என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி.
    • இவர் முதல் ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் விடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடர் நடைபெறுகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர், வார்விக்ஷையர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் மூர்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.

    வார்விக்ஷயர் அணி சார்பில் ஹசன் அலி, லிண்டொட் தலா 3 விக்கெட்களும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 169 ரன்கள் இலக்குடன் வார்விக்ஷயர் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் டேவிஸ், ராபர்ட் யேட்ஸ் ஆடினர்.

    நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.

    முதல் பந்தில் அலெக்ஸ் டேவிஸ் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    2-வது பந்தில் கிறிஸ் பெஞ்சமின் கிளின் போல்டுஆனார்.

    3-வது பந்தில் டான் மவுஸ்ஸி ஒரு ரன் எடுத்தார்.

    4-வது பந்தில் யேட்ஸ் ஒரு ரன் எடுத்தார்.

    5-வது பந்தில் டான் மவுஸ்ஸி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    6-வது பந்தில் எட் பர்னார்ட் போல்டானார்.

    இதன்மூலம் ஷாஹின் அப்ரிடி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், ஷாஷின் அப்ரிடி 4 ஓவர்களில் 29 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு மெய்டன் ஓவரையும் வீசி அசத்தி இருந்தார். ஆட்ட நாயகன் விருது ஷாஹின் அப்ரிடிக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய வார்விக் ஷையர் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 279 ரன்கள் எடுத்தது.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ஸ்மித் சதமடித்தார். ஹெட், வார்னர் அரை சதமடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஆலி ராபின்சன், ஜோஷ் டங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 98 ரன்னும், ஹாரி புரூக் 50 ரன்னு எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. உஸ்மான் கவாஜா அரை சதமடித்து 77 ரன்னில் அவுட்டானார். இறுதியில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 279 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்தின் பிராட் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால் 45 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    5-வது விக்கெட்டுக்கு பென் டக்கெட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். நான்காவது நாள் முடிவில் இங்கிலாந்து 114 ரன்கள் எடுத்துள்ளது. டக்கெட் 50 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 29 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    கடைசி நாளான இன்று இங்கிலாந்து 257 ரன் எடுத்து வெற்றி பெறுமா அல்லது ஆஸ்திரேலியா விரைவில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது டெஸ்டையும் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • ஆஸ்திரேலிய அணியின் கவாஜா 2-வது இன்னிங்சில் 77 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 100.4 ஓவர்களில் 416 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆலி ராபின்சன், ஜோஷ் டங்கு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் டக்கட் 98 ரன்னும், ஹாரி புரூக் 50 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

    4-வது நாளான இன்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கவாஜா 77 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 325 ரன்கள் சேர்த்தது.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 416 ரன்கள் குவித்தது. நேற்றைய 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், ஹாரி புருக் 45 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னிலும் 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து ஹாரி புரூக் அரை சதம் அடித்து வெளியேறினார். பேர்ஸ்டோவ் 16, பிராட் 12, ராபின்சன் 9, ஜோஷ் டங் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 91 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. டேவிட் வார்னர் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். லாபுசேன் 30 ரன்னில் வெளியேறினார். உஸ்மான் கவாஜா அரை சதமடித்தார்.

    மழை குறுக்கிட்டதால் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 58 ரன்னுடன் களத்தில் உள்ளார். இதனால் ஆஸ்திரேலியா 221 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 85 ரன்னும், அலெக்ஸ் கேரி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிராவிஸ் ஹெட் 77 ரன்னில் அவுட்டானார். டேவிட் வார்னர் அரை சதம் கடந்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார். லாபுசேன் 47 ரன்னில் வெளியேறினார்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் சதமடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 110 ரன்னில் அவுட்டானார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டும், ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது. கிராலே 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஒல்லி போப் 42 ரன்னில் வெளியேறினார்.

    சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பென் டக்கெட் 98 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 10 ரன்னில் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி புருக் 45 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் 110 ரன்கள் விளாசினார்.
    • இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    லண்டன்:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.

    ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லபுஷேன் 47 ரன்கள் சேர்த்தார். ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் ஜோடி அபாரமான ஆடி ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 110 ரன்களில் வெளியேறினார். அதன்பின், டிராவிஸ் ஹெட் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2ம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ராபின்சன், ஜோஷ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

    • கடுமையான உடல் உபாதைகளுக்கு மத்தியில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
    • பற்கள் இல்லாத நிலைமையை ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் வருவது இயற்கை. பிரசவம் முடிந்ததும் இந்த அறிகுறிகள் நின்று விடும்.

    ஆனால் அரிதான ஒரு நிகழ்வாக, பிரிட்டனில் ஒரு பெண் கர்ப்பகாலத்தின்போது கடுமையாக வாந்தியெடுத்ததால் பற்கள் அனைத்தையும் அகற்ற வேண்டிய நிலைக்கு சென்றுள்ளார்.

    கூப்பர் என்பவரின் மனைவி(26), 2017 வருடம் பிரான்சில் உள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றில் செவிலித்தாயாக பணிபுரிந்தபோது கர்ப்பமானார். பிறகு ஒரு வாரத்திற்குள் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கர்ப்ப காலத்திலேயே அவர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்ப வேண்டியிருந்தது.

    அங்கு அவருக்கு, "ஹைபர்யெமெசிஸ் கிராவிடரம்" (Hyperemesis Gravidarum) என்ற அரியவகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஹெச்.ஜி. நோயானது 1% பெண்களை மட்டுமே பாதிக்கின்ற ஒரு அரிய மற்றும் தீவிரமான கர்ப்பகால நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடிக்கடி வாந்தி எடுப்பார்கள்.

    இந்த நோயின் தாக்கம் காரணமாக அவரது பற்கள் விழ ஆரம்பித்தன. அவர் கடுமையாக வாந்தி எடுத்தார். இந்த கடுமையான உடல் உபாதைகளுக்கு மத்தியில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

    பிரசவம் முடிந்ததும் அவருடைய வாந்தியெடுத்தல் மற்றும் குமட்டல் அறிகுறிகள் நின்றுவிட்டன. ஆனால், 6 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு, வாந்தியின் அமிலத்தன்மையால் சேதமடைந்த பற்கள் அனைத்தையும் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    சில வருடங்களுக்கு பிறகு அவர் மேலும் 2 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அந்த 2 முறையும் எச்.ஜி. (HG) நோய் பாதிப்பு இருந்திருக்கிறது.

    இந்த நோய் மற்றும் நோயின் பாதிப்பிலிருந்து மீண்டது, உணவு முறை, மற்றும் தற்போதைய முக தோற்றம் குறித்து அவர் கூறியதாவது:

    இந்த நிகழ்வு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. எனது மோசமான எதிரிக்கு கூட இந்நிலை வர நான் விரும்பமாட்டேன். இறப்பது போல் ஒரு உணர்வு வருவதால், பலர் இதனை புற்றுநோய் சிகிச்சைக்காக கொடுக்கப்படும் கீமோதெரபியின் பக்க விளைவுகளுடன் ஒப்பிடுகிறார்கள். இது ஒரு விரும்பத்தகாத நிலை. இது உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை சோர்வடைய செய்கிறது.

    இப்போது என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. இயல்பு நிலைக்கு திரும்பி விட்டேன். வாழ்க்கை மிகவும் நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஹெச்.ஜி. வந்து 9 மாதங்கள் படுக்கையில் இருக்கும்போது மிகுந்த வேதனை அடைந்தேன். நான் இப்போது பற்கள் இல்லாத நிலைமையை ஏற்றுக்கொண்டு வாழ பழகிவிட்டேன்.

    எனது உணவுப்பழக்கம் முன்பு போல் இல்லை. ஏனெனில் அது இந்நோயினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நான் இறைச்சியை அதிகம் உண்பதில்லை. முக்கியமாக நான் காய்கறிகளை சாப்பிடுவதை கடைபிடிக்கிறேன். எனக்கு இப்போது செயற்கை பற்கள்தான் உள்ளன. ஆனால், அவை முக அழகுக்காக அணிய வேண்டியவையே தவிர மிக வசதியானவை என்று கூற முடியாது. அதனால் நான் இப்போது பற்கள் இல்லாமல் சகஜமாக வீட்டை விட்டு வெளியேற பழகிக் கொண்டு விட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    • முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் வார்னர், ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    லண்டன்:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 17 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய டேவிட் வார்னர் அரை சதம் கடந்து 66 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லாபுசேன், ஸ்மித் ஜோடி 102 ரன்களை சேர்த்தது. அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாபுசேன் 47 ரன்னில் வெளியேறினார்.

    ஸ்டீவன் ஸ்மித் அரை சதம் அடித்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. ஹெட் 77 ரன்னில் அவுட்டானார். கிரீன் டக் அவுட்டானார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 85 ரன்னும், அலெக்ஸ் கேரி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    உலகெங்கிலும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை.

    உயர்ந்து வரும் பணவீக்கத்தின் காரணமாக, பிரிட்டனில் கடந்த ஆண்டு 7 பேரில் ஒருவர், உணவு வாங்க போதிய பணமில்லாததால் பசியுடன் இருந்ததாக உணவு வங்கி தொண்டு நிறுவனமான, "ட்ரஸ்ஸல் டிரஸ்ட்" எனும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

    இந்த புள்ளி விவரத்தின்படி, அந்நாட்டின் மக்கள் தொகையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் வாடி வருவதாகவும், இந்த நிலை ஒரு செயலிழந்த சமூகப் பாதுகாப்பு முறையாலும், வாழ்வதற்கான செலவுகள் உயர்வதனாலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறது.

    பிரிட்டனின் பொருளாதாரம் உலகில் 6வது இடத்தில் உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வை விட மிக அதிகமாக உள்ளதால், அனைத்து தொழிலாளர்களுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    ட்ரஸ்ஸல் டிரஸ்ட் அமைப்பின் உணவு வங்கிகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஐந்தில் ஒருவர், வேலை செய்யும் குடும்பத்தில் இருப்பதாகவும், மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1950களில் பதிவுகள் தொடங்கியதில் இருந்து, பிரிட்டனின் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து வரும் உணவு விலைகள் தற்போதுதான் மிக பெரிய அழுத்தத்தை தருகின்றது.

    இந்த நிலைக்கு யார் பொறுப்பு என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், பல்பொருள் அங்காடிகளின் நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

    பிரிட்டன் முழுவதும் உள்ள 1,300 உணவு வங்கி மையங்களை கொண்ட ட்ரஸ்ஸல் டிரஸ்டின் நெட்வொர்க், 3 மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய சுகாதார சேவை அமைப்பு அறிவித்த 5% சம்பள உயர்வை மருத்துவர்கள் ஏற்கவில்லை.
    • சம்பளத்தை 35% அதிகரிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கோரியுள்ளது.

    பிரிட்டனில் உள்ள மருத்துவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், இளநிலை மருத்துவர்கள் ஆவர். இவர்கள் ஜூலை 13ம் தேதி தொடங்கி 5-நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

    அதிக சம்பளம் கோரி நடக்கும் இப்போராட்டத்தில் பிரிட்டன் முழுவதும் 46000க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்கள் இணைவார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் உறுதி செய்துள்ளது. இப்போராட்டத்தால் மருத்துவ சேவைகள் முடங்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

    தேசிய சுகாதார சேவை அமைப்பு, சம்பள உயர்வாக 5% உயர்த்தி அறிவித்திருந்தும், பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் அதை நிராகரித்துவிட்டது. இந்தச் சலுகை மிகவும் குறைவு என்றும், இது நாட்டில் தற்போது நிலவி வரும் பணவீக்க உயர்வை ஈடுகட்டாது என்றும் மருத்துவர் அமைப்பு கூறியுள்ளது. ஆனால் அரசாங்கம் தனது சலுகையை நியாயமானது என்று கூறி வருகிறது.

    நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கும் குறைவான அளவிலேயே 15 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக சம்பளத்தை 35% அதிகரிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கோரியுள்ளது.

    சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து இளநிலை மருத்துவர்கள் நடத்தும் 4வது வேலை நிறுத்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் இளநிலை மருத்துவர்கள் குழுவின் இணைத்தலைவர்களான டாக்டர். ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர். விவேக் திரிவேதி ஆகியோர் இப்போராட்டம் குறித்து கூறுகையில், தேசிய சுகாதார சேவை அமைப்பு வரலாற்றில் இது மிக நீண்டதொரு வேலை நிறுத்தமாக அமையலாம் என்றனர். ஆனால், இது தேசிய சுகாதார சேவை அமைப்பின் வரலாற்றில் செல்ல வேண்டிய சாதனை அல்ல. நம்பகமான சலுகையை வழங்குவதன் மூலம் அரசாங்கம், இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினர்.

    முன்னதாக, பிரிட்டிஷ் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஃபில்பன்பீல்ட், பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், இளநிலை மருத்துவர்களுடனான பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டாரா என்பதை தெளிவுபடுத்துமாறு கூறியுள்ளார். இளநிலை மருத்துவர்களுக்கு குறைந்தளவே ஊதியம் வழங்கப்படுவதாக சுகாதார செயலாளர் ஒப்புக்கொண்ட பிறகும், 5% மட்டுமே சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக ஃபில்பன்பீல்ட் தெரிவித்தார்.

    தேசிய சுகாதார சேவை என்பது பிரிட்டனில் அரசு நிதியுதவி பெறும் சுகாதார அமைப்பாகும். இது 1.2 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தரமான இலவச சுகாதாரத்தை உறுதி செய்யவதே இந்த அமைப்பின் அடிப்படை கொள்கை. பிரேசில் நாட்டிற்கு பிறகு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இரண்டாவது சுகாதார அமைப்பு இதுவாகும்.

    ஸ்காட்லாந்தில் இரண்டு ஆண்டுகளில் 14.4% சம்பள உயர்வு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைவரின் நலனுக்காக முருகனிடம் வேண்டிக் கொண்டதாக அண்ணாமலை தகவல்.
    • லண்டனில் உள்ள தமிழர்களை சந்தித்து மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்குகிறார்.

    மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்து 9 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தமிழக பா.ஜ.க சார்பிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்து வருகிறார்கள்.

    வெளிநாடுகளில் வாழும், பணியாற்றி வரும் இந்தியர்களுக்கும் மத்திய அரசின் சாதனைகளை கொண்டு செல்வதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    அந்தவகையில், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் கே.அண்ணாமலை 5 நாட்கள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.

    அதன்படி, இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு, அண்ணாமலை சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டார். இந்நிலையில், லண்டன் சென்றடைந்த அண்ணாமலை அங்குள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலைக்கு அங்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    மேலும், அனைவரின் நலனுக்காக முருகனிடம் வேண்டிக் கொண்டதாகவும் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, லண்டனில் உள்ள தமிழர்களை சந்தித்து மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்குகிறார். இதேபோல, பிர்மிங்காமில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார். இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற வார்விக் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடுகிறார். அரசியல் உள்பட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

    • ஓவியத்தை வரைந்தது ஓவியர் ரூபன்ஸ் என கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதனை விற்பதற்கான முதல் முயற்சி இது.
    • இந்த ஓவியம் 1730களில் காணாமல் போய், பின்பு 1963ம் வருடம் மிசௌரியில் மீண்டும் கண்டறியப்பட்டது

    கலைப்பொருட்களை சேகரித்து ஏலம் மூலம் விற்பனை செய்யும் உலகின் பிரபலமான நிறுவனமான சோத்பி நிறுவனம், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கலைப்பொருட்கள் இந்த நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நூற்றுக்கணக்கான வருடங்களாக தவறாக அடையாளம் காணப்பட்ட, "பீட்டர் பால் ரூபன்ஸ்" வரைந்த ஓவியம் ஒன்று, லண்டனில் உள்ள சோத்பி ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. இது ஏலத்தில் கிட்டத்தட்ட 7.7 மில்லியன் டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஓவியத்தை வரைந்தவரின் உண்மையான ஓவியர் ரூபன்ஸ் என கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதனை விற்பதற்கான முதல் முயற்சி இதுதான். கடைசியாக அந்த ஓவியம் 2008ம் வருடம் 40000 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆனது. அப்பொழுது அந்த ஓவியத்தை வரைந்தது பிரான்ஸ் நாட்டு ஓவியரான "லாரண்ட் டி லா ஹைர்" என்பவர் என தவறுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

    அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஓவியத்தை, ஓவியர் ரூபன்சின் காணாமல் போன ஓவியம் என்பதை நிபுணர்கள் உறுதி செய்தனர்.

    இதற்கு முன்பு, இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள "கேலரியா கோர்ஸினி" எனும் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியத்தின் பெயர், "செயிண்ட் செபஸ்டியன் டெண்டட் பை ஏஞ்சல்ஸ்" என்று தவறுதலாக கண்டறியப்பட்டிருந்தது. ஜெர்மனியில் 2021ம் வருடம் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் இரண்டு ஓவியங்களும் அருகருகே வைக்கப்பட்ட பொழுது, தற்பொழுது ஏலத்திற்கு வந்திருக்கும் ஓவியம்தான் அசல் ரூபன்ஸ் ஓவியம் என்றும் "கேலரியா கோர்ஸினி" அரங்கில் உள்ளது அதனுடைய நகல் என்றும் உறுதிபட தெரிவித்தனர்.

    ஓவியம் மற்றும் கலைப்பொருட்களுக்கான வரலாற்று நிபுணர் அன்னா ஓர்லேண்டோ 2021ம் வருடம் ஸ்டுட்கார்ட் கண்காட்சியில் இரண்டு ஓவியங்களும் அருகருகே காட்சிக்கு வைக்கப்படுவதால் இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது எளிதாக இருக்கும். ஓவியத்திலிருக்கும் உயர்தர வேலைப்பாடு தெரிய வரும், என முன்பு கூறியிருந்ததாக சோத்பி தனது குறிப்பில் தெரிவிக்கிறது.

    எக்ஸ்-ரே கதிரியக்க பரிசோதனை மூலமாக அசல் எது என தெரியவந்துள்ளதாகவும் தெரிகிறது.

    ரோமானிய வீரர் செபஸ்டியன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அம்புகளால் துளைக்கப்பட்டு குற்றுயிராக விடப்படுகிறார். ஆனால், தேவதைகள் அதிசயிக்கத்தக்க விதமாக அவரை காப்பாற்றி விடுகிறது. இந்த ஓவியம் வரையப்பட்டிருப்பதற்கான பின்னணி கதை இதுதான்.

    நிபுணர்களின் கருத்துக்களின்படி, ராணுவ தளபதியும், பிரபுவுமாகிய இத்தாலி நாட்டின் "அம்ப்ரோஜியோ ஸ்பினோலா", இந்த ஓவியத்தை வரையுமாறு ரூபன்சை பணித்திருக்கிறார் என்றும் 1600ம் ஆண்டு ஆரம்பத்திலேயே இது வரைந்து முடிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

    சோத்பி ஏல நிறுவனத்தின் பண்டைய கால சிறப்புமிக்க ஓவியங்கள் பிரிவின் இணை தலைவரான ஜார்ஜ் கோர்டான் மீது இந்த ஓவியம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இதுகுறித்து கூறும்போது, "பிரஷ்ஷின் கைவண்ணம் துடிப்பாக தெரிகிறது. ஓவியரின் வேகத்தையும், சுறுசுறுப்பையும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. ஓவியர் ரூபன் அவர்களின் பிரஷ் என்னோடு நன்றாக பேசுவது போலிருந்தது" என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஓவியம் 1730களில் காணாமல் போய், பின்பு 1963ம் வருடம் மிசௌரியில் மீண்டும் கண்டறியப்பட்டது என ஏல நிறுவனம் தெரிவிக்கிறது.

    ×