என் மலர்tooltip icon

    சீனா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எச்.3.என்.8. வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.
    • 2022-ம் ஆண்டு மத்திய சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது.

    பீஜிங்:

    சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (எச்3என்8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    அந்த பெண் நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பு ஒரு கோழிபண்ணைக்கு சென்றார் என்றும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவை காய்ச்சலுக்கு சாதகமான வைரஸ்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். எச்.3.என்.8. வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.

    2022-ம் ஆண்டு மத்திய சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. அதில் இருந்து அவன் குணம் அடைந்தான். அதன்பின் அதே ஆண்டு மே மாதம் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் பாதிக்கப்பட்டான். அவனுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன.

    இதற்கிடையேதான் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சீனாவில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று வரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் சீனாவில் பறவை காய்ச்சலுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது.
    • தைவானுடன் எந்த நாடும் நேரடி தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா மிரட்டல் விடுத்து உள்ளது.

    தைபே:

    சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து கடந்த 1946- ஆம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுடன் எந்த நாடும் நேரடி தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா மிரட்டல் விடுத்து உள்ளது.

    ஆனால் இதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் ட்சாய் இங்வென் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அப்போது அவர் அமெரிக்க பிரதிநிதிகளின் சபை சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசினார்.

    இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன் தினம் தைவானை நோக்கி சீனா தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பியது. 71 போர் விமானங்கள் தைவான் எல்லையில் வட்டமடித்து பறந்தன.

    இதேபோல 8 போர் கப்பல்களும் தைவான் எல்லையில் நிறுத்தப்பட்டு போர் பயிற்சியினை மேற் கொண்டுள்ளது. இன்று 3-வது நாளாக 70 போர் விமானங்கள் தைவான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இதில் 8 ஜே.16 ரக ஜெட் விமானங்கள், 4 ஜே.1 விமானங்கள். 8 சூ-30 போர் விமானங்களும் அடங்கும். 11 போர் விமானங்களும் தைவானை நோக்கி அனுப்பப்பட்டு உள்ளன. தைவானின் முக்கிய இலக்குகளை சீனா சுற்றி வளைத்து உள்ளதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

    தைவான் ஜலசந்தி கடற் பகுதியில் தொடர்ந்து 3- வது நாளாக சீனா ராணுவ பயிற்சி நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பதற்றமாக உள்ளது. எந்த நேரமும் போர் மூழலாம் என்ற அபாய சூழ்நிலையும் அங்கு உருவாகி இருக்கிறது.

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    உக்ரைன் மற்றும் ரஷியா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி அரசும் ரஷியாவிடம் இருந்து சீனா விலகி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என கூறியதுடன், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில் சீனாவுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இன்று திடீர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில், அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசினார்.

    இதுபற்றி மேக்ரான் கூறுகையில், அமைதியை கட்டமைப்பதில் சீனா ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதனாலேயே நான் ஆலோசனை நடத்துவதற்காக சீனாவுக்கு வருகை தந்துள்ளேன் என தெரிவித்தார்.

    மேலும் வர்த்தகம், பருவநிலை மற்றும் உயிர்ச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி ஆலோசிக்க இருக்கிறேன் என மேக்ரான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது.
    • கல்லூரி மாணவர்கள் காதல் செய்ய ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேபோல் குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்துள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 7.52 என்ற அளவில் இருந்தது. அது நடப்பு ஆண்டில் 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.

    இதன்படி, கடந்த 1961-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    அதன்படி, ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதிக்கப்பட்ட சட்டம் 2015-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அரசு அனுமதி அளித்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

    இதையடுத்து, திருமணம் ஆகாதவர்கள் கூட குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சிச்சுவான் மாகாண அரசு அனுமதி அளித்தது. இதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழக மாணவர்களிடம் விந்தணு தானம் செய்ய முன்வருமாறு வேண்டுகோள் விடப்பட்டது. இதன்படி சீன தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்பட நாடு முழுவதும் உள்ள விந்தணு தான கிளினிக்குகள் மாணவர்களை, சில விதிகளுக்கு உட்பட்டு விந்தணு தானம் செய்யும்படி வலியுறுத்தி உள்ளன.

    இந்நிலையில், பிறப்பு விகிதம் சரிவை எதிர்கொள்ளும் வகையில் சீனா மற்றொரு முயற்சியில் இறங்கியது. இதன்படி, சீனாவில் உள்ள 9 கல்வி மையங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு ஏப்ரலில் இருந்து முதல் வாரத்தில் காதல் செய்ய விடுமுறை அளிப்பது என்பதே அந்தத் திட்டம். அரசின் அனுமதியுடன் கல்வி நிலையங்கள் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.

    இதன்படி, பேன் மெய் கல்வி குழுமத்தின் மியான்யாங் பிளையிங் கல்லூரியானது, முதன்முறையாக கடந்த மார்ச் 21-ம் தேதி இந்த விடுப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த நாளில் காதலில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, 9 கல்லூரிகளில் இந்நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மாணவ, மாணவியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு, அவர்கள் இயற்கையை காதலிப்பதற்கும், வாழ்க்கையை காதலிப்பதற்கும் மற்றும் விடுமுறையை அனுபவித்துக் காதலை கொண்டாடவும் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தி உள்ளன.

    • உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது.
    • அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதே சீனாவின் நிலைப்பாடு என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

    பீஜிங்:

    போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்க தலைவர்கள் திடீர் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று திடீரென உக்ரைனுக்கு சென்றார். இந்தியாவில் இருந்து விமானம் மூலம் போலந்து சென்ற ஜப்பான் பிரதமர், அங்கிருந்து உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார்.

    போர் தீவிரமடைந்துள்ள இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது. ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பான் ஏற்றுள்ள நிலையில், ஜப்பான் பிரதமரின் உக்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆயுத பலத்தால் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றும் நடவடிக்கையை ஜப்பான் பிரதமர் உறுதியாக நிராகரிப்பார். சட்டத்தின் அடிப்படையில் சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தவேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவார். ஜப்பானின் பிரதம மந்திரியாகவும், ஜி7 நாடுகளின் தற்போதைய தலைவராகவும் உக்ரைனுக்கான ஆதரவை கிஷிடா நேரடியாக தெரிவிப்பார் என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.

    மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசிய நிலையில், ஜப்பான் பிரதமரின் உக்ரைன் பயணம் அமைந்துள்ளது. இதனால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. நிலைமையை மோசமாக்குவதற்கு பதிலாக, பதற்றத்தை தணிக்க ஜப்பான் இன்னும் நிறைய செய்யும் என எதிர்பார்ப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பி பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

    அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதே சீனாவின் நிலைப்பாடு எனவும், அரசியல் தீர்வு காண்பதற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க உலகத்துடன் இணைந்து சீனா பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

    அப்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுவாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வென்பின், தங்கள் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும், அனைத்து தரப்பினருடனும் தொடர்பு கொள்வதாகவும் கூறினார்.

    போரை நிறுத்த அமெரிக்காவுடன் இணைந்து சீனா செயல்படுமா? என்ற கேள்விக்கு சற்று காட்டமாக பதிலளித்தார். அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும் போரை நிறுத்தவும் விரும்புகிறதா? என்று அமெரிக்காவிடம் முதலில் கேட்க வேண்டும் என்றார் வென்பின். 

    • மற்ற தலைவர்களை விட மோடி மிகவும் அற்புதமானவர் என்று நினைக்கிறார்கள்.
    • பிரதமர் மோடியை ‘மோடி லவோக்சியன்’ என்று பட்டப்பெயரிட்டு சீன நெட்டிசன்கள் அழைத்து வருகிறார்கள்.

    பீஜிங் :

    இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக்கில் 3 ஆண்டுகளாக எல்லை தகராறு நீடித்து வந்த போதிலும், சீனாவை சேர்ந்த சமூகவலைத்தள பயனர்களான 'நெட்டிசன்'களால் பிரதமர் மோடி புகழப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த 'தி டிப்ளோமட்' என்ற பத்திரிகையில் மு சுன்ஷான் என்ற பத்திரிகையாளர் எழுதிய 'சீனாவில் இந்தியா எப்படி பார்க்கப்படுகிறது?' என்ற கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு சுன்ஷான், சீன சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்து பிரபலமானவர்.

    சீனாவில் டுவிட்டரை போன்ற 'சினா வெய்போ' சமூக வலைத்தளத்தை 58 கோடியே 20 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.

    அதில், பிரதமர் மோடியை 'மோடி லவோக்சியன்' என்று பட்டப்பெயரிட்டு சீன நெட்டிசன்கள் அழைத்து வருகிறார்கள். அதற்கு 'மோடி-அழிவில்லாதவர்' என்று பொருள். மற்ற தலைவர்களை விட மோடி மிகவும் அற்புதமானவர் என்று நினைக்கிறார்கள்.

    மோடி தலைமையிலான இந்தியா, மற்ற பெரிய நாடுகளிடையே சம அந்தஸ்தை பராமரித்து வருவதாகவும் சீன நெட்டிசன்கள் கூறுகிறார்கள். மோடி பின்பற்றும் கொள்கைகள், இந்தியாவின் முந்தைய கொள்கைகளில் இருந்து மாறுபட்டவை என்பது அவர்களின் கருத்து.

    ''எனது 20 வருட சர்வதேச பத்திரிகை அனுபவத்தில், எந்த வெளிநாட்டு தலைவரையும் சீன நெட்டிசன்கள் பட்டப்பெயரிட்டு அழைப்பது மிகவும் அபூர்வம். மோடி அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்'' என்று மு சுன்ஷான் தெரிவித்துள்ளார்.

    • 2019-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது.
    • கொரோனா வைரஸ் 75 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது.

    பீஜிங் :

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதுவரை கொரோனா வைரஸ் 75 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. எனவே இது எவ்வாறு உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த வைரஸ் முதலில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது. பின்னர் சீனாவின் உகான் நகரில் உள்ள ஒரு இறைச்சி கூடத்தில் இருந்து பரவியதாக உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இந்த கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது சீனாவின் இறைச்சி கூடத்தில் விற்கப்படும் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும் இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    • நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 17 கி.மீ. ஆழத்தில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.
    • தென்மேற்கு ஜின்ஜியாங்கில் உள்ள ஒரு பெரிய சோலை நகரம் ஹோட்டன். இது மேற்கு சீனாவின் தன்னாட்சிப் பகுதியாகும்.

    சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.32 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

    இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 17 கி.மீ. ஆழத்தில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தென்மேற்கு ஜின்ஜியாங்கில் உள்ள ஒரு பெரிய சோலை நகரம் ஹோட்டன். இது மேற்கு சீனாவின் தன்னாட்சிப் பகுதியாகும்.

    • வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் மீண்டும் விசா வழங்கும் பணி தொடங்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.
    • அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பிற வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது நாளை (15-ந்தேதி) முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் மீண்டும் விசா வழங்கும் பணி தொடங்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பிற வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது நாளை (15-ந்தேதி) முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

    மேலும் ஆங்காய், மக்காவ்விலிருந்து வரும் வெளிநாட்டினர், ஷாங்காய் நகரில் நிறுத்தப்பட்டு பயணிகள் கப்பல்களில் இருப்பவர்களுக்கு குவாங்டாங் மாகாணத்தில் விசா இல்லாத நுழைவு மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வினோத புழுக்கள் மழை குறித்து சீன அரசாங்கம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலர் தங்களது கருத்துகளை வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர்.

    பீஜிங்:

    சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் அண்மையில் பெய்த மழையில் புழுக்களும் சேர்ந்து விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வைரலானது. அந்த வீடியோவில் புழுக்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள குடைகளைப் பிடித்துக்கொண்டு பொதுமக்கள் செல்கின்றனர். மேலும் சாலையோரம் நிற்கவைக்கப்பட்டுள்ள கார்கள், வாகனங்களில் தண்ணீருடன் புழுக்களும் மிதக்கின்றன. இந்த வினோத புழுக்கள் மழை குறித்து சீன அரசாங்கம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலர் தங்களது கருத்துகளை வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே சீன பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோ போலியானது. ஏனெனில் பீஜிங்கில் தற்போது மழை பெய்ததாக பதிவாகவில்லை என கூறி உள்ளார்.

    • சீனாவின் தற்போதைய பிரதமர் லீ கெகியாங்கின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
    • இதையடுத்து, புதிய பிரமராக லீ கியாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பீஜிங்:

    சீனாவின் தற்போதைய பிரதமர் லீ கெகியாங்கின் பதவி காலம் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய பிரமராக லீ கியாங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதற்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

    இந்த பதவி சீனாவின் 2-வது அதிகாரமிக்க பதவியாகும். இவர் சீனாவில் 3-வது முறையாக அதிபராக பதவி ஏற்றுள்ள ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவர். அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் திகழ்ந்தார்.

    லீ கியாங், ஜியாங் மாகாணத்தின் தலைமை ஊழியர்கள் அதிகாரியாக இருந்தவர். 2013-ம் ஆண்டு கவர்னராகவும் இருந்தார். இவரது காலத்தில் ஜியாங் மாகாணம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றது. செல்வ செழிப்பான மாகாணமாக மாறியது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் அதனை கட்டுப்படுத்த இவர் மிகச்சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அது அடுத்தடுத்து உருமாறி இன்னும் இந்த நோயின் தாக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது.
    • காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் முதன்முறையாக கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கி விட்டது. தடுப்பூசி, ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அது அடுத்தடுத்து உருமாறி இன்னும் இந்த நோயின் தாக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் சீனாவில் மீண்டும் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    நோய் தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதால் அதனை கட்டுப்படுத்த சீனாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    சீயான் மற்றும் ஷாங்கி நகரங்களில் தான் இதன் வேகம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து காய்ச்சலால் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.

    ×