என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • ஜடாயு ராமாயணத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக வருகிறது.
    • ராமனுக்காக உயிர்த்தியாகம் செய்த பறவை.

    ஜடாயு என்கிற வீரக் கழுகு ராமாயணத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக வருகிறது. ராமனுக்காக யுத்த காண்டத்தில் நிறையப்பேர் உயிர் துறக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக முதன்முதலில் ராமனுக்காக உயிர்த்தியாகம் செய்த பறவை அது.

    அலகிலா விளையாட்டு உடையானுக்காக, அவன் மனைவியைக் கவர்ந்த ராவணன் முகத்தில் அலகினால் விளையாடிய பறவை.

    ராமன் ஜடாயுவின் நண்பரான தசரதரின் புதல்வன் என்பதே ஜடாயு ராமனிடம் பாசம் கொள்ளக் காரணம். தசரதர் ஜடாயு நட்பு எப்படி ஏற்பட்டது என்றொரு கதை உண்டு.

    கோசலைக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தால் பிறக்கும் குழந்தை மூலம் தான் வதம் செய்யப்படுவோம் என்ற ரகசியத்தை பிரம்மனிடமிருந்து அறிந்துவிடுகிறான் ராவணன். எனவே கோசலையைக் கவர்ந்து, தசரதர் பார்க்க இயலாதவாறு அவளை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி நதியில் உருட்டி விடுகிறான்.

    தசரதர் தற்செயலாகப் பெட்டியைப் பார்க்கிறார். பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது என்றறிய ஆவல் கொண்டவராய்ப் படகில் பெட்டியைத் தொடர்ந்து செல்கிறார். பெட்டி நீரில் மிதந்தவாறே விலகி விலகிச் செல்கிறது. படகோட்டிய தசரதர் பெரிதும் களைப்படைகிறார்.

    அப்போது மேலே பறந்து வருகிறது ஜடாயு. களைத்திருந்த தசரதரைப் பார்த்துப் பரிவுகொள்கிறது அது. தன் முதுகில் அவரை ஏற்றிக் கொண்டு நீரில் மிதந்து செல்லும் பெட்டியைத் தொடர்ந்து வானில் பறந்து செல்கிறது. பெட்டி கரை ஒதுங்கிய இடத்தில் தசரதரை ஜடாயு இறக்கி விடுகிறது.

    பெட்டியைத் திறந்தால் உள்ளே கோசலை! அவள் மலங்க மலங்க விழித்தவாறே பெட்டியை விட்டுக் கீழே இறங்குகிறாள். அங்கே தோன்றுகிற நாரதர் அவர்களுக்குத் திருமால் மகனாகப் பிறக்கப் போகிற விஷயத்தைச் சொல்லி, இருவருக்கும் ஜடாயு சாட்சியாகத் திருமணம் செய்துவைக்கிறார்.

    தான் மணம் செய்துவைத்த தசரதருக்கும் கோசலைக்கும் பிறந்த மைந்தன் என்பதால்தான் ராமன் மேல் ஜடாயுவுக்கு அலாதி பாசம்.

    ராவணன் சிவனிடம் வரம்பெற்று வாங்கிய வாள் சந்திரஹாசம் என்கிற மகாசக்தி நிறைந்த வாள். அதுமட்டும் ராவணன் கையில் இருந்தால் ராமனால் அவனை வென்றிருக்க முடியாது.

    ஆனால் அந்த அபூர்வமான வாளை அவனுக்குத் தந்தபோது சிவன் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். போர் தர்மப்படிப் போர் செய்தால்தான் ராவணனிடம் வாள் நிலைத்திருக்கும். இல்லாவிட்டால் அவனை விட்டு அது விலகிச் சென்று விடும்.

    ஜடாயுவுடன் போர்புரிந்து அதன் சிறகுகளைச் சந்திரஹாச வாளால் வெட்டிய பின் அசோக வனத்தில் சீதையை விட்டுவிட்டு மண்டோதரி இல்லம் தேடிப் போகிறான் ராவணன்.

    மண்டோதரி, `பிரபே! போகும்போது சந்திரஹாச வாளை எடுத்துச் சென்றீர்களே? உங்கள் உயிரைக் காக்கும் வாள் அல்லவா அது? இப்போது அதைக் காணவில்லையே? அது எங்கே?` என்று கவலையோடு கேட்கிறாள்.

    ராவணன் திகைக்கிறான். சந்திரஹாச வாள் அவனை விட்டு மறைந்து விட்டது! `அது எப்படி மறைந்தது, நான் போர் தர்மப்படித் தானே போர் செய்தேன்?` என்கிறான் ராவணன்.

    அவன் ஜடாயுவுடன் செய்த போர் பற்றி அவனிடமே கேட்டறிந்த மண்டோதரி அவன் போர் தர்மப்படிப் போர் செய்யவில்லை என்ற உண்மையைத் துயரத்தோடு விளக்குகிறாள்.

    ஆயுதத்தால் போர் செய்பவர்களை ஆயுதத்தால் தாக்கலாம். ஆனால் உடலால் தாக்குபவர்களை கை கால் முதலிய உறுப்புகளைக் கொண்டே தாக்க வேண்டும்.

    ஜடாயு அதன் உடலின் உறுப்பான அலகால் தானே தாக்கியது? அப்படியானால் போர் தர்மப்படி ராவணனும் தன் உடல் உறுப்புகளால் தானே அதைத் தாக்கியிருக்க வேண்டும்? எப்படி ஆயுதமான வாளால் தாக்கலாம்?

    போர் தர்மப்படிப் போர் நிகழ்த்தாததால்தான் சந்திரஹாச வாள் ராவணனை விட்டுச் சென்றுவிட்டது என்பதை மண்டோதரி வருத்தத்தோடு தெரிவித்தபோது அவள் மனம் மிகுந்த சோர்வடைகிறது.

    என்றைக்கு ராவணனிடமிருந்து அந்த வாள் மறைகிறதோ அன்றிலிருந்து ராவணன் வீழ்ச்சி ஆரம்பம் என்ற ரகசியம் அவளுக்கு ஏற்கெனவே அவள் வழிபடும் சிவபெருமானால் சொல்லப் பட்டிருக்கிறது.

    ராவண வதமே ராம அவதாரத்திற்கான நோக்கம். அதற்கு ராவணனை பலவீனப்படுத்துவது முக்கியம். சந்திரஹாச வாளை அவனிடமிருந்து அகற்றியதன் மூலம் ராவண வதத்திற்கான பிள்ளையார் சுழியைப் போட்ட பெருமை ஜடாயுவுக்கு உண்டு.

    ராவணனால் சிறகுகள் முறிக்கப்பட்டு மண்ணில் சாய்ந்த ஜடாயு, ராமனின் வருகைக்காக உயிரைப் பிடித்துவைத்துக் கொண்டு காத்திருந்தது.

    சீதையைத் தேடியவாறு ராம லட்சுமணர்கள் ஜடாயு வீழ்ந்து கிடக்கும் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

    வழியில் வீணைக்கொடி ஒன்று சிதைவுற்றுக் கிடப்பதைக் கண்டார்கள். எனவே வீணையைக் கொடியாகக் கொண்ட அரக்கனின் தேர் அங்கு வந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

    அரக்கனது வில் முறிந்து கிடப்பதையும் பார்த்தார்கள். அது ஜடாயு வாழும் பிரதேசமாகையால் ஜடாயுதான் தன் அலகால், வந்த அரக்கனின் வில்லை முறித்திருக்க வேண்டும் என்பதையும் யூகித்து அறிந்துகொண்டார்கள்.

    அரக்கனின் அம்பறாத் துணி, கவசம் போன்றவையும் ஆங்காங்கே கீழே விழுந்து கிடந்ததைக் கண்டார்கள். திகைப்புடன் அதே பாதையில் தொடர்ந்து நடந்தார்கள். ஓர் இடத்தில் அரக்கனது குண்டலங்கள் சிதறிக் கிடப்பதையும் கூடக் கண்டார்கள்.

    ஜடாயுவுக்கும் வந்த அரக்கனுக்கும் இடையே கடும் போர் நடந்திருக்கிறது என்பதற்கான சாட்சியங்கள் அவர்கள் கால்வைத்த இடங்களில் எல்லாம் தென்பட்டன.

    ராம லட்சுமணர்கள் ஜடாயு எங்கே என்று அந்தக் கழுகைத் தேடிப் பாசத்தோடு ஓடினார்கள். அந்த வீரம் நிறைந்த கழுகு குற்றுயிரும் குலை உயிருமாக அவர்களின் வரவை எதிர்பார்த்துத் தன் சிறிய விழிகளைத் திறந்தவாறு மண்ணில் கிடந்தது.

    ஜடாயுவின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான் ராமபிரான். நடைபெற்ற அனைத்தையும் மரணப் படுக்கையில் இருந்த ஜடாயுவிடம் முழுமையாகக் கேட்டு அறிந்தார்கள் ராம லட்சுமணர்கள்.

    வந்தவன் பத்துத்தலை அரக்கன் என்பதையும் அவன் சென்ற வழி தென்திசை என்பதையும் அவர்களிடம் பெருமூச்சு வாங்கச் சொன்னது அந்தக் கழுகு. ஜடாயு இறக்கப் போகிற தருணம்.

    ஜடாயு சொன்ன விவரங்களைக் கேட்ட ராமனுக்குச் சீற்றம் பொங்கியது. `இவ்வளவு நடந்திருக்கிறது, இந்த உலகம் சும்மா இருந்து விட்டதே? இந்த உலகை என்ன செய்கிறேன் பார்!` என அவன் வில்லை வளைத்தான்.

    ஜடாயு நகைத்தது. உயிர் போகிற தறுவாயில் கூட, யாருக்காக உயிரை விடுகிறதோ அவரிடமே நியாயத்தை தைரியமாக எடுத்துச் சொல்ல அது மறக்கவில்லை.

    `கொம்பிழை மானின் பின்போய்க் குலப்பழி தேடிக் கொண்டீர்! உம்பிழை என்பதல்லால் இதில் உலகுசெய் பிழை என்ன?` என்று ஜடாயு கேட்டதாக எழுதுகிறார் கம்பர்.

    சீதையை அருகே இருந்து காப்பாற்றாமல் தவறு செய்துவிட்டு உலகைக் கோபிப்பது என்ன நியாயம் என்ற ஜடாயுவின் கேள்வி ராமன் நெஞ்சைச் சுட்டிருக்க வேண்டும். ராமன் தலை குனிந்தான். ஜடாயுவின் தலை மண்ணில் சாய்ந்தது...

    அதன்பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் வியப்பளிப்பவை. மனித ராமன் பறவையான ஜடாயுவுக்கு ஈமக்கடன் செய்ய முற்பட்டான். மணலால் பெரிய மேடை அமைத்தான்.

    லட்சுமணன் உதவியோடு சந்தனக் கட்டைகளைக் காட்டிலிருந்து வெட்டிவந்தான். மணல் மேடையின் மேல் நறுமணம் கமழும் அந்தக் கட்டைகளை அடுக்கினான்.

    கானகமெங்கும் விளைந்திருக்கும் தருப்பைப் புல்லைப் பறித்து அந்தக் கட்டைகளின் மீது சமமாகப் பரப்பினான். அந்த தருப்பைப் படுக்கையின் மேல் வண்ண வண்ண மலர்களைப் பறித்து வந்து பரப்பி ஒரு மலர்ப் படுக்கை அமைத்தான்.

    பின்னர் நதியிலிருந்து நீர் எடுத்துவந்து ஜடாயுவின் உடலை நீராட்டினான். அப்போது ராமன் விழிகளிலிருந்து பெருகிய நீரும் அந்த நதி நீரோடு சேர்ந்தே ஜடாயுவை நீராட்டியது.

    தன் மனைவியைக் காப்பாற்றும் பொருட்டாகக் கடுமையாய்ப் போரிட்டு அந்தப் போரில் உயிரையே துறந்துவிட்ட அந்த வீரப் பறவையின் உடலை மெல்லத் தன் நீண்ட கரங்களால் பூப்போல அள்ளி எடுத்து, மலர்ப் படுக்கையில் கிடத்தின ராமனின் தாமரைப்பூங் கரங்கள்.

    பின்னர் சந்தனம், மலர், நீர் முதலியவற்றை ஜடாயுவின் உடலின் மீது சொரிந்த ராமன் மந்திரங்களை உச்சரித்தவாறு, தன் தந்தைக்குக் கொள்ளி வைப்பதுபோன்ற நெகிழ்ச்சியுடன் ஜடாயுவின் உடலுக்குக் கொள்ளி வைத்தான். நெருப்பு கணகணவெனக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

    ஒரு பறவைக்குக் கடவுளே கொள்ளி வைக்கும் பெரும்பேறு கிடைத்த மகத்துவத்தை எண்ணி வானிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் வியந்தார்கள்.

    அதன்பின்னர் ராமனும் லட்சுமணனும் அருகேயிருந்த ஒரு காட்டாற்றில் குளித்தார்–கள். நதிக்கரையில் ராமன் ஜடாயுவுக்கு மிகுந்த பாசத்தோடு நீர்க்கடன் செய்தான்.

    `நம் தந்தைக்கு நாம் செய்ய இயலாமல் போன ஈமக் கடனை நம் தந்தையை போன்ற ஜடாயுவுக்குச் செய்து நாம் ஆறுதல் அடைகிறோம் லட்சுமணா!` என ராமன் சொன்னபோது லட்சுமணன் விழிகளிலும் கரகர–வெனக் கண்ணீர், வெள்ளமாய்ப் பெருகியது.

    பின்னர் ஒருவாறு தங்கள் மனத்தைத் தேற்றிக் கொண்டு அவர்கள் இருவரும் சீதையைத் தேடித் தொடர்ந்து நடக்கலானார்கள் என்கிறது ராமாயணம்.

    ஒரு சிறிய பறவைப் பாத்திரமான ஜடாயுவை படிக்கும் நம் மனத்தில் பறந்துபோகாமல் நிலையாக நிற்கும்படிச் செய்துவிட்டது ராமாயணம்...

    தொடர்புக்கு- thiruppurkrishnan@gmail.com

    • முதல் உலகப் போர் வருவதை முன் கூட்டியே சொன்னவர் அவர்.
    • ஆந்திரபிரதேசம், தெலுங்கானா பிரிவினை பற்றியும் அவர் முன்னதாகவே எடுத்துரைத்தார்.

    இன்று உதிக்கின்ற நாள் நல்ல நாளாக நமக்கு அமைய வேண்டும் என்று விரும்பாதோர் இல்லை. அது நல்ல நாள் தானா என்று அறிய விரும்புவோர் பலரும் ஜோதிடத்தை அணுகுவதில் வியப்பே இல்லை.ஆனால் அதே சமயம் ஜோதிடத்தை நம்பாதே என்று சொல்வோரும் உண்டு.

    ஜோதிடத்தை உலக அரங்கில் புகழோங்க வைத்து அதை அறிவியல் ரீதியாக உயரத்தில் ஏற்றி பிரமிக்க வைத்தவர் பெங்களூர் வெங்கட் ராமன் ஆவார். பி.வி.ராமன் என்ற பெயரை ஜோதிட ஆர்வம் கொண்டோரில் அறியாதார் யாரும் இல்லை.

    பிறப்பும் இளமையும்: பி.வி.ராமன் பெங்களூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1912-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று பிறந்தார். கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தவர் பெங்களூரில் பட்டப்படிப்பை முடித்தார். ஆனால் இயல்பான ஆர்வம் இவருக்கு ஜோதிடத்தின் மேலேயே இருந்தது. இதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தவர் இவரது பாட்டனாரானசூர்யநாராயண ராவ் என்னும் பிரபல ஜோதிடரே.

    சூர்யநாராயண ராவ்: 1885-ம் ஆண்டு ஒரு நாள் தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் கர்நாடகத்தில் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த போது ஒரு இளைஞர் குப்பி ரெயில் நிலையத்தில் இறங்கினார்.

    அப்போதுதான் ஷிமோகாவுக்கு எஸ்.எம். ரெயில்வே, ரெயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே அவர் மாட்டு வண்டியில்தான் ஷிமோகாவுக்குச் செல்ல வேண்டும். 150 மைல் தூரத்தில் உள்ள ஷிமோகாவை அடைய நாள் ஒன்றுக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்.

    மாட்டு வண்டியில் ஏறிய இளைஞருக்கு நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஏழை வைதிகர் தென்பட்டார். அவரிடம் "நீங்கள் எங்கே போக வேண்டும்" என்று கேட்ட இளைஞருக்கு, "ஷிமோகாவுக்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்சைப் பார்க்கப் போகிறேன். அவரிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன். என் பெயர் சுப்பராய சாஸ்திரி" என்ற பதில் வந்தது.

    அவரை, "என்னுடன் வண்டியில் வாருங்கள்" என்று அழைத்தார் அந்த இளைஞர். அடுத்த எட்டு நாட்களில் அவருடனான உரையாடல் அந்த இளைஞரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.

    சகல வித கலைகளையும் நுட்பங்களையும் கூறும் இந்து மத நூல்களை அவர் அப்படியே ஒப்புவித்து அர்த்தமும் சொன்னார். இந்து மத நூல்கள் அனைத்தும் தற்காலத்திய அறிவியலுக்கு ஒத்து வராதவை என்ற எண்ணம் திடமாக இருந்த அந்த இளைஞரின் மனம் மாறியது.அந்த இளைஞர்தான் பி.வி.ராமனின் பாட்டனாரான சூர்யநாராயண ராவ்.

    வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் ஜோதிடக் கலையை நன்கு கற்று பிரபலமான ஜோதிடராக ஆனார். முதல் உலகப் போர் வருவதை முன் கூட்டியே சொன்னவர் அவர். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தன் பேரனான பிவி.ராமனுக்கு ஜோதிடத்தின் நுட்பத்தை விவரித்து அவரைப் பெரும் ஜோதிடராக ஆக்கியவர் இவரே.

    ச. நாகராஜன்

    ச. நாகராஜன்

    அஸ்ட்ராலஜிகல் மாகசைன்: 1895-ல் அஸ்ட்ராலஜிகல் மாகசைன் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஜோதிட சம்பந்தமான கட்டுரைகளை வெளியிட்டு உலகின் பார்வையை ஜோதிடத்தின் பக்கம் திருப்பினார் சூர்யநாராயணராவ். பல்வேறு ராஜாக்களும் மந்திரிகளும் வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டு பிரமித்தனர். இருபது வருடங்களுக்கும் மேலாக நடந்து வந்த பத்திரிகை அவரது உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது.

    மிகுந்த கஷ்டப்பட்டு தன் பாட்டனார் ஆரம்பித்த பத்திரிகையை மீண்டும் 1936-ம் வருடம் ஆரம்பித்த பி.வி.ராமன் 1998 முடிய அதன் ஆசிரியராக தான் மறையும் வரை 62 ஆண்டுகள் இருந்தார். அதில்தான் அவரது கணிப்புகள் இடம் பெற்று வந்தன.அதில் அவர் குறிப்பிட்ட ஏராளமான கணிப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கு கீழே பார்க்கலாம்.

    பாகிஸ்தான் பிரிவினை: 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினை ஏற்படும் என்பதை அவர் முன்னதாகவே உரைத்தார். ஆந்திரபிரதேசம், தெலுங்கானா பிரிவினை பற்றியும் அவர் முன்னதாகவே எடுத்துரைத்தார்.

    காந்திஜி மறைவு: மகாத்மா காந்திஜியின் மறைவு குறித்து 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே அவர் சூசகமாகக் குறிப்பிட்டு விட்டார். "மாபெரும் இந்தியத் தலைவர் சனி கிரகம் கடகத்தில் நுழையும்போது கொல்லப்படுவார்" என்ற அவரது வரிகள் 1948, ஜனவரி 30-ம் நாள் காந்தியடிகள் சுடப்பட்டபோது மெய்யானது.

    ஹிட்லரின் முடிவு: இரண்டாம் உலகப் போரால் நாளுக்கு நாள் உலகை ஹிட்லர் பயமுறுத்தி வந்த நேரம். உலக மக்கள் ஹிட்லருக்கு ஒரு முடிவு வராதா என்று ஏங்கி இருந்த நேரத்தில் 1943-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் எழுதினார் இப்படி: 11-10-1944 முதல் ஒன்பது மாதங்கள் சந்திரனின் தசாபுக்தி காலத்தில் ஹிட்லரின் முடிவு ஏற்படும். ஹிட்லரின் முடிவு கொடூரமாக அமையும்".

    அவர் கூறியபடியே ஹிட்லர் 30-4-1945 அன்று தற்கொலை செய்து கொண்டார். ஹிட்லரைப் பற்றி அவர் எழுதிய கணிப்பைக் கூறும் புத்தகங்கள், கட்டுரைகள் ஜெர்மனியில் நாஜிக்களால் எரிக்கப்பட்டன. அவை அங்கு ஹிட்லரால் தடை செய்யப்பட்டன.

    சீன ஆக்கிரமிப்பு, இந்தியா- பாகிஸ்தான் போர்: இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கும்: போர் உருவாகும் என 1962-ல் அவர் முன்னதாகவே உரைத்தது அப்படியே மெய்யானது.

    அதே போல இந்தியா-பாகிஸ்தான் போர் பற்றி 1965-லும் 1973-லும் அவர் எழுதியது அப்படியே பலித்தது. பங்களாதேஷ் விடுதலை, அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் வீழ்ச்சி, சுகர்ணோவின் வீழ்ச்சி, அயூப்கானின் ராணுவ ஆட்சி, கென்னடி சுடப்பட்டது, மார்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட ஏராளமான விவரங்களைத் துல்லியமாகக் கணித்து அவர் முன்னதாகவே எழுதியதும் உரைத்ததும் உலக மக்களை வியக்க வைத்தது.

    அரபு – இஸ்ரேல் போர்: 1973 ஜனவரி மாதம் அராபிய – இஸ்ரேல் போர் வரப்போவதை அவர் எழுதி விட்டார். அதாவது பத்து மாதங்களுக்கு முன்பே கூறி விட்டார்.

    ஜோதிடருக்கான தகுதிகள்:

    ஒரு நல்ல ஜோதிடருக்கான தகுதிகளை நமது அறநூல்கள் விவரிக்கின்றன.

    இந்தக் கலை அகன்றது, ஆழமானது, நுட்பமானது. ஆகவே இதை தகுந்த வல்லுநர் ஒருவரிடமிருந்து முறையாகக் கற்க வேண்டும்.அத்துடன் உள்ளுணர்வு இருப்பவர்களே இதைத் திறம்பட கற்று பலன்களைச் சொல்ல முடியும்.

    மனிதர்களின் பலகீனங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆபத்து வருவதாக பயமுறுத்தி பரிகாரம் செய்கிறேன் என்று பணம் பறிப்பவர்களால் ஜோதிடம் ஒரு இழிநிலையை அடைந்தது.

    இப்படி ஒரு இழிநிலை இருந்த காலத்தில் தோன்றி அதை புகழோங்கச் செய்தவர் வராகமிகிரர்.

    அதைப் போலவே தாழ்ந்து கிடந்த ஜோதிடக் கலையை உயர ஏற்றியதால் பி.வி.ராமனுக்கு நவீன வராஹமிஹிரர் என்ற பொருளில் அபிநவ வராகமிஹிரர் என்ற கவுரவப்பட்டப் பெயர் அளிக்கப்பட்டது.

    இது தவிர ஏராளமான விருதுகள் அவரை வந்தடைந்தன. 1947-ல் பிதகோரியன் பல்கலைக்கழகம் அவருக்கு பி.எச்.டி அளித்து அவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது. 1947-ல் ராயல் அஸ்ட்ரானமிகல் சொஸைடியில் அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976ல் ஜூன் மாதம் குமாவோன் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.

    ஐ.நா.வில் உரை: ஜோதிட மேதையின் புகழ் பெருகப் பெருக அவருக்கு உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து அழைப்புகள் வர ஆரம்பித்தன. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் ஜோதிட மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அவர் பங்கேற்றார். நியூயார்க்கில் நடந்த பன்னாட்டு ஜோதிட மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ஹாலந்து கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு சங்கங்களும் பல்கலைக் கழகங்களும் அவரை உரையாற்ற அழைத்தன. ஜோதிஷ ரத்னா, ஜோதிஷ பானு, ஜோதிஷ விஞ்ஞான மார்த்தாண்ட போன்ற பல பட்டங்கள் அவருக்கு அளிக்கப்பட்டன.

    1970-ம் ஆண்டு நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபையில் நவீன யுகத்தில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் ஜோதிடம் பற்றி அவர் ஆற்றிய உரை பன்னாட்டுத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றது. ஜோதிடமும் ஒரு அறிவியல் துறையே என்ற அவரது ஆணித்தரமான சொற்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோரை அவர் பால் ஈர்த்தது.

    ஏராளமான புத்தகங்களை அவர் ஆங்கிலத்தில் எழுதினார். அவை கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின.

    அவரது பத்தொன்பது புத்தகங்களில் அவரது சுயசரிதையான ஆடோ பயாகிராபி ஆப் எ வேதிக் அஸ்ட்ராலஜர் புகழ் பெற்ற ஒன்றாகும். வடமொழியில் இருந்த பல ஜோதிட நூல்களை அவர் ஆங்கிலத்தில் அழகுறத் தரவே ஜோதிட ஆர்வலர்கள் உற்சாகத்துடன் அவற்றை வரவேற்றனர்.

    குடும்பம்: மிக இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது.

    ஆறு மகன்களும், இரு மகள்களும் கொண்ட பெரிய குடும்பத்தைத் திறம்பட இவரது மனைவி ராஜேஸ்வரி ராமன் நிர்வகித்ததோடு தானே யோகா பள்ளி ஒன்றையும் நிறுவி யோகா பயிற்சியையும் அளித்து வந்தார்.

    ராமன் கடுமையான உழைப்பாளி. காலை முதல் நள்ளிரவு வரை தினமும் சுமார் 18 மணி நேரம் அவரது பணி தொடர்ந்தது.

    கர்நாடக இசை மற்றும் நடனத்தில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். யோகாவும், டென்னிசும் அவர் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருக்க உதவின.

    மறைவு: பிறருக்குப் பலன்களைத் துல்லியமாக உரைத்த ஜோதிட மேதை தன் இறுதி பற்றியும் சரியாகக் கூறிவிட்டார்.

    1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே தனக்கு இறுதி நெருங்கி விட்டதை அவர் அறிவித்தார். அது போலவே முதல் நாள் ஏற்பட்ட மாரடைப்பால் மறுநாள் 1998, டிசம்பர் மாதம் 20-ம் நாள் அவர் மறைந்தார்.

    ஜோதிடம் உண்மையா, பொய்யா?

    நவீன யுகத்தில் பெரிதும் கேட்கப்படும் ஒரு கேள்வி ஜோதிடம் உண்மையா? பொய்யா என்ற கேள்வி.

    இதற்கு உலகமே போற்றும் ஜோதிட மேதையின் பதில் இது தான்:-

    இந்துக்களின் வானவியல் மற்றும் ஜோதிடக் கலை அற்புதமானது. உதாரணத்திற்கு கிரகணத்தைச் சொல்லலாம். எவ்வளவு துல்லியமாக அது கணிக்கப்பட்டு வந்தது!

    போலி ஜோதிடர்களாலும், கத்துக்குட்டிகளாலும், பிதற்றல் பேர்வழிகளாலும் அது தன் மகிமையை இழந்து கூலிக்கு மாரடிக்கும் இழிநிலையை அடைந்து விட்டது.

    பலன்களைத் துல்லியமாகக் கூறும் ஜோதிடம் மிக பிரமாதமானது. துல்லியமான சரியான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்பதை அதன் எதிரிகளும் கூட உணர்ந்து அது அறிவியல் பூர்வமானது என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

    நவீன வராகமிஹிரர்: ஜோதிடத்தை அறிவியல் ரீதியானது என்பதை சுட்டிக்காட்டி அதை அறிவியல் அங்கீகாரம் பெற வைத்த மாமேதை டாக்டர் பி.வி.ராமன் அவர்களை நவீன வராகமிஹிரர் என்று கூறுவது பொருத்தம் தானே!

    • இருபத்தேழு நட்சத்திரங்களில் 2வது நட்சத்திரம் பரணி.
    • பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்ரன்.

    பரணி

    இருபத்தேழு நட்சத்திரங்களில் 2வது நட்சத்திரம் பரணி. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்ரன். இதன் ராசி அதிபதி செவ்வாய். பரணி என்றால் தாங்கிப்பிடிப்பது அல்லது தாங்குவது என்று பொருள்.

    வானில் முக்கோண வடிவ அடுப்பு போல் நமது கண்ணிற்கு காட்சி தருவதால் இதற்கு பரணி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் நீச்சமடையும் கிரகம் சனி.

    பரணி என்பது ஒரு பெண் நட்சத்திரம் ஆகும். இப்பெண் நட்சத்திரம் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறது.

    பரணி நட்சத்திர பொது பலன்கள்

    செவ்வாயின் வீட்டில் உள்ள சுக்ரனின் நட்சத்திரம் பரணி என்பதால் இதில் பிறந்தவர்கள் கட்டுமஸ்தான உடல்வாகை பெற்றிருப்பார்கள். பார்த்த மாத்திரத்தில் பிறரை கவரும் வீரம், தைரியம் அழகு நிரம்பியவர்கள்.

    பரணி, தரணி ஆளும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிகாரப் பதவியில் அமர்வார்கள். ஆளுமைத் திறன் உடையவராக இருப்பார்கள். சமயோசித புத்தியைப் பயன்படுத்துவார்கள். தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர்களாகவும், புகழுடன் வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.

    அதேபோல், இந்த நட்சத்திரக்காரர்கள், மனோ தைரியம் உள்ளவராகவும், அனைத்து விஷயங்களை யும் அறிந்தவராகவும் திகழ்வார்கள் இசை,நடனம், நாட்டியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்கள். வாசனைத் திரவியங்கள் ஆடம்பர உடைகளை அதிகம் விரும்புவார்கள். புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவற்றை ரசித்துச் சாப்பிடுவார்கள்.

    ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றால் சிறு வயது முதலே குறிப்பிட்ட லட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். சுயமுயற்சி, தன்னம்பிக்கை, பெரும்புகழ் உண்டாகும். அயல்நாட்டு பிரயாணங்கள் ஏற்படும்.

    மிகுந்த செல்வச் செழிப்புடன் பொருளாதார கஷ்டம் இல்லாமல் மிகவும் நிம்மதியான வாழ்க்கை நடத்துவார்கள்.விபரீத ராஜ யோகத்தை அனுபவிப்பார்கள். பல தொழில் முனைவோர்களுக்கு ரோல் மாடலாக வாழ்வார்கள்.

    வெளிநாட்டு வணிகம் மற்றும் முன்னோர்களின் குலத்தொழில் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள். உள்ளுணர்வு மிகுந்தவர்கள். எதையும் தெளிவாக யோசித்து திறம்பட செய்யும் ஆற்றல் உண்டு. விசுவாசமான, நம்பிக்கையான வேலையாட்கள் நிரம்பப் பெற்றவர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்பியவர்கள்.

    சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் இளம் வயதில் கஷ்டம் தெரியாத வாழ்க்கையை வாழ்ந்தால் வாலிப வயதில் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தீராத நோய், கடனில் உழல்கிறார்கள். இளம் வயதில் வறுமையை அனுப வித்தவர்கள் வாலிப வயதில் பொறுப்பான வாழ்க்கையை நோக்கிச் செல்கிறார்கள்.

    கல்வி

    அழகிற்கு முக்கியத்துவம் தரும் இவர்கள் கல்வியை இரண்டாம் பட்சமாகவே நினைப்பார்கள். சுய ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் பலம் பெற்றால் நன்றாக அரசியல், நிர்வாகம், மருத்துவத்துறையில் கண், முகம் சார்ந்த படிப்பு, சிவில் என்ஜினியரிங், விவசாயம் சார்ந்த படிப்புகள், அழகுக் கலை, டெக்ஸ்டைல்ஸ் போன்ற படிப்புகள் பலன் தரும்.கலை மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்கள்.

    தொழில்

    தொழில் நெளிவு, சுழிவுகள் தெரிந்தவர்கள். மற்றவர்களோடு இணைந்து செயல்படுவதில் அதிக விருப்பம் இல்லாதவர்கள். கடின உழைப்பு மற்றும் ஆர்வ மிகுதியால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த தொழிலிலும் சிறந்து விளங்குவார்கள்.

    நிர்வாக வேலைகள், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் வணிகம் , கலைத்துறை போன்றவை அவர்களுக்கு மிகவும் விருப்பமான துறையாகும்.எந்த தொழிலாக இருந்தாலும் மற்றவர்கள், தம்மை பின்பற்றும் வகையில் ஒரு வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பதவிகளை வகிக்கும் வல்லமை பெற்றவர்கள்.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள்" என்ற பழமொழிக்கு ஏற்ப பிறவியில் நல்ல வசதியான சுகமான வாழ்க்கை இவர்களுக்கு அமையும். சுக, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது.

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரும்பான்மையாக இல்லை என்ற நிலை இருக்காது. இவர்கள் பேச்சில் காதலும், கவர்ச்சியும் நிரம்பி இருக்கும். வசீகரமான பேச்சால் அனைவரையும் வசப்படுத்தும் தந்திரவாதிகள். உணவுப் பிரியர்கள். ரசித்து, ருசித்து சாப்பிடுவதில் நிறைய ஆர்வம் உள்வர்கள்.

    சுக்ரன், செவ்வாய் பலம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். இளம் வயதில் திருமணம் உண்டு. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். குடும்பத்தை அரவணைத்து வழி நடத்தும் பண்பாளர்கள். வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிப்பார்கள்.

    சூழ்நிலைக்கு தகுந்தபடி தன்னை மாற்றி கொள்ளும் குணம் கொண்டவர்கள். அறிவுத் திறனும், திறமையும் உண்டு. சிறுசிறு உடல் நல பாதிப்பு இருக்கும். தீர்க்க ஆயுள் உள்ளவர்கள். எந்த விசயத்தையும் திட்டமிட்டு செயல்ப டுத்துவார்கள். வீடு, வாகனம், சொத்து சேர்க்கை உள்ளவர்கள்.

    தசாபலன்கள்

    சுக்ர தசா

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்ர தசா முதலில் வரும். இது 20 வருடம் உள்ள மிகப் பெரிய தசாவாகும்.

    ஒவ்வொருவருக்கும் பிறந்த காலத்தில் ஆரம்பமாகும் முதல் தசை ஜன்ம நட்சத்திரத்தின் முழு காலமும் இருக்காது. அந்த நட்சத்திரம் கடக்கும் விநாடியை பொருத்தது. கர்ப்ப செல் இருப்பை கணிப்பை வைத்துதான் தசா நாட்கள் கண்டறிய முடியும்.

    இளமை கால வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலோ அல்லது ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தாலோ மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    சூரிய தசா

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இரண்டாவதாக வருவது சூரியதசா. மொத்தம் 6 ஆண்டுகள். இது சம்பத்து தாரையின் நட்சத்திரம். பிறப்பில் சுக்ர தசா அதிக வருடம் நடப்பில் இருந்தால் இளம் பருவத்தில் சம்பாதிக்க துவங்குவார்கள். பால்ய வயது மற்றும் பள்ளிப் பருவமாக இருந்தால் தந்தைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். படிப்பில் சுட்டியாக இருப்பார்கள். நல்ல தேக சுகம், ஆரோக்கியம் நிறைந்தவர்கள்.

    சந்திர தசா

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாவதாக சந்திர தசா நடக்கும். இது விபத்து தாரையின் தசாவாகும்.எதிலும் எதிர் நீச்சல் போட்டு திட்டமிட்டு முன்னேற வேண்டும். இந்த தசையில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு எளிதில் திருமணம் நடக்கும். நல்ல விருப்பமான மனதிற்கு பிடித்த இடப்பெயர்ச்சி ஏற்படும். உடன் பிறந்தவர்களின் அனுசரணை இருக்கும். மத்திம வயதினருக்கு பாகப்பிரிவினை சொத்து கிடைக்கும்.

    செவ்வாய் தசா

    நான்காவதாக செவ்வாய் தசை வரும். இது சேஷம தாரையின் நட்சத்திரம். இந்த தசையில் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும். அரசு வேலை வாய்ப்பு, அரசாங்க காண்டிராக்ட், அரசு வழி ஆதாயம், அரசியல் பதவி என அவரவரின் வயதிற்கு ஏற்ற சுப பலன்கள் உண்டு.

    பிறவியில் சுக்ர தசை மிக குறுகிய காலம் மட்டும் இருந்தால் திருமணம், குழந்தை, நல்ல தொழில், உத்தியோகம் என நல்ல யோகங்கள் கூடி வரும்.எந்தத் துறையில் ஈடுபட்டாலும் ஒரு சர்வாதிகாரியை போல் செயல்படுவார்கள்.

    ராகு தசா

    ராகு தசாவின் பலனை ஐந்தாவது தசையாக பரணி நட்சத்திரதாரர்கள் அனுபவிப்பார்கள். இது பிரத்யக் தாரையின் நட்சத்திரம்.சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் பெரும் வாழ்வியல் மாற்றம் உண்டு. எதிர்பாராத பல சம்பவங்கள் இவர்களின் வாழ்க்கையில் நடைபெறும்.

    பிறரை அடக்கியாளும் எண்ணம் அதிகமாகும்.வெற்றி வீரராக லட்சியவாதியாக முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம் உள்ளவர்கள் சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவார்கள்.துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகம் காணப்படும். சிலர் வெளிநாட்டில் வாழ்வார்கள்.

    குரு தசா

    பரணி நட்சத்திரதாரர்கள் ஆறாவது தசையாக 16 வருடம் குரு தசையை சந்திப்பார்கள். இது சாதக தாரையாகும்.இந்த காலகட்டத்தில் பிறந்த கால சுக்ர தசைக்கு ஏற்ப 40 முதல் 60 வயது வரையில் இருப்பார்கள்.தோல்வியால் சரிந்து போன நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.

    வணிகவியல், காது, கண் ஆகிய துறைகளிலும் பைனான்ஸ், வணிக மேலாண்மை போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்ட வர்களாக இருப்பார்கள்.

    சனி தசா

    ஏழாவது தசையான சனி தசை 19 ஆண்டுகள் நடக்கும். இது தாரை நட்சத்திரமாகும்.

    வைராக்கியம் மிகுதியாக இருக்கும். மனதிற்குள் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை புரிந்து கொண்டு வாழ்வார்கள். பூர்வீகம் தொடர்பான மன உளைச்சல் முன்னோர்களின் பரம்பரை நோய் தாக்கம் உண்டாகும்.

    ஆயுள், ஆரோக்கியம் சம்பந்தமான எண்ண ஓட்டம் இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாகும். எட்டாவது தசையான புதன் தசையும், 9-வது தசையான கேது தசையும் பெரும்பான்மையானவர்கள் சந்திப்பதில்லை.

    பரணி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்.

    மேஷ ராசியில் அமைந்துள்ள இந்த நட்சத்திரத்தின் உருவம் ஆகாயத்தில் அடுப்பு , முக்கோணம் போன்று காட்சியளிக்கிறது .

    இந்த நட்சத்திரதாரர்கள் முதன் முதலாக. புதியதாக கட்டிய வீட்டில் அடுப்பு வைத்து பால் காய்ச்சுவதற்கு, சாந்தி முகூர்த்தத்திற்கும், செங்கல் சூளைகளில் நெருப்பிடுவதற்கும், மாந்திரீக சக்கரம் வரைவதற்கு மாந்திரீக தகடுகளை பிரதிஷ்டை செய்வதற்கும், ஆயுதப் பிரயோகம் செய்வதற்கும் ,போர் புரிவதற்கும் உகந்த நட்சத்திரமாகும்.

    இந்த நட்சத்திரத்தில் சனிபகவான் நீசம் அடைவதால் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது பரணியில் வேலைக்கு அமர்த்தினால் குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள்.

    தொழிலாளர்களால் பிரச்சினைகள் வரும் போதும் தொழிலாளர் உடன் பேச்சு வார்த்தை நடத்தி தொழிலாளர் போராட்டங்களை முறியடிக்க உகந்த நட்சத்திரம் ஆகும். இதில் திருமணம் செய்வது சிறப்பல்ல. ஆனால் திருமண தடைகள் நீங்க வழிபாடு செய்யலாம்.

    பரணி நட்சத்திரத்தன்று காஞ்சிக்கு தொடர்ந்து 3 மாதங்கள் சென்று காமாட்சியை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

    நட்சத்திர பட்சி: காகம்

    யோகம்: ப்ரீதி

    நவரத்தினம்: வைரம்

    உடல் உறுப்பு:கீழ் பாதம்

    திசை: கிழக்கு

    பஞ்சபூதம்: நிலம்

    அதிதேவதை: துர்க்கை

    நட்சத்திர மிருகம்: ஆண் யானை

    நட்சத்திர வடிவம்: அடுப்பு, முக்கோணம்

    பரணிக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்

    தாரைகள் சம்பத்து தாரை: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

    சேம தாரை: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்.

    சாதக தாரை: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி.

    பரம மிக்ர. தாரை: அஸ்வினி, மகம், மூலம்.


    பொதுவான பரிகாரங்கள்

    பரணி சுக்ரனின் நட்சத்திரம் என்பதால் தினமும் சுக்ர ஓரையில் மகாலட்சுமி அல்லது பெண் தெய்வ வழிபாட்டை கடைபிடிப்பது அம்மன் சுலோகங்களை கேட்பதாலும், படிப்பதாலும் மேன்மையான பலன்கள் உண்டு. இவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் பால், தயிர், சந்தனம், வைரம் போன்றவற்றை, தானம் செய்தால் நன்மை உண்டாகும்.

    தினமும் வலம்புரிச் சங்கில் புனித நீர் தயாரித்து காமாட்சியம்மன் படத்தின் முன்பு வைத்து அருந்த வாழ்க்கை வளம் பெறும்.பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். நெல்லிக்காய் மரக் கன்று தானம் செய்யலாம். காகம், யானைக்கு உணவிடலாம்.

    ஓயிட் ஜெர்கான் ரத்தின மோதிரம் அணியலாம். உங்களின் சாதக தாரையான 6-வது நட்சத்திரமான புனர்பூசத்தன்று ஸ்ரீ ராமரை வழிபட வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

    • நடிகர் ராஜசேகருடன் நான் நடித்த படம்.
    • மலேசியாவில் லங்கா என்ற இடத்தில் ஷூட்டிங்.

    ஆ.... கை.... கை...

    என்று நான் சத்தம் போட்டதை கேட்டு எல்லோரும் என் அருகில் ஓடி வந்தார்கள். எனது இடது கை மோதிர விரலில் அறுபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

    அய்யய்யோ... என்னம்மா... என்னாச்சு? என்று எல்லோரும் பதறிப்போனார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை சொல்லும் நிலையில் நான் இல்லை.

    நடிகர் ராஜசேகருடன் நான் நடித்த படம். மலேசியாவில் லங்கா என்ற இடத்தில் ஷூட்டிங். அதில் ஒரு காட்சியில் நான் காரின் முன்பக்கம் பேனட்டில் அமர்ந்து இருந்து ஆட வேண்டும். அவர் காரை மெதுவாக ஓட்ட வேண்டும். காட்சி இது தான்.

    ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் நல்லாத்தான் இருந்தது. திடீரென்று அவர் பிரேக் போட்டதும் பேனட்டில் இருந்த நான் தடுமாறி கீழே விழப் போனேன். உடனே காரின் வைப்பரை பிடித்ததில் கைவிரல் அறுபட்டு ரத்தம் கொட்டியது.

    உடனே அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். டாக்டர் பார்த்து விட்டு காயம் பெரியதாக இருந்ததால் கை விரல்களை சேர்த்து கட்டையும் பெரிதாக போட்டு விட்டார்.

    காயம் சில நாட்களில் ஆறி விடும். ஆனால் மறுநாள் ஷூட்டிங்கில் நடிப்பது எப்படி என்ற கவலை எனக்கு. அதுவும் பாடல் காட்சிக்கு ஆட வேண்டும். கையில் போட்டிருந்த கட்டு தெரியவும் கூடாது.

    கடைசியில் சேலையின் முந்தானை தலைப்பை இடது கையின் மேல் போட்டு கையை வெளியே தெரியாமல் வைத்துக் கொண்டு வலது கையை மட்டும் அங்கும் இங்கும் அசைத்து ஆடி முடித்தேன்.

    சுந்தர்.சி டைரக்ஷனில் நானும் சரத்குமாரும் ஜோடியாக நடித்த படம். இந்த படத்தின் பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலையில் படமாக்கப்பட்டது. ரொம்ப ஜாலியாக இருந்தது.

    ஆல்ப்ஸ் மலைத் தொடர் 1,200 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மிக நீண்ட மலைத் தொடர். இந்த மலைத் தொடரில் மொத்தம் 82 சிகரங்கள் இருப்பதாக கூறினார்கள்.


    பனி நிறைந்த இந்த மலைத் தொடரை பார்த்து ரசிக்கவும், பனிச்சறுக்கு விளையாடவும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். அந்த மலைத் தொடரில்தான் எங்களுக்கும் படப்பிடிப்பு. பனிமலை முகடுகளின் வழியாக நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்ல முடியாது. படப்பிடிப்பு குழுவினர் கேமராக்கள் மற்றும் உபகரணங்களை தோளில் தூக்கி சுமந்தபடிதான் செல்வார்கள்.

    நானும் என்னால் சுமக்க முடிந்த அளவுக்கு பொருட்களை தூக்கி சுமந்து செல்வேன். ஹீரோ, ஹீரோயின் டெக்னீஷியன் என்று எங்களுக்குள் எந்த பாகுபாடும் பார்ப்பது கிடையாது.

    எல்லோரும் ஒரு குடும்பம்போல் இருப்போம். ரொம்ப ஜாலியாக ஒவ்வொரு நாளும் சென்றது. ரோடுகள் பெரும்பாலும் கருங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். தார் ரோடுகளை நான் பார்த்தது இல்லை. அந்த கருங்கல் ரோடுகளில் நடப்பது சிரமமாக இருக்கும். ஆனால் சரத் வேகமாக நடப்பார்.

    நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பஸ்சில்தான் மொத்த குழுவினரும் படப்பிடிப்புக்கு செல்வோம். நான் பஸ்சில் செல்லும் போதே மேக்-அப் போட்டுக் கொள்வேன். மேக்-அப் சாதனங்களும் இந்த காலத்தை போல் அப்போது விதவிதமாக கிடையாது. 'பான்கேக்' வைத்திருப்போம். சுவிட்சர்லாந்திலோ உறைய வைக்கும் குளிர்காலம். அந்த குளிரில் அது உறைந்து இருக்கும் முகத்தில் அப்படியே தேய்க்க முடியாது. அப்புறம் தண்ணீரை சுட வைத்து அதில் தொட்டு தொட்டு தடவுவேன்.

    கை, முதுகு, இடுப்பு, வயிறு.... அதாவது கேமரா கண்களில் எந்தெந்த பகுதிகள் படுமோ அந்த பகுதிகள் முழுவதும் மேக்கப் போட வேண்டும்.

    குளிர்ந்து இருக்கும் பான்கேக்கை வைத்து தடவினால் சில்லென்று நடுங்க வைக்கும். எனவே அந்த பகுதிகள் முழுவதும் சூடு தண்ணீரை தொட்டு தொட்டு மேக்-அப் போடுவேன்.

    முக்கியமாக காஸ்ட்யூம் மாற்றுவதில் தான் பிரச்சனை. சரத் படக்குழுவினருடன் பஸ்சுக்குள்ளேயே காஸ்ட்யூமை மாற்றிக் கொள்வார்.

    நான் அருகில் இருக்கும் பாத்ரூமுக்கு ஓடுவேன். அந்த நாட்டில் பாத்ரூமை பார்த்தால் முகம் சுளிக்க வைக்காது. அவ்வளவு சுத்தமாக பராமரிக்கிறார்கள்.

    அதனுள் சென்றுதான் உடை மாற்றி விட்டு வருவேன்.

    பாராட்டு என்பது கலைஞர்கள் எல்லோரும் எதிர் பார்ப்பது தானே! ஆனால் ஷீட்டிங்கில் ஏதாவது பாடல் காட்சியில் சரத் கொஞ்சம் நன்றாக ஆடிவிட்டால் போதும்... உடனே கை தட்டி பாராட்டுவார்கள்.

    நானும் தான் உயிரை கொடுத்து ஆடுவேன். ஆனால் யாரும் கைதட்டி பாராட்ட மாட்டார்கள். அதற்காக கோபப்பட்டும் இருக்கிறேன். 'என்ன ஹீரோ ஆடினா பாராட்டுவீங்க. ஹீரோயின் ஆடினா பாராட்ட மாட்டீங்களா? என்ன சார் நியாயம் இது என்று சண்டையும் போட்டிருக்கேன். உடனே அவர்கள் அப்படியெல்லாம் இல்லை மேடம் என்று ஜகா வாங்கி விடுவார்கள்.

    சரத் என்னிடம், 'உன்னை யாருப்பா நல்லா ஆடலைன்னு சொல்ல முடியும்?' என்று மழுப்புவார்.

    'ஜம்போ இது காதல் செய்யும் நேரம்

    நீ அளவாக வெட்கப்படு...

    ஜம்போ இது காதல் செய்யும் நேரம்

    நீ இடம் பார்த்து என்னைத் தொடு.... என்ற பாடல் காட்சி முழுக்க சுவிட்சர்லாந்தில் படமாக்கப் பட்டது. சுவிட் சர்லாந்தின் இயற்கை சூழ்ந்த பின்னணியிலும், அழகிய கட்டிடங்களின் பின்னணியிலும் எடுக்கப்பட்ட ஒவ்வொரு ஷாட்டும் மறக்க முடியாதவை.

    சுவிட்சர்லாந்தின் கண்ணை கவரும் இயற்கை காட்சிகள்எ ன்றும் நினைவில் நிற்கும்....

    பொது வாகவே ஐரோப்பிய நாடுகளில் கட்டிடங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். லண்டனுக்கு சென்றால் கட்டிடங்கள் பார்க்க அழகாக இருக்கும். அதே நேரம் அமெரிக்கா என்றால் பிரமாண்டம். எல்லாம் பெரிது பெரிதாக இருக்கும்.

    மீண்டும் ஒரு தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன். பை... பை....

    (தொடரும்....)

    • அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.
    • குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள்.

    கொஞ்ச நாளாக ஆன்மீகமே தொடர்ந்து எழுதுவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் மருத்துவ கருத்துக்கள் விட்டுப் போகின்றதே என்ற கவலையும் நெருடலாய் இருக்கின்றது.

    இரண்டும் கலந்து ஒரே கட்டுரையில் கொண்டு வருவது என்பதும் சரிப்படாது. ஆகவே அவ்வப்போது மாற்றி எழுதலாம் என்ற நினைப்பேன் இம்முறை மருத்துவக் கட்டுரையாக எழுதப்பட்டுள்ளது.

    சமீபத்தில் ஒரு நிகழ்வு. நன்கு அறிந்த ஒரு பெண்மணி. தனது தோற்றத்திற்கு அதிக கவனம் கொடுப்பவர். அதாவது சரும பராமரிப்பு, முடி பராமரிப்பு, ஆரோக்கிய பராமரிப்பு என எல்லாவற்றிலும் கவனமாய் இருப்பவர். அவரை சில வருடங்களுக்கு பிறகு நான் சந்திக்க நேர்ந்தது.

    முகத்தில் வயதுக்கு மீறிய கோடுகள், சுருக்கங்கள், முதுமை தோற்றம், நடை, உடை, பாவனை அனைத்துமே மாறி இருந்தது. பார்த்தாலே ஏதோ உடல் நலம் இல்லாதவர் போல் இருந்தார்.

    காரணம் கேட்டபோது வாழ்வில் ஏற்பட்ட சில பாதிப்புகள், வேதனைகள் அதிக மன உளைச்சலை தந்ததாகவும் இதனால் சர்க்கரை உணவினை அதிகம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது. இதுவே பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தியது என்றார்.

    சிலருக்கு காலையில் எழுந்தவுடனேயே ஜிலேபி மற்றும் பால் அருந்துவது வழக்கம். சிலர் இட்லி, தோசை, உப்புமா, கஞ்சி என எதற்கும் சர்க்கரை போட்டுக் கொள்வர். சிலர் டீ, காபியினை கூட பாயாசம் போல் சர்க்கரை சேர்த்து அருந்துவர்.

    இவர்களுக்கெல்லாம் சீக்கிரமே அதிக முக சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கொலாஜன் பாதிப்பு ஏற்படுகின்றது.

    * அதிக சர்க்கரை உணவு சருமத்தினை வெகுவாய் பாதிக்கின்றது.

    * கொலாஜன், எலாஸ்டின் இரண்டுமே சரும கட்டமைப்பிற்கு காரணமாகின்றது.

    * அதிக சர்க்கரை உணவு உடலில் வீக்கத்தினை ஏற்படுத்து கின்றது. இந்த வீக்கம் சரும திசுக்களை பாதிக்கின்றது. தொடர் வீக்கம் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

    * உடலுக்குரிய இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் சக்தியினை உடல் இழக்கின்றது.

    * இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகின்றது.

    * சருமம் சொர சொரப்பாக இருக்கும்.

    * சருமத்தில் திட்டு, புள்ளிகள், கறுப்பு போன்றவை ஏற்படுகின்றது.

    * சருமம் தொய்ந்து வலுவிழந்து காணப்படுகின்றது.

    எனவே சர்க்கரையைத் தவிர்ப்பதே பல நன்மைகளைத் தரும். குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்ப்பதினை தவிருங்கள். இதில் அனைத்து பிரிவுகளும் அடங்கும். வெள்ளை சர்க்கரை கூடுதல் பாதிப்பினைக் கொடுக்கும். மற்ற பிரிவுகளை எப்போதாவது சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

    முதலில் ஒரு மாதம் இவ்வாறு இருந்து பாருங்கள். கேக், சாக்லேட், பிஸ்கட், வெள்ளை சர்க்கரை இனிப்பு இவை அனைத்தையும் ஒரு மாதம் நிறுத்தித்தான் பாருங்களேன்.


    கடந்த சில மாதங்களாக வெய்யிலின் கடுமை தாங்காது மயக்கம், ஜுரம், சோர்வு என பாதிப்புக் கடுமையாய் இருந்தன. இதில் 'மைக்ரேன்' பாதிப்பு தலைவலி எனக் கூறியவர்களும் அதிகம்.

    இந்த தலைவலி வருவதற்கு முன், வந்த பிறகு, தலைவலி போன பிறகு என்ன அறிகுறிகளைக் காட்டும். முதலில் சில பொதுவான அறிகுறிகளைப் பார்ப்போம்.

    * உடைக்கும் தலைவலி அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.

    * வெளிச்சம், சத்தம், நல்ல மனம் இவை கூட தொந்தரவாக இருக்கும்.

    * எரிச்சலுடன் இருப்பர். முகம், கழுத்து, மண்டை இவற்றில் வலி இருக்கும்.

    * மூக்கடைப்பு இருக்கும்.

    * வயிற்றுப் பிரட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்றவை இருக்கும்.

    * வயிறு உப்பிசம், ஜீரண கோளாறு இருக்கலாம்.


    மைக்ரேன் தலைவலி:

    * மைக்ரேன் தலைவலி துடிக்கும் தலைவலியாக இருக்கும்.

    * அநேகமாக ஒரு பக்கமாக இருக்கும்.

    * வெளிச்சம் ஆகாது. தலை வலியுடன் வயிற்று பிரட்டல் வாந்தி என இருக்கும்.

    * சற்றும் நகரக் கூட முடியாது.

    * காரணமற்ற சோர்வு, அதிக கொட்டாவி இருக்கும்.

    இந்த அறிகுறிகள் சாதா தலைவலியில் இருந்து மாறுபட்டவை. அதிக முறை சிறுநீர் போகும். கொட்டாவி வரும். சிலர் சாக்லேட் சாப்பிட்டவுடன் ஏற்படும். இவை அனைத்தும் 'நான் வந்து விட்டேன்' என மைக்ரேன் சொல்லும் அறிகுறிகள்.

    * மனச்சோர்வு, திடீரென்று உடல் சோர்வு, வயிற்றுப் பிரச்சினை, கலங்களான பார்வை. இவை கூட மைக்ரேன் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உணர்ந்து கொள்ளும் அறிகுறிகளாகத் தெரியும்.

    * இந்நேரங்களில் நெய், வெண்ணை, சீஸ், கொட்டை வகைகள், மது, புளித்த உணவுகள், ஊறுகாய் இவற்றினை தவிர்த்து விடுங்கள்.

    இது மைக்ரேன் தான் என உணர்ந்தவர்கள் வெளிச்சம், இல்லாத அறையில் இருப்பது, வெகு வெதுப்பான நீரில் ஷவர் முறையில் குளியல் எடுப்பது. மருத்துவர் சிபாரிசு செய்துள்ள மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றினை செய்யலாம். ஆயினும் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

    * தலைவலி ஆரம்பிக்கும் முன்போ அல்லது அப்போதோ பார்வையில் மாறுதல்கள் ஏற்படலாம்.

    * கை, கால், முகம் இவற்றில் குறுகுறுப்பு உணர்வு இருக்கலாம்.

    * பேச்சு தடுமாற்றம் இருக்கலாம்.

    * காதில் சத்தம், ஒரு பக்க முகம், உடல் பலமிழந்தது போல் இருக்கலாம்.

    * இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவர் ஆலோசனை பெற வேண்டியவை.

    * மைக்ரேன் பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாக ஏற்படுகின்றது.

    * குடும்ப ரீதியாகவும் பரம்பரை ரீதியாகவும் ஏற்படுகின்றது.

    * அதிக மன உளைச்சல், படபடப்பு, தூக்கமின்மை இவை இந்த பாதிப்பினை கூட்டலாம்.

    * ஹார்மோன் மாறுபாடு ஏற்படும் காலங்கள், சீதோஷ்ண நிலை மாறுபடும் காலங்கள், சில வகை மருந்துகள் அதிக உடற்பயிற்சி, புகையிலை, சிகரெட், சில வகை உணவுகள் ஆகியவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

    மருத்துவ கருத்துக்கள் விழிப்புணர்விற்காக எழுதப்படுபவை தானே தவிர, தானே முடிவு செய்து தானே சிகிச்சை செய்து கொள்வ தற்காக அல்ல. ஆக படியுங்கள். அறிந்து கொள்ளுங்கள். ஆனால் மருத்துவர் ஆலோசனை இன்றி எந்த சிகிச்சையும் செய்து கொள்ளாதீர்கள்.


    * நீங்கள் முயற்சி செய்யாமல் வேகமான எடை குறைவு ஏற்படும் போது

    * தொடர் சோர்வு இருப்பது. போதுமான ஓய்வு எடுத்தும் சோர்வாகவே இருப்பது.

    * தொடர்ந்து வலி எந்த காரணமும் இன்றி இருப்பது, சாதாரண வலி நிவாரணிகள் மூலம் பயன் இல்லாது இருப்பது.

    * உடல் மஞ்சள் நிறம், கண்ணில் மஞ்சள் நிறம், உடல் அரிப்பு போன்றவை (இது மஞ்சள் காமாலை பாதிப்பால் இருப்பதுதான். என்றாலும் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது)

    * சரும மரு, மச்சம் இவற்றில் மாற்றம், சரும புண்கள் ஆறாது. ரத்தம் கசிதல்.

    * கழிவு வெளிப் போக்கில் ரத்தம், அடிக்கடி வயிற்றுப் போக்கு அடிக்கடி மலச்சிக்கல்.

    * சிறுநீர் செல்லும் போது வலி நிற மாற்றம்.

    * விழுங்குவதில் கடினம்.

    * மாத விலக்கு சுற்றில் மாற்றம் போன்றவை உடனடி யாக மருத்துவர் கவனம் பெற வேண்டியவை.

    • ஆப்பிரிக்க பெண் யானைகளுக்கு தந்தம் இருக்கும்.
    • ஒரு யானை தன் வாழ்நாளில் சராசரியாக 18 லட்சம் மரங்கள் வளர காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

    ''என் வழி... தனி வழி...'' என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தில் பேசிய வசனம், யானைகளுக்கு மிகவும் பொருந்தும். பொதுவாக யானைகள் அதன் வழித்தடத்தை மாற்றவே மாற்றாது. தனக்கான வழித்தடப்பாதையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டேயிருக்கும், குறுக்கே யார் வந்தாலும் தன்னுடைய ஆக்ரோஷ முகத்தை காட்டிவிடும்.

    இன்று வனப்பகுதியில் இருக்கக்கூடிய பெரும்பாலான பாதைகள் யானைகள் பயன்படுத்தியவைதான். ஆனால் வன ஆக்கிரமிப்பு, விவசாய நில விரிவாக்கம், நீர்மின் திட்டங்கள், கூட்டுக்குடிநீர் திட்டங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் அதன் வழித்தட பாதைகளில் பல தடைகள் உருவாகி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் யானைகள் புகுவது அதிகரித்து வருகிறது. இதில் மனிதர்களின் தவறுகள் சொல்லமுடியாத அளவுக்கு இருக்கிறது.

    இப்படி மனிதர்கள் எவ்வளவுதான் தீங்குகள் செய்தாலும், யானைகளோ எழில் கொஞ்சும் வளமான காடுகளை உருவாக்குவதில் பெரும் பங்கை தொடர்ந்து வழங்கி கொண்டுதான் இருக்கின்றன. ஒரு யானை சராசரியாக 70 ஆண்டுகள் வரை உயிர்வாழும். சுமார் 7 அடி முதல் 12 அடி உயரம் வரை வளரக்கூடியது. சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான எடை கொண்ட பெரிய விலங்கினமாக உள்ளது.

    ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இருக்காது. ஆனால் ஆப்பிரிக்க பெண் யானைகளுக்கும் தந்தம் இருக்கும். யானையின் 2 தந்தங்களும் சுமார் 90 கிலோ எடை வரை இருக்கும். தந்தம் ஒரு முறை உடைந்துவிட்டால் மீண்டும் வளராது. கூர்மையான கண் பார்வையும், மோப்பம் மற்றும் ஞாபக சக்தி கொண்டது.

    நன்கு வளர்ந்த யானை நாளொன்றுக்கு இலை, செடி, கொடி, மூங்கில், கரும்புகள் என பசுந்தீவனமாக சுமார் 200 கிலோ முதல் 250 கிலோ வரை சாப்பிடும். அதேபோல், 150 முதல் 200 லிட்டர் வரை தண்ணீரும் குடிக்கும். அதற்கு உணவின் தேவை அதிகம் என்பதால், ஓரிடத்தில் தங்கி வாழாது. பசுமையான, செழுமையான பகுதிகளைத் தேடி வெகுதூரம் பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் பரந்தகாட்டில்தான் அதற்கு தேவையான தீவனங்கள் கிடைக்கும். ஓராண்டுக்குள் ஒவ்வொரு யானைக்கூட்டமும் சராசரியாக 650 சதுர கிலோ மீட்டர் பரப்பு வனப்பகுதியை சுற்றிவருவதாக யானை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    யானைகள் சாப்பிடும் தாவரம் உள்ளிட்ட பசுந்தீவனங்களில் 40 சதவீதம் மட்டுமே செரிமானமாகிறது. செரிமானமாகாத தாவரத்தின் விதைகள் வேறிடத்தில் மரங்கள் உருவாகுவதற்கு ஆதாரமாகிவிடுகின்றன. ஒரு யானை தன் வாழ்நாளில் சராசரியாக 18 லட்சம் மரங்கள் வளர காரணமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டுக்குடும்பமாகவே வாழக்கூடிய யானைக்கூட்டத்தில் குறைந்தது 8 முதல் 15 யானைகள் வரை இருக்கும். யானைகள் கூட்டத்தை 40 முதல் 50 வயது மதிக்கத்தக்க பெண் யானைதான் பாதுகாப்பாக வழிநடத்திச்செல்லும். பாசத்துக்கும், பாதுகாப்புக்கும் இந்த கூட்டத்தில் பஞ்சம் இருக்காது. அதற்கு உதாரணம், பிரசவக் காலத்தில் குட்டியை ஈன்ற பிறகு, தாய் யானை மரித்துப்போனால், மற்ற பெண் யானைகள் தன் குட்டியை போலவே பாதுகாத்துக் கொள்ளுமாம்.

    இப்படியாக உலகம் முழுவதும் 24 வகையான யானை வகைகள் இருந்த நிலையில், காடுகள் அழிப்பு, தந்தங்களை வெட்டி எடுப்பது போன்ற மனிதனின் பேராசை, மனிதத்தன்மையற்ற செயல் ஆகியவற்றால் 22 யானை வகைகள் அழிந்து, தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வகை யானைகள் மட்டுமே வலசை வந்து கொண்டிருக்கின்றன.

    இதில் இந்தியா, தாய்லாந்து, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகளில் ஆசிய யானைகளும், ஜிம்பாப்வே, நமீபியா, போட்ஸ்வேனா போன்ற நாடுகளில் ஆப்பிரிக்க யானைகளும் உள்ளன. அந்தவகையில் சுமார் 4 லட்சத்துக்கும் மேல் ஆப்பிரிக்க யானைகளும், சுமார் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஆசிய யானைகளும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் தமிழ்நாடு வனப்பகுதியில் மட்டும் 3 ஆயிரத்து 63 யானைகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

    உருவத்திலும், அதன் செயலிலும் நம்மால் பிரமிப்பாக பார்க்கப்படக்கூடிய யானை, தற்போது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களில் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சர்வதேச யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12-ம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்படுகிறது. யானைகள் அழிந்தால் காடுகளும், அதனை சார்ந்து வாழக்கூடிய விலங்குகளும், மனிதஇனமும் அழிந்துவிடும். எனவே சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்துக்கு சிறந்த அடையாளமாகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை காக்கும் பாதுகாவலனாகவும் இருக்கக்கூடிய யானைகளை பாதுகாக்கக்கூடிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது.

    • வாய்ப்பு வாய்க்கும் வரை காத்திருந்தே ஆகவேண்டும்.
    • சிலர் ஒவ்வொன்றுக்கும் ஒரு கால அட்டவணை தயாரித்து வைத்திருப்பார்கள்.

    வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் வாய்ப்பாகக் கருதக்கூடிய வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    வாழ்க்கையில் எல்லோரும் முனைப்போடு செயலாற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்; ஆனால் அவையெல்லாவற்றிலும் வெற்றி கிட்டி விடுகிறதா?. சிலவற்றில் தொடங்கியவுடன் தோல்வி!; சிலவற்றில் பாதிவரை வெற்றி! பாதிக்குப்பின் படுதோல்வி!; சிலவற்றில் இறுதிவரை வெற்றி; ஆனால் எல்லைக் கோட்டை எட்டிப்பிடிக்கும்போது பேரிடியாகும் பெரும்தோல்வி!; இப்படித் தோல்விகள் தொடர்ந்து வரக் காரணங்கள் என்ன?.

    எல்லாம் சரியாக இருந்தும் வாய்ப்பு வாய்க்காமல் போனதே தோல்விக்குக் காரணம் என்று சிலர் சொல்லலாம். அது என்ன வாய்ப்பு?. வாய்ப்பது வாய்ப்பு!; அடடே! அவ்வளவுதானா?. ஆமாம் அவ்வளவுதான். ஆனால் எவை வாய்ப்பது வாய்ப்பு?. ஒரு செயலை அல்லது ஒரு தொழிலைச் செய்யும்போது அதற்கான முதலீடு வேண்டும்/ உரிய திட்டமிடல் வேண்டும்; நேரமும் இடமும் பொருந்தி வர வேண்டும். நேரம் என்றால் ராசிபலன் கணிப்பதல்ல; ஒரு தேநீர்க்கடை தொடங்குவதற்குக் கூட அது குளிர்காலமாக இருக்க வேண்டும். ஏசி மிஷன் விற்கும் விளம்பரத்தைக் கோடைகாலத்தில் போட்டால் தான் விற்பனை நம்மைக் குளிர்விப்பதாக இருக்கும். ஆக, காலம், இடம், கருவி ஆகியவற்றின் துணை கொண்டு வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

    வாய்ப்பு இரு வகையில் வரும்; ஒன்று அதுவாக வருவது; வாய்ப்பது!. மற்றொன்று நாமே உருவாக்கிக்கொண்டு அதற்கேற்ப வெற்றிகளையும் லாபங்களையும் குவிக்கத் திட்டமிடுவது. எப்படியாயினும், அதுவாக வாய்க்கும் வாய்ப்பிற்கே வீரியம் அதிகம். தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வெற்றியை நிர்ணயிக்கும் வாய்ப்பு வருகிறது. ஆண்டு முழுவதும் வகுப்பறைகளில் கற்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை தேர்வாக எழுதித் தமது அறிவின் திறத்தை வெளிப்படுத்திக் காட்டும் வாய்ப்பே தேர்வு. நல்ல பணிவாய்ப்பைப் பெறுவதற்கான தருணங்களைப் போட்டித் தேர்வுகள் உருவாக்கித் தருகின்றன.

    எது எப்படியாயினும், வெற்றியாளர்களாகச் சாதிக்க விரும்புபவர்கள், வாய்ப்பு வாய்க்கும் வரை காத்திருந்தே ஆகவேண்டும் . அந்தக் காத்திருப்பும் எப்படி இருக்கவேண்டும்? என்பதற்கு ஓர் அழகிய உதாரணத்தைக் காட்சிப்படுத்திக் காட்டுகிறார் திருவள்ளுவப் பெருந்தகை. குளக்கரைகளில், ஆற்றுப் படுகைகளில் ஓடுமீன் ஓட, உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு. அதுவும் ஒற்றைக்காலை ஊன்றி, மற்றொரு காலைத் தூக்கித், தனது நீண்ட கூரிய அலகைத் தண்ணீர்ப் பரப்பளவோடு சமமாக்கி வைத்து, எந்த நேரத்தில் வாய்த்தாலும் அந்த மீனை ஒரே குத்தில் குத்தித் தூக்கிவிடும் விழிப்புணர்வோடு காத்திருக்குமாம் கொக்கு.

    கொக்கொக்கக் கூம்பும் பருவத்து

    மற்று அதன்

    குத்தொக்கச் சீர்த்த இடத்து.

    வாய்ப்புக்காகக் காத்திருத்தல் என்பது தூங்கி வழிந்துகொண்டு சோம்பேறியாகச் செயலின்றி இருப்பதல்ல; தனக்குரிய வாய்ப்பு வரும்வரை, விழிப்புணர்வோடு கவனமாகக் காத்திருப்பது; வாய்த்தவுடன் கொத்தித் தூக்கிவிடும் வீரியத்தோடும் சுறுசுறுப்போடும் காத்திருப்பது ஆகும்.

    வாழ்க்கையில் சிலபேரைப் பார்த்திருப்போம்; ஐம்பது வயதுவரை எந்த வாய்ப்புமே வாய்க்கவில்லை; இன்னமும் காத்துக்கொண்டேதான் இருக்கிறோம் என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். நான் படித்த படிப்பிற்கான வேலை இன்னும் கிடைக்கவில்லை; அதனால் வேலைக்குப் போகாமல் காத்திருக்கிறேன்; நான் எதிர்பார்த்த மாதிரி மணமகளோ, மணமகனோ கிடைக்கவில்லை; அதனால் திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருக்கிறேன்; வீடு வாசல் வாங்குவதற்கேற்ற வருமானத்தை இன்னும் எட்டிப் பிடிக்கவில்லை; அதனால் சொந்த வீடு வாங்காமல் காத்திருக்கிறேன்; இப்படி எதற்கெடுத்தாலும் காத்திருப்பவர்களுக்குக் காத்திருப்பதே சுகமாகிப் போகுமேயொழிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது வாய்க்காமலேயே போய்விடும்.

    சுந்தர ஆவுடையப்பன்

    சுந்தர ஆவுடையப்பன்

    ஒரு கிராமத்தில் ஒருவர் ஜல்லிக்கட்டு சமயத்தில் ஒரு போட்டி அறிவித்தார்; தான் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்போகும் மாட்டைப் பிடிப்போர்க்குப் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்றார். ஜல்லிக்கட்டு என்றால் மாட்டின் திமிலையும் கொம்பையும் பிடித்து அடக்க வேண்டும்; ஆனால் இந்தப்போட்டியில் சில சலுகைகளையும் அறிவித்தார். அதாவது வருகிற மாட்டின் கொம்பையோ திமிலையோ பற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; ஆனால் மாட்டின் வாலைத் தொட்டாலே போதும்; இதில் மேலும் ஒரு சலுகை என்னவென்றால், ஒரு மாட்டிற்குப் பதிலாக வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக மூன்று மாடுகள் வரும்; இவற்றில் ஏதேனும் ஒரு மாட்டின் வாலைத் தொட்டாலும் பரிசுத்தொகை உண்டு என்றார்.

    மாட்டின் வாலைத் தொட்டுப் பரிசினை வெல்ல நான் ரெடி! என ஒரு வீராதிவீரன் வந்து களத்தில் நின்றான். வாடிவாசல் வழியே மிகக் கூர்மையான கொம்புகளுடன் சீறிப்பாயும் மூச்சொலியுடன் பருத்த ஒருமாடு வந்து நின்றது; பார்த்தான் வீரன்! நமக்குத்தான் மூன்று வாய்ப்பு இருக்கிறதே! என்று எண்ணி, அந்த அடங்காத காளையைத் தொட்டுக்கும்பிட்டு அனுப்பி வைத்து விட்டான். இரண்டாவது மாடு வாடி வாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டது; அந்த மாடும் முந்தி வந்த மாட்டில் முக்கால் பங்கில் இருந்தது; அடுத்து வரும் மாடு இதில் பாதியாக வரும்; அப்போது பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து இந்த மாட்டையும் பிடிக்காமல் விட்டுவிட்டான்.

    மூன்றாவது மாடு வாடிவாசலை வந்து எட்டிப் பார்த்தது; வீரன் இந்தப் பக்கத்திலிருந்து எட்டிப் பார்த்தான். அவன் நினைத்தது போலவே பலவீனமான ஒரு கன்றுக்குட்டியே வந்து நின்றிருந்தது. "அவிழ்த்து விடட்டும்; வால் மட்டுமென்ன? மாட்டின் கொம்பு திமில் எல்லாவற்றையும் பிடித்துப் பரிசுத்தொகையைப் பெற்றுவிடுவோம்" என்று ஆவலோடு காத்திருந்தான் வீரன். அந்தோ பரிதாபம்! வாடிவாசல் வழியே வெளியே வந்த மாட்டிற்கு வாலே இல்லை!; அந்த வீரன் இப்போது எதைப்பிடித்துப் பரிசைப் பெறுவான்?.

    இப்போதெல்லாம் நாம் இப்படித்தான் அடுத்த வாய்ப்பு சுலபமாகக் கிட்டும் என்று எண்ணி எண்ணி, இருக்கிற எளிய வாய்ப்புகளையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம். வெற்றிகளை ஈட்டித்தரும் சாதனை வாய்ப்புகள் எல்லாம் எளிமையாக வாய்த்து விடுவதன்று. தேர்வு எழுதத் தரப்படும் வினாத்தாள்களில் கேள்விகள் விருப்ப அடிப்படைகளில் தேர்வு செய்துகொள்ளும்படி அமைந்திருப்பதையே மனம் விரும்பினால், கடின முயற்சிகளில் ஈடுபட்டு அரிய சாதனைகளைப் புரிவது எவ்வாறு?.

    திருவிழா நாள்களில் பெரும் நகரங்களிலிருந்து தமது சொந்த ஊருக்குச் செல்வோர் பேருந்தைப் பிடிப்பதற்காகப் பேருந்து நிலையங்களில் கூடுவர். தமது ஊருக்குச் செல்ல வருகிற பேருந்துகளெல்லாம் கட்டுக்கடங்காத கூட்டத்தோடு வந்தால், கூட்டம் குறையட்டும் அதன்பிறகு ஏறிக்கொள்ளலாம்! என்று காத்திருக்கத் தொடங்கினால் அன்று இரவு முழுவதும் கூட்டம் குறையப் போவதுமில்லை; நாம் ஊருக்குப் பேருந்தில் செல்லப் போவதுமில்லை. அதே நேரத்தில், திருவிழாநாள்களில் ஊருக்குச் செல்வதற்கான பேருந்து, ரெயில் முன்பதிவு எப்போது திறக்கப்படுகிறது? எனக் கவனத்துடன் காத்திருந்து திறந்தவுடன் முன்பதிவு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்: அதுதான் வாய்ப்பை முன்கூட்டியே திட்டமிட்டுக், காலம் வரும்போது பயன்படுத்திக் கொள்ளும் கவனம்.


    சிலர் ஒவ்வொன்றுக்கும் ஒரு கால அட்டவணை தயாரித்து வைத்திருப்பார்கள்.

    படிப்பை எந்த வயதில் முடிப்பது; வேலை வாய்ப்பை எந்த வயதில் பெறுவது; பிறகு திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது, வீடு வாங்குவது… இப்படி ஒவ்வொன்றுக்கும் கால அட்டவணை தயாரித்து அதன் படியே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சம்பாதிப்பதற்கு ஒரு காலம்; சேமிப்பதற்கு ஒரு காலம்; தர்மம் செய்வதற்கு ஒருகாலம். இடையில் எந்த மாற்றம் வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் இல்லாமல் இருப்பார்கள். திட்டமிடுவது நல்லதுதான்; ஆனால் திட்டமிட்டபடியா எல்லாமே வாழ்க்கையில் நடக்கின்றது?. திட்டமிட்டபடி எதுவும் நடக்காமல் போவதுதானே வாழ்க்கையில் சுவாராஸ்யம்!.

    வாய்ப்புகளை நோக்கிக் காத்திருப்பது என்பது பெரும்பெரும் லட்சியங்களுக்கு வேண்டுமானால் ஒத்துப் போகலாம்; அன்றாட வாழ்வியலில் ஒரு வாய்ப்புத் தவறிப்போனால், அடுத்து வருகிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை. சிலர் வாய்ப்பைத் தேடி அலையோ அலையென்று அலைந்து கொண்டிருப்பார்கள்; தேடிய வாய்ப்புகள் கைக்கு அகப்படாதபோது, உள்ளங்கைக்குள் ஓடிவந்து உட்காருகிற வாய்ப்பை உதாசீனப் படுத்தலாமா?.

    ஒரு நிறுவனமோ, ஒரு தொழிலோ, ஒரு குடும்பமோ, ஒரு தனி மனிதனோ வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டுமானால் நான்கு நிலைகளில் அவர்களின் தன்மைகள் ஆராயப்பட வேண்டும். முதலில் அவர்களின் 'பலம்' என்ன? என்பது கண்டறியப்பட வேண்டும்; அடுத்து அவர்களின் 'பலவீனம்' ஆராயப்பட வேண்டும்; மூன்றாவதாக,'வாய்ப்புகள்' குறித்து யோசிக்கப்பட வேண்டும்; நிறைவாக இந்தச் செயல் முடிந்த பிறகோ அல்லது முன்போ ஏற்படப்போகும் அச்சுறுத்தல்கள் ஆராயப்பட்டு களையப்பட வேண்டும். எப்படியாயினும் வாய்ப்புள்ளபோதே அது சிறியதோ பெரியதோ உடனே பற்றிக்கொண்டு முன்னேறும் குணம் முதன்மையானதாக இருக்க வேண்டும்.

    ஓர் அழகிய சிறிய குருவி காட்டில் கனவு கண்டது; ஓர் அழகிய அருவி, இனிய நீரோடை, பூத்துக்குலுங்கும் மலர் வனங்கள், நெடிதுயர்ந்த மலைகள், பசுமைப் பள்ளத் தாக்குகள், சண்டையிட்டுக்கொள்ளாத உயிரினங்கள். கனவில் பார்த்த இந்த இடம் எங்கே இருக்கிறது?. ஒரு யானையிடம் கேட்டது. அந்த இடம் எனக்குத் தெரியும்; ஆனால் அந்த இடத்திற்கான வழியை நான் சொல்ல வேண்டுமானால், உன்னுடைய சிறகில் ஒன்றைப் பரிசாகத் தரவேண்டும்!. அப்படியே தருகிறேன்!. சிறகு தந்து பறந்து சென்றது. கொஞ்ச நேரத்தில் குருவிக்கு வழி மறந்துபோனது. அங்கிருந்த ஒர் பட்டாம்பூச்சியிடம் வழி கேட்டது; பட்டாம்பூச்சியும் பரிசாகச் சிறகு ஒன்றைப் பெற்றுக்கொண்டு வழிகூறிப் பறந்து சென்றது.

    கொஞ்சதூரம் சென்றதும் குருவிக்கு வழி மறந்துபோய்விட்டது; பிறகு கனவில் கண்ட இடத்திற்கான வழியைப் பாம்பு, சிங்கம், மான், குரங்கு போன்ற விலங்குகளிடம் கேட்டுப் பரிசாக ஆளுக்கொரு சிறகை வழங்கிக்கொண்டே சென்றது. இப்போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் அந்த இடம் வந்து விட்டது. இன்னும் இரண்டுமணிநேரம் பறந்தால் அந்த இடத்தைக் குருவியால் அடைந்துவிட முடியும். ஆனால் அந்த இரண்டுமணிநேரப் பறத்தலுக்கான தெம்பு அந்தக் குருவியிடம் இல்லை; ஏனெனில் தன்னிடம் இருந்த சிறகுகளையெல்லாம் வழி கேட்பதிலேயே பரிசாக வழங்கிச் செலவழித்து விட்டது.

    இப்படித்தான் வாழ்க்கையில் நம்மில் பலரும் வருகின்ற வாய்ப்பையே பயன்படுத்தி வாழ்ந்து விடாமல், தெம்புள்ள போது வீணே செலவழித்துவிட்டு, கடைசியில் தொடமுடியாத வாய்ப்பை எண்ணி வீழ்ந்து போகிறோம்.

    வாய்ப்புகளை வாய்ப்பாக்கி வாழ்ந்து மகிழ்வோம்!

    தொடர்புக்கு 9443190098

    • தியான பயிற்சிகள் மூலம் மனம் அமைதியாகும்.
    • தியானம் என்பது வெறும் கண்களை மூடி கொண்டு செய்வது அல்ல.

    தியானம் என்றால் என்ன என்பதற்கு பதிலாக வருவது, தியானம் என்பது எண்ணங்கள் அற்ற நிலை. தன்னை மறந்த நிலை, தன்னை அறிதல், அமைதி நிலையில் இருத்தல் என்று பல வகைகளில் கூறுவர்.

    மகரிஷி தியானம் என்பது நமக்குள்ளாக இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்கின்றார். அப்படி அந்த நிகழ்வை நடத்துவதற்கு நமக்கு ஒரு குரு தேவைப்படுகிறார். குரு என்பவர் நம்மை ஒளிரச் செய்பவர் என்று பொருள். நம்முள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துபவர்.

    தியானம் என்றால் பற்றற்ற நிலை என்று பொருள் உண்டு. இந்த பற்ற நிலைக்கு வர வேண்டும் என்றால் தியானத்தில் படிப்படியாக முன்னேற வேண்டும். விஞ்ஞான ரீதியில் சொல்ல வேண்டும் என்றால் மனதின் அலைசூழல் வேகத்தை குறைத்து அந்த நிலையிலேயே நிற்பது தான் தியானம். இந்த நிலையில் மனம் அமைதி பெறுகிறது.

    மனம் சரியில்லை என்றால் மற்ற இரண்டும் கெட்டுவிடும். தியானம் என்பது ஒன்று என்றாலும் , அது படிப்படியாக நம்மை உயர்த்த ஒன்பது வகையான தியானங்களை வேதாத்திரி மகரிஷி கொடுத்தார். அவற்றைப்பற்றி பார்ப்போம்.

    கண்களுக்கு புலப்படாமல் நம்மை ஆட்டுவிக்கும் ஒன்று உள்ளது என்றால் அது நம் மனம் தான். மனம் என்றால் என்ன? உதாரணத்திற்கு ஒரு பூக்கடைக்கு சென்று கதம்பம் ஒரு முழம் கொடுக்கும் படி கேட்கிறோம். ஆனால் உண்மையிலேயே கதம்பம் என்கின்ற பூ ஒன்று உள்ளதா என்றால் இல்லை. அப்படி என்றால் ஏன் அந்த பெயர் வந்தது? பல மலர்களின் தொகுப்பு கதம்பம் என்கின்றோம். அதுபோல பல எண்ணங்களின் தொகுப்பு தான் மனம்.

    இந்த மனதின் அபாயம் என்னவென்றால், அது எப்போதும் சுகத்தையே நாடும். மனதிற்கு அமைதி, இன்பம், சாந்தி, சுகம், பேரின்பம் என்று பல பெயர்கள் உண்டு. அப்படி என்றால் மனிதன் என்பவன் யார் என பார்த்தால், மனம் இதமானவர்கள் மனிதர்கள் எனப்படுகின்றனர். மனம் இதமானால் என்ன நடக்கும் என்றால் நினைப்பது நடக்கும். மேலும் கேட்டது கிடைக்கும்.

    ஆனால் நாம் என்ன செய்கிறோம்? எப்போதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருக்கிறோம். முகத்தில் எப்போதும் ஒரு இறுக்கம் உள்ளது. இதனால் மனம் ஆனது அதிக அழுத்தத்திற்கு உட்பட்டு, உடல் இயக்கம், மன இயக்கம் இரண்டையும் கெட வைத்து உயிர் இயக்கத்தை பாதிக்கிறது. அப்படி என்றால் நாம், நம்முடைய செயல்கள் மூலமாக நம்மை நாமே தண்டித்து கொள்கிறோம்.

    இதில் இருந்து விடுபட வழி உண்டா என்றால் உள்ளது. அது தான் தற்கால வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு நான் யார் என்பதை அறியும் அற்புதமான தியானப் பயிற்சி முறைகளை வேதாத்திரி மகரிஷி உருவாக்கி உள்ளார். இந்த தியான பயிற்சிகள் மூலம் மனம் அமைதியாகும்.

    தியானம் என்பது வெறும் கண்களை மூடி கொண்டு செய்வது அல்ல. அப்படி செய்தால். உடல் மட்டும் தியானம் செய்யும் இடத்தில் இருக்கும். மனம் ஆனது பல எண்ணங்களாக விரிந்து புற உலகோடு தொடர்பு கொண்டு வியாபாரம் செய்து கொண்டு இருக்கும். இதனால் மனம் அதன் தன்மையான இதத்தை பெறாது. அப்படி என்றால் தியானத்தை எந்த முறையில் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழும். இதற்கு விடையாக வருபவர் தான் வேதாத்திரி.

    சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    1.ஆக்கினைத் தவம் 2.சாந்தி தவம் 3.துரியம் தவம் 4.பஞ்சேந்திரிய தவம் 5.பஞ்சபூத நவக்கிரக தவம் 6.துரியாதீத தவம் 7.ஒன்பது மைய தவம் 8.நித்தியானந்த தவம் 9.இறைநிலை தவம் என்று ஒன்பது வகையான தவங்கள் உண்டு. இந்த தவ முறைகள் ஒரு மனிதரை மாமனிதர் ஆக்கும். எப்படி என்று ஆராய்ச்சி செய்தால் வியப்பாக இருக்கும்.

    ஆக்கினை தவம் என்பது வாழும் காலத்திலேயே உயிரை உணரும் தவம் ஆகும் பொதுவாக ஒரு மனிதர் இறக்கும் தருவாயில் தான் தன் உயிரை உணர்வார். ஆனால் இந்த தவத்திலே வாழும் காலத்திலேயே உயிரை உணர முடியும்.

    இரண்டாவதாக சாந்தி தவம் என்பது உணர்ந்த உயிருக்குள் உள்ள அமைதியை உணரும் தவம் ஆகும்.

    மூன்றாவதாக எந்த உயிருக்குள் அமைதியை உணர்ந்தோமோ அந்த மன அலை சுழல் வேகத்திலேயே உயிரோடு ஒடுங்கி நிற்கின்ற தவம் தான் துரியம்.

    நான்காவதாக மனம் ஆனது உயிரோடு ஒடுங்கி இருக்க வேண்டும் என்றால் ஞான இந்திரியங்கள் என்று சொல்கின்ற தோல் தொடு உணர்வு, நாக்கு சுவை உணர்வு, மூக்கு சுவாச உணர்வு, கண் பார்வை உணர்வு மற்றும் காது ஓசை உணர்வு இந்த ஐந்து புலன்களும் நமமுடைய கட்டுக்குள் இருக்க வேண்டும். அப்படி இந்த புலன்களை புற உலகத்தோடு உள்ள தொடர்பை குறைத்து அக உலகத்திற்கு திருப்பும் தவம் தான் பஞ்சேந்திரிய தவம்.

    ஐந்தாவதாக நம் வாழ்க்கையானது கர்ம வினை பதிவுகளின் படி கோள்களின் சுழற்சி அலைசூழல் வேகத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கையில் இன்ப துன்ப நிகழ்வுகளை நாம் அனுபவிக்கிறோம். கோள்கள் சாதகமாக இருந்தால் நன்மைகளும் பாதகமாக இருந்தால் துன்பங்களும் நேரிடும். எனவே எப்போதும் இந்த கோள்களை நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் தவம் தான் பஞ்சபூத நவகிரக தவம் ஆகும்.

    ஆறாவதாக எந்த கோள்கள் நம் வாழ்க்கையை தசை மற்றும் புத்தியின் மூலமாக தீர்மானிக்கிறதோ அந்தக் கோள்கள் அனைத்தும் இந்த பிரபஞ்சத்திலேயே மிதந்து கொண்டு இருக்கிறது. அந்தக் கோள்கள் சுய அறிவோடு ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் அதனுடைய இயக்கப் பாதையிலே முறையாக எந்த தவறும் செய்யாமல் சுழல்கிறது.

    இப்படி இந்தக் கோள்கள் இயங்கி கொண்டு இருக்கிறதே அது பெரிதா அல்லது இந்த கோள்களை மிதக்க விட்டு கொண்டு இருப்பவர் பெரியவரா என்றால், மிதக்க விட்டுக்கொண்டு இருப்பவர் தான் பெரியவர். அவரே இறைவன். அந்த அந்தத்தை உணரும் நிலைதான் அடுத்த தவமாகிய துரியாதீதம் தவம். இந்த தவம் தான் தானாக நின்று விஸ்வரூபம் தரிசனம் எடுத்து தன் மூலத்தை உணரும் நிலையாகும்.

    இப்படி வாழும் காலத்திலேயே மூலத்தை உணர்ந்து விட்டால் நம் பதிவுகளை சரியான முறையில் கழிக்க வேண்டும் என்றால் நோய் வராமல் தடுக்க வேண்டும். அதற்கு உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் சரியான முறையில் இயங்க வேண்டும். அப்படி உடலில் உள்ள ஏழு சுரப்பிகளையும் கடந்து வெளியே இரண்டு படிகளை கடக்கும் தவம் தான் ஏழாவது தவமான 9 மைய தவமாகும்

    இந்த தவத்தினால் உடல் ஆரோக்கியம் பெற்று மனம் அமைதி நிலை என்கின்ற ஆனந்த நிலை அடையும். இந்த ஆனந்தம் ஒரு நாளோ ஒரு மாதமோ ஒரு வருடமோ அல்ல நமக்கு உயிர் உள்ளவரை வேண்டும். அதற்குத்தான் எட்டாவது தவமாகிய நித்தியானந்த தவத்தை மகரிஷி கொடுத்தார்.

    சரி இப்போது நாம் ஆனந்தமாக இருந்தால் ஒரு கேள்வி எழும். எப்போதும் ஆனந்தமாக உள்ளது எது என்று. அதுவே இறைவன் அல்லது இறைநிலை. அதன் தன்மை அன்பு மற்றும் கருணை மட்டுமே. அது துன்பம் இல்லாமல் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறது. அது அன்பு கருணையோடு இருக்கிறது.

    நாமும் நித்தியானந்த தவத்தின் மூலம் எப்போதும் ஆனந்தமாக இருப்பதால் ஒன்பதாவது தவம் ஆகிய இறைநிலை தவத்தை நாம் செய்தால் நமக்குள்ளும் அன்பும் கருணையும் ஊற்றெடுக்கும். இப்படி சாதாரணமான மனிதராக இருந்த நாம் ஆக்கினை தவத்தில் ஆரம்பித்து படிப்படியாக தவங்கள் செய்து கடைசியாக இறைநிலை தவத்திலேயே மாமனிதராக மாறுகிறோம். இது தான் தியானத்தின் சிறப்பு.

    போன்: 9444234348

    • “ராமன் எத்தனை ராமனடி” என்ற படத்தில் ஒரு பாடல்.
    • ஒரு கலைக்குழு அரசு சார்பாக அனுப்பப்பட்டது.

    நாட்டுப்பற்றுக்காக எம்.எஸ். வி. ஜலந்தர் சென்ற நிகழ்ச்சியை பார்க்கலாம்.1965ல் இந்தியா- பாகிஸ்தான் போர் நடைபெற்ற போது வீரர்கள் காயம் அடைந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த வீரர்களை தேற்றி உற்சாகம் அளிப்பதற்காக இங்கிருந்து ஜலந்தருக்கு ஒரு கலைக்குழு அரசு சார்பாக அனுப்பப்பட்டது. இக்குழுவில் நடிகர்கள் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், சந்திரபாபு வி. கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன், கவியரசர் கண்ணதாசன், நடிகைகள் சாவித்திரி, ஜெயலலிதா அவரது தாயார் சந்தியா, பத்மினி, தேவிகா, பாடகர் ஏ. எல். ராகவன், பாடகி பி. சுசீலா ஆகியோர் சென்றனர்.

    ஜலந்தரில் இந்திய ராணுவ மருத்துவமனைக்கு கலைஞர்கள் சென்றனர். அங்கே எல்லையை இரவு பகலும் கண் இமைக்காமல் காத்த போரில் ஏற்பட்ட காயங்களால் அவதிப்படும் வீரர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை கண்டு எல்லோரும் மனம் கலங்கினார்கள். சிவாஜி, சாவித்திரி, பத்மினி ஆகியோர் தாங்கள் நடித்த படங்களின் காட்சிகளை வசனம் பேசி நடித்துக் காட்டினார்கள்.

    எம்.எஸ்.வி. தனது ஆர்மோனியப் பெட்டியை கழுத்தில் மாட்டிக் கொண்டே ராணுவ வீரர்களிடம் சென்று உடல் நலம் விசாரித்ததுடன், அவர்களுக்கு பிடித்தப் பாடல்களை ஹார்மோனிய இசையில் பாடகர்களை வைத்து தானும் பாடினார். அது ராணுவ வீரர்களின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியானது.

    கழுத்தில் தொங்கிய ஹார்மோனியத்தின் கனமும் வலியோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டுக்காக போராடிய போது காயம்பட்ட இவர்களின் வலியை விடவா தன் வலி பெரிது என்று எண்ணி வீரர்கள் விரும்பி கேட்ட பாடல்களையே அவர்களுக்கு காணிக்கையாக அளித்து விட்டார்.

    வந்திருந்த கலைக்குழுவினருக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒரு விருந்து அளித்தார். அங்கும் கலைக்குழுவினர் தம் பங்களிப்பை அளித்தார்கள். எம்.எஸ்.வி. ஹார்மோனியம் வாசிக்க, பி.சுசீலா "கண்ணன் என்னும் மன்னன் பேரை" என்ற பாடலை பாட, ஜெயலலிதா நடனம் ஆடினார்.


    குடியரசுத் தலைவர் தனது விருப்பப் பாடலாக "பிறக்கும் போதும் அழுகின்றான். இறக்கும் போதும் அழுகின்றான்" பாடலை பாட சொல்லி கேட்க, நடிகர் சந்திரபாபு மிகவும் உருக்கமாகப் பாடியதை டாக்டர் ராதாகிருஷ்ணன் மிகவும் ரசித்துக் கேட்டார். அப்போது சடாரென அவரது தாடையைப் பிடித்து "நீ மகா ரசிகன்" என்று கொஞ்சி விட்டார் சந்திரபாபு. பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட எல்லோரும் திருக்கிட்டு விட்டார்கள். குடியரசுத் தலைவர், ஒரு கலைஞனின் அதிக ஆர்வத்தை புரிந்து கொண்டு விட, பிறகு நிலைமை சுமுகமானது.

    நாட்டுக்கு சேவை செய்தவர்களின் மனதுக்கு தெம்பூட்டும், கலைப்பணியை செய்ததும் கூட எம்.எஸ்.வி.யின் நாட்டுப்பற்றை நமக்கு உணர்த்துகிறது. இது மட்டுமல்ல, நலத்திட்டப் பணிகள், கோவில் கட்ட, பள்ளிகள் கட்ட என பல நற்பணிகளுக்கு கட்டணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல், தனது இசைக் குழுவினரையும் குறைந்த தொகையில் இன்னிசை கச்சேரிகள் செய்ய ஊக்கவித்ததும் வெளியில் சொல்லிக் கொள்ளாதவை!

    அப்போதெல்லாம் அரசு விழாக்கள் என்றாலும் முன்னணி இசை அமைப்பாளர் என்ற முறையில் எம்.எஸ்.வியின் கச்சேரிகள்தான் கொடிகட்டி பறக்கும்!

    சுதந்திர பொன்விழா ஆண்டின் போது அரசு சார்பில் 40, 50 பள்ளிகளில் இருந்து நன்றாக பாடக்கூடிய ஏறக்குறைய 200 குழந்தைகளை தேர்ந்தெடுத்து மகாகவி பாரதியார் பாடல்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் எம்.எஸ்.வி. பல ஒத்திகைகளுக்குப் பிறகு இந்த மொத்த குழந்தைகளும் பிசிறு இல்லாமல் ஒட்டுமொத்தமாக ஒரே டேக்கில் நேரடி நிகழ்ச்சியில் அத்தனை சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.

    தொழில்நுட்ப ஒட்டல் வெட்டல் எதுவுமில்லாமல் நேரடி நிகழ்ச்சியில் இத்தனை குழந்தைகள் பாடிய போது எனக்கு கண்ணில் நீர் வந்துவிட்டது என்றுநெகிழ்ந்து போய் சொல்லியிருக்கிறார் எம்.எஸ்.வி. தொழில்முறை கலைஞர்களே கோரசாக ஒரே அளவில் பாடுவது மிகவும் சிரமம். அதுவும் பள்ளி குழந்தைகளை வைத்து பாட வைப்பது என்பது எத்தனை சிரமம். ஆகச்சிறந்த நாட்டுப்பற்று உள்ள ஒருவரால் தான் இது சாத்தியப்படும்.

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    "கப்பலோட்டிய தமிழன்" படத்தை இயக்கி தயாரித்தவர் பி.ஆர். பந்தலு. அதில் அத்தனை பாடல்களும் மகாகவி பாரதியார் எழுதியவை தான்! ஜி. ராமநாதனின் அற்புதமான இசையில் வந்தன. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய திருநாட்களில் இன்றைய தலைமுறையினருக்கும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி சொல்லி புரிய வைக்க இது போன்ற படங்கள் தானே இருக்கின்றன. இந்த படத்தில் பாடுவதற்காக ஊதியமாக எந்த தொகையும் பெற்றுக் கொள்ளாமல் திருச்சி லோகநாதன் பாடி கொடுத்துள்ளார்.

    இதுபோல நாட்டுப்பற்றுடன் பணத்தை முன்னிறுத்தி யோசிக்காதவர்களும் திரைத்துறையில் இருந்தனர். போர் காலங்களில் நகைகளை கழற்றிக் கொடுத்தவர்களும் கொடை வழங்கியவர்களும் திரைத்துறையில் நிறைய இருந்தனர்.

    1961-ல் கப்பலோட்டிய தமிழன் படத்தில் "பாரத தேசமென்று பெயர் சொல்லுவார். மிடிப் பயங்கொல்லுவார் துயர் பகை வெல்லுவார்" என்ற பாட்டிலிருந்து வ.உ.சிதம்பரனார் கப்பல் வாங்கி வரும் காட்சிக்கு பொருத்தமாக "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்", "முத்து குளிப்பதொரு தென்கடலிலே " "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்" ஆகிய சரணங்களை எடுத்து பாடலை அமைத்திருந்தார் பி.ஆர்.பந்தலு. இவர் ஆசிரியராகவும் பணி புரிந்தவர்.

    கை கொடுத்த தெய்வம் 1964 -ல் வந்தது. இப்படத்தின் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். குடும்பத்து உறவுகள் சிக்கல்களை வைத்து சிறப்பாக படங்களை இயக்கியவர். இவர் ஒரு கவிஞர், படத்தின் கதை பகுதி கொஞ்சம் வடக்கில் நடப்பது போல் வரும். அதனாலோ என்னவோ மகாகவி பாரதியாரின் தேசிய ஒருமைப்பாடு பாடல் தன் படத்தில் இடம்பெற நினைத்தார்.

    "பாரத தேசம் மென்று பெயர் சொல்லுவார்" பாடலில் இருந்து ஏற்கனவே மூன்று சரணங்கள் எடுக்கப்பட்டு விட்டதை பார்த்தோம். அதில் மீதமுள்ள சரணங்களில் இருந்து, "சிந்துநதியின் மிசை நிலவினிலே.. (எத்தனை மாநிலங்கள் சொல்லப்பட்டுள்ளன!), அடுத்து, "கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்" (பண்டமாற்று கொடுக்கல் வாங்கல்) கடைசி சரணத்தில் இந்தியாவையும் தாண்டி "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்" என்று கனவு கண்ட பாரதியின் வரிகளை தேர்ந்தெடுத்தும் "சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து" என்ற வரி வருவதால் பாடலின் ஆங்காங்கே தெலுங்கில் பாட வைத்திருப்பதும் அழகு!

    கேரளப் பெண்களுடன் தெலுங்கில் பாடிக்கொண்டு, தோணிகளில் போகும் பாரதியார் கண்ட கனவின் முழு சாட்சியாக இருக்கும் பாடல் அது! டி.எம்.எஸ்., எல்.ஆர். ஈஸ்வரி, ஜே.வி.ராகவலு குரலுடன் காலத்தை வென்று நிற்கும் பாடல் அது!

    கே.எஸ். கோபாலகிருஷ்ணன் விவரிக்கிறார் எம்.எஸ்.வியிடம்.. "நாயகன் பாரதியாராகவே தன்னை கனவில் காண்கிறார். பாரதியார் ஒவ்வொன்றாக யோசித்தபடி எழுதிக் கொண்டே பாடுவது போல் ஒரு பாட்டு வேணும்".

    இந்த பாடலுக்கு மெட்டமைத்ததை பேட்டியில் சொல்கிறார், "ஒரு தாளை எடுத்துக் கொண்டு எழுதினால் எப்படி எழுதுவோம்? நலம் நீங்கள் நலமான்னு எழுதுவோமில்லையா? அது மாதிரி, முணுமுணுத்தப்படியே, யோசித்தப்படியே பாரதியார் எழுதினால் ஒவ்வொரு சொல்லுக்கும் எவ்வளவு நேரம் இடைவெளி வருமோ அந்த வேகத்தில் தான் பாடலை மெட்டமைத்தேன். இதே போல் தான் "அன்புள்ள மான் விழியே ஆசையில் ஒரு கடிதம்" என்ற பாடலுக்கும் மெட்டைப் பிடித்தேன்"- என்கிறார்.

    ஒரு மெட்டுக்கான உந்து சக்தி எங்கிருந்தெல்லாம் கிடைக்கிறது இவருக்கு! பள்ளிகள் தோறும் தேசிய திரு நாட்களில் இன்றும் பாடப்படும் சிரஞ்சீவி பாடல்! சிவாஜியை பார்க்க முடியாது! பாரதியார் தான் பாடியிருந்தால் எப்படி யோசித்து பாடியிருப்பாரோ அப்படி நடித்திருப்பார் சிவாஜி! மெல்லிசை மன்னர்களின் புகழுக்கு சாட்சி இப்பாடல்!

    'கனவு மெய்ப்பட வேண்டும்' என்று பாடிய பாரதியின் கனவுக்கு உயிர் கொடுத்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போற்றுதலுக்குரியவர்!

    "பாரத விலாஸ்" என்ற படம் 1973-ல் வந்தது. இதில் ஒரு பாடல் "இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு"!- என்று கவிஞர் வாலி எழுதிய பாடல்!

    இந்தப் பாடல் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வசிக்கும் தமிழர், ஆந்திரர், மலையாளர், கன்னடர், பஞ்சாபி ஆகியோர் தங்களது மாநிலங்களின் சிறப்புகளை புகழ்ந்து பாடுவதாக வரும் பாடல்!

    தேசிய ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தினை வைத்து மிகச் சிறப்பாக கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த ஒரே பாடலில் மேக்கத்திய கிராமியம், பங்காரா, பஜன் இசை என்ற பலவகை இசைகளை தந்திருப்பார் எம்.எஸ்.வி.

    "ராஜ பார்ட் ரங்கதுரை" படத்தில் "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று பஞ்சாப் சிங்கம் "பகத்சிங்" கதாபாத்திரம் பாடுவதானப் பாடல் கவியரசர் எழுதியது. டி.எம்.எஸ். உணர்வு பூர்வமாக பாட, நடிகர் சிவாஜி கணேசன் அற்புதமாக நடிக்க, இசையில் மிரட்டியிருப்பார் எம்.எஸ்.வி.

    "ராமன் எத்தனை ராமனடி" என்ற படத்தில் ஒரு பாடல். "சேர, சோழ, பாண்டியன் மன்னர் ஆண்ட தமிழ்நாடு"- என்ற பாடல் கவியரசர் எழுதியது. எல்.ஆர்.ஈஸ்வரி, மாதுரி குழுவினர் பாடிய பாடல். குழந்தைகள் சேர்ந்து ஆடும் நாட்டிய நிகழ்ச்சி!

    ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்களுக்குள் பிரிவினை பேசி தனி மாநிலம் வேண்டுமென பாடுவது போல காட்சி! அந்தந்த மாநிலத்துக்கென பொருத்தமான இசை. காந்தி வந்து ஒற்றுமையை போதிக்கும் போது "ரகுபதி ராகவ ராஜாராம்" என்ற ஹம்மிங், நேருவை காட்டும்போது ராணுவ இசை, பாரதியார் வந்து "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்று புரட்சியாக பாட வைத்து இசையமைத்திருப்பார் எம்.எஸ்.வி.! இயக்குனர் பி.மாதவனின் தேசிய சிந்தனை பாராட்டுக்குரியது. தேசப்பற்றுடன் கூடிய இதுபோல பல நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்ட எம்.எஸ்.வி. அவர்களை போற்றுகிறேன்! வணங்குகிறேன்!

    அடுத்த தொடரில் பார்ப்போம்...

    • இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும் வேறுபடுகிறது.
    • ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையின் செயல்திறனில் வேறுபாடுகள் உள்ளன.

    மனிதர்களின் மரபணுவில் 99.9 சதவீதம் அனை வருக்கும் பொதுவானது, அப்படியென்றால் 0.1 சதவீதம் மட்டுமே ஒருவரின் தனித்துவத்தை உறுதிசெய்கிறது. அந்த வகையில் ஆண்களும் - பெண்களும் உடலளவில் மட்டுமே வேறுபட்டவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

    ஆனால், இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும் வேறுபடுகிறது. ஆண்களின் மூளையும், பெண்களின் மூளையும் வெவ்வேறு கோணங்களில் செயலாற்றுகின்றன என்பதே மருத்துவ உலகத்தின் கூற்று.

    ஒரு பெண், ஆண் போல் வேலை செய்வது கடினம், அதேபோல் ஓர் ஆணால், பெண்ணைப்போல் செயல்படுவதும் கடினம். இயற்கையின் படைப்பில் பெண் என்பவள் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவள்.

    ஆண் என்பவன் அளவாகப் பேசிக் காரியத்தைச் செய்து முடிப்பவன். இதற்குக் காரணம் ஆண் மூளையும், பெண் மூளையும் அமைப்பிலும், செயல்திறனிலும் வேறுபடுவதே ஆகும். என்ன அந்த வேறுபாடு, என்பதை இப்பகுதியில் பார்ப்போமா?

    யார் அறிவானவர்?

    பெண்ணின் மூளையைவிட ஆணின் மூளை 10 சதவீதம் (பெண் மூளை 1350கிராம், ஆண் மூளை 1450கிராம்) பெரியதாக உள்ளது. அதாவது ஆண் மூளை, பெண் மூளையைவிட 100-150 கிராம் எடை அதிகம் உள்ளது. அதற்காக ஆண், பெண்ணை விட அறிவானவன் என்று நீங்கள் யாரும் தப்பு கணக்குப் போட்டு விட வேண்டாம்.

    அறிவுத்திறன் என்பது மூளையில் உள்ள மேடுபள்ளங்களைப் பொறுத்துத்தான் உள்ளது. நாம் நம் மூளையின் 100 சதவீதத்தில் 5முதல் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்து கிறோம். ஒவ்வொருவரும் தன் மூளையில் எவ்வளவு விழுக் காடுகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன.

    சிலர் பிறவியிலேயே புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே இருபாலரில் எவர் வேண்டுமானாலும் அறிவாளியாக இருக்கலாம்.

    பெண் ஏன் அதிகம் பேசுகிறாள்?

    பெண்களால் ஒரு நாளைக்கு 4000 முதல் 6000 சொற்களை எளிதில் பேச முடியும். ஆனால், ஆண்களால் ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 சொற்களே பேச முடியும். பேச்சுத் திறனுக்கான இடப்பக்க மூளையில் உள்ள பகுதி பெண்ணுக்கு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதே இதற்குக் காரணம்.

    ஆனால் ஓர் ஆண் அளவாகத்தான் பேசுவான், எல்லாப் பெண்களும் கண்டிப்பாக அதிகமாகத்தான் பேசுவார்கள் என்று 100 சதவீதம் கூறுவது கடினம்தான். விதிவிலக்கு என்பது இதற்கும் பொருந்தும்.

    ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள் ஆண்களா? பெண்களா?

    நம் மூளையின் வலப்பக்க அரைக்கோளம் இடப்பக்க உடலையும், இடப்பக்க அரைக் கோளம் வலப்பக்க உடலையும் இயக்குகின்றன.

    இந்த இரண்டு அரைக் கோளங்களையும் இணைப்பது கார்பஸ் கலோசம் எனப்படும் கமிசுரல் பைபர். இந்த பைபர் ஆண்களைவிடப் பெண்களுக்கு 30 சதவீதம் அதிகமாக இருக்கும். இதனால் தான் ஒரு பெண் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய திறனைப் பெற்றிருக்கிறாள்.

    ஓர் ஆணால் ஒரே நேரத்தில் ஒரு வேலையைத்தான் முழுக்கவனத்துடன் திறம்படச் செய்ய முடியும். எடுத்துக்காட்டுக்கு ஆண்கள், குறிப்பிட்ட ஒரு பணியை மையமாகக் கொண்ட வேலைகளில் (பொற்கொல்லர்) சிறந்து விளங்குகிறார்கள்.

    ஒரு வேலையை இருபாலரும் செய்கையில் இருவருக்கும் மூளையில் எட்டு பகுதிகள் வேலைசெய்யும். எந்த எட்டுப் பகுதிகள் என்பது இருவருக்கும் மாறுபடுகிறது.


    பெண்கள் சிக்கல்களை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?

    பெண்களின் மூளையில் உள்ள பிரீப்ரான்டல், ஆர்பிடோ பிரான்டல், சுப்பீரியர் டெம்போரல், லேட்டரல் பிரைட்டல் கார்டெக்ஸ் மற்றும் இன்சுலா போன்ற பகுதிகள் ஆண்களைவிடப் பெண்களுக்கு, சற்றுப் பெரிய அளவில் உள்ளது.

    மேலும் மூளையில் உள்ள ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவுடன் இணைந்திருக்கும் விகிதம் பெண்களுக்கு 30 சதவீதம் அதிகம், எனவே தான் பெண்கள் ஒரு செயலைப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்துச் சிந்திக்கக் கூடியவர்கள், அதனால் சில நேரங்களில் சிக்கல்களைப் பெரிதாக்கிவிடுகிறார்கள்.

    சிக்கல்கள் என்று வரும்போது, பெண்கள் அவை எப்படி, எங்கிருந்து வந்தன? என்று சிந்திப்பார்களே தவிர அதற்கு என்ன தீர்வு? என்று சிந்திக்க மாட்டார்கள். ஆனால் ஆண்கள் அதற்கான தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களுக்குச் சட்டென முடி வெடுக்கும் திறன் பெண்களை விட அதிகம்.

    வாகனம் ஓட்டு வதில் வல்லவர்கள் ஆண்களே ஏன்?

    ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு ஆண்களால் எளிதில் சென்று வரமுடியும். இதற்கான இடம் மூளையில் பரைட்டல் (Parietal) பகுதியில் உள்ளது, இந்தப் பகுதி இடங்களையும், பாதை களையும் நினைவில் வைத்துக் கொள்வ தற்கான பகுதியாகும்.

    ஆண்களுக்குப் பெண்களைவிட இந்தப்பகுதி நன்கு வளர்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம். அதனால் பெண்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருவது என்பது ஆண்களைப் போல் எளிதான செயல் அல்ல.

    ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் அதிகநேரம் எடுத்துக் கொள்கிறார்கள்?

    கண்களில் கூம்புகள் எனப்படும் ஓர் அணு ரெட்டினா வில் உள்ளது. இது ஆண்களை விட 30 சதவீதம் அதிகமாகப் பெண்களுக்கு உள்ளதால், ஆண்களை விடப் பெண்களால் வண்ணங்களை எளிதில் பிரித்தறிய முடியும்.

    எனவே தான் நிறங்களில் உள்ள சிறிய மாறுதல் களைக் கண்டு பிடிப்பதில் மிகவும் சிறந்தவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். அதனால் தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.


    வாழ்க்கைத் துணையை ஆண்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

    ஆண்களின் மூளை அமைப்பு, கண்களின் காட்சி களுக்கு முதன்மை அளிக்கிறது. எனவேதான் ஆண்கள் அழகான பெண்களையே வாழ்க்கைத் துணையாக ஏற்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பெண்களுக்கோ காட்சிகளினால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, மனம் விட்டுப் பேசுவதாலும், நன்கு பேசும் ஆண்களினாலும் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது.

    அதனாலேயே ஓயாது பேசிக்கொண்டு இருக்கும் ஆண்களைப் பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது. இதற்கு ஆண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.


    பெண்கள் உணர்வுகளுக்கு முதன்மை கொடுப்பது ஏன்?

    பெண்களின் மூளையில் அதிக கிரேமேட்டர் இருப்பதற் கான சான்றுகள் உள்ளன. கிரேமேட்டரில் உள்ள நரம்பணுக்கள் உடல் இயக்கத்திற் கானவை, மேலும் இது தசைக் கட்டுப்பாடு, ஐம்புலன்கள் மற்றும் உணர்ச்சி களுடன் தொடர்புடைய மூளையின் பகுதியாகவும் இருக்கிறது.

    மேலும் மூளைக்குள் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்யும்போது, பெண்கள் வலுவான இணைப்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது சிறந்த உள்ளுணர்வு, சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கிறது.

    எனவே தான் பெண்கள் எந்த வேலை செய்தாலும் உணர்வு நிறைவுடன் செய்ய முயல்வார்கள். பிறந்தநாள், திருமண நாள் ஆகியவற்றை நன்கு நினைவில் வைத்திருப்பார்கள். அவற்றைக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும்.

    இப்படி இருபாலருக்கும் மூளை வேறுபடும் காரணத்தால், இருவரும் தங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையின் செயல்திறனில் பல முதன்மையான வேறுபாடுகள் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்றே நினைக்கிறேன். 

    • மேயர் லண்டனில் இருந்த ஹெடி லமாரை அழைத்தார்.
    • தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கற்கள்.

    ஹலோ! நல்லா இருக்கீங்களா?

    இன்று கையில் செல்போனை வைத்துக் கொண்டு இப்படி பேசாதவர் யாருமே உலகில் இல்லை எனலாம். எதற்கெடுத்தாலும் எங்கு சென்றாலும் எப்போதும் எல்லோரிடமும் செல்போன், – தகவல் தொடர்புக்கு இன்றியமையாத சாதனமாகத் திகழும் இதைக் கண்டுபிடிக்க வழி வகுத்தவர் ஒரு நடிகை என்றால் ஆச்சரியமாக இல்லை. – ஆம், அந்த பேரழகியான நடிகை ஒரு விஞ்ஞானியும் கூட என்றால் இன்னும் வியப்பு அதிகமாகும்!

    அவர் பெயர் ஹெடி லமார்!

    பிறப்பும் இளமையும்: ஆஸ்திரியாவில் லிவிவ் என்ற இடத்தில் (இப்போது உக்ரேனில் உள்ள இடம் இது) 1914-ம் ஆண்டு ஹெடி லமார் என்ற ஈவா மேரி கியஸ்லர் பிறந்தார். தந்தை ஜெர்ட்ருட் ட்ரூட் கியஸ்லர் ஒரு உயர் அதிகாரி. யூதரான தாயார் எமில் கியஸ்லர் பியானோ வாசிப்பவர்.

    ஐந்து வயதிலேயே புதிதாக எதையும் செய்யும் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. பழைய மியூசிக் பாக்ஸ் ஒன்றை எடுத்து அதைப் பிரித்துப் போட்டு விட்டு, திருப்பியும் அதை அப்படியே அசெம்பிள் செய்தார் அவர். படிக்கும் போது அவருக்கு ரசாயனத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டானதால் கெமிக்கல்களை ஒன்றுடன் ஒன்று கலந்து பார்ப்பது அவரது வழக்கமானது. அதே சமயம் தந்தையாருடன் நடைப்பயிற்சி செய்யும் போது, அவர் எப்படி நவீன சாதனங்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதை விளக்குவார்.

    திரைப்பட வாய்ப்பு: 12-ம் வயதில் வியன்னாவில் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பரிசைத் தட்டிச் சென்றார் அவர்.

    முதன் முதலாக 1933-ல் அவரது 19-ம் வயதில் செக்கோஸ்லேவிய, ஆஸ்திரிய தயாரிப்பான எக்ஸ்டஸி என்ற படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்த பிரதான நடிகை ஒரு யூதர் என்பதால் அதை ஹிட்லர் தடை செய்தார்.

    ஆனால் படிப்படியாக அவரது நடிப்பு மக்கள் மனதை ஈர்க்கவே அவர் புகழ் பெறலானார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் ஜிக்பீல்ட் கேர்ள் (1941) மற்றும் சாம்ஸன் அண்ட் டிலைலா (1949) அவரை புகழேணியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

    நாஜி ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுமை தாங்காமல் அனைத்து யூதர்களும் அங்கிருந்து தப்பி ஓடிய காலம் அது! ஆகவே பிரபலமான எம்ஜிஎம் உரிமையாளரான லூயிஸ் பி. மேயர், ஜெர்மனியிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்திருக்கும் நல்ல நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்யலாம் என்று அங்கு வந்தார். மெட்ரோ கோல்ட்வின் மேயரைப் பார்க்கவே தவம் செய்வார்கள் எல்லா பிரபலங்களும்! அவர் எப்போது தம்மைக் கூப்பிடுவார் என்று அனைவரும் ஏங்கியிருந்தனர். மேயர் லண்டனில் இருந்த ஹெடி லமாரை அழைத்தார். "உனக்கு வாரத்திற்கு 125 டாலர் சம்பளம் தருகிறேன். ஹாலிவுட் வருகிறாயா?" என்று கேட்டார். "சாரி! அந்தச் சம்பளத்திற்கு என்னால் வர முடியாது" என்று டக்கென்று பதில் சொல்லி விட்டார் லமார்.

    மேயர் மட்டுமல்ல, அனைவருமே திகைத்துப் போனார்கள். கூடுதல் சம்பளத்திற்கு வழி என்ன என்று யோசித்தார் லமார். ,மேயர் திருப்பி அமெரிக்கா செல்லும் கப்பல் எது என்று அறிந்து அதிலேயே தனக்கும் ஒரு டிக்கட்டை பதிவு செய்தார் அவர்.

    ஒரு நாள் கப்பலில் மேல்தளத்தில் அவர் அமர்ந்திருந்த போது பளபளக்கும் ஆடையை அணிந்து அவர் டேபிளின் அருகே அவர் தன்னைப் பார்க்கிறாரா என்று நன்கு கவனித்து ஒய்யாரமாக அன்ன நடை நடந்தார் அவர்.

    மேயர், லமாரை அழைத்து வாரத்திற்கு ஐநூறு டாலர் தருகிறேன் என்றார். ஒப்பந்தம் கையெழுத்தானது!

    புதிய பெயர்: ஹாலிவுட்டில் நடிக்க அவருக்கென பிரத்யேகமாக ஒரு பெயர் தேவை என்று கோல்ட்மேயர் நினைத்தார். கோல்ட்மேயரின் மனைவி மார்கரெட் மவுனபட காலத்தில் பிரசித்தமாக விளங்கிய நடிகையான பார்ப்பாரா லமார் பெயரில் உள்ள 'ல மார்' என்பது பிரெஞ்சு வார்த்தை போல இருப்பதால் அதை அவருக்குச் சூட்டலாம் எனக் கூறினார். அது முதல் அவர் ஹெடி லமார் ஆனார். டிஸ்னியில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரமான ஸ்நோ ஒய்ட்டும், பேட்மேனில் வரும் கேட் உமனும் அவரைப் பார்த்து பெற்ற உத்வேகத்தால் அமைக்கப்பட்டவையே.

    தொடர்ந்து அவரது திரை வாழ்க்கையில் ஏராளமான படங்களில் அவர் நடித்துப் புகழ் பெற்றார். வானொலி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கு பெற்றார். தானே ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் ஆனார்.

    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    விருதுகள்: ஏராளமான விருதுகளை அவர் வாழ்ந்த போது பெற்றார். அவர் மறைந்த பிறகு இன்னும் பல விதத்தில் அவரது நினைவு போற்றப்படுகிறது. வியன்னா பல்கலைக்கழகத்தில் 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குவாண்டம் டெலஸ்கோப்பிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2019, ஆகஸ்ட் 27-ம் தேதி ஒரு விண்கல்லுக்கு "32730 லமார்" என்று அவரை கவுரவிக்கும் வண்ணம் பெயர் சூட்டப்பட்டது.

    குடும்பம்: லமாரைப் பாராட்ட வந்த ஏராளமானோரில் பிரெடெரிக் மாண்டில் என்பவரும் ஒருவர். அவர் ராணுவத்திற்கு ஆயுதம் விற்கும் வியாபாரி.

    அவர் லமாரை விடாது தொடரவே அவரை 1933-ல் லமார் மணந்தார். ஆனால் அவர் முசோலினிக்கு மிக நெருங்கியவராக இருந்ததோடு ஹிட்லருக்கும் வேண்டியவராக இருந்தார். ஆகவே திருமணம் நிலைத்திருக்கவில்லை. பாரிசுக்கு விரைந்தார் அவர். இதன் பிறகு ஐந்து முறை மணந்தார் அவர். அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. 1955-ல் நடந்த கடைசி திருமண முறிவுக்குப் பின்னர் 35 வருடங்கள் அவர் தனியாகவே வாழ்ந்தார்.

    புதிய கண்டுபிடிப்பு: உலகப் போர் மும்முரமான போது தகவல் தொடர்பு மிக முக்கியமான ஒன்றாக ஆனது. ஹிட்லர் எனிக்மா என்கோடிங் மெஷின் என்ற ரகசிய சங்கேதம் அனுப்பும் மெஷினை வைத்தே தனது ரகசிய திட்டங்களையும் ஆணைகளையும் அனுப்பி வந்தான். டைப்ரைட்டர் அளவே உள்ள அந்த சிறிய மெஷின் பதினைந்து லட்சம் கோடி சங்கேத முறைகளில் வேறு வேறாகச் செய்திகளை அனுப்பும் திறன் வாய்ந்தது. பிரிட்டிஷ் ராணுவம் இந்த சங்கேதங்களை இடைமறித்துக் கேட்டாலும் அது என்ன என்று அவர்களுக்குப் புரியவில்லை. இதனால் நேச நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தன.

    நேசநாட்டு ராணுவத்தினருக்கு ஜெர்மனிக்கு ஈடு கொடுத்து ஆணைகளை விரைவாக அனுப்புவது இன்றியமையாத தேவையாக ஆகி விட்டது. முக்கியமாக கடற்படையினருக்கு விரைவாக அனுப்பும் தகவல் தொடர்பு முக்கியமானதாக ஆனது.

    ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் லமார் உச்சகட்ட புகழில் இருந்த போது பிரபல இசையமைப்பாளரான ஜார்ஜ் அன்தெய்லுடன் இணைந்து ஒரு ரகசிய தகவல் தொடர்பு அமைப்பைக் கண்டுபிடிப்பதில் முனைந்தார். லமார் ஒரு கணித நிபுணி. அன்தெய்லின் உதவியுடன் பியானோவை இசைக்கும் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பிரீக்வென்சி ஹாப்பிங் எனப்படும் அலைவெண் தத்தலைக் கண்டுபிடித்து உரிய பேடண்டையும் எடுத்தார். இதன் மூலம் ரேடியோ மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தி, ஏவி எதிரிகளை நிலைகுலைய வைக்கலாம் என்ற எண்ணத்துடன் அமெரிக்க கடற்படையை அணுகி தனது கண்டுபிடிப்பைப் பற்றிச் சொன்னார்.

    பியானோவை வைத்து அதில் 88 வெள்ளை மற்றும் கறுப்பு கீ- கள் இருப்பதால் அதை வைத்து அலைவெண்களுக்கு இடையே மாற்றுகின்ற ஒரு புதிய உத்தியை அவர் கண்டுபிடித்தார். இதன் மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தலாம் என்று அவர் கூறினார்.

    அவரை புகழ்பெற்ற நடிகையாகப் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் இவராவது டார்பிடோ குண்டுகளை ஏவுவதாவது என்று எண்ணிச் சிரித்தனர். அவரது கண்டுபிடிப்பின் பெருமை பற்றி அறிய அவர்கள் முற்படவில்லை. ஆனால் 1962-ம் ஆண்டு தான் இதைப் பற்றி கடற்படைநன்கு அறிந்து அதை அமல்படுத்தியது.

    என்ன நடந்தது என்பதை அவர் 'பாம்ப்ஷெல்: தி ஹெடி லமார் ஸ்டோரி' என்ற ஒரு பதிவில் தானே பேசி இருக்கிறார்.

    பெரிதும் நிராசையடைந்த லமார் ஒரு விதமாக அங்கீகாரமும் கிடைக்காமல் போக, பேடண்ட் உரிமையும் காலாவதி ஆகவே முயற்சியையும் கை விட்டார். நம்பிக்கையையும் இழந்தார்.

    ஆனால் இன்றைய கணினி யுகத்தில் செல்வாக்கு பெற்றுள்ள செல் போன், புளுடூத், மற்றும் வைபை போன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு விதை ஊன்றியவரே அவர் தான். அவருக்கு அதற்கான புகழ் கிடைக்கவில்லை.1997-ல் தான் அவர் பெருமை உலகிற்கு தெரிய வந்தது. அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது மட்டுமல்ல, மிக பிரம்மாண்டமாக வரவேண்டிய கண்டுபிடிப்பு தொகையும் அவருக்குக் கிடைக்கவில்லை.

    லமார் பற்றிய படங்களும், புத்தகங்களும்: லமார் பற்றி ஏராளமான கட்டுரைகளும், புத்தகங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அவரைப் பற்றிய டாகுமெண்டரி படங்களும், கூட வெளி வந்து விட்டன. அவரது சுயசரிதை பற்றி அவர் கூறுகையில், "இது சரியான சுயசரிதை இல்லை. இதை என் சார்பாக எழுதியவர் தனக்குத் தோன்றியதை எழுதி விட்டார். உண்மை சரிதத்தை நானே எழுதுகிறேன்" என்றார். ஆனால் அதை எழுதுவதற்குள் அவரது இறுதி நெருங்கி விட்டது.

    மறைவு: லமார் தனது இறுதி ஆண்டுகளில் யாருடனும் நேரில் பேசவில்லை. யாரானாலும் போனில் மட்டுமே பேசி வந்தார்.

    2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி தனது 85-ம் வயதில் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் காஸல்பெர்ரி என்னுமிடத்தில் அவர் இதயநோய் காரணமாக இறந்தார். அவரது மகன் அவரது அஸ்தியின் ஒரு பகுதியை அவரது விருப்பப்படி ஆஸ்திரியா கொண்டு சென்று வியன்னா காடுகளில் தூவினார்.

    2014-ல் அவரது நினவுச் சின்னம் வியன்னா சென்ட்ரல் கல்லறையில் நிறுவப்பட்டது. மீதமுள்ள அஸ்தியும் அங்கு புதைக்கப்பட்டது.

    அனுபவ மொழிகள் :

    தனது வாழ்க்கையின் அனுபவ மொழிகளாக அவர் பல பொன்மொழிகளைக் கூறியுள்ளார். அவற்றில் சில:

    எந்தப் பெண்ணுமே கவர்ச்சியானவள் தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முட்டாள் போல நின்று கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான்!

    தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கற்கள்.

    உண்மையான நல்ல கண்டுபிடிப்பு சமுதாயத்தின் மீது நலன் தரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே உரித்தானவை. ஆனால் தொழில்நுட்பமோ என்றுமே உள்ளது. சிரஞ்சீவியானது.

    எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் எதையும் அறியும் ஆர்வமுமே உத்தரவாதங்களை விட மேலானவை. நம்மால் உணரமுடியாதவையே என்ன ஈர்த்தன. ஈர்க்கின்றன.

    அடுத்த முறை செல்போனை எடுத்து ஹலோ என்று சொல்லும் போது அதற்கு வழிகோலிய லமாரை மனதாரப் பாராட்டலாம், இல்லையா!

    • ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம்.
    • நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன், தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளாள்.

    ஆடி மாதம் முழுவதும் அம்மனை விதம், விதமாக அலங்கரித்து வழிபடுவார்கள். குறிப்பாக ஆடிப்பூரம் தினத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. ஏனெனில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்மன் தோன்றினாள். இதனால் தமிழ்நாடு முழுவதும் வளையல் வழிபாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர வழிபாடுகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    திருமணத் தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு அம்பாளின் அருள் பெறுவதற்காகப் பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு பலன் பெறுவார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா 'முளைக்கொட்டு விழா' என்ற பெயரில் மிகச் சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிரகாரத்திற்கு 'ஆடி வீதி' என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வளை காப்பு விழா பதினாறு கால் மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் அன்று தீமிதி வைபவமும் நடைபெறும். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஆலயத்தில் அம்பிகைக்கு 'பூரம் கழித்தல்' எனப்படும் ருது நீராடல் வைபவமும், வளைகாப்பும் சிறப்பாக நடைபெறும்.

    இதே போல் திருக்கருகாவூர் அம்மனுக்கும் ருது சாந்தி விழா வைபவம் நடைபெறும். அப்போது பக்தர்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்து பெற்றுக் கொள்வார்கள்.

    நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன், தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ளாள். இங்கு ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்குப் பூரம் கழித்தல் எனப்படும் ருது நீராடல் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். அப்போது ஒன்பது கன்னிப்பெண்களை வரிசையாக உட்கார வைத்து நலங்கு வைத்து வெற்றிலைப்பாக்கு, பழம், பூ, சீப்பு, குங்குமச்சிமிழ் மற்றும் ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்குவார்கள்.

    திருச்சி உறையூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அன்னை குங்குமவல்லி அம்மனுக்குத் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று வளையல் சாற்று வைபவம் நடத்தப்படும். என்றாலும் ஆடிப்பூரத்தன்று சுமங்கலிகளும், கன்னிப்பெண்களும், குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளும், சுகப்பிரசவம் வேண்டும் கர்ப்பிணிப்பெண்களும் அம்மனுக்கு வளையல்களை அர்ச்சனையின் போது பூஜைத்தட்டில் சமர்ப்பித்து, அர்ச்சித்து, அதனைப்பிரசாதமாகப் பெற்று தங்கள் கைகளில் அணிந்து கொள்வார்கள்.


    சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி திருவனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோவில் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிப் பூரம் பெருவிழாவாக நாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது. ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம்.

    அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது. பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம்.

    ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார்.

    இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அன்றிரவு, அந்த வளையல் வியாபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார்.


    என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்." என்றாள் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்.

    இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம். இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம். அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைகூடும்.

    திருமண வரம் அருளும் ஆடிப்பூர நாயகி

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். உடனே அந்த அழுகுரல் எங்கிருந்து வருகிறது என்று வேகமாக தேடினார்.

    அங்கிருந்த துளசி மாடத்தை அவர் நெருங்கிய போது அழகான பெண் குழந்தை ஒன்று அங்கே அழுதுக்கொண்டிருந்தது. ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கிய அவர், தெய்வீக முகங்களை கொண்ட அந்த குழந்தையை தன் நெஞ்சோடு அனைத்து கொஞ்சினார். குழந்தை அழுகையை நிறுத்தியது. இறைவனே தனக்கு அந்த குழந்தையை அளித்ததாக கருதிய பெரியாழ்வார், அந்த குழந்தைக்கு கோதை நாச்சியார் என்று பெயரிட்டார். பிறகு அந்த குழந்தையை தன் குழந்தை போலவே பாசத்தை கொட்டி வளர்த்தார். அந்த குழந்தை வேறு யாருமல்ல. சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் தான். ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம்.


    கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லாமே நலமாகும் என்பர். அதன்படி இவளிடம் வேண்டிக் கொள்பவை அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள். தொடர்ந்து, கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள்.

    இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக் கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

    ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்தவர்கள் ஆடிப்பூர நாளில் அம்பிகையை வழிபட்டால் சுக்கர தோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத் தன்று ஆண்டாளை நந்த வனத்துக்கு எழுந் தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்துர் செல்ல முடியாத இளம் கன்னிப்பெண்கள் வீட்டில் ஆண்டாள் படம் வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடினால் திருமணத் தடை அகலும்.மனம் விரும்பிய மணாளனை அடையலாம்.

    அன்று அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    ×