என் மலர்
விளையாட்டு
இதனால் சென்னையின் பிளே-ஆஃப்ஸ் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் தோல்விக்குப் பிறகு தோனி கூறுகையில், ‘‘இந்த தோல்வி வலிக்கிறது. எங்கே சறுக்குகிறோம் என்பதை ஆராய வேண்டும். இந்த சீசன் எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை. ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் இதுவரை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம்.
ராயுடுவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங் ஆர்டர் மீது நாங்கள் அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தோம். எப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லையோ அப்போதெல்லாம் மிடில் ஆர்டர் மீது அழுத்தம் கூடியது.
கிரிக்கெட்டில் உங்களுக்கு கடினமான கட்டம் வரும்போது உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அமைய வேண்டும். ஆனால் இந்த தொடரில் அது எங்களுக்கு அமையவில்லை. பனி இல்லாத சமயத்தில் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது நாங்கள் டாஸ் வென்றிருக்கவில்லை. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்த போட்டிகளில் எல்லாம் திடீரென பிற்பாதியில் பனி இருந்தது.
எப்போதெல்லாம் நீங்கள் சரியாக செயல்படாமல் இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதற்கு காரணமாக 100 விஷயங்களை சொல்ல முடியும். நம்மால் இயலக்கூடிய முழு பலத்தை திரட்டி விளையாடுகிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும், மூன்று அல்லது நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை எனில் கஷ்டம்தான்.
எப்பொழுதும் முடிவு நமக்கு சாதகமாக அமையும் என்பது கிடையாது. இது கிரிக்கெட்டின் ஒரு அங்கம்தான். இருப்பதிலேயே கடினமான ஒன்று வருத்தத்தில் இருக்கும் சமயத்தில் சிரித்துக்கொண்டே கஷ்டமான சூழலை எதிர்கொள்வது. அதனை அணி வீரர்கள் செய்தனர்.
நிர்வாகம் பெரிதாக பதட்டம் ஆகவில்லை. அடுத்த சீசனை பற்றி யோசிக்க வேண்டும். விளையாடும் மைதானம் எப்படி, எந்த மாதிரி வீரர்கள் தேவை என ஆராய வேண்டும். அடுத்த மூன்று போட்டிகள் அதற்கு பயன்படும். அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம். அடுத்ததாக விளையாட உள்ள மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும்.
(நீங்கள் கட்டாயம் அடுத்த 3 போட்டியில் ஆடுவீர்கள் தானே, ஆடவேண்டும் என கேட்டதற்கு) கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது. எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன். அடுத்துவரும் மூன்று போட்டிகளில் நாங்கள் சிறந்ததை கொடுப்போம்’’ என பேசிமுடித்தார்
சிறிய கிரவுண்ட் என்பதால் அதிக ரன்கள் குவிக்க முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். போட்டி தொடங்குவதற்கு சற்று முன்புதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல்நிலை சரியில்லாமல் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அப்பாடா!!! ஒரு அதிரடி பேட்ஸ்மேன் இல்லை என சிஎஸ்கே வீரர்களுடன் ரசிகர்களும் பெருமூச்சு விட்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை ஏற்றார் பொல்லார்ட். டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார் பொல்லார்ட். இந்தத் தொடர் முழுவதுமே பீல்டிங் தேர்வு செய்த அணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்து 170 ரன்களுக்கு மேல் அடித்தால் ஜேஸிங் செய்வது கடினம் என்பது தெரிந்தும் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்ததால் ரசிகர்கள் மனதிற்குள் பொல்லார்ட் தவறு செய்து விட்டார் என நினைத்தனர்.
வாழ்வா? சாவா? போட்டியில் சென்னைக்கு அணிக்கு சற்று வழியை திறந்து விட்டார் என மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக குழி தோண்டி புதைக்கப் போகிறார் என்பதை சென்னை ரசிகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.
சென்னை அணி 170-க்கு மேல் அடித்துவிடும் என நினைத்து டி.வி.க்கு முன் சிஎஸ்கே ரசிகர்கள் விசில் போட உட்கார்ந்தனர்.
ஏற்கனவே அனுபவ வீரர்கள் சொதப்பியதால் இந்த போட்டியில் இருந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என டோனி கூறியிருந்தார். அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட், என். ஜெகதீசன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கினார். இதுவரை விளையாடாமல் இருந்த பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிரும் அணியில் இடம் பிடித்தார்.
டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் களம் இறங்கி பவர் பிளேயை உற்சாகப்படுத்துவார் என நினைக்கையில் டோனி கெய்க்வாட்டை களமிறக்கினார். அப்போதே சிஎஸ்கே ரசிகர்கள் ஜர்க் ஆகினர். ஏற்கனவே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறிய ருத்துராஜ் கெய்க்வாட், தொடக்க வீரரகாக களம் இறக்கப்பட்டதும் கூடுதல் நெருக்கடியை சந்தித்தார்.
முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இவரின் ஸ்விங் பந்தை எதிர்கொள்ள திணறிய இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் ஐந்தாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது சாம் கர்ரனை களம் இறக்கியிருக்க வேண்டியதுதானே என ரசிகர்கள் முணுமுணுத்தனர். தொடர் தோல்வியால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் டோனியின் இந்த முதல் தவறு முற்றிலும் தவறாக அமைந்தது.

3-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். இந்த ஓவரில் ஐந்தாவது பந்தில் சிஎஸ்கே-யின் நங்கூரம் என அழைப்படும் டு பிளிஸ்சிஸ் 1 ரன்னில் வெளியேறினார். கண்ணை மூடி திறப்பதற்குள் 2.5 ஓவரில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 4 பேர் 3 ரன்கள் எடுப்பதற்குள் பெவிலியன் திரும்பியதால், 2.5 ஓவரிலேயே சென்னை அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது.
ஒருவேளை சாம் கர்ரன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டிருந்தால் ஒருமுனையில் நிலைத்து நின்று போட்டியை மாற்றியிருக்கலாம்.
ஜடேஜா 7 ரன்னிலும், வழக்கம்போல எம்எஸ் தோனி 16 ரன்னிலும் நடையை கட்ட, 30 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே. சாம் கரன் கடைசி வரை போராடி 52 ரன்கள் அடிக்க பந்து வீச்சாளர்கள் நம்பிக்கையுடன் பந்து வீசும் அளவிற்கு 114 ரன்கள் அடித்தது.
சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர், சாம் கர்ரன் என பந்து வீச்சாளர்கள் இருந்ததால் ரசிகர்கள் தங்களது நம்பிக்கையை விடாமல் இருந்தனர்.
ஆனால் தொடக்க வீரர்களாக சென்னையின் பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டி அடித்து துவம்சம் செய்து சிஎஸ்கே ரசிகர்களின் நம்பிக்கை குழி தோண்டி புதைத்தனர்.
12.2 ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக வீழ்த்தியது இஷான் 37 பந்துகளில் 68 ரன்கள் 37 பந்துகளில் 66 ரன்களும், டி காக் 46 ரன்களும் அடித்தனர்.
தீபக் சாஹர், ஹசில்வுட் பந்து வீச்சு எடுபடாத போதிலும், நியூ பால் உள்பட போட்டி முழுவதும் சாம் கர்ரனை பந்து வீச அழைக்காதது ஏன்? என்பது டோனிக்குதான் வெளிச்சம்.
இந்த முறையும் பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்தமாக சொதப்ப, பிளே-ஆப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது சிஎஸ்கே.
ஒரு சதவீதம் கூட ஈடுகொடுக்க முடியாமல் போனது சிஎஸ்கே ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
3 முறை சாம்பியன், 5 முறை 2-வது இடம் என்று ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.
* ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பாக நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இருவரும் கொரோனா அச்சத்தால் விலகினர். சென்னை அணியின் பேட்டிங் முதுகெலும்பாக அறியப்படும் ரெய்னாவின் (193 ஆட்டத்தில் 5,368 ரன் குவித்தவர்) விலகல் பேரிடியாக விழுந்தது. ஏனோ, அணி நிர்வாகம் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை. இருக்கிற வீரர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற ‘கணக்கு’ பொய்த்து போனது.
* கேப்டன் டோனியின் சில முடிவுகளும் எதிர்மறை விளைவை தந்தன. ‘ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்’ என்று வர்ணிக்கப்படும் டோனி தொடக்க ஆட்டங்களில் 7-வது வரிசையில் இறங்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. மிகவும் பின்வரிசையில் ஆடும் போது, தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவே சற்று நேரம் பிடிக்கும். அதற்குள் நெருக்கடி உருவாகி, ஆட்டம் தோல்வியில் முடிந்து விடும். பிறகு எதிர்ப்பு கிளம்பவே தனது பேட்டிங் வரிசையை மாற்றிக்கொண்டார்.
* இளம் வீரர்களை ஓரங்கட்டி விட்டு தொடர்ந்து சொதப்பிய கேதர் ஜாதவுக்கு (8 ஆட்டத்தில் 62 ரன்) மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கியது விமர்சனத்திற்கு உள்ளானது. ஜாதவ் தேவையான நேரத்தில் மட்டையை சுழட்டாமல் மந்தமாக ஆடி வெறுப்பேற்றியதுடன் சில ஆட்டங்களில் தோல்விக்கு காரணமாக ரசிகர்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.
* நீண்ட இடைவெளிக்கு பிறகு (14 மாதங்களுக்கு பிறகு) களம் கண்ட டோனியின் பேட்டிங் எடுபடவில்லை. 39 வயதான அவரது ஆட்டத்திறன் வெகுவாக குறைந்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிந்தது. வழக்கமாக டோனி களத்தில் நின்றால் எதிரணி ‘கிலி’ அடையும். இன்றோ நிலைமை தலைகீழ். 11 ஆட்டங்களில் 180 ரன்களே எடுத்திருக்கிறார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மற்ற வீரர்களின் பேட்டிங்கும் ஒருங்கிணைந்து அமையவில்லை.
* இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்கும் போது வெளியூரில் தோற்றாலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் தங்களது கோட்டை என்பதை எப்போதும் சென்னை அணியினர் நிரூபித்து இருக்கிறார்கள். இங்கு பெறும் வெற்றிகள் தான் சென்னை அணியின் முன்னேற்றத்துக்கு ஆணிவேராக அமையும். இந்த முறை ஐ.பி.எல். அமீரகத்துக்கு மாற்றப்பட்டதால் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி மூத்த வீரர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை. 18 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இதுவரை அணி ‘செட்’ ஆகவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஒரு ஓட்டையை அடைத்தால் இன்னொரு ஓட்டை விழுந்து விடுகிறது என்று முன்பு எப்போதும் இல்லாத வகையில் டோனியின் புலம்பலே அணி பலவீனத்துக்கு சான்று.
* சென்னை அணி வீரர்களின் சராசரி வயது 30.5. இந்த ஐ.பி.எல்.-ல் அதிக வயது கொண்ட வீரர்களை கொண்ட அணி சென்னை தான். இந்த தடவை அனுபவம் கைகொடுக்காததால் வயதான அணி என்ற பிம்பத்தை உடைக்க அடுத்த ஆண்டு அணி நிர்வாகம் இளம் ரத்தத்தை பாய்ச்ச அதிரடி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்ஜா:
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகிறது. இதுவரை 10 ஆட்டத்தில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.இதனால் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
பிளேஆப் சுற்று வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால் அடுத்த 4 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். அதேவேளையில் மற்ற அணிகளின் சில ஆட்டங்களின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 11-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது. சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் வாட்சன், டுபிளிசிஸ், அம்பதி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் மிடில்-ஆர்டர் வரிசை மிகவும் மோசமாக இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் (ராஜஸ்தானுக்கு எதிராக) சென்னை 20 ஓவரில் 125 ரன் மட்டுமே எடுத்தது.
இறுதிக்கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் குறைந்த ஸ்கோரை எடுத்து தோல்வியை சந்தித்தது. எனவே மிடில்- ஆர்டர் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
பந்து வீச்சில் தீபக்சாஹர், ஷர்துல்தாகூர், ஜடேஜா ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர் பிராவோ காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் நிகிடி அல்லது இம்ரான் தாகிர் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
அதேபோல் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. வெற்றி கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று களம் இறங்குகிறது. பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்றால் அனைத்து துறையிலும் சிறந்த பங்களிப்பை சென்னை வீரர்கள் அளிக்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டத்தில் விளையாடி 6-ல் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் ரோகித்சர்மா, குயின்டன் டிகாக், சூர்ய குமார் யாதவ், இசான்கிஷன், ஹர்திக்பாண்ட்யா, பொல்லார்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, போல்ட், குர்னல்பாண்ட்யா ஆகியோர் உள்ளனர்.
மும்பை அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. அந்த அணி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகள் மோதிய முந்தய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
துபாய்:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. சாம்சன் 36 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 30 ரன்னும் எடுத்தனர்.
ஐதராபாத் தரப்பில் ஜேசன்ஹோல்டர் 3 விக்கெட்டும், விஜய்சங்கர், ரஷித்கான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர் (4 ரன்), பேர்ஸ்டோவ் (10ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர்.
அதன்பின் மனீஷ் பாண்டே-விஜய்சங்கர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது. ஐதராபாத் 18.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 146 ரன் எடுத்து வெற்றிபெற்றது.
மனீஷ்பாண்டே 83 ரன்னும் (47 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), விஜய்சங்கர் 52 ரன்னும் (51 பந்து, 6 பவுண்டரி) எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
ஐதராபாத் அணி 4-வது (10 ஆட்டம்) வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் 7-வது தோல்வியை (11 ஆட்டம்) சந்தித்தது. வெற்றி குறித்து ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-
இந்த வெற்றி ஒரு அற்புதமான செயல்பாடு. டாசின் போது நான் சேசிங்கை தேர்வு செய்தது பற்றி நீங்கள் கேள்வி எழுப்பலாம். பவர் பிளேவுக்கு பிறகு நாங்கள் அவர்களை கட்டுக்குள் கொண்டுவந்தோம். மொத்தத்தில் நாங்கள் எதிர்பார்த்த விளையாட்டு இதுதான்.
இந்த போட்டியில் நான் ஆச்சரியம் அடைந்தேன். ஏனென்றால் இந்த போட்டி உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சுகளுக்கு எதிராக இருந்தது. இதில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்ந்திருப்பது கூடுதல் பலமாக இருக்கிறது.
அவரது உயரம், அனுபவம் நல்ல பலன் அளிக்கிறது. அவர் இன்று பேட்டிங் செய்யவில்லை. ஆனாலும் அவர் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்.
மிடில்-ஆர்டர் வரிசையில் (மனீஷ்பாண்டே-விஜய் சங்கர்) சிறப்பாக விளையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ரன் இலக்கை அடைய அவர்கள் நல்ல அடித்தளம் அமைப்பார்கள் அல்லது பெரிய ஸ்கோரை திரட்டுவார்கள் என்பதை நிரூபித்து காட்டினார்கள்.
எங்களது அணி அநேகமாக முதலில் பேட்டிங் செய்து இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றிபெறுவதில் சிறந்ததாக இருக்கிறது. ஆனால் கடந்த 2 போட்டிகளின் அடிப்படையில் இந்த ஆட்டத்தில் சேசிங்கை தேர்வு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறும்போது, ‘நாங்கள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினோம் என்று நினைக்கிறேன். ஆர்ச்சர் தொடக்கத்திலேயே 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். ஆடுகளம் நன்றாக இருந்தது. சில காரணங்களால் அங்கு சிறிது பனியின் தாக்கம் இருந்தது.
ஆர்ச்சரை தொடர்ந்து அவரது 3-வது ஓவரை வீச வைக்க எனது மனதில் எண்ணம் இருந்தது. இது பற்றி சில வீரர்களுடன் கலந்துரையாடினேன். அவரை தொடர்ந்து 3-வது ஓவரை வீச வைத்திருக்க வேண்டும்’ என்றார்.
இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் ராயல்சின் பிளேஆப் சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.






