search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வை எதிர்த்து வலுவாக களம் இறங்க வியூகம்: பா.ம.க., தே.மு.தி.க.வை இழுக்க அ.தி.மு.க. தீவிர முயற்சி
    X

    தி.மு.க.வை எதிர்த்து வலுவாக களம் இறங்க வியூகம்: பா.ம.க., தே.மு.தி.க.வை இழுக்க அ.தி.மு.க. தீவிர முயற்சி

    • பா.ம.க. தலைவர்களுடன் பல்வேறு வகைகளில் அ.தி.மு.க. ரகசிய பேச்சுவர்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
    • ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் விரைவில் தனது முடிவை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    தேர்தல் நெருங்கி விட்டதால் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் மற்றும் மாநில கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் முடிந்ததும் பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து அரசியல் கட்சிகள் முழுமூச்சாக தேர்தல் பணிகளை தொடங்கி விடும்.

    அதற்கு முன்னதாக தற்போது எல்லா கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்த தொடங்கி உள்ளன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. நேற்று இரு கட்சி தலைவர்களும் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது என்றும் மீண்டும் பிப்ரவரி 2-வது வாரம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுடனும் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து விட்டு வேட்பாளர்களை அறிவிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் நீடிக்கும் என்பது உறுதியாக உள்ள நிலையில் வேறு கட்சிகளை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியின் வலுவான கூட்டணியை எதிர்க்க அ.தி.மு.க.வும் தயாராகி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா இடம்பெற்று இருந்தது. தற்போது பாரதிய ஜனதாவை கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலக்கி உள்ளது.

    இதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சி தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா தீவிரமாக உள்ளது. இதற்காக மறைமுக முயற்சிகளும் நடந்து வருகின்றன.

    இதை அறிந்துள்ள அ.தி.மு.க.வும் கூட்டணியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பென்ஜமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். இந்த குழுவினர் இன்று (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.


    கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை இடம் பெற செய்ய பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம் என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ. கட்சி, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகள் மட்டுமே இருக்கின்றன.

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் கணிசமான அளவுக்கு வாக்குகள் இருப்பதால் அந்த கட்சியை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாரதிய ஜனதா தீவிரமாக இருக்கிறது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. உள்ளது என்று ஏற்கனவே அதன் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    நேற்று மதுரையில் பேட்டியளித்த அவர், "பா.ம.க.வின் முடிவு விரைவில் வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார். பா.ம.க.வை பாரதிய ஜனதா பக்கம் செல்ல விட்டு விடக்கூடாது என்று அ.தி.மு.க. தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதுபற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    பா.ம.க. தலைவர்களுடன் பல்வேறு வகைகளில் அ.தி.மு.க. ரகசிய பேச்சுவர்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் பா.ம.க. தலைவர்களுடன் பாரதிய ஜனதா தலைவர்களும் பேசி வருகிறார்கள். எனவே பா.ம.க. முடிவு என்ன என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

    இதற்கிடையே கூட்டணிக்கு பா.ம.க.வை அழைக்கலாமா? வேண்டாமா? என்பதில் அ.தி.மு.க. தலைவர்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் உருவாகி இருக்கின்றன. பா.ம.க.வை அழைத்தால் முக்குலத்தோர் வாக்குகளை இழக்க நேரிடலாம் என்று அ.தி.மு.க. தலைவர்களில் ஒரு சாரார் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுகீட்டை அ.தி.மு.க. அறிவித்து இருப்பதால் வட மாவட்டங்களில் முழுமையான வெற்றி பெற முடியும் என்று அ.தி.மு.க.வில் மற்றொரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே பா.ம.க.வை அழைப்பது தொடர்பாக அ.தி.மு.க.வில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

    பா.ம.க. உண்மையில் தி.மு.க.வுடன் கைகோர்த்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டாக்டர் ராமதாஸ் சந்தித்த போது இந்த யூகங்கள் அதிகரித்தது.

    ஆனால் பா.ம.க.வுக்காக விடுதலை சிறுத்தைகளை வெளியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராக இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் நடத்திய திருச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று அதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதனால் பா.ம.க. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் சாய்வதா? பா.ஜ.க. பக்கம் சாய்வதா? என்று ஆலோசித்துக் கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் தே.மு.தி.க.வை இழுக்கவும் பாரதிய ஜனதா முயற்சி செய்கிறது. தே.மு.தி.க.வை சேர்ந்த ஒருவரை டெல்லி மேல்சபை யில் எம்.பி. ஆக்குவதாக பா.ஜ.க. உறுதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி உறுதி அளிக்கும்பட்சத்தில் தே.மு.தி.க. பாரதிய ஜனதா பக்கம் சாய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு தே.மு.தி.க.வையும் அணி மாற விட்டு விடக்கூடாது என்று அ.தி.மு.க. கருதுகிறது. இன்று நடந்த கூட்டத்தில் இதுபற்றி அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் நீண்ட நேரம் விவாதித்தனர்.


    ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் விரைவில் தனது முடிவை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளது. அந்த கட்சி சமீபகாலமாக பாரதிய ஜனதாவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது. எனவே தேசிய அரசியலை கருத்தில் கொண்டு ஜி.கே.வாசன் பாரதிய ஜனதா பக்கம் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    அதுபோல ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் போன்றவர்களும் பாரதிய ஜனதா பக்கம் நோக்கிதான் நடந்து கொண்டு இருக்கிறார்கள். இதை பற்றியும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்பட ஏற்கனவே கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதையும் வெளியிடவில்லை. எனவே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இவர்கள் செல்வார்களா? என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

    அப்படியே சென்றாலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பதும் தெளிவற்ற நிலையில் உள்ளது. இந்த சிக்கல்களை நிவர்த்தி செய்வது பற்றியும் அ.தி.மு.க. தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    தொகுதி பங்கீடு சிக்கல் நீடிக்கும் நிலையில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தலைமையிலான பிரசாரக் குழுவும் இன்று ராயப்பேட்டை தலைமை கழகத்தில் ஆலோசனை நடத்தியது. பிரசார திட்டங்களை எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    அது போல அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலான தேர்தல் விளம்பர குழுவும் ஆலோசனை நடத்தியது. இன்று நடந்த அ.தி.மு.க. குழுக்கள் கூட்டத்தில் முதல் கட்ட ஆய்வுதான் நடந்துள்ளது. முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

    Next Story
    ×