என் மலர்tooltip icon

    கதம்பம்

    எவரெஸ்டை மூழ்கடிக்கும் கடல்
    X

    எவரெஸ்டை மூழ்கடிக்கும் கடல்

    • வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன.
    • கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும்.

    கடல் என்பது ஆதியில் இருந்தே மனித இனத்திற்கு ஒரு புரியாதப்புதிராகவே இருந்து வந்துள்ளது.

    ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக, இருக்கும். ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.

    சுமார் ஒரு மைல் ஆழம் உள்ள சேறு மாதிரிப் படிவுகள் கடலின் அடித்தளத்தில் உள்ளன. மடிந்த கடல்வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரியான படிவுகள்.

    இவ்வாறு ஆண்டுதோறும் 500 கோடி டன் வண்டலை ஆறுகள், நதிகள் கொண்டு வந்து சேர்க்கின்றனவாம்.

    கடலடியில் அனேக செங்குத்தான மலைகள் உள்ளன. அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் ஆகியன கடலடி மலைகளின் உச்சிகளே.

    கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்திற்குச் சங்கிலித் தொடர்போல் மலைகளும், வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன. இவ்விதம் சுமார் 20 ஆறுகள் உள்ளனவாம்.

    அந்தமான் தீவுகள் அருகே 1,700 மைல் நீளமும் 25 மைல் அகலமும் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது. பிற இடங்களிலும் இவ்வாறு பள்ளத்தாக்குகள் உள்ளன. சில இடங்களில் இதன் ஆழம் சுமார் 3 மைல். கடல்களில் மிக ஆழமான இடங்கள் கடலுக்கு அடியில் உள்ள அகழிகள் ஆகும்.

    கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும். அகழிகளின் ஆழத்துடன் ஒப்பிட்டால் உலகின் கடல்களின் சராசரி ஆழம் 12,556 அடி.அதாவது, இரண்டரை மைல்.

    பிலிப்பைன்சுக்குக் கிழக்கே உள்ள மின்டானாவோ அகழியில் அமைந்துள்ள குக்மடு தான் உலகின் கடல்களில் மிக ஆழமான இடமாகும். இதன் ஆழம் 37,782 அடி. அதாவது சுமார் 7 மைல். குக்மடுவில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கினால் அச்சிகரம் மூழ்கி அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி தான் .

    -அண்ணாமலை சுகுமாரன்

    Next Story
    ×