என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டசபை தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க.வை நார் நாராக பிரிப்பதுதான் எங்கள் வேலை- சீமான்
- தமிழக பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது அந்த கட்சி சார்ந்த விஷயமாகும்.
- 40 முனை இருந்தாலும் என் முனைதான் கூர் முனையாகும்.
சென்னை:
வக்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இஸ்லாமியர்கள் தங்களது சொத்துக்களை கொடையாக கொடுத்ததே வக்பு சொத்துக்கள். அது ஏழைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்கிற கோட்பாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். அதனை வாங்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. அது அல்லாவுக்கே சொந்தமாகும்.
வக்பு வாரிய சொத்துக்களை அரசு அதிகாரிகள் நிர்வகிக்கும் முறையை கொண்டு வந்திருப்பது இந்து மக்களின் மனதை குளிர்விப்பதற்கே ஆகும்.
இந்துக்களின் வாக்கை பெறுவதற்காகவே மத்திய அரசு இது போன்று செயல்பட்டுள்ளது. வக்பு சொத்தை நிர்வகிப்பதற்கு இந்து மதத்தினரை அமர்த்துவது பேராபத்தை ஏற்படுத்தும். இந்து அறநிலையத்துறையிடம் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கவும் முஸ்லிம், கிறிஸ்தவர்களை நியமிக்க வேண்டும். முஸ்லிம் மதத்தை குறி வைத்து மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையது அல்ல.
இது இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கையாகும். வாக்குகளை மட்டுமே குறி வைத்து ஆட்சியாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் மிக வலிமையானது என்று அண்ணல் அம்பேத்கார் கூறியுள்ளார். அது திராவிடர்களின் கையில் இருப்பது மிகவும் கொடுமையானதாகும்.
தமிழகத்தில் நிலமற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும். நீண்ட நாட்கள் இது போன்று ஏமாற்றி கொண்டிருக்க முடியாது.
கால சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. அப்போது எங்களிடம் ஒருநாள் அதிகாரம் வரும் போது இதையெல்லாம் சரி செய்வோம். வாக்குகளை குறி வைத்தே இன்று கட்சிகள் செயல்படுகின்றன. மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை.
தி.மு.க., அ.தி.மு.க. 2 கட்சிகளும் ஒன்றுதான். கொடி மட்டுமே கொஞ்சம் மாறுபட்டுள்ளது. 2 கட்சிகளுமே லஞ்சம், ஊழலில் சிக்கி திளைத்த கட்சிகள் ஆகும். இரு கட்சிகள் ஆட்சி செய்த போதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. 2 கட்சிகளும் கச்சத்தீவை மீட்போம் என்பார்கள். டாஸ்மாக்கை மூடுவோம் என்பார்கள். ஆனால் ஒன்றும் நடக்காது.
அதனால்தான் காமராஜர் 2 கட்சிகளையும் பார்த்து ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றார். அந்த மட்டையை பிய்த்து நார் நாராக பிரிப்பதற்குதான் நாங்கள் வந்துள்ளோம்.
தமிழக பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டது அந்த கட்சி சார்ந்த விஷயமாகும். அதில் கருத்து கூறக்கூடாது. சட்டசபை தேர்தல் நிலைப்பாடு பற்றி கேட்டுள்ளீர்கள். 40 முனை இருந்தாலும் என் முனைதான் கூர் முனையாகும். பண பலத்தோடு அவர்கள் நிற்கிறார்கள். நான் மக்களோடு நிற்கிறேன்.
பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. அடி பணிந்துள்ளதா? என்று கேட்கிறீர்கள்? எல்லா விஷயத்திலும் கருத்து சொல்வது கண்ணியமாகவும், நாகரிகமாகவும் இருக்காது. யாருடன் கூட்டணி? யாருடன் கூட்டணி என திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். டிரம்புடன் கூட்டணி வைக்கலாம் என்று நினைக்கிறேன். சைவம், வைணவத்தை குறிப்பிட்டு அமைச்சர் பேசி இருப்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.






