search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதா நிபந்தனைகளை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு
    X

    பா.ஜனதா நிபந்தனைகளை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு

    • தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பா. ஜனதா முயன்று வருகிறது.
    • கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. தனித்தனி அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சட்டபோராட்டம் நடத்தி கட்சியை தன்வசப்படுத்தினார். பெருவாரியான தொண்டர்கள் பலமும் அந்த தரப்புக்கே உள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தி.மு.க.வுக்கு எதிராக வலிமையான அணியாக இருக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக அ.தி.மு.க.வை ஒன்றுபடுத்த பா.ஜனதா தலைவர்கள் இதுவரை எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

    இப்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பா. ஜனதா முயன்று வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா எல்லோரையும் ஒருங்கிணைத்து கட்சியை பலப்படுத்த அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த 3 பேரையும் சேர்ப்பதில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    இதுவரை அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி வந்தார். ஆனால் எக்காரணத்தை கொண்டும் அவரை மட்டும் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றார் எடப்பாடி பழனிசாமி.

    இப்போது அதையே ஓ.பன்னீர்செல்வம் திருப்பி சொல்கிறார். அதாவது எடப்பாடி பழனிசாமியை சேர்க்க மாட்டோம் என்று கூறி உள்ளார். அதே நேரம் மோடிதான் பிரதமர். பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறுவோம் என்றும் கூறி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோற்றது. அதற்கு காரணம் டி.டி.வி.தினகரன் கட்சி வாங்கிய ஓட்டுகள் தான். மேலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேயான வாக்குவித்தியாசம் ஒரு சதவீதம்தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த வாக்கு வித்தியாசத்தை ஈடுகட்ட அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பா.ஜனதா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. பா.ஜனதாவின் இந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (5-ந் தேதி) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது, கூட்டணி அமைக்க பா.ஜனதா விதித்துள்ள நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா இணைப்பு உள்ளிட்ட எந்த நிபந்தனைகளையும் பா.ஜனதா விதிக்கக்கூடாது. நிபந்தனையற்ற முறையில் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை என்று தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.

    Next Story
    ×