search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பம்
    X

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பம்

    • தொள்ளாயிரத்து எண்பதுகளுக்குப் பின்னர் தொடங்கின.
    • பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த தொழில் நுட்பம் ஒரு பெரிய வரப்பிரசாதம்.

    "எனக்கு ஒரு கார் வேணுங்க!"

    "சரி, குறிச்சிக்கிட்டேன், சொல்லுங்க எப்படியாப்பட்ட கார்?"

    " நீலக்கலர், 1.8 cc என்ஜின், நாலு கதவு, ரேடியல் டயர், பவர் ஸ்டீயரிங்….."

    "ஓ சரி சரி! பெட்ரோலா இல்ல டீசலா?"

    "பெட்ரோலா? எந்த உலகத்துல இருக்கீங்க! எலக்ட்ரிக் காருதாங்க!"

    "ஓ சரிங்க!"

    "எப்பங்க டெலிவரி ஆகும்?"

    "நாளைக்காலையில பத்து மணிக்கு போன் பண்ணிட்டு டெலிவரி பண்ணிடலாங்க!"

    " சரி, நா அப்பவே செக் குடுத்தனுபிடறேங்க!"

    "ரொம்ப தாங்க்ஸ்!"

    மேலே சொன்னது உண்மையாகிக்கொண்டிருக்கிறது!

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் என்னும் சமாச்சாரம் உற்பத்தி என்னும் சப்ஜெக்டையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் சிக்காகோவில் நடந்த சர்வதேச உற்பத்தித்தொழில்நுட்ப மாநாட்டில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஒரு கம்பெனி 44 மணி நேரத்தில் அந்த மாநாட்டிலேயே நிஜ கார் ஒன்றை 3டி தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி தயாரித்துக் காண்பித்திருக்கிறது.

    அதை அசெம்பிள் பண்ண 2 நாட்கள்தான் பிடித்ததாம்! Acrylonitrile Butadiene Styrene (A.B.S.) என்னும் சிக்கலான ஒரு பொருளையும் வலுப்படுத்திய கார்பனையும் கொண்டு தயாரிக்கப்பட்டதாம் இந்தக்கார்.

    ஒரு சாதாரண காரில் 20,000 உதிரி பாகங்கள் இருக்குமாம். ஆனால் இந்த ஜீபூம்பா காரில் நாற்பதே உதிரி பாகங்கள் தானாம்!

    "பொருள் அறிவியலும் தொழில்நுட்பமும் பல படிகள் முன்னேறிவிட்டபடியால் எவ்வித நுட்பமான பொருளையும் பிளாஸ்டிக், உலோகம் அல்லது கலப்புப்பொருட்களால் இந்த 3டி நுட்பத்தைப்பயன் படுத்தி தயாரித்து விடமுடியும்" என்கிறார் வாகன ஆராய்ச்சி மையத்தின் இன் தலைவர் ஜே பாரன்.

    தொள்ளாயிரத்து எண்பதுகளுக்குப்பின்னர் தொடங்கின இந்த 3டி பிரிண்டிங் என்பது இப்போது பன்மடங்குப்பெருகி ஏரோப்ளேன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது.

    கூட்டு உற்பத்தியின் ஆரம்பமான இந்த 3டி பிரிண்டிங் நுட்பம் முதல் முதலில் இணைக் கப்பட்ட படிம மாடலிங் என்ற சிக்கலான பெயர் கொண்ட நுட்பத்தைப்பயன்படுத்தியதாம். இன்றளவும் இதே நுட்பம்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறதாம்.


    ஸ்ட்ராடி என்றுபெயர் கொண்ட மேலே சொன்ன சிக்காகோ கார் லோகல் மோட்டார்ஸ் கம்பெனியால் 2014இல் தயாரிக்கப்பட்டது.

    அதே வருடத்தில் உர்பீ என்னும் 3டி பிரிண்ட் உதிரிகள் கொண்ட காரை ஸ்வீடன் தேசத்து Koenigsegg என்னும் கம்பெனி தயாரித்தது.

    2015-ல் ஏர்பஸ் கம்பெனி தங்களுடைய ஏ 350 பிளேனில் கிட்டதட்ட 1000 உதிரி பாகங்கள் 3டி பிரிண்டிங்கில் உருவாக்கப்பட்டதாகச்சொல்லிற்று.

    2015-ல் ராயல் ஏர்போர்ஸ் யுரோனபட்டர் டைபூன் என்னும் போர் விமானம் 3டி பிரிண்டிங்கில் தயாரித்த உதிரிகளுடன் பறந்தது.

    இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 3டி பிரிண்டிங்கில் போர் விமான உதிரிகள் தயாரிக்கும் வழக்கத்தை தொடங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இன்றும் உலோகப்பொருள் கொண்ட தயாரிப்பில் கேஸ்டிங், பே்பரிகேஷன், ஸ்டாம்பிங், மேஷினிங் போன்ற தயாரிப்பு முறைகளே அதிகமிருந்தாலும் கூடிய சீக்கிரம் இவை குறைந்து 3டி பிரிண்டிங் தயாரிப்பு மேலோங்கும் என்பது விற்பனர்களின் கணிப்பு.

    இன்று இந்த 3டி பிரிண்டிங் இயல் மிக அதிகமாகப்பயன்படுத்தப்படுவது தொல் பொருள் ஆராய்ச்சி மற்றும் மியூசியம்களின் பராமரிப்பில் என்றே சொல்லலாம். புராதன சிற்பங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உடைந்திருக்குமானால் இந்த 3டி பிரிண்டிங்கினால் சரியான அளவுக்கேற்ப அந்த உடைசல்களைச்செய்து ஒட்ட வைத்து தொல் பொருட்களின் பழமை அழியாதவாறு காப்பதோடு அவற்றை இன்னும் சுலபமாகப்பராமரிக்க முடியும்.

    நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்,இந்த 3டி பிரிண்டிங் நுட்பத்தால் துப்பாக்கிகளும் தயாரிக்க முடியும்!

    பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த தொழில் நுட்பம் ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆகவே அமெரிக்கா முதற்கொண்டு இந்த 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தை முறையாக க்கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். இண்டர்நெட் மூலமாக பல துப்பாக்கி தயாரிக்கும் பிளான்கள் நடமாடி வருவதைக்கண்டு அமெரிக்கா அவற்றைத்தடுத்திருக்கிறது.

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தையே கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் வாதடி வர, மற்றொரு சாரார், அது தனிப்பட்ட உரிமையைப்பறிப்பதாய் முடியும் என்பதோடு இந்த அபார 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தையே முடக்கிப்போட்டுவிடும் என்கிறார்கள். அதற்கு பதிலாக துப்பாக்கிக்குண்டுகளைக்கட்டுபடுத்துங்கள் என்று கேலி பேசுகிறார்கள்!

    இந்த 3டி பிரிண்டிங் மருத்துவ உலகிலும் புரட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. முக்கியமாக செயற்கை உடலுறுப்புக்கள் தயாரிப்பில் 3டி பிரிண்டிங் நுட்பம் மிக அதிகமாக பயன்பட ஆரம்பித்துவிட்டதைக்காண்கிறோம். உறுப்புகள் மட்டுமின்றி பேஷண்ட்டின் உடல் கூறுக்கேற்ப ஆபரேஷன் செய்யத்தேவையான உபகரணங்களையும் தயாரித்து அந்த பேஷண்ட்டுக்கே உரித்தான தனிப்பட்ட கூறுகளின் அளவுக்கேற்ப மிகத்துல்லியமாக ஆபரேஷன் செய்ய முடிவதை இந்த 3டி பிரிண்டிங் நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது.

    "டாக்டர்! வலிக்கிறதுரொம்ப!"

    "எது இந்த ஸ்கால்பெல் படும்போதா?"

    "ஆமாம் டாக்டர்!"

    "சரி ரெண்டு நிமிஷம் பொறுங்கள்! சிஸ்டர்! 4.3 ஸ்கால்பெல் ஒண்ணு 3டி பிரிண்ட் பண்ணிண்டு வாங்க!"

    ஆம்! ரெண்டே நிமிஷத்தில் பேஷண்ட்டுக்குத்தோதான கருவிகள் தயாரித்து ஆபரேஷனைத்தொடர முடியுமாம்!

    "ஏம்மா! ஒவ்வொரு நாளும் நீ மாஞ்சு மாஞ்சு மசாலா அரைக்கிறியே நா வேணா இந்த தீபாவளிக்கு கிரைண்டிங் மெஷீன் வாங்கித்தரட்டுமா?"

    "ஒண்ணும் வேணாம்! நீங்க பேசாம 3டி பிரிண்டிங் மெஷீன் ஒண்ணு வாங்கியாங்க! கிரைண்டரோ மிக்ஸியோ நானே தயாரிச்சுக்கறேன்!"

    நடக்கப்போகிறது!

    உங்களூக்கு ஒன்று தெரியுமா? எனது நண்பர் பிரசன்னா 3டி பிரிண்டிங்கில் செய்த அயோத்தி ராமர் கோவிலை தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

    Next Story
    ×