என் மலர்tooltip icon

    கதம்பம்

    பழையதுக்கு கிடைத்த பரிசு...
    X

    பழையதுக்கு கிடைத்த பரிசு...

    • மருது பாண்டியர் விழித்து எழுகையில் சூரியன் உச்சியில் இருந்தான்.
    • ‘அம்மா!’ என்று கிழவியை அழைத்தார் மருது பாண்டியர்.

    "நான் இராத்திரி முழுவதும் பிரயாணம் செய்து தூக்கமேயில்லாமல் கஷ்டமடைந்தேன். ஆகையால் உண்ட பிறகு மறைவாக ஓரிடத்தில் இந்தக் குதிரையைக் கட்டிவிட்டு நான் படுத்துத் தூங்க வேண்டும்; அதற்கு இடம் கிடைக்குமா?" என்றார் மருது பாண்டியர்.

    "இதுதானா பெரிது! இந்த வீட்டிற்குப் பின்னே ஒரு கொட்டகை இருக்கிறது. அதன் பக்கத்தில் குதிரையை நீ கட்டிவிட்டுப் படுத்துத் தூங்கலாம். குதிரைக்கு ஏதாவது தீனி கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவள் அன்போடு பழையமுதும் பழங்கறியும் மருது பாண்டியருக்கு இட்டாள். அவற்றை உண்ட அவரது பசி அடங்கியது. அந்த உணவு ராஜ் போஜனத்திலும் சிறந்ததாக அவருக்கு இருந்தது.

    உண்ட பிறகு அந்தக் கிழவி கொடுத்த ஓலைப் பாயொன்றை விரித்துக் குதிரைச் சேணத்தையே தலையணையாக வைத்துக்கொண்டு அக்கொட்டகையில் படுத்துக் கொண்டார். குதிரைக்காரனும் உண்டு விட்டு ஒரு பக்கத்தில் படுத்துக் கொண்டான்.

    மருது பாண்டியர் விழித்து எழுகையில் சூரியன் உச்சியில் இருந்தான். அவர் மனத்தில் நன்றியறிவு பொங்கி வழிந்தது. தமக்கு அன்போடு உணவு தந்த அந்தக் கிழவிக்குரிய கைம்மாறாக இந்த உலகத்தைக் கொடுத்தாலும் ஈடாகாதென்று அவர் கருதினார்.

    'அம்மா!' என்று கிழவியை அழைத்தார் மருது பாண்டியர். கிழவி வந்தாள். "உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? இந்தக் குழந்தைகள் யார்?" என்று அவர் கேட்க, "அயலூருக்கு ஒரு விசேஷத்துக்காக என்னுடைய பிள்ளைகள் போயிருக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய குழந்தைகள்" என்றாள் கிழவி.

    "உங்கள் வீட்டில் ஏடு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்" என்று பாண்டியர் சொல்லவே கிழவி, "இங்கே ஏடேது? எழுத்தாணியேது? அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்களோ தெரியாதப்பா" என்றாள்.

    உடனே அவர் குதிரைக்காரனை அழைத்து அந்த வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனையோலையையும், பக்கத்திலிருந்த வேலியிலிருந்து ஒரு முள்ளையும் கொண்டு வரச்சொன்னார். அவன் கொணர்ந்து கொடுத்தான். அந்த முள்ளைக் கொண்டு அவ்வோலையில் அந்தக் கிராமம் அக்கிழவிக்குச் சுரோத்திரியமாக விடப்பட்டதென்று எழுதிக் கையெழுத்திட்டார். அந்தத் தர்ம சாஸனத்தைக் கிழவியின் கையிலே கொடுத்து, "அம்மா! சிவகங்கை சம்ஸ்தான அதிகாரிகளிடம், இதை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு ஏதாவது அனுகூலம் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு அவர் குதிரையின் மேலேறிக் குதிரைக்காரனையும் அழைத்துக் கொண்டு போய்விட்டார்.

    கிழவி தன் குமாரர்கள் ஊரிலிருந்து வந்த பிறகு அவர்களைக் கொண்டு அவ்வோலையைச் சிவகங்கை அதிகாரிகளிடம் காட்ட எண்ணினாள். ஆனால் சிலநாள் கழித்து அந்த சம்ஸ்தானத்தை விரோதிகள் கைப்பற்றிக் கொண்டதாக அறிந்து வருந்தினாள்.

    மருது பாண்டியரை அப்பால் பகைவர்கள் பிடித்துச் சிறையில் வைத்தனர். சிலகாலம் சென்ற பிறகு அவருடைய அந்திய காலத்தில், "உம்முடைய விருப்பம் யாது?" என்று கேட்டார்கள். "நான் சுரோத்திரியமாக யார் யாருக்கு எந்த எந்தக் கிராமத்தை அளித்தேனோ, எந்த எந்தப் பொருளை வழங்கினேனோ அவைகளெல்லாம் அவரவர்களுக்கு உரியனவாகவே இருக்கும்படி செய்யவேண்டும்; இதுதான் என் பிரார்த்தனை; வேறு ஒன்றும் இல்லை" என்று அவர் வேண்டிக் கொண்டார்.

    நன்றியறிவின் மிகுதியால் எழுந்த அவருடைய இறுதி விருப்பத்தை விரோதிகள் அங்கீகரித்து நிறைவேற்றினார்கள். மருது பாண்டியர் வழங்கிய பொருள்கள் உரியவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன என்ற செய்தியை அறிந்த கிழவி, தன்னிடமுள்ள ஓலையைக் காட்டினால் ஏதாவது கிடைக்கலாமென்ற நம்பிக்கையினால் அதனை அனுப்புவித்தாள்; தான் இருந்த கிராமத்தைச் சுரோத்திரியமாகப் பெற்றாள். (இக்கிராமத்தின் பெயர் இப்பொழுது 'பழஞ்சோற்றுக் குரு காதனேந்தல்' என்று வழங்குகின்ற தென்பர்.)

    தன் வீட்டிலே பழையது உண்ட வீரர் மருது பாண்டியரென்பதை அப்பொழுது தான் அவள் உணர்ந்தாள். முள்ளாலெழுதிய ஓலைக்கு அவ்வளவு மதிப்பிருந்ததைக் கண்டு அவள் வியந்தாள்; மருது பாண்டியருக்கு இருந்த நன்றியறிவை நினைந்து உருகினாள்.

    (உ.வே.சாமிநாதய்யரின் நான் கண்டதும் கேட்டதும் (1936) நூலில் இருந்து)

    -முத்துக்குமார் சங்கரன்

    Next Story
    ×