என் மலர்
மற்றவை
- ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து போகிறார்.
- பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்.
சாரதா ஸ்டூடியோவில் திருவருட்செல்வர் படப்பிடிப்பு. நடிகர் திலகம் திருநாவுக்கரசர் என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக் கொண்டிருக்கிறார்...
படப்பிடிப்பு முடிந்து வேடத்தை கலைக்காமல் அன்னை இல்லம் நோக்கி காரில் செல்கிறார்.
நடிகர் திலகம், டிரைவரிடம் வீடு வரை ஹாரன் அடிக்காமல் போய் உள்ளே செல்லாமல் வெளியே காரை நிறுத்து என்று சொல்கிறார். டிரைவரும் அவ்வாறே செய்கிறார்...
எஜமானின் கார் வருவதைக் கண்டு அன்னை இல்ல காவலாளி கேட்டைத் திறக்கிறார்...
கார் வீட்டிற்குள் வராமல் வெளியே நிற்பதைக் கண்டு காரின் அருகே ஓடி வருகிறார் காவலாளி.
காரில் இருந்த நடிகர் திலகம் கீழே இறங்கி வாயில் விரலை வைத்து உஷ் என்று காவலாளிக்கு சைகை செய்து விட்டு...
ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து போகிறார். வாசலை அடைந்ததும் குரலை மாற்றி "அம்மா தாயே " என்று குரல் கொடுக்கிறார்...
குரல் கேட்டு வருகிறார் ராஜாமணி அம்மையார்..
அம்மாவைக் கண்டதும், "தாயே நான் ஒரு சிவபக்தன். கைலாயமலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்... வழியில் கிடைத்ததை சாப்பிடுவேன்.... ஒரு வாய் சோறு கிடைக்குமா" என்று கேட்கிறார்.
பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்..
சாமியார், சாப்பிடும் விதத்தை பார்த்து, நம்ம கணேசன் சாப்பிடுவதைப் போல் இருக்கிறதே என்று எண்ணி கூர்ந்து கவனிக்கிறார் ராஜாமணி அம்மாள்.
எத்தனையோ முகபாவங்களை காட்டுபவர் அம்மாவின் முகம் மாறுதலைக் கண்டு சத்தம் போட்டு சிரிக்கிறார் நடிகர் திலகம்...
அந்த சிரிப்பு சத்தம் கேட்டு சாப்பிடுவது தன் மகன் கணேசன் என்றுணர்ந்து பிரமிக்கிறார் ராஜாமணி அம்மாள்.
-அண்ணாதுரை துரைசாமி
- பாதிப்பு நடந்த இடத்தில் அதை சரிசெய்யும் பொருட்டு வந்த என்னை குற்றவாளியாக்குகிறீர்கள்.
- ரத்தத்தில் எப்படி ஹீமோகுளோபின் முக்கியமோ, எப்படி சரியான அளவில் க்ளூகோஸ் முக்கியமோ, அதே போல நானும் முக்கியமானவன்.
அன்புடையீர், நான் கொலஸ்ட்ரால் பேசுகிறேன். என் பெயரைச் சொன்னாலே உங்களுக்கெல்லாம் அச்சம் தொற்றிக் கொள்கிறது தானே?
உண்மையில் நீங்கள் என்னை வெறுத்து உணவு வழியாக உட்கொள்ளத் தயங்கினாலும் உடலுக்குத் தேவையான என்னை உங்கள் கல்லீரலே சமைத்துக் கொடுத்து விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கொலஸ்ட்ரால் கெட்டது என்றும் இதய அடைப்பை ஏற்படுத்தும் என்று தானே அச்சப்படுகிறீர்கள் .
நானின்றி உங்களின் மூளை இயங்காது. உங்களின் மூளையில் முக்கால்வாசி என்னால் ஆனது என்றால் நம்ப முடிகிறதா? ஒரு செல்லிலும் உயிர் இருக்காது. காரணம் செல்களின் சுவர் என்னால் ஆனது.
நானில்லை என்றால் இவ்வுலகில் ஆணில்லை பெண்ணில்லை.. கர்ப்பமில்லை.. குழந்தைப்பேறில்லை..
நான் தேவையில்லை என்று நீங்கள் உண்ணாமல் விட்டாலும், ஏன் கல்லீரலே என்னை உற்பத்தி செய்யாமல் போனாலும் உங்களின் ஒவ்வொரு செல்லும் என்னை தன்னகத்தே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுடன் இருப்பதை அறிவீர்களா?
உங்களுக்குள் பிரிவினை பேதம் கற்பிப்பது போலவே என்னையும் நல்ல கொலஸ்ட்ரால் என்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் பிரித்து வைத்திருக்கிறீர்கள் .
கல்லீரலில் இருந்து செல்களுக்குத் தேவையான என்னைக் கொண்டு செல்பவனை - கெட்ட கொலஸ்ட்ரால் ( எல் டி எல்) என்றும் ,
செல்கள் உபயோகித்து மீதமிருக்கும் என்னை கல்லீரலுக்கு கொண்டு வருபவனை - நல்ல கொலஸ்ட்ரால் ( ஹெச் டி எல்) என்றும் கூறுகிறீர்கள்.
அது எப்படி கல்லீரல் செல்களுக்கென சமைத்த என்னை, செல்களை நோக்கி கொண்டு செல்பவன் கெட்டவனாகிறான்?
நீரிழிவு , ரத்தக் கொதிப்பு, புகைப்பழக்கம், குடி நோய், மன அழுத்தம் , போதிய உறக்கமின்மை, இன்சுலின் எதிர்ப்புநிலை, உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளை நீங்கள் வரவழைத்துக் கொண்டு அதனால் உங்களின் ரத்த நாளங்களில் தொடர்ந்து காயங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இந்தக் காயங்களுக்கு கொலஸ்ட்ரால் மருந்து பூச வரும் பெரிய எல்டிஎல் ஆகிய என்னை விட்டத்தில் சிறியவனாக்கி ( சிறிய எல்டிஎல்) விடுகிறீர்கள்.
அளவில் சிறியவனான நான் ரத்த நாளத்தின் உட்புற சுவர் வழியாக உள்ளே செல்கிறேன். என்னை அதற்குக் கீழ் செல்லவிடாமல் தடுக்க அங்கு ரத்தக் கட்டி உருவாகிறது. அதுவே நாளடைவில் ரத்த நாள அடைப்பை ஏற்படுத்துகிறது.
நானோ ரத்த நாளத்தின் காயங்களுக்கு மருந்து பூச வந்தவன். கூடவே செல்களுக்கு கல்லீரல் படைத்த சமையலை விருந்து படைக்க வந்தவன்.
ஆனால் உங்களின் உடலில் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர் உள்காயங்களால் என்னை வழிகெடுத்து பெரிய எல்டிஎல் ஆகிய என்னை சிறிய எல்டிஎல் ஆக்குவது நீங்கள் தான். ஆனால் பழி மட்டும் என் மீது போடப்பட்டு விட்டது. காலங்காலமாக இந்த பழியை நான் சுமந்து வருகிறேன்.
உண்மையில் நான் செல்களை சென்று சேர்ந்தால் தான், செல்கள் என்னை அவற்றின் சுவர்கள் உருவாக்கத்தில் பயன்படுத்திக் கொண்டு அவை புணர்நிர்மானம் செய்து கொள்ள முடியும்.
இதய அடைப்புகளில் என்னைப் பார்ப்பதால் நான் தான் அடைப்புக்கு காரணம் என்று கருதுகிறீர்கள்.
தீ பற்றிய வீதியில் தீயணைப்பு வண்டிகள் நிற்பதால் தீயணைப்பு வண்டிகளால் தான் தீ பற்றியது என்று எப்படி கூறமாட்டீர்களோ அதே நியாயம் எனக்கும் உண்டு.
பாதிப்பு நடந்த இடத்தில் அதை சரிசெய்யும் பொருட்டு வந்த என்னை குற்றவாளியாக்குகிறீர்கள்.
பாதிப்பை தொடர்ந்து செய்யும் அதிக க்ளூகோஸ் எனும் திருடனை நேக்காக தப்பிக்க வைத்து விடுகிறீர்கள்.
உங்களில் யாருக்கேனும் க்ளூகோஸ் அதிகமாகி சர்க்கரை நோய் வந்தாலும் முதலில் நான் இருக்கும் மாமிசத்தை நிறுத்துமாறு தான் பணிக்கப்படுகிறீர்கள்.
சர்க்கரை நோயாளி டீ காபியில் சீனியை நாட்டு சர்க்கரையை நிறுத்துவது நியாயம் அதை விடுத்து என்னை உண்பதை முற்றிலுமாக நிறுத்தி கிடைப்பது என்ன?
ரத்தத்தில் எப்படி ஹீமோகுளோபின் முக்கியமோ, எப்படி சரியான அளவில் க்ளூகோஸ் முக்கியமோ, அதே போல நானும் முக்கியமானவன்.
என்னை பகைவனாக நீங்கள் நினைத்தாலும் நான் எந்நாளும் உங்களுக்கு உற்ற தோழன் தான் என்று கூறி இந்த மடலை நிறைவு செய்கிறேன்.
இப்படிக்கு,
பாசமுள்ள உற்ற தோழன் கொலஸ்ட்ரால்.
-டாக்டர். ஃபரூக் அப்துல்லா
- வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
- சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது.
சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பே பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.
சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம். யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.
சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.
-ரேகா ஸ்ரீ
- ஹோவி பிரபு தீவில் மக்கள் தொகை 400 தான்.
- ஹோவி தீவு ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே உள்ளது.
ரொம்ப கஸ்டமான ஒரு சுற்றுலா போகணுமா? ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஒரு விமானத்தை பிடிங்க. அங்கிருந்து நியூஸிலாந்து போகும் வழியில் 700 கிமி தொலைவில் லார்ட் ஹோவி தீவு உள்ளது.
"இதெல்லாம் ஒரு அதிசயமா? சிட்னிக்கு போறது கிட்னியை விற்கும் அளவு கஸ்டமா?"னு டென்சன் ஆகக்கூடாது.
ஹோவி பிரபு தீவில் மக்கள் தொகை 400 தான். தீவிலும் அதே எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் தான் இருக்கமுடியும். அதனால் அங்கிருந்து ஒரு சுற்றுலா பயணி கிளம்பினால் தான் உங்களுக்கு அங்கே போக டிக்கட் கிடைக்கும்.
எதுக்கு இப்படி எண்ணிக்கையை மட்டுப்படுத்துகிறார்கள்?
ஹோவி தீவு ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையே உள்ளது. மனித நடமாட்டமே இல்லை என்பதால் இறகுகள் இல்லாத நிறைய பறவை இனங்கள் ஜாலியாக வசித்து வந்தன. அவற்றை உண்ண பாம்புகள் இல்லை, முட்டைகளை திருட எலிகள் இல்லை, பூனைகள் இல்லை, கழுகுகள் இல்லை. சொர்க்கம் மாதிரியான வாழ்க்கை.
தீவின் அகலம் 2 கிமீ, நீளம் 14 கிமீ. அழகான பீச்சுகள், உலகில் எங்கேயும் காணமுடியாத வித்தியாசமான மரம், செடிவகைகள்...அங்கே கிடைக்கும் கென்டியா எனும் ஒரு வகை பனை ஐரோப்பாவெங்கும் வெகு பிரபலம். உலகிலேயே இங்கே மட்டும் தான் அவை கிடைக்கும். தீவின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்.
ஆனால் மனிதன் காலடி எடுத்து வைத்தான். தொல்லைகள் துவங்கின. பல பறவை இனங்கள் அழிந்தன. சுற்றுலா பயணிகள் குவிந்தார்கள். தீவெங்கும் எலிகள் பெருகின.
2015ம் ஆண்டு தீவுவாசிகள் விழித்துக்கொண்டார்கள். இயற்கையை காப்பாற்றவேண்டுமெனில் முதலில் சுற்றுப்பயணத்தை கட்டுபடுத்தனும் என முடிவு செய்து ஒரு சமயத்துக்கு 400 பயணிகள் தான் என மட்டுப்படுத்தினார்கள். டீசல் ஜெனெரேட்டர் மூலம் தீவுக்கு கிடைத்த மின்சாரம் சோலார் பேனலுக்கு மாறியது. தீவின் இயற்கை கழிவுகள் முழுக்க காம்போஸ்ட் செய்யபட்டு உரமாக்கபட்டன.
சுற்றுலா பயணிகளுக்கு கார்கள் கிடையாது. சைக்கிள்தான். தீவின் சுற்றளவு மிக குறைவு என்பதால் அவர்களும் சரி என சொல்லிவிட்டார்கள். ஓட்டல் அறைவாடகைகள் மிக அதிகரிக்கபட்டன. உணவகங்களில் விலையும் கூட்டபட்டது. சீசனுக்கு போனால் ஒரு நாள் வாடகை ரூ 32,000 வரும். அதனால் வசதியான நபர்கள் தான் சுற்றுலா போகமுடியும்.
இவர்களின் முயற்சியின் விளைவால் யுனெஸ்கோ அமைப்பு அந்த தீவுக்கு "உலக பாரம்பரிய தீவு" எனும் அங்கீகாரத்தை வழ்ங்கியுள்ளது
- நியாண்டர் செல்வன்
- புது டிசைனில் சட்டை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்.
- புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே.,
நமக்கு விருப்பமான ஒன்று என்றால் அதற்காக நாம் நம் நேரத்தை செலவு செய்வோம்,
பணத்தை செலவு செய்வோம்,
எவ்வளவு அதில் மூழ்கி இருந்தாலும் இன்னும் இன்னும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.
மேலும் மேலும் அதில் புதிதாக என்ன இருக்கிறது என்று ஆராய்வோம்.
புதுசா ஒரு இசைத் தகடு வந்து இருக்கிறதாமே.,
புது டிசைனில் சட்டை வந்து இருக்கிறதாமே என்று தேடித் போய் வாங்குவோம்...
எது நமக்கு விருப்பமானதோ அது நம் சிந்தனையையை எப்போதும் ஆக்ரமித்துக் கொண்டே இருக்கும்.
நமக்கு விருப்பமான செயலை செய்வதில் நமக்கு ஒரு வருத்தமோ பளுவோ தெரியாது...
மகிழ்ச்சியாக செய்வோம்...
எனவே, ஔவை பாட்டி சொன்னாள்...
"அறம் செய்ய விரும்பு" என்று.
விரும்பினால், மகிழ்ச்சியாக அறம் செய்வோம்,
மீண்டும் மீண்டும் செய்வோம்,
தேடி தேடி போய் செய்வோம்...
அறம் செய் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஏதோ வருடத்திற்கு ஒரு முறை கொஞ்சம் செய்துவிட்டு, ஔவை சொன்ன மாதிரி அறம் செய்து விட்டேன் என்று முடித்துக் கொள்வோம்.
அறம் என்பதற்கு தானம் என்று மட்டும் பொருள் அல்ல...
அற வழியில் நிற்றல் என்றால் ஒழுங்கான, தர்ம வழியில் நிற்றல் என்று பொருள்.
அற வழியில் நிற்க விருப்பப் பட வேண்டும்.
எனவே அறம் செய்ய விரும்புங்கள்.!
- பரஞ்சோதி சந்திரமோகன்
- ஹாங்காங் படங்களில் ப்ரூஸ் லி நடித்த படங்களும் அங்கே நன்றாக ஓடின.
- ஆங்கிலத்தில் டிவி சீரியல்கள், இரண்டாம் ஹீரோ என நடித்து வந்தார்.
'என்டர் த டிராகன்' படம் மூலம் தான் ப்ரூஸ் லி உலகப்புகழ் பெற்றார். அதற்குமுன் ஹாலிவுட்டில் அவர் ஊர், பேர் தெரியாத ஹீரோ. ஹாங்காங் படங்களில் ப்ரூஸ் லி நடித்த படங்களும் அங்கே நன்றாக ஓடின.
ஆனால் ஹாலிவுட்டில் அவரை யாருக்கும் தெரியாது. ஆங்கிலத்தில் டிவி சீரியல்கள், இரண்டாம் ஹீரோ என நடித்து வந்தார். இந்த சூழலில் திடீர் என தன் 32வது வயதில் மரணமும் அடைந்தார்.
அவர் இறந்து மூன்று மாதங்கள் கழித்து 'என்டர் த டிராகன்' வெளியானது. அது அத்தனை பெரிய வெற்றி பெறும் என யாருக்கும் தெரியாது. சும்மா எட்டரை லட்சம் டாலர் செலவில் எடுத்தார்கள். 20 கோடி டாலர் வசூல் செய்தது. அமெரிக்கா என இல்லை, திரையிட்ட நாடுகளெங்கும் வெற்றி என்றால் அப்படி ஒரு வெற்றி.
"யார் இந்த ப்ரூஸ் லீ?" ஹாலிவுட் பதறியடித்தபடி அவரது கால்ஷீட்டுக்கு அலைய, அவர் இறந்துவிட்ட செய்தி தெரிந்தது.
அதன்பின் அவரது பழைய சீன படங்களை வாங்கி "ரிட்டர்ன் ஆஃப் த டிராகன், பிஸ்ட் ஆப் பியூரி" என டப்பிங் பண்ணி ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள். அனைத்தும் அதிரி புதிரி வெற்றி.பாக்ஸ் ஆபிஸ் அதிர்ந்தது.
தான் இத்தனை பெரிய சூப்பர்ஸ்டார் ஆனது தெரியாமல் மண்ணுக்குள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார் ப்ரூஸ் லி.
வரலாறுதான் எத்தனை விசித்திரமானது?
-நியாண்டர் செல்வன்
- நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.
- அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமே அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே...
உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று. நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?
1. ஞாயிறு — சூரியன்
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப், பரங்கிக்காய் சாம்பார்.
2. திங்கள் — சந்திரன்
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி, மோர். பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பாம், இட்லி, தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.
3. செவ்வாய் — செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை, மிளகாய் துவயல்.
4. புதன் — புதன்
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாவக்காய் தொக்கு, முருங்கைக் காய் சூப், பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி, வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.
5. வியாழன் — குரு
சுக்கு காபி, அல்லது கஷாயாம், கார்ன் சூப், கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை, தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல், சாத்துக்குடி, மாம்பழஜூஸ், பொங்கல், கதம்பதயிர், எலுமிச்சை சாதம், மாதுளை, முந்திரி, திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.
6. வெள்ளி — சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட், முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.
7. சனி — சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம், புளியோதரை, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை. இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் அடிப்படை பொருட்களைப் பார்த்தால், அவை எல்லமே அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே...
-மதுரம்
- பெண்ணொருத்தி எங்கேயோ தொலை தூரத்தில் நின்று புலம்பிக் கொண்டிருந்தது போலத் தோன்றியது.
- இயற்கையின் ஜாலக் காட்சிகளை இருள் விழுங்கிவிடுகிறது எனினும் கதைக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது.
ஊர்: திருநெல்வேலி சந்திப்பு (அன்று வீரராகவபுரம் என்று அழைக்கப்பட்டது. என் அம்மா வீராபுரம் என்றே சொல்வாள்.)
புதுவையிலிருந்து பாரதியார் வருகிறார். வேதநாயகம் பிள்ளை ( மாயூரம் வேதநாயகம் பிள்ளை அல்ல.) நண்பர்களுடன் வரவேற்கக் காத்திருக்கிறார். பாரதியாரும் வந்துவிட்டார்.
சந்திப்பு நிலையத்திலிருந்து வண்ணார்பேட்டை போக வேண்டும். மாட்டு வண்டி வரவில்லை. பாரதியாருக்கு பொறுமை போய்விட்டது!
'மாட்டுவண்டியில் போவதுகூட காந்தியடிகளின் அகிம்சா தத்துவத்திற்கு விரோதம்தானே' என்று சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார். மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள்!
உடன் சென்றவர்களில் ஒருவர் பேரறிஞர் பி.ஸ்ரீ. ஆச்சாரியார் .அவர் பாரதியிடம் பெரும் பற்று கொண்டவர். அவர் எழுதிய 'பாரதி நான் கண்டதும் கேட்டதும்' என்ற நூலிலிருந்து சில வரிகள்:
"சொக்காயும், தலைப்பாகையும், நெற்றியில் திருநாமமும், கழுத்தில் நண்பர்கள் அணிந்த பூமாலைகளுமாய்ப் பாரதியார் நடந்து சென்றது மக்களின் கவனத்தை விநோதமாகக் கவர்ந்தது. அங்கங்கே சிறுவர்கள் கூட்டங்கூடி,
"அதோ பாருங்கள் மாப்பிள்ளை போவதை!" என்றும்,
"அதோ போகிறார் படைத்தலைவர் தம் படையுடன்! எங்கே எந்தப் போருக்குப் போகிறார்" என்றும் பேசத் தொடங்கிவிட்டார்களாம்.
வழி நடுவில், அதாவது.. சுலோச்சன முதலியார் பாலத்திற்கு அருகில், புழுதிக் காற்று கொஞ்சம் வீசத் தொடங்கியது. அப்போது வேதநாயகம் பிள்ளை, "என்ன, சுப்பையா, அப்போதே சொன்னேனே வண்டியில் போவதுதானே உசிதம்!" என்றார்.
பாரதியாரோ, "இந்தப் புழுதிக்குத்தானே நான் தவித்துக் கொண்டிருந்தேன். தவம் செய்து கொண்டிருந்தேன்.. புதுவையில் எத்தனை வருஷமாக என்பதுதான் உனக்குக் தெரியுமே"என்று சொன்னாராம்.
பிறகுதான் பாரதி தரிசனம் எனக்குக் கிடைத்தது.
சூரியாஸ்தமன சமயம்; வானத்திலும் பூமியிலும் தோன்றிய அழகுகளுக்கு வரம்பே இல்லை.... மணியோசை போல் கணீரென்று பாடிக் கொண்டிருந்த குரல் ஒன்று காதில் விழுந்தது. என்ன அதிசயம்! அவ்வளவு கம்பீரமான ஒலி செய்த குரல் எல்லையற்ற சோகத்தால் இழைக்கப்பட்டது போல் இருந்தது..
மேற்குத் திசையைச் சுட்டிக் காட்டுவது போல கையை நீட்டி, சீக்கிய வீரர் போல் முண்டாசும் தலையுமாக ஒருவர் நிமிர்ந்து நின்று ஆவேசமாய்,
"ஆடை குலைவுற்று நிற்கிறாள்- அவள்
ஆ! என்றழுது துடிக்கிறாள்"
என்று பாடிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு சிறு கூட்டம் அப்படியே பரவசமாகி அவர் காட்டிய திசையை நோக்கி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் இருந்தது. நானும் அப்போது பார்த்தேன்; திக்கற்ற பெண்ணொருத்தி எங்கேயோ தொலை தூரத்தில் நின்று புலம்பிக் கொண்டிருந்தது போலத் தோன்றியது.
இது என்ன மாயமா, மந்திரமா?
பாட்டு மேலும் தொடர்ந்து சென்றது. கோரமான காட்சி படிப்படியாகக் கண்முன் தெரிந்தது.... பாடகர் எப்படியோ திரௌபதியாகவும் துச்சாதனனாகவும் பீமனாகவும் மாறிக் கொண்டிருந்தார்! சீறுவது போலச் சிவந்திருக்கும் அந்தி வானம் பீமசேன கோபத்தை எவ்வளவு பொருத்தமாகக் காட்டிவிட்டது!
அந்தி மயங்குகிறது; இயற்கையின் ஜாலக் காட்சிகளை இருள் விழுங்கிவிடுகிறது எனினும் கதைக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது.
'தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும் எனும்
இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை
செய்தான்!
கருமத்தை மேன்மேலும் காண்போம்;
இன்று
கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்;
காலம் மாறும்" என்று உருக்கமான குரலில்....
பாட்டு முடிந்தது. சந்திரோதயம் ஆயிற்று..
அவர் குதூகலமாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பும் அவர் பாடிய பாட்டைப் போல் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.
அவரே பாரதியார் என்று சொல்லவும் வேண்டுமா?"
-மா.பாரதிமுத்துநாயகம்
- உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும்.
- கல்லீரலைப் போல நுரையீரலுக்கு மீண்டும் வளரும் தன்மை கிடையாது.
ஒரு மனிதன் உறுப்புக் கொடை செய்ய விரும்பினால் அவன் இறந்த பிறகு அதன் மூலம் ஒன்பது பேர் நன்மை அடைவர்.
1. சிறுநீரகங்கள் : அதிகமாகத் தேவைப்படும் உறுப்பு. அதிகமாக கொடை அளிக்கப்படும் உறுப்பும் இதுவே. மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும் இரண்டு சிறுநீரகங்களும் தலா ஒரு நபருக்கு என இருவரின் வாழ்வை மேலும் நீட்டிக்க உதவும். டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்து விடுபட உதவும்.
உயிருடன் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தாருக்கு ஒரு சிறுநீரகத்தை கொடையாக வழங்க முடியும். இறந்த நபரிடம் இருந்து வெளியே எடுக்கப்பட்ட சிறுநீரகம் 30 மணிநேரங்கள் உயிரோடு இருக்கும்.
2. கல்லீரல் : வெளியே எடுக்கப்பட்ட கல்லீரல் 6-12 மணிநேரங்கள் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும். இறந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலை இரண்டாகப் பிரித்து இருவருக்கு வழங்க முடியும்.
உயிருடன் இருப்பவர்களும் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தங்கள் கல்லீரலின் சிறு பகுதியை கொடையாக வழங்க முடியும். கொடை வழங்கிய பகுதி மீண்டும் வளர்ந்துவிடும்.
3. நுரையீரல் : இறந்தவிரிடம் இருந்து பெறப்படும் நுரையீரல் - வலது இடது பகுதிகள் தலா இருவருக்கோ அல்லது இரண்டு பகுதிகளும் சேர்த்து ஒருவருக்கோ தேவைக்கேற்ப பொருத்தப்படும்.
உயிருடன் இருப்பவர்கள் தங்களின் ஒரு பக்க நுரையீரலை கொடையாக வழங்க முடியும். எனினும் கல்லீரலைப் போல நுரையீரலுக்கு மீண்டும் வளரும் தன்மை கிடையாது. வெளியே எடுக்கப்பட்டு 4-6 மணிநேரங்கள் உயிர்ப்புடன் இருக்கும்
4. இதயம் : இறந்தவரிடம் இருந்து பெறப்பட்டு 4-6 மணிநேரங்களில் தேவைப்படுபவருக்கு பொருத்தப்பட வேண்டும்.
5. கணையம் : இறந்தவரிடம் இருந்து 6 மணிநேரங்களுக்குள் பொருத்தப்பட வேண்டும். உயிருடன் இருப்பவர்களும் தங்கள் கணையத்தின் சிறு பகுதியை தானமாக வழங்க முடியும்.
6. குடல்: இறந்தவரிடம் இருந்து எடுத்த ஆறு மணிநேரங்களுக்குள் தேவைப்படுபவர்களுக்கு பொருத்த வேண்டும். இவையன்றி இறந்த நபர்களின் கண்களில் இருந்து கார்னியா எனும் விழிப்படலம் . விழிப்படலம் சார்ந்த கண் பார்வையிழப்பில் இருக்கும் நபர்களுக்கு உதவும்.
கொடையாக வழங்கப்படும் தோல் தீக்காயம் அடைந்தவர்கள், அமில தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.
தானம் வழங்கப்படும் எலும்புகள், இதய வால்வுகள் போன்றவையும் பலர் வாழ உதவுகின்றன.
- டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
- கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
- நாம் என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப அவர்கள் சொன்னதையே சொல்வார்கள்.
ஒரு முறை நடிகவேள் எம்,ஆர். ராதா தனது விலை உயர்ந்த காரை வீட்டின் முன்பாக வீதியில் நிறுத்தியிருந்தார்.
அந்த வழியாக ஓடிச்சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது சிறுநீர் கழித்தது. இதைப் பார்த்த நடிகவேள் எம்,ஆர். ராதா சிரித்தார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உதவியாளர் " ஐயா நீங்கள் ஏன் நாயைப் பார்த்து விரட்டி விடாமல் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்கள் ?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்
அதற்கு அவர் மிகவும் சாந்தமாக, "அந்த நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கின்றது. அதற்கு இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. அதைப் பற்றி சொன்னாலும் அதற்குப் புரியாது" என்று சிரித்துக் கொண்டே கூறினார். கேள்வி கேட்டவர் இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இது போலத் தான் உங்கள் வாழ்விலும் உங்கள் மதிப்பை அறியாதவர்கள் உங்களை அவமானப்படுத்தும் போதும், கேலி செய்யும் போதும் அவர்களைப் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள்.
ஏன் என்றால் அவர்களுக்கு சொன்னாலும் புரியாது . நாம் என்ன அறிவுரை சொன்னாலும் திரும்ப திரும்ப அவர்கள் சொன்னதையே சொல்வார்கள். அதை சிரித்துக் கொண்டே கடந்து போங்கள். இது எல்லா விசயத்துக்கும் பொருந்தும்.
உங்கள் கடமை எதுவோ அதைச் செய்யுங்கள். நீங்கள் செயல் வீரராக இருங்கள். அவர்களைக் கண்டு கொள்ளாதீர்கள். எத்தனையோ பிரச்னைகள் நீங்கும்.
-ஆர்.எஸ். மனோகரன்
- மாநில அரசுகளின் விடுமுறைகள் தனி.
- மாநிலங்கள் எல்லாம் வேற இருக்கா என டென்சன் ஆகவேண்டாம்.
வேலை செய்து, செய்து அலுப்பாகா இருக்கா?
நேபாளத்துக்கு கிளம்பிவிடுங்கள். உலகிலேயே அதிக விடுமுறை நாட்கள் கொண்ட நாடு என்ற "பெருமையை" பெற்ற நாடு நேபாளம்.
52 ஞாயிற்றுக்கிழமைகள், 43 விடுமுறை நாட்கள் என ஆண்டுக்கு 95 நாட்கள், அதாவது ஆண்டுக்கு மூன்று மாதம் விடுமுறையிலேயே கழிக்கும் நாடு நேபாளம்.
"இத்தனை நாட்கள் விடுமுறை தேவையா" என யோசிக்க நேபாள பிரதமர் ஒரு கமிட்டியை போட்டார். கமிட்டி "விடுமுறை நாட்களை குறைக்கவேண்டும்" என தீர்மானம் போட்ட கையுடன் புதியதாக பங்குனி 1 அன்றையும் விடுமுறையாக அறிவித்தார் பிரதமர்.
இது மத்திய அரசின் விடுமுறை. மாநில அரசுகளின் விடுமுறைகள் தனி. நேபாளமே மாநில சைஸில் தான் இருக்கும். அதில் மாநிலங்கள் எல்லாம் வேற இருக்கா என டென்சன் ஆகவேண்டாம். ஏழு மாநிலங்கள் இருக்கு, மாவட்டங்கள் இருக்கு. அவர்கள் நினைத்த போதெல்லாம் விடுமுறை விடுவார்கள். ஒரு மாநில முதல்வர் சமீபத்தில் தன் மைத்துனர் இறந்ததுக்கு விடுமுறை விட்டு எல்லாம் சாதனை படைத்தார்.
- நியாண்டர் செல்வன்
- இறை நிலையை உணராமல் அஞ்ஞானத்திலேயே இருந்தால் பிறவித் தொடர் தொடரும்.
- இறை நிலையை ஆத்மார்த்தமாக உணர்ந்து விட்டால் இந்த பூமிக்கு வர வேண்டியதில்லை.
இறந்த பின் என்ன நடக்கும்? என்ன மாதிரியான வாழ்வு கிடைக்கும் பரமஹம்சரே?.
இறை நிலையை உணராமல் அஞ்ஞானத்திலேயே இருந்தால் பிறவித் தொடர் தொடரும்.
இறை நிலையை ஆத்மார்த்தமாக உணர்ந்து விட்டால் இந்த பூமிக்கு வர வேண்டியதில்லை. பிறவித் தொடர் அறுந்து விடும்.
உதாரணமாக, குயவன் பானைகளை செய்த பிறகு வெய்யிலில் காயவைப்பான். சில பானைகள் காய்ந்து விடும். சில பானைகள் காயாமல் இளக்கமாக இருக்கும். ஏதேனும் பசு அந்த பக்கமாக போகும் போது, காய வைக்கப்பட்ட பானைகள் மீது நடந்தால், சில பானைகள் உடைந்து விடும்.
குயவன் மீண்டும் அவற்றை உபயோகிக்க முற்படும்போது, உடைந்த நன்றாக காய்ந்த பானையின் துண்டுகளை தூக்கி போட்டு விடுவான். அதை மீண்டும் உபயோகிக்க முடியாது.
ஆனால் சரியாக காயாத இளக்கமான பானை துண்டுகளை பொறுக்கி எடுத்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, இளக்கி, களிமண்ணாக மாற்றி மீண்டும் புது பானை செய்ய உபயோகப்படுத்துவான்.
அதே போல் தான் நன்றாக கடவுளை உணராதவர்கள், சரியாக வேகாத பானை போல. மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டும்.
நன்றாக வேக வைக்கப்பட்ட விதை, மீண்டும் முளைக்காது. அதே போலத்தான், ஞானத் தீயால் தன்னை உணர்ந்தவன், இறை நிலையை உணர்ந்தவனுக்கு மீண்டும் பிறவி கிடையாது. அவன் விடுதலை அடைந்தவன்.
-ஆர்.எஸ். மனோகரன்






