search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிரிட்டனையும் விட்டு வைக்காத பணவீக்கம்.. 7-ல் ஒருவர் பசியால் தவிப்பு
    X

    பிரிட்டனையும் விட்டு வைக்காத பணவீக்கம்.. 7-ல் ஒருவர் பசியால் தவிப்பு

    • மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
    • இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    உலகெங்கிலும் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையின் தாக்கம் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை.

    உயர்ந்து வரும் பணவீக்கத்தின் காரணமாக, பிரிட்டனில் கடந்த ஆண்டு 7 பேரில் ஒருவர், உணவு வாங்க போதிய பணமில்லாததால் பசியுடன் இருந்ததாக உணவு வங்கி தொண்டு நிறுவனமான, "ட்ரஸ்ஸல் டிரஸ்ட்" எனும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

    இந்த புள்ளி விவரத்தின்படி, அந்நாட்டின் மக்கள் தொகையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் வாடி வருவதாகவும், இந்த நிலை ஒரு செயலிழந்த சமூகப் பாதுகாப்பு முறையாலும், வாழ்வதற்கான செலவுகள் உயர்வதனாலும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கிறது.

    பிரிட்டனின் பொருளாதாரம் உலகில் 6வது இடத்தில் உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வை விட மிக அதிகமாக உள்ளதால், அனைத்து தொழிலாளர்களுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    ட்ரஸ்ஸல் டிரஸ்ட் அமைப்பின் உணவு வங்கிகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஐந்தில் ஒருவர், வேலை செய்யும் குடும்பத்தில் இருப்பதாகவும், மக்கள் தங்கள் அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்டுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1950களில் பதிவுகள் தொடங்கியதில் இருந்து, பிரிட்டனின் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து வரும் உணவு விலைகள் தற்போதுதான் மிக பெரிய அழுத்தத்தை தருகின்றது.

    இந்த நிலைக்கு யார் பொறுப்பு என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதற்கு காரணம் பல்பொருள் அங்காடிகளின் பேராசை என்று தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், பல்பொருள் அங்காடிகளின் நிர்வாகிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

    பிரிட்டன் முழுவதும் உள்ள 1,300 உணவு வங்கி மையங்களை கொண்ட ட்ரஸ்ஸல் டிரஸ்டின் நெட்வொர்க், 3 மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இது 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×