என் மலர்
இலங்கை
- இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
- இலங்கைக்கு ஒரு நாளைய குறைந்தபட்ச டீசல் தேவை 5,000 டன்கள்.
கொழும்பு:
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அங்கு உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், சமையல் கியாஸ், பிற எரிபொருட்கள் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் இருந்து நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர். இதுபற்றி இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறுகையில், "இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் கடைசி டீசல் கப்பல் 16-ந் தேதியும், பெட்ரோல் கப்பல் 22-ந் தேதியும் வந்தடையும் என்று எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.
இந்த கப்பல்களுக்காக இலங்கை ஆவலுடன் காத்திருக்கிறது. இலங்கைக்கு ஒரு நாளைய குறைந்தபட்ச டீசல் தேவை 5,000 டன்கள். ஆனால் கடந்த வாரம் முன்னுரிமை அடிப்படையில் 3,000 டன்கள் வரை வினியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதே போன்று தினசரி பெட்ரோல் தேவை 3,500 டன். ஆனால் 3,200 டன் அளவில் வினியோகிக்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இலங்கையின் சனகா, சமீகா கருணரத்னே ஜோடி 7வது விக்கெட்டுக்கு 60 ரன்களுக்கு மேல் சேர்த்தது.
- இலங்கை வீரர் சனகா அதிரடியாக ஆடி 25 பந்தில் 54 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
பல்லேகலே:
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த இரு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி பல்லேகலேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 39 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் 37 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் தீக்ஷனா 2 விக்கெட், ஹசரங்கா, ஜெயவிக்ரமா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. கேப்டன் டாசன் சனகா மட்டும் ஓரளவு போராடினார்.
நிசங்கா 27 ரன்னும், அசலங்கா 26 ரன்னும் எடுத்தனர். சனகா கடைசிவரை போராடி அணியை வெற்றிபெறச் செய்தார்
இறுதியில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சனகா 54 ரன்னுடனும், கருணரத்னே 14 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.
- நெல் சாகுபடி பருவத்திற்காக இந்தியாவிடம் இலங்கை கடன் உதவி கோரியிருந்தது.
- உரத்தட்டுப்பாடு நிலவுவதால், உணவு பொருள் நெருக்கடி ஏற்படும் என்று இலங்கை பிரதமர் எச்சரித்திருந்தார்.
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, வாகன எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
அரசுக்கு எதிராக இலங்கையில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் உரத்தட்டுப்பாடு நிலவுவதால், உணவு பொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நெல் பருவ சாகுபடிக்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா உரம் தேவைப்படுவதால், உடனடி உர இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடம், இலங்கை கடன் உதவி கோரியுள்ளதாக இந்திய தூதரகம் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உர இறக்குமதிக்காக இந்தியா 55 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இலங்கைக்கு கடன் வழங்கி உள்ளதாகவும், இது இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உதவும் என்று இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது
முன்னதாக இலங்கை நிதியமைச்சக செயலாளர் சிறிவர்தன, எக்ஸிம் வங்கியுடன் இருந்து கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோர் பங்கேற்றனர்
- எம்.பி. பதவியில் இருந்து விலகியுள்ள பசில் ராஜபக்சே அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே வழங்கினார்.
மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சே தனது இலங்கை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். பொருளாதார நெருக்கடியில் இலங்கை போராட்டம் நடக்கும் நிலையில் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே வழங்கினார்.
எம்.பி. பதவியில் இருந்து விலகியுள்ள பசில் ராஜபக்சே அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எம்.பி பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
- இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்துகொண்டே இருக்க முடியாது.
- இலங்கைக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கவில்லை.
கொழும்பு :
இலங்கை கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி, போராட்டங்கள் காரணமாக இலங்கையில் எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் என அனைத்தின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டுவர இலங்கை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளிடமும் உதவி வழங்கும்படி இலங்கை கோரிக்கை விடுத்து வருகிறது. சர்வதேச அமைப்புகளிடமும் இலங்கை உதவி கோரி கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு கடனுதவி கோரியுள்ளது.
ஆனால், இலங்கைக்கு இதுவரை சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கவில்லை. இந்நிலையில், இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு எரிபொருள் வாங்க பண உதவி வழங்கவில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியா எரிபொருள், மருந்துப்பொருட்கள், பணம் என 27 ஆயிரம் கோடி ரூபாய் (3.5 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவிற்கு கடனுதவி அளித்துள்ளது.
இதனிடையே, அரசு மின் விநியோக அமைப்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், பதாகைகளை பிடித்து நீங்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால், தடை ஏற்படுத்தாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தீர்களானால், இந்தியாவிடம் உதவி கேளுங்கள் என என்னிடம் கேட்காதீர்கள். நமக்கு எரிபொருள், நிலக்கரி வாங்க எந்த நாடும் பணம் கொடுக்கவில்லை.
இந்தியா மட்டுமே நமக்கு எரிபொருள், நிலக்கரி வாங்க பணம் கொடுக்கிறது. இந்தியாவிடமிருந்து நாம் வாங்கும் கடனின் அளவு அதன் எல்லையை நெருங்கி விட்டது. அதை நீட்டிப்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்துகொண்டே இருக்க முடியாது. நமக்கு ஏன் உதவிகளை செய்ய வேண்டுமென இந்தியாவில் இருந்து சிலர் கேட்கின்றனர். முதலில் அவர்கள் உதவி செய்யும் முன் நமக்கு நாமே உதவி செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றனர்' என்றார்.
- இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இலங்கையின் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.
கொழும்பு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அசலங்கா 39 ரன்னும், குசால் மெண்டிஸ் 36 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட், ஜேய் ரிச்சர்ட்சன் 3 விக்கெட், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் 24 ரன்னும், டேவிட் வார்னர் 21 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் மேத்யூ வேட் பொறுப்புடன் ஆடி 26 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 17.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
- பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்ய புதிய அமைச்சரவை போராடி வருகிறது.
- இலங்கை அரசுக்கு அடுத்த 6 மாதங்களில் 5 பில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது.
கொழும்பு :
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை வானளவு உயர்ந்து, மக்கள் வாழ வழியின்றி ஒரு வேளை உணவுக்குக் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை வாழ் மக்கள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையில் புதிய பிரதமர் பதவியேற்று அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்ய புதிய அமைச்சரவை போராடிவருகிறது. இந்தநிலையில், கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை தனது அத்தியாவசிய மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நிதியுதவி தேவை என இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
" இலங்கை அரசுக்கு அடுத்த 6 மாதங்களில் 5 பில்லியன் டாலர் நிதியுதவி தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது மட்டும் போதாது. அதனை பழைய நிலைக்கு வலிமையாக்க வேண்டும். இடைக்கால பட்ஜெட் தயாராகி வருகிறது. கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டால் அத்தியாவசியத் தேவைகளான எரிபொருள்,மருந்துகள் மற்றும் உரங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத சூழலே நிலவுகிறது." என்றார்.
- இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
கொழும்பு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.3 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா 38 ரன்னும், பதும் நிசங்கா 36 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். அந்த அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 70 ரன்னும், ஆரோன் பின்ச் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
- ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிவிட்டு, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வருகிறார். அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொருளாதார முன்னேற்றத்தில் எந்த பயனும் இல்லை.
இதையடுத்து இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்றும், இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தை திவீரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளனர். எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன். குறைந்தது ஒரு ஆண்டிற்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இருப்பினும் நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா நாடுகளிடம் உதவியை நாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு எரி பொருள் சிலிண்டர் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- போதிய உரங்கள் இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
கொழும்பு, ஜூன். 5-
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஆனாலும் இன்னும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு எரி பொருள் சிலிண்டர் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை வரும் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பல்வேறு நாடுகளின் உதவிகள் நாடப்பட்டு உள்ளது. இதற்கு சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது.
இது கிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். போதிய உரங்கள் இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வருகிற செப்டம்பர், அக்டோபர் வரை நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும் அதன்பிறகு பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டாலும் ஏற்பட லாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.






