என் மலர்
கதம்பம்

நான் கொலஸ்ட்ரால் பேசுகிறேன்!
- பாதிப்பு நடந்த இடத்தில் அதை சரிசெய்யும் பொருட்டு வந்த என்னை குற்றவாளியாக்குகிறீர்கள்.
- ரத்தத்தில் எப்படி ஹீமோகுளோபின் முக்கியமோ, எப்படி சரியான அளவில் க்ளூகோஸ் முக்கியமோ, அதே போல நானும் முக்கியமானவன்.
அன்புடையீர், நான் கொலஸ்ட்ரால் பேசுகிறேன். என் பெயரைச் சொன்னாலே உங்களுக்கெல்லாம் அச்சம் தொற்றிக் கொள்கிறது தானே?
உண்மையில் நீங்கள் என்னை வெறுத்து உணவு வழியாக உட்கொள்ளத் தயங்கினாலும் உடலுக்குத் தேவையான என்னை உங்கள் கல்லீரலே சமைத்துக் கொடுத்து விடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கொலஸ்ட்ரால் கெட்டது என்றும் இதய அடைப்பை ஏற்படுத்தும் என்று தானே அச்சப்படுகிறீர்கள் .
நானின்றி உங்களின் மூளை இயங்காது. உங்களின் மூளையில் முக்கால்வாசி என்னால் ஆனது என்றால் நம்ப முடிகிறதா? ஒரு செல்லிலும் உயிர் இருக்காது. காரணம் செல்களின் சுவர் என்னால் ஆனது.
நானில்லை என்றால் இவ்வுலகில் ஆணில்லை பெண்ணில்லை.. கர்ப்பமில்லை.. குழந்தைப்பேறில்லை..
நான் தேவையில்லை என்று நீங்கள் உண்ணாமல் விட்டாலும், ஏன் கல்லீரலே என்னை உற்பத்தி செய்யாமல் போனாலும் உங்களின் ஒவ்வொரு செல்லும் என்னை தன்னகத்தே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலுடன் இருப்பதை அறிவீர்களா?
உங்களுக்குள் பிரிவினை பேதம் கற்பிப்பது போலவே என்னையும் நல்ல கொலஸ்ட்ரால் என்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் பிரித்து வைத்திருக்கிறீர்கள் .
கல்லீரலில் இருந்து செல்களுக்குத் தேவையான என்னைக் கொண்டு செல்பவனை - கெட்ட கொலஸ்ட்ரால் ( எல் டி எல்) என்றும் ,
செல்கள் உபயோகித்து மீதமிருக்கும் என்னை கல்லீரலுக்கு கொண்டு வருபவனை - நல்ல கொலஸ்ட்ரால் ( ஹெச் டி எல்) என்றும் கூறுகிறீர்கள்.
அது எப்படி கல்லீரல் செல்களுக்கென சமைத்த என்னை, செல்களை நோக்கி கொண்டு செல்பவன் கெட்டவனாகிறான்?
நீரிழிவு , ரத்தக் கொதிப்பு, புகைப்பழக்கம், குடி நோய், மன அழுத்தம் , போதிய உறக்கமின்மை, இன்சுலின் எதிர்ப்புநிலை, உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளை நீங்கள் வரவழைத்துக் கொண்டு அதனால் உங்களின் ரத்த நாளங்களில் தொடர்ந்து காயங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இந்தக் காயங்களுக்கு கொலஸ்ட்ரால் மருந்து பூச வரும் பெரிய எல்டிஎல் ஆகிய என்னை விட்டத்தில் சிறியவனாக்கி ( சிறிய எல்டிஎல்) விடுகிறீர்கள்.
அளவில் சிறியவனான நான் ரத்த நாளத்தின் உட்புற சுவர் வழியாக உள்ளே செல்கிறேன். என்னை அதற்குக் கீழ் செல்லவிடாமல் தடுக்க அங்கு ரத்தக் கட்டி உருவாகிறது. அதுவே நாளடைவில் ரத்த நாள அடைப்பை ஏற்படுத்துகிறது.
நானோ ரத்த நாளத்தின் காயங்களுக்கு மருந்து பூச வந்தவன். கூடவே செல்களுக்கு கல்லீரல் படைத்த சமையலை விருந்து படைக்க வந்தவன்.
ஆனால் உங்களின் உடலில் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர் உள்காயங்களால் என்னை வழிகெடுத்து பெரிய எல்டிஎல் ஆகிய என்னை சிறிய எல்டிஎல் ஆக்குவது நீங்கள் தான். ஆனால் பழி மட்டும் என் மீது போடப்பட்டு விட்டது. காலங்காலமாக இந்த பழியை நான் சுமந்து வருகிறேன்.
உண்மையில் நான் செல்களை சென்று சேர்ந்தால் தான், செல்கள் என்னை அவற்றின் சுவர்கள் உருவாக்கத்தில் பயன்படுத்திக் கொண்டு அவை புணர்நிர்மானம் செய்து கொள்ள முடியும்.
இதய அடைப்புகளில் என்னைப் பார்ப்பதால் நான் தான் அடைப்புக்கு காரணம் என்று கருதுகிறீர்கள்.
தீ பற்றிய வீதியில் தீயணைப்பு வண்டிகள் நிற்பதால் தீயணைப்பு வண்டிகளால் தான் தீ பற்றியது என்று எப்படி கூறமாட்டீர்களோ அதே நியாயம் எனக்கும் உண்டு.
பாதிப்பு நடந்த இடத்தில் அதை சரிசெய்யும் பொருட்டு வந்த என்னை குற்றவாளியாக்குகிறீர்கள்.
பாதிப்பை தொடர்ந்து செய்யும் அதிக க்ளூகோஸ் எனும் திருடனை நேக்காக தப்பிக்க வைத்து விடுகிறீர்கள்.
உங்களில் யாருக்கேனும் க்ளூகோஸ் அதிகமாகி சர்க்கரை நோய் வந்தாலும் முதலில் நான் இருக்கும் மாமிசத்தை நிறுத்துமாறு தான் பணிக்கப்படுகிறீர்கள்.
சர்க்கரை நோயாளி டீ காபியில் சீனியை நாட்டு சர்க்கரையை நிறுத்துவது நியாயம் அதை விடுத்து என்னை உண்பதை முற்றிலுமாக நிறுத்தி கிடைப்பது என்ன?
ரத்தத்தில் எப்படி ஹீமோகுளோபின் முக்கியமோ, எப்படி சரியான அளவில் க்ளூகோஸ் முக்கியமோ, அதே போல நானும் முக்கியமானவன்.
என்னை பகைவனாக நீங்கள் நினைத்தாலும் நான் எந்நாளும் உங்களுக்கு உற்ற தோழன் தான் என்று கூறி இந்த மடலை நிறைவு செய்கிறேன்.
இப்படிக்கு,
பாசமுள்ள உற்ற தோழன் கொலஸ்ட்ரால்.
-டாக்டர். ஃபரூக் அப்துல்லா