந்தது. இதோ, அது பற்றி சொல்கிறார் கதை- வசனகர்த்தா ஆரூர்தாஸ் :
"வழக்கமாக தேவர் பிலிம்ஸ் தயாரித்த எல்லாப் படங்களுக்கும், கே.வி. மகாதேவன்தான் இசை அமைத்து வந்தார். 'வேட்டைக்காரன்' பட சமயத்தில், இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்று ஒரு சில விநியோகஸ்தர்கள் விரும்பியதன் காரணமாக, தேவரண்ணன் (சாண்டோ சின்னப்பாதேவர்) விஸ்வநாதன் வீட்டிற்குச் சென்றார்.
மொத்தப் பணத்தையும் எம்.எஸ்.வி.யிடம் நீட்டி, தனது அடுத்த படத்திற்கு இசை அமைக்கும்படி கூறினார் தேவர்.
ஒப்புக்கொள்ளலாமா வேண்டாமா என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், 'விசு... கொஞ்சம் உள்ளே வா...' என்று, வீட்டுக்குள் இருந்து அவரின் தாயார் அழைக்கும் குரல்.
உள்ளே போனார் எம்.எஸ்.வி...
"பளார்" என்று தன் மகனின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்ட அவரது தாயார்,
"நன்றி கெட்டவனே! ஒரு காலத்துல நீ வேலை இல்லாம கஷ்டப்பட்டப்போ, அய்யர்கிட்ட போய் (கே.வி. மகாதேவனிடம்) உதவி கேட்டப்போ, உனக்குப் போட்டுக்க சட்டை கொடுத்து, ரெயில் செலவுக்குப் பணமும் கொடுத்து உன்னைக் கோயம்புத்தூருக்கு அனுப்பினாரே, அதை மறந்திட்டியா?
அந்தப் புண்ணியவான் தொழில் பண்ற இடத்துக்கு நீ போட்டியா போகலாமா?'' என்று கோபத்துடன் கூற..,
அந்தத் தாயார், இந்த வயதில் தன் மகனைக் கன்னத்தில் அறைந்ததைப் பார்த்தும், கூறியதைக் கேட்டும் கதிகலங்கிப் போன தேவரண்ணன், தன் அலுவலகத்துக்கு வந்து இதைக் கூறி, 'இப்படி ஒரு தாயும் பிள்ளையுமா?' என்று ஆச்சரியம் அடைந்தார்..!"
ஆரூர்தாஸ் சொன்னதை படித்தபோது நானும் கூட ஆச்சரியம் அடைந்தேன்.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."
திருக்குறள்களை நாம் வாசிக்கிறோம்.
சிலர் வாழ்ந்து காட்டி விட்டு சென்றிருக்கிறார்கள்.
-ஜான்துரை ஆசிர் செல்லையா
- ஒரே மாதத்தில் ஒரு பௌர்ணமியோ ஒரு அமாவாசையோ மட்டுமே வர வேண்டும். இதுவே நியதியாகும்.
- மாதத்தின் துவக்கத்தில் வரும் அமாவாசையோ பெளர்ணமியோ அதிக திதி எனப்படும்.
இவ்வாண்டு ஆடி அமாவாசையானது ஆடி மாதம் 1ம் தேதியிலும் 31-ஆம் தேதியிலும் வருகின்றது. பொதுவாக ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு அமாவாசையோ பௌர்ணமியோ வந்தால் அது மலமாதம் எனப்படுகின்றது. பொதுவாக மலமாதத்தில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. மலம் என்றால் அழுக்கு, கழிவு என பொருள்படும். ஒதுக்கப்பட வேண்டியது எனவும் தவறானது எனவும் கூட பொருள் படும்.
அதாவது ஒரே மாதத்தில் ஒரு பௌர்ணமியோ ஒரு அமாவாசையோ மட்டுமே வர வேண்டும். இதுவே நியதியாகும். மாறாக இரு முறை வந்தால் அது மலமாதம் எனப்படுகின்றது.
மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ நிகழக்கூடிய வாய்ப்பு உண்டு. தமிழ் மாதத்தில் 31 அல்லது 32 நாட்கள் வரக்கூடிய மாதத்தில் மட்டுமே இவ்வாறு நிகழும் வாய்ப்பு உண்டு.
மாதத்தின் துவக்கத்தில் வரும் அமாவாசையோ பெளர்ணமியோ அதிக திதி எனப்படும். அதாவது சந்திரன் கணக்குப்படி இது அமாவாசையோ பௌர்ணமியோ ஆகும். ஆனால் சூரியனின் சஞ்சாரத்தின் கணக்குப்படி அதாவது தமிழ் மாதப்படி அது அமாவாசையா பௌர்ணமியோ ஆகாது.
தெளிவாக சொல்ல வேண்டுமானால் இவ்வாண்டு ஆடி மாதத்தை எடுத்துக் கொண்டோமேயானால் சூரியன் கடக ராசியில் பிற்பகல் 12.40 மணியளவில் தான் நுழைகின்றார். அதாவது ஆடி மாதம் பிற்பகல் தான் உதயமாகிறது. ஆனால் அமாவாசையோ முதல் நாள் இரவே வந்து விடுகின்றது. அதன் காரணமாகவே இது அதிக திதி எனப்படுகின்றது இது பஞ்சாங்கத்தில் சாந்திரமான அமாவாசை திதி என்றும் ஸெளரமான அதிக திதி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதாவது சந்திரனின் கணக்குப்படி அமாவாசை திதி என்றும் சூரியனின் கணக்குப்படி பார்த்தால் இது அதிக திதி என்றும் பொருள் படும். ஏனென்றால் 29.5 நாட்களுக்கு ஒரு முறை அமாவாசை திதி நிகழும் என்பது நியதி. இது அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மட்டும்தான் பொருந்துமா என்றால் அப்படி இல்லை, எல்லா திதிகளுக்கும் பொருந்தும்.
எனவே இவ்வாண்டு ஆடி அமாவாசை என்பது ஆடி 31 (16-08-2023)ம் தேதி அன்று தான் நிகழவிருக்கின்றது. முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை சிறப்பு தர்ப்பணம் செய்ய விரும்புவர்கள் இந்த தேதியில் தான் செய்ய வேண்டும்.
சரி, ஆடி முதலாம் தேதி வரக்கூடிய அமாவாசையில் விரதம் இருக்கலாமா? கூடாதா? என்ற ஐயம் சிலருக்கு எழக்கூடும். விரதம் இருக்க நினைப்பவர்கள் தாராளமாக விரதம் இருக்கலாம். அது ஒன்றும் தவறானது அல்ல. வழக்கமாக அமாவாசை தோறும் விரதம் இருப்பவர்களும் முதல் அமாவாசையில் விரதம் இருக்கலாம்.
ஜோதிட கலாமணி கே. ராதா கிருஷ்ணன்.
எட்டயபுரம்.
- இந்தியாவில் 20 முதல் 39 சதவீதம் பேர் அசைவ உணவுகளை உண்பதில்லை என தெரிய வந்துள்ளது.
- ஆஸ்திரேலியாவில் 12.1 சதவீதம் பேரும், ரஷியாவில் 1 சதவீதம் பேரும் சைவம் உண்பது தெரியவந்துள்ளது.
உலகில் சைவம் மற்றும் அசைவ பிரியர்கள் உள்ள நாடுகள் குறித்து, வெளியான பட்டியலில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
உலகளவில் சைவம், அசைவம் என இரு வகையான உணவு நுகர்வு முறைகள் மக்களால் பின்பற்றப்படுகின்றன.
உலகளவில் சைவ பிரியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், நம் நாடு முதலிடம் பிடித்துள்ளது.
பல்வேறு தளங்களில், புள்ளி விபரங்கள் வெளியிடும் உலக அளவிலான அமைப்பு வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் இந்தியாவில் 20 முதல் 39 சதவீதம் பேர் அசைவ உணவுகளை உண்பதில்லை என தெரிய வந்துள்ளது.
அடுத்தபடியாக, மெக்சிகோவில் 19 சதவீதம் பேர் சைவம் உண்பவர்களாகவும், தைவானில் 14 சதவீதம் பேரும், இஸ்ரேலில் 13 சதவீதம் பேரும் சைவ உணவுகளை உண்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆஸ்திரேலியாவில் 12.1 சதவீதம் பேரும், ரஷியாவில் 1 சதவீதம் பேரும் சைவம் உண்பது தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக 99 சதவீத அசைவ உணவு சாப்பிடுபவர்களுடன், ரஷியா அசைவ உணவு பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளது.
தவிர அமெரிக்கா மற்றும் சீனாவில் 5 சதவீதம் பேர் அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை எனவும், ஜப்பானில் 9 சதவீதம் பேர், இங்கிலாந்தில் 10 சதவீத மக்கள் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை எனவும் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சீதாராமன்
- சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சுரத்தில் சிறந்த திருமால் கோவில் ஒன்றுண்டு. திருவிண்ணகர் என்பது அதன் பழம்பெயர்.
- உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்ற கருத்தும் பரவலாயிற்று.
தெய்வம் படும் பாடு தெய்வத்துக்குத் தான் தெரியும். அடியார் கையில் அகப்பட்டு எத்தனை அடியும், அவதியும் பட்டிருக்கிறது தெய்வம்..!
எத்தனை ஏச்சும் பேச்சும் கேட்டிருக்கிறது..!
தொண்டர் என்று பேர் படைத்த மிண்டர்களுள் ஒருவன் தெய்வத்தைக் கல்லால் எறிந்தான்;
மற்றொருவன் பிரம்பால் அடித்தான்;
பித்தன் என்று ஏசினான், இன்னொரு தொண்டன்.
"தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே".
கும்பகோணத்திற்கு அருகே சத்தி முற்றம் என்ற சிற்றூர் உள்ளது. அங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது. "சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே" என்று பாடினார் திருநாவுக்கரசர். நாளடைவில் சத்தி முற்றம் என்ற பெயர் 'சத்திமுத்தம்' ஆயிற்று.
அதிலிருந்து உருவெடுத்தது ஒரு காதற்கதை! சத்தியாகிய உமாதேவி ஈசனைக் காதலித்து முத்தமிட்ட இடம் அதுவே என்ற முடிவு கட்டினர் சிவனடியார். அதற்கு அடையாளமாகச் சத்தி சிவனை முத்தமிடும் கோலத்தில் அமைந்த திருவுருவமும் அவ்வாலயத்தில் நிறுவப்பெற்றது. அடியார்மீது வைத்த கருணையால் சத்தியின் முத்தத்தையும் சகித்துக் கொண்டு அந்த ஆலயத்துள் அமர்ந்திருக்கின்றார் ஈசன்.
சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சுரத்தில் சிறந்த திருமால் கோவில் ஒன்றுண்டு. திருவிண்ணகர் என்பது அதன் பழம்பெயர். ஆழ்வார்களுள் நால்வர் அத்திருப்பதியைப் பாடியருளினர்.
"திருவிண்ணகர் சேர்ந்த அப்பன், தன் ஒப்பார் இல்லப்பன்" என்று நம்மாழ்வார் பாடிப் போற்றினார். அவர் திருவாக்கின் அடியாக 'ஒப்பிலியப்பன்' என்ற திருநாமம் அப்பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது 'உப்பிலியப்பன்' என மருவிற்று. உப்பிலியப்பன் கோவில் என்ற பெயரும் அவ்விண்ணகருக்கு அமைந்தது.
உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்ற கருத்தும் பரவலாயிற்று. அதன் விளைவாக இன்றும் உப்பில்லாத திருவமுதை அப்பெருமாளுக்கு அளிக்கின்றார்கள். ஒப்புவமையில்லாத் தலைவன், அடியார் தரும் உப்பில்லாத உணவையும் உட்கொண்டு, தியாகத்தின் திருவுருவாக அத்திருப்பதியிலே காட்சி தருகின்றார்..!
-ரா.பி.சேதுப்பிள்ளை
- சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள்.
- கிட்டத்தட்ட 7600 வீடுகளில் எல்லா வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.
கிராமங்கள் என்றாலே ஏழ்மை நிலையில் இருக்கும்.. குடிசைகளும், வேட்டி துண்டுடன் இருக்கும் மனிதர்களே நம் நினைவுக்கு வருவார்கள். வசதிகளும், வாய்ப்புகளும் நகரங்களில் தான் இருக்கும் என்பது நம் பொதுவான எண்ணம்.
இந்த எண்ணத்தை புரட்டிப் போடுகிறது குஜராத்தில் உள்ள மதாபர் என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அத்தனை பேரும் பணக்காரர்களாக இருக்கின்றனர். குட்ச் மாவட்டத்தில் மதாபர் கிராமம் அமைந்துள்ளது.
குட்ச் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் இவர்களை மேஸ்திரிஸ் என்று அழைப்பார்கள். இந்த மேஸ்திரிஸ் இப்போது ஒரு இனமாகவே மாறிவிட்டது. குட்ச் மாவட்டத்தில் இந்த மேஸ்திரி இனத்திற்கு என்று மொத்தம் 18 கிராமங்கள் உள்ளன.
இந்த 18 கிராம மக்கள் முழுக்க கட்டுமான பணியாளர்கள், மேஸ்திரிகள், தொழிலாளர்கள், சிவில் எஞ்ஜினியர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். குஜராத்திலும், அண்டை மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் கட்டுமான பணிகளை முன்னின்று நடத்துவது இந்த 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் தான். அதில் ஒரு கிராமம் தான் இந்த மதாபர் கிராமம். இந்த கிராமம் தான் உலகிலே பணக்கார கிராமமாக பார்க்கப்படுகிறது.
இந்த கிராமத்தில் மட்டும் மொத்தம் 17 வங்கிகள் உள்ளது. முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில், மொத்தம் 7600 குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் 447 பேருக்கு ஒரு வங்கி என மொத்தம் 17 வங்கிகள் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த வங்கிகளில் மொத்தம் இந்த கிராம மக்கள் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்து வைத்துள்ளனர்.
சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள். இந்த தொகை ஒரு சராசரியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு சில குடும்பங்களில் சேமிப்பு தொகை குறைவாகவும், ஒருசில குடும்பங்களில் சேமிப்புத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் உள்ளது. வங்கியில் இருக்கும் சேமிப்பின் அடிப்படையில் இந்த கிராமம் தான் உலகின் நம்பர் ஒன் கிராமம் என்று கூறப்படுகிறது.
இந்த பணத்தை இவர்கள் உள்ளூர் கட்டுமான பணிகள் மூலம் மட்டும் சம்பாதிக்கவில்லை. இந்த கிராமத்தில் முந்தைய தலைமுறை மக்கள் எல்லோரும் உள்ளூர் கட்டுமான பணிகளை செய்த போதிலும், தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறார்கள்.
அமெரிக்கா, லண்டன், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமான பணிகளை இந்த கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கொள்கிறார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தை தங்கள் கிராமத்திற்கு அனுப்புகிறார்கள். வெளிநாடுகளில் நன்றாக சம்பாதித்துவிட்டு, அதை தங்கள் கிராமத்து வங்கியிலேயே சேமித்துவிட்டு சில ஆண்டுகளுக்கு பின் திரும்பி ஊருக்கு வந்து கட்டுமான நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 7600 வீடுகளில் எல்லா வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் டாலர்கள்தான் இவர்கள் வங்கிகளில் லட்சங்களில் பணம் சேர்க்க காரணம்.
கட்டுமான துறை போக விவசாயத்திலும் இந்த கிராமம் நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து மூன்று போக விளைச்சலை மேற்கொண்டு வரும் இந்த கிராமம் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு கோதுமை, அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது.
-தஞ்சை ராஜப்பா
- அமெரிக்க அப்பல்லோ விண்கலத்தில் பைலட்டாக பணிபுரிந்தவர் ஆல்ட்ரின்.
- கோ பைலட்டாக சென்றவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங்.
"ஆல்ட்ரின்... இவரைப் பற்றித் தெரியுமா?"
என அந்த கல்லூரி ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்.
"தெரியாது சார்!"
"நீல் ஆம்ஸ்ட்ராங் தெரியுமா?"
"ஓ தெரியுமே, நிலாவில் முதல் காலடியை வைத்தவர்" என்றனர் கோரஸாக.
"நிலவில் முதலடியை எடுத்து வைத்திருக்க வேண்டியவர் இந்த ஆல்ட்ரின் தான்" என்று பேச்சைத் தொடங்கினார் அந்த ஆசிரியர்.
அமெரிக்க அப்பல்லோ விண்கலத்தில் பைலட்டாக பணிபுரிந்தவர் ஆல்ட்ரின். இவருக்கு கோ பைலட்டாக சென்றவர் தான் நீல் ஆம்ஸ்ட்ராங். அந்த விண்கலம் நிலவில் இறங்கியதும், சற்று நேரத்தில் நாசாவில் இருந்து,
"பைலட் ஃபர்ஸ்ட்!" என்று கட்டளை வந்தது.
ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் ஒரு சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா, அல்லது வலது காலை எடுத்து வைப்பதா என்றல்ல. நிலவில் கால் பதிக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துக்கொண்டு போய்விட்டால்... என்பது போன்ற சில நொடிகளே ஆன... ஏதோ ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தினார்.
அதற்குள் நாசாவிலிருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டு விட்டது.
"கோ பைலட் நெக்ஸ்ட்!"
கட்டளை வந்த அடுத்த நொடியே நீல் ஆம்ஸ்ட்ராங் ஈகிள் என்ற அந்த கலத்திலிருந்து இறங்க ஆரம்பித்து விட்டார். கடைசி படியிலிருந்து தனது இடது காலை நிலவின் தரையில் அழுத்தமாக ஊன்றினார்.
அந்த முதல் காலடி அறிவியல் சரித்திரத்தில் அழியாத இடம் பெற்று விட்டது.
தகுதியும் திறமையும் இருந்தும் கூட தயக்கத்தின் தாமதத்தால் ஆல்ட்ரினை யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.
உலகில் எல்லா மனிதர்களும் வெற்றியை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் வந்து வெற்றிப் படிகளில் நிற்பவர்களைத் தான் இந்த உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
'தயக்கமற்ற பேரார்வம் இன்றி எந்தப் பெரிய சாதனையையும் செய்ய முடியாது.'
- பரதன் வெங்கட்
- டென்ஷனான விவசாயிகள், மனுசனுக்கு எந்த பாட்டு பிடிக்கும் என்பதை கண்டுபிடிப்பதே கஸ்டமா இருக்கு.
- மாட்டுக்கு என்ன பாட்டு பிடிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என சொல்லி பாட்டுபோடுவதை நிறுத்திவிட்டார்கள்.
பாட்டு பாடினால் மாடுகள் பால் கறக்கும் என்பது வில்லேஜ் விஞ்ஞானம். அது உண்மை என விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிலாந்தின் லெய்சிஎஸ்டர் பல்கலைகழகத்தில் பாட்டுபோட்டு மாடுகளிடம் பால் கறந்து ஒரு பெரிய சோதனை நடத்தப்பட்டது. அப்போது நிமிடத்துக்கு நூறு பீட்களுக்கு (100 beats per minute- BPM) குறைவாக இருக்கும் பாடல்களை ஒலிக்கவிட்டால் மாடுகள் 3% கூடுதலாக பால் கறக்கும் என கண்டுபிடித்தார்கள்.
சாம்பிளுக்கு சொல்லவேண்டுமெனில் ஜீன்ஸ் படத்தில் வரும் "பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்" பாடல் 104 பீட்ஸ். அதைவிட குறைவான பீட்ஸ் வரும் பாடலை தான் மாடுகள் விரும்பி கேட்கும்.
அப்புறம் என்ன? மாட்டுப்பண்ணைகளில் மெல்லிசை பாடல்களை ஒலிக்கவிட்டு பால்வளத்தை பெருக்கலாமே?
அதில் ஒரு சிக்கல் இருக்கு. மாடுகளும் பாடல்கள் விசயத்தில் மனிதர்கள் மாதிரிதானாம். சில பாடல்கள் அவற்றுக்கு பிடிக்காதாம். அவற்றை போட்டால் பால்வரத்து குறைந்துவிடுகிறது.
ஒரு பெரிய ஆட்டுப்பண்ணையில் "ஆல்வின் அன்ட் சிப்மன்க்ஸ்" பாடலை போட்டவுடன் 2000 ஆடுகள் ஒட்டுமொத்தமாக பால் கொடுப்பதை நிறுத்திவிட்டன.
டென்ஷனான விவசாயிகள், மனுசனுக்கு எந்த பாட்டு பிடிக்கும் என்பதை கண்டுபிடிப்பதே கஸ்டமா இருக்கு, இதில் மாட்டுக்கு என்ன பாட்டு பிடிக்கும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது என சொல்லி பாட்டுபோடுவதை நிறுத்திவிட்டார்கள்.
"செண்பகமே, செண்பகமே" பாடலின் பீட்ஸ் (BPM) எத்தனை தெரியுமா? 94
அதாவது மாடுகளுக்கு பிடித்த பாடல் அது.
- நியாண்டர் செல்வன்
- ஸ்ரீ ரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.
- தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.
ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு அவைகளை பற்றி பார்ப்போம்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
உற்சவர் அல்லாமல் மூலவரே வீதிவலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் தான்.
சிதம்பரம் கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டும் தான்.
எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள்.
நவம்பரில் கோவிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோவில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறு மாதம் எரிந்துகொண்டே இருக்கும்.
கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் 'பஞ்சவர்ணேஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீறுகுகை.
தருமபுரியிலுள்ள பாப்பாரப்பட்டியில் இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.
ஸ்ரீ ரங்கத்தில், ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை.
தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் கலைந்து விடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.
-ஷிவானி
- பச்சை குத்துவதால் அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
அக்காலத்தில் பச்சை குத்துவது என்றால் பெண்களுக்கு தான் முதல் இடம். ஏன் என்றால் அவர்கள் தான் பிள்ளைகளை பெற்று தருபவர்கள். அவர்கள் ஆரோக்கியம் தான் ஒரு குடும்பத்தின் அரண். ஆதலால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தம் உடலில் இருந்து மட்டும் அல்லாது பிரபஞ்சத்திடமும் இருந்து அவர்கள் சக்தி பெற வேண்டியது ஆயிற்று. ஆகவேதான் பச்சை குத்திக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது.
பச்சை குத்துதல் என்றாலும் சிலருக்கு பச்சை, கருப்பு கலந்த பச்சையாக மாறும். ஒரு சிலருக்கு கருப்பு நிறத்தில் மாறும். அவரவர் தேகத்தை பொறுத்து நிறம் வேறுபடும். ஆனாலும் பிராதமாக இருப்பது கருப்பு நிறமே. கருப்பு என்பது பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் சக்தி கொண்டது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். பிரபஞ்ச ஆற்றலை சரீரத்தில் பிரவேசிக்க செய்ய நம் முன்னோர்களால் வகுத்த ஓர் அருமையான யுக்தி என்றே பச்சைக் குத்துவதை சொல்லலாம்.
மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைத்து அதனை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கி நீர் கலந்து அதனை பசையாக செய்து, பின் கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி விடவேண்டும். இது எந்நிலையிலும் அழியாது.
பச்சை குத்துவதால் அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
தற்போது டாட்டூ என்ற பெயரில் பச்சை குத்துகிறார்கள். அதில் ரசாயனம் கலந்துள்ளதால் பாதிப்பானதே. மெகந்தி என்று பெண்கள் விசேஷங்களுக்கு போடுவதும் ஆபத்தான செயற்கை ரசாயனமே.
-ஜீ. சரவண குமார்
- "…என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...?"என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
- விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.
பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா, என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார் ஜீவா.
"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"என்று கேட்டு ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
காமராஜரை, உட்கார வைக்க, ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.
நீ அடிக்கல் நாட்டிய, பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன் என்றார் காமராஜர்.
காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும் என்று ஜீவா மறுக்க,
அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப்போக, கிளம்பு போகலாம் என்று அழைத்தார், காமராஜர்.
அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் என்று அனுப்பி வைத்தார்.
கண்டிப்பாக வரணும் என்றார் காமராஜர்.
விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.
"…என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...?"என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணு தாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை, காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான்..
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்..
ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்...? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார்.
உடனே காமராஜர், ரொம்ப நல்ல யோசனை. ஆனா, நான் கொடுத்தா, அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விடமாட்டான்.
அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, "வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்...
ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. அவன் முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.
காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.
நோய் வாய்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...என்பது தான்.
இனி எங்கே காண முடியும்..? இது போன்ற தலைவர்களை..
-எச்.கே. சாம்
- மருது பாண்டியர் விழித்து எழுகையில் சூரியன் உச்சியில் இருந்தான்.
- ‘அம்மா!’ என்று கிழவியை அழைத்தார் மருது பாண்டியர்.
"நான் இராத்திரி முழுவதும் பிரயாணம் செய்து தூக்கமேயில்லாமல் கஷ்டமடைந்தேன். ஆகையால் உண்ட பிறகு மறைவாக ஓரிடத்தில் இந்தக் குதிரையைக் கட்டிவிட்டு நான் படுத்துத் தூங்க வேண்டும்; அதற்கு இடம் கிடைக்குமா?" என்றார் மருது பாண்டியர்.
"இதுதானா பெரிது! இந்த வீட்டிற்குப் பின்னே ஒரு கொட்டகை இருக்கிறது. அதன் பக்கத்தில் குதிரையை நீ கட்டிவிட்டுப் படுத்துத் தூங்கலாம். குதிரைக்கு ஏதாவது தீனி கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவள் அன்போடு பழையமுதும் பழங்கறியும் மருது பாண்டியருக்கு இட்டாள். அவற்றை உண்ட அவரது பசி அடங்கியது. அந்த உணவு ராஜ் போஜனத்திலும் சிறந்ததாக அவருக்கு இருந்தது.
உண்ட பிறகு அந்தக் கிழவி கொடுத்த ஓலைப் பாயொன்றை விரித்துக் குதிரைச் சேணத்தையே தலையணையாக வைத்துக்கொண்டு அக்கொட்டகையில் படுத்துக் கொண்டார். குதிரைக்காரனும் உண்டு விட்டு ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டான்.
மருது பாண்டியர் விழித்து எழுகையில் சூரியன் உச்சியில் இருந்தான். அவர் மனத்தில் நன்றியறிவு பொங்கி வழிந்தது. தமக்கு அன்போடு உணவு தந்த அந்தக் கிழவிக்குரிய கைம்மாறாக இந்த உலகத்தைக் கொடுத்தாலும் ஈடாகாதென்று அவர் கருதினார்.
'அம்மா!' என்று கிழவியை அழைத்தார் மருது பாண்டியர். கிழவி வந்தாள். "உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? இந்தக் குழந்தைகள் யார்?" என்று அவர் கேட்க, "அயலூருக்கு ஒரு விசேஷத்துக்காக என்னுடைய பிள்ளைகள் போயிருக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய குழந்தைகள்" என்றாள் கிழவி.
"உங்கள் வீட்டில் ஏடு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்" என்று பாண்டியர் சொல்லவே கிழவி, "இங்கே ஏடேது? எழுத்தாணியேது? அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்களோ தெரியாதப்பா" என்றாள்.
உடனே அவர் குதிரைக்காரனை அழைத்து அந்த வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனையோலையையும், பக்கத்திலிருந்த வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டு வரச்சொன்னார். அவன் கொணர்ந்து கொடுத்தான். அந்த முள்ளைக் கொண்டு அவ்வோலையில் அந்தக் கிராமம் அக்கிழவிக்குச் சுரோத்திரியமாக விடப்பட்டதென்று எழுதிக் கையெழுத்திட்டார். அந்தத் தர்ம சாஸனத்தைக் கிழவியின் கையிலே கொடுத்து, "அம்மா! சிவகங்கை சம்ஸ்தான அதிகாரிகளிடம், இதை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு ஏதாவது அனுகூலம் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு அவர் குதிரையின் மேலேறிக் குதிரைக்காரனையும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்.
கிழவி தன் குமாரர்கள் ஊரிலிருந்து வந்த பிறகு அவர்களைக் கொண்டு அவ்வோலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் காட்ட எண்ணினாள். ஆனால் சிலநாள் கழித்து அந்த சம்ஸ்தானத்தை விரோதிகள் கைப்பற்றிக் கொண்டதாக அறிந்து வருந்தினாள்.
மருது பாண்டியரை அப்பால் பகைவர்கள் பிடித்துச் சிறையில் வைத்தனர். சிலகாலம் சென்ற பிறகு அவருடைய அந்திய காலத்தில், "உம்முடைய விருப்பம் யாது?" என்று கேட்டார்கள். "நான் சுரோத்திரியமாக யார் யாருக்கு எந்த எந்தக் கிராமத்தை அளித்தேனோ, எந்த எந்தப் பொருளை வழங்கினேனோ அவைகளெல்லாம் அவரவர்களுக்கு உரியனவாகவே இருக்கும்படி செய்யவேண்டும்; இதுதான் என் பிரார்த்தனை; வேறு ஒன்றும் இல்லை" என்று அவர் வேண்டிக் கொண்டார்.
நன்றியறிவின் மிகுதியால் எழுந்த அவருடைய இறுதி விருப்பத்தை விரோதிகள் அங்கீகரித்து நிறைவேற்றினார்கள். மருது பாண்டியர் வழங்கிய பொருள்கள் உரியவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன என்ற செய்தியை அறிந்த கிழவி, தன்னிடமுள்ள ஓலையைக் காட்டினால் ஏதாவது கிடைக்கலாமென்ற நம்பிக்கையினால் அதனை அனுப்புவித்தாள்; தான் இருந்த கிராமத்தைச் சுரோத்திரியமாகப் பெற்றாள். (இக்கிராமத்தின் பெயர் இப்பொழுது 'பழஞ்சோற்றுக் குரு காதனேந்தல்' என்று வழங்குகின்ற தென்பர்.)
தன் வீட்டிலே பழையது உண்ட வீரர் மருது பாண்டியரென்பதை அப்பொழுது தான் அவள் உணர்ந்தாள். முள்ளாலெழுதிய ஓலைக்கு அவ்வளவு மதிப்பிருந்ததைக் கண்டு அவள் வியந்தாள்; மருது பாண்டியருக்கு இருந்த நன்றியறிவை நினைந்து உருகினாள்.
(உ.வே.சாமிநாதய்யரின் நான் கண்டதும் கேட்டதும் (1936) நூலில் இருந்து)
-முத்துக்குமார் சங்கரன்
- கொழுப்பு தேவையென்றால் உடலே அதனை உருவாக்கிக் கொள்ளும்.
- கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டால் மட்டும்தான் கொழுப்புகள் உருவாகும் என்பது கற்பனைதான்.
இதயத்தில் அல்லது ரத்தத்தில் கொழுப்பு உருவாவதற்கோ அல்லது அடைப்பு ஏற்படுவதற்கோ கொழுப்பு அதிகமுள்ள உணவுகளே காரணம் என்று மருத்துவ விஞ்ஞானிகளும், பன்னாட்டு மருந்து நிறுவனத்தினரும் கூறிவருகிறார்கள்.
ஆட்டினுடைய உடல் அமைப்பில் இயல்பாகவே கொழுப்பு அதிகமாக இருக்கும். உடலில் எந்த அளவு தசை இருக்கிறதோ, அதே அளவு கொழுப்பும் இருக்கும். இவ்வளவு கொழுப்பு உருவாவதற்கு ஆடு எவ்வளவு கொழுப்பை உணவாக உட்கொண்டிருக்க வேண்டும்?
ஆனால், ஆடு சுத்த சைவம். சைவ உணவுகளை மட்டும் அதிலும் இயற்கையான, சமைக்காத உணவுகளை மட்டுமே ஆடுகள் சாப்பிடுகின்றன. ஆனால் இவ்வளவு கொழுப்பு ஆட்டிற்கு எங்கிருந்து வந்தது?
கொழுப்பு தேவையென்றால் உடலே அதனை உருவாக்கிக் கொள்ளும். கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டால் மட்டும்தான் கொழுப்புகள் உருவாகும் என்பது கற்பனைதான்.
நாம் உண்ணும் முறைதான் நோய்களை உருவாக்குகிறது. பசியில்லாத நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு சைவமாக இருந்தால் கூட, அதிலிருந்து கொழுப்பு உருவாக வாய்ப்பிருக்கிறது. பசியோடு இருக்கும் நேரத்தில் நீங்கள் சாப்பிடும் உணவு அசைவமாக, கொழுப்பு அதிகம் இருக்கும் உணவாக இருந்தாலும், அதிலிருந்து உடலிற்குத் தேவையில்லாத கொழுப்பு உருவாகாது.
அதே போல, கொழுப்பு என்றவுடன் நமக்கு ஒருவித பயம் ஏற்படுகிறது. உண்மையில் கொழுப்பு உடலிற்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. நம் உடலின் உள்ளுறுப்புகளின் முழுமையான உருவாக்கத்திற்கு கொழுப்பு அவசியம். நம் உடலின் ஒவ்வொரு செல்லும் கொழுப்பால் ஆன வெளிச்சுவரைக் கொண்டிருக்கிறது. கொழுப்பைக் குறைக்கிறேன் பேர்வழி என கடுமையான டயட்டில் இருப்பது, காம்பவுண்ட் சுவரே இல்லாமல் வீடு கட்டுவது போன்ற பாதுகாப்பற்ற நிலைக்கு நம் உடலை ஆளாக்கிவிடும்.
-உமர் பாரூக்






