என் மலர்tooltip icon

    கதம்பம்

    ஒரு கிராமம்... 17 வங்கி
    X

    ஒரு கிராமம்... 17 வங்கி

    • சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள்.
    • கிட்டத்தட்ட 7600 வீடுகளில் எல்லா வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

    கிராமங்கள் என்றாலே ஏழ்மை நிலையில் இருக்கும்.. குடிசைகளும், வேட்டி துண்டுடன் இருக்கும் மனிதர்களே நம் நினைவுக்கு வருவார்கள். வசதிகளும், வாய்ப்புகளும் நகரங்களில் தான் இருக்கும் என்பது நம் பொதுவான எண்ணம்.

    இந்த எண்ணத்தை புரட்டிப் போடுகிறது குஜராத்தில் உள்ள மதாபர் என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அத்தனை பேரும் பணக்காரர்களாக இருக்கின்றனர். குட்ச் மாவட்டத்தில் மதாபர் கிராமம் அமைந்துள்ளது.

    குட்ச் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் இவர்களை மேஸ்திரிஸ் என்று அழைப்பார்கள். இந்த மேஸ்திரிஸ் இப்போது ஒரு இனமாகவே மாறிவிட்டது. குட்ச் மாவட்டத்தில் இந்த மேஸ்திரி இனத்திற்கு என்று மொத்தம் 18 கிராமங்கள் உள்ளன.

    இந்த 18 கிராம மக்கள் முழுக்க கட்டுமான பணியாளர்கள், மேஸ்திரிகள், தொழிலாளர்கள், சிவில் எஞ்ஜினியர்கள் அதிகம் காணப்படுகிறார்கள். குஜராத்திலும், அண்டை மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் கட்டுமான பணிகளை முன்னின்று நடத்துவது இந்த 18 கிராமங்களை சேர்ந்தவர்கள் தான். அதில் ஒரு கிராமம் தான் இந்த மதாபர் கிராமம். இந்த கிராமம் தான் உலகிலே பணக்கார கிராமமாக பார்க்கப்படுகிறது.

    இந்த கிராமத்தில் மட்டும் மொத்தம் 17 வங்கிகள் உள்ளது. முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில், மொத்தம் 7600 குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் 447 பேருக்கு ஒரு வங்கி என மொத்தம் 17 வங்கிகள் இந்த கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த வங்கிகளில் மொத்தம் இந்த கிராம மக்கள் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்து வைத்துள்ளனர்.

    சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள். இந்த தொகை ஒரு சராசரியாகவே பார்க்கப்படுகிறது. ஒரு சில குடும்பங்களில் சேமிப்பு தொகை குறைவாகவும், ஒருசில குடும்பங்களில் சேமிப்புத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் உள்ளது. வங்கியில் இருக்கும் சேமிப்பின் அடிப்படையில் இந்த கிராமம் தான் உலகின் நம்பர் ஒன் கிராமம் என்று கூறப்படுகிறது.

    இந்த பணத்தை இவர்கள் உள்ளூர் கட்டுமான பணிகள் மூலம் மட்டும் சம்பாதிக்கவில்லை. இந்த கிராமத்தில் முந்தைய தலைமுறை மக்கள் எல்லோரும் உள்ளூர் கட்டுமான பணிகளை செய்த போதிலும், தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    அமெரிக்கா, லண்டன், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமான பணிகளை இந்த கிராமத்தில் இருப்பவர்கள் மேற்கொள்கிறார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தை தங்கள் கிராமத்திற்கு அனுப்புகிறார்கள். வெளிநாடுகளில் நன்றாக சம்பாதித்துவிட்டு, அதை தங்கள் கிராமத்து வங்கியிலேயே சேமித்துவிட்டு சில ஆண்டுகளுக்கு பின் திரும்பி ஊருக்கு வந்து கட்டுமான நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

    கிட்டத்தட்ட 7600 வீடுகளில் எல்லா வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் டாலர்கள்தான் இவர்கள் வங்கிகளில் லட்சங்களில் பணம் சேர்க்க காரணம்.

    கட்டுமான துறை போக விவசாயத்திலும் இந்த கிராமம் நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து மூன்று போக விளைச்சலை மேற்கொண்டு வரும் இந்த கிராமம் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு கோதுமை, அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது.

    -தஞ்சை ராஜப்பா

    Next Story
    ×