என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எம்.ஜி.ஆர். வழியில் மதுரையை குறிவைக்கும் விஜய்! - சிக்கலில் தி.மு.க., அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள்
    X

    எம்.ஜி.ஆர். வழியில் மதுரையை குறிவைக்கும் விஜய்! - சிக்கலில் தி.மு.க., அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள்

    • பிரமாண்ட மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெறுகிறது.
    • கடந்த வாரம் முதல் மாவட்டச்செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தற்போதே முன்னணி அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வியூகம் அமைத்து காய் நகர்த்தி வருகின்றன. தி.மு.க. சார்பில் மண்டலம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்.

    இதற்கிடையே முதல்முறையாக தேர்தல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் ரேசில் தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது. கோவையை தொடர்ந்து விரைவில் வேலூரில் 2 நாட்கள் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

    அதேபோல் பிரமாண்ட மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெறுகிறது. மேலும் கடந்த வாரம் முதல் மாவட்டச்செயலாளர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அவரது கட்சி தொண்டர்கள் அங்கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டமன்ற உறுப்பினராக உள்ள மதுரை மேற்கு தொகுதியை வரும் 2026 தேர்தலிலும் தக்கவைக்க பணிகளை தொடங்கியுள்ள நிலையில், தி.மு.க. தரப்பில் மேற்கு தொகுதியை கைப்பற்ற அமைச்சர் மூர்த்தி அங்கு பம்பரமாய் சுழன்று பணியாற்றி வருகின்றார்.



    இந்நிலையில் த.வெ.க. சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் மதுரை மேற்கு தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் நடிகர் விஜய்யை 1.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து முதலமைச்சர் ஆக்கியதற்கு நன்றி என கூறி த.வெ.கவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

    மேலும் அந்த போஸ்டரில் விஜய் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து கையெழுத்து இடுவது போன்ற புகைப்படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக விஜய் களமிறங்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×