என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி வருகைக்கு பின் அரசியல் மாற்றம் - கடைசியில் டுவிஸ்ட் வைத்து பேசிய டி.டி.வி.தினகரன்
- தமிழகத்தில் தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி.
- தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
சிவகங்கை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிவகங்கையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பிரிந்து சென்றதால் கடந்த முறை தி.மு.க. வெற்றி பெற்றது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கடும் முயற்சி எடுத்து அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டணியில் புதிய கட்சியிரையும் ஒன்றிணைக்கும் முயற்சி என்பது தி.மு.க. வீழ்த்துவதற்காகத்தான்.
பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பின்னர் தான் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என தெரியவரும். தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. 6 நொடியில கூட அரசியலில் மாற்றம் வரும். 2026 ஜனவரியில்தான் கூட்டணி நிலைப்பாடுகள் பற்றி தெரியும்.
தமிழகத்தில் தி.மு.க. அகற்றப்பட வேண்டிய கட்சி. அவர்கள் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட இயலவில்லை. கூலிப்படைகள் அதிகமாகி விட்டன. முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகு மோசமான ஆட்சி தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுகிறது.
தி.மு.க. ஆட்சியில் ஒரு சில திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் 4½ ஆண்டு ஆட்சி மக்களுக்கு 7½ ஆட்சியாக தான் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்திருக்கின்றன. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதே இலக்கு. இந்த கூட்டணியில் முரண்பாடு என்கிற கருத்திற்கே வேலையில்லை. ஒரே நோக்கமாக தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பதையும், அதன்காரணமாகவே ஒரே கூட்டணியில் ஒன்றிணைந்தோம்.
தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என கூறிவிட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள். தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் உங்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் வெற்று விளம்பர ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கம் கொண்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவோம். பிரதமர் ஆட்சி சிறந்த ஆட்சி என்பதற்கு உதாரணம் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதே சாட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.






