என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வில் செங்கோட்டையன்?... காய் நகர்த்தும் பா.ஜ.க.: அ.தி.மு.க.வுக்கு ஷாக் - தி.மு.க.வுக்கு செக்!
- செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
- த.வெ.க. தலைவர் விஜயை செங்கோட்டையன் இன்று சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினர். இதுகுறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜயை செங்கோட்டையன் இன்று சந்தித்து பேசினார். இதனால் த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதே சமயம், ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரனும் த.வெ.க. கூட்டணியில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், மேலும் சில அ.தி.மு.க. முக்கிய புள்ளிகளும் த.வெ.க.வில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்தால்?
தற்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. அதே சமயம் த.வெ.க. கட்சியுடன் கூட்டணி அமையவேண்டும் என்ற தனது ஆசையை எடப்பாடி அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார். ஆனால் கொள்கை எதிரி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்பதை விஜய் தெளிவுபடுத்தி விட்டார்.
அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க.வும் இருப்பதால் அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணிக்கான சாத்தியக்கூறு இப்போதைக்கு இல்லை என்று கூறப்பட்டது.
தற்போது த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்தால் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறு கிட்டத்தட்ட இல்லை என நிலை உருவாகியுள்ளது.
பாஜகவின் மாஸ்டர் பிளான்:
த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை கழட்டிவிடலாம் என்று அ.தி.மு.க. திட்டமிட்டிருந்ததாக தகவல் கசிந்தன. இந்நிலையில், செங்கோட்டையனை வைத்து அ.தி.மு.க. வின் இந்த 'ரகசிய' திட்டத்திற்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அ.தி.மு.க.வுடனான கூட்டணியை பா.ஜ.க. இறுக்கி பிடித்துள்ளது. மேலும், ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரன் என முக்கிய புள்ளிகளை அ.தி.மு.க.வில் இணைக்க விடாமல் விஜயின் பக்கம் பாஜக தள்ளியுள்ளது.
இதன்மூலம் ஏற்கனவே 'பலவீனப்பட்டு' இருக்கும் அ.தி.மு.க.வை மேலும் பலவீனப்படுத்தும் வேலையை பா.ஜ.க. செய்துள்ளது.
செங்கோட்டையன் மூலம் கொங்கு மாவட்ட வாக்குக்களையும் ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரன் மூலம் தென் மாவட்ட வாக்குகளையும் அறுவடை செய்ய த.வெ.க.விற்கு இது நல்ல வாய்ப்பாக மாறியுள்ளது.
இதன்மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க. - த.வெ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒருவேளை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. என்ற கட்சியை பலவீனப்படுத்துவதன் வழி 2031 இல் தி.மு.க.வுக்கு போட்டியாக உருவெடுக்க பா.ஜ.க.வுக்கு இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ பா.ஜ.க.வின் இந்த மாஸ்டர் பிளான் 50 ஆண்டுகால வரலாறு கொண்ட அ.தி.மு.க.விற்கு முடிவுரையும் புதிய குழந்தையான த.வெ.க.விற்கு புதிய வழியையும் ஏற்படுத்தும். இதன்மூலம் தமிழ்நாட்டிலும் 'கூட்டணி ஆட்சி' என்ற தனது அஸ்திரம் மூலம் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. காய் நகர்த்தி வருகிறது.






