search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தலைவர்களின் அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களால் களை கட்டும் தென்மாவட்டங்கள்
    X

    தலைவர்களின் அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களால் களை கட்டும் தென்மாவட்டங்கள்

    • தென்மாவட்டங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி களை கட்டத் தொடங்கி உள்ளன.
    • தேர்தல் நெருங்க நெருங்க ஆலோசனை கூட்டங்கள், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு கூட்டணியும் களம் காண ஆயத்தமாகி உள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி காய் நகர்த்தி வருகிறது. இதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த 28-ந்தேதி நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார். மத்திய மந்திரி அமித்ஷா இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    தி.மு.க. அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் போலவே தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க. அமர்ந்துள்ள போதிலும் பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சியால் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

    மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.வே வென்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலையை நிச்சயம் மாற்றி காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டு உள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் சண்டை முடிவுக்கு வந்து கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக மாறி இருக்கும் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    இதன் காரணமாக பா.ஜ.க. உள்ளிட்ட தங்களோடு ஒத்துப்போகும் கட்சிகளோடு கூட்டணி அமைத்து எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்று அவர் காய் நகர்த்தி வருகிறார். இதற்காக மதுரையில் வருகிற 20-ம் தேதி பிரம்மாண்ட மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருக்கிறார். அதி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள பன்னீர் செல்வத்துக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்பட்டு வரும் மதுரையில் தனது செல்வாக்கு என்ன என்பதை நிரூபிக்கவும் பாராளுமன்ற தேர்தலுக்கு அச்சாரம் போடும் வகையிலும் இந்த மாநாட்டை நடத்த அ.தி.மு.க. தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    அதே நேரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை வெல்வதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார். ஏற்கனவே உள்ள கூட்டணியை அப்படியே நீடித்து வருகிற தேர்தலிலும் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தமிழகத்தில் வெல்ல வேண்டும் என்று அவர் முனைப்பு காட்டி வருகிறார்.

    இதற்காக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் அவர் நடத்தியுள்ளார். இந்த நிலையில் அ.தி.மு.க. மாநாட்டுக்கு ஒரு நாளைக்கு முன்னதாக வருகிற 19-ந்தேதி ராமேஸ்வரத்தில் மீனவர் மாநாடு ஒன்றில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    அதி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் தங்களது செல்வாக்கு என்ன என்பதை தெரிவிக்கும் வகையில் தேனியில் கொடநாடு விவகாரத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது பலம் என்ன என்பதையும் காட்டி இருக்கிறார்கள்.

    இருவரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவார்களா? என்கிற கேள்வி பரவலாகவே எழுந்துள்ளது. ஆனால் அதி.மு.க.வினர் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி பாராளுமன்ற தேர்தலில் இருவரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    அதே நேரத்தில் தற்போது வரையில் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாக தெளிவுபடுத்தாமல் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் தென் மாவட்டங்களில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க. செல்வாக்கு மிகுந்த கட்சி என்றும் வடதமிழகம் மற்றும் மத்திய தமிழகத்தில் தி.மு.க. செல்வாக்குள்ள கட்சி என்றும் எப்போதும் ஒரு கருத்து உள்ளது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் இந்த இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தான் அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து தங்களது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்திற்கு தயாராகி மாநாட்டுக்கும் ஆயத்தமாகி வருகிறார்கள்.

    இதன் மூலம் தென்மாவட்டங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி களை கட்டத் தொடங்கி உள்ளன. கட்சித் தொண்டர்களும் உற்சாகத்தோடு பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற ஆலோசனை கூட்டங்கள் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளை அதிக அளவில் நடத்த அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரப்பாக தொடங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    Next Story
    ×