என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் இந்திய டெஸ்ட் அணி முதலிடத்தில் உள்ளது.
    2019ஆம் ஆண்டு தொடங்கி 2021-ம் ஆண்டு வரை முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.  கடந்த ஜூன் மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. அதன்பின் தற்போது மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளது. 

    இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிரா செய்யப்பட்டதால் இந்திய அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. மொத்தமாக 16 புள்ளிகள் பெற வேண்டிய இந்திய அணிக்கு ஓவர்களை மெதுவாக வீசியதால் இரண்டு புள்ளிகளை இழந்தது. ஐசிசியின் விதிப்படி ஒரு போட்டியில் வென்றால் 12 புள்ளிகளும், போட்டி டையில் முடிந்தால் 6 புள்ளிகளும், டிராவில் முடிந்தால் 4 புள்ளிகளும் ஒவ்வொரு அணிகளுக்கும் வழங்கப்படும். 

    14 புள்ளிகள் பெற்று இந்திய அணி முதல் இடத்திலும், 12 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 2 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி நான்காம் இடத்தில் உள்ளது. 

    தொடை தசைநார் கிழிவில் இருந்து முழுமையாக குணமடைவதற்காக அமெரிக்க ஓபனில் இருந்து விலக முடிவு செய்ததாக செரீனா கூறி உள்ளார்.
    வாஷிங்டன்:

    உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (வயது 39). இவர், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இதுவரை 23 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 

    இந்நிலையில், இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற உள்ள கிராண்ட் ஸ்லாம் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    செரீனா வில்லியம்ஸ்

    ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன், அடுத்த திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகுவதாக செரீனா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ‘உடல்நிலையை கவனமாக பரிசீலித்து, எனது மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின்பேரில், தொடை தசைநார் கிழிவில் இருந்து முழுமையாக குணமடைவதற்காக அமெரிக்க ஓபனில் இருந்து விலக முடிவு செய்தேன்’ என செரீனா குறிப்பிட்டுள்ளார்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
    லீட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.

    இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - கேஎல் ராகுல் களமிறங்கினர். ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரில் கேஎல் ராகுல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 1 ரன்னில் ஆண்டர்சன் பந்து வீச்சில் அவுட் ஆனார். 

    இதனையடுத்து விராட் கோலி-ரோகித் சர்மா ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினார். ரன் வரவில்லை என்றாலும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொறுமையாக ஆடிய விராட் கோலி பவுண்டரிக்கு ஆசைப்பட்டு ஆண்டர்சன் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இந்திய அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு ஆடி வருகிறார். தற்போது வரை இந்திய அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 56 பந்துகளில் 9 ரன்களும் ரகானே 23 பந்துகளில் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
    லீட்ஸ்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் சர்மா 2. கே.எல்.ராகுல் 3. புஜாரா 4. ரகானே 5. விராட் கோலி 6. ரிஷப் பண்ட் 7. ஜடேஜா 8. முகமது சமி 9. பும்ரா 10. சிராஜ் 11. இஷாந்த் சர்மா

    இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:-

    1. ரோரி பர்ன்ஸ் 2. ஹசீப் ஹமீட் 3. டேவிட் மாலன் 4.ஜோ ரூட் 5. ஜானி பேர்ஸ்டோ 6.ஜோஸ் பட்லர் 7.மொயீன் அலி 8.சாம் கரன் 9.கிரேக் ஓவர்டன் 10.ஒல்லி ராபின்சன் 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்
    முகமது சிராஜ் திறமையான பந்து வீச்சாளர் எனவும் ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது எனவும் விராட் கோலி கூறியுள்ளார்.

    லீட்ஸ்:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    5 போட்டி கொண்ட தொடரில் இதுவரை நடந்த 2 டெஸ்ட் முடிவின்படி இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த டெஸ்டில் வெற்றி பெற்று இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரரான அஸ்வின் சேர்க்கப்படவில்லை. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருந்ததால் இந்தியா 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியது. இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    3-வது டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று விராட் கோலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அணி மாற்றம் செய்யப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. 2-வது டெஸ்டில் வெற்றி பெற்ற அணி சிறந்தது. வெற்றி நிறைந்த அணியை மாற்றி தொந்தரவு செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் லாட்சில் பெற்ற வெற்றி நம்ப முடியாதது. மிகவும் சிறப்பானது.

    அஸ்வின் இடம் பெறுவாரா? என்பதில் எதுவும் நடக்கலாம். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து எல்லாம் இருக்கிறது. நாங்கள் சம பலத்துடன் தான் விளையாடுவோம்.

    முகமது சிராஜ் திறமையான பந்து வீச்சாளர். ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. அவர் ஒருபோதும் சவால்களில் இருந்து பின்வாங்க மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
    லீட்ஸ்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

    இதில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் மழை புகுந்து கெடுத்து விட்டது. அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புரட்டி எடுத்ததோடு தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    முந்தைய டெஸ்டில் 9-வது விக்கெட்டுக்கு பும்ராவும் முகமது ஷமியும் இணைந்து 89 ரன்கள் திரட்டியதும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அத்துடன் 272 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து ஆடியபோது அதே வேகத்துடன் வரிந்து கட்டி நின்ற இந்திய பவுலர்கள் அவர்களை 120 ரன்னில் சுருட்டி அமர்க்களப்படுத்தினர்.

    இந்தியாவுக்கு மிடில்வரிசை பேட்டிங் தான் கவலைப்படும் வகையில் உள்ளது. கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார். நீண்ட கால சத ஏக்கத்தை இந்த டெஸ்டின் மூலம் கோலி முடிவுக்கு கொண்டு வருவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். புஜாரா, துணை கேப்டன் அஜிங்யா ரஹானே ஆகியோரின் மந்தமான பேட்டிங்கும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. அவர்களும் சூழ்நிலைக்கு தகுந்தபடி பேட்டிங்கில் கொஞ்சம் துரிதம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

    முகமது ஷமி, பும்ரா

    தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் வலுவான அடித்தளம் அமைத்து தந்ததே தொடரில் இந்தியா முன்னிலை பெற்றதற்கு முக்கிய காரணம். ரோகித் சர்மாவை பொறுத்தவரை பவுன்சராக வரும் பந்துகளை ‘புல்ஷாட்’டாக விரட்டும் போது கூடுதல் கவனம் தேவையாகும். இந்த வகையில் அவர் இரண்டு முறை விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார்.

    வேகப்பந்து வீச்சுக்கு உகந்த குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையே லீட்சில் நிலவும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், இந்தியா 4 வேகம், ஒரு சுழல் என்ற யுக்தியில் மாற்றம் செய்யாது என தெரிகிறது.

    லார்ட்ஸ் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஆக்ரோஷமான பவுலிங் (8 விக்கெட்) இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தது. இன்றைய டெஸ்டிலும் அவரது ஜாலம் தொடர்ந்தால் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை 22 டெஸ்டில் விளையாடி 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, இந்த டெஸ்டில் 5 விக்கெட் கைப்பற்றினால் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.

    கடந்த டெஸ்டில் தோற்றதால் இங்கிலாந்து கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் மட்டும் சூப்பர் பார்மில் (2 சதம் உள்பட 386 ரன்) உள்ளார். மற்றவர்களின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை. தடுமாறி வரும் தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி கழற்றி விடப்பட்டு விட்டார். அவருக்கு பதிலாக டேவிட் மலான் களம் இறங்குகிறார்.

    இதேபோல், காயத்தால் விலகி இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக சகிப் மமூத் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 2-வது டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பரிகாரம் தேடும் வேட்கையுடன் இங்கிலாந்து இருப்பதால் இந்த டெஸ்டிலும் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் இந்திய அணி இதுவரை 6 டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. இங்கு கடைசி இரு டெஸ்டுகளில் இந்தியா வெற்றி பெற்றிருப்பது (1986 மற்றும் 2002-ம் ஆண்டு) கூடுதல் நம்பிக்கையை தருகிறது. 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 628 ரன்கள் குவித்தது சிறப்பம்சமாகும்.

    இங்கிலாந்து அணி இங்கு கடைசியாக விளையாடிய 10 டெஸ்டுகளில் 4-ல் வெற்றி, 5-ல் தோல்வி, ஒன்றில் டிரா கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா அல்லது அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

    இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், சகிப் மமூத் அல்லது கிரேக் ஓவர்டான்.

    இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3, டென் 4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி, மழை காரணமாக டிரா ஆன நிலையில் அடுத்து 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12-ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் குறித்து அவர் கூறியதாவது;

    விராட் கோலி

    சிராஜ் எப்போதும் திறனுள்ள பந்துவீச்சாளர். அவரை நன்கு தெரியும் என்பதால் அவரது வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. அவருடையத் திறனை ஆதரிக்க நம்பிக்கை வேண்டும். ஆஸ்திரேலிய தொடர் அவருக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. எந்தவொரு நிலையிலிலும் எந்தவொரு வீரரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்திருக்கிறார். அவருடைய நம்பிக்கை அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது. அவர் செய்வதன் பலன்களைப் பார்க்கலாம்.

    அவரிடம் எப்போதுமே திறன் உள்ளது. நம்பிக்கையும், செயல்படுத்தும் விதத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் இதுமாதிரியான பந்துவீச்சாளராகத்தான் இருக்கப்போகிறார். எவ்வித அச்சமும் இல்லாமல் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய முனைப்பு காட்டுவார். அவர் பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்தார்.
    வெஸ்ட் இண்டீசுடனான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் ஷஹீன் அப்ரிடி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.
    ஜமைக்கா:

    வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பவாத் ஆலம் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் பாபர் அசாம் 75 ரன்னில் அவுட்டானார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 3 விக்கெட், சீலஸ் 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பானர் 37 ரன்னும், பிளாக்வுட் 33 ரன்னும், ஹோல்டர் 26 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 6 விக்கெட்டும், மொகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், பஹீம் அஷ்ரப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 152 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இம்ரான் பட் 37 ரன்னும், பாபர் அசாம் 33 ரன்னும், அபித் அலி 27 ரன்னும், அசார் அலி 22 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், பிராத்வெயிட், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. நான்காம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெயிட் 17 ரன்னும், அல்ஜாரி ஜோசப் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    பிராத்வெயிட்

    இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தது. பிராத்வெயிட் தாக்குப் பிடித்து 39 ரன்னும், கைல் மேயர்ஸ் 32 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் கேப்டன் ஹோல்டர் ஓரளவு போராடினார். அவர் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    உணவு இடைவேளைக்கு முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது தடைபட்டது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 109 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. 

    இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமனிலை செய்துள்ளது பாகிஸ்தான் அணி. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டது.

    ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றியது.
    பாரா ஒலிம்பிக் போட்டியில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள்.
    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள். டோக்கியோவில் அரங்கேறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். 

    இந்த நிலையில் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு  தலைமை தாங்கி ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த் தேசியக் கொடியை ஏந்தி சென்றார். 

    மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    டெல்லி: 

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ராணி ராம்பால், மன்பிரீத் சிங் வாழ்த்துகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில், "டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு எனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்து, இந்திய வீரர்கள் வெற்றி கோப்பையுடன் திரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
    வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

    டோக்கியோ:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 5-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.

    பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிகமானோர் இதற்கு முன்பு கலந்து கொண்டது கிடையாது.

    கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஈட்டி எறிதலில் ஜகாரியாவும் தங்கம் வென்றார். இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

    பாராலிம்பிக் தொடக்க விழா இன்று மாலை நடக்கிறது. இதில் தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் தேசிய கொடியை அவர் ஏந்தி செல்லவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் அவர் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் அதில் இருந்து விலகி உள்ளார்.

    மாரியப்பனுக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டெக்சந்த் தேசிய கொடியை ஏந்திச் செல்கிறார். மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

    லீட்ஸ்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் மழையால் முடிவு பாதிக்கப்பட்து. லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வி நிலைக்கு சென்று அதில் இருந்து மீண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியை பெற்றது.

    இதே போல 3-வது டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

    பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (244 ரன்), ரோகித் சர்மா (152) ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ரகானேவும், புஜாராவும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பியது அணிக்கு சாதகமான நிலையே.

    கேப்டன் விராட்கோலி, ரி‌ஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் முத்திரை பதிக்க கூடியவர்கள். லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி நேர ஆட்டக்காரர்களான முகமது ‌ஷமியும், பும்ராவும் பேட்டிங்கில் சாதித்தனர்.

    கடந்த 2 டெஸ்டிலும் இந்தியா 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியது. இதில் பும்ரா 12 விக்கெட்டும் , முகமது சிராஜ் 11 விக்கெட்டும், ‌ஷமி 7 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்பது தெரியவில்லை. முதல் 2 போட்டியைப் போலவே இந்த டெஸ்டிலும் 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கினால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது.

    ஒரு வேளை ஆடுகளம் சுழற்பந்துக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கருதப்பட்டால் மட்டுமே அஸ்வினுக்கு வாய்ப்பு உள்ளது. லீட்ஸ் ஆடுகளம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அஸ்வின் இடம் பெற்றால் இஷாந்த் சர்மா நீக்கப்படுவார்.

    கடந்த டெஸ்டில் காயத்தால் ஆட முடியாத வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர் இடம்பெறும் பட்சத்தில் இஷாந்த் சர்மா கழற்றிவிடப்படுவார்.

    ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

    ஆனால் இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலவீனத்துடன் இருக்கிறது. கேப்டன் ஜோரூட் ஒருவரே பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார். அவர் 2 சதம் உட்பட 386 ரன் எடுத்துள்ளார். அவரை நம்பிதான் அணியே இருக்கிறது. பந்துவீச்சில் ஆண்டர்சன், ராபின்சன் தலா 9 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீரர் மார்க்வுட் இந்த டெஸ்டில் ஆடவில்லை. இது இங்கிலாந்துக்கு பாதிப்பாகும். ஏற்கனவே ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டுவர்ட் பிராட், கிறிஸ்வோக்ஸ், பென்ஸ்டோக்ஸ் ஆகியோர் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. மார்க்வுட் இடத்தில் சகிப்மெக்மூத் இடம் பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    பேட்டிங் பலவீனமாக இருப்பதால் டாம் சிப்லிக்கு பதிலாக டேவிட்மலான் இடம் பெற்றுள்ளார். ஜோஸ்பட்லர், பேர்ஸ்டோவ், மொய்ன்அலி ஆகியோர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 129-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 128 போட்டியில் இந்தியா 30-ல், இங்கிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 டெஸ்ட் டிரா ஆனது.

    இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவி‌ஷன் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    ×