என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க.வா?- தி.மு.க.வை வீழ்த்த அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்: கடம்பூர் ராஜூ | ADMK
- தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை.
- தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செண்பகபேரியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதியதாக கலையரங்கம் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீப்பெட்டி தொழிலுக்கு பெரும் சவாலாக இருக்கும் பிளாஸ்டிக் லைட்டர் பிரச்சனை, மெழுகு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
பிரச்சனை தொடர்பாக விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். வழக்கமான நடைமுறைதான். இதற்கும், அரசியலுக்கும் சம்பந்தப்படுத்து வது சரியாக இருக்காது என்றார்.
அப்போது தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைதியாக இருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி அதைவிட அமைதியாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணி ஏற்கனவே இருக்கிற கூட்டணி. நாங்கள் கூட பாராளுமன்ற தேர்தலில் பிரிந்து போட்டியிட்டு தற்போது இணைந்திருக்கும் புதிய கூட்டணி. தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என தொடர்ந்து ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் தி.மு.க. கூட்டணியிலேயே தொகுதி பங்கீடு இன்னும் பிரிக்க முடியவில்லை. காங்கிரஸ் தான் இறுதியாக அவர்கள் கூட்டணியில் ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதற்கு முன்பாகவே நிறைய கட்சிகளுடன் ஒப்பந்தம் உறுதி செய்தனர். அந்தக் கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகள் தான். ஒற்றை இலக்கத்தில் சீட்டு கொடுக்கப்போவதாக சொல்கின்றனர். அதில் கூட ம.தி.மு.க. மாறுபட்ட கருத்தோடு இன்று உயர்மட்ட குழு கூட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு என்ன நிலைமையோ தெரியவில்லை. பாவம் எத்தனை சீட்டு கேட்டார்கள், எத்தனை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சரியில்லை என்று கூறி உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லை. கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை. அ.தி.மு.க. தனி பெரும்பான்மையாக வெற்றி பெறும். அப்போது எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெளிவாக கூறி உள்ளார்.
தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. சகோதரர் விஜய் கட்சி தொடங்கியது முதல் அதைத்தான் கூறி வருகிறார். தன்னுடைய அரசியல் எதிரி தி.மு.க. என்று சொன்னது மட்டுமின்றி அனைத்து பிரசார கூட்டங்களிலும் அதை மையப்படுத்தி தான் பிரசாரம் செய்கிறார்.
எங்களை பொறுத்தவரை தி.மு.க.வை வீழ்த்த எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளோம். அதன் பிறகு அவங்க அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
டாக்டர் ராமதாஸ்-சசிகலா சந்திப்பு குறித்து அவர்கள் தான் அதைக் கூற வேண்டும். உரிய சந்திப்பு குறித்து வெளியில் ஏதாவது தெரிவித்திருந்தால் அது பற்றி கருத்து கூறலாம். சந்திப்பின் சாராம்சம் வெளிவந்தால் பதில் கூறலாம். யூகமாக கூற முடியாது என்றார்.






