என் மலர்
மற்றவை
- வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது.
- ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம்.
அது டாட்டாவின் அலுவலகம்.
டாட்டா எதேச்சையாக கேமராவில் ஒரு நபரை பார்க்கிறார். உதவியாளரை அழைத்து... யார் இந்த பையன் ஏன் உட்கார்ந்திருக்கிறார்? என கேட்கிறார்.
அவர் உங்கள் அப்பாயிண்மெண்ட் கேட்டு ஒரு மாதமாக தினமும் வந்து கொண்டிருக்கிறார், என்றார் உதவியாளர்.
அப்படியா அடுத்த வாரம் திங்கள் காலை 9-9.15 வரை.. கால்மணி நேரம் அப்பாயிண்ட்மெண்ட் கூறி விடுங்கள் என்கிறார்.
டாட்டாவுக்கு ஒவ்வொரு நொடியும் பணம். நேரத்தை வீணாக்க மாட்டார். அந்த இளைஞனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தெரிவிக்கப்பட்டது.
கொடுத்தது கால் மணி நேரம். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுவே எனக்கு அதிகமான நேரம் என்ற இளைஞனை ஆச்சர்யமாக பார்த்தனர்.
குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. காலை 8.30 க்கு அந்த இளைஞன் உள்ளே இருந்தான். 9 மணிக்கு அனுமதிக்கப்படுகிறான்.
இளைஞன்: குட் & க்ரேட் மார்னிங் சார்.
டாட்டா: குட் மார்னிங். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தாய்...? உடனே சொல் எனக்கு நேரமில்லை.
இளைஞன்: ஒரு பிஸ்னஸ் விசயமாக உங்களிடம் பேச வேண்டும்.
டாட்டா: என்ன பிஸ்னஸ்?
இளைஞன்: நீங்கள் உப்பு விற்க வேண்டும்.
டாட்டா: தம்பி என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கிறது.... எவ்வளவு பெரிய தொழில்களை செய்து கொண்டு உள்ளேன். என்னை உப்ப விற்க சொல்லும் அளவு அது பெரிய பொருளா...?
இளைஞன்: சார். உப்பு சிறிய பொருள் தான். ஆனால் தினமும் பயன்படக்கூடியது. அது இல்லாமல் நீங்களோ நானோ உண்ணவே முடியாது. தினமும் பயன்படுத்தக்கூடியது. அடிக்கடி வாங்கப்படக்கூடியது. நமக்கு இவ்வளவுக்கு உப்பு கிடைக்கிறது. நாம் இவ்வளவுக்கு விற்கலாம். உங்கள் டாட்டா ப்ராண்டு என்றால் மக்கள் நம்பிக்கையோடு வாங்குவார்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் இங்கு வந்தேன்.
டாட்டா இரண்டு நிமிடம் யோசிக்கிறார். பின் இளைஞனிடம்... சரி.. காண்ட்ராக்ட்டில் சைன் பண்ணி விட்டு, அட்வான்ஸ் பெற்றுக்கொள். நாளை மறுநாள் முதல் நம் உப்பு வெளிவர வேண்டும்.
ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம்.
ஒருவேலை அந்த இளைஞனின் வார்த்தையை நிராகரித்திருந்தால் அவன் வேறு நிறுவனத்தை நாடியிருப்பான்.
வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது.
-ஆர். எஸ். மமோகரன்
- எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.
- நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டை அதாவது பாஸ்போர்ட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் இருந்த ஜப்பானை மூன்றாம் இடத்திற்கு பின் தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது
எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்தால்192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
அடுத்து ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
மூன்றாவதாக ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்சு, ஜப்பான், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
இங்கிலாந்து, அயர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
பெல்ஜியம், மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, செச்ரிபப்ளிக் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
ஆஸ்திரேலியா, ஹங்கேரி, போலந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளுக்கு செல்லலாம்.
கனடா, கிரீஸ் - 185 நாடுகள்.
8வது இடத்தில் உள்ள அமெரிக்கா , லிதுவேனியா- 184 நாடுகள்.
லேத்வியா, சுலோவாக்கியா, சுலோவேனியா- 183 நாடுகள்.
10வது இடத்தில் உள்ள எஸ்டோனியா, ஐஸ்லாந்து - 182 நாடுகள்.
மலேஷியா 11 ஆம் இடம் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
தாய்லாந்து 64 ஆம் இடம் - 79 நாடுகள்.
80வது இடத்தில் உள்ள நமது இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
இலங்கை 95 ஆம் இடம் - 41 நாடுகள்.
100 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் - 33 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
-தனுராஜன்
- திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது.
- வானொலியில் நான் நிகழ்த்திய உரைக்கு மன்னிப்பு கேட்டு விட்டு ஃபோனை கீழே வைத்தேன்.
கண்ணதாசனிடமிருந்து அப்படி ஒரு கேள்வியை அந்த கல்லூரிப் பேராசிரியை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
தனக்கு நடந்த நிகழ்வை அந்த பேராசிரியையே சொல்கிறார் இப்படி:
"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள்.
இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரையை நிகழ்த்தினேன்.
அது வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணிநேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன்.
மறுமுனையில் 'நான் கண்ணதாசன் பேசுகிறேன்' என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. கண்ணதாசன் தொடர்ந்து பேசினார். 'சற்று முன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன். மிகவும் அருமையாக பேசியிருந்தீர்கள். ஆனால் ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் நல்ல பல விஷயங்கள், உங்களைப் போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன.
ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக் கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.
உதாரணமாக திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட 'நான் மனமாக இருந்து நினைப்பேன். நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும்.
அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் அதையே நான் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா' என்று கண்ணதாசன் கேட்டார்."
என்ன பதில் சொல்ல முடியும் கண்ணதாசனின் இந்த கேள்விக்கு?
வானொலியில் நான் நிகழ்த்திய உரைக்கு மன்னிப்பு கேட்டு விட்டு ஃபோனை கீழே வைத்தேன்.
"கண்ணதாசன் அப்படி சொன்னதைக் கேட்டது முதல் அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது. ஏனெனில் அவர் என்னிடம் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை."
-ஜான் துரை ஆசிர் செல்லையா
- பின்னாட்களில், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் விவசாயிகள் கூடுவார்கள்.
- ஒவ்வொரு வீட்டு பயிர் முளைகளின் வளர்ச்சித்திறனை பரிசோதனை செய்தார்கள்.
நம்மூர் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் என்றால் திருவிழாக்களில் பெண்கள் முளைப்பாரி சுமந்து வலம் வருவதை பார்த்திருப்போம். பெரும்பாலும், நவதானிய விதைகளை கொண்டு தான் முளைப்பாரி அமைப்பார்கள்.
கன்னிப்பெண்கள் விரதமிருந்து முளைப்பாரி தூக்கினால் நல்ல கணவன் கிடைக்கும், குடும்பத்தில் செல்வம் பெருகும், அம்மன் அருளால் கொடிய நோய்கள் நீங்கும் என்று பலதரப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் ஊர்புற வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த முளைப்பாரி எடுக்கும் சடங்கிற்கு உண்மையான காரணமே வேறு. நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் ஒரு காரணத்தோடு தான் செயல்படுத்தியிருக்கிறார்கள்.
விவசாயத்திற்கு பயிரிடும் விதைகளை நேரடியாக விளை நிலத்தில் விதைக்காமல் தனியாக வீட்டிலேயே ஒரு கூடையில் மட்கிய குப்பைகளோயிட்டு இளம்வெயில் படும்படி வைப்பார்கள். பத்து நாட்கள் தண்ணீர் தெளித்து விதையின் வளர்ச்சியை பார்த்தனர்.
இவ்வாறு முன்கூட்டியே விதைகளின் முளைப்புத்திறன், வளர்ச்சித்திறன் ஆகியவற்றை பரிசோதனை செய்து பிறகு நிலத்தில் விதைக்கும் வழக்கம் கொண்டார்கள். அதனால், ஏக்கர் கணக்கில் விதைத்து நஷ்டமடையாமல் காத்துக்கொள்ள முடிந்தது.
இதுவே பின்னாட்களில், திருவிழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் விவசாயிகள் கூடுவார்கள். அதில் ஒவ்வொரு வீட்டு பயிர் முளைகளின் வளர்ச்சித்திறனை பரிசோதனை செய்தார்கள். அப்படி செய்வதன் மூலம் அந்த ஆண்டின் மகசூலை தோராயமாக கணித்தார்கள்.
இப்படி ஒரு நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது தான் இந்த முளைப்பாரி. இன்று அது முழுக்க முழுக்க வழிபாடு சம்பந்தபட்டதாகி விட்டது.
- ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை வித்தியாசப்படுவதால் நம்மால் நிகர நூலக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு ஒப்பிட முடியாது.
- மக்கள்தொகையை வைத்துக் கணக்கிட்டால் நான்காயிரம் பேருக்கு ஒரு நூலகம் என்ற கணக்கில் கேரளாதான் முதலிடத்தில் வருகிறது.
இந்தியாவில் எண்ணிக்கை அளவில் அதிக பொது நூலகங்கள் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. டாப்-5 மாநிலங்களின் மொத்த நூலக எண்ணிக்கை வருமாறு...
* மகாராஷ்டிரா - 12,191
* கேரளா - 8,415
* கர்நாடகா - 6,798
* தமிழ்நாடு - 4,622
* மேற்கு வங்கம் - 5,251
வழக்கம் போல இந்தி பெல்ட் மாநிலங்கள் இந்தப் பட்டியலில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருக்கின்றன.
* உத்தரப் பிரதேசம் - 573
* பீகார் - 192
* மத்தியப் பிரதேசம் - 42
இதில் இன்னொன்று; ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை வித்தியாசப்படுவதால் நம்மால் நிகர நூலக எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு ஒப்பிட முடியாது. எனவே மக்கள்தொகையை வைத்துக் கணக்கிட்டால் நான்காயிரம் பேருக்கு ஒரு நூலகம் என்ற கணக்கில் கேரளாதான் முதலிடத்தில் வருகிறது:
1. கேரளா - 4,112
2. மகாராஷ்டிரா - 9,218
3. கர்நாடகா - 9,429
4. தமிழ்நாடு - 16,547
5. குஜராத் - 18,100
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
- தெனாலி ராமன் வீட்டில் என்ன பிரச்சனை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..
- சமயோசித புத்தி சம்சாரத்திடம் செல்லாது.
தெனாலி ராமன் இரவில் படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...
திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...
மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..
சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்..
புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..
"என்னது.. எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா..'' -கத்துகிறாள் மனைவி.
"எதிர்த்தா பேசுகிறாய்..'' என்று அவள் மேல் துப்புகிறான்..
"கேட்பதுற்கு ஆளில்லையா..'' என்று அலற துவங்குகிறாள் மனைவி..
தெனாலி ராமன் வீட்டில் என்ன பிரச்சனை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..
"என்ன தெனாலிராமா இது.." என்று கேட்கிறார்கள்..
"பாருங்கள்.. எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்புகிறேன்.. ஒன்றுமே சொல்லவில்லை.. ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள்.." என்கிறான் தெனாலிராமன்.
திருடன் பிடிபடுகிறான்..
சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை..
திருடன் பிடிபட்டது இருக்கட்டும்..
அவர்கள் போனதுக்கு அப்புறம் தெனாலிராமன் அலறத் துவங்குகிறான்..
யாரும் கண்டுக்கல...
எனவே சமயோசித புத்தி சம்சாரத்திடம் செல்லாது.
-ஜோசப் அந்தோனிராஜ்
- ராஜகுமாரியாய் தான் பிறந்து வளர்ந்த வீட்டில் தனக்கு இப்படி பிச்சைக்காரியை விட கேவலமான நிலை வந்து விட்டதே என மனம் குமுறி அழுகிறாள் நல்ல தங்காள்.
- குழந்தைகளின் பசியை போக்க வழி தெரியாமல் தவித்த நல்ல தங்காளின் கண்ணில் அருகில் இருந்த பாழடைந்த கிணறு தென்படுகின்றது.
எத்தனையோ கதைகளை கேட்டாலும் பாட்டி சொன்னதில் இன்றும் மறக்காமல் இருப்பது என்னவோ அந்த நல்ல தங்காள் கதை தான்.
அர்ஜூனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர்.
இந்த தம்பதியினருக்கு நல்ல தம்பி, நல்ல தங்காள் என இரண்டு மக்கள் பிறந்தனர். தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர்.
தந்தை மறைவுக்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற நல்லதம்பி தன் தங்கை நல்லதங்காளை நன்முறையில் வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
இளம் வயதிலேயே திருமணம் ஆன நல்ல தங்காள் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என ஏழு மக்களை பெற்றாள்.
நல்ல தங்காளின் புகுந்த வீட்டு இடமான மானாமதுரையில் மழை பெய்யாததால் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழை பொழியவில்லை.
உண்ண உணவு இன்றி மக்கள் பலரும் மாண்டனர். கிட்டதட்ட நல்ல தங்காள் குடும்பமும் பட்டினியால் சாகும் நிலைக்கு ஆளானது.
நல்ல தங்காள் தன் அண்ணன் தனக்கு ஆசை ஆசையாய் தந்த சீதன பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது.
மனம் உடைந்த நல்ல தங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ஜூனாபுரம் கிராமத்துக்கு கால்நடையாக வருகிறாள்.
நல்லதங்காள் தன் பிறந்த வீட்டுக்கு வரும் நேரத்தில் அண்ணன் ஆன நல்லதம்பி வேட்டையாட காட்டுக்கு சென்று இருந்தார்.
நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரி. நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் வா! என்று கூட அழைக்காமல் அலட்சிய படுத்துகிறாள் மூளியலங்காரி.
ராஜகுமாரியாய் தான் பிறந்து வளர்ந்த வீட்டில் தனக்கு இப்படி பிச்சைக்காரியை விட கேவலமான நிலை வந்து விட்டதே என மனம் குமுறி அழுகிறாள் நல்ல தங்காள்.
பசியால் அழுத தன் பிள்ளைகளின் முகத்தை பார்க்க சகிக்காது சுய கவுரவத்தை விட்டு மாட்டுக்கு தீவனமாக வைக்கும் தவிட்டையாவது தந்தால் போதும்.. அதை தின்றாவது பசியாறுவோம் என அண்ணனின் மனைவியிடம் கெஞ்சுகிறாள் நல்ல தங்காள்.
ஏழு வண்டி நிறைய சீதனம் வாங்கிட்டு போயும் இன்னும் அண்ணனை உறிஞ்சு எடுக்க புள்ளையளை கூட்டிட்டு இங்க வந்திருக்கா..
சாப்பாட்டுக்கு வழியில்லைன்னா எங்கேயாவது போய் சாவ வேண்டியது தானே.. எத்தன பாங்கெணறு கெடக்கு.. என மூளி அலங்காரி வார்த்தை நெருப்புகளை அள்ளி கொட்டி வாயில் கதவை அடைத்து வீட்டுக்குள் சென்று விடுகிறாள்.
மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் அண்ணன் வீட்டை விட்டு வந்த வழியே திரும்புகிறாள்.
"எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டேனே... " என்று பலவாறு யோசித்து அழுகையோடு வழி நடக்கிறாள் நல்ல தங்காள்.
பசி தாங்க முடியாமல் குழந்தைகள் 'அம்மா பசிக்குது... ஏதாவது சாப்பிட வாங்கி கொடும்மா...' என்று அழ ஆரம்பித்து விட்டனர்.
குழந்தைகளின் பசியை போக்க வழி தெரியாமல் தவித்த நல்ல தங்காளின் கண்ணில் அருகில் இருந்த பாழடைந்த கிணறு தென்படுகின்றது.
குழந்தைகளை அழைத்து கொண்டு பாழடைந்த கிணற்றின் அருகில் செல்கிறாள் நல்லதங்காள். மனதை கல்லாக்கி கொண்டு பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாக கிணற்றுக்குள் தூக்கி போட்டாள். தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
மனைவியின் உதாசீனத்தால் தனது தங்கை, பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நல்லதம்பி துடிதுடித்தான். அந்த கவலையில் அவனும் இறந்து போனான்.
அண்ணன் - தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் தோன்றினர்.
தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்ல தம்பியையும் உயிர்ப்பித்தனர்.
அப்போது நல்ல தங்காளும், நல்லதம்பியும் "மாண்டவர் மீண்டால் வையகம் தாங்காது. சாவிலாவது சகோதர சகோதரியாகிய நாங்கள் சேர்ந்தோமே.. அதுவே போதும். எனவே நாங்கள் இறந்ததாகவே கருதி அருள் புரிய வேண்டும்" என கூறினார்கள். சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டார்.
இரந்து வாழ்வதை விட இறந்து விடுவதே மேல் என உயிரை விட்ட நல்லதங்காளை இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ஜூனாபுரம் பகுதி மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர்.
-சுரேஷ்வரன்
- மராட்டிய மன்னர் சிவாஜி, மன்னராக பதவியேற்று 300-வது ஆண்டு விழாவை மராட்டிய அரசு கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தது.
- ஏவி.மெய்யப்ப செட்டியார் தன் செலவில் பிரமாண்ட செட் போட்டுக் கொடுத்தார்.
சிவாஜி என்ற பெயர் வி.சி. கணேசன் என்ற இயற்பெயருடன் இணைய காரணமான இருந்தது அண்ணா எழுதிய 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற நாடகம்!
அந்த நாடகத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு, மராட்டிய வீரர் சிவாஜி வாழ்க்கையை வீரபாண்டிய கட்டபொம்மன் படம் போன்று சினிமாவாக எடுத்து அதில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. ஆனால் சில படங்களுக்குள் வந்த நாடகத்தில்தான் அவர் சிவாஜியாக நடித்தாரே தவிர முழுநீள திரைப்படத்தில் நடிக்கவில்லை. கடைசி வரை அவரது ஆசை நிறைவேறவில்லை.
இந்த நிலையில் மராட்டிய மன்னர் சிவாஜி, மன்னராக பதவியேற்று 300-வது ஆண்டு விழாவை மராட்டிய அரசு கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தது. இதையொட்டி மாவீரன் சிவாஜி வாழ்க்கையை ஒரு டெலிபிலிமாக தயாரித்து அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடிவு செய்தது.
சிவாஜியாக நடிக்க இந்தியா முழுவதும் நடிகர்களை தேடியது. யாருமே பொருந்தவில்லை. கடைசியாக சிவாஜி கணேசன் பற்றி கேள்விப்பட்டு அவரை நடித்து தர சொன்னது.
இதை ஏற்றுக்கொண்ட சிவாஜி அந்த டெலிபிலிமை தன் சொந்த செலவில் எடுத்து தருகிறேன் என்று கூறி, சிவாஜி பிலிம்ஸ் சார்பில் அதனை தயாரித்து, நடித்தார். தஞ்சைவாணன் இதற்கான திரைக்கதை வசனத்தை எழுதினார். ஏவி.மெய்யப்ப செட்டியார் தன் செலவில் பிரமாண்ட செட் போட்டுக் கொடுத்தார்.
இந்த டெலி பிலிமின் மராட்டிய பதிப்பை பாபா சாகில் புரந்தரே எழுதினார். 1974ம் ஆண்டு ஜூலை 21ந் தேதி இந்த டெலிபிலிம் மும்பை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 1975ம் அண்டு சென்னையில் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டதும் இங்கு அது ஒளிபரப்பப்பட்டது.
- சுப்பிரமணி
- பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை, கோழி போன்றவற்றில் மட்டுமே தேவையான அளவு நிரம்பி உள்ளது.
- மரக்கறி உணவுகள் வழி பி12 பெரிதாகக் கிடைப்பதில்லை.
ஹீமோகுளோபின் ஆண்களுக்கு நூறு மில்லி ரத்தத்தில் 14-16 மில்லிகிராமும், பெண்களுக்கு 12-14 மில்லிகிராமும் இருந்தால் அது சரியான அளவாகும்.
ஹீமோகுளோபின் உருவாக கட்டாயம் இரும்பு சத்து தேவை. சிவப்பு அணுக்கள் முதற்கொண்டு ரத்தத்தின் இதர அணுக்கள் உருவாக விட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் கட்டாயத் தேவை.
நமது உடலுக்கு மேற்சொன்ன இரும்புச்சத்து, பி12 விட்டமின், ஃபோலிக் அமிலம் ஆகிய மூன்றையும் உணவு மூலம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
உடல் சோர்வு, உடல் வலி, தலைசுற்றல், புத்தி மங்குதல், படிப்பில் நாட்டம் குறைதல், அடிக்கடி தலைவலி ஏற்படுதல், நாக்கு வெளிரிப்போய் காணப்படுவது போன்றவை ரத்த சோகையின் அறிகுறிகள் ஆகும்.
இரும்புச்சத்து - கால்நடைகளின் கல்லீரல், சுவரொட்டி உள்ளிட்ட உள்ளுறுப்புகளிலும் மாமிசங்களிலும் அதிகமாக உள்ளது.
மாமிசம் உண்ணாதவர்களுக்கு சுண்டக்காய், கீரைகள், நொதித்தலுக்குள்ளான பழைய கஞ்சியில் இரும்பு உள்ளது.
பி12 பொருத்தவரை மாமிசம், மீன், முழு முட்டை, கோழி போன்றவற்றில் மட்டுமே தேவையான அளவு நிரம்பி உள்ளது.
மரக்கறி உணவுகள் வழி பி12 பெரிதாகக் கிடைப்பதில்லை. மாறாகக் கிடைத்தாலும் அது நம் உடலால் மிகக்குறைவாகவே கிரகிக்கப்படுகிறது.
ஃபோலிக் அமிலம் - கீரைகள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், கடலை, பழங்கள், மாமிசம், முட்டை, கல்லீரல், மீன் போன்றவற்றில் நிறைந்துள்ளது.
மரக்கறி மட்டும் உண்ணும் உணவாளர்களுக்கும் மேற்சொன்ன உணவுகளை மிகக் குறைவாக உண்பவர்களுக்கும் இரும்புச்சத்து மற்றும் பி12, பி9 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனைபேரில் உணவோடு சேர்த்து ஊட்டச்சத்து நிரம்பிய மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.
ரத்த சோகையுடன் தொடர்ந்து இருப்பது இதயத்துக்கும் இன்னபிற முக்கியமான உள்ளுறுப்புகளுக்கும் பாதகம் விளைவிக்கும். நமது அன்றாட வாழ்வின் தரத்தையும் நமது நுட்பத்திறனையும் பாதிக்கும்.
எனவே ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு பெற்று எதனால் ரத்த சோகை ஏற்பட்டது என்பதை உணர்ந்து அதற்கேற்றாற் போல உணவையும் மருந்தையும் உட்கொண்டு சரிசெய்ய வேண்டும்.
- டாக்டர். ஃபரூக் அப்துல்லா
- வாரம் இருமுறை வாழைப்பூவை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
- புண்களை ஆற்ற வாழைப்பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும்.
இயற்கை நமக்கு தந்த மிகப்பெரும் கொடைகளில் வாழைப்பூவும் ஒன்று. வாரம் இருமுறை வாழைப்பூவை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.
இன்றைய உணவு முறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப்பூவை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானம் அதிகரிக்கும்.
மூல நோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம்.
மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் தீரும்.
- மரிய பெல்சின்
- எம் கருப்புத் தலைவனோ... எங்களுக்கு பாதுகாப்பான... கூரையைத் தந்தான்...
- பெருந்தலைவனே.. கருப்பாயிருந்தாலும் நீ விளக்கு... நீ வெளிச்சம்...
எங்கள் பூட்டன் பாட்டன்களின் சரித்திரம்
புராதன அழுக்கைக் கொண்டது
சிமினி விளக்கை ஏற்றியும்
லாந்தரைக் கொளுத்தியும் அகலாதது
அவர்களைச் சூழ்ந்த இருள்
புழுதியும் சேறும்தான்
அவர்களுடைய பகல்
அத்தைகளைக் கட்டிக்கொடுக்க
வாங்கிய ஆயிரம் ரூபாய்க்கு
அவர்களது இடக்கை பெருவிரல்
வண்டிப்பசை பூசியது
தெருவுக்கு வந்த வெளிச்சத்திலும்
அவர்கள் கண்கள் மூடியேக் கிடந்தது
போய்ச் சேர பேருந்தின்
வண்ணங்களை ஒடுக்குகளை
அடையாளம் கண்டவர்கள்
பாட்டிகள் அத்தைகளின் கதையோ
இன்னும் மோசம்
விறகுப் புகையில் இருமி
பிள்ளைப் பேற்றில்
செத்துப் போனார்கள்
குக்கிராமங்களில்
விலங்குகளைப்போல்
வாழ்ந்த
இவர்களைச் சிந்தித்தான்
ஒரு தலைவன்
அவனும் படிக்காதவன்
ஏழை பாழைகளின்..
பஞ்சைப் பராரிகளின்..
ஏக்கங்களை..
பெருமூச்சை..
கண்ணீரை..
குருதியைப்
படித்த மா மேதை
மண்சுவர் கொண்டு
கூரை வேய்ந்து
ஒரு கோவில் செய்தான்
அதில் ஒரு தண்டவாளத்
துண்டை மாட்டினான்
வயிற்றுத் தீயை
இரண்டு உருண்டை
சோற்றுப் பருக்கைகளால்
அணைத்து வைத்தான்
ஒவ்வொரு குடிசையிலும்
ஔவைப் பாட்டி
வலதுகாலெடுத்து வைத்தாள்
வள்ளுவர் வந்தார்
கம்பர் வந்தார்
ஷேக்ஸ்பியர் வந்தார்
அல்ஜிப்ரா வந்தது
நியூட்டன் வந்தார்
குடிசையிலிருந்து
அப்பா ஆசிரியராய்
வெளிவந்தார்
அக்காக்களுக்கு
டீச்சர் ட்ரைனிங் கனவு
மருமகள்களுக்கு
மருத்துவக் கனவு
எங்களை தெய்வங்கள்கூட
சற்று தூரத்தில்
இடுப்பில் துண்டைக் கட்டி
நிற்க வைத்தது
எம் கருப்புத் தலைவனோ
எங்களுக்கு பாதுகாப்பான
கூரையைத் தந்தான்
ஆண்களோடு பெண்கள்
சமமாக அமர
நாற்காலி தந்தான்
சாதியைக் காட்டி
பிடுங்கிக் கொண்ட
பாடப் புத்தகங்களை
அவனே மீட்டுக் கொடுத்தான்
வேறெப்படி சொல்லமுடியும்
பெருந்தலைவனே..
கருப்பாயிருந்தாலும்
நீ விளக்கு
நீ வெளிச்சம்
சுயமரியாதை கூடிய
இத்தலைமுறை
வாழ்வு நீ தந்தது!
-கவிஞர் கரிகாலன்
- வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம்.
- வீட்டை துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
* வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.
* வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
* வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
* வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.
* குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்து செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம்.
* 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
- ஜோதிடர் சுப்பிரமணியன்






