என் மலர்
கதம்பம்

சொன்னது நீ தானா..?
- கண்ணதாசன் பாடல் வரிகளை மட்டும் சொல்லவில்லை.
- கண்ணதாசனின் அந்த வார்த்தைகளை சொன்னவுடன் விஸ்வநாதன் முகம் மாறியது.
காலை ஏழு மணி முதல் ஸ்ரீதரும், எம்.எஸ்.விஸ்வநாதனும் பாடல் கம்போசிங்கிற்காக காத்திருக்க, பத்து மணிக்கு அங்கே வந்த கவிஞர் கண்ணதாசன் "நான் கம்போசிங்கிற்கு தயார். நீங்கள் தயாரா?" என்று கேட்டவுடன் லேசாக எரிச்சலடைந்த ஸ்ரீதர் "நாங்க ஏழு மணியிலே இருந்து இங்க உட்கார்ந்துகிட்டு இருக்கோம். காலையிலே சீக்கிரமே இந்த பாட்டை முடிக்கணும்னு நேற்றே உங்ககிட்ட சொன்னேன் இல்லே. அப்படியும் இவ்வளவு லேட்டா வந்தா எப்படி?" என்று கேட்க, "கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். அதுதான் லேட்டாகிவிட்டது" என்றார் கவிஞர்.
"எனக்கு எல்லாம் தெரியும். நேற்று இரவு இரண்டு மணிவரைக்கும் நீங்க தூங்கவேயில்லையாம். அப்புறம் எப்படி ஏழு மணிக்கு உங்களால வர முடியும்?" என்று ஸ்ரீதர் சொல்லிக் கொண்டே போக கண்ணதாசன், விஸ்வநாதன் பக்கம் திரும்பி அவரைப் பார்த்தார். கண்ணதாசனின் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாத எம்.எஸ்.விஸ்வநாதன் தலையைக் குனிந்து கொண்டார்.
சிறிது நேரத்திலே கம்போசிங் தொடங்கியது. ஸ்ரீதர் பாடல் எழுதப்பட வேண்டிய காட்சியை விளக்க, "நீங்க முதல்ல பாட்டை எழுதி விடுங்கள். நீங்கள் எழுதுகின்ற பாடலுக்கு நான் இசையமைக்கிறேன்.." என்றார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
"பரவாயில்லை… நீ மெட்டைச் சொல்லு.." என்று கண்ணதாசன் சொல்ல "ல ல ல லா லா லா …" என்று விஸ்வநாதன் மெட்டைப் பாடிக் காட்டினார். அடுத்த நிமிடம் பாடலை சொல்லத் தொடங்கிய கண்ணதாசன் பாடல் வரிகளை மட்டும் சொல்லவில்லை. விஸ்வநாதனைப் பார்த்து தான் கேட்க நினைத்த கேள்வியையும் அந்தப் பாடலின் வழியே கேட்டார்.
"சொன்னது நீ தானா ?….."
கண்ணதாசனின் அந்த வார்த்தைகளை சொன்னவுடன் விஸ்வநாதன் முகம் மாறியது. கவியரசர் இன்று பாட்டால் தன்னை அடிக்கப் போகிறார் என்று புரிந்து கொண்ட அவர் அடுத்து "ல ல ல" என்று சொல்ல ஒரு கணம்கூட தாமதிக்காமல் "சொல் … சொல்.. சொல்…" என்றார் கண்ணதாசன்.
அத்துடன் நிற்காமல், "சம்மதம்தானா? ஏன் ஏன் ஏன் என்னுயிரே… இன்னொரு கைகளிலே, யார், யார், யார்.. நானா? என்னை மறந்தாயா..? ஏன் ஏன் ஏன் என்னுயிரே…?" என்று கண்ணதாசன் பல்லவியைச் சொல்லி முடித்தபோது விஸ்வநாதன் முழித்ததைப் பார்த்த ஸ்ரீதர் குலுங்கி, குலுங்கி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
பின்னர் மற்ற மற்ற சரணங்களையும் மடை திறந்த வெள்ளம் போல கண்ணதாசன் சொல்ல அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த பாடல் கம்போசிங் முடிவடைந்தது.
-கணேஷ் பாண்டியன்






