என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
- காளான்களின் அமைப்பு பார்க்க குடை மாதிரி இருக்கும்.
- அழியப் போகிற காளானுக்கு வாழ்வு வந்தால் அது அர்த்த ராத்திரியில் அதாவது நடு இரவில் முளைக்கும்.
நான் சொல்வதுதான் சரி..
நான் சொல்வதுதான் சரி..
எனக்கும் மனசாட்சிக்கும் தீவிரமான வாக்குவாதம்.
அப்படியென்னய்யா இரண்டு பேரும் சொல்றீங்கன்னுதானே கேட்கறீங்க?
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். இந்த வாரப் பழமொழியைப் பற்றித்தான் வாக்குவாதமே...
இதிலென்னய்யா வாக்குவாதம்... அதான் கண்ணாலேயே பார்க்கிறோமே? நேத்து வரைக்கும் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிச்சவன் எல்லாம் ஏதோவொரு குருட்டு அதிர்ஷ்டத்திலே கார்லே போவான். ரோடு மேல ஓடறது என்னவோ காருதான். ஆனா... அவன் தலையால நடக்கிறமாதிரி ஒரு பில்டப் கொடுப்பான் பாரு... அதுதான் பழமொழிக்கு விளக்கம்.
சரியாப்போச்சு... நம்ம பக்கத்துத் தெரு நேசமணி அம்மாவுக்கு ஒரே பிள்ளை. அவனோட சித்தப்பா இருக்காரே... அவரு ஒரு சிக்கலில் அவனை மாட்டிவிட, அதிர்ஷ்டவசமா நம்ம நேசமணிக்கு ஒரு விளக்கு கிடைக்குது. அதைக் கையில் எடுத்து தேச்சா ஒரு பூதம் வருது... அவர் கேட்டதையெல்லாம் தருது. நம்ம நேசமணியைக் கையிலேயே பிடிக்க முடியலை. காசு, பணம், துட்டு மணி... மணின்னு கலர்கலர் காஸ்ட்யூமிலே டான்ஸ் ஆடறார்...
சூர்ன்னு கமல் கைதட்ட உடனே அசோகன் பூதம் வேஷம் போட்டு வருவாரே... அலாவுதீனும் அற்புத விளக்கும் படக்கதையை சொல்றீயா?
இரு, இப்போ நான் ஒரு கதை சொல்றேன். ஹீரோ ஒரு புட்பால் பிளேயர். அவருக்கு ஒரு ஜாடி கிடைக்குது. அதிலிருந்து வெளியே வர்ற ஜீபூம்பாங்கிற பூதம் வந்து.....லவ்வர்சை சேர்த்து வைக்கும், டான்ஸ் ஆடும், பேப்பரில் படம் காட்டும். அப்பறம்....திருப்தி லட்டு தரும்.
அட என்னப்பா நீ பட்டணத்தில் பூதம் கதையைச் சொல்றே?
அது சரி, நம்ம பழமொழிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
அது இல்லாமலா பேசப்போறேன்...
டேடிஸ் லிட்டில் பிரின்சஸ் சமைச்சிட்டு இருக்குன்னு வைச்சிக்கோங்களேன். சுடுதண்ணி வைக்க சுகியில் ஆர்டர் பண்ற ஆளு. சமைக்கிறேன் பேர்வழின்னு போய் ரசம் வைக்க.. அப்பா ஆஹோ ஓஹோன்னு புகழ்ந்ததோட இல்லாம மனைவிகிட்டே பார்த்தியா எம்பொண்ணு என்னமாதிரி... பெருமை பேசப்போய், இரண்டு பேரும் இப்போ கோர்ட் வாசல்ல நிக்கிறாங்க ?
நேத்து பெய்த மழையில் முளைச்ச காளான்... அவ முன்னாடி என்னை மட்டம் தட்டி பேசிட்டாருன்னு அந்தம்மா பக்கத்து ஸ்டேட்மெண்ட்.
மழையைப் பத்தி பேசாதீங்க... ரொம்ப பயமா இருக்கு. இப்பத்தான் எலக்ட்ரானிக் ஐயிட்டம்ஸ் எல்லாம் மீண்டு வருது. டிசம்பர் மாத விருந்தாளியா வீட்டுக்கு வந்த பாம்பு, பல்லி எல்லாம் இப்பத்தான் வீட்டை விட்டு வெளியே போயிருக்குன்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. ஆனால், ஜோரா மழை அடிச்சி ஓய்ந்தபிறகு, தெரு ஓரத்தில பல இடங்களில் குட்டி குட்டியா காளான்கள் முளைச்சிருக்கும். இந்த காளான்கள் ஒருநாள் மழைக்கு முளைச்சி சீக்கிரமே அழிஞ்சும் போகும். இந்த காளான்களைத்தான் அற்பன் என்று சொல்வார்கள்.
இந்த காளான்களின் அமைப்பு பார்க்க குடை மாதிரி இருக்கும். அதனால் இதற்கு குடைக்காளான்னு பேரு, சட்டுன்னு அழியப் போகிற காளானுக்கு வாழ்வு வந்தால் அது அர்த்த ராத்திரியில் அதாவது நடு இரவில் முளைக்கும்.அதைத்தான் அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும்ன்னு சொல்வாங்க. பழமொழி அதை உணர்த்தலை.
லதா சரவணன்
கவுண்டமணிக்கு ஒரு படத்திலே லாட்டரியிலே லட்ச ரூபா விழுந்திருக்கும். இந்த வீடு என்ன விலைன்னு கேளு, அந்த தெரு என்ன விலைன்னு கேளு, இந்த ஊரு என்ன விலைன்னு கேளுன்னு ஒரே அலப்பறை பண்ணுவார். பார்த்துகிட்டு இருக்கிற வேலை கூட வேணான்னு சொல்வார். ஆனாகடைசியிலே அந்த டிக்கெட் காணாம போகும். அப்போ அவரைக் கேலி செய்யறா மாதிரி கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனேன்னு இந்த பழமொழியைச் சொல்லிக் காட்டுவாங்க.
ஒருத்தரை கேலி செய்ய பயன்படும் இந்த பழமொழி, ஆனா இதோட உண்மையான அர்த்தம்,
'அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.'
தன்னை நம்பி வர்றவங்களை காக்கும் குணம் உடையவர்கள். அது எந்த நேரமானாலும் சரி. அவர்களுக்கு அளிக்கும் உதவியைத் தயங்காமல் செய்பவர்கள்.
ஒரு நாள் அர்ஜுனன் கண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, நம்முடைய சகோதரர் தர்மர் அனைவருக்குமே தானம் செய்கிறார். இருப்பினும் கொடைவள்ளல் என்று கர்ணணை ஏன் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று சந்தேகமாக கேட்க,
கண்ணனோ தன் மாயச்சிரிப்புடன் இதற்கு பதிலைச் சொல்வதைக் காட்டிலும் நீ பார்த்து புரிந்துகொள்வதே சிறந்தது என்று தன் சக்தியால் விடாமல் மழை பொழிய செய்த கண்ணன், அதன் பிறகு சில நாள் கழித்து மாறுவேடத்தில் இருவரும் தர்மரிடம் செல்கிறார்கள்.
உங்களுக்கு என்ன வேண்டும் என்று தர்மர் கேட்க, எங்கள் வீட்டில் உணவு சமைக்கத் தேவையான பொருட்கள் இருக்கிறது. ஆனால் விறகுகள் நனைந்து விட்டதால் அவற்றைச் சமைப்பதற்கு விறகுகள் தேவை. தந்து உதவுங்கள் என்று கேட்டனர்.
அதைக் கேட்ட தர்மன் அரண்மனை சமையல் களஞ்சியத்தில் விசாரித்து, பொன், பொருள் என்றால் என்னால் உடனே தந்துவிட முடியும். ஆனால் நீங்க கேட்பது சற்றே யோசிக்க வேண்டிய விஷயம். தற்சமயம் எங்களிடமும் அரண்மனையில் உள்ளோருக்குச் சமைக்க தேவையான விறகுகள் மட்டுமே இங்கே இருக்கின்றது. அதனால் தர இயலாத சூழலில் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால், இங்கே வந்து விருந்துண்ணலாமே என்றார்.
பிறகு வருதாகக் கூறிய கண்ணன் அர்ஜுனனை கர்ணனிடம் அழைத்துச் சென்று அங்கேயும் இதே காரணத்தைக் கூறினார்கள். கர்ணன் சற்றும் யோசிக்காமல், தன் அரண்மனையில் உள்ள கதவுகளையும், ஜன்னல்களையும் உடைத்து, அவற்றைக் கொண்டு வந்து அவர்கள் இருவரிடம் தந்து இதைப் பயன்படுத்தி சமைத்து பசியாறுங்கள் என்று சொன்னார்.
அர்ஜுனன் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, கண்ணன் அவனைப் பார்த்து இப்போது புரிகிறதா, அர்ஜுனா கர்ணனை ஏன் மக்கள் கொடைவள்ளல் என்று சொல்கிறார்கள் என்று கேட்க, அர்ஜுனனும் அதை ஒப்புக் கொண்டான். நம்மிடம் இருப்பதை அளிப்பதை விடவும், நம்பி வந்துவிட்டவர்களுக்கு தேவையானதை அளிப்பதே சிறந்த தானம் என்கிறது இக்கதை.
இப்போது புரிகிறதா... அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பது மறுவி அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்று மறுவி வந்த பழமொழி பற்றி.
அர்த்தம் மாறினால், கொடைவள்ளலும், கொடும் கஞ்சனாகிப் போகிறான்.
இப்போ சொல்லு மனசாட்சி, நான் சொன்னது தானே சரி என்றதும் மனசாட்சி சட்டென்று ஒப்புக்கொண்டது.






