என் மலர்tooltip icon

    மற்றவை

    • நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
    • இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னை:

    உணவும் மருந்தும் ஒன்றே... படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்... பசிக்காக சாப்பிடு ருசிக்காக சாப்பிடாதே... இதுபோன்ற பழமொழிகளை சும்மாவா சொன்னார்கள்...

    சத்தான உணவு உள்பட எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடும் முறையில் ஆரோக்கியம் உள்ளது என்பது முன்னோர் வாக்கு.

    காலையில் அரசனைப் போன்றும், நண்பகலில் சாதாரண மனிதனைப் போன்றும், இரவில் பிச்சைக்காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என பெரியோர் சொல்வது வழக்கம்.

    காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு (சுக ஆசனம்) சாப் பிடும்போது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.

    நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி. இதன்மூலம் சாப்பிடும் முறையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

    உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் நோயின்றி நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.

    சாப்பிடும் போது பேசக்கூடாது என சொல்வார்கள். சாப்பிடும்போது வெளியில் இருந்து காற்று வாய் வழியே உள்ளே செல்லும். எனவே பேசாமல் உதடுகளை மூடியபடி சாப்பிட்டால் உடல் நன்கு ஆரோக்கியம் அடையும்.

    மனதில் எந்த உணர்வும் இன்றி உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிட்டால் நூறு வயது வரை வாழலாம். அப்படி இல்லையெனில் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

    சாப்பிடுவது குறித்துசாஸ்திரம் சொல்வது என்ன?

    இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்.

    ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

    குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு சாப்பிடக் கூடாது.

    சாப்பிடும்போது முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு அதன்பின் நீர் அருந்தவேண்டும்.

    சாப்பிடும் வேளை தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீரை அருந்தக் கூடாது.

    இருட்டில் சாப்பிடக் கூடாது.

    சாப்பிடும்போது விளக்கு அணைந்து விட்டால் சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிடவேண்டும் என தெரிவிக்கிறது.

    • தமிழில் இதை அடிப்படையாக வைத்து மேலும் சில படங்கள் வந்தன.
    • கல்யாணம் செய்ய மறுத்தால், வழக்கு போடமுடியுமாம்.

    நைஜீரியா எழை நாடு என்பதால், சின்ன வயதிலேயே பையன்கள் படிக்காமல் வேலைக்கு போவது வழக்கம். ஆனால் அவர்களில் சிலர் சம்பாதித்து தன் கேர்ள்பிரண்டை கல்லூரியில் படிக்க வைப்பார்கள். அவர்களில் சிலர் படித்து, நல்ல வேலை கிடைத்ததும், தன்னை படிக்க வைத்த பையனை கட்டிக்காமல் கழட்டி விட்டுவிடுவார்களாம்.

    ஒரிஜினலாக சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் படத்தின் கதையும் இதான். தமிழில் இதை அடிப்படையாக வைத்து மேலும் சில படங்கள் வந்தன. ஆனால் நைஜீரியாவில் இது சாதாரணமாம். அதனால் அரசு "Promise to marry" என ஒரு சட்டம் போட்டுள்ளதாம். "கல்யாணம் பண்ணிக்கறேன்" என சொல்லி இப்படி உதவி பெற்றுவிட்டு, அதன்பின் கல்யாணம் செய்ய மறுத்தால், வழக்கு போடமுடியுமாம்.

    இதில் நைஜிரியாவில் சமீபத்தில் வைரல் ஆன ஒரு பதிவில் இப்படி ஒரு பையன் ஏழையாக இருந்து, தொழிலதிபர் ஆகி, தன் கேர்ள்பிரண்டை படிக்க வைத்தானாம். அவள் அவனிடம் சொல்லாமல் இன்னொருத்தனை கட்டிகிட்டாள். அதன்பின் இவன் கண்டுபிடித்து கேட்க "நீ கொடுத்த காசை என் கணவர் திருப்பி கொடுப்பார்" என சொல்ல, இவன் கண்கலங்க, அது வைரல் ஆகி ஓட்டுமொத்த நைஜிரியாவும் கண்கலங்கிட்டு இருக்காம்.

    சில கதைகள் காலம், தேசம் எல்லைகளை தாண்டி உலகம் முழுக்க பொதுதான் போல..

    - நியாண்டர் செல்வன்

    • நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன.
    • நீராவி ரிப்பன்கள், வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டை அல்லது ஒரு நெடுவரிசையை உருவாக்குகிறது.

    தெற்காசியாவின் வளிமண்டலத்தில் அதிக மாற்றங்கள் உருவாகி வருகிறது. பறக்கும் நதிகள் என்று அழைக்கப்படும் வளிமண்டல நதிகள் பிறந்துள்ளன. இது பட்டை வடிவிலான கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய தொடர் நீராவி ரிப்பன்களாகும் (ribbons of water vapour). கடலின் வெப்பம் அதிகரித்து, கடல் நீர் ஆவியாகும்போது நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை.

    இந்த நீராவி ரிப்பன்கள், வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டை அல்லது ஒரு நெடுவரிசையை உருவாக்குகிறது, இது மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, 'பறக்கும் நதிகள்' உருவாகி அதிதீவிர மழை பொழிகின்றன. இது வான்வெடிப்பு (cloudburst) போன்றே இருக்கும். அதன் பின்னர் கனமழை அல்லது பனியாகப் பெய்து, வெள்ளம் மற்றும் ஆபத்தான பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பேரழிவுக்கு வழிசெய்யும்.

    • உலகின் சரிபாதி பசிபிக் கடல்தான்.
    • விண்ணில் பறக்கையிலேயே தூங்கும்.

    அல்பட்ராஸ் பறவை தன் இறகுகளை விரித்தால், அதன் இறகுகளின் நீளம் 11 அடி இருக்கும். ஆறு அடி நீள இறக்கைகள் கொண்ட சில அல்பட்ராஸ் வகைகளும் உண்டு.

    ஆண்டுக்கணக்கில் தரையில் காலே வைக்காமல் விண்ணில் பறக்க இந்த இறக்கைகள் உதவும். டைனமிக் சோரிங் எனும் பறக்கும் உத்தியை அல்பட்ராஸ் கையாள்கிறது. விண்ணில் சிறகுகளை அடிக்காமல், ஒரு க்ளைடர் பறப்பது போல, காற்றை பயன்படுத்தி, மிக குறைவான சக்தியை மட்டுமே பயன்படுத்தியபடி விண்ணில் பறக்கும். விண்ணில் பறக்கையிலேயே தூங்கும்.

    தரை மேல் பறந்தால் மனிதர்கள் இதை சும்மா விடுவார்களா என்ன? அதனால் பெரும்பாலும் இது பசிபிக் சமுத்திரத்தின் மேல் தான் பறக்கும். உலகின் சரிபாதி பசிபிக் கடல்தான்.

    சில அல்பட்ராஸ் பறவைகள் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை நிற்காமல் பறந்துகொண்டே இருக்கும். 2500 கிமி வரை உள்ள ஏரியாவை எல்லாம் கவர் செய்யும். மற்ற பறவைகள் போல கூட்டமாக பறக்காது. தனியாக தான் பறக்கும்.

    சரி..உணவும், நீரும்? உணவுக்காக தானே வாழ்க்கை? பறக்கையிலேயே கடலை ஸ்கான் செய்துகொன்டே செல்லும். எதாவது மீன் தட்டுபட்டால், அப்படியே பறந்தபடி கொத்தி எடுத்து மேலே கொண்டுபோய்விடும். கடல் நீரையே குடித்து தாகம் தணித்துக்கொள்ளும்.

    இனப்பெருக்கம் செய்யமட்டும் தான் இவை தரை இறங்கும். பொதுவாக ஆள் நடமாட்டமே இல்லாத கலபகோஸ், மிட்வே மாதிரி பசிபிக் கடல் தீவுகளில் இறங்கி இனப்பெருக்கம் செய்யும். இவை மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி மாதிரி ஏகபத்தினி விரதம் கொண்டவை. வாழ்நாள் முழுக்க ஒரே ஜோடிதான்!

    • எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு” என்றேன்.
    • சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை.

    பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது. ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது.

    நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.

    கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி.

    "அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு" என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார்.

    "அண்ணே வாங்க வாங்க… எங்க இவ்வளவு தூரம்?" என்றார் சிவாஜி. தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி "இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன். வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?" என்று கூறி விடைபெற்றார்.

    அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , "என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலேயிருந்து மாறிடுவாங்க" என்றார்.

    சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?

    - இயக்குநர் ஸ்ரீதரின் ' திரும்பிப் பார்க்கிறேன்" நூலிலிருந்து.. சந்திரன்

    • நமது கடைசி சுவாசத்தில் தான் மரணமும் சம்பவிக்கிறது.
    • பிராண சக்திகள் என்றே சொல்லிக் கொண்டன.

    ஐம்புலன்கள் எனும் குதிரைகளைப் பூட்டிய சரீரமெனும் தேவ ரதத்தில் ஆன்மா எனும் தலைவன் அமர்ந்து, உலக வாழ்க்கையெனும் சாலையில் பயணிப்பதாக உபநிஷதங்கள் மானிட வாழ்க்கையை உருவகப்படுத்தியுள்ளன.

    சரீரத்தைத் தாங்கிப் பிடித்து வழிநடத்துவன ஐம்புலன்களே. ஆனால் அவற்றுள் முதன்மையானது எது என்பது குறித்த ஓர் உருவகக் கதை, சாந்தோக்கிய உபநிடதத்தில் வருகிறது.

    இறைவன் படைத்த தேகாலயத்துள்ளே இயங்கும் ஐம்புலன்களுக்குள்ளே யார் பெரியவரெனச் சர்ச்சை எழுந்தது. அவற்றிற்குள் முடிவு ஏதும் வராத நிலையில், அவை பிரஜாபதியிடம் சென்று தங்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று கேட்டன.

    "உங்களில் யார் வெளியேறி விட்டால், உடல் மோசமாகிறதோ அவர்தான் உயர்ந்தவர்" என்றார் பிரஜாபதி.

    அவ்வாறு சொன்னவுடன் வாக்கு, உடம்பை விட்டு வெளியே சென்றது..

    ஓராண்டு கழித்துத் திரும்ப வந்து, மற்ற புலன்களிடம், " நான் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது?" என்று கேட்டது..

    "ஊமைகள் வாழ வில்லையா? அப்படி வாழ்ந்தோம்" என்று அவை பதிலளித்தன.

    வாக்கை அடுத்து பார்வை வெளியேறி, ஓராண்டு கழித்து வந்தது. "நானில்லாமல் உங்களால் வாழ முடிந்திருக்காதே" என்றது கண்.

    "அப்படியொன்றும் நடக்க வில்லை. குருடனைப் போல வாழ்ந்தோம்" என்றன.

    அவ்வாறே செவிப்புலன் வெளியேறி, ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி வந்தது. "நானில்லாமல் எப்படி வாழ்ந்தீர்கள்?" என்று காது கேட்டது.

    " எங்களால் ஏதும் கேட்க முடியாவிட்டால் என்ன? செவிடனைப் போல வாழ்ந்தோம்" என்றன மற்றப் புலன்கள்.

    அதன் பின்னர் மனம் உடலை விட்டு வெளியேறி, ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி வந்தது.

    "நானில்லாமல் உங்களால் வாழ முடிந்ததா?" மனம் கேட்டது.

    "குழந்தைகள் எண்ணமற்று வாழ்வதில்லையா? நாங்களும் அப்படித்தான் வாழ்ந்தோம்" என்றன.

    கடைசியாக, ஓர் உற்சாகமான முரட்டுக் குதிரை தன்னைக் கட்டியிருக்கும் முளைகளைப் பிய்த்தெறிந்து விட்டு கிளம்புவதைப் போல, பிராணன் உடம்பை விட்டு வெளியேற முயற்சிக்கையில், மற்றப் புலன்கள் எல்லாம் நிலைகொள்ள முடியாமல் ஆட்டங் காண, அவை பிராணனைச் சூழ்ந்து கொண்டு,

    "ஐயனே! நம்முள் நீங்கள்தான் பெரியவர். தயவுசெய்து வெளியேற வேண்டாம். இங்கேயே இந்த உடம்பாலயத்துள்ளேயே இருங்கள்" எனப் பணிந்து வேண்டின.

    அதன் பின்னர் வாக்கு, கண், காது, மனம் என்று தனித்துப் பெருமைப்பட சொல்லிக் கொள்ளாமல், தங்களைப் பிராண சக்திகள் என்றே சொல்லிக் கொண்டன.

    புலன்களே சரீரத்தைத் தாங்கும் சக்திகள். ஆனாலும் அவற்றிற்கு ஆதாரமானதும், முதன்மையானதும் பிராணன்தான்.

    தாயின் கருவறையிலிருந்து பிரசவமாகிப் பூமியில் விழுந்த கணமே, நமது வயது வாழ்நாள் -வாழ்க்கையென்பது சுவாசத்தில் தான் ஆரம்பமாகிறது. நமது கடைசி சுவாசத்தில் தான் மரணமும் சம்பவிக்கிறது. ஆக வாழ்வின் தொடக்கமும், முடிவும் சுவாசத்தில் தான் இருக்கிறது.

    நம்மிடமுள்ள மூச்சே, நம்முடைய வாழ்முதலாகிய பொருள், கைம்முதல் ஆகும். அதுவே பிராணன், உயிரும் ஆகும்.

    -தென்னம்பட்டு ஏகாம்பரம்

    • ஒரு கணினி மிகவும் பகுத்தறிவானது.
    • சிரிக்க முடிந்தால் நிம்மதியாக இருப்பீர்கள்.

    அரிஸ்டாட்டில் மனிதன் பகுத்தறிவு விலங்கு என்கிறார்.

    அது உண்மையாக இருக்காது. ஏனெனில் எறும்புகள் மற்றும் தேனீக்கள் மிகவும் பகுத்தறிவு கொண்டவை.

    உண்மையில், எறும்புகளுடன் ஒப்பிடும்போது, மனிதன் கிட்டத்தட்ட பகுத்தறிவற்றவனாகத் தெரிகிறான்.

    ஒரு கணினி மிகவும் பகுத்தறிவானது. ஒரு கணினியுடன் ஒப்பிடும்போது, மனிதன் மிகவும் பகுத்தறிவற்றவன்.

    மனிதனைப் பற்றிய எனது வரையறை என்னவென்றால், மனிதன் சிரிக்கும் விலங்கு.

    கணினி சிரிக்காது, எறும்பு சிரிக்காது, தேனீ சிரிக்காது.

    ஒரு நாய் சிரிக்கும்போது நீங்கள் மிகவும் பயப்படுவீர்கள்! அல்லது ஒரு எருமை திடீரென்று சிரிக்கிறது: உங்களுக்கு மாரடைப்பு ஏற்படலாம்.

    மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும்..

    அது வளர்ச்சியின் மிக உயர்ந்த சிகரம்.

    சரிப்பின் மூலம் நீங்கள் கடவுளை அடைவீர்கள். ஏனென்றால் உங்களில் இருக்கும் உயர்ந்தவற்றின் மூலம் மட்டுமே நீங்கள் இறுதி நிலையை அடைய முடியும்.

    சிரிப்பு பாலமாக மாற வேண்டும்.

    கடவுளிடம் உங்கள் வழியில் சிரிக்கவும்.

    உங்கள் வழியில் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை, கடவுளிடம் உங்கள் வழியில் சிரிக்கவும் என்று தான் சொல்கிறேன்.

    சிரிக்க முடிந்தால் காதலிக்க முடியும்.

    சிரிக்க முடிந்தால் நிம்மதியாக இருப்பீர்கள்.

    சிரிப்பு வேறு எதுவுமில்லாமல் நிம்மதியாக இருக்கிறது.

    எனவே எனக்கு எல்லா நகைச்சுவைகளும் பிரார்த்தனைகள். அதனால்தான் நான் நகைச்சுவைகளை சொல்கிறேன்.

    -ஓஷோ

    • தமிழகத்தின் எல்லை என்னை வரவேற்றது.
    • எனக்கு ஒரு கோவிலும் உண்டு.

    என் பெயர் தான் காவிரி. எனக்கு பொன்னி என்றும் பெயர் உண்டு. பொன் போன்ற நெற்கதிரை விளைவிப்பதால் எனக்கு அப்படியொரு பெயர். காவிரி என்ற பெயர் கூட காரணப் பெயர் தான். கா என்றால் சோலை விரி என்றால் பரப்புதல் இருமருங்கும் சோலைகளை பரப்பி வருவதால் நன் காவிரி ஆனேன்.

    கருநாடகமே என் தாய்வீடு. அங்குள்ள "குடகு" மலைப் பகுதியில் "மெர்க்காரா" என்னும் இடத்தில் தோன்றுகிறேன். அங்கிருந்து ஓடிவந்து "திருக்குளத்தில்" தங்குகிறேன் அதற்கு "தலை காவிரி" என்று பெயர். இங்கு எனக்கு ஒரு கோவிலும் உண்டு. எவ்வளவு நாள் தான் அங்கேயே தங்க முடியும்?

    எனக்கோ சோழ நாட்டை பார்க்க வேண்டுமென்று ஆசை. என் பயணத்தை தொடங்கினேன். வரும் வழியில் என்னை சிறை வைத்தார்கள். அந்த இடத்திற்கு "கிருஷ்ணராஜாசாகர்" என்று பெயர். தடுத்த அவர்களுக்கு தண்ணீரையும் மின்சக்தியையும் அளித்தேன் அதில் அவர்கள் மயங்கி விட்டார்கள் போலும். ஒடி வந்து என்னை திறந்து விட்டனர். எனக்கோ மகிழ்ச்சி வெள்ளம். ஆனந்த கூத்தாடி கொண்டு கீழ்த்திசை நோக்கி ஓடினேன்.

    தமிழகத்தின் எல்லை என்னை வரவேற்றது. நன் அடைந்த இன்பத்திற்கு எல்லையே இல்லை. இன்னும் சில நாட்களில் சோழ நாட்டை அடைந்து விடலாம். கவலை இல்லை என்று எண்ணி கொண்டு தளர் நடை போட்டேன். கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்ததால் காலில் வலி. மேட்டிலும் பள்ளத்தில் குதித்தல் உடம்பிலும் வலி. எங்காவது ஒய்வெடுத்துச் சென்றால் இதமாக இருக்கும் என்று உள் மனம் எண்ணிற்று. அதற்கு ஏற்றது போல் சேலம் மாவட்டத்து மக்கள் எனக்கு "மேட்டுரில்" எனக்கொரு மாளிகை கட்டி வைத்திருந்தார்கள். அப்பப்பா மாளிகையா அது மாமனார் கோட்டை போலிருந்தது.

    அங்குச் சில நாட்கள் ஓய்வெடுத்தபின் , என் பயணத்தை மீண்டும் தொடங்கினேன். "பவானி,நொய்யல்" என்னும் தோழிகளும் என்னோடு சேர்ந்து கொண்டனர். என் மகிழ்ச்சியை கேட்க வேண்டுமா ? பரந்து திரிந்து பாடி நடந்த என்னை 'அகன்ற காவிரி' என்று அன்புடன் அழைத்தனர். என் பருவமும் உருவமும் பார்ப்பதற்கு அப்படி தான் இருந்தது.

    என் வேகமான நடை சில மணி நேரத்திற்குள் "தோகூர்" என்னும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து. இந்த இடத்தில் தான் கரிகால மன்னன் எனோக்கோர் உப்பரிகையைக் கட்டி வைத்திருக்கிறான். அதற்கு கல்லணை என்று பெயர். மேட்டூரும் கிருஷ்ணராஜாசாகர் முளைப்பதற்கு முன்னால் இது முளைத்து விட்டது. இதன் வைத்து ஈராயிரம் ஆண்டுகள் . இன்று கட்டியது போல் எத்துனை அழகு! தமிழர்களின் கட்டடக்கலை நுட்பத்திற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

    "பட்டுக்கோட்டை" மக்களின் பரிதாபத்தை தீர்ப்பதற்கு என் அருமை தங்கை ஒருத்தியைக் கல்லணை கால்வாய் மூலம் அனுப்பி வைத்தேன். பின் திருகாட்டுப்பள்ளியில் இன்னொரு தங்கையாம் வெண்ணையாற்றை வேறொரு பக்கம் அனுப்பி வைத்தேன். அதன்பின் திருவையாறு , குடந்தை , மயிலாடுதுறை வழியாக பூம்புகாரை அடைந்தேன். ஓடி ஓடி வந்ததால் உள்ளமும் களைத்தது ; உடம்பும் இளைத்தது. இங்கு "ஆடு தாண்டவம் காவிரி " என்று அழைக்கப்பட்டேன். யார் எப்பெயரால் அழைத்தால் எனக்கென்ன? வங்கக் கடலில் என் சங்கமம் முடிந்தது. சோழ நாட்டு பயணம் மகிழ்ச்சியாக அமைந்தது.

    (படித்ததில் பிடித்தது)

    • குளிர்காலத்தில் குயில் எங்கே செல்கிறது என்பது புரியாத புதிர்.
    • குயிலைப் பற்றி பாடாத இலக்கியங்கள் இல்லை.

    குயிலில் கூவுவது ஆண்குயில் மட்டும்தான். பெண் குயில் கூவுவதில்லை. பெரும்பாலும் அமைதியாகவே இருக்கும் உயிர் இது. மகிழ்ச்சி ஏற்பட்டால் 'கிளிக் கிளிக்' என்ற ஒலியுடன் ஆண்குயிலை, பெண்குயில் கொஞ்சி விளையாடும்.

    குயிலின் கானத்தை காதால் கேட்டு நாம் ரசிக்கலாமே தவிர, குயிலைக் கண்ணால் பார்ப்பது அரிது. உயர்ந்த மரங்களின் நடுவே பிறர் கண்ணில் படாமல் சஞ்சரிக்கும் பறவை இது.

    முதல் மரியாதை திரைப்படத்தில், 'பூங்காத்து திரும்புமா என் பாட்டை விரும்புமா?' பாடலில், 'குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா?' என்று கேட்டிருப்பார் வைரமுத்து.

    குயில், இளவேனில் எனப்படும் வசந்த காலத்தில் மட்டும்தான் நம்மிடையே காணப்படுகிறது. குளிர்காலத்தில் குயில் எங்கே செல்கிறது என்பது புரியாத புதிர்.

    குளிர் காலத்தில் குயில் கூவுவதும் இல்லை. குயில் அப்போது தற்காலிகமாக இடம் பெயர்ந்துவிடும் என பறவை ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால், அதை உறுதிப்படுத்த இதுவரை போதிய ஆதாரம் எதுவும் இல்லை.

    குயிலைப் பற்றி பாடாத இலக்கியங்கள் இல்லை. குயிலைப்பற்றி பாடாவிட்டால் அவை இலக்கியங்களும் இல்லை.

    -மோகன ரூபன்

    • டீக்கு வாழ்நாள் முழுக்க பழகியவர்களை மாற்ற முடியாது.
    • காபி மிட்டாய்களை அறிமுகபடுத்தி, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    1950... இரண்டாம் உலகபோர் முடிந்து ஜப்பான் மறுசீரமைக்கபட்டது. பொருளாதாரம் முன்னேறி வந்தது. நெஸ்லே கம்பனி ஜப்பானில் காபி விற்பனை செய்யலாம் என முனைந்தது. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. ஜப்பானியர்கள் க்ரீன் டீ பிரியர்கள். நாள் முழுக்க ஏராளமான க்ரீன் டீ குடிப்பார்களே ஒழிய காபி குடிக்க மாட்டார்கள்.

    ஜப்பானியர்களுக்கு காபி குடிக்க கொடுத்து சோதனை செய்தார்கள். காபி குடித்த ஜப்பானியர்கள் "ஆகா, அருமை, அற்புதம்" என்றார்கள். அதன்பின் நெஸ்கபே ஜப்பானில் ஆரவாரமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஏராளமான பொருள்செலவில் விளம்பரம், கடைகளில் ஸ்டாக் எல்லாம் செய்தும் விற்பனை சுத்தமாக இல்லை.

    காபியை குடிக்க சொல்லி கொடுத்தால் நல்லா இருக்கு என்கிறார்கள். ஆனால் அதன்பின் பழைய வழக்கமான க்ரீன் டீக்கு போய்விடுகிறார்கள். காபியை குடிப்பது இல்லை. இவர்களை என்ன செய்வது?

    பிரபல மனிதவியல் நிபுணர், மனநல நிபுணர் க்லோடேர் ராபில்லியை அழைத்து வந்து ஐடியா கேட்டார்கள்.

    "இப்ப அமெரிக்காவில் எல்லாரும் காபி குடிக்கிறீர்கள். திடீர்னு க்ரீன் டீக்கு மாற சொன்னால் மாறுவீர்களா?"

    "அது எப்படி மாறுவோம்?"

    "அந்த மாதிரிதான். க்ரீன் டீக்கு வாழ்நாள் முழுக்க பழகியவர்களை மாற்ற முடியாது. ஆனால் அடுத்த தலைமுறையை குறிவைத்தால், அவர்களை காபிக்கு பழக்கபடுத்தலாம். அதற்கு ஒரு பத்து ஆண்டுகளாவது ஆகும். காத்திருக்க தயாரா?"

    "தயார். என்ன செய்யவேண்டும்"

    "குழந்தைகளுக்கு காபி மிட்டாய்களை அறிமுகபடுத்துங்கள். தினமும் அவர்கள் காபிக்கு பழக்கபடுத்தினால், திரவமாக அதை பின்னாளில் சந்தைப்படுத்துவது எளிது"

    நெஸ்கபே அதன்பின் காபி மிட்டாய்களை அறிமுகபடுத்தி, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பத்து ஆண்டுகள் பொறுத்திருந்து இன்ஸ்டன்ட் காபியை அறிமுகபடுத்த, இளைய தலைமுறையிடம் பெரிய ஹிட் ஆனது

    காபிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, கொகோகோலா கம்பனி, கேன் வடிவில் ஜார்ஜியா ஐஸ் காபி எனும் பானத்தை அறிமுகபடுத்தியது. கேன்களில் கிடைத்த குளிர்ந்த ஐஸ் காப்பியை இளைஞர்கள் வாங்கி குடித்தார்கள். இன்று கொகோகோலாவை விட அதிகமாக விற்கும் பானமாக ஜார்ஜியா ஐஸ் காபி மாறியது

    பன்னாட்டு பிசினஸ்பிஸ்தாக்கள் நீண்டகால ஆட்டத்தை ஆடுவதில் கைதேர்ந்தவர்கள். ஆயிரமாயிரம் ஆண்டு வழக்கத்தை ஒரே தலைமுறையில் மாற்றுவது என்றால் சும்மாவா என்ன?

    பொறுத்தார் பூமி ஆள்வார்

    - நியாண்டர் செல்வன்

    • செம்புக்கும் சேர்த்து தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.
    • செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.

    ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...! இது அனைவருக்கும் தெரிந்தது.

    எனவே 8 கிராம் தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் தங்கத்தில் தான் நகை செய்யப்படுகின்றது...!

    ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம்+ 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்.

    அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.

    ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்புக்கும் சேர்த்து தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.

    - ஜான் அந்தோணி

    • பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை.
    • நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

    கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது.

    அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான்.

    ஆனால், அந்தக் கைத்தடி நழுவிப் போய் விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று புலம்பினான்.

    அங்கு இருந்த ஒரு துறவி, ''ஐயா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.

    வியாபாரி நடந்ததைக் கூறினான்.

    துறவி சொன்னார், ''ஐயா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

    பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை.

    ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

    -பரமஹம்சர்.

    ×