என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்ல தங்காள்"

    • ராஜகுமாரியாய் தான் பிறந்து வளர்ந்த வீட்டில் தனக்கு இப்படி பிச்சைக்காரியை விட கேவலமான நிலை வந்து விட்டதே என மனம் குமுறி அழுகிறாள் நல்ல தங்காள்.
    • குழந்தைகளின் பசியை போக்க வழி தெரியாமல் தவித்த நல்ல தங்காளின் கண்ணில் அருகில் இருந்த பாழடைந்த கிணறு தென்படுகின்றது.

    எத்தனையோ கதைகளை கேட்டாலும் பாட்டி சொன்னதில் இன்றும் மறக்காமல் இருப்பது என்னவோ அந்த நல்ல தங்காள் கதை தான்.

    அர்ஜூனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர்.

    இந்த தம்பதியினருக்கு நல்ல தம்பி, நல்ல தங்காள் என இரண்டு மக்கள் பிறந்தனர். தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர்.

    தந்தை மறைவுக்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற நல்லதம்பி தன் தங்கை நல்லதங்காளை நன்முறையில் வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    இளம் வயதிலேயே திருமணம் ஆன நல்ல தங்காள் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என ஏழு மக்களை பெற்றாள்.

    நல்ல தங்காளின் புகுந்த வீட்டு இடமான மானாமதுரையில் மழை பெய்யாததால் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழை பொழியவில்லை.

    உண்ண உணவு இன்றி மக்கள் பலரும் மாண்டனர். கிட்டதட்ட நல்ல தங்காள் குடும்பமும் பட்டினியால் சாகும் நிலைக்கு ஆளானது.

    நல்ல தங்காள் தன் அண்ணன் தனக்கு ஆசை ஆசையாய் தந்த சீதன பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது.

    மனம் உடைந்த நல்ல தங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ஜூனாபுரம் கிராமத்துக்கு கால்நடையாக வருகிறாள்.

    நல்லதங்காள் தன் பிறந்த வீட்டுக்கு வரும் நேரத்தில் அண்ணன் ஆன நல்லதம்பி வேட்டையாட காட்டுக்கு சென்று இருந்தார்.

    நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரி. நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் வா! என்று கூட அழைக்காமல் அலட்சிய படுத்துகிறாள் மூளியலங்காரி.

    ராஜகுமாரியாய் தான் பிறந்து வளர்ந்த வீட்டில் தனக்கு இப்படி பிச்சைக்காரியை விட கேவலமான நிலை வந்து விட்டதே என மனம் குமுறி அழுகிறாள் நல்ல தங்காள்.

    பசியால் அழுத தன் பிள்ளைகளின் முகத்தை பார்க்க சகிக்காது சுய கவுரவத்தை விட்டு மாட்டுக்கு தீவனமாக வைக்கும் தவிட்டையாவது தந்தால் போதும்.. அதை தின்றாவது பசியாறுவோம் என அண்ணனின் மனைவியிடம் கெஞ்சுகிறாள் நல்ல தங்காள்.

    ஏழு வண்டி நிறைய சீதனம் வாங்கிட்டு போயும் இன்னும் அண்ணனை உறிஞ்சு எடுக்க புள்ளையளை கூட்டிட்டு இங்க வந்திருக்கா..

    சாப்பாட்டுக்கு வழியில்லைன்னா எங்கேயாவது போய் சாவ வேண்டியது தானே.. எத்தன பாங்கெணறு கெடக்கு.. என மூளி அலங்காரி வார்த்தை நெருப்புகளை அள்ளி கொட்டி வாயில் கதவை அடைத்து வீட்டுக்குள் சென்று விடுகிறாள்.

    மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் அண்ணன் வீட்டை விட்டு வந்த வழியே திரும்புகிறாள்.

    "எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டேனே... " என்று பலவாறு யோசித்து அழுகையோடு வழி நடக்கிறாள் நல்ல தங்காள்.

    பசி தாங்க முடியாமல் குழந்தைகள் 'அம்மா பசிக்குது... ஏதாவது சாப்பிட வாங்கி கொடும்மா...' என்று அழ ஆரம்பித்து விட்டனர்.

    குழந்தைகளின் பசியை போக்க வழி தெரியாமல் தவித்த நல்ல தங்காளின் கண்ணில் அருகில் இருந்த பாழடைந்த கிணறு தென்படுகின்றது.

    குழந்தைகளை அழைத்து கொண்டு பாழடைந்த கிணற்றின் அருகில் செல்கிறாள் நல்லதங்காள். மனதை கல்லாக்கி கொண்டு பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாக கிணற்றுக்குள் தூக்கி போட்டாள். தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

    மனைவியின் உதாசீனத்தால் தனது தங்கை, பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நல்லதம்பி துடிதுடித்தான். அந்த கவலையில் அவனும் இறந்து போனான்.

    அண்ணன் - தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் தோன்றினர்.

    தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்ல தம்பியையும் உயிர்ப்பித்தனர்.

    அப்போது நல்ல தங்காளும், நல்லதம்பியும் "மாண்டவர் மீண்டால் வையகம் தாங்காது. சாவிலாவது சகோதர சகோதரியாகிய நாங்கள் சேர்ந்தோமே.. அதுவே போதும். எனவே நாங்கள் இறந்ததாகவே கருதி அருள் புரிய வேண்டும்" என கூறினார்கள். சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்று கொண்டார்.

    இரந்து வாழ்வதை விட இறந்து விடுவதே மேல் என உயிரை விட்ட நல்லதங்காளை இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ஜூனாபுரம் பகுதி மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர்.

    -சுரேஷ்வரன்

    ×