என் மலர்
மற்றவை
- வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன.
- கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும்.
கடல் என்பது ஆதியில் இருந்தே மனித இனத்திற்கு ஒரு புரியாதப்புதிராகவே இருந்து வந்துள்ளது.
ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக, இருக்கும். ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.
சுமார் ஒரு மைல் ஆழம் உள்ள சேறு மாதிரிப் படிவுகள் கடலின் அடித்தளத்தில் உள்ளன. மடிந்த கடல்வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரியான படிவுகள்.
இவ்வாறு ஆண்டுதோறும் 500 கோடி டன் வண்டலை ஆறுகள், நதிகள் கொண்டு வந்து சேர்க்கின்றனவாம்.
கடலடியில் அனேக செங்குத்தான மலைகள் உள்ளன. அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் ஆகியன கடலடி மலைகளின் உச்சிகளே.
கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்திற்குச் சங்கிலித் தொடர்போல் மலைகளும், வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன. இவ்விதம் சுமார் 20 ஆறுகள் உள்ளனவாம்.
அந்தமான் தீவுகள் அருகே 1,700 மைல் நீளமும் 25 மைல் அகலமும் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது. பிற இடங்களிலும் இவ்வாறு பள்ளத்தாக்குகள் உள்ளன. சில இடங்களில் இதன் ஆழம் சுமார் 3 மைல். கடல்களில் மிக ஆழமான இடங்கள் கடலுக்கு அடியில் உள்ள அகழிகள் ஆகும்.
கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும். அகழிகளின் ஆழத்துடன் ஒப்பிட்டால் உலகின் கடல்களின் சராசரி ஆழம் 12,556 அடி.அதாவது, இரண்டரை மைல்.
பிலிப்பைன்சுக்குக் கிழக்கே உள்ள மின்டானாவோ அகழியில் அமைந்துள்ள குக்மடு தான் உலகின் கடல்களில் மிக ஆழமான இடமாகும். இதன் ஆழம் 37,782 அடி. அதாவது சுமார் 7 மைல். குக்மடுவில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கினால் அச்சிகரம் மூழ்கி அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி தான் .
-அண்ணாமலை சுகுமாரன்
- இந்தியாவில் வேறெங்கும் இத்தனை பிள்ளையார் கோவில்கள் கிடையாது.
- எடுத்துக் கொண்ட காரியம் சுழித்துப் போகாமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார் சுழி.
`அவ்வையாருக்குப் பிள்ளையார் மேல் ஏன் அப்படியொரு பக்தி? பிள்ளையாருக்கு என்ன அத்தனை மகத்துவம்?` என்று கேட்டுவிட்டு, மகாசுவாமிகளின் திருமுகத்தையே பதில்வேண்டிப் பார்த்தவாறிருந்தார் ஓர் அன்பர். மகாசுவாமிகள் பேசலானார்..
`வயதான பாட்டி என்றால் காலை நீட்டிக் கொண்டு தள்ளாமை காரணமாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பதுதான் வழக்கம்.
ஆனால் அவ்வைப் பாட்டியோ ஊர் ஊராகச் சுற்றி தமிழையும் ஆன்மிகத்தையும் எல்லா இடங்களிலும் பரப்பிக் கொண்டிருந்தாள்.
குழந்தை என்றால் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் தவழ்ந்து கொண்டும் நடந்துகொண்டும் இருப்பதுதான் வழக்கம்.
பிள்ளையாராகிய குழந்தையோ தொந்தியும் தொப்பையுமாக யானை முகத்துடன் அழகே வடிவாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறது.
அதனால்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி ஏன் அசையாமல் இருக்கிறாய் என்று நாம் சிலரைக் கேட்கிறோம். வேடிக்கையான பாட்டி. வேடிக்கையான குழந்தை.
சகல உலகங்களுக்கும் தாய் தந்தையான பார்வதி பரமேஸ்வரனின் மூத்த பிள்ளை என்பதால் மரியாதையோடு அவரைப் பிள்ளையார் என்கிறோம்.
`குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே` என்பார்கள். குழந்தை வடிவில் வந்துள்ள தெய்வம் பிள்ளையார். அதனால் அவரை எல்லோரும் கொண்டாடுகிறோம்.
அவ்வை ஓடி ஆடி ஆன்மிகப் பணி செய்ததற்கு இந்தப் பிள்ளையின் அருள்தான் காரணம். அதனால் அவ்வை, தான் சென்ற இடங்களிலெல்லாம் பிள்ளையார் பக்தியைப் பரப்பினாள்.
தமிழகத்தில், அரச மரத்தடியிலும் தெரு மூலைகளிலும் என எல்லா இடங்களிலும் பிள்ளையார் எழுந்தருளியிருப்பதற்கு அவ்வையார் பரப்பிய விநாயகர் பக்தியே காரணம். இந்தியாவில் வேறெங்கும் இத்தனை பிள்ளையார் கோவில்கள் கிடையாது.
ஆயிரம் காலமாக இந்த தேசத்தில் ஒழுக்கமும் பக்தியும் இருந்துவருகிறதென்றால் அது முக்கியமாக அவ்வையாரால் தான்.
அவளுடைய அன்பின் விசேஷத்தால் அவளுக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆனபிறகு இப்போதும் நாம் படிக்க ஆரம்பிக்கிறபோதே அவளுடைய ஆத்திசூடிதான் முதலில் வருகிறது.`
நம் தமிழ்மொழிக்குப் பிள்ளையார் ரொம்ப முக்கியம். எதை நாம் எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு மளிகைப் பொருள் லிஸ்ட் எழுதினால் கூட முதலில் பிள்ளையார் சுழி தானே போடுகிறோம்?
எடுத்துக் கொண்ட காரியம் சுழித்துப் போகாமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார் சுழி.
படிக்கத் தொடங்கியவுடனேயே நாம் முதலில் கற்றுக் கொள்வது ஒளவைப் பாட்டியின் அறிவுரைகளைத் தான். வாக்கு உண்டாவதற்கே பிள்ளையார் பாதத்தைத் தான் பிடித்தாக வேண்டும் என்று அவள் கற்றுக் கொடுக்கிறாள்.
`வாக்குண்டாம்` என்று பாடல் தொடங்குகிறது. வாக்கு மட்டும் தானா? பேச்சை அழகாக ஜோடித்து விட்டால் போதுமா?
நல்ல மனதைப் பெற்று அந்த மனதிலிருக்கிற நல்ல எண்ணங்கள், கருத்துகள் வாக்கில் வந்தால்தானே நமக்கும் புண்ணியம், மற்றவர்க்கும் பயன்? எனவே நல்ல மனம் கிடைக்கும். இன்னும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
`தப்பாமல் கிடைக்கும்` அதாவது `நிச்சயமாகக் கிடைக்கும்` என்கிறாள் அவ்வை. அந்த மிகப் பொருத்தமான வார்த்தையை அவ்வை தான் போட்டாளோ அல்லது தானே வந்து விழுந்ததோ?
பிள்ளையார் பாதத்தைப் புஷ்பார்ச்சனை பண்ணிப் பிடித்து விட்டால் எல்லா மங்கலங்களும் கிடைத்துவிடும் என்று அவ்வை நமக்குப் பாடிக் கொடுத்திருக்கிறாள்.
`வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு`
மேனி நுடங்காது என்றால் சரீரத்தைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாது என்று அர்த்தம். உடம்பை சிரமப்படுத்திக் கொள்ளாமல் நாலு பூவைப் பறித்து அவருக்குப் போட்டுவிட்டாலே போதும்.
பிள்ளையாரை வணங்கினால் எல்லா மங்கலங்களும் கிட்டும்!`
மகாசுவாமிகளின் அருளுரையைக் கேட்டு பக்தர் மனம் மகிழ்ந்து நமஸ்கரித்தார்.
-திருப்பூர் கிருஷ்ணன்
- கண்ணதாசன் பாடல் வரிகளை மட்டும் சொல்லவில்லை.
- கண்ணதாசனின் அந்த வார்த்தைகளை சொன்னவுடன் விஸ்வநாதன் முகம் மாறியது.
காலை ஏழு மணி முதல் ஸ்ரீதரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் பாடல் கம்போசிங்கிற்காக காத்திருக்க, பத்து மணிக்கு அங்கே வந்த கவிஞர் கண்ணதாசன் "நான் கம்போசிங்கிற்கு தயார். நீங்கள் தயாரா?" என்று கேட்டவுடன் லேசாக எரிச்சலடைந்த ஸ்ரீதர் "நாங்க ஏழு மணியிலே இருந்து இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கோம். காலையிலே சீக்கிரமே இந்த பாட்டை முடிக்கணும்னு நேற்றே உங்ககிட்ட சொன்னேன் இல்லே. அப்படியும் இவ்வளவு லேட்டா வந்தா எப்படி?" என்று கேட்க, "கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதுதான் லேட்டாகிவிட்டது" என்றார் கவிஞர்.
"எனக்கு எல்லாம் தெரியும். நேற்று இரவு இரண்டு மணிவரைக்கும் நீங்க தூங்கவேயில்லையாம். அப்புறம் எப்படி ஏழு மணிக்கு உங்களால வர முடியும்?" என்று ஸ்ரீதர் சொல்லிக் கொண்டே போக கண்ணதாசன், விஸ்வநாதன் பக்கம் திரும்பி அவரைப் பார்த்தார். கண்ணதாசனின் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாத எம்.எஸ்.விஸ்வநாதன் தலையைக் குனிந்து கொண்டார்.
சிறிது நேரத்திலே கம்போசிங் தொடங்கியது. ஸ்ரீதர் பாடல் எழுதப்பட வேண்டிய காட்சியை விளக்க, "நீங்க முதல்ல பாட்டை எழுதி விடுங்கள். நீங்கள் எழுதுகின்ற பாடலுக்கு நான் இசையமைக்கிறேன்.." என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
"பரவாயில்லை… நீ மெட்டைச் சொல்லு.." என்று கண்ணதாசன் சொல்ல "ல ல ல லா லா லா …" என்று விஸ்வநாதன் மெட்டைப் பாடிக் காட்டினார். அடுத்த நிமிடம் பாடலை சொல்லத் தொடங்கிய கண்ணதாசன் பாடல் வரிகளை மட்டும் சொல்லவில்லை. விஸ்வநாதனைப் பார்த்து தான் கேட்க நினைத்த கேள்வியையும் அந்தப் பாடலின் வழியே கேட்டார்.
"சொன்னது நீ தானா ?….."
கண்ணதாசனின் அந்த வார்த்தைகளை சொன்னவுடன் விஸ்வநாதன் முகம் மாறியது. கவியரசர் இன்று பாட்டால் தன்னை அடிக்கப் போகிறார் என்று புரிந்து கொண்ட அவர் அடுத்து "ல ல ல" என்று சொல்ல ஒரு கணம்கூட தாமதிக்காமல் "சொல் … சொல்.. சொல்…" என்றார் கண்ணதாசன்.
அத்துடன் நிற்காமல், "சம்மதம்தானா? ஏன் ஏன் ஏன் என்னுயிரே… இன்னொரு கைகளிலே, யார், யார், யார்.. நானா? என்னை மறந்தாயா..? ஏன் ஏன் ஏன் என்னுயிரே…?" என்று கண்ணதாசன் பல்லவியைச் சொல்லி முடித்தபோது விஸ்வநாதன் முழித்ததைப் பார்த்த ஸ்ரீதர் குலுங்கி, குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
பின்னர் மற்ற மற்ற சரணங்களையும் மடை திறந்த வெள்ளம் போல கண்ணதாசன் சொல்ல அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த பாடல் கம்போசிங் முடிவடைந்தது.
-கணேஷ் பாண்டியன்
- சரி கலோரி வகையில் கோதுமை எப்படி என்று பார்ப்போம்..
- அரிசியை விட கோதுமையை சாப்பிடச் சொன்னால் குறைவாக சாப்பிடுவார்கள்.
அரிசிக்கு பதில் கோதுமை சாப்பிட்டால் சர்க்கரை குறையும் என்பதே இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் .
கோதுமை -அரிசி.. எதில் அதிக மாவுச்சத்து இருக்கிறது ?
100 கிராம் கோதுமையில் 71 கிராம் கார்ப்ஸ் ( மாவுச்சத்து) இருக்கிறது.
அதே 100 கிராம் அரிசியில் 79 கிராம் கார்ப்ஸ் இருக்கிறது .
சரி கலோரி வகையில் கோதுமை எப்படி என்று பார்ப்போம்..
100 கிராம் அரிசியில் 358 கிலோ கலோரி கிடைக்கிறது.
100 கிராம் கோதுமையில் 339 கிலோ கலோரி கிடைக்கிறது.
ஆக கலோரி கணக்கிலும் மாவுச்சத்து கணக்கிலும் அரிசிக்கு கோதுமை சிறிதும் சளைத்ததல்ல.
பிறகு ஏன் கோதுமை பரிந்துரைக்கப்படுகிறது?
தமிழர்களுக்கு அரிசி பிடிக்கும். ஆனால் கோதுமை அவ்வளவாக பிடிக்காது. ( என்று நினைத்தது தப்பாகிவிட்டது)
அரிசியை விட கோதுமையை சாப்பிடச் சொன்னால் குறைவாக சாப்பிடுவார்கள். அதனால் சர்க்கரை கன்ட்ரோல் ஆகும் என்ற நினைப்பில் "கோதுமை" பரிந்துரைக்கப்பட்டது..
ஆனால் நடந்தது என்ன?
கோதுமையை வடக்கிந்திய சகோதரர்களை விட வெளுத்து வாங்கி வருகிறோம்.
கூடவே அரிசி சாப்பிடுவதும் குறைந்தபாடில்லை.
சராசரி தமிழன் ஒரு வருடத்திற்கு 127 கிலோ அரிசி சாப்பிடுகிறான்.
இது இந்திய சராசரி அளவை விட மிக அதிகம்( இந்திய சராசரி 77 கிலோ/வருடத்துக்கு)
சரி கோதுமையை அதிகமாக உண்ணும் மாநிலங்களாவது தெம்பா போஷாக்கா நல்லா இருக்காய்ங்களா ?
கோதுமைனா உடனே நமக்கு சிங்குகள் தான் நியாபகம் வராங்க..
ஒரு எட்டு நம்ம சிங்குகளின் பூமிக்கு போய் பார்ப்போம்.
பஞ்சாப் தான் நம் நாட்டிலேயே குண்டாவனவர்கள் அதிகம் இருப்பவர்களில் முதல் ரேங்க்.
ஆகவே கோதுமையினால் பெரிய பிரயோஜனம் கிடையாது என்பது திண்ணம்.
-டாக்டர். ஃபரூக் அப்துல்லா
- மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.
- குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பம், நல்ல பல்கலைக்கழகமாக திகழ சில வழிமுறைகள்..
*கணவன், மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
* குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உங்கள் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்ய விடக்கூடாது.
* வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை சீர்குலைக்கும்.
* ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோரும் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதைக் காப்பது, பகிர்வது, செலவிடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
* கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்னைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.
* குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகியவற்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.
* பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.
* தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடி மனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
* நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி அவசியம்..!
-வேதாத்ரி மகரிஷி
- பசிக்கு உணவு கொடுங்கள்.. உணவை பசித்தப்பின்பே கொடுங்கள்.. உடல் ஒழுங்காகும்.. உங்கள் நோயும் குணமாகும்.
- மீறப்பட்ட ஒழுங்கால் ஏற்பட்ட விளைவினை.. வேறொன்றால் ஒழுங்குப்படுத்த முயல்வதென்பது இயலாத காரியம்
உண்ணும்போது உங்களுக்கில்லாத அக்கறை.. உடல் பெருத்தப்பின்பு ஏற்படுவதில் நியாயமில்லை.
உணவுக்கும் பசிக்குமான இணக்கத்தை சீர்குலைத்தவர்கள்.. உணவு சரியில்லையென்றோ.. உடல் சரியில்லையென்றோ.. குறைச்சாற்றுவது எந்த விதத்தில் நியாயம்.
மீறப்பட்ட ஒழுங்கால் ஏற்பட்ட விளைவினை.. வேறொன்றால் ஒழுங்குப்படுத்த முயல்வதென்பது இயலாத காரியம்.
நீங்கள் எந்தவித நோயாளியானாலும்.. அந்த நோய் ஆரம்பித்த இடம் உங்கள் வயிற்றிலிருந்துதான்.. அங்கிருந்துதான் அந்நோய்க்கான சிகிச்சையும்.. தொடங்கப்பட வேண்டும்..
பசிக்கு உணவு கொடுங்கள்.. உணவை பசித்தப்பின்பே கொடுங்கள்.. உடல் ஒழுங்காகும்.. உங்கள் நோயும் குணமாகும்..
தேவைக்குகொடுக்கப்படாமல் போனால் அழிவாகும்.. தேவைக்குமேல் கொடுக்கப்பட்டதெல்லாம் கழிவாகும்..
கழிவுத்தேக்கமே காலம் கடந்த நோய்க்குக் காரணம்..
கழிவு கரையான் போன்றது.. அரிப்பது தெரியாது.. அழிந்தப்பின்பே தெரியவரும்.
-அன்பு வேல் முருகன்
- ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.
- தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!
இந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்கள். தங்களது பெயரில் இந்தி என்னும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. இணைத்துக்கொள்ள முடியவும் முடியாது.
கன்னடம்------முடியாது.
தெலுங்கு--- முடியாது.
மலையாளம்------முடியாது.
ஏனைய மொழிகள்----முடியாது.
ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.ஆனால் தமிழில்...
தமிழ்,
தமிழ்ச்செல்வி,
தமிழ்ச்செல்வன்,
தமிழரசன்,
தமிழ்க்கதிர்,
தமிழ்க்கனல்,
தமிழ்க்கிழான்,
தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி,
தமிழ்மாறன்,
தமிழ்முடி,
தமிழ்வென்றி,
தமிழ்மல்லன்,
தமிழ்வேலன்,
தமிழ்த்தென்றல்,
தமிழழகன்,
தமிழ்த்தும்பி,
தமிழ்த்தம்பி,
தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல்,
தமிழ்மறை,
தமிழ்மறையான்,
தமிழ்நாவன்,
தமிழ்நாடன்,
தமிழ்நிலவன்,
தமிழ்நெஞ்சன்,
தமிழ்நேயன்,
தமிழ்ப்பித்தன்,
தமிழ்வண்ணன்,
தமிழ்ப்புனல்,
தமிழ்எழிலன்,
தமிழ்நம்பி,
தமிழ்த்தேவன்,
தமிழ்மகன்,
தமிழ்முதல்வன்,
தமிழ்முகிலன்,
தமிழ் வேந்தன்,
தமிழ் கொடி.
என்று தமிழோடு... தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!
தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!
பெற்றவர்களை ஏன் அம்மா அப்பா என்கிறோம் ?
"அம்மா" "அப்பா" என்று ஏன்கூப்பிடுகிறோம்?
எப்பவாவது எண்ணிப் பார்த்தீர்களா.?
அந்தச் சொற்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?
அந்தச் சொற்களுக்கான அர்த்தங்கள் என்ன...?
அ- – உயிரெழுத்து.
ம் –- மெய்யெழுத்து.
மா –- உயிர் மெய்யெழுத்து.
அ –- உயிரெழுத்து.
ப் –- மெய்யெழுத்து.
பா –- உயிர் மெய்யெழுத்து.
தன் குழந்தைக்கு உயிரைக் கொடுப்பவர் தந்தை.
தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் .
இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.
எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.
நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன !
- துலாக்கோல் சோம நடராசன்
- விருப்பத்துடன் ஈடுபடும் செயல்கள் உடலுக்கும் மனதிற்க்கு வலிமையை தரும்.
- சர்க்கரை நோய் போன்ற தீராத பல நோய்களுக்கு நீச்சல் பழகுவது நல்ல பலனை தருகிறது.
எந்த உடல் உழைப்பும் இல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே உடற்பயிற்சி செய்வது உடலை வலுவிழக்க செய்யும். உடலும் மனமும் ஒருங்கிணைந்து செய்யகூடிய உடல் உழைப்பே மனிதனுக்கு ஆரோக்கியத்தை தரும்..
நண்பர்களை சந்திக்க நீண்ட தூரம் ஆவலுடன் நடந்து செல்வது, விவசாய வேலை செய்து தோட்டத்தை செழுமை படுத்துவது, இவை எல்லாமே மனம் அந்த செயலில் விருப்பத்துடன் ஈடுபடும். விருப்பத்துடன் ஈடுபடும் செயல்கள் உடலுக்கும் மனதிற்க்கு வலிமையை தரும்.
ஒட்டபயிற்சி என்ற பெயரில் தினமும் காலையில் வெறுமனே ஒடுவது.. இதுக்கூட பரவாயில்லை, கொஞ்சம் பலன் கொடுக்கும். ஆனால் ஹெட்போனில் பாடல் கேட்டுகொண்டு ஒடுவது, ஹெட்போன் போட்டும் போடாமலும் டிரட்மில்லில் ஒடுவதெல்லாம் மனதையும் உடலையும் ஒருங்கிணைக்க செய்யாமல் மனசிதறல் நோய் ஏற்படும். உடல் வலிமை இழக்கும். உபகரணங்கள் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வதெல்லாம் மனதை ஏமாற்றும் வேலைதான். நோய்தான் மிஞ்சும்.உடலுக்கு ஆரோக்கியம் தராது.
காட்டுவேலை அல்லது வீட்டு தோட்ட வேலை செய்யுங்கள்.. எப்பொதெல்லாம் மன கவலை அதிகம் ஆகிறதோ அப்போதெல்லாம் மண்ணை கிளறி மரம் செடி நடுங்கள்.. வாய்ப்பு இருந்தால் நீச்சல் அடியுங்கள். சர்க்கரை நோய் போன்ற தீராத பல நோய்களுக்கு நீச்சல் பழகுவது நல்ல பலனை தருகிறது.
நடந்து சென்று உறவுகளை சந்திப்பது,தோட்டவேலை செய்வது, நண்பர்களுடன் விளையாடுவது, நீச்சல் பழகுவது, மிதமான உடல் உழைப்புடன் வேலை செய்வது இவை மட்டுமே உடல் மனதை ஒருங்கினைத்து ஆரோக்கியத்தை தரும்.
-ரியாஸ்
- தூங்காமல் சேட்டை செய்கிற சிறு குழந்தையும் தாலாட்டு பாடலை கேட்டதும் உறங்கி விடுகிறது.
- உனது ஆழ்ந்த நம்பிக்கையின் படியே அமைந்து விடும்.
தாலாட்டு பாடல் எளிமையானது. மந்திரங்கள் போலவே ஒரிரு வரிகள்தான்.
'ஆரிரரோ..' என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வரும். அதில்,குழந்தை அமைதியாக தூங்கிவிடும்.
ஒரு வார்த்தை, ஒருமுறை வரும்போது மட்டுமே அது வார்த்தை.
திரும்பத்திரும்ப வரும்போது அது வெறும் வார்த்தை மட்டுமல்ல..
அது மெல்ல மெல்ல உடலில் ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தும்.
தொடர்ந்து உச்சரிக்கப்படும் வார்த்தைகள், உடம்பில் வேதியியல் தன்மையை மாற்றுகிறது. இது அறிவியல் உண்மை. அதனால், தூங்காமல் சேட்டை செய்கிற சிறு குழந்தையும் தாலாட்டு பாடலை கேட்டதும் உறங்கி விடுகிறது. இது மின்னாற்றலுக்குரிய நிகழ்வு.
ஒரு குறிப்பிட்ட வார்த்தை, நமது கவலை உணர்வை சரி செய்து விடும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை முன்பே இருந்தால், அதற்கேற்றது போல், அந்த வார்த்தை ஏற்படுத்தும் வேதியியல் மாற்றம் செயல்படும்.
' ராம்... ராம்....' என்று திரும்பத்திரும்ப உச்சரிக்கும்போது, அது ஏற்படுத்தும் அதிர்வுகள் வேதனையை தணிப்பதாகவும் தேவையில்லாத உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதாகவும் நினைக்கிற, உனது ஆழ்ந்த நம்பிக்கையின் படியே அமைந்து விடும்.
குழந்தைக்கு அதன் தாய் பாடுகிற தாலாட்டுப் போலவே, மந்திரங்கள் உங்களுக்குள் ஒரு ரீங்கார அதிர்வை ஏற்படுத்தவே செய்யும்.
-ஓஷோ
- நிலக்கிழாரின் நிலங்களுக்கான வாடகை தண்டும் முகவராக பணியாற்றினார்.
- ஆங்கிலத்தில் சில சொற்களை ஆய்வு செய்தால் இது போன்ற வேடிக்கையான வரலாற்றுச் செய்திகள் புதைந்து கிடப்பதை அறியலாம்.
ஆங்கிலத்தில் சில சொற்களை ஆய்வு செய்தால் இது போன்ற வேடிக்கையான வரலாற்றுச் செய்திகள் புதைந்து கிடப்பதை அறியலாம்.
தமிழர்கள், நற்றமிழ்ச் சொற்களைப் புறக்கணிக்காதீர்கள்… நமக்குப் பாய்காட் வேண்டாம்.
ஆங்கிலத்தில் ஆளப்பெறும் பாய்காட் boycott எனுஞ்சொல் ஆட்பெயரால் அமைந்த சிறப்புப் பெயராகும். புறக்கணிப்பு எனும் பொருளில் இச்சொல் ஆங்கிலத்தில் ஆளப்பெறுவது வியப்பே.
சால்சு கன்னிங்காம் பாய்காட் எனும் பிரிட்டிசு படைப்பிரிவு பொறுப்பாளர் பணி ஓய்வு பெற்ற பின் அயர்ந்லாந்தில் லோர்ட்டு ஏர்ன் எனும் நிலக்கிழாரின் நிலங்களுக்கான வாடகை தண்டும் முகவராக பணியாற்றினார்.
வாடகை எண்ணிப் பார்க்க முடியாதவாறு உயர்வாக இருந்தமையால் நிலத்தை வாடகைக்குப் பெற்றவர்கள் எதிர்க்கத் தொடங்கினர். பாய்காட், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் விரட்டியடிக்கவும் பணிக்கப்பட்டார்.
அவருடைய கடும்போக்கினால் வெறுப்படைந்த வாடகையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பாய்காட்டைப் புறக்கணிக்கத் தொடங்கினர்.
மக்களின் பேரெழுச்சியைப் பாய்காட்டால் தாங்க முடியவில்லை. இதனால் அவர் தம் மனைவி ஏனியுடனும் படை அதிகாரிகள் சிலரின் பாதுகாப்புடனும் ஒரு மருத்துவ ஊர்தியின் வாயிலாக ஊரை விட்டே ஓடி தப்பிச் சென்றார்.
அன்றிலிருந்து .. புறக்கணிப்பு எனும் பொருளில் பாய்காட் எனுஞ் சொல் ஆங்கிலத்தில் கையாளப்பட்டு வருகின்றது.
ஆங்கிலத்தில் சில சொற்களை ஆய்வு செய்தால் இது போன்ற வேடிக்கையான வரலாற்றுச் செய்திகள் புதைந்து கிடப்பதை அறியலாம்.
தமிழில் நாம் புறக்கணிப்பு எனும் சொல்லை மிகவும் பொருந்திய வேரியல், பொருள் நுட்பம், முதலிய மொழியியல் அடிப்படையில் பயன்படுத்துவது தமிழின் மேன்மையை வெளிப்படுத்துகின்றது எனில் மிகையாது. எனவே தமிழர்கள், நற்றமிழ்ச் சொற்களைப் புறக்கணிக்காதீர்கள்… நமக்குப் பாய்காட் வேண்டாம்.
-இரா. திருமாவளவன்
- சிறு குழந்தைகளை கண்டால் நாம் அனைவரும் அன்போடு குழந்தையை கொஞ்சுவோம்.
- தாய்மை உணர்வை குயில் ஆனது காக்கையை வைத்து நன்கு பயன்படுத்தி கொள்கிறது.
குயில் ஒட்டுண்ணி வகைப் பறவை. குயிலை போல் ஒரு சோம்பேறி பறவை, பறவை இனத்திலேயே கிடையாது. குயில் ஒரு போதும் கூடு கட்டி அடைகாப்பதில்லை. குயில் காகத்தின் கூட்டில் மட்டும் அல்ல தவிட்டுக்குருவி போன்ற சிறு பறவைகளின் கூட்டிலும் முட்டை இட்டு பறந்து விடும்.
கூட்டில் அடைகாக்கும் காகத்தின் கவனத்தை திசை திருப்ப ஆண்குயில் காகத்திடம் வம்பு வளர்க்கும். ஆண்குயிலை, பெண் காகம் துரத்தி செல்லும் போது காக்கை கூட்டில் பெண்குயில் முட்டையிட்டு சென்று விடும்.
குயில் முட்டைகள் பெரிதாக இருந்தாலும், நிறம் வேறாக இருந்தாலும் மற்ற பறவைகள் குயில் முட்டையை அடையாளம் தெரிந்தே தாய்மை உணர்வோடு அடை காத்து குஞ்சு பொரித்து ஊட்டி வளர்க்கும்.
குயில் குஞ்சுகள் பிறந்த உடன் கண் தெரியா விட்டாலும் அதாவது கண்ணை திறக்கும் முன்பே, தான் மட்டும் வாழ வேண்டும் என்ற உள்ளுணர்வால் தனது கால்களை கொண்டு பிற குஞ்சுகளைக் கீழே தள்ளி விடும்.
சிறு குழந்தைகளை கண்டால் நாம் அனைவரும் அன்போடு குழந்தையை கொஞ்சுவோம். குழந்தைகள் மீது இவ்வாறு அன்பும் பாசமும், இரக்கமும் வருவதற்கு oxytocin என்ற தாய்மை ஹார்மோன் தான் காரணம். இந்த தாய்மை உணர்வை குயில் ஆனது காக்கையை வைத்து நன்கு பயன்படுத்தி கொள்கிறது.
காகம், குயில் இரண்டில் எது பிடிக்கும் என கேட்டால் குயில் தான் பிடிக்கும் என்போம் நம்மில் பெரும்பாலானோர்.காரணம் கேட்டால் குயில் அழகாக கூவும்.. குயில் பாட்டுக்கு இணை உண்டா? என்பார்கள். குயில் அதிகாலை மூன்று மணிக்கே கூவி மனிதர்களின் உறக்கத்தை கெடுக்கும்.
சிறு உணவு கிடைத்தாலும் தன் கூட்டத்தை கூவி அழைத்து பகிர்ந்து உண்ணும் காகம். தன் காக்கை இனத்தில் ஒன்று மறைந்தால் கூடி கரைந்து வருந்தும். தன் இன காக்கை கூட்டை நோக்கி மனிதனோ, பிற எதிரியோ சென்றால் அடுத்தவனுக்கு தானே ஆபத்து என எண்ணாமல் காகங்கள் அத்தனையும் ஒன்று கூடி எதிர்க்கும்.
இத்தனை நல்ல குணங்களை கொண்ட காக்கையை விரும்பாது குயிலை அதனின் குரலுக்காக மனிதன் விரும்புவது ஏனோ?
-சுரேஸ்வரன் ஐயாபழம்
- கல்யாணத்தை அவரது வீட்டிலேயே எளிமையாக நடத்துகிறார்.
- கடைசியில் ‘காமராஜர் வரமாட்டார்’ என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது.
காமராஜர் முதல்வராக இருந்த சமயம்.. அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார்.
உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர், என்ன ரெட்டியாரே.. செளக்கியமா? என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?" என அழைத்து அருகில் அமரச்செய்தார்.
இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.." என தயங்க.. அடடே நல்ல சேதிதானே.. இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி. நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்க" என்று தோளில் தட்ட..
இல்ல.. கல்லாணத்துக்கு நீங்க வரனும். நீங்கதான் தலைமை தாங்கனும்.. ஊரெல்லாம் சொல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன். நீங்க எப்படியும் வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க" என்று ரெட்டியார் இழுக்க..
காமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது. எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன்" என்று கடுமைகூட்டினார்.
ரெட்டியாருக்கு கண்கள் கலங்கியது.. தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர். அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டன்" என்றார்.
பெருந்தலைவருக்கு கோபம்... "உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா? போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க" என்று பட்டென்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.
முகத்தில் அடித்ததை போல் ஆனது ரெட்டியாருக்கு. நடந்ததை வெளியில் சொல்லிக் கொள்வில்லை.
கல்யாணத்தை அவரது வீட்டிலேயே எளிமையாக நடத்துகிறார். அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும்.
கடைசியில் 'காமராஜர் வரமாட்டார்' என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது. வந்தவர்கள், போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள்..
மனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல் கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். அந்த கல்லாயான வீடே வெறிச்சோடிப்போனது..
திடீரென ஒரு கார் அங்கு வந்தது. வந்தவரோ..."முதல்வர் காமராஜர் கொஞ்ச நேரத்தில் வரபோகிறார்" என்ற செய்தியைச் சொல்லி போய்விட்டார். சட்டென ஓர் கார் வந்து நின்றது. பெருந்தலைவரே வந்து இறங்கினார்.
இரண்டு, மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு.
ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் காமராஜர் வந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி கூட்டம் சேர்ந்துவிட்டது….
ரெட்டியார், முதல்வரை கட்டித்தழுவிக் கொண்டார். குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்..
"உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம், ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டீங்க...எனக்குத் தெரியும்.
அதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற இந்த நெலமில கடன் வாங்குவீர்..
முதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்.. அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா… உன் வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாம எங்கபோவன்" என்று ஆரத்தழுவி கண்ணீர் சிந்தினார்..
பிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்து வந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார்.
இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்.. ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை…
-எச்.கே. சாம்






