search icon
என் மலர்tooltip icon

  கதம்பம்

  அவ்வையாரும் பிள்ளையாரும்
  X

  அவ்வையாரும் பிள்ளையாரும்

  • இந்தியாவில் வேறெங்கும் இத்தனை பிள்ளையார் கோவில்கள் கிடையாது.
  • எடுத்துக் கொண்ட காரியம் சுழித்துப் போகாமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார் சுழி.

  `அவ்வையாருக்குப் பிள்ளையார் மேல் ஏன் அப்படியொரு பக்தி? பிள்ளையாருக்கு என்ன அத்தனை மகத்துவம்?` என்று கேட்டுவிட்டு, மகாசுவாமிகளின் திருமுகத்தையே பதில்வேண்டிப் பார்த்தவாறிருந்தார் ஓர் அன்பர். மகாசுவாமிகள் பேசலானார்..

  `வயதான பாட்டி என்றால் காலை நீட்டிக் கொண்டு தள்ளாமை காரணமாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பதுதான் வழக்கம்.

  ஆனால் அவ்வைப் பாட்டியோ ஊர் ஊராகச் சுற்றி தமிழையும் ஆன்மிகத்தையும் எல்லா இடங்களிலும் பரப்பிக் கொண்டிருந்தாள்.

  குழந்தை என்றால் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் தவழ்ந்து கொண்டும் நடந்துகொண்டும் இருப்பதுதான் வழக்கம்.

  பிள்ளையாராகிய குழந்தையோ தொந்தியும் தொப்பையுமாக யானை முகத்துடன் அழகே வடிவாக ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறது.

  அதனால்தான் கல்லுப் பிள்ளையார் மாதிரி ஏன் அசையாமல் இருக்கிறாய் என்று நாம் சிலரைக் கேட்கிறோம். வேடிக்கையான பாட்டி. வேடிக்கையான குழந்தை.

  சகல உலகங்களுக்கும் தாய் தந்தையான பார்வதி பரமேஸ்வரனின் மூத்த பிள்ளை என்பதால் மரியாதையோடு அவரைப் பிள்ளையார் என்கிறோம்.

  `குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே` என்பார்கள். குழந்தை வடிவில் வந்துள்ள தெய்வம் பிள்ளையார். அதனால் அவரை எல்லோரும் கொண்டாடுகிறோம்.

  அவ்வை ஓடி ஆடி ஆன்மிகப் பணி செய்ததற்கு இந்தப் பிள்ளையின் அருள்தான் காரணம். அதனால் அவ்வை, தான் சென்ற இடங்களிலெல்லாம் பிள்ளையார் பக்தியைப் பரப்பினாள்.

  தமிழகத்தில், அரச மரத்தடியிலும் தெரு மூலைகளிலும் என எல்லா இடங்களிலும் பிள்ளையார் எழுந்தருளியிருப்பதற்கு அவ்வையார் பரப்பிய விநாயகர் பக்தியே காரணம். இந்தியாவில் வேறெங்கும் இத்தனை பிள்ளையார் கோவில்கள் கிடையாது.

  ஆயிரம் காலமாக இந்த தேசத்தில் ஒழுக்கமும் பக்தியும் இருந்துவருகிறதென்றால் அது முக்கியமாக அவ்வையாரால் தான்.

  அவளுடைய அன்பின் விசேஷத்தால் அவளுக்கப்புறம் எத்தனையோ தலைமுறைகள் ஆனபிறகு இப்போதும் நாம் படிக்க ஆரம்பிக்கிறபோதே அவளுடைய ஆத்திசூடிதான் முதலில் வருகிறது.`

  நம் தமிழ்மொழிக்குப் பிள்ளையார் ரொம்ப முக்கியம். எதை நாம் எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு மளிகைப் பொருள் லிஸ்ட் எழுதினால் கூட முதலில் பிள்ளையார் சுழி தானே போடுகிறோம்?

  எடுத்துக் கொண்ட காரியம் சுழித்துப் போகாமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக முதலில் பிள்ளையார் சுழி.

  படிக்கத் தொடங்கியவுடனேயே நாம் முதலில் கற்றுக் கொள்வது ஒளவைப் பாட்டியின் அறிவுரைகளைத் தான். வாக்கு உண்டாவதற்கே பிள்ளையார் பாதத்தைத் தான் பிடித்தாக வேண்டும் என்று அவள் கற்றுக் கொடுக்கிறாள்.

  `வாக்குண்டாம்` என்று பாடல் தொடங்குகிறது. வாக்கு மட்டும் தானா? பேச்சை அழகாக ஜோடித்து விட்டால் போதுமா?

  நல்ல மனதைப் பெற்று அந்த மனதிலிருக்கிற நல்ல எண்ணங்கள், கருத்துகள் வாக்கில் வந்தால்தானே நமக்கும் புண்ணியம், மற்றவர்க்கும் பயன்? எனவே நல்ல மனம் கிடைக்கும். இன்னும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

  `தப்பாமல் கிடைக்கும்` அதாவது `நிச்சயமாகக் கிடைக்கும்` என்கிறாள் அவ்வை. அந்த மிகப் பொருத்தமான வார்த்தையை அவ்வை தான் போட்டாளோ அல்லது தானே வந்து விழுந்ததோ?

  பிள்ளையார் பாதத்தைப் புஷ்பார்ச்சனை பண்ணிப் பிடித்து விட்டால் எல்லா மங்கலங்களும் கிடைத்துவிடும் என்று அவ்வை நமக்குப் பாடிக் கொடுத்திருக்கிறாள்.

  `வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

  நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

  துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

  தப்பாமல் சார்வார் தமக்கு`

  மேனி நுடங்காது என்றால் சரீரத்தைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாது என்று அர்த்தம். உடம்பை சிரமப்படுத்திக் கொள்ளாமல் நாலு பூவைப் பறித்து அவருக்குப் போட்டுவிட்டாலே போதும்.

  பிள்ளையாரை வணங்கினால் எல்லா மங்கலங்களும் கிட்டும்!`

  மகாசுவாமிகளின் அருளுரையைக் கேட்டு பக்தர் மனம் மகிழ்ந்து நமஸ்கரித்தார்.

  -திருப்பூர் கிருஷ்ணன்

  Next Story
  ×