என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மனம்தான் மனிதன்!
- தனிமை, அதிகம் வேண்டாத விஷயங்களில் இருந்து ஒருவரை காப்பாற்றும்.
- அன்பு அமைதியான ஆறு போல் செல்ல வேண்டும்.
நடக்கப் போவதினை முன் கூட்டியே கூறும் மகான்களையும் நமக்கு மட்டுமே புரியுமாறு உணர வைக்கும் பல மகான்களையும் நான் பார்த்துள்ளேன். இவர்கள் துறவியாகவும் இருப்பார்கள். சிலர் குடும்பத்தோடு இயல்பான வாழ்க்கை முறையிலும் இருப்பார்கள்.
ஆச்சர்யப்பட முடிந்தது. அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்து கொள்ள முடிய வில்லையே என்ற ஏக்கம் என்னை தேடி தேடி அலைய வைத்தது. பல நம் நாட்டு, வெளிநாட்டு புத்தகங்களைப் படித்தேன். இந்த பிரிவில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் கூர்ந்து கவனித்தேன். (அனைவரையும் பகவான் ரமண மகிரிஷி போல பர்க்கக் கூடாது. அவர் இப்பூவுடலை விட்டு ஒளியாக வானில் சென்றதை எனது பாட்டி அதிகம் கூறுவார். அந்த அளவு சக்தியினை உடனடியாக யதார்த்த வாழ்க்கையில் பெற முடியாது).
மனதினை அடக்கும் சக்தி கொண்டவனால் மட்டுமே இந்த பிரிவில் முன்னேற முடியும் என்பதனை நன்கு உணர்ந்தேன். மனதினை அடக்க வாய் முதல் முக்கியம். அளவான, சாத்வீக உணவு இருக்க வேண்டும். பிடித்த உணவு என்று எதுவும் இருக்கக் கூடாது. பேச்சு என்பது மிக அவசிய தேவைக்கே. அளவாக இருக்க வேண்டும். வாய் பேசாது மனம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அதில் பயனில்லை. இதனைத்தான் மனதினை ஒரு முகப்படுத்துதல். மூக்கினை கவனித்தல், புருவ மத்தியில் கவனம் செலுத்துதல் என்கிறோம். ஜபங்கள் சொல்வதினை சிலர் பின் பற்றுவர். நாளடைவில் ஜபம் அடங்கி மவுனம் பெற வேண்டும். இதன் முயற்சியாக யோகா, பிராணயாமம் என செய்தாலும் சிலவற்றினை ஒருவர் கடை பிடிக்க வேண்டும்.
* தனிமை, அதிகம் வேண்டாத விஷயங்களில் இருந்து ஒருவரை காப்பாற்றும்.
* இந்த காலத்திற்கு அவசியம் கூற வேண்டிய ஒன்று செல்போன். தொலைக்காட்சி இவைகளை அதிகம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
* அன்றாட உடற்பயிற்சி அவசியம். ஆன்மீக வாழ்க்கைக்கு மட்டுமல்ல சாதாரண வாழ்க்கை என்று வாழும் மக்கள் கூட சிலவற்றினை கடைபிடிக்க வேண்டும்.
* வெறித்தனமான அன்பு யார் மீதும் வைக்க வேண்டாமே. இது அநேக தாய்மார்களிடம் இருக்கின்றது. தன் மூச்சு காற்றில் பிள்ளையைவாழ வைக்க முயல்வார்கள்.
அடுத்து தம்பதியினர், காதலர்கள் என்பவர்கள் இந்த பிரிவில் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட அன்பு பெரும்பாலும் ஏதோ ஒரு பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது.
அன்பு அமைதியான ஆறு போல் செல்ல வேண்டும். காட்டாற்று வெள்ளம் போல் இருக்கக் கூடாது.
இது மன நல பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. எதிலும் அதிக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தவித்து போவீர்கள். உங்கள் தேவையினை முடிந்தவரை விடியற்காலை நேரத்தில் இறைவனிடமோ, பிரபஞ்சத்திடமோ வேண்டி சொல்லி விடுங்கள். தினமும் காலை வேளையில் இதனைச் செய்யலாம். இந்த அளவே போதும்.
இயல்பான வாழ்க்கை மேற்கொள்பவர்களுக்கும் அன்றாடம் பிரச்சினைதான். எத்தனை முயற்சி செய்தாலும் மன உளைச்சல் நாளும் கூடிக் கொண்டுதான் இருக்கின்றது. இவர்கள் முடிந்தால் கீழ்க்கண்டவாறு முயற்சிக்கலாம்.
கமலி ஸ்ரீபால்
இரவில் ஓர் அறையில் கண்ணாடி முன் அமர்ந்து என்னால் முடியும். நான் பல நல்ல செயல்களை செய்வேன். அதற்கான ஆற்றல் என்னிடம் உள்ளது. நான் என்னை நேசிக்கின்றேன் என்று சில நிமிடங்கள் சொல்லலாம். இம்முறையினை வெளிநாடுகளில் மனஉளைச்சல் மன அழுத்தம் நீங்க வேண்டி பயிற்சி அளிக்கின்றனர்.
ஆஞ்சநேயர் மகிமை: ஆஞ்சநேய பக்தர்கள் நம் நாட்டில் மிக அதிகம் எனலாம். 'ஸ்ரீராமஜெயம்' 'ராமா ராமா' என்று சொல்லும் இடத்திலும் கண்டிப்பாய் ஆஞ்சநேயர் இருப்பார் என்ற நம்பிக்கை உண்டு. பிரம்மசர்யமும், தீவிர ராம பக்தியும் கொண்ட சிரஞ்சீவி தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை, வியாழக்கிழமைகளில் வெற்றிலை மாலை, துளசி, வெண்ணை, வடை மாலை இப்படி முடிந்ததை அர்ப்பணித்து நெய் விளக்கு ஏற்றி வழிபட நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன எனப்படுகின்றது. அனுமான், பஜ்ரங்பாலி, மாருதி என்று பல பெயர்களில் அன்பாய் அழைக்கப்படுபவர்.
கதை தூக்கி, வால் உயர்த்தி இருக்கும் ஆஞ்சநேயரை வீர ஆஞ்சநேயர் என்பர்.
ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு உள்ளவர்களை சனீஸ்வர பகவான் அதிகம் பிடிக்க மாட்டார் என்பது உறுதியான நம்பிக்கையாக விளங்குகிறது.
இதில் பன்முக ஆஞ்சநேயர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பஞ்ச முகம் என்பது என்ன?
வானரம், ஆஞ்சநேயர் நரசிம்ஹர், கருடன், ஹயக்ரீவர் (குதிரை முகம்) வராஹம் என ஐந்து முகங்களை கொண்டவர்.
இவர் எப்படி உருவாகினார்?
ராமருக்கும் ராவணுக்கும் யுத்தம் நடந்து கொண்டு இருந்தது. ராவணன் பக்கம் அதிக இழப்புகள், ராவணன் மனம் கலங்கினார். உடனே அவன் பாதாள உலக அரசனான மயில் ராவணனை வரவழைத் தான். மயில் ராவணன் பிரம்மனை குறித்து தவம் புரிந்தான். கடும் தவம் புரிந்தான்.
மயில் ராவணனிடம் ராவணன் தான் படும் திண்டாட்டத்தினை கூறினான். ராம, லட்சுமணரை அழித்து விடும்படி வேண்டினான். மயில் ராவணன் தன் அகந்தையால் ராவணனுக்கு கண்டிப்பாய் உதவுவேன் என கூறி தன் மாயாஜால சக்தியால் ராம லட்சுமணரை பாதாள லோகத்திற்கு கடத்திச் செல்ல முன் வந்தான்.
இந்நிகழ்வினை அறிந்த சுக்ரீவன் ராமலட்சுமணரை காக்க வேண்டி அனுமரை அனுப்பி வைத்தான். அனுமர் ராம லட்சுமணன் உள்ள இடத்தினை கண் சிமிட்டாமல் பாதுகாத்தார்.
மயில் ராவணன் தந்திரங்கள் நிறைந்தவர். அவ்வாறு தன்னை விபீஷனர் போல் உருமாற்றிக் கொண்டான். அனுமரிடம் தான் ராம லட்சுமணர்களை பார்க்க விரும்புவதாகக் கூறினான். அனுமரும் அனுமதித்தார். உள்ளே சென்ற மயில் ராவணன் தன் தந்திரத்தால் ராம லட்சுமணர்களை சிறு உருவங்களாக மாற்றி தன்னுள் மறைத்து வெளி வந்து விட்டான்.
ராம லட்சுமணர்களை பாதாள லோகத்தில் சிறை வைத்தான்.
சிறிது நேரத்தில் உண்மையான விபீஷனர் வந்து அனுமனை சந்திக்க அனுமன் ஆச்சரியப்பட்டார். 'இப்போது தானே வந்து போனீர்கள்' என அனுமன் கேட்க விபீ ஷணரோ 'இல்லையே நான் இப்பொழுது தானே வருகின்றேன்' என்று சொல்ல இருவரும் உள்ளே சென்று பார்க்க ராம லட்சுமணர் அங்கு இல்லை.
ஆஞ்சநேயர் பாதாள லோகத்திற்கு சென்று அங்கு உள்ள காளி தேவியின் பின்னே மறைந்து கொண்டார். மயில் ராவணன் ராம, லட்சுமணரை பலி கொடுக்க அங்கு வந்தான். அங்கிருந்த ராம, லட்சுமணர்கள் மயில் ராவணனுடன் போர் புரிய அனுமன் மயில் ராவணனின் உயிர் மூலாதாரமான ஐந்து கண்களைத் தேடி புறப்பட்டார். விபீஷணர் சொன்னபடி ஏழு கடல்கள் கடந்து அங்குள்ளவர்களுடன் கொண்ட பெட்டியை தூக்கி வந்தார். ஐந்து வண்டுகளையும் ஒரு சேர கொண்டுவந்தால் தான் மயில் ராவணன் அழிவான். இதுதான் அவன் பிரம்மனிடம் பெற்ற வரம். இது நடக்கவில்லை என்றால் எதிராளி மடிவார்.
இதனை இறை சக்தியால் உணர்ந்த அனுமன் பஞ்சமுகங்கள் கொண்ட உரு எடுத்து ஒரே நேரத்தில் ஐந்து வண்டுகளையும் அழித்தார். மயில் ராவணனும் அழிந்தார்.
இதனை கற்பனை எனலாம். நிஜம் எனலாம். ஐம்புலன்களை அடக்கி ஆன்மீக முன்னேற்றம் அடைய விரும்புவோர் பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு என்பர். ஒன்றை மட்டும் அனைவரும் உணர வேண்டும். அரக்க குணங்களை அழிப்பது என்பதற்கு படாதபாடு, விடா முயற்சி என்பது அவசியம் என்பதனை மயில் ராவணன்-அனுமன் நிகழ்வு உணர்த்துகிறது.






