search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி தொகுதியில் 4 முனை போட்டி
    X

    கன்னியாகுமரி தொகுதியில் 4 முனை போட்டி

    • நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை எதிர் கொள்கிறது.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதேபோல் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க.வும், பாரதிய ஜனதாவுடன் பா.ம.க.வும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் போட்டியிடுகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை எதிர் கொள்கிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இதேபோல் அ.தி.மு.க.வும், பாரதிய ஜனதாவும் களமிறங்குகின்றன. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

    ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் விஜய் வசந்த் எம்.பி. களம் இறக்கப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனும், அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளர் பசிலியான் நசரேத்தும் களம் இறங்குகிறார்கள். தேர்தலுக்கான மனுதாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தலைவர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அவர் குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசு செய்துள்ள நல்ல திட்டங்களை எடுத்துக்கூறி பிரசாரம் செய்தார். இது பாரதிய ஜனதாவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 27-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் நாகராஜாதிடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் விளவங்கோடு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்தும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். எடப்பாடி பழனிசாமி வருகையையடுத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக வருகைதர உள்ளனர். மேலும் விளவங்கோடு தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரிக்க உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விரைவில் குமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். தலைவர்கள் பிரசாரம் செய்ய வருகை தருவதையடுத்து கன்னியா குமரி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    Next Story
    ×