என் மலர்tooltip icon

    சுவிட்சர்லாந்து

    • ஜெனீவா ஓபன் டென்னிசில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி சாம்பியன் பட்டம் வென்றார்.
    • அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் ஜாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெனீவா:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி, பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ் ஆகியோர் மோதினர்.

    இதில் அதிரடியாக ஆடிய நிகோலஸ் ஜாரி 7-6, 6-1 என்ற நேர் செட்களில் வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.

    நிகோலஸ் ஜாரி அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.
    • விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள நியூசாடெல் அடர்ந்த மரங்கள் மற்றும் மலைப் பகுதியில் நேற்று சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அருகிலுள்ள சாக்ஸ்-டி-ஃபாண்ட்ஸ் விமான நிலையத்திலிருந்து சுற்றுலா விமானமாக புறப்பட்டது. இந்நிலையில் நியூசாடெல் மலைப் பகுதியில் விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர்.

    நியூசாடெல் மலைகளின் சவாலான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

    • டிரினிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள எலும்புக்கூடு மொத்தம் 11.6 மீட்டர் நீலமும், 3.9 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது.
    • ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் இதனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் ஏலம் விடப்பட்டது. டிரினிட்டி என்று அழைக்கப்படும் இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு நேற்று முன்தினம் (ஏப்ரல் 18ம் தேதி) சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ஏலம் விடப்பட்டது.

    ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல் முறை என்றும், இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்றும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள 3 புதைபடிம ஆய்வு தளங்களில் இருந்து டிரனாசோரஸ் ரெக்ஸ்(டி-ரெக்ஸ்) என்ற வகையைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் 300 எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவை மொத்தமாக ஒரே எலும்புக்கூடாக சேர்க்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.

    டிரினிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள எலும்புக்கூடு மொத்தம் 11.6 மீட்டர் நீலமும், 3.9 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இந்த எலும்புக்கூடு 6.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு(இந்திய மதிப்பில் சுமார் ரூ.50 கோடி) ஏலம் போனது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் இதனை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி
    • இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    பேசெல்:

    ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங்- டான் கியாங் ஜோடியை 54 நிமிடங்களில் 21-19, 24-22 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    சாத்விக்- சிராக் ஜோடி கடந்த வாரம் நடந்த ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்த நிலையில், இன்றைய வெற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த சீசனில் இந்தியா பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும். சாத்விக்-சிராக் ஜோடிக்கு இது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும்.

    • பி.வி.சிந்து முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார்.
    • இந்தியாவின் ஸ்ரீகாந்த் சீன வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

    பாசெல்:

    சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சுவிட்சர்லாந்தின் ஸ்டாடில்மென்னை சந்தித்தார்.

    இதில் பி.வி.சிந்து 21-9, 21-16 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-16, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

    இளம் வீரர் லக்ஷயா சென் 18-21, 11-21 என்ற நேர் செட்டில் லீக் சேக் லியிடம் (ஹாங்காங்) தோல்வியடைந்தார்.

    • சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளுக்கும் பரவியது
    • கொரோனா தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.

    ஜெனீவா:

    சீனாவின் வுகான் நகரில் 2019 டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த தொற்று இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது

    இதற்கிடையே, கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.

    கொரோனாவின் ஆரம்ப காலத்தில் வுகான் நகரத்தில் ஹுவானன் சந்தைதான் தொற்றின் மையமாக விளங்கியது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்புள்ள தரவுகளை சீனா வெளிப்படையாக வெளியிடவில்லை. இதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.

    இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும். இந்தத் தரவுகள் 3 ஆண்டுக்கு முன்பே பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்தார்.

    • ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல் முறையாகும்
    • இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜெனிவா:

    சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. டிரினிட்டி என்று அழைக்கப்படும் இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு ஏப்ரல் 18ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் ஏலம் விடப்பட உள்ளதாக, கொல்லர் என்ற ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக்கூடு ஏலம் விடுவது இதுவே முதல் முறை என்றும், இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்றும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த எலும்புக்கூடு 60 முதல் 80 லட்சம் சுவிஸ் பிராங்குகளுக்கு (சுமார் ரூ.70 கோடி வரை) ஏலம் போகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    • ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் இந்தியா பற்றி தவறாகப் பேசியது.
    • பாகிஸ்தானின் இந்த செய்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

    ஜெனீவா:

    சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா பற்றி பாகிஸ்தான் தவறாக பேசியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் சீமா புஜானி பேசுகையில், பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிரான தவறான பிரசாரத்தை செய்வதற்கு மீண்டும் இந்த சிறப்பான மன்றத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் புகலிடம் கொடுத்துள்ள தனித்துவமான வேறுபாட்டைத்தான் பாகிஸ்தான் கொண்டிருக்கிறது. சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா.வால் தடை செய்யப்பட்டிருந்த ஒசாமா பின்லேடன், பாகிஸ்தான் ராணுவ அகாடமி அருகேதான் வாழ்ந்தார். சர்வதேச பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், மசூத் அசார் ஆகியோரை பல்லாண்டு காலமாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள்தான் வளர்த்து விட்டன. புகலிடமும் தந்துள்ளன என தெரிவித்தார்.

    • பாராளுமன்றம் மற்றும் அருகில் உள்ள கட்ட‌டங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • மர்ம நபர் வந்த கார், ட்ரோன்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது

    சுவிட்சர்லாந்து பாராளுமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டுகளுடன் மர்ம நபர் புகுந்ததால், உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். புல்லட் புரூஃப் உடை அணிந்துகொண்டு காரில் வந்து இறங்கிய மர்ம நபர், பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். தெற்கு நுழைவு வாயிலில் அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் வைத்திருந்ததால் அவரை கைது செய்தனர்.

    இதையடுத்து, பாராளுமன்றம் உள்ள பகுதியில் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டது. பாராளுமன்றம் மற்றும் அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    தீயணைப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். குறிப்பாக காரைப் பரிசோதிக்க, ட்ரோன்கள் மற்றும் ஒரு மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், காரில் எந்த வெடிபொருளும் இல்லை என்பது உறுதி செயய்ப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • பாராளுமன்ற கட்டிடம், அரண்மனையில் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
    • வெடிகுண்டுடன் சிக்கிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னேவில் உள்ள பாராளுமன்றத்தின் நுழைவு வாயில் அருகே ஒரு வாலிபர் சுற்றி கொண்டிருந்தார். இதையடுத்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரை சோதனை செய்தபோது குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்தார். மேலும் அவரிடம் வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாராளுமன்ற கட்டிடம், அரண்மனையில் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், அலுவலகங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டுடன் சிக்கிய நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் காரில் வந்தது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அந்த வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் வெடிகுண்டு இல்லை.

    பிடிபட்ட நபர் யார்? எந்தவித வெடிகுண்டு வைத்திருந்தார் போன்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. பாராளுமன்றத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

    • 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.
    • மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.

    ஜெனீவா :

    குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது.

    இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன.

    அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

    இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்த தரம் குறைந்த இருமல் மருந்து குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இந்த மருந்து குடித்து உஸ்பெகிஸ்தானில் 8 குழந்தைகள் இறந்துள்ளன.

    இந்த நிலையில் தரம் குறைந்த இருமல் மருந்துகளை தயாரித்து அளித்த மருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

    • உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா பிரகாசமாக உள்ளது.
    • உலகில் பிரதமர் மோடியின் தலைமை முக்கியமானது என உலக பொருளாதார மன்றம் கூறியது.

    டாவோஸ்:

    உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வருகிறது இந்த மாநாட்டில் 130 நாடுகளைச் சேர்ந்த 2,700 தலைவர்களும், இந்தியாவில் இருந்து 100 உயரதிகாரிகள் உள்பட தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

    புவிசார் அரசியல் மோதல்கள், உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய அக்கறையுள்ள விஷயங்களைப் பற்றி விவாதிக்க தலைவர்கள் கூடி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான கிலாஸ் ஸ்வாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்திய மந்திரிகள் குழுவையும், மிக முக்கிய இந்திய தொழிலதிபர்கள் குழுவையும் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உலக சுகாதாரம், பெண்கள் தலைமையிலான பொருளாதார முன்னேற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான பொது கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

    புவிசார் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றில் இந்தியா ஒளிபொருந்திய நாடாக திகழ்கிறது. உலக பொருளாதார மன்றம் இந்தியாவுடன் 38 ஆண்டுகாலமாக நல்லுறவைக் கொண்டிருக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கும் இந்த தருணத்தில் அதனுடனான உலக பொருளாதார மன்றத்தின் நல்லுறவு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    ஜி20-யின் இந்திய தலைமையின் கீழ் உலகம் வளர்ச்சி காணும். பலவாறாக பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில் ஜி20 கூட்டமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்றிருப்பது மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

    ×