search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சு - டி.டி.வி.தினகரன்
    X

    பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சு - டி.டி.வி.தினகரன்

    • இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்.
    • தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பா.ஜ.க.வினரிடம் தான் கேட்க வேண்டும். அ.ம.மு.க. கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அ.ம.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற வதந்திகளுக்கெல்லாம் நான் பதில் கூறமுடியாது. இந்தத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக சில கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வது தான் நாகரிகம், அதன் பின் சொல்கிறேன்.

    கூட்டணியிலோ அல்லது தனித்தோ போட்டியிடுவோம். உறுதியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த தேர்தலில் வெற்றி முத்திரை பதிக்கும். ஓ.பி.எஸ்.சுடன் தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் தாண்டி அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்து பயணிக்கிறோம். அது வருங்காலத்தில் எந்த அளவு பலன் தரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    அ.தி.மு.க. இந்த தேர்தலில் பெரிதாக சாதித்து விட முடியாது என்பது தான் என்னுடைய கருத்து. கவர்னரின் செயல்பாடு என்பது அந்த பதவியின் மாண்புக்கு இழுக்கு வராமல் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த பதவிக்கு நல்லது, அவர் அதனை பின்பற்றுவார் என்று நம்புகிறோம்.


    அ.தி.மு.க. ஒன்றிணையும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பது என்பது வாய்ப்பில்லை. அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் விருப்பம் இல்லை. அ.தி.மு.க. இணைப்பு குறித்து அவர் எதன் அடிப்படையில் சொல்கிறார் என தெரியவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. எங்கள் நிர்வாகிகளும், எனது நண்பர்களும், தொண்டர்களும் நான் போட்டியிட வேண்டும் சொல்கிறார்கள். அதனை நான் பரிசீலிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன்.

    கூட்டணி என்பது உறுதியான பிறகு தான் நாங்கள் சொல்ல முடியும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும். இல்லாத பட்சத்தில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும்

    தமிழகத்தில் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான மனநிலை மக்களுக்கு உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணியை நாங்கள் மேற்கொள்வோம்.


    ராமர் கோவில் என்பது அத்வானி காலத்தில் இருந்து யாத்திரை நடத்தி அரசியல் நோக்கமாக இருந்தாலும் ஆன்மிக விஷயம். இந்தியாவில் உள்ள அனைவரும் மதங்களை தாண்டி ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் விருப்பமாக இருந்தனர், கட்டப்பட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தான் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ராமர் கோவில் விவகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பது தேர்தலுக்குப் பின்பு தான் தெரியவரும்.

    எந்த கட்சியும் தாங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சிகளின் பலம் தெரிந்து விடும். பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×