என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயுடன் கூட்டணியா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்- நயினார் நாகேந்திரன்
- நிகிதா 2011-ம் ஆண்டில் திருமண மோசடி செய்து உள்ளார்.
- சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
சென்னை:
சென்னை முகப்பேர் மேற்கு 1-வது அவென்யூவில் ஜி.பி.எஸ். சிஸ்டம்ஸ் மற்றும் சர்வீசஸ் புதிய கடை திறப்பு விழா இன்று நடந்தது. இதனை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். கடையின் உரிமையாளர்கள் நாகேந்திரன், நிஷாந்த் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. முதலமைச்சர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. சிலர் தலைமை செயலகத்தில் இருந்து காவல் துறையை கட்டுப்படுத்துகிறார்கள். காவலாளி அஜித்குமார் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரை தனிப்படை எப்படி விசாரித்தது.
நிகிதா தலைமை செயலகத்தில் யாரை தொடர்பு கொண்டார். அங்கிருந்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது யார்? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
நிகிதா 2011-ம் ஆண்டில் திருமண மோசடி செய்து உள்ளார். இந்த விஷயத்தில் முதலமைச்சர் 'சாரி' என்று கூறி விட்டு செல்ல முடியாது. அவர் இதுபற்றி விரிவான விளக்கத்தை தர வேண்டும். சி.பி.ஐ. விசாரணையை தொடங்க வேண்டும்.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஆனால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் 5 மாதத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் சாத்தான்குளம் வழக்கை தாமதப்படுத்துவது ஏன்? எல்லா வழக்குகளையும் ஒரே மாதிரியாக விசாரிக்க வேண்டும்.
நுங்கம்பாக்கம் சிறுமி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் காவல்துறை பின்னணி இருப்பதாக தகவல் வருகிறது. போலீஸ் காவலில் மரணம் என்று போலீசார் விசாரணை கைதிகளை படுகொலை செய்கிறார்கள். அதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் நான் பங்கேற்கிறேன். மற்ற மாவட்டங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.
பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு நாங்கள் காரணம் அல்ல. கூட்டணி தொடர்பாக விரைவில் பா.ம.க.வில் இருந்து நல்ல செய்தி வரும். எங்கள் கூட்டணியில் விஜய் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கர், முகப்பேர் மேற்கு வியாபாரிகள் சங்க தலைவர் பி.செல்லத்துரை, தொழில் அதிபர் ராமபஞ்சாட்சரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.