என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • டுவிட்டர், மெட்டா, அமேசான் ஆகிய நிறுவனங்கள் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
    • 2022-ல் இதுவரை 1,35,000 ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

    இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பல மாதங்களாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் போவதில்லை. பணியாளர்களின் செயல் திறன்கள் கண்காணிக்கப்பட்டு 2023-ம் ஆண்டில் செயல் திரை கண்காணிக்க உள்ளது. 2023-ம் ஆண்டில் 10,000 ஊழியர்கள் வரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள் என ஐ.நா.சபை தலைவர் குட்டரெஸ் தெரிவித்தார்.
    • பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சமாளிக்க தேசிய செயல்திட்டங்களை அரசுகள் செயல்படுத்த வேண்டும்.

    வாஷிங்டன்:

    சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

    இந்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆற்றிய உரையில் கூறியதாவது:

    பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை என்பது உலகளவில் மிகவும் பரவலாக நிகழும் மனித உரிமை மீறலாகும்.

    ஒவ்வொரு 11 நிமிடமும் ஒரு பெண் அல்லது சிறுமி தனது நெருங்கிய உறவினராலோ அல்லது தனது காதலனாலோ கொல்லப்படுகின்றனர்.

    கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரக் கொந்தளிப்பு வரை தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடலாலும் மற்றும் மனதாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    உலக நாடுகளின் அரசுகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தேசிய அளவில் செயல் திட்டத்தை வகுத்து, நடைமுறைப் படுத்த வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்று குரல் எழுப்புங்கள் என தெரிவித்தார்.

    • ஓரியன் விண்கலம் வருகிற டிசம்பர் 11ம் தேதி பூமிக்கு திரும்பும் விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
    • 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பிஉள்ளது.

    நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப அமெரிக்காவின் விண் வெளி ஆய்வுக்கழகமான நாசா முடிவு செய்து. ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.

    முதல்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இன்றி நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய நாசா திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டது.

    ஆர்டெமிஸ்-1 என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலத்தை கடந்த ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிடப்பட்டது.

    ஆனால் தொழில் நுட்பகோளாறு மற்றும் சூறாவளி காரணமாக 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 16ம் தேதி ஓரியன் விண்கலம், ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவுக்கு ஏவப்பட்டது.

    பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. அப்போது சுமார் 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து ஓரியன் விண்கலம் புமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது.

    இந்த நிலையில் 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஓரியன் விண்கலம் நிலவை அடைந்துள்ளது. அதன் சுற்றுவட்டப்பாதை அருகே விண்கலம் சென்றடைந்து இருக்கிறது. நிலவின் சுற்றுப்பாதையில் நுழைவதற்கு போதுமான வேகத்தை ஓரியன் விண்கலம் எடுத்து வருகிறது.

    சுற்றுவட்டப் பாதைக்குள் வருகிற 25ம் தேதிக்குள் ஓரியன் விண்கலம் செல்லும். அதன்பிறகு ஒரு வாரம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும். அதன்பின் ஓரியன் விண்கலம் வருகிற டிசம்பர் 11ம் தேதி பூமிக்கு திரும்பும் விண்கலத்தை பசிபிக் கடலில் இறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

    நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான சூழல் இருப்பதை அறிய சோதனைக்காக மனித திசுக்களை பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற பொம்மைகள் ஓரியன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

    விண்ணில் உள்ள கதிர் வீச்சுகளை மனித உடல்கள் எந்த அளவுக்கு தாங்குகின்றன என்பது இந்த மாதிரி பொம்மைகள் மூலம் அறியப்படும். ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 2.30 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பிஉள்ளது.

    • இந்தியாவும், பிரதமர் மோடியும், அமெரிக்காவிற்கு உதவக்கூடிய முக்கிய கூட்டாளிகள்.
    • பிரதமர் மோடியும், அதிபர் பைடனும் 15 முறைக்கு மேல் சந்தித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முதன்மை துணை தேசிய ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறியுள்ளதாவது:

    இந்தியா-அமெரிக்கா வரலாற்றில், 2022 ஆண்டு முக்கியமானது. அடுத்த ஆண்டு இரு நாடுகளிடையேயான உறவு இன்னும் வலுவடையும். ​சர்வதேச அளவிலான பிரச்சினைகளில் ​அமெரிக்காவிற்கும், அதன் அதிபர் ஜோபைடனுக்கும் உண்மையிலேயே உதவக்கூடிய கூட்டாளிகளை உலகம் முழுவதும் தேடும் போது அந்த பட்டியலில் இந்தியாவும், பிரதமர் மோடியும் முக்கிய இடத்தை பெறுகின்றனர்.

    ஜி-20 உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் நாங்கள் இதை பார்த்தோம்., அணுசக்தி பிரச்சினைகள் தொடர்பாக அதிகரித்து வரும் ஆபத்தை இந்திய அரசு முன்னிலைப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியும், அதிபர் பிடனும் 15 முறைக்கு மேல் சந்தித்து உள்ளனர், சமீபத்தியது சந்திப்பு கடந்த வாரம் பாலியில் நடந்துள்ளது.

    குவாட் உச்சி மாநாடு அடுத்து நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா வகிக்க உள்ளது. அதை நாங்கள் அனைவரும் எதிர்நோக்குகிறோம். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் அடுத்த ஆண்டு மிக முக்கிய ஆண்டாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிபர் ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் எளிமையாக திருமணம் நடந்தது.
    • இதில் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் பங்கேற்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில், இவர்களின் திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நேற்று முன்தினம் நடந்தது. அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

    அதிபர் மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளன. முதல் முறையாக அதிபர் பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது.

    பதவியில் இருக்கும் அதிபரின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் நைட் கிளப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    வாஷிங்டன்:

    டிரான்ஸ்போபியா என்று சொல்லப்படும் பாலியல் அடையாளம் காரணமாக கொல்லப்படுபவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 20-ம் தேதி மூன்றாம் பாலினத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் கொலோரடா மாகாணத்தில் உள்ள கொலோராடா ஸ்பிரிங்ஸ் நகரத்தில் கே நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நைட் கிளப்பிற்குள் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாகவும் 18 பேர் காயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டிற்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.

    • வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
    • டொனால்டு டிரம்பை டுவிட்டரில் சேர்க்க 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடக்கப்பட்டது. வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக டிரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

    தற்போது டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்தது. இதனையடுத்து, டொனால்டு டிரம்பை டுவிட்டரில் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்து எலான் மஸ்க் டுவிட்டரில் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வந்தனர்.

    டொனால்டு டிரம்பை சேர்க்க 51.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். 48.2 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கின் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கினார். இதனால் 22 மாதங்களுக்கு பிறகு டிரம்பின் கணக்கு டுவிட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

    • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் இந்தியா நிரந்தர இடம்பெற பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாக ஆதரிப்பதாக, பிரான்ஸ் நாட்டுக்கான நிரந்தர துணைப் பிரதிநிதி நதாலி பிராட்ஹர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பாதுகாப்பு கவுன்சில் அதன் அதிகாரத்தையும் செயல்திறனையும் வலுப்படுத்தும் வகையில், உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதன் நிர்வாக மற்றும் செயல்பாட்டுத் தன்மையைப் பாதுகாக்க, விரிவாக்கப்பட்ட கவுன்சில் 25 உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம் என்றார்.

    ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான விவாதத்தில் நேற்று முன்தினம் பேசிய ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் பார்பரா உட்வர்ட் கூறுகையில் இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பான் மற்றும் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அந்த நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்து மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

    • டுவிட்டரில் சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
    • ‘டுவிட்டர்’ அலுவலகங்கள் 21-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும்

    நியூயார்க் :

    உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பிறகு அந்த நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

    டுவிட்டரில் சர்வதேச அளவில் 7 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் பாதிப்பேரை பணிநீக்கம் செய்தார். டுவிட்டரை லாபநோக்கத்தில் செயல்பட வைக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    வீட்டில் இருந்து பணியாற்றும் கொள்கையில் மாறுதல்களை செய்தார். ஒவ்வொருவரும் அலுவலகத்துக்கு வந்து வாரத்தில் 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 50 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டதால், எஞ்சிய ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது.

    இதற்கிடையே, கடினமாக உழைக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் நீடிக்குமாறும், மற்றவர்கள் 3 மாத சம்பளத்துடன் விலகிக்கொள்ளுமாறும் கூறிய எலான் மஸ்க், இதுகுறித்து முடிவு எடுக்க நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை 'கெடு' விதித்தார்.

    'கெடு' முடிந்த நிலையில், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் டுவிட்டரில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். கொத்து கொத்தாக விலகி வருகிறார்கள். டுவிட்டரிலேயே 'குட் பை' எமோஜிகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்குக்கு ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு எலான் மஸ்க், ''சிறந்த ஊழியர்கள் பணியில் நீடிக்கிறார்கள். அதனால் நான் பெரிய அளவில் கவலைப்பட மாட்டேன்'' என்று பதில் அளித்துள்ளார்.

    டுவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றும் அவர் மற்றொரு பதிவில் தெரிவித்தார்.

    'கெடு' முடிந்தபோது, முக்கியமான ஊழியர்களாக கருதப்பட்ட சிலருடன் எலான் மஸ்க் அவசர ஆலோசனை நடத்தினார். சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் சிலர் நேரடியாகவும், வேறு சிலர் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர். அவர்களை தக்கவைக்க முயற்சி நடந்தது.

    ''எப்படி வெற்றி பெறுவது என்று எனக்கு தெரியும். வெற்றி பெற விரும்புகிறவர்கள் மட்டும் என்னுடன் சேருங்கள்'' என்றும் எலான் மஸ்க் கூறினார்.

    இதற்கிடையே, உலகம் முழுவதும் 'டுவிட்டர்' அலுவலகங்கள் 21-ந் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்றும் டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சி கைக்குச் சென்றது.
    • இதையடுத்து, சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த வாரம் நடந்த இடைக்காலத் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினர் கைக்கு சென்றுள்ளது. இதன்மூலம் அடுத்த 2 ஆண்டுக்கு அதிகாரங்களைப் பெறுவதற்கு குடியரசுக் கட்சியினருடன் ஜோ பைடன் மோதல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அமெரிக்க மக்கள் குடியரசுக் கட்சியை தேர்வு செய்வதற்கு தயாராகிவிட்டனர் என அக்கட்சியின் மூத்த தலைவர் கெவின் மக்கார்தி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, சபையின் அடுத்த சபாநாயகராக ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலோசிக்கு பதிலாக மக்கார்தியை குடியரசுக் கட்சி தேர்வு செய்துள்ளது. இதனால் மக்கார்திக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகப் போவதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நான்சி பெலோசி கூறுகையில், அடுத்த காங்கிரஸில் ஜனநாயகக் கட்சித் தலைமைக்கு நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படமாட்டேன். என்னைப் பொறுத்தவரை ஜனநாயகக் கட்சிக் கூட்டத்திற்கு புதிய தலைமுறை தலைமை தாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.

    • தைவான் ஜலசந்தியின் குறுக்கே தைவானை தாக்குவது கடினமாகும்.
    • தைவான் மீதான தாக்குதல் ஒரு புவிசார் அரசியல் பிழையாக இருக்கும்.

    தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தைவானின் பெரும்பகுதி மலைப்பாங்கான தீவு ஆகும். எனவே தைவான் ஜலசந்தியின் குறுக்கே தைவானை தாக்குவது கடினமாகும். இதில் சீனர்களுக்கு அதிக ஆபத்தும் இருக்கும். தைவான் மீதான தாக்குதல் ஒரு புவிசார் அரசியல் பிழையாக இருக்கும். தைவானை சீனா தாக்கினால் அது உக்ரைனில், ரஷியா செய்ததை போன்று ஒரு தவறான பாதையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

    • பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினருடன் பணிபுரிய தயாராக உள்ளேன்.
    • பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவு வெளியானபோது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி இடையே சிறிய அளவில் வித்தியாசம் மட்டும் இருந்தது.

    அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி இடைக்கால தேர்தல் நடந்தது.

    இதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதில் அதிபர் ஜோபைட னின் ஜனநாயக கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெற 218 இடங்கள் தேவை.

    பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவு வெளியானபோது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி இடையே சிறிய அளவில் வித்தியாசம் மட்டும் இருந்தது. இதில் குடியரசு கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.

    இந்தநிலையில் பிரதிநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி கைப்பற்றியது. அக்கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களை பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி 211 இடங்களை கைப்பற்றியது.

    பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டிரம்பின் குடியரசு கட்சி குறைந்தபட்சம் 218 இடங்களை குறுகிய பெரும்பான்மையுடன் வெல்லும் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    இதனையடுத்து குடியரசு கட்சிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, "குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு அதன் தலைவர் கெவின் மெக்கார்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

    பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினருடன் பணிபுரிய தயாராக உள்ளேன். ஜனநாயக கட்சியினர் அல்லது குடியரசுக் கட்சியினர் என யாராக இருந்தாலும் அவர்கள் என்னுடன் இணைந்து பணிபுரிய ஆவலுடன் இருப்பின், யாருடன் வேண்டுமானாலும் பணிபுரிவேன்" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

    ×