என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கையில் எரிசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சை- கோத்தபய ராஜபக்சே விளக்கம்
    X

    கோத்தபய ராஜபக்சே                 கவுதம் அதானி

    இலங்கையில் எரிசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சை- கோத்தபய ராஜபக்சே விளக்கம்

    • இலங்கை மின்சார வாரிய தலைவரின் குற்றச்சாட்டிற்கு அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • இலங்கை மின்சார வாரிய தலைவர் பதவியில் இருந்து பெர்டினாண்டோ ராஜினாமா

    கொழும்பு:

    இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தும் உரிமம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதில் சர்ச்சை வெடித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை மின்சார வாரிய தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக அவர் சிங்கள மொழியில் பேசிய வீடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வெளியானது.

    அதில் நவம்பர் 24ந் தேதி அன்று, இலங்கை அதிபர் என்னை வரவழைத்து, மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று தெரிவித்தார்.

    இந்த விஷயம் தனக்கோ இலங்கை மின்சார வாரியத்திற்கோ சம்பந்தமில்லை என்று நான் சொன்னேன். அதை நான் பரிசீலிக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தினார் என்று பெர்டினாண்டோ அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

    அவரது குற்றச்சாட்டிற்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பான மின்சாரவாரிய தலைவர் தெரிவித்த கருத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

    எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இந்த திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை நான் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தற்போது கடுமையான மின் பற்றாக்குறையில் உள்ளதாகவும், மெகா மின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை அதிபர் விரும்புகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், அந்த திட்டங்களுக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும், இது இலங்கை அரசால் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இலங்கையில் எரிசக்தி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையால், ஏமாற்றம் அடைந்ததாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

    இலங்கையில் முதலீடு செய்வதில் எங்களின் நோக்கம் மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும்.

    ஒரு பொறுப்பான கார்ப்பரேட் என்ற முறையில், நமது இரு நாடுகளும் எப்போதும் பகிர்ந்து கொள்ளும் கூட்டாண்மையின் அவசியமான பகுதியாக இதைப் பார்க்கிறோம். இந்த விவகாரத்தால் ஏற்படும் மனச்சோர்வினால் நாங்கள் தெளிவாக ஏமாற்றமடைந்துள்ளோம்.

    இந்த விவகாரம் ஏற்கனவே இலங்கை அரசால் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டது என்பதுதான் உண்மை என்றும் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×