என் மலர்
கதம்பம்

பொறுத்திருப்போம் காலம் மாறும்!
- பெண்ணொருத்தி எங்கேயோ தொலை தூரத்தில் நின்று புலம்பிக் கொண்டிருந்தது போலத் தோன்றியது.
- இயற்கையின் ஜாலக் காட்சிகளை இருள் விழுங்கிவிடுகிறது எனினும் கதைக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது.
ஊர்: திருநெல்வேலி சந்திப்பு (அன்று வீரராகவபுரம் என்று அழைக்கப்பட்டது. என் அம்மா வீராபுரம் என்றே சொல்வாள்.)
புதுவையிலிருந்து பாரதியார் வருகிறார். வேதநாயகம் பிள்ளை ( மாயூரம் வேதநாயகம் பிள்ளை அல்ல.) நண்பர்களுடன் வரவேற்கக் காத்திருக்கிறார். பாரதியாரும் வந்துவிட்டார்.
சந்திப்பு நிலையத்திலிருந்து வண்ணார்பேட்டை போக வேண்டும். மாட்டு வண்டி வரவில்லை. பாரதியாருக்கு பொறுமை போய்விட்டது!
'மாட்டுவண்டியில் போவதுகூட காந்தியடிகளின் அகிம்சா தத்துவத்திற்கு விரோதம்தானே' என்று சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினார். மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து நடந்தார்கள்!
உடன் சென்றவர்களில் ஒருவர் பேரறிஞர் பி.ஸ்ரீ. ஆச்சாரியார் .அவர் பாரதியிடம் பெரும் பற்று கொண்டவர். அவர் எழுதிய 'பாரதி நான் கண்டதும் கேட்டதும்' என்ற நூலிலிருந்து சில வரிகள்:
"சொக்காயும், தலைப்பாகையும், நெற்றியில் திருநாமமும், கழுத்தில் நண்பர்கள் அணிந்த பூமாலைகளுமாய்ப் பாரதியார் நடந்து சென்றது மக்களின் கவனத்தை விநோதமாகக் கவர்ந்தது. அங்கங்கே சிறுவர்கள் கூட்டங்கூடி,
"அதோ பாருங்கள் மாப்பிள்ளை போவதை!" என்றும்,
"அதோ போகிறார் படைத்தலைவர் தம் படையுடன்! எங்கே எந்தப் போருக்குப் போகிறார்" என்றும் பேசத் தொடங்கிவிட்டார்களாம்.
வழி நடுவில், அதாவது.. சுலோச்சன முதலியார் பாலத்திற்கு அருகில், புழுதிக் காற்று கொஞ்சம் வீசத் தொடங்கியது. அப்போது வேதநாயகம் பிள்ளை, "என்ன, சுப்பையா, அப்போதே சொன்னேனே வண்டியில் போவதுதானே உசிதம்!" என்றார்.
பாரதியாரோ, "இந்தப் புழுதிக்குத்தானே நான் தவித்துக் கொண்டிருந்தேன். தவம் செய்து கொண்டிருந்தேன்.. புதுவையில் எத்தனை வருஷமாக என்பதுதான் உனக்குக் தெரியுமே"என்று சொன்னாராம்.
பிறகுதான் பாரதி தரிசனம் எனக்குக் கிடைத்தது.
சூரியாஸ்தமன சமயம்; வானத்திலும் பூமியிலும் தோன்றிய அழகுகளுக்கு வரம்பே இல்லை.... மணியோசை போல் கணீரென்று பாடிக் கொண்டிருந்த குரல் ஒன்று காதில் விழுந்தது. என்ன அதிசயம்! அவ்வளவு கம்பீரமான ஒலி செய்த குரல் எல்லையற்ற சோகத்தால் இழைக்கப்பட்டது போல் இருந்தது..
மேற்குத் திசையைச் சுட்டிக் காட்டுவது போல கையை நீட்டி, சீக்கிய வீரர் போல் முண்டாசும் தலையுமாக ஒருவர் நிமிர்ந்து நின்று ஆவேசமாய்,
"ஆடை குலைவுற்று நிற்கிறாள்- அவள்
ஆ! என்றழுது துடிக்கிறாள்"
என்று பாடிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஒரு சிறு கூட்டம் அப்படியே பரவசமாகி அவர் காட்டிய திசையை நோக்கி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் இருந்தது. நானும் அப்போது பார்த்தேன்; திக்கற்ற பெண்ணொருத்தி எங்கேயோ தொலை தூரத்தில் நின்று புலம்பிக் கொண்டிருந்தது போலத் தோன்றியது.
இது என்ன மாயமா, மந்திரமா?
பாட்டு மேலும் தொடர்ந்து சென்றது. கோரமான காட்சி படிப்படியாகக் கண்முன் தெரிந்தது.... பாடகர் எப்படியோ திரௌபதியாகவும் துச்சாதனனாகவும் பீமனாகவும் மாறிக் கொண்டிருந்தார்! சீறுவது போலச் சிவந்திருக்கும் அந்தி வானம் பீமசேன கோபத்தை எவ்வளவு பொருத்தமாகக் காட்டிவிட்டது!
அந்தி மயங்குகிறது; இயற்கையின் ஜாலக் காட்சிகளை இருள் விழுங்கிவிடுகிறது எனினும் கதைக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது.
'தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும் எனும்
இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை
செய்தான்!
கருமத்தை மேன்மேலும் காண்போம்;
இன்று
கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்;
காலம் மாறும்" என்று உருக்கமான குரலில்....
பாட்டு முடிந்தது. சந்திரோதயம் ஆயிற்று..
அவர் குதூகலமாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பும் அவர் பாடிய பாட்டைப் போல் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.
அவரே பாரதியார் என்று சொல்லவும் வேண்டுமா?"
-மா.பாரதிமுத்துநாயகம்






