என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நீண்ட ஆயுளை தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்
    X

    நீண்ட ஆயுளை தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்

    • ஒரு தடவை சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெறுவதற்கு பிரம்மா ஆசைப்பட்டார்.
    • பிரம்மன் வில்வ விதைகளுடன் பூமிக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று விதைத்தார்.

    கும்பகோணம் ஆன்மிக யாத்திரையில் சில ஆலயங்கள் தவற விடக்கூடாத பட்டியலில் இருக்கும். அதில் முதன்மையானது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர் ஆலயம் ஆகும். மயிலாடு துறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கடையூர் ஆலயம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருக்கடையூருக்கு அடிக்கடி பஸ் வசதியும் இருக்கிறது.

    பொதுவாக திருக்கடையூர் என்றதும் அனைவருக்கும் 60-ம் கல்யாணம் நிகழ்வுதான் நினைவுக்கு வரும். திருக்கடையூரில் 60-ம் கல்யாணம் செய்வதற்கு திதி, நாள், நட்சத்திரம் என்று எதுவும் பார்க்க தேவையில்லை. எனவே தினமும் அங்கு 60-ம் கல்யாணம் நடந்து கொண்டே இருப்பது சிறப்பாகும்.

    இந்த ஆலயத்துக்கு செல்லும் முன்பு அதன் தல வரலாற்றை தெரிந்து கொள்வது நல்லது.

    ஒரு தடவை சிவபெருமானிடம் ஞான உபதேசம் பெறுவதற்கு பிரம்மா ஆசைப்பட்டார். இதற்காக பிரம்மா கைலாயம் புறப்பட்டு சென்றார். சிவனை சந்தித்து உபதேசம் செய்யுங்கள் என்றார். உடனே சிவபெருமான் கை நிறைய வில்வ விதைகளை எடுத்து பிரம்மன் கைகளில் கொடுத்தார்.

    "இந்த வில்வ விதைகளை பூமிக்கு எடுத்து செல். அங்கு இந்த விதைகளை பூமியில் பதித்து பார். எந்த இடத்தில் வில்வ விதை விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் மரமாக வளர்கிறதோ அந்த இடத்தில் இருந்து என்னை வேண்டிக்கொள். நான் அங்கு வந்து உனக்கு உபதேசம் செய்கிறேன்" என்றார்.

    அதன்படி பிரம்மன் வில்வ விதைகளுடன் பூமிக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று விதைத்தார். திருக்கடையூரில் வில்வ விதைகளை விதைத்த போது அவை ஒரு நாழிகைக்குள் விருட்சங்களாக வளர்ந்தன. அங்கு அமர்ந்து சிவனை நோக்கி பிரம்மா தியானம் செய்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அந்த தலத்தில் தோன்றி பிரம்மாவுக்கு காட்சி அளித்தார். பிரம்மா கேட்ட ஞான உபதேசத்தையும் செய்தார். இதனால் இந்த தலத்து சிவபெருமா னுக்கு ஆதி வில்வநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

    இதையடுத்து வந்த யுகத்தில் பாற்கடலில் அமிர்தம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் பணிகளை தொடங்கினார்கள். அப்போது தேவர்கள் விநாயகரை வழிபடாமல் பணிகளை தொடங்கியதால் பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை விநாயகர் எடுத்து மறைத்து வைத்துவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்டு அமிர்த கலசத்தை தேவர்கள் திரும்ப பெற்றனர்.

    பின்னர் அந்த அமிர்த கலசத்தை திருக்கடையூரில் சிவபூஜை செய்வதற்காக வைத்திருந்தனர். அப்போது அமிர்த கலசம் வைக்கப்பட்ட இடத்தில் லிங்கம் ஒன்று தானாக உருவானது. அந்த சுயம்பு லிங்கத்துக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயரிட்டு வழிபட்டு வருகிறார்கள்.


    இந்த அமிர்தகடேஸ்வரர் எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்து விட்டு தனது பக்தனை காப்பாற்றிய சிறப்புக்குரியவர். அதன் பின்னணியிலும் ஒரு புராண கதை உள்ளது.

    திருக்கடையூர் அபி ராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர் சுப்பிரமணியன். இவர் தை அமாவாசை நாளில் கோவிலில் அபிராமி அம்மனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்ட மராட்டிய மன்னர், திருக்கடையூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் அபிராமி அம்மன் சன்னதியில் இருந்த சுப்பிரமணிய பட்டர் மன்னரை கவனிக்காமல் தன்னை மறந்து அபிராமி அம்மனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இதைக்கண்ட மன்னர், சுப்பிரமணிய பட்டர் தியானத்தில் இருந்து விழித்ததும், "இன்று என்ன திதி?" என்று கேட்டார். அப்போது சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனின் திருமுகத்தை மனதில் நினைத்தவாறு இன்று "பவுர்ணமி" என்று தவறாக கூறிவிட்டார்.

    இதனால் சினம் கொண்ட மன்னர் இன்று இரவு வானில் முழு நிலவைக் காட்ட வேண்டும். முழு நிலவு தோன்றாவிட்டால் உங்களை (சுப்பிரமணியபட்டரை) அக்னி குண்டத்தில் ஏற்றி விடுவேன்" என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    மன்னர் அங்கிருந்து சென்ற பிறகுதான், சுப்பிரமணிய பட்டருக்கு தான் தவறாக அமாவாசை நாளை பவுர்ணமி என கூறியது நினைவுக்கு வந்தது. இதனால் அச்சம் அடைந்த சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நினைத்து வழிபட தொடங்கினார். இது ஒரு புறம் இருக்க அபிராமி அம்மன் சன்னதி எதிரே சுப்பிரமணிய பட்டரை அக்னி குண்டத்தில் ஏற்ற ஏற்பாடுகள் தொடங்கியது.

    எரியும் நெருப்பின் மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணிய பட்டர் ஏற்றப்பட்டார். சுப்பிரமணிய பட்டரும் அபிராமி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார்.

    79-வது பாடலை சுப்பிரமணியபட்டர் பாட தொடங்கும் போது, அன்னை அபிராமி அம்மன் வானில் காட்சி தந்து, தனது இடது காதில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாள். அது பல கோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் வெளியிட்டது. இதனால் அமாவாசை இருள் நீங்கி, வானில் முழு பவுர்ணமி நிலவு தோன்றியது.

    உறியின் கீழே மூட்டப் பட்டிருந்த நெருப்பு முழுவதும் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. மன்னர் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமி அம்மனின் அருளையும், சுப்பிரமணிய பட்டரின் பக்தியையும் எண்ணி மெய் சிலிர்த்தனர். மேலும் சுப்பிரமணிய பட்டருக்கு 'அபிராமி பட்டர்' என்ற பட்டத்தை மன்னர் சூட்டினார். தை அமாவாசை தினத்தன்று, ஆண்டு தோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படு வதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படுகிறது.

    வருகிற 9-ந்தேதி தை அமாவாசை தினமாகும். அன்று அர்ச்சகர்கள் அபிராமி அந்தாதியில் ஒவ்வொரு அந்தாதியாக பாடி அம்பிகைக்கு தீபாராதனை காட்டுவார்கள். 79-ம் பாடல் பாடும்போது மின் விளக்கினை எரியச்செய்வார்கள். இதை கண்டு தரிசிக்க பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

    இது போல சித்திரை மாதம் மகம் நட்சத்திரம் அன்று நடக்கும் எமசம்காரமும் முக்கியமானது. இதன் பின்னணியிலும் ஒரு புராண கதை உள்ளது. மிருகண்டு முனிவர்- மருத்துவதி அம்மாள் தம்பதிகளின் மகன் மார்க்கண்டேயன். 16 வயதில் இறந்து விடுவான் என்று ஜோதிட கணிப்பு மூலம் தெரிந்தது.

    இதனால் மார்க்கண்டேயன் யாத்திரை மேற்கொண்டு சிவாலயங்களில் வழிபட்டான். 108-வது தலமாக திருக்கடையூர் வந்தபோது அவனது உயிரை பறிக்க எம தர்மன் முயற்சி செய்தான். அப்போது மார்க்கண்டேயன் ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை கட்டி பிடித்து கொண்டான்.

    இதனால் மார்க்கண்டேயன் மீது வீசிய எமனின் பாச கயிறு சிவன் மீதும் பட்டது. இதனால் கோபம் அடைந்த சிவபெருமான் காலால் எட்டி உதைத்து எமனை சம்காரம் செய்தார். பிறகு எமனை உயிர்ப்பித்து அருளினார். இதைத்தான் சித்திரை மாதம் எமசம்காரமாக நடத்துகிறார்கள்.

    கார்த்திகை சோமவாரத்தில் ஆயிரத்து எட்டு சங்காபிஷேகம் இந்த தலத்தில் புகழ் பெற்றது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த ஆல யம் 274 பாடல் பெற்ற தலங்க ளில் 110-வது தேவார தலமாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், ஜென்ம நட்சத்திரம், ஆயுள் ஹோமம் ஆகியவை மிக மிக சிறப்பாக நடத்தப்படுகின்றன.

    தமிழகத்தில் இந்த பூஜைகள் இந்த தலத்தில் நடத்துவதை மட்டுமே சிறப்பாக மக்கள் கருதுகிறார்கள். 59 வயது முடிந்து 60 வயது தொடங்குபவர்கள் உக்ர ரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது நிறைவான வர்கள் 61-வது வயது தொடங்கும் போது சஷ்டியப்தபூர்த்தி பூஜை செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    அதுபோல 70 வயது நிறைவு பெற்று 71-வது வயதை தொடங்கு கிறவர்கள் பீம ரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81-வது வயதை தொடங்குகிறவர்கள் சதாபி ஷேகம், ஆயுள் ஹோமம் செய்வது உண்டு. இந்த பூஜைகளை செய்ய இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்குள்ள அம்பாள் அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். அபிராமியை வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும். இங்குள்ள காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் நோய்கள் விலகி ஆயுள் அதிகரிக்கும். நீண்ட ஆயுளுடன் வாழ தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு இந்த பூஜையை செய்கிறார்கள்.

    கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் இந்த பூஜையை தவற விடாமல் செய்வது மிகவும் நல்லது. இந்த தலத்தில் கல்யாண மாலை சாத்தினால் திருமணம் கைகூடும். சங்காபிஷேகம் செய்தால் நோய்கள் விலகும். ருத்ராபி ஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மிருத்யுஞ்சய பூஜை செய்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் விலகி விடும்.

    சில பெண்கள் மாங்கல்ய தோஷத்தை நினைத்து கவலைப்படுவார்கள். அவர்கள் அபிராமி காலடியில் தாலி காணிக்கை செலுத்தி விட்டு புது தாலி அணிந்து கொண்டால் தோஷம் விலகும் என்கிறார்கள். திருக்கடையூர் ஆலயம் சித்தர்கள் மகிமை நிறைந்த ஆலயம் ஆகும். எனவே முதலில் அகத்தியர் வழிபட்ட பாபக ரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணிய கரேஸ்வரர் ஆகிய இருவரையும் வழிபட்ட பிறகே மற்ற சன்னதிகளுக்கு செல்ல வேண்டும்.

    இந்த தலத்தில் நவக் கிரகங்கள் கிடையாது. அனைத்து ஆற்றல்களும் சிவபெருமானிடமே ஒடுங்கி உள்ளன. எனவே இங்கு ஒருவர் என்ன வேண்டிக் கொள்கிறாரோ அவை அனைத்தும் தங்கு தடையில்லாமல் நடக்கும் என்பது சிறப்பு அம்சமாகும்.

    Next Story
    ×