என் மலர்
கதம்பம்

ஒட்டுண்ணி பறவை குயில்
- சிறு குழந்தைகளை கண்டால் நாம் அனைவரும் அன்போடு குழந்தையை கொஞ்சுவோம்.
- தாய்மை உணர்வை குயில் ஆனது காக்கையை வைத்து நன்கு பயன்படுத்தி கொள்கிறது.
குயில் ஒட்டுண்ணி வகைப் பறவை. குயிலை போல் ஒரு சோம்பேறி பறவை, பறவை இனத்திலேயே கிடையாது. குயில் ஒரு போதும் கூடு கட்டி அடைகாப்பதில்லை. குயில் காகத்தின் கூட்டில் மட்டும் அல்ல தவிட்டுக்குருவி போன்ற சிறு பறவைகளின் கூட்டிலும் முட்டை இட்டு பறந்து விடும்.
கூட்டில் அடைகாக்கும் காகத்தின் கவனத்தை திசை திருப்ப ஆண்குயில் காகத்திடம் வம்பு வளர்க்கும். ஆண்குயிலை, பெண் காகம் துரத்தி செல்லும் போது காக்கை கூட்டில் பெண்குயில் முட்டையிட்டு சென்று விடும்.
குயில் முட்டைகள் பெரிதாக இருந்தாலும், நிறம் வேறாக இருந்தாலும் மற்ற பறவைகள் குயில் முட்டையை அடையாளம் தெரிந்தே தாய்மை உணர்வோடு அடை காத்து குஞ்சு பொரித்து ஊட்டி வளர்க்கும்.
குயில் குஞ்சுகள் பிறந்த உடன் கண் தெரியா விட்டாலும் அதாவது கண்ணை திறக்கும் முன்பே, தான் மட்டும் வாழ வேண்டும் என்ற உள்ளுணர்வால் தனது கால்களை கொண்டு பிற குஞ்சுகளைக் கீழே தள்ளி விடும்.
சிறு குழந்தைகளை கண்டால் நாம் அனைவரும் அன்போடு குழந்தையை கொஞ்சுவோம். குழந்தைகள் மீது இவ்வாறு அன்பும் பாசமும், இரக்கமும் வருவதற்கு oxytocin என்ற தாய்மை ஹார்மோன் தான் காரணம். இந்த தாய்மை உணர்வை குயில் ஆனது காக்கையை வைத்து நன்கு பயன்படுத்தி கொள்கிறது.
காகம், குயில் இரண்டில் எது பிடிக்கும் என கேட்டால் குயில் தான் பிடிக்கும் என்போம் நம்மில் பெரும்பாலானோர்.காரணம் கேட்டால் குயில் அழகாக கூவும்.. குயில் பாட்டுக்கு இணை உண்டா? என்பார்கள். குயில் அதிகாலை மூன்று மணிக்கே கூவி மனிதர்களின் உறக்கத்தை கெடுக்கும்.
சிறு உணவு கிடைத்தாலும் தன் கூட்டத்தை கூவி அழைத்து பகிர்ந்து உண்ணும் காகம். தன் காக்கை இனத்தில் ஒன்று மறைந்தால் கூடி கரைந்து வருந்தும். தன் இன காக்கை கூட்டை நோக்கி மனிதனோ, பிற எதிரியோ சென்றால் அடுத்தவனுக்கு தானே ஆபத்து என எண்ணாமல் காகங்கள் அத்தனையும் ஒன்று கூடி எதிர்க்கும்.
இத்தனை நல்ல குணங்களை கொண்ட காக்கையை விரும்பாது குயிலை அதனின் குரலுக்காக மனிதன் விரும்புவது ஏனோ?
-சுரேஸ்வரன் ஐயாபழம்






