என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் ஒருவராக பெஞ்சமின் பிராங்க்ளின் அறியப்படுகிறார்.
    • உலோகத்தினால் செய்யப்படும் நாணயங்களில் போலி நாணயங்கள் அதிகரிப்பதை எண்ணி, பேப்பரில் நோட்டுகளை அடிக்கும் புதிய வழியை பிராங்க்ளின் ஆதரித்தார்.

    அமெரிக்காவின் நூறு டாலர் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் பிரதானமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா? அவர் தான் அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின். அவரை கவுரவிக்கும் விதமாகவே அமெரிக்கா தனது நூறு டாலர் நோட்டில் அவர் படத்தைச் சித்தரித்துப் பெருமைப்படுகிறது. அவரைப் பெருமைப்படுத்துகிறது!

     

    பன்முகப் பரிமாணம் கொண்ட அவரது வாழ்க்கை பிரமிக்க வைக்கும் ஒன்று. அவரது சுயசரிதை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.

    பிறப்பும் இளமையும்: மிக சாதாரணமான எளிய குடும்பத்தில் 1706-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் பிறந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

    அவரது தந்தை ஜோசையா பிராங்க்ளின் சோப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பவர். அவருக்கு இரு மனைவிகள் மூலம் 17 குழந்தைகள் உண்டு. பத்தாவதாகப் பிறந்தவர் பிராங்க்ளின்.

    ஏழ்மையான குடும்பம். ஆகவே அவரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. ஓராண்டு மட்டுமே அவரால் பள்ளிக்குப் போக முடிந்தது.

    ஆனால் இயல்பாகவே எதையும் கூர்ந்து கவனிக்கும் அவர் ஏழாவது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி நான்கு மொழிகளைக் கற்றார்.

    இளம் வயதில் செய்தித்தாள்களை விற்க ஆரம்பித்த அவர் தானாகவே ஒரு செய்தித்தாளை ஆரம்பித்து சிறப்பாக நடத்த ஆரம்பித்தார். ஒரு பிரிண்டிங் பிரஸை நிறுவிய அவர் அதில் ஏராளமான சோதனைகளைச் செய்து பார்க்க ஆரம்பித்தார்.

    ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாக இன்று என்ன செய்யலாம் என்று யோசிப்பது அவரது வழக்கமாக ஆனது.

    இதனால் தான் அவர் 23 வயதிலேயே ஒரு அச்சக முதலாளியாகவும், பத்திரிகை வெளியீட்டாளராகவும் எழுத்தாளராகவும் ஆக முடிந்தது. பின்னால் அரசியல் ஈடுபாடு காரணமாக ஒரு ராஜ தந்திரி ஆனார். விஞ்ஞானி ஆனார். பிலடெல்பியா போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக 1737 முதல் 1753 வரை பதவி வகித்தார்.

    அரசியல் வாழ்வு: சமுதாய அக்கறை கொண்டு அதை மேம்படுத்தும் எல்லா விஷயங்களிலும் அவர் ஈடுபட ஆரம்பித்தார். பிரான்சுக்கான முதல் யு.எஸ். தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார். 1785 முதல் 1788 முடிய அவர் பென்சில்வேனியா தலைவராக ஆனார். இங்கிலாந்துடன் நல்ல உறவை மேற்கொண்ட அவரது புகழ் பரவியது.

    முதலில் தனது பத்திரிகையில் 'அடிமைகள் விற்பனைக்கு' என்று விளம்பரத்தை பிரசுரித்து வந்த அவர், பின்னர் அது தவறு என்று உணர்ந்து மனம் மாறி அடிமைத்தனத்தை ஒழிக்க வெகுவாகப் பாடுபடலானார். அப்போது அமெரிக்க புரட்சி தோன்றவே அதில் தீவிரமாக ஈடுபட்டார். அமெரிக்க காலனிகள் 13ஐயும் ஒன்றிணைக்க முனைந்து உழைத்தார்.

    அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களுள் ஒருவர்: அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் ஒருவராக பெஞ்சமின் பிராங்க்ளின் அறியப்படுகிறார். அமெரிக்க புரட்சியை நடத்தி 13 காலனிகளை ஒருங்கிணைத்து யுனைடட் ஸ்டேட்சின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் இவர்களே.

    13 அம்சத் திட்டம்: தனக்குத் தானே அவர் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். வெற்றி பெற வாழ்நாளில் தான் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய 13 அம்சங்களை ஒரு தாளில் அவர் குறித்து வைத்துக் கொண்டார்.

    1. நடுநிலைமையுடன் அணுகல் 2. மவுனம் 3. ஒழுங்கு 4. உறுதி எடுத்தல் 5. சிக்கனம் 6. உழைப்பு 7. நேர்மை 8. நியாயம் 9. சுத்தம் 10. மிதமான போக்கு 11. அமைதி 12. தூய்மை 13. எளிமை

    இந்த 13 அம்சங்களையும் ஒரு தாளில் குறித்து வைத்துக்கொண்டு எதிரே வார நாட்களைக் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு அம்சத்தை மட்டும் மிகுந்த கவனத்துடன் மனமூன்றி அவர் கடைப்பிடிப்பார். அதை நாள்தோறும் அவர் சரி பார்ப்பார். அதைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் X குறிகளை இடுவார். இப்படி தினமும் இவற்றைச் சரிபார்க்கப் பார்க்க நாளடைவில் அவரது தாளில் X குறிகள் குறைந்தது. இப்படி வருடத்தில் உள்ள 52 வாரங்களில் நான்கு முறை இந்த 13 அம்ச திட்டத்தை அவர் கடைப்பிடித்தார். இதன் பலன் அபாரமாக இருந்தது. அதை அவரது வாழ்க்கையின் வெற்றி காண்பித்தது;

    நேர்மை, நியாயம் என்பதில் தான் செய்த தவறுகளை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். முறை தவறி தனக்கு ஒரு மகன் பிறந்ததை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். வில்லியம் என்ற அந்த மகனைத் தானே வளர்த்தார். இந்த 13 அம்சத் திட்டம் அனைவருக்குமானது. உலகின் ஆகப் பெரும் விற்பனையாளராகத் திகழ்ந்த பிராங்க் பெட்கர், பிராங்கிளினின் திட்டத்தினால் உத்வேகம் பெற்றார். தனது விற்பனைத்துறையில் தனக்கேற்றவாறு 13 குணாதிசயங்களை அவர் குறித்து வைத்துக் கொண்டு முன்னேறலானார்.

    அவர் கொண்ட 13 அம்சத் திட்டம் 1. உற்சாகம், 2. ஒழுங்கு, 3. மற்றவர் பார்வையில் எதையும் பார்த்தல், 4. கேள்விகளைக் கேட்டல், 5. மற்றவரின் முக்கிய தேவையை உணர்தல், 6. மவுனம் (எதிரில் இருப்பவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டல்), 7. நேர்மை, 8. தனது வேலை பற்றிய அறிவு, 9. மற்றவரைப் பாராட்டுதல், புகழ்தல் 10. புன்சிரிப்புடன் பழகுதல், 11. பெயர்களையும் முகங்களையும் நினைவிலிருத்தல், 12. வாடிக்கையாளர் சேவை, 13. விற்பனையைத் திறம்பட முடித்தல்.

    தனக்கென ஏற்படுத்திக் கொண்ட இந்த கொள்கை திட்டத்தை அவர் கடைப்பிடித்ததால் உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக ஆனார். ஆகவே முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு 13 அம்சத் திட்டத்தை உருவாக்கி அதைத் தினமும் ஊன்றிக் கவனித்துக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம். இப்படி வெற்றிக்கு ஒரு புதுமுறை வழிகாட்டியாக ஆனார் பெஞ்சமின் பிராங்க்ளின். அவர் செஸ் விளையாட்டில் நிபுணர். நீச்சல் வீரர். வாழ்நாள் முழுவதும் சைவ உணவையே மேற்கொண்டார். தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்எங்ஙனம் ஆளும் அருள் என்ற வள்ளுவரின் கோட்பாட்டை கடைப்பிடித்தவர் அவர்...

    பிராங்க்ளின் எபெக்ட்: அரசியல் வாழ்வில் அவர் தன் கொள்கைகளை எதிர்க்கும் பலரையும் அன்றாடம் சந்திக்க வேண்டியிருந்தது. எதிராளிகளைத் தன் பக்கம் ஈர்ப்பதிலும் அவர்கள் தன்னைத் தாக்குவதைக் குறைப்பதிலும் அவர் ஒரு புதுவழியைக் கையாண்டார்.

    ஒரு முறை தன்னை வெகுவாக எதிர்த்து வந்த சட்டமன்ற உறுப்பினரை தானும் தீவிரமாக எதிர்க்காமல் அவரிடம் சென்று அவரது நூலகத்தில் உள்ள ஒரு நூலைப் படிக்கத் தர முடியுமா என்று வேண்டினார். இந்த வேண்டுகோளினால் புளகாங்கிதம் அடைந்த எதிராளி தனது நூலை அவரிடம் படிக்கக் கொடுத்தார்.

    பிராங்க்ளின் அந்தப் புத்தகத்தைப் படித்த பின்னர் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்து ஒரு குறிப்புடன் புத்தகத்தைத் திருப்பித் தந்தார். அன்றில் இருந்து பிராங்க்ளினை ஆக்ரோஷமாக விமரிசிப்பதை அவர் குறைக்க ஆரம்பித்தார். இதிலிருந்து அவர் கற்ற பாடம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும்போது அவரைப் பற்றிய நல் அபிப்ராயம் அதிகமாவதோடு அவரை விரும்பவும் ஆரம்பிக்கிறார் என்பது தான்.

    இந்த உத்தியை அறிவியல் அறிஞர்கள் 'பிராங்க்ளின் எபெக்ட்' என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

    இது சரிதானா என்பதைக் கண்டுபிடிக்க பின்னால் அறிவியல் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. இது அதிசயிக்கத்தக்க விதத்தில் பலனைத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

    இது மட்டுமல்ல, பிறர் ஒரு விஷயத்தைக் கூறும்போது அதில் அவர் மாறுபட்ட அபிப்ராயத்தைக் கொண்டிருந்தால் அதை நேரடியாக எதிர்த்துப் பேசுவதை கைவிட்டார். 'சந்தேகமின்றி', நிச்சயமாக' என்ற வார்த்தைகளைத் தவிர்த்து, 'நான் நினைப்பது என்னவென்றால்', 'எனக்கு இப்போது இப்படித் தோன்றுகிறது' என்ற வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தார். இது நல்ல பலனைக் கொடுத்தது. விவாதங்களை இதன் மூலமாக நிறுத்திய அவர் அனைவராலும் போற்றப்படும் உயரிய நிலையை அடைந்தார்.

    குழந்தைகளிடம் அன்பு: அவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது குழந்தைகள் அவரது கையைப் பிடித்து முத்தமிடுவது வழக்கம். ஒருநாள் வழியிலே அவரைச் சந்தித்த குழந்தை ,"ஐயா! கடவுளை எங்கே காண முடியும்? நீங்கள் தான் பெரிய மேதை ஆயிற்றே! எனக்கு வழியைச் சொல்லுங்கள்" என்று கேட்டது.

    பிராங்க்ளின் புன்னகை புரிந்தார். ஒளிவெள்ளம் பாய்ச்சும் ஆகாயத்தைச் சுட்டிக்காட்டி, "அதோ பிரகாசிக்கிறதே, அந்த சூரியனைக் கொஞ்சம் பாரேன்" என்றார். அந்தக் குழந்தை பார்க்க முயன்றது. ஆனால் உடனே கையால் கண்களை மூடிக்கொண்டு, "சூரிய வெளிச்சத்தை என்னால் தாங்க முடியவில்லை' என்று கூறியது.

    பிராங்க்ளின், "என் அருமைச் செல்வமே! இறைவனைக் கண்ணால் பார்க்க முடியாது. சூரியன் எப்படி வெப்பம், ஒளி இவற்றின் மூலமாக இருக்கிறதோ அது போல முடிவற்ற நல்லனவற்றின் தொகுப்பு தான் இறைவன். எல்லையற்ற பேரறிவே இறைவன். நன்றாக ஆராயத் துவங்கு. உனது ஒவ்வொரு நாளும் நல்ல தன்மையால் மெருகு பெறும். அப்போது இறைவனின் சாந்நியத்தை உணர்வதோடு உனது ஆத்மாவே இறைவனின் பிரதிபிம்பம் என்பதை உணர்வாய்" என்றார்.

    விஞ்ஞானி பிராங்க்ளின்: இயல்பாகவே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட பிராங்க்ளின் அச்சகத்தில் நிறைய மாற்றங்களைச் செய்தார். உலோகத்தினால் செய்யப்படும் நாணயங்களில் போலி நாணயங்கள் அதிகரிப்பதை எண்ணி, பேப்பரில் நோட்டுகளை அடிக்கும் புதிய வழியை அவர் ஆதரித்தார். இதற்காக புதிய பேப்பரையும் புதிய மையையும் தயாரித்தார். 1729-ம் ஆண்டு பேப்பர் கரன்சியைத் தயாரித்தார். ஒரு பட்டத்தை இரும்புத்தடி ஒன்றுடன் பறக்கவிட்டு மின்னலில் மின்சாரம் இருப்பதைக் கண்டறிந்தார். மின்சாரத்தில் பாசிடிவ், நெகடிவ் என்ற வார்த்தைகளை முதலில் அறிமுகப்படுத்தியவர் அவரே. ஜனத்தொகை கணக்கெடுப்பை முதலில் ஆரம்பித்தவர் அவரே. அதே போல கடல் சம்பந்தமான பல ஆய்வுகளை ஆரம்பித்தவரும் அவரே.

    மறைவு: நடு வயதில் இருந்தே பிராங்க்ளினுக்கு உடல் பருமன் ஒரு பிரச்சனையாக இருந்தது. கீல் வாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் 1787-ல் அமெரிக்க சட்டம் கையெழுத்திடப்படும் போது உடல் நிலைமை மோசமாக ஆகவே வெளியுலகில் வருவதைத் தவிர்த்தார்.

    1790, ஏப்ரல் 17-ம் நாளன்று நுரையீரல் உறை வீக்கத்தால் மரணமடைந்தார். இறக்கும்போது அவரது மகள் சற்று ஒருக்களித்துப் படுக்குமாறு கூறியபோது "இறக்கும் ஒரு மனிதனுக்கு எதுவும் சுலபமில்லை" என்று கூறியவாறே உயிர் துறந்தார்.

    நமக்கென ஒரு வெற்றித் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அதை வகுத்து, கடைப்பிடித்து வெற்றி கண்ட பிராங்க்ளின் வெற்றிக்கு ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமே இல்லை!

    தொடர்புக்கு:-

    snagarajans@yahoo.com

    • ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது பித்ரு தோஷமாகும்.
    • ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடம் வாய், உண்ணும் உணவு இவைகளை குறிக்குமிடம்.

    பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன முன்னோர்கள் அனைவரும் பித்ருக்களாவார்கள். தந்தை வழியில் இறந்து போன முன்னோர்கள் அனைவரும் பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன முன்னோர்கள் அனைவரும் மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். ஒருவருக்கு உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் பித்ருக்கள் அளித்தது. முன்னோர்கள் வழங்கிய உடல், உயிர் பொருட்களுக்கு நன்றி தெரிவிக்க தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோர்கள் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் ஆன்மப் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

    முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் தீர்த்தல் எனப்படுகிறது. பித்ருக்கள் தான் ஒருவருக்கு கடவுளரின் அருளையும் ஒருவரின் வேண்டுதல்களையும், விருப்பங்களையும் எளிதில் பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். எனவே தனது வாரிசுகள் மீது அதீத அக்கறை கொண்ட பித்ருக்களை வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் தனது வாரிசுகளின் இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமல் இருந்தால் பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர். பித்ருக்களின் கோபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. எனவே அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதிப்படுத்த வேண்டும்.

    ஒரு ஜாதகத்தில் சூரியன் பிதுர்காரகன், சந்திரன் மாதுர்காரகன். ஒரு ஜாதகத்தில் ஒன்பதாம் பாவகம் எனும் பாக்கிய ஸ்தானம் முன்னோர்கள் செய்த நல்வினை, தீவினைப் பயனை குறிக்குமிடம். இந்த ஒன்பதாம் பாவகத்தில் சனி, ராகு, கேது மற்றும் ஒன்பதாம் அதிபதி நீசம், ஒன்பதாம் அதிபதியுடன் ராகு, கேதுக்கள் மிக நெருக்கமாக இணைந்து பலம் இழக்க வைத்திருப்பது, ஒன்பதாம் அதிபதி பாவ கர்த்தாரி தோஷத்தில் இருப்பது, பித்ரு காரகனாகிய சூரியன் ராகு, கேது சனியுடன் சேர்ந்து இருப்பது, அது போல், மாத்ரு காரகன் எனப்படும் சந்திரன் ராகு, கேது, சனியுடன் சேர்ந்து இருப்பது, மட்டுமல்லாமல், ராகு, கேதுக்கள் சூரிய, சந்திரனுடன் நெருக்கமான இணைவில், கிரகண தோஷத்தில் இருந்தால், கடுமையான பித்ரு, மாத்ரு தோஷம் உண்டு. சூரியன், சந்திரனுக்கு சனி சம்பந்தம் இருப்பதும் சூரிய, சந்திரன், சனி, ராகு கேதுவின் நட்சத்திரத்தை பெறுவதும் பித்ரு தோஷமாகும். ஒன்பதாம் பாவகத்தில் சூரியன், சந்திரன் உடன் சனி அல்லது ராகு கேதுக்கள் இணைந்தால், கடுமையான பித்ரு தோஷம் மற்றும் மாத்ரு தோஷமாகும்.

    மேலே கூறிய அனைத்தும் எத்தனை டிகிரியில், சூரியன் சந்திரனோடு பாவ கிரகங்களான, சனி, ராகு கேது இணைந்து உள்ளன என்பதை பொறுத்து தோஷத்தின் வீரியம் மாறுபடும். பித்ரு தோஷம் மற்றும் மாத்ரு தோஷம் இரண்டும் ஒருங்கே அமையப் பெற்ற ஜாதகர்கள், வாழ்க்கையில் நல்லது நடக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது பித்ரு தோஷமாகும். இந்த தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் தொடர் வறுமை, படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கையில் பிரச்சினை, குழந்தையின்மை, குழந்தைகளால் பிரச்சனை, கடன் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டே இருக்கும். பிதுர் தோஷம் நீங்காமல் எந்த பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் மன சஞ்சலம் அதிகமாகும்.

    1.பித்ரு தர்ப்பணம் (தை 26, தை அமாவாசை- 9.2.2024, வெள்ளிக்கிழமை)

    அமாவாசை தினம் பித்ரு தோஷத்தை நீக்குவதில் மிகவும் சிறப்புடையது. அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலனைத் தரும். மேலும் மூதாதையர்களின் நல் ஆசியும் கிடைக்கும்.

    அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது. மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்த போது, அவர்களை சரிவர கவனிக்காததால், ஒருவர் அடையும் துன்பங்கள்யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். பித்ரு கடன் முறையாக தீர்க்கும் சந்ததியருக்கு பித்ருக்கள்

    தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது.

    மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

    2. அன்னதானம்

    தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால் தான் கிருஷ்ண பகவான் கீதையில், "எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக் கொள்ளமாட்டார் என்கிறார்". அன்னதானத்தில் தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும். என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும், அவனால் ஒரு அளவிற்கு மேல் சாப்பிட முடியாது. ஒருவர் எதை தானமாக பெற்றாலும் கிடைக்காத ஒரு மன நிறைவை உணவு தானம் ஏற்படுத்துகிறது.

    ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடம் வாய், உண்ணும் உணவு இவைகளை குறிக்குமிடம். இந்த ஜென்மத்தில் பெற்றோர் இட்ட அன்ன ஆகாரங்களை சாப்பிடுவதால், ஏழு ஜென்மத்திற்கும் அவர்களுக்கு கடன்பட்டவர்களாக ஆகிவிடுகிறோம். இதன் அடிப்படையிலேயே பித்ரு வழிபாட்டில் சோற்றுப்பிண்டம் வைக்கப்படுகிறது.. கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும் என்பது சான்றோர் வாக்கு. ஒருவர் செய்யும் தான தர்மம் குறிப்பாக உணவு. உடை மறைந்த முன்னோர்களின் நல்லாசிகளைப் பெற்றுத் தரும்.

    எனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போது குறிப்பாக சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் இயன்ற உணவு தானம் வழங்க வேண்டும். அதுவும் மனிதனின் அன்றாட தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு வழங்குவது சிறப்பு. ஆதரவற்ற முதியோர்களுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவை வழங்க வேண்டும். அத்துடன் குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு இளம் சிறார்கள் உண்ண விரும்பும் உணவை தானம் வழங்க வேண்டும். நாம் விரும்பும் உணவை தானம் தருவதை விட அவரவரின் வயதிற்கும் மன நிலைக்கும் ஏற்ப உணவைத் தானம் தருவதால் எளிதில் பித்ரு தோஷம் விலகும். உணவு தானம் எளிதில் பித்ரு தோஷ தாக்கத்தை குறைக்கும் பரிகாரமாகும்.

    3. ஆசிர்வாதம்

    உலகில் ஒரு பிரிவினர் மிகுதியானக எப்பொழுதும் மிகுதியான சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள் ஒரு சிலர் மிகுந்த துக்கத்துடன் எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என்ற கேள்வியுடன் வாழ்கிறார்கள். இது போன்ற மாறுபட்ட இரண்டு நிலைகளுக்கும் காரணம் ஒருவர் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற ஆசிர்வாதம். வாழ்க்கை செழுமையாக பிறருக்கு உதவும் விதத்தில் உள்ளது என்றால் குடும்பத்தினரால், பெரியோர்களால், உற்றார்களால் உறவினர்களால், நண்பர்களால் அன்றாடம் சந்திக்கும் நபர்களின் ஆசிர்வாதம் பெற்றவர் என்று பொருள். ஏன் பிறந்தோம் பூமியில் என்று வறுமையுடன் பிறரிடம் கையேந்தும் நிலையில் வாழ்ந்தால் பிறரின் ஆசீர்வாதம் நிறையப் பெற வேண்டியவர் என்று பொருள்.

    தமிழர்களின் கலாச்சார வழக்கத்தில் ஒன்று ஆசீர்வாதம், வாழ்த்தைப் பெறுதல். ஆசி' என்பது ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி. ஒருவரின் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உதவும் சக்தி. தனது செய்கையால் பிறரின் மன சந்தோஷத்தை அதிகரித்தால் ஆசி எனும் சக்தி உங்களைத் தேடி வரும்.

    எனவே முடிந்தவரை பிறரின் மனம் நோகும்படி செயல்படக் கூடாது. எதிர்வரும் தை 26, தை அமாவாசை 9.2.2024 வெள்ளிக்கிழமை அன்று தாய், தந்தை, தாத்தா, பாட்டி, குருமார்கள், சித்தர்கள், வயது முதிர்ந்தவர்களிடம் ஆசி பெற வேண்டும். குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், இவ்வுலகில் பிறப்பதற்கே அவர்கள்தான் காரணம். எனவே நாம் இருப்பதற்கு மூலகாரணமான அவர்களை வணங்கி ஆசி பெறுவது மிகச் சிறப்பு. சித்தர்களை ஜீவ சமாதியிலும் வழிபடலாம். ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம், மாத்ரு தோஷம் மட்டுமல்ல அனைத்து தோஷங்களும் விலகும்.

    தாய், தந்தையின் மரபணுவில் உருவாகுவதே குழந்தை. முன்னோர்களின் மரபணுவில் தோன்றிய ஒருவர் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும் , சாந்தி அடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

    • சீதையை மீட்க இலங்கை சென்ற போது ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
    • வெள்ளிக்கிழமைகளில் பாம்பை அடித்து கொல்பவர்களை இந்த தோஷம் மிக கடுமையாக பாதிக்கும்.

    தோஷங்களில் பிரம்மஹத்தி தோஷம் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாகும். மிக மிக கொடுமையான பாவங்கள் செய்தவர்களைதான் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கொலை செய்பவர்களை இந்த தோஷம் ஜென்ம ஜென்மமாக விரட்டும் என்று சொல்வார்கள்.

    பிரம்மன் உருவாக்கிய உயிரை துன்புறுத்தி பறிக்கும்போது இந்த தோஷம் தலை முறைகளை கடந்தும் தொடர்ந்து விரட்டும் என்று சொல்வார்கள். பிரம்மனின் தலையை துண்டித்ததால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மகிஷாசுரன் என்ற அரக்கனை கொன்றதால் சப்தகன்னியர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    சீதையை மீட்க இலங்கை சென்ற போது ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டது. பாண்டிய மன்னர்களில் ஒருவரான வரகுண பாண்டியன் அறியாமல் வீரசேனன் என்ற பிராமணரை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற் பட்டது.

    இவர்கள் எல்லாம் பரிகாரம் செய்து பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார்கள். ராமர் ராமேசுவரத்தில் வழிபாடு செய்து தனது தோஷத்தை போக்கி கொண்டார். வரகுண பாண்டிய மன்னன் திருவிடை மருதூர் ஆலயத்தில் பூஜைகள் செய்து பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டியடித்தார்.

    கொலைப்பழியால் மட்டுமே பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும் என்று நினைக்காதீர்கள். தீராத பாவங்கள் என்ன செய்தாலும் இந்த தோஷம் உடனே பிடித்து தொங்கிக்கொண்டு வந்து விடும். பெற்ற தாய்-தந்தைக்கு உணவு கொடுக்காமல் துன்புறுத்துபவர்கள், பெற்றோரை வீட்டை விட்டு விரட்டுபவர்கள், பசுக்களை துன்புறுத்தி கொல்பவர்கள், உதவி செய்தவர்களுக்கு துரோகம் செய்பவர்கள், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களை அலட்சியம் செய்பவர்கள், கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள், நன்றி மறந்து துன்பத்தை விளைவிப்பவர்கள் போன்றவர்களுக்கு கண்டிப்பாக பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும்.

    சிலர் இளம் வயதில் காதல் வயப்பட்டு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்கி றேன் என்று சொல்லி விட்டு ஏமாற்றினாலும் இந்த தோஷம் வரும். கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களையும் இந்த தோஷம் தாக்கும். சிலர் கடுமையாக வேலை வாங்கி விட்டு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவார்கள் அத்தகையவர்களையும் இந்த தோஷம் பாதிக்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் பாம்பை அடித்து கொல்பவர்களை இந்த தோஷம் மிக கடுமையாக பாதிக்கும். பொதுவாக பிரம்மஹத்தி தோஷம் பாதிக்கப்பட்டதை பெரும்பாலானவர்கள் உணருவது இல்லை. பிரம்மஹத்தி தோஷம் என்பது ஒவ்வொரு வகையிலும் பாதிப்புகளை வாழ்க்கையில் கொடுத்து கொண்டே இருக்கும். மிக கொடிய பாவங்கள் செய்து பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர் களுக்கு வாழ்க்கையில் நிழல் போல பிரச்சினைகளும் இருந்து கொண்டே இருக்கும்.

    மனைவியால் நிம்மதி இருக்காது அல்லது குழந்தைகளால் பிரச்சினை வரும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். கல்வியில் மேம்பாடு இருக்காது. குலதெய்வத்தால் உரிய உதவிகள் கிடைக்காது. சிலருக்கு திறமைகள் இருந்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. இவை யெல்லாம் பிரம்மஹத்தி தோஷத்தால் வரும் இடையூறுகள் ஆகும்.

    ஜாதக ரீதியாக ஆய்வு செய்து பார்த்தால் ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து பார்த்தாலும் அல்லது குருவின் சாரத்தில் சனியும், சனியின் சாரத்தில் குருவும் இருந்தாலும் அது பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படும்.

    சனியும், குருவும் ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் அமைந்தாலே அதை கண்ணை மூடிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷக்காரர் என்று சொல்லி விடுகிறார்கள். குறிப்பாக ராகு இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9-ம் வீட்டில் சனியும், குருவும் சேர்ந்து இருந்தால் கடுமையான பிரம்மஹத்தி தோஷத்துக்கு உரியவர் என்று ஜோதிட உலகம் சொல்கிறது.

    இதற்காக கவலைப்படவோ, பயப்படவோ வேண்டிய அவசியம் இல்லை. எல்லா வற்றுக்கும் பிரார்த்தனையும், பரிகாரங்களும் இருப்பது போல பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டி அடிக்கவும் பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை எந்த ஆலயத்துக்கு சென்று எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதுதான் முக்கியமானதாகும்.

    பொதுவாக பிரம்மஹத்தி தோஷம் இருப்ப தாக சொல்லப்பட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள ஆலயங்க ளுக்கு சென்று வழிபாடு செய்தாலே போதும். வழிபாடு முடிந்ததும் எவ்வளவு ஏழைகளுக்கு உங்களால் அன்னதானம் செய்ய முடியுமோ அதை செய்யலாம். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் ஆலய வழிபாடு முடிந்த பிறகு உடைகள் வாங்கி கொடுத்து ஆசி பெறுவது பிரம்மஹத்தி தோஷத்தை விரட்ட உதவும்.

    பொதுவாக பிரம்ம ஹத்தி தோஷம் என்றதும் அனைத்து ஜோதி டர்களுமே திருவிடை மருதூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய் யும்படி சொல்வார்கள். இந்த ஆலயத்துக்கு வழிபாடு செய்ய செல்பவர்கள் தலைவாசல் வழியாக சென்று வழிபாடுகள் செய்துவிட்டு ஆலயத்தின் பின்புற வாசல் வழியாக வெளியேற வேண்டும் என்பது ஐதீகமாகும். இந்த வழிபாடு மூலம் பிரம்மஹத்தி தோஷம் திருவிடைமருதூர் ஆலயத்தின் தலை வாசலிலேயே தடைபட்டு நின்று விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் ராமபிரான் கடலுக்கு அடியில் உருவாக்கிய நவக்கிரகங்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடுகள் செய்தால் இந்த தோஷம் நீங்கும் என்கிறார்கள். ராமேசுவரம் கடலில் நீராடி ஆலயத்துக்குள் இருக்கும் 22 தீர்த்தங்களில் குளித்து வழிபாடுகள் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி பலன் கிடைக்கும். அதுபோல ராேமசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாமகுடேஸ்வரர் கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி அந்த தலத்து ஈசனை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்கிறார்கள்.

    இந்த தலத்தில்தான் ராமர் தனது தோஷத்தை போக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சீர்காழிக்கு அருகே திருமுல்லைவாசல் என்று அழைக்கப்படும் ஊரில் இருக்கும் முல்லை வனநாதரை வழிபட்டாலும் பிரம்மஹத்தி தோஷம் விலகுவதாக சொல்கிறார்கள்.

    காஞ்சீபுரம், திருப்புல்லானி, திருவண்ணா மலை, மதுரை, ஸ்ரீவாஞ்சியம், பிரம்மதேசம், மேல்மலையனூர், கோவை மஞ்ச நாயகனூர் அமணீஸ்வரர், சிவ கங்கை திருப்பாசேத்தி திரு நோக்கிய அழகியநாதர், அரியலூர், கீழபழுவூர் ஆலந்துறையார், தஞ்சை கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர், திருவாரூர் கோட்டூர் கொழுந்தீஸ்வரர், வேதாரண்யம் திருமுறை காடர் ஆகிய ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் எளிதில் நீங்கும்.


    இந்த ஆலயங்களுக்கு செல்ல இயலாது என்று நினைத்தால் கவலையே வேண்டாம் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று மாலை 5 மணிக்கு 9 சுற்றுகள் சுற்றி வந்து வழிபடுவது நல்லது. 9 அமாவாசை நாட்களில் வழிபாடுகள் செய்வது மேலும் நல்லது. இந்திரன், வரகுண பாண்டியன் ஆகியோர் இப்படி சிவபெருமானை வழிபட்டுதான் தங்களது பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொண்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

    ஆலயங்களுக்கு செல்ல விருப்பம் இல்லாதவர்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று வயதானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கலாம். வாழ்நாள் முழுக்க அவர்களுக்கு தேவையான உணவு, உடை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது ஆசியை பெற்றாலே பிரம்மஹத்தி தோஷம் தானாக விலகும் என்று புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

    எனவே பிரச்சினைகள் தரும் பிரம்மஹத்தி தோஷத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பிறகு அது எந்த அளவுக்கு தோஷமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங் கள். அதை 3 வகைகளில் நிவர்த்தி செய்யலாம் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பூஜைகள், வழிபாடுகள் செய்தால் பலன்களை பெற முடியும்.

    • தனிமை, அதிகம் வேண்டாத விஷயங்களில் இருந்து ஒருவரை காப்பாற்றும்.
    • அன்பு அமைதியான ஆறு போல் செல்ல வேண்டும்.

    நடக்கப் போவதினை முன் கூட்டியே கூறும் மகான்களையும் நமக்கு மட்டுமே புரியுமாறு உணர வைக்கும் பல மகான்களையும் நான் பார்த்துள்ளேன். இவர்கள் துறவியாகவும் இருப்பார்கள். சிலர் குடும்பத்தோடு இயல்பான வாழ்க்கை முறையிலும் இருப்பார்கள்.

    ஆச்சர்யப்பட முடிந்தது. அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்து கொள்ள முடிய வில்லையே என்ற ஏக்கம் என்னை தேடி தேடி அலைய வைத்தது. பல நம் நாட்டு, வெளிநாட்டு புத்தகங்களைப் படித்தேன். இந்த பிரிவில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் கூர்ந்து கவனித்தேன். (அனைவரையும் பகவான் ரமண மகிரிஷி போல பர்க்கக் கூடாது. அவர் இப்பூவுடலை விட்டு ஒளியாக வானில் சென்றதை எனது பாட்டி அதிகம் கூறுவார். அந்த அளவு சக்தியினை உடனடியாக யதார்த்த வாழ்க்கையில் பெற முடியாது).

    மனதினை அடக்கும் சக்தி கொண்டவனால் மட்டுமே இந்த பிரிவில் முன்னேற முடியும் என்பதனை நன்கு உணர்ந்தேன். மனதினை அடக்க வாய் முதல் முக்கியம். அளவான, சாத்வீக உணவு இருக்க வேண்டும். பிடித்த உணவு என்று எதுவும் இருக்கக் கூடாது. பேச்சு என்பது மிக அவசிய தேவைக்கே. அளவாக இருக்க வேண்டும். வாய் பேசாது மனம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அதில் பயனில்லை. இதனைத்தான் மனதினை ஒரு முகப்படுத்துதல். மூக்கினை கவனித்தல், புருவ மத்தியில் கவனம் செலுத்துதல் என்கிறோம். ஜபங்கள் சொல்வதினை சிலர் பின் பற்றுவர். நாளடைவில் ஜபம் அடங்கி மவுனம் பெற வேண்டும். இதன் முயற்சியாக யோகா, பிராணயாமம் என செய்தாலும் சிலவற்றினை ஒருவர் கடை பிடிக்க வேண்டும்.

    * தனிமை, அதிகம் வேண்டாத விஷயங்களில் இருந்து ஒருவரை காப்பாற்றும்.

    * இந்த காலத்திற்கு அவசியம் கூற வேண்டிய ஒன்று செல்போன். தொலைக்காட்சி இவைகளை அதிகம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

    * அன்றாட உடற்பயிற்சி அவசியம். ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டுமல்ல சாதாரண வாழ்க்கை என்று வாழும் மக்கள் கூட சிலவற்றினை கடைபிடிக்க வேண்டும்.

    * வெறித்தனமான அன்பு யார் மீதும் வைக்க வேண்டாமே. இது அநேக தாய்மார்களிடம் இருக்கின்றது. தன் மூச்சு காற்றில் பிள்ளையைவாழ வைக்க முயல்வார்கள்.

    அடுத்து தம்பதியினர், காதலர்கள் என்பவர்கள் இந்த பிரிவில் இருப்பார்கள்.

    இப்படிப்பட்ட அன்பு பெரும்பாலும் ஏதோ ஒரு பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது.

    அன்பு அமைதியான ஆறு போல் செல்ல வேண்டும். காட்டாற்று வெள்ளம் போல் இருக்கக் கூடாது.

    இது மன நல பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. எதிலும் அதிக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தவித்து போவீர்கள். உங்கள் தேவையினை முடிந்தவரை விடியற்காலை நேரத்தில் இறைவனிடமோ, பிரபஞ்சத்திடமோ வேண்டி சொல்லி விடுங்கள். தினமும் காலை வேளையில் இதனைச் செய்யலாம். இந்த அளவே போதும்.

    இயல்பான வாழ்க்கை மேற்கொள்பவர்களுக்கும் அன்றாடம் பிரச்சினைதான். எத்தனை முயற்சி செய்தாலும் மன உளைச்சல் நாளும் கூடிக் கொண்டுதான் இருக்கின்றது. இவர்கள் முடிந்தால் கீழ்க்கண்டவாறு முயற்சிக்கலாம்.

    கமலி ஸ்ரீபால்

    கமலி ஸ்ரீபால்

    இரவில் ஓர் அறையில் கண்ணாடி முன் அமர்ந்து என்னால் முடியும். நான் பல நல்ல செயல்களை செய்வேன். அதற்கான ஆற்றல் என்னிடம் உள்ளது. நான் என்னை நேசிக்கின்றேன் என்று சில நிமிடங்கள் சொல்லலாம். இம்முறையினை வெளிநாடுகளில் மனஉளைச்சல் மன அழுத்தம் நீங்க வேண்டி பயிற்சி அளிக்கின்றனர்.

    ஆஞ்சநேயர் மகிமை: ஆஞ்சநேய பக்தர்கள் நம் நாட்டில் மிக அதிகம் எனலாம். 'ஸ்ரீராமஜெயம்' 'ராமா ராமா' என்று சொல்லும் இடத்திலும் கண்டிப்பாய் ஆஞ்சநேயர் இருப்பார் என்ற நம்பிக்கை உண்டு. பிரம்மசர்யமும், தீவிர ராம பக்தியும் கொண்ட சிரஞ்சீவி தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை, வியாழக்கிழமைகளில் வெற்றிலை மாலை, துளசி, வெண்ணை, வடை மாலை இப்படி முடிந்ததை அர்ப்பணித்து நெய் விளக்கு ஏற்றி வழிபட நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன எனப்படுகின்றது. அனுமான், பஜ்ரங்பாலி, மாருதி என்று பல பெயர்களில் அன்பாய் அழைக்கப்படுபவர்.

    கதை தூக்கி, வால் உயர்த்தி இருக்கும் ஆஞ்சநேயரை வீர ஆஞ்சநேயர் என்பர்.

    ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு உள்ளவர்களை சனீஸ்வர பகவான் அதிகம் பிடிக்க மாட்டார் என்பது உறுதியான நம்பிக்கையாக விளங்குகிறது.

    இதில் பன்முக ஆஞ்சநேயர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பஞ்ச முகம் என்பது என்ன?

    வானரம், ஆஞ்சநேயர் நரசிம்ஹர், கருடன், ஹயக்ரீவர் (குதிரை முகம்) வராஹம் என ஐந்து முகங்களை கொண்டவர்.

    இவர் எப்படி உருவாகினார்?

    ராமருக்கும் ராவணுக்கும் யுத்தம் நடந்து கொண்டு இருந்தது. ராவணன் பக்கம் அதிக இழப்புகள், ராவணன் மனம் கலங்கினார். உடனே அவன் பாதாள உலக அரசனான மயில் ராவணனை வரவழைத் தான். மயில் ராவணன் பிரம்மனை குறித்து தவம் புரிந்தான். கடும் தவம் புரிந்தான்.

    மயில் ராவணனிடம் ராவணன் தான் படும் திண்டாட்டத்தினை கூறினான். ராம, லட்சுமணரை அழித்து விடும்படி வேண்டினான். மயில் ராவணன் தன் அகந்தையால் ராவணனுக்கு கண்டிப்பாய் உதவுவேன் என கூறி தன் மாயாஜால சக்தியால் ராம லட்சுமணரை பாதாள லோகத்திற்கு கடத்திச் செல்ல முன் வந்தான்.

    இந்நிகழ்வினை அறிந்த சுக்ரீவன் ராமலட்சுமணரை காக்க வேண்டி அனுமரை அனுப்பி வைத்தான். அனுமர் ராம லட்சுமணன் உள்ள இடத்தினை கண் சிமிட்டாமல் பாதுகாத்தார்.

    மயில் ராவணன் தந்திரங்கள் நிறைந்தவர். அவ்வாறு தன்னை விபீஷனர் போல் உருமாற்றிக் கொண்டான். அனுமரிடம் தான் ராம லட்சுமணர்களை பார்க்க விரும்புவதாகக் கூறினான். அனுமரும் அனுமதித்தார். உள்ளே சென்ற மயில் ராவணன் தன் தந்திரத்தால் ராம லட்சுமணர்களை சிறு உருவங்களாக மாற்றி தன்னுள் மறைத்து வெளி வந்து விட்டான்.

    ராம லட்சுமணர்களை பாதாள லோகத்தில் சிறை வைத்தான்.

    சிறிது நேரத்தில் உண்மையான விபீஷனர் வந்து அனுமனை சந்திக்க அனுமன் ஆச்சரியப்பட்டார். 'இப்போது தானே வந்து போனீர்கள்' என அனுமன் கேட்க விபீ ஷணரோ 'இல்லையே நான் இப்பொழுது தானே வருகின்றேன்' என்று சொல்ல இருவரும் உள்ளே சென்று பார்க்க ராம லட்சுமணர் அங்கு இல்லை.

    ஆஞ்சநேயர் பாதாள லோகத்திற்கு சென்று அங்கு உள்ள காளி தேவியின் பின்னே மறைந்து கொண்டார். மயில் ராவணன் ராம, லட்சுமணரை பலி கொடுக்க அங்கு வந்தான். அங்கிருந்த ராம, லட்சுமணர்கள் மயில் ராவணனுடன் போர் புரிய அனுமன் மயில் ராவணனின் உயிர் மூலாதாரமான ஐந்து கண்களைத் தேடி புறப்பட்டார். விபீஷணர் சொன்னபடி ஏழு கடல்கள் கடந்து அங்குள்ளவர்களுடன் கொண்ட பெட்டியை தூக்கி வந்தார். ஐந்து வண்டுகளையும் ஒரு சேர கொண்டுவந்தால் தான் மயில் ராவணன் அழிவான். இதுதான் அவன் பிரம்மனிடம் பெற்ற வரம். இது நடக்கவில்லை என்றால் எதிராளி மடிவார்.

    இதனை இறை சக்தியால் உணர்ந்த அனுமன் பஞ்சமுகங்கள் கொண்ட உரு எடுத்து ஒரே நேரத்தில் ஐந்து வண்டுகளையும் அழித்தார். மயில் ராவணனும் அழிந்தார்.

    இதனை கற்பனை எனலாம். நிஜம் எனலாம். ஐம்புலன்களை அடக்கி ஆன்மீக முன்னேற்றம் அடைய விரும்புவோர் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு என்பர். ஒன்றை மட்டும் அனைவரும் உணர வேண்டும். அரக்க குணங்களை அழிப்பது என்பதற்கு படாதபாடு, விடா முயற்சி என்பது அவசியம் என்பதனை மயில் ராவணன்-அனுமன் நிகழ்வு உணர்த்துகிறது.

    • தப்பாக தைத்து தந்த ஜாக்கெட்டை காட்டித்தான் நான் அவரிடம் பேச வேண்டும்.
    • நான் எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் உண்மையில் மனதளவில் நான் ஒரு குழந்தை மாதிரி தான்.

    ஜாக்கெட்டில் கையை எந்த இடத்தில் வைத்து தைக்க வேண்டுமோ அப்படி இல்லாமல் அதற்கு பதிலாக முன் பகுதியில் வைத்து தைத்து இருந்தது.

    அப்படி ஒரு ஜாக்கெட்டை என் கையில் தந்து அதை விரித்து காட்டி டெய்லரிடம் சில டயலாக் பேச சொன்னார்கள்.

    'மருமகன்' படத்தில் இப்படி ஒரு காட்சி. இதில் டெய்லர் பாத்திரத்தில் கதாநாயகன் கார்த்திக் சார் நடித்திருப்பார். அவர் தப்பாக தைத்து தந்த ஜாக்கெட்டை காட்டித்தான் நான் அவரிடம் பேச வேண்டும்.

    ஜாக்கெட்டையும் பார்த்தேன். எனக்கு தரப்பட்ட டயலாக்கையும் படித்து பார்த்தேன். இதை கார்த்திக் சாரிடம் நான் பேச வேண்டுமா?.

    அந்த காட்சி எனக்கு பிடிக்கவில்லை. ஆபாசமாக தெரிந்தது. பேசுவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால் அதை எப்படி தவிர்ப்பது? யாரிடம் சொல்வது? என்று புரியாமல் ஒரே குழப்பம். ரொம்ப தர்ம சங்கடமாக இருந்தது.

    எனது குழப்பத்தை என் முகமே காட்டி கொடுத்து இருக்க வேண்டும். அதனால் தான் கார்த்திக் சார் என்னை பார்த்ததும் 'ஓய் யூ ஆர் டல்' என்றார்.

    நான் அவரிடம் விவரத்தை சொல்லி அசிங்கமாக இருக்கு சார். எனக்கு பிடிக்கவில்லை என்றேன்.

    உனக்கு பிடிக்கவில்லை என்றால் டைரக்டரிடம் போய் சொல்ல வேண்டியது தானே என்றார்.

    அந்த காலத்தில் நான் எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் உண்மையில் மனதளவில் நான் ஒரு குழந்தை மாதிரி தான். எதற்கெடுத்தாலும் பயம், தயக்கம் இருக்கும். அந்த குணத்தை என்னிடம் இருந்து மாற்றவே முடியவில்லை.

    கார்த்திக் சார் 'போ... போய் சொல்லு' என்று தைரியமாக சொல்லிவிட்டார். ஆனால் எனக்கு அந்த தைரியம் வரவில்லை. டைரக்டரிடம் போய் காட்சி பிடிக்கவில்லை. மாற்றுங்கள் என்று சொல்வார்களா? சொன்னால் கேட்பார்களா? தப்பாக எடுத்துக் கொள்வார்களா என்று ஒரே தயக்கம்.

    சொல்லலாமா... வேண்டாமா... என்று முழித்து கொண்டிருந்தேன். கார்த்திக் சார் தான் மீண்டும் போ.. போய் சொல்லு என்று வலுக்கட்டாயமாக என்னை தள்ளிவிட்டார்.

    டைரக்டர் மணிவாசகம் சார். சற்று தூரத்தில் இருந்தார். உதவி டைரக்டர் அருகிலேயே நின்றார். அவரிடம் போய் சொன்னேன்.

    அவர் டைரக்டரிடம் போய் 'மீனா, இந்த காட்சியை நடிப்பதற்கு அசவுகரியமாக நினைக்கிறார். உங்களிடம் நேரில் சொல்ல தயங்குகிறார்' என்று கூறி இருக்கிறார்.


    அதை கேட்ட மணிவாசகம் சாரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதற்கு என்ன? ஹீரோயினுக்கு பிடிக்கவில்லை என்றால் காட்சியை மாற்றி விடுவோம் என்று கூறி அந்த காட்சியையே தவிர்த்துவிட்டார்.

    ஓ... இந்த மாதிரி நமக்கு பிடிக்காத காட்சிகள் என்றால் டைரக்டரிடம் போய் சொல்லலாம் போல... என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன்.

    மருமகன் படத்தில் தான் முதல் முதலாக எனக்கு கார்த்திக் சாருடன் அறிமுகம். அந்த காலகட்டத்தில் அவர் உச்சத்தில் இருந்தார். எனவே எப்படி பழகுவார் என்ற சந்தேகம் இருந்தது.

    ஆனால் நான் எதிர் பார்த்ததை விட ரொம்பவே ஜாலியானவர். 'மருமகன்' படத்துக்கு கால்ஷீட் கொடுக்கவே சிரமப்பட்டேன். அந்த அளவுக்கு தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தேன். சொல்லப்போனால் அப்போது உட்கார நேரமில்லாமல், சாப்பிட நேரமில்லாமல், தூங்க முடியாமல் ஓடிக்கொண்டிருந்தேன்.

    அதிகாலை வரை ஷூட்டிங் நடக்கும். அப்புறமாக அறைக்கு வந்து மேக்கப்பை கலைத்து விட்டு தூங்குவதற்கு 4 மணி வரை ஆனதுண்டு.

    மீண்டும் 6 மணிக்கே ஷூட்டிங் செல்ல எழுப்பி விடுவார்கள். தூக்கம் கண்ணை சொக்கும். மருமகன் ஷூட்டிங் பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் நடந்தது.

    சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றேன். அந்த ஒரு மணி நேரத்தில் நன்றாக தூங்கி விட்டேன்.

    விமானம் தரையிறங்கிய பிறகு கோவை வந்துவிட்டது என்று தட்டி எழுப்பிவிட்டார்கள். அப்புறம் அங்கிருந்து பொள்ளாச்சிக்கு 2 மணி நேரம் கார் பயணம். அதிலும் ஒரு தூக்கம். 24 மணி நேரம் வரை தூங்காத நாட்களும் உண்டு. தொடர்ந்து 2 நாட்கள் கூட தூங்காத நாட்களும் உண்டு. இப்படித்தான் ஒவ்வொரு நாளும் நகர்ந்தது.

    பொள்ளாச்சி

    இயற்கை எழில் நிறைந்த பகுதி. அந்த காலத்தில் வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் அரிதானது. பெரும்பாலும் பொள்ளாச்சி, கோபிசெட்டி பாளையம், ஊட்டி பகுதிகளில் தான் படப்பிடிப்புகள் நடக்கும். எங்களுக்கு வெளிநாடும் அது தான்.

    கண்ணுக்கு விருந்த ளிக்கும் வகையில் வால்பறை, பனிபடரும் பகுதி, நீர்வீழ்ச்சி, டாப்சிலிப், அணைகள் என்று படக்குழுவினருக்கு ஏற்ற இடம் அது.

    பொள்ளாச்சியில் 'சக்தி' ஓட்டல் தான் பிரபலம். சினிமா கலைஞர்கள் பெரும்பாலும் அங்குதான் தங்கி இருப்பார்கள். தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், இந்தி எனறு பல மொழிகளில் படப்பிடிப்பும் நடக்கும்.

    எப்போது பார்த்தாலும் படப்பிடிப்பு குழுவினர்கள் நிறைந்து இருப்பார்கள். அந்த ஓட்டலில் எனக்கு தனியாக ஒரு அறை ஒதுக்கி வைத்திருப்பார்கள். மற்ற அறைகளை விட அது கொஞ்சம் பெரிய அறையாக இருக்கும்.

    ஷூட்டிங் முடிந்து கிளம்பும் போதும் அடுத்த ஒரு வாரத்தில் அல்லது இந்த தேதியில் வருவோம் என்று சொல்லி விட்டுத்தான் புறப்படுவோம். அந்த அளவுக்கு பொள்ளாச்சிக்கு ராசி உண்டு.

    ஆனால் மருமகன் படத்துக்கு ராசி இல்லை. எதிர் பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது மனதுக்கு கஷ்டமாகத் தான் இருந்தது.

    ஆனால் கார்த்திக் சாருடன் நடித்த அடுத்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

    அது எந்த படம்? அப்போது நடந்த பல திகிலான அனு பவங்களை பகிர்ந்து கொள்ள மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்....)

    • காளான்களின் அமைப்பு பார்க்க குடை மாதிரி இருக்கும்.
    • அழியப் போகிற காளானுக்கு வாழ்வு வந்தால் அது அர்த்த ராத்திரியில் அதாவது நடு இரவில் முளைக்கும்.

    நான் சொல்வதுதான் சரி..

    நான் சொல்வதுதான் சரி..

    எனக்கும் மனசாட்சிக்கும் தீவிரமான வாக்குவாதம்.

    அப்படியென்னய்யா இரண்டு பேரும் சொல்றீங்கன்னுதானே கேட்கறீங்க?

    அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். இந்த வாரப் பழமொழியைப் பற்றித்தான் வாக்குவாதமே...

    இதிலென்னய்யா வாக்குவாதம்... அதான் கண்ணாலேயே பார்க்கிறோமே? நேத்து வரைக்கும் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிச்சவன் எல்லாம் ஏதோவொரு குருட்டு அதிர்ஷ்டத்திலே கார்லே போவான். ரோடு மேல ஓடறது என்னவோ காருதான். ஆனா... அவன் தலையால நடக்கிறமாதிரி ஒரு பில்டப் கொடுப்பான் பாரு... அதுதான் பழமொழிக்கு விளக்கம்.

    சரியாப்போச்சு... நம்ம பக்கத்துத் தெரு நேசமணி அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவனோட சித்தப்பா இருக்காரே... அவரு ஒரு சிக்கலில் அவனை மாட்டிவிட, அதிர்ஷ்டவசமா நம்ம நேசமணிக்கு ஒரு விளக்கு கிடைக்குது. அதைக் கையில் எடுத்து தேச்சா ஒரு பூதம் வருது... அவர் கேட்டதையெல்லாம் தருது. நம்ம நேசமணியைக் கையிலேயே பிடிக்க முடியலை. காசு, பணம், துட்டு மணி... மணின்னு கலர்கலர் காஸ்ட்யூமிலே டான்ஸ் ஆடறார்...

    சூர்ன்னு கமல் கைதட்ட உடனே அசோகன் பூதம் வேஷம் போட்டு வருவாரே... அலாவுதீனும் அற்புத விளக்கும் படக்கதையை சொல்றீயா?

    இரு, இப்போ நான் ஒரு கதை சொல்றேன். ஹீரோ ஒரு புட்பால் பிளேயர். அவருக்கு ஒரு ஜாடி கிடைக்குது. அதிலிருந்து வெளியே வர்ற ஜீபூம்பாங்கிற பூதம் வந்து.....லவ்வர்சை சேர்த்து வைக்கும், டான்ஸ் ஆடும், பேப்பரில் படம் காட்டும். அப்பறம்....திருப்தி லட்டு தரும்.

    அட என்னப்பா நீ பட்டணத்தில் பூதம் கதையைச் சொல்றே?

    அது சரி, நம்ம பழமொழிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

    அது இல்லாமலா பேசப்போறேன்...

    டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் சமைச்சிட்டு இருக்குன்னு வைச்சிக்கோங்களேன். சுடுதண்ணி வைக்க சுகியில் ஆர்டர் பண்ற ஆளு. சமைக்கிறேன் பேர்வழின்னு போய் ரசம் வைக்க.. அப்பா ஆஹோ ஓஹோன்னு புகழ்ந்ததோட இல்லாம மனைவிகிட்டே பார்த்தியா எம்பொண்ணு என்னமாதிரி... பெருமை பேசப்போய், இரண்டு பேரும் இப்போ கோர்ட் வாசல்ல நிக்கிறாங்க ?

    நேத்து பெய்த மழையில் முளைச்ச காளான்... அவ முன்னாடி என்னை மட்டம் தட்டி பேசிட்டாருன்னு அந்தம்மா பக்கத்து ஸ்டேட்மெண்ட்.

    மழையைப் பத்தி பேசாதீங்க... ரொம்ப பயமா இருக்கு. இப்பத்தான் எலக்ட்ரானிக் ஐயிட்டம்ஸ் எல்லாம் மீண்டு வருது. டிசம்பர் மாத விருந்தாளியா வீட்டுக்கு வந்த பாம்பு, பல்லி எல்லாம் இப்பத்தான் வீட்டை விட்டு வெளியே போயிருக்குன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. ஆனால், ஜோரா மழை அடிச்சி ஓய்ந்தபிறகு, தெரு ஓரத்தில பல இடங்களில் குட்டி குட்டியா காளான்கள் முளைச்சிருக்கும். இந்த காளான்கள் ஒருநாள் மழைக்கு முளைச்சி சீக்கிரமே அழிஞ்சும் போகும். இந்த காளான்களைத்தான் அற்பன் என்று சொல்வார்கள்.

    இந்த காளான்களின் அமைப்பு பார்க்க குடை மாதிரி இருக்கும். அதனால் இதற்கு குடைக்காளான்னு பேரு, சட்டுன்னு அழியப் போகிற காளானுக்கு வாழ்வு வந்தால் அது அர்த்த ராத்திரியில் அதாவது நடு இரவில் முளைக்கும்.அதைத்தான் அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும்ன்னு சொல்வாங்க. பழமொழி அதை உணர்த்தலை.

    லதா சரவணன்

    லதா சரவணன்

    கவுண்டமணிக்கு ஒரு படத்திலே லாட்டரியிலே லட்ச ரூபா விழுந்திருக்கும். இந்த வீடு என்ன விலைன்னு கேளு, அந்த தெரு என்ன விலைன்னு கேளு, இந்த ஊரு என்ன விலைன்னு கேளுன்னு ஒரே அலப்பறை பண்ணுவார். பார்த்துகிட்டு இருக்கிற வேலை கூட வேணான்னு சொல்வார். ஆனாகடைசியிலே அந்த டிக்கெட் காணாம போகும். அப்போ அவரைக் கேலி செய்யறா மாதிரி கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனேன்னு இந்த பழமொழியைச் சொல்லிக் காட்டுவாங்க.

    ஒருத்தரை கேலி செய்ய பயன்படும் இந்த பழமொழி, ஆனா இதோட உண்மையான அர்த்தம்,

    'அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.'

    தன்னை நம்பி வர்றவங்களை காக்கும் குணம் உடையவர்கள். அது எந்த நேரமானாலும் சரி. அவர்களுக்கு அளிக்கும் உதவியைத் தயங்காமல் செய்பவர்கள்.

    ஒரு நாள் அர்ஜுனன் கண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, நம்முடைய சகோதரர் தர்மர் அனைவருக்குமே தானம் செய்கிறார். இருப்பினும் கொடைவள்ளல் என்று கர்ணணை ஏன் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று சந்தேகமாக கேட்க,

    கண்ணனோ தன் மாயச்சிரிப்புடன் இதற்கு பதிலைச் சொல்வதைக் காட்டிலும் நீ பார்த்து புரிந்துகொள்வதே சிறந்தது என்று தன் சக்தியால் விடாமல் மழை பொழிய செய்த கண்ணன், அதன் பிறகு சில நாள் கழித்து மாறுவேடத்தில் இருவரும் தர்மரிடம் செல்கிறார்கள்.

    உங்களுக்கு என்ன வேண்டும் என்று தர்மர் கேட்க, எங்கள் வீட்டில் உணவு சமைக்கத் தேவையான பொருட்கள் இருக்கிறது. ஆனால் விறகுகள் நனைந்து விட்டதால் அவற்றைச் சமைப்பதற்கு விறகுகள் தேவை. தந்து உதவுங்கள் என்று கேட்டனர்.

    அதைக் கேட்ட தர்மன் அரண்மனை சமையல் களஞ்சியத்தில் விசாரித்து, பொன், பொருள் என்றால் என்னால் உடனே தந்துவிட முடியும். ஆனால் நீங்க கேட்பது சற்றே யோசிக்க வேண்டிய விஷயம். தற்சமயம் எங்களிடமும் அரண்மனையில் உள்ளோருக்குச் சமைக்க தேவையான விறகுகள் மட்டுமே இங்கே இருக்கின்றது. அதனால் தர இயலாத சூழலில் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால், இங்கே வந்து விருந்துண்ணலாமே என்றார்.

    பிறகு வருதாகக் கூறிய கண்ணன் அர்ஜுனனை கர்ணனிடம் அழைத்துச் சென்று அங்கேயும் இதே காரணத்தைக் கூறினார்கள். கர்ணன் சற்றும் யோசிக்காமல், தன் அரண்மனையில் உள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் உடைத்து, அவற்றைக் கொண்டு வந்து அவர்கள் இருவரிடம் தந்து இதைப் பயன்படுத்தி சமைத்து பசியாறுங்கள் என்று சொன்னார்.

    அர்ஜுனன் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, கண்ணன் அவனைப் பார்த்து இப்போது புரிகிறதா, அர்ஜுனா கர்ணனை ஏன் மக்கள் கொடைவள்ளல் என்று சொல்கிறார்கள் என்று கேட்க, அர்ஜுனனும் அதை ஒப்புக் கொண்டான். நம்மிடம் இருப்பதை அளிப்பதை விடவும், நம்பி வந்துவிட்டவர்களுக்கு தேவையானதை அளிப்பதே சிறந்த தானம் என்கிறது இக்கதை.

    இப்போது புரிகிறதா... அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பது மறுவி அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்று மறுவி வந்த பழமொழி பற்றி.

    அர்த்தம் மாறினால், கொடைவள்ளலும், கொடும் கஞ்சனாகிப் போகிறான்.

    இப்போ சொல்லு மனசாட்சி, நான் சொன்னது தானே சரி என்றதும் மனசாட்சி சட்டென்று ஒப்புக்கொண்டது.

    • தொள்ளாயிரத்து எண்பதுகளுக்குப் பின்னர் தொடங்கின.
    • பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த தொழில் நுட்பம் ஒரு பெரிய வரப்பிரசாதம்.

    "எனக்கு ஒரு கார் வேணுங்க!"

    "சரி, குறிச்சிக்கிட்டேன், சொல்லுங்க எப்படியாப்பட்ட கார்?"

    " நீலக்கலர், 1.8 cc என்ஜின், நாலு கதவு, ரேடியல் டயர், பவர் ஸ்டீயரிங்….."

    "ஓ சரி சரி! பெட்ரோலா இல்ல டீசலா?"

    "பெட்ரோலா? எந்த உலகத்துல இருக்கீங்க! எலக்ட்ரிக் காருதாங்க!"

    "ஓ சரிங்க!"

    "எப்பங்க டெலிவரி ஆகும்?"

    "நாளைக்காலையில பத்து மணிக்கு போன் பண்ணிட்டு டெலிவரி பண்ணிடலாங்க!"

    " சரி, நா அப்பவே செக் குடுத்தனுபிடறேங்க!"

    "ரொம்ப தாங்க்ஸ்!"

    மேலே சொன்னது உண்மையாகிக்கொண்டிருக்கிறது!

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் என்னும் சமாச்சாரம் உற்பத்தி என்னும் சப்ஜெக்டையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் சிக்காகோவில் நடந்த சர்வதேச உற்பத்தித்தொழில்நுட்ப மாநாட்டில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஒரு கம்பெனி 44 மணி நேரத்தில் அந்த மாநாட்டிலேயே நிஜ கார் ஒன்றை 3டி தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி தயாரித்துக் காண்பித்திருக்கிறது.

    அதை அசெம்பிள் பண்ண 2 நாட்கள்தான் பிடித்ததாம்! Acrylonitrile Butadiene Styrene (A.B.S.) என்னும் சிக்கலான ஒரு பொருளையும் வலுப்படுத்திய கார்பனையும் கொண்டு தயாரிக்கப்பட்டதாம் இந்தக்கார்.

    ஒரு சாதாரண காரில் 20,000 உதிரி பாகங்கள் இருக்குமாம். ஆனால் இந்த ஜீபூம்பா காரில் நாற்பதே உதிரி பாகங்கள் தானாம்!

    "பொருள் அறிவியலும் தொழில்நுட்பமும் பல படிகள் முன்னேறிவிட்டபடியால் எவ்வித நுட்பமான பொருளையும் பிளாஸ்டிக், உலோகம் அல்லது கலப்புப்பொருட்களால் இந்த 3டி நுட்பத்தைப்பயன் படுத்தி தயாரித்து விடமுடியும்" என்கிறார் வாகன ஆராய்ச்சி மையத்தின் இன் தலைவர் ஜே பாரன்.

    தொள்ளாயிரத்து எண்பதுகளுக்குப்பின்னர் தொடங்கின இந்த 3டி பிரிண்டிங் என்பது இப்போது பன்மடங்குப்பெருகி ஏரோப்ளேன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது.

    கூட்டு உற்பத்தியின் ஆரம்பமான இந்த 3டி பிரிண்டிங் நுட்பம் முதல் முதலில் இணைக் கப்பட்ட படிம மாடலிங் என்ற சிக்கலான பெயர் கொண்ட நுட்பத்தைப்பயன்படுத்தியதாம். இன்றளவும் இதே நுட்பம்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறதாம்.


    ஸ்ட்ராடி என்றுபெயர் கொண்ட மேலே சொன்ன சிக்காகோ கார் லோகல் மோட்டார்ஸ் கம்பெனியால் 2014இல் தயாரிக்கப்பட்டது.

    அதே வருடத்தில் உர்பீ என்னும் 3டி பிரிண்ட் உதிரிகள் கொண்ட காரை ஸ்வீடன் தேசத்து Koenigsegg என்னும் கம்பெனி தயாரித்தது.

    2015-ல் ஏர்பஸ் கம்பெனி தங்களுடைய ஏ 350 பிளேனில் கிட்டதட்ட 1000 உதிரி பாகங்கள் 3டி பிரிண்டிங்கில் உருவாக்கப்பட்டதாகச்சொல்லிற்று.

    2015-ல் ராயல் ஏர்போர்ஸ் யுரோனபட்டர் டைபூன் என்னும் போர் விமானம் 3டி பிரிண்டிங்கில் தயாரித்த உதிரிகளுடன் பறந்தது.

    இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 3டி பிரிண்டிங்கில் போர் விமான உதிரிகள் தயாரிக்கும் வழக்கத்தை தொடங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இன்றும் உலோகப்பொருள் கொண்ட தயாரிப்பில் கேஸ்டிங், பே்பரிகேஷன், ஸ்டாம்பிங், மேஷினிங் போன்ற தயாரிப்பு முறைகளே அதிகமிருந்தாலும் கூடிய சீக்கிரம் இவை குறைந்து 3டி பிரிண்டிங் தயாரிப்பு மேலோங்கும் என்பது விற்பனர்களின் கணிப்பு.

    இன்று இந்த 3டி பிரிண்டிங் இயல் மிக அதிகமாகப்பயன்படுத்தப்படுவது தொல் பொருள் ஆராய்ச்சி மற்றும் மியூசியம்களின் பராமரிப்பில் என்றே சொல்லலாம். புராதன சிற்பங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உடைந்திருக்குமானால் இந்த 3டி பிரிண்டிங்கினால் சரியான அளவுக்கேற்ப அந்த உடைசல்களைச்செய்து ஒட்ட வைத்து தொல் பொருட்களின் பழமை அழியாதவாறு காப்பதோடு அவற்றை இன்னும் சுலபமாகப்பராமரிக்க முடியும்.

    நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்,இந்த 3டி பிரிண்டிங் நுட்பத்தால் துப்பாக்கிகளும் தயாரிக்க முடியும்!

    பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த தொழில் நுட்பம் ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆகவே அமெரிக்கா முதற்கொண்டு இந்த 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தை முறையாக க்கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். இண்டர்நெட் மூலமாக பல துப்பாக்கி தயாரிக்கும் பிளான்கள் நடமாடி வருவதைக்கண்டு அமெரிக்கா அவற்றைத்தடுத்திருக்கிறது.

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தையே கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் வாதடி வர, மற்றொரு சாரார், அது தனிப்பட்ட உரிமையைப்பறிப்பதாய் முடியும் என்பதோடு இந்த அபார 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தையே முடக்கிப்போட்டுவிடும் என்கிறார்கள். அதற்கு பதிலாக துப்பாக்கிக்குண்டுகளைக்கட்டுபடுத்துங்கள் என்று கேலி பேசுகிறார்கள்!

    இந்த 3டி பிரிண்டிங் மருத்துவ உலகிலும் புரட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. முக்கியமாக செயற்கை உடலுறுப்புக்கள் தயாரிப்பில் 3டி பிரிண்டிங் நுட்பம் மிக அதிகமாக பயன்பட ஆரம்பித்துவிட்டதைக்காண்கிறோம். உறுப்புகள் மட்டுமின்றி பேஷண்ட்டின் உடல் கூறுக்கேற்ப ஆபரேஷன் செய்யத்தேவையான உபகரணங்களையும் தயாரித்து அந்த பேஷண்ட்டுக்கே உரித்தான தனிப்பட்ட கூறுகளின் அளவுக்கேற்ப மிகத்துல்லியமாக ஆபரேஷன் செய்ய முடிவதை இந்த 3டி பிரிண்டிங் நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது.

    "டாக்டர்! வலிக்கிறதுரொம்ப!"

    "எது இந்த ஸ்கால்பெல் படும்போதா?"

    "ஆமாம் டாக்டர்!"

    "சரி ரெண்டு நிமிஷம் பொறுங்கள்! சிஸ்டர்! 4.3 ஸ்கால்பெல் ஒண்ணு 3டி பிரிண்ட் பண்ணிண்டு வாங்க!"

    ஆம்! ரெண்டே நிமிஷத்தில் பேஷண்ட்டுக்குத்தோதான கருவிகள் தயாரித்து ஆபரேஷனைத்தொடர முடியுமாம்!

    "ஏம்மா! ஒவ்வொரு நாளும் நீ மாஞ்சு மாஞ்சு மசாலா அரைக்கிறியே நா வேணா இந்த தீபாவளிக்கு கிரைண்டிங் மெஷீன் வாங்கித்தரட்டுமா?"

    "ஒண்ணும் வேணாம்! நீங்க பேசாம 3டி பிரிண்டிங் மெஷீன் ஒண்ணு வாங்கியாங்க! கிரைண்டரோ மிக்ஸியோ நானே தயாரிச்சுக்கறேன்!"

    நடக்கப்போகிறது!

    உங்களூக்கு ஒன்று தெரியுமா? எனது நண்பர் பிரசன்னா 3டி பிரிண்டிங்கில் செய்த அயோத்தி ராமர் கோவிலை தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

    • மூளையின் பரப்பிலிருந்து புறப்படும் எந்தச் சொல்லாடலும் ஆணவத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.
    • ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் முகம் பார்த்து நிகழ்த்துகிற உரையாடலுக்கு என்றுமே மகத்துவம் அதிகம்.

    உரையாடுவதில் உன்னதத் தொடர்பு வளர்க்கும் உரிமையுடைய வாசகர்களே!

    ஒருகாலத்தில் வாய் மட்டுமே மனிதர்கள் பேசுவதற்குரிய கருவி என்று இருந்த நிலைமை மாறி, இன்று நவீன இயந்திர உலகில், மனிதர்களைப் பேசத் தூண்டுகிற கருவிகள் பெருகிவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யார் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவர்களோடு, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் டிஜிட்டல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    செல்பேசியில், வாட்ஸ் அப்பில், முகநூலில், யூடியூபில், இணையத்தில் ஒலியாக, ஒளியாக 'எங்கெங்கு காணினும் சக்தியடா!' என்பதுபோல எங்கெங்கு கேட்பினும் இன்று பேச்சு! பேச்சு! பேச்சு! பேச்சு மட்டுமே செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

    நம்மைச் சுற்றியுள்ள காற்றுவெளியில் கரைந்து நிறைந்துள்ள பேச்சொலிகளைக் கேட்கும் ஆற்றல் மட்டும் நம் செவிகளுக்கு இருந்திருந்தால் எப்போதோ அவை செயலற்றுப் போயிருக்கும்; நாமும் புத்தி பேதலித்துப் போயிருப்போம்.

    பேசுவது வேறு! உரையாடுவது வேறு!. கேட்பவர் பற்றிய கவனமின்றிப் பேசிக் கொண்டிருப்பது பேச்சு. எதிரே ஒருவரை முன்னிலைப்படுத்தி அவரோடு பேசுவதும் கேட்பதுமாக உரையாடிக் கொண்டிருப்பது உரையாடல். நேருக்கு நேரே மனிதர்களின்றி இப்போது நடக்கும் பெரும்பான்மையான தொலைபேசிவழி உரையாடல்களெல்லாம் இன்று பேச்சுக்களாகவே மாறியிருக்கின்றன. எதிர்முனையில் ஆள் கேட்கின்றாரா? கேட்கவில்லையா? என்கிற நினைப்பேயின்றி பேசிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நாம் பேருந்து, ரெயில் பயணங்களில், பொது இடங்களில் நிறையப் பார்க்கலாம்.


     'பேசுவது' என்பது ஓர் அரிய கலை என்றால் 'உரையாடுவது' என்பது ஓர் அற்புதமான கலை!. பேசுவதற்கு ஒருவர் சிந்தித்தால் மட்டும் போதும்; கேட்பதற்குப் பலர் இருக்கலாம். ஆனால் உரையாடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். ஒருவர் பேசும்போது இன்னொருவர் வழிவிடுவது!; பிறகு ஒத்துப்போவது!; அல்லது மறுத்துப் பேசுவது!; கூறிய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக உடன்பட்டுப் பேசுவது!; வினாக்களை எழுப்புவது!; விடைகளைக் கூடிக் கண்டுபிடிப்பது! என இப்படிப் பலவிதங்களில் பெருமைக்குரியது உரையாடல். ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் முகம் பார்த்து நிகழ்த்துகிற உரையாடலுக்கு என்றுமே மகத்துவம் அதிகம்.

    அந்த வகையில் இன்றைய நவீன உலகத்தில் பேச்சுக்கள் பெருகியிருக்கலாம்; நேருக்குநேர் காணாத உரையாடல்கள் பெருத்திருக்கலாம்; ஆனாலும், மூத்தோர், இளையோர், நடுவயதினர், ஆடவர், மகளிர், குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் எனப் பலதரப்பட்டவரும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களில் மனம் விட்டு உரையாடிக்கொள்ளும் வாய்ப்புகள், ('கண்டு பேசுவது' என்பது) தற்போது குறைந்துகொண்டே போகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரே வீட்டில் வாழும் குடும்பத்தாரிடையே கூட நேருக்குநேர் உரையாடிக்கொள்ளும் வாய்ப்புகள் அருகிப் போய்விட்டன. செல்பேசியில் வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்திக்கொண்டு, காலை எழுந்தவுடன், 'ஹாய்! எல்லாருக்கும் வணக்கம்!' என்று தகவலைப் போட்டு விடுவதோடு, தான் அன்று உயிர்ப்போடு இருப்பதைக் குடும்பத்தார்க்குத் தெரிவித்து விட்டதாய் நம்மில் பலர் எண்ணிக் கொள்கிறோம்.

    இதயங்கள் கொண்டு தொடங்க வேண்டிய உரையாடல்களை இன்று நம்மில் பலர் இயந்திரங்கள் கொண்டு தொடங்கிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். நேருக்கு நேர், கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் பேச்சுக்கள் தற்போது இல்லவே இல்லை: அல்லது தவிர்க்கப்படுகின்றன.

    சென்னை நகரத்தின் ஒரு முக்கிய சாலையில் உள்ள ஒரு நகரப் பேருந்து நிறுத்தம். காத்திருக்கும் பயணிகளுக்காக சாய்வு இருக்கைகள் போன்ற நவீன வசதிகளோடு கூடிய ஒரு நிறுத்தம். எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ஓர் இருக்கையில் அமர்ந்து, காலை நேரத்தில் வருகிற போகிற பேருந்துகளையெல்லாம் ஆவலோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் பேருந்துக்குச் செல்பவர் போலத் தெரியவில்லை.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    அவரைச் சிறிது நேரம் வேடிக்கை பார்த்த நடுத்தர வயதுக்காரர், மெதுவாக அவர் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து,"ஐயா! எந்த எண் நகரப் பேருந்துக்காகக் காத்திருக்கிறீர்கள்?" என்று பேச்சுக் கொடுத்தார். முதியவருக்கு முகமெல்லாம் மகிழ்ச்சி!. நம்முடனும் பேசுவதற்கு ஒருவர் வந்திருக்கிறாரே! என்று ஆச்சரியம்.

    "ஐயா! நான் பேருந்துக்காகக் காத்திருக்கவில்லை!. என் மகன் வீடு பின்பக்கத் தெருவில் உள்ள அடுக்ககத்தில்தான் உள்ளது. அங்கு யாரும் பெரும்பாலும் அடுத்தவர்களோடு பேசுவதில்லை. பொடிநடையாகக் காலை 7 மணிக்கு இங்கு வந்து அமர்ந்து கொள்வேன். வருகிற போகிற பேருந்துகளை வேடிக்கை பார்ப்பேன், மனிதர்களையும் பார்ப்பேன். மகிழ்ச்சியாக இருக்கும். அத்தி பூத்தாற்போல உங்களைப் போல ஓரிருவர் பேச்சுத் துணையாகவும் அமைவார்கள். பொழுது போய்விடும். காலை 9 மணி வாக்கில் கிளம்பி வீட்டுக்குச் சென்று விடுவேன்" என்றார் பெரியவர்.

    "மகன் வீட்டில், மருமகள், பேரன் பேத்திகள், பெரியவர்கள் இருப்பார்களே அவர்களோடு பேசி மகிழலாமே!" நடுவயதுக்காரர் யதார்த்தமாகக் கேட்டார். " இருக்கிறார்கள்!. நம்மிடம் உரையாட அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? அவரவர் அலுவலகம் கிளம்புவதற்கும், பள்ளிக்குக் கிளப்புவதற்குமே நேரம் சரியாக இருக்கும். அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்; அது பெரும்பாலும் சண்டையாகவே இருக்கும். அதற்குப் பிறகும் உரையாடிக் கொள்வார்கள்; அது அந்தச் சண்டைக்கான சமாதான உடன்படிக்கையாக இருக்கும். இடையில் நாம் ஏதாவது கருத்துக் கூற முனைந்தால், "அப்பா உங்க காலம் வேற! எங்க காலம் வேற!" என்று நம் வாயை அடைக்க முற்படுவார்கள்.எதற்கு வம்பு? நிம்மதியாக இங்கு வந்து அமர்ந்து, வேடிக்கை பார்த்து, உங்களைப் போன்றோருடன் பேசி மகிழ்ந்து பொழுதைக் கழித்து வீடு திரும்புகிறேன்"

    அந்தப் பெரியவர் நடப்பு அனுபவத்தைத் தான் கூறுகிறார். அவர் கிராமத்தில் இருந்து வந்தவர். ஆசிரியப் பணி பார்த்து ஓய்வு பெற்றவர். பணிபுரிந்த காலத்தில் ஒருநாளைக்குக் குறைந்த பட்சம் ஏழுமணி நேரமாவது பேசியே கழித்தவர். இப்போது அவரைச் சும்மா இருக்கச் சொன்னால் எப்படி இருப்பார்?. இதே போன்ற அனுபவக்கதைகளை நகரப் பூங்காக்கள், கடற்கரையோரங்கள், கோவில் மண்டபங்கள் எங்கும் காணலாம்.

    முன்பெல்லாம் பிரச்சினைகள் என்றால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்பார்கள். இன்று பெரும்பான்மைப் பிரச்சினைகளே பேசுவதால்தான் வருகிறது. எங்கே கோளாறு? இன்றைய தலைமுறைக்கு உரையாடத் தெரியவில்லையா?.இருக்கலாம். எந்த உரையாடலைத் தொடங்கும்போதும் அது இதயத்தின் ஆழத்தில் இருந்து புறப்பட வேண்டும். மூளையின் பரப்பிலிருந்து புறப்படும் எந்தச் சொல்லாடலும் ஆணவத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

    நம்மைவிடைச் சிறியவர்களோ பெரியவர்களோ சமமானவர்களோ அவர்களைப் பார்க்கும்போது முதலில் கனிவானதொரு புன்னகை; பிறகு நல்லாருக்கீங்களா? சாப்பிட்டீங்களா? போன்ற நல விசாரிப்புகள். இவை உரையாடலின் தொடக்கத்தை மென்மையாக்கித் தரும். அறிந்தவர் அறியாதவர் யாரைப்பார்த்தாலும் எரிச்சலோடு பார்த்தால் உரையாடலின் மூலம் பெறப்போகும் நெருக்கம் மற்றும் பலன்கள் கிட்டாமல் போய்விடும்.

    சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை விரைவு வண்டி கிளம்பியது. பகல்நேர வண்டியாதலால் அனைவரும் அமர்ந்தவாறே பயணம் செய்ய வேண்டும். ஒரு பெரியவர், அவருக்கு எதிரே ஓர் இளைஞன் வந்தமர்ந்தான். அவனைப் பார்த்தவுடன் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார் பெரியவர். அவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பிய இளைஞன், "ஹலோ சார் மணி என்ன ஆகுது?" என்று புன்னகையுடன் கேட்டான். அந்தப் பெரியவ ரோ," மணி எல்லாம் சொல்ல முடியாது!" என்று முகத்தில் அடித்தாற்போல பதில் சொன்னார்.

    இளைஞன் சிரித்துக்கொண்டே, "என்ன சார் மணிதானே கேட்டேன்!. நீங்களும் உங்கள் கையில் வாட்ச் கட்டியிருக்கிறீர்கள்? என் மீது என்ன கோபம்?" என்று அமைதியாகக் கேட்டான்.

    "தம்பி! காலம் கலிகாலம். இந்தக் காலத்தில இப்படி இருந்தாத்தான் நிம்மதியா வாழ முடியும். இப்ப மணி கேட்ப! நானும் சொல்லுவேன். அப்படியே ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சு, நீ எங்க போற? நான் எங்க போறேன்? உன் பேரென்ன? என்பேரென்ன? உங்க வீடு எங்க இருக்கு? எங்க வீடு எங்க இருக்கு?ன்னு பழக ஆரம்பிச்சுடுவோம்.

    விழுப்புரம் வரும். காபி சாப்பிடுங்கன்னு வாங்கிட்டு வந்து குடுப்ப! நானும் குடிப்பேன். அப்பறம் திருச்சி வரும். டிபன் சாப்பிடுன்னு நான் வாங்கித் தருவேன்.நீயும் சாப்பிடுவ. கடைசில மதுரை வந்துரும். ரெண்டுபேரு முகவரியும் பரிமாறிக்கிட்டு கிளம்புவோம்.

    மறுநாளே என் வீட்டுக்கு நீ வருவ. உன் வீட்டுக்கு அடுத்து நான் வருவேன். என் வீட்டில வயசுக்கு வந்த என் பொண்ணு இருக்கா. அவளும் நீயும் காதலிக்க ஆரம்பிப்பீங்க!. எங்கள மீறி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவீங்க! அவமானம் தாங்க முடியாம நானும் என் மனைவியும் தற்கொலை பண்ணிக்குவோம்!... அதனால உனக்கு நான் மணி சொல்ல முடியாது!" என்றார் பெரியவர். இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை ஆசாமிகளால்தான் பெரும்பான்மையான உரையாடல்கள் பலனற்றுப் போகின்றன.

    இப்போதெல்லாம் மனிதர்களை மனிதர்களாகப் பார்ப்பது குறைந்துவிட்டதோ என ஐயப்பட நேர்கிறது. மூத்தோருடன் நிகழ்த்தப்படும் உரையாடல்கள் நமக்கு அறிவுரைகளை வழங்குகின்றன. நேருக்கு நேர் உரையாடும்போது நாம் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்; அதன்மூலம் மனசு இலேசாகும் நல்வாய்ப்புக் கிட்டுகிறது. ஒருவரைப்பற்றி மனத்திற்குள் நாம் ஏற்கனவே வைத்திருக்கும் தவறான கண்ணோட்டம் உரையாடல்களில் உடைந்து நன்மையாக மாற வாய்ப்பிருக்கிறது.

    எல்லாக் கேள்விகளுக்கும் சலிக்காமல் கூகுள் பதிலளிக்கும் என்றாலும், எத்தனை பதில்கள் ஈரமுடைய இதயத்தின் பதில்களாக இருக்கும்?. மனித மனங்களைக் கொண்டாடும் மனோபாவம் எல்லாருக்கும் வந்துவிட்டால், வீடு, அலுவலகம், பொது இடம் என்று எல்லா நிலைகளிலும் நிகழ்த்தப்படும் உரையாடல்கள், உணர்வாடல்களாக மாறி இனிமை பயக்கும்.

    நாம் தனித்து விடப்பட்டோமோ என்கிற தனிமை உணர்வு இன்று சிறியவர் முதல் வளர்ந்தவர் வரை எல்லாருக்கும் இருக்கிறது. இதனை மாற்ற ஒரே வழி உரையாடிக்கொண்டே இருப்பது; நேருக்கு நேராக; ஒருவருடன் ஒருவராக; ஒருவருடன் பலராக; உரையாடிக்கொண்டே இருப்போம்!.

    நிலைத்த அறிவும் நிலைத்த அமைதியும் நிலைத்த மனிதநேயமும் இதன்மூலம் உறுதி செய்யப்படும்!

    தொடர்புக்கு 9443190098

    • குழந்தை பிறந்தவுடன் அதுவரை இருந்த சூழ்நிலைக்கு புறம்பான, முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழத் துவங்குகின்றது.
    • எட்டு வகையான காரணங்களால் 25 விதமான தோடங்கள் ஏற்படுவதாக சித்த மருத்துவ நூல் 'பாலவாகடம்' உரைக்கின்றது.

    பெரியவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுவது போல் குழந்கைகளுக்கும் அடிக்கடி சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும். குழந்தைகள் பிறந்தது முதல் 12 வயது வரை கிரந்தி, தோஷம், மாந்தம், கணம், வலிப்பு, கரப்பான், சுரம், சன்னி போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.

    சில தாய்மார்கள், குழந்தைகள் லேசாக சிணுங்கினால் கூட மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருந்துகளை வழங்குகின்றனர். அவ்வித குழந்தைகள் எப்போதும் நோயாளிகளாகவே இருந்து விடுகின்றனர். குழந்தைகளுக்கு முக்கியமாய் தவிர்க்க கூடாத சந்தர்ப்பங்களில் மட்டுமே மருந்தை உபயோகிக்க வேண்டுமே தவிர அடிக்கடி மருத்துவரிடம் காண்பிப்பதும், மருந்துகளை தருவதும் தவறாகும். இது குழந்தையின் வளர்ச்சியை மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் பாதிக்கும். முடிந்த வரை குழந்தைகளுக்கு ஏற்படும் சிறு சிறு உபாதைகளை வீட்டில் உள்ள இயற்கை மூலிகை பொருட்களை வைத்தே மருத்துவம் செய்வது சிறந்ததாகும்.

    குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளிவந்தவுடனேயே அதற்கு பல நோய்கள் ஏற்படக் காரணம் வெளிச்சூழ்நிலைகள் மட்டுமல்ல பெற்றோர்களின் உடல்நிலையும் அதற்கு காரணமாகிறது. இதனை அகக்காரண நோய்கள் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றது. மேலும் குழந்தை பிறந்தவுடன் அதுவரை இருந்த சூழ்நிலைக்கு புறம்பான, முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழத் துவங்குகின்றது. இவ்வேறுபட்ட சூழ்நிலை காரணமாக குழந்தைக்கு விக்கல், பொருமல், வயிறு வீங்கல், பால் எதிரெடுத்தல், கொட்டாவி, வயிற்று நோய், மலக்கட்டு, நீர்க்கட்டு, தோடம் போன்ற புறக்காரண நோய்கள் ஏற்படுவதாகவும் நூல்கள் கூறுகின்றன. புறக்காரண நோய்கள் தீர சித்த மருத்துவ நூல்கள் கீழ்க்காணும் வைத்திய முறைகளை கூறுகின்றன.


    குழந்தைகள் சீறி சீறி அழுதாலோ, குழந்தைகளுக்கு விக்கல், வயிறு பொருமல் ஏற்பட்டாலோ திப்பிலியை எடுத்து வெயிலில் உலர்த்தி பொடியாக்கி துணியில் வடிகட்டி, அந்த மெல்லிய பொடியை பசு நெய்யுடன் சேர்த்து தாயின் மார்பில் பூசி குழந்தையை பாலுண்ணும்படி செய்ய வேண்டும். இதனால் சீறியழுதல், விக்கல் பொருமல் தீரும்.

    குழந்தைகளுக்கு சில நேரம் வயிறு லேசாக வீங்கி காணப்படும். அந்நிலையில் அதிமதுரப்பொடியை எடுத்து நீர் விட்டு அரைத்து வயிற்றில் பூசலாம். வீக்கம் படிப்படியாக குறையும்.

    குழந்தைகள் பால் உண்ணாவிட்டால் அதிமதுரத்தை மெல்லிய பொடியாக செய்து, தாய்ப்பால் விட்டு அரைத்து தாயின் மார்பில் பூசி குழந்தையை பாலுண்ணும்படி செய்ய வேண்டும்.

    குழந்தைகளுக்கு மலங்கட்டினால் அதிமதுரம் -1 கிராம், வேப்பந்துளிர் -1கிராம், நாட்டு சர்க்கரை - 1 கிராம் எடுத்து மூன்றையும் நெய்விட்டு அரைத்து குழந்தைகளுக்கு கொடுக்க மலம் போகும். நீர்கட்டினால் வெள்ளரி பழ விதையை தண்ணீர் விட்டு அரைத்து குழந்தையின் அடிவயிற்றில் பூச வேண்டும். நீரும் நன்றாக இறங்கும். பாலும் நன்றாக உண்ணும்.

    குழந்தைகளுக்கு பால் எதிரெடுத்தால் வெள்ளைப்பூண்டு திரி - 5 எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு சட்டியிலிட்டு இளவறுப்பாக வறுத்து அத்துடன் ஓமம் சேர்த்து வெடிக்கும் போது நீர் விட்டு சரிபாதியாக காய்ச்சி குடிக்க செய்யலாம்.

    அடுத்தது அகக்காரண நோய்கள் குறித்து காணலாம். குழந்தைகள் பிறந்தது முதல் மூன்று மாதத்திற்குள் கிரந்தி என்னும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் கர்ப்பத்தில் இருக்கும்போதே கபம்/குளிர்ச்சி அதிகம் சேர்வதாலும், தாய்க்குள்ள மேக நோயினாலும் இந்நோய் ஏற்படுகின்றது. செவ்வாப்பு, கருவாப்பு என இரண்டு வகையாக வழக்கத்தில் அழைக்கப்படும் இந்நோயில் செவ்வாப்பானது குழந்தையின் உடம்பு முழுவதும் சிவந்த நிறத்தால் மூடிக் கொள்ளும்.


    இந்நோயை தடுக்கும் பொருட்டே நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பால் வழங்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். கழுதைப்பால் அதிக வெப்பமானதால் குளிர்ச்சியை குறைத்து இந்நோயை குறைக்கிறது. மேலும் செவ்வாப்பு ஏற்பட்ட குழந்தைகளை கோழி முட்டை வெண்கருவை தேய்த்து குளிப்பாட்டலாம். குழந்தைகள் குளிக்கும் நீரில் செம்முள்ளி கீரையை போட்டு காய்ச்சி அந்நீரை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். ஒரு மாதம் வரை இவ்விதம் நீராட்டி முழுவதும் குணமானவுடன் எண்ணெய் குளியல் செய்விக்கலாம்.

    அடுத்ததாக தோடம்/தோஷம் குறித்து காணலாம். குழந்தைகள் பிறந்த மூன்று மாதம் முதல் ஓராண்டு வரை தோடம் ஏற்பட வாய்ப்புள்ளது. எட்டு வகையான காரணங்களால் 25 விதமான தோடங்கள் ஏற்படுவதாக சித்த மருத்துவ நூல் 'பாலவாகடம்' உரைக்கின்றது.

    உடல் சுத்தமில்லாத ஆணோ, பெண்ணோ குழந்தையை தொடுவதாலும், தூக்குவதாலும், உடல் நிலை வேறுபட்டவர்கள் அதாவது குழந்தையின் உடற்சூட்டிற்கு ஒவ்வாத உடல் நிலை உள்ளவர்கள் தூக்குவதாலும், மாதவிலக்கான நேரங்களில் குழந்தையை தொடுவதாலும், கருக்கலைத்தவர்கள் சுத்தமில்லாத நிலையில் குழந்தையை தூக்குவதாலும், தொடுவதாலும், அடுத்தவரின் எச்சில் குழந்தையின் மீது படுவதாலும், நோயுற்ற காக்கை, குருவி போன்ற பறவைகள் பறந்து போகும்போது அவைகளின் நிழல் குழந்தைகளின் மேல்படுவதாலும் தோஷம்/தோடம் ஏற்படுகிறது.

    குழந்தையை எப்போதும் கவனமாக வளர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஓராண்டு காலம் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். வந்தவர், போனவர், நின்றவரிடம் குழந்தையை கொடுப்பது சிறிதும் நல்லதல்ல சிலருடைய மனவேகம், உடல் உணர்வுகள், வியர்வை இவைகள் குழந்தையின் உடல் நலத்தை கெடுக்கும். குழந்தையின் படுக்கை, குளியல் நீர், உடை இவைகளை இயன்ற அளவு தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மேலே கூறிய பொதுவான விஷயங்களை கடைபிடித்தாலே குழந்தையை தோடம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். தோடம் ஏற்பட்ட குழந்தையின் உடல் இளைக்கும், கெட்ட நாற்றம் வீசும், உச்சியில் குழி விழும், கண்கள் குழி விழுந்து காணப்படும். மேலும் குழந்தைகள் எப்போதும் கைகளால் தன் முகத்தை தேய்த்து கொண்டு அழும். மலம் வேறுபட்டு காணப்படும்.

    தோடம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு அதிமதுரம், மரமஞ்சள், கடுக்காய்தோல், வசம்பு, கோரைக்கிழங்கு இவற்றை சம அளவு எடுத்து பொடுதலை சாறு விட்டு அரைத்து 130 மி.கி. அளவு தாய்ப்பால் அல்லது தேனில் வழங்கலாம். இப்படி மூன்று அல்லது ஐந்து நாட்கள் கொடுத்து வந்தால் அனைத்து தோடங்களும் நீங்கும். மேலும் வசம்பு, அறுகம்புல், கருந்துளசி மூன்றையும் சம அளவு எடுத்து மைபோல அரைத்து குழந்தையின் உச்சி தலையில் பற்றிடலாம்.

    குழந்தைகள் பிறந்த ஓராண்டிலிருந்து முன்று ஆண்டுகள் வரை மாந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்த ஓராண்டிற்குள் தாய் கடலை, வெல்லம், மாம்பழம், தேங்காய், எருமை பால், தயிர், நெய், மொச்சைக் கொட்டை, மாவினால் செய்யப்பட்ட பொருள்கள் வாயுப்பொருட்கள் போன்றவற்றை அதிகமாக உண்பதாலும், விரால் மீன், கெண்டை மீன், பாகற்காய் போன்றவற்றை உண்பதாலும் தாய்க்கு மலச்சிக்கல் ஏற்படக்கூடும். அத்தாயினிடம் பால் குடித்தால் குழந்தைகளுக்கு மாந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பொதுவாக எந்த வகையான மாந்தமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவே காரணமாக அமையும் என்பதை உறுதியாக கூறலாம். ஆதலால் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதில் மிகவும் கவனம் வேண்டும்.

    சில தாய்மார்கள் தங்கள் குழந்தை கனமாக இருந்தால் தான் அழகாகவும் வலுவாகவும் இருக்கும் என்ற ஆசையால் கண்டவர் பேச்சை கேட்டும் நம்பியும் கண்ட கண்ட உணவு பண்டங்களை கொடுக்கிறார்கள்.

    இதனால் குழந்தையின் உடல் கனக்கும். மிகுதியான வியர்வை உண்டாகும். சுறுசுறுப்பு இல்லாமல் சோர்ந்திருக்கும், அடிக்கடி வாந்தியாகும், பசி ஏற்படாது, கெட்டுப்போன பால் போலவும், தண்ணீர் போலவும், பல நிறமாகவும் பேதி ஆகும். கைகால்கள் சூடு இல்லாமல் குளிர்ந்து போகும்.

    இந்நிலையில் மாந்தத்தை போக்க குழந்தைகளுக்கு நொச்சியிலை, நுணா இலை, வேலிப்பருத்தி ஆகிய மூன்று இலைகளின் சாறை சரியளவு எடுத்து ஒன்றாக சேர்த்து சிறுபாலாடை அளவு குழந்தைக்கு காலையில் கொடுக்க வேண்டும். இவ்விதம் மூன்று நாள் கொடுக்க மாந்தம் குணமாகும்.

    வெற்றிலைக்காம்பு, வசம்பு, வெள்ளைப் பூண்டு, திப்பிலி எடுத்து வெதுப்பி வெந்நீர் விட்டு அரைக்க வேண்டும். அதை குழந்தையின் பருவத்திற்கு தகுந்த அளவுப்படி எடுத்து நன்றாக காய்ச்சிய வெந்நீரில் கலந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்ய மாந்தம் தீரும்.

    ஓமத்தை இளவறுப்பாக வறுத்து தூள் செய்து கொண்டு அதை வெந்நீரிலாவது அல்லது தாய்ப்பாலிலாவது போட்டு கொடுக்க வேண்டும். இதனால் மாந்தத்தால் உண்டாகும் வயிற்றுப்பொருமல், கழிச்சல், வாந்தி இவைகள் உடனே நீங்கிவிடும்.

    முடிந்தவரை தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும்போது எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன நிலையும், உடல் நிலையும் பெரிதும் குழந்தையின் உடல் நலத்தை பாதிக்கும். எனவே தாய் கோபத்துடனும், மனச்சோர்வுடனும் குழந்தைக்கு பாலூட்டுவதை தவிர்க்க வேண்டும்.


    மாந்தத்தின் தொடர் நோயாக குழந்தைகளுக்கு கணம் என்னும் நோய் ஏற்படும். இது குழந்தைகளது மூன்றாமாண்டு முதல் ஏழாமாண்டு வரை துன்பத்தை கொடுக்கும் நோயாகும். கணம் பொதுவாக குழந்தைகளுக்கு மாந்த நோய் பலமுறை வந்து அது முற்றிலும் குணமடையாமல் உடம்பின் உட்பகுதியிலேயே இருந்து முற்றி இருப்பதினால் உண்டாகும். மேலும் பலவகையான நீரை பருகுவதாலும், அதிக சலதோடம் ஏற்படுவதாலும், பசியுடனிருக்கும் தாயின் பாலை குழந்தை உண்பதாலும் கணநோய் ஏற்படுகின்றது. மொத்தம் 24 வகையான இந்த கனநோய் ஏற்படுவதால் குழந்தைகளுக்கு வயிறு நோகும், நா வேக்காடாகும், மேல் மூச்சுண்டாகும், கர் கர் என்னும் ஒலியுடன் இருமல் உண்டாகும், சுரம் ஏற்படும்.

    கணம் ஏற்பட்ட குழந்தைகளுக்கு நீர்முள்ளி, பூண்டு, வெங்காயம், கடுத்தாய்தோல், நெல்லிக்காய், தான்றிக்காய்தோல் ஆகியவற்றை எடுத்து இடித்து அதை பசுமோரில் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு ஒன்று அல்லது இரண்டு சங்காக இருவேளையும் மூன்று அல்லது ஐந்து நாள் கொடுக்க அனைத்து வகையான கணமும் தீரும்.

    நொச்சியிலை, துளசியிலை, முசுமுசுக்கை யிலை மூன்றையும் 1 பிடி எடுத்து ஆவியில் வேக வைத்து சாறு பிழிந்து அதைக் காலையும், மாலையும் ஒரு சங்களவு வீதம் கொடுத்துவர மாந்தத்தை தொடர்ந்து வந்த கணம் தீரும்.

    வில்வ இலை, துத்தியிலை, வெள்ளை வெங்காயம், வெந்தயம், சீரகம் ஆகியவற்றை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையாக மூன்று அல்லது ஐந்து நாள் கொடுக்க வேண்டும். இதனால் அனைத்து வகையான கணங்களும் தீரும்.

    • ஒரு தடவை சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெறுவதற்கு பிரம்மா ஆசைப்பட்டார்.
    • பிரம்மன் வில்வ விதைகளுடன் பூமிக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று விதைத்தார்.

    கும்பகோணம் ஆன்மிக யாத்திரையில் சில ஆலயங்கள் தவற விடக்கூடாத பட்டியலில் இருக்கும். அதில் முதன்மையானது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர் ஆலயம் ஆகும். மயிலாடு துறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கடையூர் ஆலயம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருக்கடையூருக்கு அடிக்கடி பஸ் வசதியும் இருக்கிறது.

    பொதுவாக திருக்கடையூர் என்றதும் அனைவருக்கும் 60-ம் கல்யாணம் நிகழ்வுதான் நினைவுக்கு வரும். திருக்கடையூரில் 60-ம் கல்யாணம் செய்வதற்கு திதி, நாள், நட்சத்திரம் என்று எதுவும் பார்க்க தேவையில்லை. எனவே தினமும் அங்கு 60-ம் கல்யாணம் நடந்து கொண்டே இருப்பது சிறப்பாகும்.

    இந்த ஆலயத்துக்கு செல்லும் முன்பு அதன் தல வரலாற்றை தெரிந்து கொள்வது நல்லது.

    ஒரு தடவை சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெறுவதற்கு பிரம்மா ஆசைப்பட்டார். இதற்காக பிரம்மா கைலாயம் புறப்பட்டு சென்றார். சிவனை சந்தித்து உபதேசம் செய்யுங்கள் என்றார். உடனே சிவபெருமான் கை நிறைய வில்வ விதைகளை எடுத்து பிரம்மன் கைகளில் கொடுத்தார்.

    "இந்த வில்வ விதைகளை பூமிக்கு எடுத்து செல். அங்கு இந்த விதைகளை பூமியில் பதித்து பார். எந்த இடத்தில் வில்வ விதை விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் மரமாக வளர்கிறதோ அந்த இடத்தில் இருந்து என்னை வேண்டிக்கொள். நான் அங்கு வந்து உனக்கு உபதேசம் செய்கிறேன்" என்றார்.

    அதன்படி பிரம்மன் வில்வ விதைகளுடன் பூமிக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று விதைத்தார். திருக்கடையூரில் வில்வ விதைகளை விதைத்த போது அவை ஒரு நாழிகைக்குள் விருட்சங்களாக வளர்ந்தன. அங்கு அமர்ந்து சிவனை நோக்கி பிரம்மா தியானம் செய்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அந்த தலத்தில் தோன்றி பிரம்மாவுக்கு காட்சி அளித்தார். பிரம்மா கேட்ட ஞான உபதேசத்தையும் செய்தார். இதனால் இந்த தலத்து சிவபெருமா னுக்கு ஆதி வில்வநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

    இதையடுத்து வந்த யுகத்தில் பாற்கடலில் அமிர்தம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் பணிகளை தொடங்கினார்கள். அப்போது தேவர்கள் விநாயகரை வழிபடாமல் பணிகளை தொடங்கியதால் பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை விநாயகர் எடுத்து மறைத்து வைத்துவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்டு அமிர்த கலசத்தை தேவர்கள் திரும்ப பெற்றனர்.

    பின்னர் அந்த அமிர்த கலசத்தை திருக்கடையூரில் சிவபூஜை செய்வதற்காக வைத்திருந்தனர். அப்போது அமிர்த கலசம் வைக்கப்பட்ட இடத்தில் லிங்கம் ஒன்று தானாக உருவானது. அந்த சுயம்பு லிங்கத்துக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயரிட்டு வழிபட்டு வருகிறார்கள்.


    இந்த அமிர்தகடேஸ்வரர் எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்து விட்டு தனது பக்தனை காப்பாற்றிய சிறப்புக்குரியவர். அதன் பின்னணியிலும் ஒரு புராண கதை உள்ளது.

    திருக்கடையூர் அபி ராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர் சுப்பிரமணியன். இவர் தை அமாவாசை நாளில் கோவிலில் அபிராமி அம்மனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்ட மராட்டிய மன்னர், திருக்கடையூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் அபிராமி அம்மன் சன்னதியில் இருந்த சுப்பிரமணிய பட்டர் மன்னரை கவனிக்காமல் தன்னை மறந்து அபிராமி அம்மனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இதைக்கண்ட மன்னர், சுப்பிரமணிய பட்டர் தியானத்தில் இருந்து விழித்ததும், "இன்று என்ன திதி?" என்று கேட்டார். அப்போது சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனின் திருமுகத்தை மனதில் நினைத்தவாறு இன்று "பவுர்ணமி" என்று தவறாக கூறிவிட்டார்.

    இதனால் சினம் கொண்ட மன்னர் இன்று இரவு வானில் முழு நிலவைக் காட்ட வேண்டும். முழு நிலவு தோன்றாவிட்டால் உங்களை (சுப்பிரமணியபட்டரை) அக்னி குண்டத்தில் ஏற்றி விடுவேன்" என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    மன்னர் அங்கிருந்து சென்ற பிறகுதான், சுப்பிரமணிய பட்டருக்கு தான் தவறாக அமாவாசை நாளை பவுர்ணமி என கூறியது நினைவுக்கு வந்தது. இதனால் அச்சம் அடைந்த சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நினைத்து வழிபட தொடங்கினார். இது ஒரு புறம் இருக்க அபிராமி அம்மன் சன்னதி எதிரே சுப்பிரமணிய பட்டரை அக்னி குண்டத்தில் ஏற்ற ஏற்பாடுகள் தொடங்கியது.

    எரியும் நெருப்பின் மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணிய பட்டர் ஏற்றப்பட்டார். சுப்பிரமணிய பட்டரும் அபிராமி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார்.

    79-வது பாடலை சுப்பிரமணியபட்டர் பாட தொடங்கும் போது, அன்னை அபிராமி அம்மன் வானில் காட்சி தந்து, தனது இடது காதில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாள். அது பல கோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் வெளியிட்டது. இதனால் அமாவாசை இருள் நீங்கி, வானில் முழு பவுர்ணமி நிலவு தோன்றியது.

    உறியின் கீழே மூட்டப் பட்டிருந்த நெருப்பு முழுவதும் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. மன்னர் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமி அம்மனின் அருளையும், சுப்பிரமணிய பட்டரின் பக்தியையும் எண்ணி மெய் சிலிர்த்தனர். மேலும் சுப்பிரமணிய பட்டருக்கு 'அபிராமி பட்டர்' என்ற பட்டத்தை மன்னர் சூட்டினார். தை அமாவாசை தினத்தன்று, ஆண்டு தோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படு வதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படுகிறது.

    வருகிற 9-ந்தேதி தை அமாவாசை தினமாகும். அன்று அர்ச்சகர்கள் அபிராமி அந்தாதியில் ஒவ்வொரு அந்தாதியாக பாடி அம்பிகைக்கு தீபாராதனை காட்டுவார்கள். 79-ம் பாடல் பாடும்போது மின் விளக்கினை எரியச்செய்வார்கள். இதை கண்டு தரிசிக்க பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

    இது போல சித்திரை மாதம் மகம் நட்சத்திரம் அன்று நடக்கும் எமசம்காரமும் முக்கியமானது. இதன் பின்னணியிலும் ஒரு புராண கதை உள்ளது. மிருகண்டு முனிவர்- மருத்துவதி அம்மாள் தம்பதிகளின் மகன் மார்க்கண்டேயன். 16 வயதில் இறந்து விடுவான் என்று ஜோதிட கணிப்பு மூலம் தெரிந்தது.

    இதனால் மார்க்கண்டேயன் யாத்திரை மேற்கொண்டு சிவாலயங்களில் வழிபட்டான். 108-வது தலமாக திருக்கடையூர் வந்தபோது அவனது உயிரை பறிக்க எம தர்மன் முயற்சி செய்தான். அப்போது மார்க்கண்டேயன் ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை கட்டி பிடித்து கொண்டான்.

    இதனால் மார்க்கண்டேயன் மீது வீசிய எமனின் பாச கயிறு சிவன் மீதும் பட்டது. இதனால் கோபம் அடைந்த சிவபெருமான் காலால் எட்டி உதைத்து எமனை சம்காரம் செய்தார். பிறகு எமனை உயிர்ப்பித்து அருளினார். இதைத்தான் சித்திரை மாதம் எமசம்காரமாக நடத்துகிறார்கள்.

    கார்த்திகை சோமவாரத்தில் ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் இந்த தலத்தில் புகழ் பெற்றது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஆல யம் 274 பாடல் பெற்ற தலங்க ளில் 110-வது தேவார தலமாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், ஜென்ம நட்சத்திரம், ஆயுள் ஹோமம் ஆகியவை மிக மிக சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    தமிழகத்தில் இந்த பூஜைகள் இந்த தலத்தில் நடத்துவதை மட்டுமே சிறப்பாக மக்கள் கருதுகிறார்கள். 59 வயது முடிந்து 60 வயது தொடங்குபவர்கள் உக்ர ரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது நிறைவான வர்கள் 61-வது வயது தொடங்கும் போது சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    அதுபோல 70 வயது நிறைவு பெற்று 71-வது வயதை தொடங்கு கிறவர்கள் பீம ரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81-வது வயதை தொடங்குகிறவர்கள் சதாபி ஷேகம், ஆயுள் ஹோமம் செய்வது உண்டு. இந்த பூஜைகளை செய்ய இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்குள்ள அம்பாள் அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். அபிராமியை வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும். இங்குள்ள காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் நோய்கள் விலகி ஆயுள் அதிகரிக்கும். நீண்ட ஆயுளுடன் வாழ தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு இந்த பூஜையை செய்கிறார்கள்.

    கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் இந்த பூஜையை தவற விடாமல் செய்வது மிகவும் நல்லது. இந்த தலத்தில் கல்யாண மாலை சாத்தினால் திருமணம் கைகூடும். சங்காபிஷேகம் செய்தால் நோய்கள் விலகும். ருத்ராபி ஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மிருத்யுஞ்சய பூஜை செய்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் விலகி விடும்.

    சில பெண்கள் மாங்கல்ய தோஷத்தை நினைத்து கவலைப்படுவார்கள். அவர்கள் அபிராமி காலடியில் தாலி காணிக்கை செலுத்தி விட்டு புது தாலி அணிந்து கொண்டால் தோஷம் விலகும் என்கிறார்கள். திருக்கடையூர் ஆலயம் சித்தர்கள் மகிமை நிறைந்த ஆலயம் ஆகும். எனவே முதலில் அகத்தியர் வழிபட்ட பாபக ரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணிய கரேஸ்வரர் ஆகிய இருவரையும் வழிபட்ட பிறகே மற்ற சன்னதிகளுக்கு செல்ல வேண்டும்.

    இந்த தலத்தில் நவக் கிரகங்கள் கிடையாது. அனைத்து ஆற்றல்களும் சிவபெருமானிடமே ஒடுங்கி உள்ளன. எனவே இங்கு ஒருவர் என்ன வேண்டிக் கொள்கிறாரோ அவை அனைத்தும் தங்கு தடையில்லாமல் நடக்கும் என்பது சிறப்பு அம்சமாகும்.

    • சீன பஞ்சாங்கத்தின்படி அவர் பிறந்த வருடம் டிராகன் வருடம்.
    • வாழ்நாளில் ஐந்தே ஐந்து திரைப்படங்களில் தான் நடித்தார் புரூஸ் லீ.

    மிகக் குறைந்த வயது வாழ்ந்தாலும் நிறைந்த புகழைப் பெற்று உலகை பிரமிக்க வைக்க முடியும் என்று நிரூபித்தவர் புரூஸ் லீ. மின்னல் வேக மன்னன் என்று உலகம் இவரைக் கண்டு பிரமித்தது இவரது அபாரமான வேகத்தினால் தான்.

    அவரைப் பற்றிய அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது 'ஒன் இன்ச் பஞ்ச்' என்பது பற்றித் தான். ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து எதிரிலிருப்பவரை வீழ்த்தும். இந்த ஒரு அங்குல இடைவெளியில் இருந்து பாயும் மின்னல் குத்துக்கு காரணம் அவரது மூளையில் விசேஷமாக அமைந்திருந்த வெண் பொருள் (White matter) என்ற முடிவிற்கு மூளை இயல் நிபுணர்கள் இப்போது வந்திருக்கின்றனர். இந்த ஒரு இஞ்ச் குத்தின் வேகத்தை ஒருவாறாகக் கணக்கிட்ட நிபுணர்கள் அது மணிக்கு 190 கிலோமீட்டர் இருந்ததாகக் கூறினர். (மிகக் கொடூரமான புயலின் வேகம் கூட அதிக பட்சம் மணிக்கு 117 கிலோமீட்டர் தான்!)

    பிறப்பும் இளமையும்: அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் சைனா டவுனில் உள்ள ஒரு சீன மருத்துவமனையில் 1940-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி லீ ஹோய்-சூன் மற்றும் கிரேஸ் ஹோ ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் புரூஸ் லீ.

    சீன பஞ்சாங்கத்தின்படி அவர் பிறந்த வருடம் டிராகன் வருடம். அதே போல பிறந்த நேரமும் கூட காலையில் வரும் (7 முதல் 9 மணி வரை வரும்) டிராகன் நேரம் தான். அதிர்ஷ்டமான நேரத்தில் பிறந்த அவருக்கு இளமையில் பெயர் - லிட்டில் டிராகன்!

    இளம் வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அவர் தோற்றமளித்தார்.

    குழந்தையுடன் பெற்றோர் ஹாங்காங் நகருக்கு குடி பெயர்ந்தனர்.

    இளம் வயதிலேயே தற்காப்புக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த புரூஸ் லீ ஹாங்காங் நகரில் அந்தக் காலத்தில் மிக சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தெருச்சண்டைகளில் ஈடுபட்டார். வீட்டுக் கூரைகளிலும் இது நடைபெறுவது வழக்கம்,

    நகரத்தையே அச்சுறுத்திய ஒரு பிரபல ரவுடியின் மகனை தெருச்சண்டை ஒன்றில் வீட்டுக்கூரை மீது புரட்டி எடுத்தார் புரூஸ் லீ. அவனுக்கு கைமுறிவு ஏற்பட்டது; பல் தெறித்து விழுந்தது.

    போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற புரூஸ் லீயின் தாயார் இது போல நடைபெறாதவாறு தான் பார்த்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்து அவரை வெளியே மீட்டு வந்தார்.

    அமெரிக்காவில் பிறந்த காரணத்தினால் அமெரிக்க குடியுரிமை கிடைக்கும் என்பதால் பெற்றோர் புரூஸ் லீயை அமெரிக்காவிற்கே அனுப்பத் தீர்மானித்தனர். சியாட்டிலில் குடியேறிய புரூஸ் லீ அங்கு குங் பூ பயிற்சிக்கூடம் ஒன்றை ஆரம்பித்தார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    தற்காப்புக்கலையில் விசேஷ கவனம் செலுத்திய அவர் தனது திறமையினால் ஜீத் குனோ டோ என்ற புதிய முறையை வகுத்தார். இந்த முறை ஒரு புதிய பரிமாணத்தை உலகிற்குக் காண்பிக்கவே புரூஸ் லீயின் புகழ் தற்காப்புக் கலை வட்டாரத்தில் பெரிதாகப் பரவியது.

    கல்லூரியில் சேர்ந்த புரூஸ்லீ படிப்பை விட தனது குத்துச்சண்டையில் அதிக கவனம் செலுத்தினார். கல்லூரியில் இருந்து வெளியேறினார். தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

    'தி க்ரீன் ஹார்னெட்' என்று ஒரு தொடர். அதில் கடோ என்ற பாத்திரத்தில் நடித்த புரூஸ் லீ ஒரு காட்சியில் பாட்மேனுடனான சண்டையில் தோற்க வேண்டும். முடியாது என்று மறுத்து விட்டார் லீ. பின்னர் பேட்மேனும் இவரும் டிரா செய்வதாக கதை திருத்தப்பட்டது. அவ்வளவு தன்மானம் உள்ளவர் புரூஸ் லீ.

    என்றும் வெற்றி; எவருடனும் வெற்றி!

    புரூஸ் லீயின் உயரம் 172 செண்டிமீட்டர். எடை 64 கிலோ. கடுமையான பயிற்சியின் மூலம் அவர் தனது இரு விரல்களைக் கீழே பூமியில் வைத்து உடலைத் தூக்கி நிறுத்துவார். இதைப் பார்த்த மற்றவர்கள் வியந்தனர்.

    சியாட்டிலில் இருந்த போது யோய்ச்சி நகாசி என்ற ஜப்பானிய கராத்தே நிபுணர் புரூஸ் லீயை வலுக்கட்டாயமாக சண்டைக்கு அழைத்தார். முதலில் அவரை அலட்சியமாக ஒதுக்கிய லீ ஒரு கட்டத்தில் அவரது சவாலை ஏற்க வேண்டியிருந்தது. சரியாக பதினோரு விநாடிகளில் இரண்டே அடிகளில் அவரை வீழ்த்தினார் புரூஸ் லீ. பிரக்ஞையை இழந்து தள்ளிப் போய் விழுந்த நகாசிக்கு மண்டையில் பலத்த காயம் பட்டது. இப்படி சில விநாடிகளில் எதிராளியை வீழ்த்தும் அவரது கை முஷ்டிக்கும் அதன் வீச்சிற்கும் அனைவரும் பயந்தனர்; வியந்தனர்.

    1964, ஆகஸ்ட் 17-ம் நாளன்று லிண்டா என்ற பெண்ணை லீ திருமணம் செய்து கொண்டார். பிரண்டன் லீ என்ற மகனும் ஷானன் லீ என்ற மகளும் அவருக்கு உண்டு.

    பிரண்டன் லீ பிற்காலத்தில் ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் மரணமடைந்தார். ஷானன் லீ நடிகையானார்.

    திரைப்படங்களில் நடிக்க ஆர்வம்:

    வாழ்நாளில் ஐந்தே ஐந்து திரைப்படங்களில் தான் நடித்தார் புரூஸ் லீ.

    தி பிக் பாஸ் (The Big Boss - 1971)

    பிஸ்ட் ஆப் புயூரி (Fist of Fury - 1972)

    வே ஆப் தி டிராகன்(Way of the Dragon - 1972)

    எண்டர் தி டிராகன்(Enter the Dragon - 1973)

    கேம் ஆப் டெத் Game of Death - 1978)

    உலகப் புகழ் பெற்ற படமான 'எண்டர் தி டிராகன்'

    அவர் மறைந்த சில நாட்களுக்குப் பின்னாலேயே திரைக்கு வந்தது.

    'கேம் ஆப் டெத்' படமோ' அவர் மறைந்த பிறகே முடிக்கப்பட்டது. திடீரென அவர் மறைந்ததால் கதையும் மாற்றப்பட்டது. இதில் அவரது பிரேத ஊர்வலம் அப்படியே எடுக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது.

    இவர் நடித்த ஐந்து திரைப்படங்களே எதிர்காலத்தில் மற்றவர்கள் 168 படங்களை எடுக்க உத்வேகம் ஊட்டியது!

    எண்டர் தி டிராகன்:

    உலகத்தின் கவனத்தையே ஈர்த்த 'எண்டர் தி டிராகன்' திரைப்படம் புரூஸ் லீ மறைந்த சில தினங்களுக்குப் பிறகு 1973-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

    99 நிமிடங்களே ஓடும் இந்த திரைப்படத் தயாரிப்பின் போது அவர் பட்ட கஷ்டம் அதிகம். ஏராளமான காயங்கள், ஒரு காட்சியில் பாம்பு ஒன்று அவரைக் கடித்து விட்டது. ஷூட்டிங்கை நிறுத்த கூடாது என்று சொல்லி உரிய காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது அவர் வழக்கம். மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டவாறே நடித்துக் கொண்டே இருந்தார் அவர்.

    3500 லட்சம் அமெரிக்க டாலரை ஈட்டியது இந்தப் படம். தற்காப்புக் கலை பற்றி வெளி வந்த படங்களில் உலகின் தலையாய படமாக இன்றளவும் திகழ்வது இந்தப் படமே!

    மறைவு: புரூஸ் லீயின் மறைவு எவ்வளவு அகாலமானதோ அவ்வளவு சோகமானதும் கூட. 1973-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அவர் மறைந்தார். இயல்பாகவே அதிக உஷ்ணத்தை அவர் உடலால் தாங்க முடியவில்லை. அவரது உடலில் இருந்து வியர்வைச் சுரப்பிகள் அகற்றப்பட்டன. அவருக்கு வலிப்புகள் வருவதுண்டு. தலைவலி வேறு உண்டு.

    1973, மே 10-ந் தேதி ஹாங்காங்கில் கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோவில் புரூஸ் லீ திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டு, மனிடால் என்ற மாத்திரையைத் தந்து மூளை வீக்கத்தை சரி செய்தனர்.

    இதே மூளை வீக்கமும் தலைவலியும் திரும்பவும் 1973 ஜூலை 20-ந் தேதி அவருக்கு ஏற்பட்டது. தலை வலிப்பதாக புரூஸ் லீ சொல்லவே தைவான் நடிகையான பெட்டி டிங் பெய் ஒரு வலி நிவாரண மாத்திரையை கொடுத்தார். சிறிது ஓய்வு எடுக்கச் சென்ற லீ எழுந்திருக்கவே இல்லை. ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது லீ இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். மறைந்த போது அவருக்கு வயது 32.

    உடல் பரிசோதனையைச் செய்த டாக்டர் 1400 கிராம் இருக்க வேண்டிய மூளை 1575 கிராமாக வீங்கி இருப்பதைச் சொல்லி மூளை வீக்கத்தினால் அவர் இறந்து விட்டதாக தனது முடிவை தெரிவித்தார்.

    ஆனால் இன்றளவும் அவர் மரணம் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அவரது உடல் சியாட்டிலில் லேக் வியூ சிமெட்ரியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    வெற்றி பெற புரூஸ் லீ தரும் அறிவுரை:

    "சிரஞ்சீவியாக இருக்க ஒரே வழி, அனைவரும் எப்போதும் நினைவில் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வது தான்!" என்று கூறிய புரூஸ் லீ, தான் கூறியபடியே அனைவரின் நினைவிலும் இன்றளவும் இருக்கிறார்; எப்போதும் இருப்பார்.

    இந்த நிலையை அடைய எளிய வழிகளையும் அவர் கூறி இருக்கிறார். அவற்றில் முக்கியமானவை இதோ:

    1. "பத்தாயிரம் உதைகளைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபோதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்" என்றார் அவர்.

    "ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும்" என்றார் அவர்.

    தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது. அகல உழுவதை விட ஆழ உழு; என்றும் பத்து இடங்களில் பத்து அடி தோண்டுவதை விட ஊற்று இருக்கும் இடத்தை நிர்ணயித்து நூறு அடி தோண்டு என்றும் தமிழில் முன்னோர்கள் கூறியுள்ளதை நினைவு கூரலாம்.

    2. தண்ணீர் போல நெகிழ்வுடன் இருங்கள்! எந்தத் தடையையும் எதிர் கொண்டு நெகிழ்வுடன் சென்று அதை மீறி தனது இயல்பாக இருக்கும் தண்ணீரில் இருந்து ஏராளமான பாடத்தைக் கற்கலாம்.

    3. வேரை அறிந்து கொள்ள முயலுங்கள். எது இலை, எது கிளை, எது அழகான மலர் என்ற விவாதத்தில் இறங்க முயல வேண்டாம். வேரை அறிந்து கொண்டால் மலர் மலரும் விதம் உங்களுக்குத் தானே புரிந்து விடும்!

    4. அறிவது மட்டும் போதாது; அறிவதைச் செயலில் கொண்டு வர வேண்டும். விருப்பப்பட்டால் மட்டும் போதாது. அதை அடைய செயலில் இறங்க வேண்டும்..

    5. ஒரு நாளைக்கு ஒரு சிறிது முன்னேற்றமாவது அடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

    பயிற்சியே வெற்றி தரும் என்று நிரூபித்த அதிசய மனிதர் புரூஸ் லீ!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் எடுப்பது என்றும் இளமையாய் இருக்க சித்த மருத்துவம் காட்டும் எளிய வழி.
    • எண்ணெய் குளியல் எடுப்பது ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு தர உதவும்.

    தினம் தினம் புதுப்புது ஆரோக்கிய சவால்களை சந்திக்கும் முதுமைக்கு தலைவலி சார்ந்த உடல் உபாதை என்பது இன்னும் கூடுதல் சவால் தான். ஏனெனில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தலைவலியால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய தலைவலிக்கு பல்வேறு நோய்நிலைகள் காரணமாக இருப்பினும், முதன்மைக் காரணமாக இருப்பது ஒற்றைத் தலைவலி.

    ஒற்றைத் தலைவலியானது 6 சதவீதம் ஆண்களுக்கும், 15 சதவீதம் பெண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. பல்வேறு நோய்நிலைகளோடு முதுமை போராடும் வேளையில் இந்த தலைவலி தொந்தரவும் நீங்காத வேதனையைத் தந்து முதுமையை வருத்தும். இதனால் இயல்பான மனநிலை மாறி தூக்கமின்மை, கவனச்சிதறல் ஆகிய தொந்தரவுகளும் உண்டாகும். ஏனெனில் ஒற்றைத் தலைவலியானது சில நிமிடங்கள் என்று இல்லாமல், 4 முதல் 72 மணிநேரம் வரை நீடித்து துன்புறுத்தக்கூடியது.

    ஒற்றைத் தலைவலியானது வாந்தி, வாந்தி வரும் உணர்வு, ஒளியைக் கொண்டு பயம், தலையின் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கங்களிலோ சில சமயங்களில் குத்தல் வலி என்று அடுக்கடுக்காய் துன்பங்களை உண்டாக்கி முதுமைக்கு கூடுதல் பாரத்தை கொடுக்கும். இந்த நாட்பட்ட தலைவலிக்கு வலி மாத்திரைகளை தொடர்ந்து எடுப்பதும் பின்னாளில் ஆரோக்கியச் சிக்கல் என்பதால், வலியுடனே முதுமையைக் கழிக்கும் பலரின் துன்பங்களை வெறும் வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.

    முதலில் வயோதிகத்தில் உண்டாகும் தலைவலியை, வெறும் தலைவலி தானே என்று எளிதாக கடக்காமல் அத்தகைய தலைவலியின் நோய்க்காரணத்தை கண்டறிவது அவசியம். இல்லையெனில் அது உடலுக்கு தீங்காய் முடியும். மிக அதிகமான ரத்த அழுத்தம், மூளைப் பகுதிக்குள் உண்டாகும் கட்டிகள், பக்கவாதம் நோயின் ஆரம்ப கட்டம், மூளையினுள் ரத்தக் கசிவு போன்ற பல்வேறு நோய்நிலைகளிலும் தலைவலி உண்டாகக்கூடும். இதனைக் கருத்தில் கொண்டு முதுமையில் தலைவலிக்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    சித்த மருத்துவக் கூற்றுப்படி நமது உடலின் தலை என்பது கபத்தின் இருப்பிடமாகும். அத்தகைய கபத்தின் இருப்பிடத்தில் அதிகமாகும் வாதமும், பித்தமும் (வாயுவும், சூடும்) ஒன்று கூடி ஒற்றைத் தலைவலியை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆக வாதம், பித்தம் இரண்டையும் குறைக்கும் மருந்துகள் ஒற்றைத் தலைவலியை தீர்ப்பதில் பயனளிக்கும் விதமாக உள்ளன.

    சித்த மருத்துவ மூலிகைகளான அரத்தை, இஞ்சி அல்லது சுக்கு, அதிமதுரம், கொத்துமல்லி விதை (தனியா), நிலவேம்பு, வசம்பு, பூண்டு, கோரைக்கிழங்கு, வல்லாரை, மஞ்சள், கஸ்தூரிமஞ்சள் போன்ற எளிய மூலிகைகள் ஒற்றைத் தலைவலிக்கு பயன் தருவதாக உள்ளன. அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளதால், சித்த மருத்துவ மூலிகை மருந்து கலப்புகளை பயன்படுத்துவது நல்லது.

    "சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை" என்பது சொலவடை. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் எடுப்பது என்றும் இளமையாய் இருக்க சித்த மருத்துவம் காட்டும் எளிய வழி.

    சுக்கு பெரும்பாலான சித்த மருந்துகளில் சேரும் கடைச்சரக்கு. காரணம் சுக்கு சித்த மருத்துவம் கூறும் நோய்க்காரணியான வாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, நோய் விரட்ட உதவுவதாக உள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க சுக்கு ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணி.

    ஒற்றைத் தலைவலிக்கு சுக்கினை பொடித்து தேனில் கலந்தோ அல்லது பாலில் கொதிக்க வைத்தும் குடித்து வரலாம். இது மூளைக்குள் சுருங்கிய ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்வதுடன் தலைவலியை போக்க உதவும். இது ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகும் பல்வேறு வீக்க காரணிகளை தடுக்கும் வல்லமை உடையது.

    சித்த மருந்துகளான 'இஞ்சி லேகியம்' அல்லது 'திரிகடுகு சூரணம்' ஆகிய மருந்துகளை நாடுவதும் நற்பலன் தரும். சுக்கினை பயன்படுத்துவதன் மூலம் முதுமையில் வலி மாத்திரைகளின் பயன்பாட்டை குறைத்து வலியில்லாத தரமான வாழ்க்கைக்கு வழித்தடம் அமைக்க முடியும்.

    அதே போல் அதிமதுரம் பொடியுடன் சோம்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து பாலில் காய்ச்சி எடுத்துக்கொள்வதும் தலைவலிக்கு நற்பலன் தரும். நிலவேம்பு குடிநீர், அரத்தை குடிநீர் ஆகியன மேற்கூறிய தலைவலியில் பலனளிக்கக்கூடியன. திரிகடுகு சூரணத்துடன் சில பற்ப, செந்தூர மருந்துகளை சேர்த்து மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வதும் மைக்ரேன் தலைவலியில் பயன் தரும். 

    எண்ணெய் குளியல் எடுப்பது ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு தர உதவும். சுக்கு தைலம், கீழாநெல்லி தைலம் ஆகிய மருந்துகளை எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். ஒற்றைத் தலைவலிக்கு சுக்கினை அரைத்து பாலில் பற்று போடுவதும் பாரம்பரியமாக இருந்து வரும் மரபு.

    வெளிப்புற மருத்துவமாக புதினா தைலம் கொண்டு வலியுள்ள இடங்களில் தடவி வரலாம். அதே போல் தைல மர இலைகளை கொண்டு வேது பிடித்தலும், நொச்சி இலையுடன் மஞ்சள் சேர்த்து வேது பிடிப்பதும் வலி குறைய வழி வகை செய்யும். வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.

    பெரும்பாலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலியானது வாந்தி, வாய்க்குமட்டல், அசீரணம், மலச்சிக்கல் போன்ற பல்வேறு சீரண மண்டல குறிகுணங்களுடன் உண்டாவது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பல ஆய்வுகள் குடலுக்கும், மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று குறிப்பிடுகின்றன.

    அத்தகைய ஆய்வுகளில் செரிமான மண்டலத்தில் தொந்தரவு உள்ள பலருக்கு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வருவதாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆக முதலில் சீரண மண்டலம் சார்ந்த உபாதைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது முதுமையில் ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்கும். 

    பித்தத்தைக் குறைக்கும் பொருட்டு பாலில் கொத்துமல்லி விதை (தனியா), ஏலக்காய், சுக்கு சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்வதும் தலைவலிக்கு நன்மை தரும். தனியா, ஏலக்காயில் உள்ள மருத்துவ குணமுள்ள நறுமண எண்ணெய் வேதிக்கூறுகள் செரிமான மண்டல உபாதைகளை தீர்ப்பதுடன், தலைவலியைக் குறைக்க உதவும்.

    ஒற்றைத் தலைவலி மட்டுமல்லாது முதுமையில் அதிகம் காணப்படும் மற்றொரு நிலை ஐந்தாவது நரம்பு பாதிப்பினால் உண்டாகும் வலி. இது 'ட்ரைஜெமினல் நரம்பு வலி' எனப்படும். இந்நிலையில் முகத்தில் மின்னல் போன்ற வலியுடன், முகத்தில் கை வைத்தாலே எரிச்சல் வலி காணும்.

    முதுமையின் மிகப்பெரும் சவாலான சர்க்கரை நோய் உள்ள பலருக்கு இந்த வலி உண்டாகும். இந்த நாட்பட்ட வலிக்கு நரம்பினை வன்மைப்படுத்தும் பல சித்த மருத்துவ மூலிகைகள் பலன் அளிப்பதாக உள்ளன. அமுக்கரா சூரணம், கிராம்பு சூரணம், தசமூல குடிநீர், திரிகடுகு சூரணம், பூண்டு லேகியம் ஆகிய நரம்பினை வலுவாக்கும் மருந்துகள் இந்நோயில் நற்பலன் தரும்.

    போலிக் அமிலம் எனும் வைட்டமின் சத்து ஒற்றைத் தலைவலிக்கு பயன்தருவதாக பல்வேறு நவீன ஆய்வுகள் உறுதி செய்கின்றன. சித்த மருந்தான மாதுளை மணப்பாகு போலிக் அமிலத்தின் இயற்கை ஆதாரமாக உள்ளது. இதனை எடுத்துக்கொள்வதும் ஒற்றைத் தலைவலியில் நற்பலன் தரும். அடிக்கடி மாதுளையை உட்கொள்வதும் பித்தத்தைக் குறைத்து நன்மை பயக்கும்.

    நார்ச்சத்துள்ள, தாவர வகை உணவுப்பொருட்களையும், குறைந்த சர்க்கரை சத்துள்ள (கிளைசெமிக்) உணவுப் பொருட்களை உண்பதும், குளுட்டன் நிறைந்த கோதுமை போன்ற உணவுகளை குறைப்பதும், நன்மை பயக்கும் குடல் கிருமிகளை பாதிக்கும் பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி வகைகளை தவிர்ப்பதும், ஒற்றைத் தலைவலி உண்டாவதை தடுப்பதாக உள்ளன.

    இத்தகைய உணவுப்பொருட்கள் பல்வேறு வேதிக் காரணிகளை உடலில் தூண்டுவிப்பதன் மூலம் மைக்ரேன் தலைவலிக்கு பாதை அமைப்பதாக நவீன அறிவியல் சுட்டிக்காட்டுகின்றது. ஆக பாரம்பரிய உணவு வகைகளை நாடுவது முதுமையில் பல்வேறு நோய்நிலைகளை தடுப்பது என்பது உறுதியாகின்றது.

    ஒற்றைத் தலைவலியில் சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியான வர்ம சிகிச்சை முறையினை மேற்கொள்வதும் சிறப்பு மிக்கது. இதனால் வலி குறைந்து, மருந்து மாத்திரைகள் உபயோகத்தை குறைக்க முடியும். வர்ம சிகிச்சை என்பது உடலில் ஆற்றல் தொடர்புடையது. முதுமையில் உடல் ஆற்றல் பெரிதும் குறைந்து விடுவது இயல்பு. இந்நிலையில் வர்ம சிகிச்சை ஆற்றலை மீட்டுத் தந்து, பல்வேறு வலி சார்ந்த நோய்நிலைகளில் பலன் தரக்கூடியது.

    வழக்கத்திற்கு மாறான தலைவலியின் தன்மை, கழுத்து தசை இறுக்கம், வாந்தி, இதுவரை அனுபவிக்காத தீராத தலைவலி, அத்துடன் மயக்கம், மிகுந்த சோம்பல், இருமும் போதும் தும்மும் போதும் தலைவலி அதிகமாதல், தலைவலியுடன் கண் பார்வைக் கோளாறுகள் போன்றவை சிவப்பு கொடி குறியீடுகள் (Red flag sign) என்பதால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது முதுமைக்கு நல்லது.

    நல்ல தூக்கம், நல்ல உடல் பயிற்சி, நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் போல சத்தான நன்மை பயக்கும் உணவும் சிறந்த வாழ்வியல் முறையில் ஒரு பகுதி. முதுமையில் மருந்து மாத்திரைகளுக்கு மெனக்கெடும் பலர் நல்ல உணவு முறைக்கும், உடற்பயிற்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மெனக்கெடுவதில்லை. இதனை உணர்ந்து செயல்பட்டால் முதுமையும் இனிமையாகும். ஆரோக்கியத்தின் வாசல் திறக்கும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    ×