என் மலர்tooltip icon

    இலங்கை

    • 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்த இலங்கை வீரர் பதும் நிசங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
    • இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

    கொழும்பு:

    இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆரோன் பின்ச் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய டிராவிஸ் ஹெட் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அலெக்ஸ் கேரி 49 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பதும் நிசங்கா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 137 ரன்னில் வெளியேறினார். குசால் மெண்டிஸ் 87 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    • உணவு பொருட்கள் உற்பத்தியை தீவிரபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • 1500 ஏக்கர் அரசு தரிசு நிலங்களில் இலங்கை ராணுவ வீரர்கள் விவசாய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

    கொழும்பு:-

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. வரலாறு காணாத வகையில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    அந்நிய செலாவணி இருப்பு இல்லாததால் இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் இலங்கையில் வருகிற செப்டம்பர் மாதத்தில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.

    இதையடுத்து உணவு பொருட்கள் உற்பத்தியை தீவிரபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதில் விவசாய பணியில் ராணுவ வீரர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பசுமை விவசாய வழிகாட்டல் குழுவை ராணுவம் உருவாக்கியது. முதல் கட்டமாக விவசாய நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நிலங்களை தேர்வு செய்து விதைகளை பயிரிடுவதற்கு களை யெடுத்தல், உழுதல் போன்ற பணிகளை தொடங்குகிறார்கள்.

    1500 ஏக்கர் அரசு தரிசு நிலங்களில் இலங்கை ராணுவ வீரர்கள் விவசாய பணிகளை மேற்கொள்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து பாதுகாப்பு படை தலைமையகங்களும், அமைப்புகளும் விவசாய பணியில் களம் இறங்கி உள்ளன.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, நாட்டில் தரிசாக உள்ள 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை விளை நிலங்களாக மாற்றி உணவு தானிய உற்பத்தியை பெருக்கி எதிர்காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ளும் இயக்கத்தில் ராணுவம் பங்கேற்கும். உணவு பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கு பசுமை விவசாய வழிகாட்டும் குழுவை ராணுவம் அமைத்துள்ளது என்றார்.

    இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறும் போது, உணவு நெருக்கடியால் 40 லட்சம் முதல் 50 லட்சம் பேர் வரை நேரடியாக பாதிக்கப்படுவார்கள். உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு அனைத்து எம்.பி.க்களும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

    • நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு பொது போக்குவரத்தையும் கடுமையாக பாதித்து இருக்கிறது.

    கொழும்பு :

    இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்ததால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் அரசு தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல்-டீசல் அனுப்பி வருகின்றன. ஆனாலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது.

    அங்கு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதுமான அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு காத்திருப்போர் அவ்வப்போது உயிரிழக்கும் சூழலும் நிலவுகிறது. அந்தவகையில் தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதியான பனதுராவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக 53 வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்தார்.

    நீண்ட நேரமாக காத்திருந்த அவர் நேற்று காலையில் ஆட்டோவிலேயே சுருண்டு விழுந்து பலியானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. முன்னதாக கொழும்புவின் புகோடா பகுதியில் உள்ள சமையல் கியாஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்றுமுன்தினம் காத்திருந்த 64 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கொழும்புவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அங்கு இந்த ஆண்டு தொடக்கம் முதலே இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்து வருவதால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பல மாதங்களாக நீடித்து வரும் இந்த எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காணாத அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு பொது போக்குவரத்தையும் கடுமையாக பாதித்து இருக்கிறது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்துக்கழகம் அறிவித்து இருக்கிறது.

    இதைப்போல அன்னிய செலாவணி பற்றாக்குறையால் ரெயில் என்ஜின்களுக்கான எரிபொருள் இறக்குமதிக்கு பணம் இல்லாததால், விரைவில் ரெயில் சேவையும் பாதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து, சமையல் கியாஸ் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி தீப்பெட்டிகளுக்கு கூட இலங்கையில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
    • 3 விக்கெட் வீழ்த்திய இலங்கையின் சமீகா கருணரத்னே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    பல்லேகலே:

    ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

    இந்நிலையில், இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 47.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் 36 ரன், தனஞ்செய டி சில்வா, ஷனகா தலா 34 ரன்கள் எடுத்தனர்.

    அதன்பின், மழை நின்ற பின்னர் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 43 ஓவர்களில் 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால், ஆஸ்திரேலிய அணி 37.1 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்தார்.

    இதனால் இலங்கை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இலங்கை சார்பில் சமீகா கருணரத்னே 3 விக்கெட், துஷ்மந்தா சமீரா, தனஞ்செய டி சில்வா, துனித் வெல்லலகே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது.
    • ஐ.நா.வின் இந்த ஆய்வறிக்கை இலங்கை ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொழும்பு :

    இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. அதிகரித்து வரும் உணவு தட்டுப்பாடும், கடுமையான விலைவாசி உயர்வும் மக்களின் பட்டினியை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்க்கை சூழலை எவ்வாறு பாதித்து இருக்கிறது? என ஐ.நா. அங்கு ஆய்வு நடத்தியது.

    குறிப்பாக ஐ.நா.வின் உலக உணவு திட்டமும், இலங்கையின் தேசிய திட்டமிடல் துறையும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் இலங்கையில் விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததால் 80 சதவீதத்துக்கு அதிகமான குடும்பங்கள், மலிவான உணவுகள், விருப்பமில்லாத உணவுகள் அல்லது குறைவான உணவுகளையே தினந்தோறும் உண்டு வருவது கண்டறியப்பட்டு உள்ளது. சத்தான உணவுகளை குறைவாகவே மக்கள் உண்பதால் ஊட்டச்சத்து குறைபாடு அபாயம் ஏற்பட்டு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

    இலங்கையில் கடந்த 2 பருவங்களில் விளைச்சல் குறைந்ததால் விலைவாசி அதிகரித்து இருப்பதும், இறக்குமதி அரிசியின் விலை 20 சதவீதம் அதிகரித்து இருப்பதும் இதற்கு காரணமாக ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. ஐ.நா.வின் இந்த ஆய்வறிக்கை இலங்கை ஊடகங்களில் வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை கடும் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் நிலையில், வருகிற நாட்களில் நாட்டின் 50 சதவீத தேவையை பூர்த்தி செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    350 கோடி டன் கியாஸ் நிரப்பிய கப்பல் ஒன்று வந்து சேர்ந்து உள்ளது. ஆஸ்பத்திரிகள், மயானங்கள் மற்றும் ஓட்டல்கள் போன்ற மொத்தமாக வாங்குவோருக்கு மட்டுமே இதை வினியோகிப்போம். பின்னர் நான்கு மாதங்களுக்கு தேவையான கியாஸ் தொகுப்பை பெறுவோம். அவற்றை பாதுகாக்க 14 நாட்கள் ஆகும். அதுபோல இன்னும் சில தொகுப்புகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம்.

    தற்போது 7 நாட்களுக்கு தேவையான எரிபொருள் நம்மிடம் இருப்பு உள்ளது. எனினும், வரும் வாரங்களில் 4 ஆயிரம் கோடி டன் எரிபொருளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவுடன் கையெழுத்திட உள்ள ஒப்பந்தத்துக்கு பின்னர் எரிபொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாட்டின் தேவையில் 50 சதவீதத்தை எப்படியும் வழங்க முடியும். அன்னிய செலாவணி நெருக்கடி மட்டுமின்றி இலங்கை ரூபாயின் பற்றாக்குறையும் உள்ளது.

    நான் ஏற்கனவே சர்வதேச நிதிய நிர்வாக இயக்குனரிடம் பேசியுள்ளேன். அவர் உதவியை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் இலங்கைக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு நமது நிலைமையை உலகம் முழுவதும் கவனித்து வருவதுடன், உதவுவதற்கும் தயாராகி வருகிறது என்று ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

    • அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 2 முறை தவறுதலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • விமானிகள் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாராட்டி உள்ளது.

    கொழும்பு:

    லண்டனில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் யுஎல்-504 விமானம் வந்துகொண்டிருந்தது. அதில் 275 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் துருக்கி வான் பகுதியில், பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்துடன் நேருக்கு நேர் மோதக்கூடிய அபாயம் இருந்த நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

    விமானிகளின் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையை பாராட்டுவதாகவும், அனைத்து பயணிகள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

    33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த இலங்கை விமானம், பறக்கும் உயரத்தை 35,000 அடிக்கு அதிகரிக்கவேண்டும் என்று அங்காரா தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து கூறப்பட்டது. அப்போது, 15 மைல் தொலைவில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை இலங்கை விமானத்தின் விமானிகள் கண்டறிந்தனர். இதுபற்றி அங்காராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 2 முறை தவறுதலாக தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும் இலங்கை விமானிகள், விமானத்தை மேலே உயர்த்த மறுத்துவிட்டனர்.

    பின்னர் சில நிமிடங்கள் கழித்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவசர தகவல் அனுப்பப்பட்டது. ஏற்கனவே 35,000 அடிக்கு மேலே துபாய் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்துகொண்டிருந்ததால், ஸ்ரீலங்கன் விமானத்தை ஏற வேண்டாம் என்று தெரிவித்தது.

    கட்டுப்பாட்டு அறையில் இருந்து கூறிய தகவலின்படி, இலங்கை விமானத்தின் கேப்டன் விமானத்தை குறிப்பிட்ட உயரத்திற்கு உயர்த்தியிருந்தால், வேகமாக வந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் நடுவானில் மோதி விபத்தை எதிர்கொண்டிருக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

    • டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிறகு 300 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 53 ரன்களும், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    பல்லேகலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.

    இந்த நிலையில் இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிறகு 300 ரன்கள் குவித்தது. அந்த அணியில் குசால் மெண்டிஸ் 86 ரன்களும், பதும் நிசாங்க 56 ரன்களும், குணதிலக 55 ரன்களும் எடுத்தனர்.

    பின்னர் 301 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 44 ஓவர்களில் 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 53 ரன்களும், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.

    • ரூ.12 கோடிக்கு (இலங்கை மதிப்பில்) மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கூட மக்கள் வாங்க முடியாத விலைக்கு விற்பனையாகி வருகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளன.

    இந்நிலையில் அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான செயல்திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை கூடியது. அதில், ரூ.12 கோடிக்கு (இலங்கை மதிப்பில்) மேல் ஆண்டு வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 2.5 சதவீதம் சமூக பங்களிப்பு வரி விதிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து, அதன் மூலம் எரிசக்தி பற்றக்குறையை சமாளிக்கும் விதமாக, அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கும் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    • இலங்கை மின்சார வாரிய தலைவரின் குற்றச்சாட்டிற்கு அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • இலங்கை மின்சார வாரிய தலைவர் பதவியில் இருந்து பெர்டினாண்டோ ராஜினாமா

    கொழும்பு:

    இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 500 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தும் உரிமம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதில் சர்ச்சை வெடித்துள்ளது.

    இது தொடர்பாக இலங்கை மின்சார வாரிய தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக அவர் சிங்கள மொழியில் பேசிய வீடியோ ஒன்று சமூக வளைதளங்களில் வெளியானது.

    அதில் நவம்பர் 24ந் தேதி அன்று, இலங்கை அதிபர் என்னை வரவழைத்து, மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி தனக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று தெரிவித்தார்.

    இந்த விஷயம் தனக்கோ இலங்கை மின்சார வாரியத்திற்கோ சம்பந்தமில்லை என்று நான் சொன்னேன். அதை நான் பரிசீலிக்க வேண்டும் என்று அதிபர் வலியுறுத்தினார் என்று பெர்டினாண்டோ அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

    அவரது குற்றச்சாட்டிற்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பான மின்சாரவாரிய தலைவர் தெரிவித்த கருத்தை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

    எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ இந்த திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை நான் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை தற்போது கடுமையான மின் பற்றாக்குறையில் உள்ளதாகவும், மெகா மின் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதை அதிபர் விரும்புகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், அந்த திட்டங்களுக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும், இது இலங்கை அரசால் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இலங்கையில் எரிசக்தி திட்டம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையால், ஏமாற்றம் அடைந்ததாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

    இலங்கையில் முதலீடு செய்வதில் எங்களின் நோக்கம் மதிப்புமிக்க அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும்.

    ஒரு பொறுப்பான கார்ப்பரேட் என்ற முறையில், நமது இரு நாடுகளும் எப்போதும் பகிர்ந்து கொள்ளும் கூட்டாண்மையின் அவசியமான பகுதியாக இதைப் பார்க்கிறோம். இந்த விவகாரத்தால் ஏற்படும் மனச்சோர்வினால் நாங்கள் தெளிவாக ஏமாற்றமடைந்துள்ளோம்.

    இந்த விவகாரம் ஏற்கனவே இலங்கை அரசால் பேசப்பட்டு தீர்வு காணப்பட்டது என்பதுதான் உண்மை என்றும் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


    • மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்திற்கு தர இந்திய பிரதமர் மோடி வற்புறுத்தியதாக பெர்டினாண்டோ புகார் தெரிவித்தார்.
    • காற்றாலை மின்சார திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க அழுத்தம் தரப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிகாரி ராஜினாமா செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொழும்பு:

    இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி மந்திரி கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இலங்கை மன்னார் காற்றலை மின்சார திட்டத்தை அதானியின் நிறுவனத்திற்கு வழங்க தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக குற்றம் சாட்டிய அதிகாரி ராஜினாமா செய்துள்ளது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அப்பாறை ஓகந்த கடற்பரப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் புறப்பட்ட 5 பெண்கள், 7 குழந்தைகள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதேபோல் மற்றொரு படகில் வந்த 15 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, பற்றாக்குறையால் தவிக்கிறார்கள்.

    ஆனால் இலங்கையில் இருந்து பலர் வெளியே செல்ல முயற்சித்து வருகிறார்கள். கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று வருகிறார்கள். அதே போல் தமிழகத்திலும் அகதிகளாக இலங்கை தமிழர்கள் வந்தனர்.

    இந்த நிலையில் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 38 ஈழத்தமிழர்களை கடற்படை கைது செய்துள்ளது.

    அப்பாறை ஓகந்த கடற்பரப்பிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் புறப்பட்ட 5 பெண்கள், 7 குழந்தைகள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் செல்பவர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்.

    கடந்த 9-ந்தேதி ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

    அதேபோல் மற்றொரு படகில் வந்த 15 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    படகு வழியாக வருபவர்களை ஏற்க மாட்டோம் என்று ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய செல்லும் இலங்கை அகதிகள் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.

    • இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • ஐ.நா. உலக உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லேவுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உரங்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தடை விதித்தார். இதைத் தொடர்ந்து அங்கு உணவு தானிய உற்பத்தி குறைந்துள்ளது. டாலர் தட்டுப்பாட்டால் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையும் உள்ளது. இதனால் இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில், ஐ.நா. உலக உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லேவுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கை நிலைமையை நேரில் கண்டறிய வருமாறு அவருக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை அவரும் ஏற்று, இலங்கை வர முன்வந்துள்ளார். இதை ரணில் விக்ரமசிங்கே டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இலங்கைக்கு உயிர் காக்கும் உதவிகள் வழங்குவதற்கு 47.2 மில்லியன் டாலர் (ரூ.354 கோடி) நிதி வேண்டும் என்று கூறி நன்கொடைகளை ஐ.நா. சபை கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×