என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • நட்சத்திரங்கள், திதிகளுக்கு சில தனிச்சிறப்பு உள்ளது.
    • குறிப்பிட்ட திதிகளுக்கு மனித வாழ்வை வளமாக்கும் அதீத சக்தி உள்ளது.

    உலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் கர்ம வினைகளை தீர்க்கவே ஜனனம் எடுக்கிறது . கர்ம வினையைக் குறைப்பதற்கு பல்வேறு விதமான வழிகளை நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் வருடத்தின் சில குறிப்பிட்ட மாதம் மற்றும் நாட்கள், நட்சத்திரங்கள், திதிகளுக்கு சில தனிச்சிறப்பு உள்ளது.

    குறிப்பாக சில குறிப்பிட்ட திதிகளுக்கு மனித வாழ்வை வளமாக்கும் அதீத சக்தி உள்ளது. பஞ்சாங்கத்தின் முதல் அங்கமான திதி சில குறிப்பிட்ட வழிபாட்டிற்கு மிக உகந்ததாகும்.

    பஞ்சபூதங்களில் நீர் தத்துவத்தை குறிப்பது திதி. திதி என்பது வானில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும். ஒருவரின் உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் உறவுமுறை பேணுவதில் அவருக்கு உண்டான தகுதியை சுட்டிக்காட்டும். திதி சந்திரனின் நாளாகும்.

    பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்த திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்த திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த திதிகளுக்கு ஏற்ற காரியங்களில் ஈடுபடுவது சிறப்பு.

    ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தது மட்டுமல்லாமல் இந்த மாதத்தின் திதிகள், நட்சத்திரங்கள், கிழமைகள் மனித குலத்திற்கு புண்ணிய பலன்களை வாரி வழங்கும் வல்லமை படைத்தவைகள். குறிப்பாக ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி செவ்வாய் கிழமை, வரலட்சுமி நோன்பு, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, போன்றவைகள் வழிபாட்டின் மூலம் பிறவிப் பிணியை தீர்க்க சிறந்த நாட்களாகும்.

    பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில பட்ச பஞ்சமி என்றும், பவுர்ணமிக்கு அடுத்து வரும் பஞ்சமி தினம் கிருஷ்ண பட்ச பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது.

    பஞ்சமி திதி என்பது ஒரு மகத்தான திதியாகும். நாம் இந்த கட்டுரையில் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி பற்றிய சில முக்கிய தகவல்களைப் பார்க்களாம்.

    நாக தோஷம்

    நவகிரகங்களின் இயக்கமே மனிதன் உள்பட அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் உருவம் உள்ள ஏழு கிரகங்களைக் காட்டிலும் உருவமற்ற இரண்டு நிழல் கிரகங்களாகிய ராகுவும், கேதுவுமே மனித வாழ்வை தீர்மானிக்கின்றன.

    ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும், அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு. ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலை பிரம்மாண்டப்படுத்தும். கேது சுருக்கும். ராகு,கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகம் அல்லது அவயோகத்தை சந்திக்கின்றார்கள்.

    ஜாதகத்தில் ராகு-கேது செயல்படும் விதம்

    மனிதர்களுடைய வாழ்வில் மாற்றங்களை வழி நடத்தக் கூடிய கர்ம வினை அதிகாரிகளாக ராகு,கேதுக்களை கூறலாம்.

    ஏற்கனவே கடந்து வந்த ஜென்மத்தில் நடந்த நல்ல /கெட்ட சம்பவங்களையும் தற்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிற ஜென்மத்தில் நடக்கும் அனைத்து நல்ல/கெட்ட செயல்களுடன் இணைத்து புதிய பதிவுகளை பதிவு செய்யும் வினைப் பதிவாளராகவும், அதற்கேற்றபடி வினைகளைத் தூண்டும் வினை ஊக்கியாகவும் செயல்படுகின்றனர்.

    மனிதர்களின் மரபியல் தன்மையான பாவ புண்ணியங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இவர்கள் ஒவ்வொரு பிறப்பிலும் வேறு வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு அதன் அலைவரிசைக் கேற்ப வினைகளின் நன்மை தீமைகளை அனுப்பி அவ்வுடலை அனுபவிக்க செய்பவர்கள்.

    பூமிக்கு வரும் மற்ற கிரகங்களின் கதிர் வீச்சுகளையும் தடுக்கும் ஆற்றலை பெற்ற இவர்கள் ஒரு ஜாதகரின் மரபு வழி செய்திகளை செல்களின் மூலம் கொண்டு வருவதும் செயலாக்கம் செய்யும் வலிமை படைத்தவர்கள்.

    அதனால் தான் ஜோதிடத்தில் தந்தை வழி பாட்டன் பாட்டிக்கு ராகுவையும் தாய்வழிப் பாட்டன் பாட்டி கேதுவையும் காரகமாக கூறப்படுகிறது.

    ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.

    அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாதிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம். அதனால் தான் மீள முடியாத வினைப்பதிவில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டையும், கருட வழிபாட்டை ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்தி வந்தனர்.

    சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை கருட பகவானுக்கு மட்டுமே உண்டு. ஆடி மாத புகழ்பெற்ற விசேஷங்களில் கருட பஞ்சமியும், நாகபஞ்சமியும் ஒன்றாகும்.

    ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், வளர்பிறை பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது. பல ஜென்மங்களாக தொடரும். கடுமையான தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் கருடபஞ்சமி பூஜையாகும்.

    நாக தோஷம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களின் பார்வையில் அடிக்கடி நாகம் தென்படும். அதீத திருமணத்தடை, கணவன். மனைவி பிரிவினை, புத்திர பாக்கியமின்மை, பிள்ளைகளால் மன உளைச்சல், தீராத நோய், பரம்பரை வியாதி, குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது போன்ற பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவார்கள்.

    நாகசதுர்த்தி கருடபஞ்சமி வழிபாடு கணவன், மனைவி ஒற்றுமை, குடும்ப முன்னேற்றம், குழந்தைகள் நலனுக்காகவும் பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

    நாக சதுர்த்தி 8.8.2024- வியாழக்கிழமை (ஆடி.23)

    அமாவாசைக்கு 4-ம் நாளான சதுர்த்தியன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாக தேவதைகளை வழிபட வேண்டும்.

    இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி நாகங்கள் தெய்வங்களாக வழிபடக் கூடியவையாகும். நாகங்களை துன்புறுத்துவதும், கொல்வதும் மிகப் பெரிய பாவமாகும்.

    ஆனால் நாமோ, நம்முடைய முன்னோர்களால் தெரியாமல் யாருக்காவது துன்பம் ஏற்படுத்தி இருந்தால் அது ஜாதகத்தில் நாக தோஷம், சாபமாக ஏற்பட்டிருக்கும். கடுமையான நாக தோஷம் உள்ளவர்கள் அரசமரமும் வேப்பமரமும் உள்ள இடத்தில் நாகங்களை சிலையாகச் செதுக்கி பிரதிஷ்டை அபிஷேகம் செய்து பூஜிக்கவேண்டும். மற்றவர்கள் அரசமரத்தடியில் உள்ள சர்ப்ப சிலைக்கு நாக சிலைகளுக்கு பால், தண்ணீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    பால் ஊற்றி விட்டு தண்ணீர் ஊற்றி சிலையை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு நாகர் சிலை மஞ்சளை தலை முதல் வால்முடிய தடவி, சந்தனம், குங்குமத்தினால் அலங்கரித்து, பூமாலைகளை அணிவித்து பஞ்சினால் செய்த கோடிதந்தியம், வஸ்திரம் அணிவித்து, மஞ்சள், சந்தனம், குங்குமம் புஷ்பங்களினால் அலங்கரித்து, பூ அட்ஷதையுடன் சர்க்கரை பொங்கல், துள்ளு மாவு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, படைக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தால் அனைத்து விதமான தடைகளும் விலகும்.

    இந்த நாளில் பாம்பு இனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நிலத்தை தோண்டுவது, கூர்மையான பொருட்களை பயன்படுத்துவது ஆகியவற்றை செய்யக் கூடாது. இந்த நாளில் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபிப்பதால் சர்ப்ப தோஷம் விலகும், ருத்ராபிஷேகம் செய்வதால் சிவனின் அருள் கிடைக்கும்.

    நாகராஜ துதியை நாக பஞ்சமி மட்டுமின்றி அனைத்து நாட்களும் காலை, மாலை இருவேளையும் மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகும்.

    குடும்பத்தில் நிம்மதி பெருகும். அத்துடன் கணவன்-மனைவி ஒற்றுமை மற்றும் குழந்தைகளின் நலன் மேம்படும். தொழில் வளர்ச்சி, நல்ல வேலை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். கடன் தொல்லை குறையும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். விபத்து கண்டம் நீங்கும். நாக தோஷத்தால் தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும்.

    9.8.2024-ஆடி 24-வெள்ளிக்கிழமை கருடபஞ்சமி

    அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது.

    மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை தாங்கள் இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்த தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.

    கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட சிறந்த நாள் நாக, கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்வது இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர். பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

    அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும்.

    கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய தீர்க்க முடியாத கோர்ட்டு , கேஸ் பிரச்சனை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்கொல்லி நோயான கேன்சரால், பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்காணும் சுலோகத்தை 108 முறை சொல்லி கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

    சுபபலன் இரட்டிப்பாகும். விபத்து, நோய் நீக்கும், மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாகவும் திகழும் கருட பகவானுக்கு கருட ஜெயந்தி, கருட பஞ்சமி அன்று கருட ஹோமம் சொல்வது நலம்.

    ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

    ஓம் சகஸ்ர ஷீர்ஷாய வித்மகே

    விஷ்ணு தல்பாய தீமகி

    தந்நோ ஆதிசேஷ பிரசோதயாத்.

    கருட காயத்ரி

    தத்புருஷாய வித்மகே

    சுவர்ண பட்சாய தீமஹி

    தந்நோ கருட பிரசோதயாத்.

    கருட தண்டகம்:

    எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய கருடனைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம்.

    இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால், ஒலிக்க செய்து கேட்டால் எதிரிகள் தொல்லை விலகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஜந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.

    எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரை வேண்ட சகல சவுபாக்கியம் கிடைக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

    இந்த நாளில் குரு ஹோரையில் வானத்தை பார்த்து, கருடனை நினைத்து வழிபட வேண்டும். வீட்டில் உள்ள குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத் திற்கு இளநீர் வெட்டி வைத்து, அதோடு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கு அதை பிரசாதமாக வழங்கலாம். இது நாகதேவரின் நாளாகும்.

    இந்த நாளில் வாகனம் வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், விஷத்தை முரித்தல், மருத்துவம் செய்தல், அறுவை சிகிச்சை செய்தல், மற்றும் எல்லாவித சுபகாரியங்களையும் செய்யலாம். சீமந்தம் செய்வதற்கு சிறந்த திதி பஞ்சமி திதியாகும்.

    இந்த நாளில் மருந்துகள் சாப்பிட நோய்கள் விரைவில் மறையும். பல தலைமுறை சாபத்தால் அவதிப்படுபவர்கள் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி வழிபாட்டை கடைபிடித்து பயன் பெற நல்வாழ்த்துகள்.

    • முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது ஏமாற்றம் என்ற வலி இருக்காது.
    • மற்றவரை நடத்தும் விதத்தில் இருந்தே ஒருவரை நாம் கணித்து விட முடியும்.

    இதை எல்லாம் செய்கிறீர்களா?

    * நீங்கள் ஒருவரிடம் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறீர்கள். அவர் பாதி பதில் கூறி மீதியினை கூற முற்படும் போது அவசரப்படாதீர்கள். வேகமாய் குறுக்கிடாதீர்கள். அவர் முழுமையாய் சொல்லட்டும் அல்லது முயற்சியாவது செய்யட்டும். அதற்குள் படபடவென பேசி அவரது தன்னம்பிக்கையினை குலைத்து விடாதீர்கள். அப்படி செய்தால் அது அவரது வாழ்வினை கொலை செய்வதற்குச் சமமாகும்.

    * ஒருவருக்கு அவரது பெயர் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஆகவே பெயர் சொல்லி கூப்பிடக் கூடிய உறவுகளை, நட்புகளை அவர்களது பெயரை சொல்லி கூப்பிடுங்களேன்.

    * எதிர்பார்ப்பு இல்லாமல் படிப்போ, வேலையோ, உதவியோ எதுவாயினும் முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது ஏமாற்றம் என்ற வலி இருக்காது.

    * ஒருவர் மற்றவரை நடத்தும் விதத்தில் இருந்தே அவரை நாம் கணித்து விட முடியும்.

    * பலருக்கு பிடித்த ஒரே பேச்சு அவர்களைப் பற்றி அவர்களே சுய தம்பட்டம் அடித்து கொடியேற்றி பறக்க விடுவதுதான். அனைவரும் இந்த பழக்கத்தினை விட்டு விடுவோமாக.

    * முடிந்தவரை பிறரை எந்த உதவியும் கேட்காது இருப்பது நமக்கு கடவுள் கொடுத்த அதிர்ஷ் டம் தான். ஆனால் அதனையும் மீறி ஒருவரிடம் ஒரு உதவி கேட்க நேரிடும் போது எனக்கு பண உதவி தேவை என்று சொல்வ தினை விட 'வணக்கம்' என கை கூப்பி கூறுவதே சிறந்தது. என்றாலும் எனக்கு இந்த உதவி தேவை. ஏனென்றால்....

    * என் பிள்ளைக்கு பணம் கட்ட வேண்டும்

    * என் தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்று சுருக்கமான முறையில் காரணத்தினையும் கூறுங்கள்.

    * சத்தமாக, வேகமாக, படபடவென்று பேசுவது எதற்காகவோ நீங்கள் அச்சப்படுவது போல் இருக்கும்.

    * நிதானமாய், அமைதியாய் பேசுவது உங்கள் தன்னம்பிக்கையினை காட்டும்.

    * கேள்வியை முடிப்பதற்குள் அடித்து, பிடித்து, குறுக்கிட்டு பதில் சொல்வது அநாகரீகம் மட்டுமல்ல. உங்கள் மனமும், சொல்லும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதனைக் காட்டும்.

    * வாயைத் திறந்து, தட்டி, உருண்டு சிரிப்பது என அடிக்கடி அல்லது எப்போதும் இப்படி செய்தால் கொஞ்சம் கூட மனக் கட்டுப்பாடு இல்லை என்பதனை வெளிப்படுத்தும். உங்கள் கண்கள் சிரித்தாலே போதும். அழகாய், மென்மையாய் காட்டும்.

    * அதற்காக பிரச்சினைகள் வரும்போது அமைதியாய், மென்மையாய் இருக்க முடியாது. உண்மையான உங்கள் பேச்சினை சொல்லத்தான் வேண்டும். அதற்காக கத்த, கூச்சலிட வேண்டாம். நீங்கள் கண்ணாடி அல்ல நொறுங்குவதற்கு. இரும்பு, வளைக்க முடியாத இரும்பு. இந்த மனநிலை அன்றாடம் தியானம் செய்பவருக்கும், உடற்பயிற்சி செய்பவருக்கும் இருக்கும்.

    இவை அனைத்தும் ஒருவரைப் பற்றி முழுமையாய் நீங்கள் அறிந்து கொள்வதற்கும், நீங்கள் வாய் திறந்து பேசாமலே உங்கள் கருத்தினை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கும் உதவும்.

    பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது

    பல இளம் வயதினர் தங்கள் இளம் வயதினில் ஏற்பட்ட பாதிப்புகளால் பலவாறு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பயம், முரட்டுத்தனமான நடவடிக்கை என பல விதங்களில் பாதிக்கப்படுகின்றனர்.

    * சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் பீதி அடைகின்றனர். எப்போதும் பட படப்புடன் இருக்கின்றனர். இவர்களால் சரியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை.

    * துணிவு இருக்காது. எதற்கும் பயந்து உள்வாங்கி விடுவார்கள்.

    * பொது நிகழ்வுகளில் பங்கேற்க கூட மாட் டார்கள்.

    * தூங்கி எழுந்தது முதல் தூங்கப் போகும் வரை டென்ஷனாக மட்டுமே இருப்பார்கள்.

    * தனக்குத் தானே பாதிப்புகளை ஏற்ப டுத்திக் கொள்வார்கள். ஆக பெற்றோர்களே, பிள்ளைக்கு சொத்து கொடுப்பது பெரிய முக்கியம் அல்ல. அவர்கள் மீது உரிய கவனத்தினை கொடுத்து மன நலத்தோடு வளர்ப்பதே சிறந்த செயல்.

    நம்மை பாதிக்கும் சில நபர்கள்

    * சில பேரை கவனித்து இருக்கின்றீர்களா? சாதாரண விஷயங்களுக்கு கூட ரொம்ப கஷ்டம் போல் டிராமா போடுவார்கள். அவர்கள் வந்தாலே அவர்களது புலம்பல் நம்மை சக்தியற்று ஆக்கிவிடும். கண்டிப்பாக இத்தகு மனிதர்களை தவிர்த்துவிட வேண்டும்.

    * சில நபர்கள் எந்த இடத்திற்கு வந்தா லும் சரி அந்த இடத்தில் ஆக்கப்பூர்வமாக நடக்கும் வேலைகளில் ஏதோ குற்றம், குறை கூறி அந்த வேலையினை செய்பவர்களை குலை நடுங்க செய்து விடுவார்கள். மூளை, சிந்தனை, செயல் என அனைத் திலும் நெகடிவ் மட்டுமே இருக்கும். நன்றாக இருக்கும் ஒருவர் வாழ்வினை சீரழிக்க இவர்கள் மட்டுமே போதும். இவர்களை கண்டால் ஓடி விடுங்கள்.

    * சில நொடி கூட வாய் மூடாது பேசியே அடுத்தவரின் மண்டையினை குடைந்து விடுவார்கள். இவர்கள் போன பிறகு அடுத்தவர் சக்தி இன்றி சுருண்டு விடுவார். இது நமக்குத் தேவையா?

    * சிலர் ஊர் வம்பின் மொத்த உருவமாய் இருப்பார்கள். அவர்களை பார்த்தால் காதில் பஞ்சினை வைத்து அடைத்து ஒரு ஓட்டம் பிடியுங்கள்.

    * நச்சுத்தன்மை மனதில் கொண்டவர்கள் நண்பர்களாக இருந்தாலும் வேண்டாம்.

    ஆக இதில் இரண்டு விஷயங்களை நாம் கற்றுக் கொள்கிறோம். ஒன்று இத்தகையோரை நாம் தவிர்க்க வேண்டும். மற்றொன்று இப்படியெல்லாம் நாமும் இருக்கக் கூடாது என்பதுதான்.


    படித்தேன்-பகிர்ந்து கொள்கிறேன்

    நம் வாழ்க்கையில் இவர்களையெல்லாம் தவிர்த்து விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது வேறு கண்ணோட்டத்தின் வெளிப்பாடு.

    உப்பு மூட்டை மனிதர்கள்

    இந்த நபர்கள் தான் பழகும் மனிதர்களின் ஆற்றலை குறைத்து விடுவார்கள். நம் நேரத்தினை வீணடிப்பவர்கள். தனக்கு மட்டுமே பிறர் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். மற்றவர் வளங்களை சுரண்டுபவர்கள்.

    ஆதிக்க மனிதர்கள்

    இவர்களுக்கு அதிக பெருமை வேண்டும். பிறரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவார்கள். அப்படியே செய்பவர்களும் கூட.

    * கொசு மனிதர்கள்: இவர்கள் எதிர்மறை எண்ணங்கள், செ யல்கள் கொண்டவர்கள். ஆனால் பிறரிடமிருந்து நன்மைகளை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு எதிர்மறையினையே செய்வார்கள். இவர்களி டம் எந்த நல்ல விஷயங்க ளும் கிடையாது. ஆனால் பிறரிடம் உள்ள நன்மைகளை எடுத்துக் கொள்வார்கள்.

    முதலை மனிதர்கள்

    இவர்கள் பாசாங்குக்காரர்கள். அடுத்த வரது ரகசியங்களை அறிந்துகொள்ள அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஒருவருக்கு பிரச்சினை நேரும் பொழுது அவர்கள் ரகசியங்களை அவர்களுக்கு எதிராக பயன் படுத்துவார்கள். கொடியவர்கள், பொய்யர்கள், முதுகில் குத்துபவர்கள்.

    பச்சோந்தி மனிதர்கள்

    இந்த மனிதர்கள் பொறாமை கொண்டவர்கள். உங்களை கண்காணித்து உங்கள் வெற்றிகளை பாராட்டாமல், ஆதரிக்காமல் இருப்பார்கள். தோல்விகளை பெரிதுப்படுத்துவார்கள். உங்களை குற்ற உணர்வில் கூட தள்ளி விடுவார்கள்.

    கனவுக் கொலையாளிகள்

    இத்தகு மனிதர்கள் பிறரின் தோல்விகளை விரும்பும். ரசிக்கும் விகார மனம் கொண்டவர்கள். பிறருக்கு எதிலும் தீர்வுகளை பிறருக்கு விரும்பாதவர்கள். சிக்கலை உண்டாக்குபவர்கள்.

    குப்பை மனிதர்கள்

    கெட்ட செய்திகளை மட்டுமே பிறருக்குத் தர விரும்புபவர்கள். அடுத்தவர் ஊக்கத்தினை கெடுப்பவர்கள். பிறரின் இதயத்தினை நொறுக்கி சந் தோஷப்படுபவர்கள்.

    எனவே இத்தகையோரை ஒதுக்கி நேர்மறை சிந்தனை உள்ளவர்களோடு பழகுவதே நம் ஒளி சக்தியினை கூட்டும்.

    • நரம்புகளை உறுதிப்படுத்தினால் அது தளர்ச்சி அடையாது.
    • ஆரோக்கியமாக முதுமை தவிர்த்து மரணத்தை தள்ளிப்போட்டு வாழ்வோம்.

    வாழ்க்கையில் வயது ஏற ஏற முதுமையை நோக்கி நாம் செல்கிறோம் என்று பொருள். முதுமை வருவதற்கான அறிகுறிகள் என்பது நரம்புகள் தளர்ச்சி அடைவது, மேல்புற தோலில் சுருக்கம் விழுவது, கண் பார்வை குறைதல், உடல் சோர்வு, மூட்டுக்களில் வலி போன்றவைகள்தான்.

    இப்படி உடல் சார்ந்த பிரச்சனைகள் நமக்கு வந்தவுடன், இந்த மனமானது நமக்கு முதுமை என்பது வந்து விட்டது என்று சொல்லும். ஆனால் நாம் அதை ஏற்க மறுக்கிறோம். நாம் முதுமையை மறைத்தல் என்று நமது தலைமுடிக்கு நிறத்தை மாற்ற அல்லது மறைக்க டை அடிப்பது மட்டும் போதும் என்று அக உடலை மறந்து விடுகிறோம்.

    பொதுவாக உள் உறுப்புகளில் நோய் வருவதற்கான அறிகுறிகளை நமக்கு உணர்வு மூலமாக கொடுக்கும். நாம் அதை உதாசீனம் படுத்தி விட்டால் அதுவே முதலில் வலியாக ஆரம்பம் ஆகி நோயில் சென்று மரணத்தில் முடியும்.

    எனவே நோயின்றி வாழ்ந்து முதுமையை தவிர்க்க வேண்டும் என்றால், நமது நரம்புகளுக்கு உறுதி தன்மையை கொடுக்க வேண்டும். நரம்புகளை உறுதிப்படுத்தினால் அது தளர்ச்சி அடையாது. அப்படி தளர்ச்சி அடையாமல் இருந்தால் தோளில் சுருக்கம் விழாது. என்றும் நாம் இளமையாக இருப்போம். இதனால் முதுமை தவிர்க்கப்படுகிறது அல்லது தள்ளிப் போடப்படுகிறது.

    இதற்குத்தான் காயகல்பம் என்கிற பயிற்சியானது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கலையானது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஆயக்கலைகள் 66 உள்ளது என்பது நமக்குத் தெரியும். அந்த 66 கலைகளிலே நரம்புகளை உறுதிப்படுத்தும் கலை ஒன்றும் உண்டு. இதுவே காயகல்பம். இந்த கலையை கற்று தினமும் செய்பவர்கள் வாழும் காலத்தில் இந்த ஜீவனுக்கு முக்தி நிலையை கொடுக்கலாம்.

    இப்படி சித்தர்களால் ரகசியமாக வைக்கப்பட்டும் பரிபாசைகளால் சொல்லப்பட்ட இந்த அற்புதப் பயிற்சியைதான் வேதாத்திரி மகரிஷி நமக்கு எளிமையாக கொடுத்துள்ளார். குறிப்பாக குழந்தை பிறப்பு காரணமாக பிரச்சனை உள்ள இளம் தம்பதியினருக்கும், பெண்கள் சம்பந்தப்பட்ட மாதவிடாய், கர்ப்பப்பை, பிரச்சனைகள், குறிப்பாக சிறுநீர் கற்கள் மற்றும் நீர் கட்டிகள் போன்ற பிரச்சனைகள், மலட்டுத்தன்மை பிரச்சனை, ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைந்து இருத்தல் போன்ற பிரச்சனைக்கு நல்ல பலனை கொடுக்கும் அற்புதமான பயிற்சிதான் காயகல்பம் ஆகும். மேலும் இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்படும் மற்றும் நாம் சிக்கி இருக்கும் பிரச்சனையான சர்க்கரை நோயில் இருந்து விடுபடவும் இந்த பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

    காயகல்பம் பயிற்சியை பற்றி துவாபரயுகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒரு மனிதருக்கு எது உள்ளதோ, இல்லையோ அடிப்படையாக நமக்கு வேண்டியது ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கம் என்பது, நாம் நம்முடைய வாழ்நாளில் யாருக்கும் உடல், மனம், உயிர் அளவில் நம்முடைய செயல்கள் மூலமாக துன்பம் கொடுக்காமல் வாழ்வதாகும். மேலும் நமக்கும் துன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் வாழும் வாழ்க்கைதான் ஒழுக்கமான வாழ்க்கையாகும்.

    இந்த அடிப்படை ஒழுக்கத்தை நாம் மாணவப் பருவத்தில் இருந்து கொடுத்து விட்டால் அவர்கள் வாழ்க்கை அற்புதமான வாழ்க்கையாக மாறும். இதுவே நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கு நாம் கொடுக்கும் சீதனம்.

    பஞ்சபூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று சொல்லுவோம். இந்த பஞ்ச பூதங்களின் கூட்டுக் கலவைதான் உலகில் உள்ள எல்லா தோற்ற பொருள்களும் ஆகும். இதில் மனிதரும் விதிவிலக்கல்ல.

    பஞ்சபூதங்களில் நிலம் என்பது நமது பருஉடல், நீர் என்பது ரத்த ஓட்டம், நெருப்பு என்பது உடலில் உள்ள வெப்பம், காற்று என்பது உடலில் உள்ள மூச்சு, ஆகாயம் என்பது உயிர் ஆகும்.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    அதாவது ஆகாயத்தில் இருந்து தோன்றி பூமிக்கு வந்து வாழ்ந்து விட்டு மீண்டும் ஆகாயத்திலேயே நாம் சேர்ந்து விடுவோம். இதைத்தான் பிறப்பு மற்றும் இறப்பு என்றும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்தான் (120 ஆண்டு காலம்) வாழ்க்கை என்றும் சொல்கிறோம்.

    இந்த 120 ஆண்டுகள் ஆயுள் காலம் என்பது, அவரவர்கள் கர்ம வினை பதிவுகளுக்கு ஏற்றபடி பிறக்கும்போது அது நிர்ணயிக்கப்படும். இதை கண்டு அறியும் விஞ்ஞானம் தான் ஜோதிட கலையாகும். இந்த கர்ம வினை பதிவுகள் தாயின் வயிற்றில் கருவாக உருவாகும்போது நம்முடைய கரு மையத்திலேயே உருவாகிறது. இதைத்தான் மகான்கள் இறைவன் நம்மை படைக்கும்போது, நம் கர்மாவை படைத்துவிட்ட பிறகுதான் நம்மை படைப்பார் என்கின்றனர்.

    இந்தக் கர்ம வினை பதிவுகள்தான் உடலில் நோயாகவும், மனதில் சஞ்சலமாகவும் வந்து அதை நம் வாழ்நாளில் சந்தித்தும் அனுபவித்தும் வருகிறோம்.

    இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், மூன்று விஷயங்களில் நாம் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவைகள் என்னவென்றால், ஒன்று நோயின்றி வாழ வேண்டும். இரண்டு முதுமையை தவிர்க்க வேண்டும். மூன்று மரணத்தை தள்ளி போட வேண்டும். இதற்குத்தான் காயகல்பம் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

    அதாவது இந்த உடல் பூமி என்றால் ஆகாயம் என்பது நமது தலை உச்சியாகும். காயகல்பம் பயிற்சி என்பது பருஉடலில் உள்ள சத்தை ஆகாயத்தில் ஏற்றி மறுசுழற்சி மூலமாக மீண்டும் பரு உடலில் தங்க வைத்து நரம்புகளுக்கு ஊக்கத்தை கொடுத்து உயிரை இந்த உடலிலேயே தங்க வைப்பதாகும். இதனால் நாம் நீண்ட காலம் வாழலாம். இப்படி நீண்ட காலம் வாழும்போது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி இளமையை காத்து மரணத்தை தள்ளி போடலாம்.

    இப்படி நாம் நீண்ட காலம் வாழ்ந்தால் நம்முடைய பதிவுகளை நாமே அனுபவித்து நம் அடுத்த சந்ததிகளுக்கு பதிவுகள் இல்லாத நல்ல வாழ்வை நம்மால் அளிக்க முடியும்.

    சித்தர்கள் இந்தப் பயிற்சியினால் நமது உடலில் அமுத ரசம் உருவாகும் என்கின்றனர். இதை வேதாத்திரி மகரிஷி தனது கவியிலே வித்து, காயகல்பம் பயிற்சியினால் அமுத ரசமாக மாறும் என்கிறார். அமுத ரசம் என்றால் உயிர் சத்துக்கள் அடங்கிய ஒரு தெய்வீக திரவம் என்று திருமூலர் கூறுகிறார்.

    எனவே சித்தர்களின் இந்த ரகசியமான ஒரு கலையை வேதாத்திரி மகரிஷி உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்கின்ற பரந்த மனநிலையில் இந்தப் பயிற்சியை நமக்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் உடல் மனம், உயிர், ஆத்மா, தூய்மை அடையும் என்கிறார்.

    இன்றைய விஞ்ஞானம் இது போன்ற பயிற்சிகள் செய்வதால் நமது மரபணுவிலே மாற்றம் ஏற்படுகிறது என்று சொல்கிறது. மரபணுவில் மாற்றம் ஏற்படும்போது விதி என்கிற கர்ம வினை பதிவுகள் மாற்றம் பெறும் அல்லது தாக்குதலை குறைத்து விடும். மேலும் உடலை வளர்ப்பது உணவுதான் என்பது நமக்குத் தெரியும். அந்த உடல் சரியான முறையில் வளர வேண்டும் என்றால் உணவு ஏழு தாதுக்களாக சரியாகப் பிரிந்தால்தான் உடல் சரியாக வளரும். அந்த உடல்தான் ஆரோக்கியமான உடலாக இருக்கும்.

    இந்த ஏழு தாதுக்கள் என்பது நாம் உண்ணும் உணவே ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஞ்சை மற்றும் விந்து நாதமாக மாற்றம் பெறுகிறது. இந்த ஏழு தாதுக்களை சரியான முறையில் பிரித்துக் கொடுக்க காயகல்பம் பயிற்சி பெரிதும் உதவி செய்கிறது. எனவே இந்த அற்புதப் பயிற்சியை நாம் செய்வோம். ஆரோக்கியமாக முதுமை தவிர்த்து மரணத்தை தள்ளிப்போட்டு வாழ்வோம்.

    இந்த பயிற்சி வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தின்கீழ் இயங்குகின்ற அறிவு திருக்கோவில்கள், அறக்கட்டளைகள், தவ மையங்கள் மற்றும் ஆன்மீக கல்வி நிலையங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. நமது அடுத்த ஆராய்ச்சி மனதை வளமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

    போன்: 9444234348

    • வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை இருக்கிறது.
    • ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலைமதிப்பு இருக்கிறது.

    வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் நிம்மதியை நாடிநிற்கும் வாசக அன்பர்களே! வணக்கம்!.

    "வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை இருக்கிறது! ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலைமதிப்பு இருக்கிறது!

    இவற்றைச் சரியாகக் கண்டறிந்து விலைபேசத் தெரிந்தவர்களே இன்றைய வாணிப உலகில் வெற்றிபெற்ற மனிதர்களாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள்!" என்று ஒரு நண்பர் கூறியதைக் கேட்டு அதிர்ந்துபோய் விட்டேன்.

    பணத்தை முதன்மையாகக் கருதத் தொடங்கிவிட்ட உலகில், எதைக்கொடுத்தும் எதையும் விலைபேசி வாங்கிவிடலாம் என்று கருதத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

    எந்த பொருளுக்கு என்ன விலை சொன்னாலும் வாங்கிவிடக்கூடிய அளவுக்கு வசதியும் வாய்ப்பும் நிறைந்த பெருமக்கள் உலகில் பெருகியே காணப்படுகின்றனர். ஆனால் நாம் எதிர்பார்க்கின்ற மனத்தின் நிறைவையும் பலனையும் அந்தப் பொருள் தந்துவிடுகிறதா? என்று பார்த்தால் பதில் 'இல்லவே இல்லை!' என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

    'டன்' கணக்கில் குளிரூட்டப்பட்ட நட்சத்திர அந்தஸ்துள்ள உணவுஅரங்கில், விதம் விதமான உணவு வகைகளை, உலகின் தலைசிறந்த சமையல் கலைஞர்களைக் கொண்டு சமைத்து அடுக்கி, லட்சக்கணக்கில் பணம் செலவழித்துக் குடும்பத்தினர் நண்பர்கள் சூழ விருந்து சாப்பிட்டு வெளியேறினாலும் சிலருக்கு நிம்மதி என்பது கிடைப்பதே இல்லை.

    அதே நேரத்தில், நேற்று வடித்து ஊற வைத்த பழைய சோற்றை, வெறும் உப்பு மட்டும் போட்டு, அரிந்து சாப்பிட்டுவிட்டு, எஞ்சியுள்ள நீராகாரக் கஞ்சியைக் குடிக்கும்போது ஏற்படும் நிம்மதிக்கும் திருப்திக்கும் அளவே இல்லை! என்றும்கூட ஆகிப் போகலாம்.

    நிம்மதி, திருப்தி, மகிழ்ச்சி, மன நிறைவு, முழுமை என்பவை எல்லாம் பணம் கொடுத்து வாங்கும் பொருள்களிலோ அல்லது செய்யும் செலவுகளிலோ அமைந்து விடுவதில்லை. மாறாக முற்றிலும் அவை மனம் சார்ந்து அமைந்து விடுபவை.

    மன நிறைவோடு நாம் ஒருவருக்கு ஒரு ரூபாய் வழங்கினாலும் அது ஒரு கோடிரூபாய்க்குச் சமமானதாகும். அதே வேளையில் வேண்டா வெறுப்பாக ஒருகோடிரூபாய் தந்தாலும் அது ஒருரூபாய்க்கு நிகரான தானதர்ம பலனைக்கூட வழங்காது.

    உறங்கப் போகிறோம்!; விலை உயர்ந்த கட்டில் மெத்தைகள் போட்டு, அடுக்கிவைத்துக் குளிரூட்டப்பட்ட மாடி அறைகளில் உறங்கப் போகிறோம். எத்தனை பேருக்கு நிம்மதியான உறக்கம் வந்து விடப்போகிறது?.

    கிராமத்து வீடுகளில் சாணம்கரைத்து மெழுகிய தரைகளில், அம்மாவின் பழைய சேலையொன்றை விரித்துத் தூங்கும்போது உண்டாகிற நிம்மதியான உறக்கத்தில், பத்தில் ஒருபங்கை யாவது நாம் அனுபவித்திருப்போமா?. இங்கே நிம்மதி என்பது ஆத்தாவின் பழைய சேலையில் வாசம் கொண்டிருக்கிறதா? இல்லை கட்டில் மெத்தை வாசனை திரவியங்களில் குடிகொண்டிருக்கிறதா?.

    மனிதன் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதற்கு உடம்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த உடம்பிற்குள் நிறுத்தப்பட்டிருக்கிற உயிர்தான் உண்மையில் அந்த மனிதன்; உடம்பை வளர்த்து உயிர் வளர்ப்பது! அல்லது உயிரை வளர்த்து உடம்பை வளர்ப்பது! என எது எப்படி ஆயினும் மனித வாழ்க்கைக்கு உடம்பு பிரதானமானது.

    அந்த மனிதன் அறிவின் துணைகொண்டு, வாழ்வியலை நெறிவழிநின்று வாழ்வதற்காகக், கண், காது, மூக்கு, வாய், உடம்பு ஆகிய ஐந்து புலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கண்களைக் கொண்டு இந்த உலக நடப்பியலைக் கண்டு தெளிவது; காட்சி இன்பங்களைக் கண்டு அனுபவிப்பது. செவியின் துணைகொண்டு ஓசைமயமாகத் திகழும் உலகியல் இசையில் திளைத்து மகிழ்வது; தேவையற்ற இரைச்சல்களை உருவாக்காமலும், அவற்றிலிருந்து விலகியும் வாழக்கற்றுக்கொள்வது.

    வாய் மற்றும் நாக்கின் துணைகொண்டு, நல்ல பயன்விளைவிக்கும் இனிமையான சொற்களை உருவாக்கிப் பேசுவது; தேவையற்ற சொற்களைச் சிந்திக்காமலும் பேசாமலும் காத்துக்கொள்வது; உடம்பு வளர்க்கும் உபாயமாகும்.

    மருந்தணைய உணவை மட்டுமே உண்பது; உபத்திரவம் தரும் தீய உணவுகளை உண்ணாமல் தவிர்த்து விடுவது; நாக்கின் சுவை நரம்புகளின் உதவியோடு சுவையான உணவுகளை அடையாளம் கண்டு உருவாக்கி உடல்நலத்திற்கு ஆதாரமாக்கி உதவுவது.

    மூக்கின் துணைகொண்டு தெய்வீக நறுமண வாசத்தில் திளைத்திருப்பது; மூச்சுச் சுவாசத்தை நேரிய முறையில் சுவாசித்து உள்ளிழுக்கவும், உள் நிறுத்தவும், வெளியேற்றவும் கற்றிருப்பது.

    உடலின் உற்றறியும் உணர்ச்சியினால், சிற்றின்ப மோக வலைக்கு உட்படாது, மாந்த இனம் வளர்ப்பது; பக்திப்பயிர் செழிக்கச் செய்வது; மாந்தநேயம் செழிக்கச் செய்வது.

    இவ்வாறாக மனித வாழ்வை நேர்நிறைப்படுத்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து புலன்கள் மதிப்புக்கூட்டப்பட்ட நிலையில் வழங்கப்பட்டுள்ளன; இவற்றுள் ஒருசிலருக்குப் புலன்களில் குறைபாடுகள் இருந்தாலும் மாற்றுத் திறன்கள்மூலம் அவர்கள் திறம்படச் செயல்பட முடியும்.

    மனிதருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஐந்து புலன்களும் வரங்களாகவே வழங்கப்பட்டுள்ளன என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் அவற்றைச் சாபங்களாகவே நிலைமாற்றித் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.

    கண்கள் பார்த்துப் பார்த்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன எதிலும் நிம்மதியும் திருப்தியும் அடையாமல்!. செவிகள் எவ்விசையிலும் லயிக்காமல், பேரிரைச்சல் பேருலகில் மனம் பேதலித்துப்போய்க் கிடக்கின்றன.

    வாயும் நாவும் பேசிச் சலித்த சொற்களோடும், உண்டு நிறைத்துப்போன குப்பைகளோடும் அல்லாடிக் கிடக்கின்றன. மூக்கிற்கு மூடி இல்லையென்றாலும், சதா சர்வகாலமும் எதையாவது கொண்டு அடைத்திருக்கிற மூக்காகவே திகழ்ந்து கொண்டிருக்கின்றன இந்த நாற்றமெடுத்த சூழல் உலகில்!. . உணர்வின் பிண்டமாகத் திகழும் உடம்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

    இந்நிலையில் நிம்மதியும் திருப்தியும் நிறைந்த மனத்தை உருவாக்குவது எப்போது? மனம் என்பது என்ன? இந்த ஐந்து பொறிபுலன்கள் வழி நடப்பது மனம் ஆகும். இவற்றைத் தலைமையேற்றுச் செலுத்த வேண்டிய கடமையும் மனத்திற்கு உண்டு. அதனால்தான் மனவொடுக்கம், மனக் கட்டுப்பாடு வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது?.

    ஐந்து பொறிபுலன்கள்வழி அலைக்கழிக்கப் படும் மனம் ஆசைவயப்படுகிறது. அதைச் செய்தால் என்ன? இதைச் செய்தால் என்ன? என்று அலைபாயத் தொடங்கினால் மனத்தில் நிம்மதியும் திருப்தியும் எவ்வாறு வந்து சேரும்?.

    எதையாவது விற்று எதையாவது வாங்குவோம்! என்பது போல என்ன விலைகொடுத்து, எந்த வழியில் முயன்று நாம் நிம்மதியை வாங்குவோம்? என்று இரவும் பகலும் நாள்தோறும் மனம் அல்லாடிக்கொண்டிருக்கிறது.

    ஓர் ஓய்வுபெற்ற மேலாண்மைத் துறைப் பேராசிரியர்; இந்தியாவின் புகழ்மிக்க மேலாண்மைத்துறைக் கல்வி நிறுவனத்தில் தன்னிடத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒருநாள் அவரது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.

    உலகின் புகழ்மிக்க பல நிறுவனங்களில் மேலாண்மைத் துறை மேலாளர்களாகப் பணிபுரியும் பலர் அந்தச் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்து தமது பேராசிரியர்க்குச் சிறப்புச் செய்தனர்.

    வந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் தங்களது வெற்றி வரலாற்றைக் கதைகளாகப் பெருமிதத்துடன் பேசிப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் அவர்கள் அனைவரது பேச்சிலும் சொல்லி வைத்ததுபோல ஒரு மனக்குறையும் முன்வைக்கப்பட்டது. அதாவது எவ்வளவுதான் செய்நேர்த்தியுடன் எந்தச் செயலைச் செய்தாலும் அது அவர்களுக்கு ஒரு மன அழுத்தத்தை அளித்திடத் தவறவில்லை! என்பதே ஆகும்.

    முன்னாள் மாணவர்களின் பேச்சைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டே, அனைவரும் பருகுவதற்காக ஒரு பாத்திரம் நிறையத் தேநீரைப் பேராசிரியர் தயாரித்து விட்டார். அதுமட்டுமல்லாது, தேநீர் பருகுவதற்குக் கோப்பைகள் வேண்டுமே?

    வீட்டின் சமையலறையில் இருந்த கண்ணாடி, பீங்கான் கோப்பைகள், வெள்ளி, எவர்சில்வர் டம்ளர்கள், மற்றும் பற்றாக்குறைக்கு பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளையும் கொண்டுவந்து தேநீர்ப் பாத்திரத்தின் அருகே வைத்தார். அனைத்து முன்னாள் மாணவர்களையும் அழைத்து வேண்டுமென்பவர்கள் வேண்டுமென்கிற அளவுக்கு வேண்டுமென்கிற கோப்பைகளில் நிரப்பிக் குடித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கவும் செய்தார்.

    எல்லா முன்னாள் மாணவர்களும் மகிழ்ச்சியுடன் முன்வந்து பேராசிரியர் தயாரித்திருந்த சுவையான தேநீரை அவரவர்க்கு விருப்பமான கப்புகளில் நிரப்பிப் பருகத் தொடங்கினர்.

    எல்லாரும் சொல்லி வைத்ததுபோல முதலில் விலையுயர்ந்த வெள்ளி டம்ளர்கள், பிறகு, பீங்கான் கோப்பைகள், அடுத்துக் கண்ணாடிக் கோப்பைகள் என விலையுயர்ந்த பொருள்களின் அடிப்படையிலேயே குவளைகளைத் தேர்ந்தெடுத்து ஊற்றிப் பருகினர். இவை எதுவுமே கிட்டாதவர்களே கடைசியில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளில் தேநீரை இட்டுநிரப்பிக் குடிக்கத் தொடங்கினர்.

    இப்போது கையில் தானுமொரு பேப்பர் கப்பில் தேநீரை நிரப்பிக்கொண்டு வந்து, தனது முன்னாள் மாணவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் பேராசிரியர்." நான் கவனித்தேன்; எல்லோரும் முதலில் விலையுயர்ந்த கோப்பைகளையே தேந்தெடுக்கத் தொடங்கினீர்கள்!. நான் தயாரித்த தேநீர் ஒன்றுதான்; சுவையும் ஒரே தரம் தான்.

    ஆனால் கோப்பைகளில் என்ன மாறுதல் வந்து விடப்போகிறது? வெள்ளி டம்ளர்களில் சுவை கூடவும், பேப்பர் கப்புகளில் சுவை குறையவுமா நடந்துவிடப்போகிறது?. அடுத்தவர் கோப்பைகளைப் பார்த்தே வாழத் தொடங்கினால் நம்முடைய மன அழுத்தம்தான் பெருகுமேயொழிய நிச்சயம் அது குறையவே குறையாது!.

    வாழ்க்கையும் அப்படித்தான். விலை உயர்ந்தவையோ விலை குறைந்தவையோ அவை நிச்சயம் பொருள்களின் தரத்தை மாற்றியமைத்துவிடப் போவதில்லை; அதைப்போல பொருள்களின் நிம்மதியை அவற்றின் விலைகள் தீர்மானித்துவிடப் போவதில்லை!"

    பேராசிரியரின் பேச்சைக்கேட்ட அனைவரு க்கும் மன அழுத்தம் சென்ற இடம் தெரியவில்லை. மன அழுத்தமற்ற மனம் என்பது மனத்தின் உள் அமைதி ஆகும். அதுவே நிம்மதி! அதுவே மன நிறைவுதரும் மகிழ்ச்சியும் ஆகும்.

    நிம்மதி என்பது எப்போதும் வெளியிலிருந்து வருவதன்று. உள்முக அமைதியிலிருந்து ஊற்றாகப் பெருக்கெடுப்பது. உள்முக அமைதி வாய்த்தவர்க்கு எந்த வித இக்கட்டான சூழ்நிலையும் இலகுவான மனத்தையே நல்கிடும்.

    எது வாய்த்தாலும் அது இன்பமாயினும் துன்பமாயினும் அதில் நன்மையே வாய்த்திடும் என்னும் நன்முறை எண்ணத்தை மனம் ஏற்கனவே முன்முகத் தயாரிப்பாகச் செய்து வைத்துக்கொள்ளும்.

    எல்லாவற்றிலும் நிறைவையே காண்பேன்! என்று எண்ணித் துணியும்போது, செய்கிற எல்லாச் செயல்களும் இலகுவானதாகவும் செய்வதற்குக் கடினமற்றவையாகவும் மாறிப்போவதை உணரலாம். இதனால் மகிழ்ச்சி என்பது எவ்வளவு கடின காரியத்தை எதிர்கொள்ளத் தொடங்கும்போதும் வந்து ஒட்டிக்கொள்ளும்.

    மகிழ்ச்சி வந்து தட்டிக்கொடுக்கும் போதெல்லாம் செயலாற்றுவதற்குத் தேவையான துணிச்சலும் தாமாக வந்து நமது பலமாகப் பற்றிக் கொள்ளும்.

    எளிமை, இனிமை, மகிழ்ச்சி, துணிச்சல், உள்முக அமைதி இவை வந்து விட்டால் மனத்தில் நிம்மதியைத் தவிர வேறு என்ன வந்துவிடப்போகிறது?

    தொடர்புக்கு 9443190098

    • ஆடிப்பூர வழிபாட்டில் பலப்பல முறைகள் சொல்லப்பட்டு உள்ளது.
    • ஆடிப்பூர வழிபாடு கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் வழிபாடு.

    அண்டங்களின் தோற்றமாய், அனைத்துக்கும் தலைவியாய் ஆதியில் தோன்றியவள் அவளே "ஆதி சக்தி" எனப்படும் பராசக்தி. இவளுக்குப் பல்வேறு ரூபங்களும், பல்வேறு நாமங்களும் உண்டு. அவை ஒவ்வொன்றும் உலக நன்மைக்காகவும், மக்களின் நலனுக்காகவுமே தோன்றியது.

    சர்வ சக்தி படைத்த அன்னை - உமாதேவியாக தோன்றிய நாளாகவும், பூமி தேவி - ஆண்டாள் நாச்சியாராக அவதரித்த நாளாகவும் திகழ்வது ஆடிப்பூரத் திருநாள்.

    ஆலயங்களில் அம்பிகைக்கு பால் அபிஷேகம், வளைகாப்பு உற்சவம், ஊஞ்சல் என கோலாகலமாக பல நிகழ்வுகள் நடைபெறும் நாள். இந்த நல்ல நாளில் அம்பிகையை முறையாக வழிபடக் கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும்.

    ஆடி மாதம் முழுவதும் பலப்பல திருவிழாக்கள். அதில் சைவ, வைணவ பேதம் இன்றி எல்லா ஆலயங்களிலும் நடைபெறக் கூடிய விழா ஆடிப்பூரத் திருவிழா.

    அன்னை பராசக்திக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. அதில் உமா என்ற நாமத்துக்கு தனிச்சிறப்பும் உண்டு.

    அ - சிருஷ்டி எழுத்து, உ - ரட்சக எழுத்து, ம - சம்ஹார எழுத்து. இதில் காக்கும் எழுத்து - உ.

    இந்த உகாரம் என்பது உமையைக் குறிக்கும். உமா என்றால் அன்னையாக அருள்பவள் என்பது பொருள். ஒரு தாய்க்குத்தான் தனது குழந்தைகளின் தேவை புரியும். அப்படி நமது தேவை அறிந்து அருள்பவள் உமையாகிய தாய்.

    ஒரு பெண் தனது வாழ்வில் படிப்படியாக உயர்ந்து ஒவ்வொரு நிலையிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அருள்பவள் இந்த அம்பிகையே. எனவேதான் இந்த அம்பாளுக்கு உகந்த தினமான ஆடிப் பூரத்தில் சிறப்பான வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுகின்றது.

    பூர நட்சத்திரத்தின் அதிபதியாக விளங்குபவர் சுக்கிரன். மகிழ்ச்சியான வாழ்க்கை, நல்ல இல்லறம், வீடு, வாகனம், தொழில் என அனைத்தும் வலுவாக விளங்க அருளும் கிரகம். எனவேதான் அம்பாளின் மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் செய்யும் வழிபாடுகள் சக்தி படைத்ததாக விளங்குகிறது.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதியன்று திருஆடிப்பூரத் திருவிழா வருகிறது. அன்றைய தினம் நம்மிடம் இருக்கும் துன்பம் அனைத்தும் விலகி இன்பம் நம்மை வந்து அடைய அம்பாளை வழிபாடு செய்யலாம். ஆடிப்பூர வழிபாட்டில் பலப்பல முறைகள் சொல்லப்பட்டு உள்ளது. அதில் சிலவற்றை நாம் சிந்திப்போம்.

    பால் அபிஷேகம்: நமது நாட்டில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுவது போல் உலக நாடுகளில் உள்ள அம்பாளின் ஆலயங்களிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இலங்கைத் திருநாட்டில் அம்பாளின் ருது நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அம்பிகைக்கு பால் குடம் சுமந்து வந்து பாலாபிஷேகம் செய்து குளிர வைத்து வழிபடுவது தொன்று தொட்டு வரும் வழிபாட்டு முறை.

    பொங்கல் இடுதல்: இந்த ஆடி மாதத்தில் பலருக்கும் தங்களது குலதெய்வ ஆலயத்திலும், இஷ்ட தெய்வ ஆலயங்களிலும், தங்கள் ஊரின் காவல் தெய்வம் மற்றும் எல்லை தெய்வமாக உள்ள அம்பாளுக்கு பொங்கல் இட்டு வழிபடும் வழக்கம் உண்டு. அதிலும் குறிப்பாக இந்த ஆடிப் பூர தினத்தன்று பொங்கல் இட்டு நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்று வேண்டுவதும் உண்டு.

    வளைகாப்பு: உலகம் அனைத்தையும் ஈன்றவள் அன்னை. ஆனால் அவளே நித்ய கன்னியாகவும் உள்ளார். இப்படி ஒரு அதிசய தெய்வத்தை வேறு எங்கும் காண முடியுமா? இதைத்தான் தாயுமானவர்,

    பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி புராந்தகி த்ரியம்பகி எழில்

    புங்கவி விளங்கு சிவசங்கரி சகஸ்ரதள புஷ்பம் மிசை வீற்றிருக்கும்

    நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன்

    நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ

    ஆர் அணி சடைக் கடவுள் ஆரணி எனப் புகழ அகிலாண்ட கோடி ஈன்ற

    அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே

    வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே

    வரை ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலிப் பெண் உமையே

    எனப் பாடியுள்ளார்.

    அப்படி சர்வ சக்தி படைத்த அம்பிகை தனது குழந்தைகளாக பாவித்து நமக்குத் தேவையான நன்மைகளைத் தகுந்த காலத்தில் தருபவள்.

    ஒரு பெண்ணின் வாழ்வில் நல்ல கணவன் அமைந்து, தனது இல்லறத்தைத் துவங்கி மனைவி என்ற இடத்தைப் பெறுவது தான் முதல் சிறப்பு. பெண்ணுக்கு எத்தனையோ பெயர்கள் இருப்பினும் மனைவி என்ற பெயருக்கு உண்டான பெருமையே தனி. அந்தத் திருமண பந்தத்தை நமக்கு சிறப்பாக அமைத்துத் தருபவள் அம்பாள்.

    இந்த பூரத்தன்று நல்ல வரன் அமைய வேண்டும் எனப் பெண்களும், ஆண்களும் வழிபடலாம். கல்யாண வளையல் என் கைகளில் ஏற வேண்டும் என அம்பாளை வழிபட்டு வளைகாப்பு விழாவில் வளையல் வாங்கித் தந்து வழிபடுவது வழக்கம்.


    தேச மங்கையர்க்கரசி

     திருமணம் ஆன ஒரு பெண் மனைவி என்ற நிலையை அடைந்த பின் தாய்மை என்ற நிலையை அடைவதே பேரானந்தம். சிலருக்கு அது இயல்பாக வாய்க்கிறது. இன்று பலருக்கும் பல முயற்சிகள் செய்த பின்னரே வாய்க்கிறது.

    செல்வத்திலேயே தலை சிறந்த செல்வம் மக்கட் செல்வமே. இதைத் திருவள்ளுவர் அழகு பட சொல்கிறார். குழந்தையின் மழலை மொழி அறியாதவர்களே குழல் இனிது, யாழ் இனிது எனக் கூறுவார்கள் என்கிறார்.

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

    மழலைச்சொல் கேளாதவர்

    அந்த மழலையின் மொழி கேட்க காத்திருப்பவர்களுக்கு இந்நாள் ஓர் பொன்னான நாள்.

    சர்வ மங்கள ரூபிணி, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி, ஆதி சக்தியான பராபரை, அண்டம் முழுவதும் ஆளும் சுந்தரனின் பாதியானவள், எல்லா உயிர்க்கும் தாயானவள் எனக்கும் தாய்மை நலனைத் தர வேண்டும் என வேண்டி அம்பாளுக்கு வளையல், மாலை சூட்டி வளைகாப்பு செய்து வழிபட்டால் குழந்தைப்பேறு திண்ணமே.

    ஊஞ்சல் சேவை:

    அன்னை மகிழ்ந்து இருக்கும் காலத்தில் அவளை ஊஞ்சலில் வைத்து பாடி வாழ்த்தி வணங்குவது ஒரு தனி இன்பமே.

    ஒரு பெண்ணுக்கு நலங்கு இட்டு உற்றார், உறவு, நட்பு, சுற்றம் என எல்லோரும் வாழ்த்தி நீ அன்னையான இந்தத் தருணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இரு எனச் சொல்லி வளைகாப்பு செய்வர். தாயான மகிழ்வு ஒரு புறம் இருந்தாலும் நமக்காக இவ்வளவு உறவுகள் உள்ளதே! நம் குழந்தையை வரவேற்கவும், பாதுகாக்கவும் இந்த உறவுகள் காட்டும் மகிழ்வும், கொண்டாட்டமுமே ஒரு பெண்ணை மிகவும் மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்லும்.

    அதுபோல் சர்வ லோக மாதாவை நாம் வாழ்த்தி, வணங்கிக் கொண்டாட அவள் பூரணமாய் மகிழ்ந்து அருளை மழை என வாரி வழங்குவாள். எனவேதான் இந்த ஆடிப்பூர வழிபாடு கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் வழிபாடு. அம்பாள் தன்னை வணங்கும் அனைவருக்கும் எல்லா நலனையும் தருவாள்.

    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

    அவளின் கடைக்கண் பார்வைக்கு நாம் பாத்திரமாவோம். அன்னையைக் கொண்டாடி மகிழ்வோம்.

    • எம்.எஸ்.வி ஒரு கோரிக்கை வைத்தார்.
    • சிறு குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் இவர்களைக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.

    கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பிற்கு இணையான ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்பும், மதிப்பும் வைத்திருந்தவர்கள் நவுஷத் அலி- எம்.எஸ்.வி. என்று பார்த்தோம்.

    நவுஷத் அலி இசையமைத்த ஒவ்வொரு படம் வெளிவந்த பிறகும் அவரது இசையைப் பாராட்டி யாரையாவது வைத்து உருதில் எழுதி எம்.எஸ்.வி. அனுப்பிய கடிதங்களை நவுஷத் அலி புகழின் உச்சியில், பரபரப்பில் இருந்த நேரத்தில் படித்துப் பார்த்திருக்கக் கூட நேரம் இருந்திருக்காது என்பதுதான் உண்மை.

    ஆனால், "கற்றோரை கற்றோர் காமுறுவர்" என்பதைப் போல தனது ஒவ்வொரு பாடலின் இசை நுட்பங்களையும் ரசித்துப் பாராட்டுபவர் என்பதை முதல் கடிதத்திலேயே உணர்ந்துவிட்ட நவுஷத் அலி, அந்த கடிதங்களை புதையலாக பாதுகாத்தார் என்பதை எம்.எஸ்.வி அறிந்துக் கொள்ளும், ஆனந்த வெள்ளத்தில் மிதந்த நாளும் வந்தது.

    பம்பாய் (தற்போதைய மும்பை) சண்முகானந்தா அரங்கில் ஓர் தமிழ் திரைப்படக் கச்சேரி நிகழ்ச்சி செய்து தர விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு வந்தது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் எம்.எஸ்.வி ஒரு கோரிக்கை வைத்தார். நிகழ்ச்சிக்கு நவுஷத் அலியை கலந்துக் கொள்ள செய்தால் போதும். பணம் கூட பொருட்டில்லை. அவரை சந்திக்க வேண்டும், வாழ்த்துகள் பெற வேண்டும் என்ற தனது ஆசையை சொன்னார்.

    விழா குழுவினர் நவுஷத் அலியிடம் இதைப்பற்றி தெரிவிக்க அவரும் சம்மதித்து விட்டார். வேறு வேலைகள் இருப்பதால் நிகழ்ச்சியில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கிளம்பி விடுவதாக தெரிவித்தும் விட்டார். இதை கேள்விப்பட்ட எம்.எஸ்.விக்கு தனது முன்னுதாரண நாயகனை சந்திக்கப் போகிற மகிழ்ச்சி!

    சிறந்த முன்னணி பின்னணிப் பாடகர்களான டி.எம். சவுந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம். ராஜா, பி. பி. ஸ்ரீநிவாஸ், நடிகர் சந்திரபாபு, பி. சுசீலா, ஜிக்கி ஆகியோர் படை திரண்டு பம்பாய்க்கு போனார்கள்.

    இன்னிசை நிகழ்ச்சி பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே நடந்துக் கொண்டிருந்தது. இடையே மேடைக்குப் பேச வந்த நவுஷத் அலி, தான் கையோடு கொண்டு வந்திருந்த ஒரு பையை மேடையில் பிரித்துக் கொட்டினார். மேடையில் கடிதங்கள் குவிந்துப் பரவின.

    "இந்த கடிதங்கள் எல்லாம் என்னுடைய படப்பாடல்கள், பட இசை குறித்து, விஸ்வநாதன் மிக நுட்பமாக கவனித்து என்னைப் பாராட்டி எழுதியவை!! முதல் கடிதத்திலேயே இவரது திறமையை நான் புரிந்துக் கொண்டேன். பின்னாளில் இவர் உயர்ந்த இடத்தை அடைவார் என கணித்தேன். அது உண்மையாகிவிட்டது" என்று நவுஷத் அலி தன்னை பாராட்டியதாக சில நேர்காணல்களில் எம்.எஸ்.வியே சொல்லியுள்ளார்.

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கொஞ்ச நேரம் இருந்து விட்டு கிளம்புவதாக சொன்ன நவுஷத் மேடையை விட்டு இறங்கி பார்வையாளராக போய் உட்கார்ந்து மொத்த நிகழ்ச்சியையும் பார்த்தார். நடுவில் ஒரு துண்டு சீட்டை மேடைக்கு அனுப்பினார். அதில் அவர் பாடச் சொல்லி விரும்பிக் கேட்ட பாடல்? "ஓடும் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே"- என்ற "காத்திருந்த கண்கள்" படப் பாடல்!

    துண்டு சீட்டைப் பார்த்தவுடன் எம்.எஸ்.விக்கு வியப்பு தாங்கவில்லை! இந்திப் பட உலகில் மிகப் புகழ்வாய்ந்த பரபரப்பான ஒரு இசை மேதை, இவர் எப்போது இந்த தமிழ் திரைப்பாடலைக் கேட்டார்? ரசித்து விரும்பி கேட்கிறாரே? உடனே சீர்காழி கோவிந்த ராஜனை அழைத்து, கவியரசரின் இந்த பாடலை பாடவைக்கிறார். குழல், தபலா, வயலின், துந்தனா என மிகக் குறைந்த இசைக்கருவிகள் கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று!

    மேடையில் நவுஷத், இங்கிருந்து சென்ற கலைஞர்கள் அனைவரையும் தனது இல்லத்திற்கு தேநீர் விருந்துக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தார்.

    மறுநாள் குழுவினர் நவுஷத் வீட்டிற்கு போனார்கள். அவர்களுக்கு அங்கும் ஒரு அதிசயம் காத்திருந்தது. அவரது வீட்டில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி இசையமைப்பாளர்களின் இசை படைப்புகள், வாழ்க்கை குறிப்பு உள்ளிட்ட செய்திகள் அழகாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.

    அந்த அளவில் சம கால பல மொழியின் இசையமைப்பாளர்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்த நவுஷத் பின்னாளில் எம்.எஸ்.வி. தமிழ் படங்களில் வழங்கிய அற்புதமான உயிரோட்டமான இசையின் தரத்தை என் இசையில் எட்ட முடியாது. என்னை அவர் குரு இடத்தில் வைத்திருப்பதாக சொல்கிறார். நான் தான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். இதை உளமாற சொல்கிறேன் என்றார்.

    இவையெல்லாம் வெறும் புகழ்ச்சி இல்லை, முகத்துதிக்காக சொன்னவையில்லை, என்பதை மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த கர்ணன் பட இசையே சொல்லும். வட இந்தியர்களையே புருவம் உயர்த்த வைத்த இசை அது!

    பி.ஆர்.பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்ற வரலாற்று நாயகர்களை முன்னிறுத்தி ஆவணப்படுத்தியவர். சிறு குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் இவர்களைக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இவர் மகாபாரதத்தில் எதிர்மறை கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்பட்ட கர்ணன் துரியோதனன் ஆகியோரை முன்னிறுத்தி கர்ணன் என்ற திரைப்படம் இயக்குகிறார். தயாரிப்பாளரும் இவரே.

    கர்ணன் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் 13. இதில் மகாராஜன் உலகை ஆளுவான் என்ற படத்தில் இடம்பெறாத பாடல் போக மீதி 12 பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அத்தனையும் முத்துக்கள். நம் காதுகளையும் இதயத்தையும் கொள்ளை கொண்டு விடும். காலையில் கேட்டு விட்டால் அன்று முழுவதும் வேறு பாடல்களை கேட்க விடாமல் நம்மை வேட்டையாடும் பாடல்கள் என்றால் அது மிகையில்லை.

    வட இந்தியாவில் நடைபெறும் கதை என்பதால் எல்லாம் இந்துஸ்தானி மெட்டில் அமைந்த பாடல்கள். இந்தப் படத்தில் இசையமைக்க வட இந்திய இசைக்கருவிகளான சாரங்கி செந்நாய் சரோத் சித்தார் ஆகியவை சிறப்பாக பயன்படுத்தப்பட்டன.

    இந்தப் படத்தின் பாடல்களை தடையில்லாமல் கம்போஸ் செய்ய பந்துலு ஓர் உத்தியை சொன்னார். நீங்கள் இங்கு இருந்தால் வேறு வேலைகள் குறுக்கிடும். அதனால் உங்களுக்கு பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு வாரம் அறை எடுத்துத் தருகிறேன். அங்கே எந்த குறுக்கீடுகளும் இல்லாமல் பொறுமையாக பாடல் தயாரித்து தாங்க என்று சொன்னார்.


    அவர்களும் அங்கு கிளம்பினார்கள். அவர் சொன்ன சூழல்களுக்கு கவியரசர் சொல்ல சொல்ல மொத்த பாடல்களும் எழுதி மெட்டும் அமைக்கப்பட்டு விட்டன. அதுவும் மூன்றே நாட்களில்..

    கவியரசர் விசுவிடம் நாம் மூனே நாள்ல மெட்ராஸ் திரும்பினா ஏனோ தானோன்னு பாடல் வந்திருக்கும் என்று நினைப்பார்களோ என்று சொல்ல, பாடல்களை கேட்டால் அப்படி சொல்ல மாட்டாங்க என்று சிரித்து கொண்டே ஊர் திரும்பினார்கள்.

    படத்தில் கர்ணன் சூரியனை வழிபடும் போது ஆயிரம் கரங்கள் நீட்டி என்று பாடுவதாக ஒரு பாடல் வரும். இந்த பாடலுக்கு ஆதித்ய இருதயம் என்ற ஸ்தோத்திரப் பாடலில் வரும் கருத்தினை வைத்து எழுத நினைத்ததால் கவியரசர் வேத விற்பன்னர்களை அழைத்து ஆதித்ய ஹிருதயத்தின் பொருளை கேட்டறிந்து அந்தப் பொருளை உள்ளடக்கி எழுதினார்.

    ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி பாடலை சிறப்பாக நமக்கு தருவதற்கு இவர்கள் எடுத்த முயற்சி மலைக்க வைக்கிறது. சூரிய துதிக்கு தமிழில் இதை மிஞ்சிய பாட்டே இல்லை எனலாம்.

    மாணிக்கவாசகரின் திருவாசகத்தின் தாயினும் சாலப் பரிந்தும் என்ற சொல்லாடல் இந்த பாட்டிலும் வரும்.

    சூரியன் இல்லை என்றால் தாவரங்கள் இல்லை. உயிர்கள் வாழ உணவில்லை என்றால் எந்த உயிரினமும் ஏது.. படைக்கும் ஓர் உயிர் களுக்கெல்லாம் துணைக் கரம் தருவாய் போற்றி என்று வணங்குகிறார் கவியரசர்.

    தூரத்தில் நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி.. சூரியன் பூமியை விட்டு கொஞ்சம் நெருங்கி இருந்தால் புல் பூண்டும் சாம்பல் ஆகும். கொஞ்சம் தள்ளி இருந்தால் கடல் நீரும் உறைந்து விடும். அதனால் தான் தூரத்தில் நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் என்று மெய்ஞானத்தில் விஞ்ஞானத்தையும் சேர்த்து எழுதிய கவியரசர் ஒரு யுக கவி.

    இந்தப் பாடல் துதிப்பாடல் என்பதால் தம்பூரா இசை அடிப்படையில் வேத கோஷம் போலவே என வரும்.

    கர்ணன் பட பாடல்கள் ஒவ்வொன்றை பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். அத்தனையும் தேன் மழை தான். இரவும் நிலவும் வளரட்டுமே என்ற கனவுப் பாடலிலும் ஒரு சிறப்பு உண்டு. எல்லா வரியும் மே என்ற எழுத்தில் முடியும். பின்னாளில் அவன் தான் மனிதன் பட பாடலிலும் மே என்ற எழுத்தில் முடியும் பாடல் உண்டு. அன்பு நடமாடும் கலைக்கூடமே என்ற பாடல் அது.

    அவன் தான் மனிதன் படத்தில் இன்னும் ஒரு பாடல் கவியரசர் எழுதச் சொல்லி இயக்குனர் கேட்க, எம்.எஸ்.வி., கண்ணதாசனிடம் கவிஞரே இன்னொரு டூயட் எழுதணும். அவங்க மே மாத கடைசிக்குள்ளாக ரிலீஸ் பண்ணனுமாம் என்று நினைவு படுத்தினார்.

    என்ன விசு, மே மேங்கர.. வா இந்தா பாட்டு என்று சொல்லித் தந்த பாட்டு தான், அன்பு நடமாடும் கலைக்கூடமே என்ற பாடல்.

    இந்த பாடலின் ஒவ்வொரு வரியையும் மே என்ற எழுத்து வரும்படி குறும்பாக முடித்திருப்பார். ஒரே ஒரு வரியில் மட்டும் மன்னனே என்று முடியும். அரிதான இலக்கிய நயம் மிகுந்த சொற்களுடன் கேட்கவே மிக இனிமை. ஒரு இடத்தில், அன்று கவிவேந்தன் சொல்வண்ணமே யாவும் உறவாகுமே என்று முத்தாய்ப்பாக ஒரு வரியை எழுதி இருப்பார். கவி வேந்தன் என்பது கவியரசர் தான்.

    மிக அமைதியாக போகும் இப்பாடல் நடுவில் சிவாஜி குணமானவுடன் உற்சாகத்துள்ளல் இசையுடன் வந்து மீண்டும் அமைதியாக வருவது அழகு.

    ஊடகங்கள் வந்த பிறகு பேசி பிரபலமானது இந்த பாடல். பேசாமலே பிரபலமானது இரவு நிலவும் வளரட்டுமே பாடல்.

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    • தேர் இல்லாத பெரும் ஆலயங்கள் இல்லை.
    • ஜாதி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு வாழ உதவுகிறது.

    நம் ஆன்மிக வரலாற்று வீதிகளில் பலப் பல நூற்றாண்டுகளாகப் பல அழகிய தேர்கள் ஆனந்தமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. நம் நாட்டில் தேர் இல்லாத பெரும் ஆலயங்கள் இல்லை.

    மூலவராக இருக்கும் கடவுள் தேரில் ஏறி உற்சவராக வீதியெங்கும் உல்லாசமாக வலம் வருகிறார். ஆலயத்திற்கு வந்து இறைவனை தரிசனம் செய்ய இயலாதவர்களும் தேரிலேறி வீதியுலா வரும் தெய்வத்தை வீட்டு வாயிலில் நின்றவாறே தரிசித்துப் பரவசம் அடைகிறார்கள்.

    தமிழகத்தின் பற்பல ஆலயங்களில் தேர் இருந்தாலும் திருவாரூர் ஆலயத் தேர் தன் எழிலால் பிரசித்தி பெற்றது. `திருவாரூர்த் தேரழகு' என்ற பழமொழியே தமிழில் உலவுகிறது.

    தேர்த் திருவிழா ஜாதி பேதங்களை மறந்து மக்கள் ஒன்றுபட்டு வாழவும் உதவுகிறது. எல்லா ஜாதியினரும் வேறுபாடு பாராமல் இணைந்துதான் தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். அதனால் `ஊர்கூடித் தேரிழுத்தல்' என்ற சொற்றொடரே தோன்றிவிட்டது.

    சில புகழ்பெற்ற ஆலயங்களில் மரத் தேர் மட்டுமல்லாது, வடிவில் சிறியதும் அழகியதுமான தங்கத் தேரும் இருக்கிறது. பண்டிகைக் காலங்களில் ஆலயத்தின் உட் பிரகாரங்களில் தங்க ரதத்தில் சுவாமி உலா வருவதைக் காண்பதென்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

    மதுரை, திருவரங்கம் போன்ற திருத்தலங்களில் தேர் ஓடுவதற்கென்றே தனி வீதிகள் இருக்கின்றன. கீழரத வீதி, மேலரத வீதி என்றெல்லாம் அவை பெயர்பெற்று விளங்குகின்றன. தேர் ஓடாத காலங்களில் மாபெரும் தேரை நிறுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட இடங்கள் தேரடி எனப்படுகின்றன.

    அந்தக் கால மன்னர்கள் போரில் ஈடுபடுத்த நான்கு வகைப் படைகளை வைத்திருந்தார்கள். தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பவையே அவை.

    ராமாயண காலத்திலிருந்தே நம் ஆன்மிகத் தேர் ஓடத் தொடங்கிவிட்டது. தசரதன் எட்டுத் திக்கில் மட்டுமல்லாமல் பாதாளம், ஆகாயம் ஆகிய இரு திக்குகளிலும் கூடத் தேரோட்ட வல்லவனாம்.

    அதனால்தான் அவன் பத்து திசைகளில் தேரோட்டக் கூடியவன் என்று பொருள்படும் வகையில் `தச ரதன்` எனப் பெயர் பெற்றான்.

    சம்பராசுர யுத்தத்தின்போது தேரோட்டியாய் அவனோடு யுத்தகளம் சென்றாள் வீராங்கனையான கைகேயி. போரின் நெருக்கடியான நேரத்தில் தேரின் அச்சாணி கழன்றுவிட்டது. அப்போது தன் விரலையே அச்சாணியாக்கித் தேரை ஓட்டி தசரதனை வெற்றி பெறச் செய்தாள் அவள்.

    அந்தப் பேருதவியால் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு இரண்டு வரங்கள் தர முன்வந்தான்.

    வேண்டும்போது அந்த வரங்களைப் பெற்றுக் கொள்வதாகக் கூறிய கைகேயி, பின்னர் அந்த வரங்களைப் பயன்படுத்தித்தான் ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள் என்கிறது ராமாயணம்.

    தேரோட்டி சுமந்திரர் ராமனையும் சீதையையும் லட்சுமணனையும் தேரில் அழைத்துச் சென்றுதான் கானகத்தில் கொண்டுவிட்டார்.

    சித்திரசாலையில் ஓவியங்களாக இடம்பெற்றிருந்த மனிதர்களைத் தவிர, மற்ற அத்தனை மக்களும் அந்தத் தேரின் பின்னால் கண்ணீர் விட்டு அரற்றியவாறே பின்தொடர்ந்து ஓடிய காட்சியைக் கம்ப ராமாயணம் உருக்கமாகச் சித்திரிக்கிறது.

    ராம ராவண யுத்தத்தின்போது ராமன் ராவணனுக்குச் சமமான உயரத்தில் இருந்து போரிட வேண்டும் என்பதற்காக இந்திரன் தன் தேரோட்டியான மாதலியையும் தனது தேரையும் ராமனுக்காக அனுப்பி வைத்தான் என்ற செய்தியும் ராமாயணத்தில் உண்டு.

    உத்தரகாண்டத்தில் துணி வெளுப்பவன் சொன்ன அபவாதத்தால் வருந்திய ராமன், சீதையைக் கானகத்திற்கு அனுப்பி வைத்தான். தன் அண்ணியை அண்ணன் கட்டளைப்படி கானகத்திற்குத் தேரில் கொண்டுவிட்டான் லட்சுமணன். அப்போது சீதாதேவி அடுத்தடுத்து அடையும் துயரங்களை எண்ணி அந்தத் தேர் கண்ணீர் விட்டதாம்.

    மகாபாரதத்தில் தேர் மிக உயர்ந்த பெருமையைப் பெற்றுவிட்டது. உலகப் புகழ்பெற்ற நீதிநூலான கீதையை பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்தது தேரோட்டியாகத் தேர்ப் பீடத்தில் அமர்ந்துதான்.

    கர்ணன் என்ற மாவீரனின் வளர்ப்புத் தாயான ராதை, ஒரு தேரோட்டியின் மனைவிதான்.

    ராஜமாதா குந்தி தேவி திருமணத்திற்கு முன்பாகத் தனக்கு துர்வாசர் உபதேசம் செய்த மந்திரத்தின் சக்தியைச் சோதிக்க விரும்பினாள். அந்த மந்திர சக்திக்கு உட்பட்டு சூரியன் அவள்முன் தோன்றி அவளுக்கு கர்ணனைக் குழந்தையாகக் கொடுத்துவிட்டு மறைந்தான்.

    கன்னிப் பெண்ணின் கையில் குழந்தை என்றால் உலகம் நகைக்குமே? அபவாதத்திற்கு அஞ்சிய குந்தி, குழந்தையை ஒரு கூடையில் வைத்து, தன்னந்தனியே கண்ணீரோடு நதிநீரில் அனுப்பி வைத்தாள்.

    பிள்ளையில்லாத தனக்கு ஒரு பரிசுபோல் நதிநீர் மூலம் கிட்டிய குழந்தையைப் பாசத்தோடு வளர்த்தான் ஒரு தேரோட்டி. அவன் மனைவிதான் கர்ணனின் வளர்ப்புத் தாயான ராதை. வளர்த்த பாசத்தின் காரணமாக, போரில் இறந்த கர்ணனோடு தானும் இறந்தாள் ராதை என்கிறது மகாபாரதம்.

    தேரோட்டி மகனான கர்ணனது வாழ்வின் இறுதிக் காலத்தில் தேர்கள் அவனுக்கு உதவாமல் அவன் வாழ்வை முடிக்க உதவியதுதான் கொடுமை.

    கர்ணன் அர்ச்சுனன் மீது நாகாஸ்திரத்தைப் பிரயோகித்தபோது, கிருஷ்ணர் கால் கட்டை விரலால் அர்ச்சுனன் தேரை அழுத்தினார். தேர் சற்றே கீழிறங்க அர்ச்சுனன் தப்பித்தான்.

    போர் முடியும் தறுவாயில் கர்ணனின் தேரோட்டியான சல்லியன் தேரை ஓட்ட மறுத்து விலகிச் சென்றான். மண்ணில் அழுந்திய தேர்ச் சக்கரத்தை எடுக்க கர்ணன் முனைந்தபோது, கிருஷ்ணர் உத்தரவுப்படி அர்ச்சுனன் அம்பு போட கர்ணன் மரணத்தைத் தழுவுகிறான்.

    எதிரியின் தேர், தன் தேர் என இரண்டு தேர்களுமே சந்தர்ப்ப வசத்தால் கர்ணன் மரணத்திற்குத் துணைபோனதை மகாபாரதம் சொல்கிறது.

    கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்து `பார்த்த சாரதி` எனப் பெயர் பெற்றார் என்றால், அத்தகைய கிருஷ்ணனுக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் தேரோட்டியாக இயங்கினாள் அவர் மனைவி சத்தியபாமா என்கிறது பாகவதம். நரகாசுரனைக் கிருஷ்ணர் வதம் செய்தபோது அவருக்குத் தேரோட்டும் பணி செய்தவள் சத்தியபாமாதான்.

    சங்க கால மன்னன் பாரியின் வரலாற்றில் அவன் வள்ளல் தன்மையைப் புலப்படுத்தும் வகையில் ஒரு தேர் வருகிறது. படர்வதற்குக் கொழுகொம்பில்லாமல் கானகத்தில் தத்தளித்த முல்லைக் கொடியின் தவிப்பைக் கண்டு, அதன் அருகே அது படர வசதியாகத் தன் தேரை நிறுத்திவிட்டு மன்னன் பாரி நடந்தே அரண்மனை திரும்பினானாம்.

    `முல்லைக்குத் தேரீந்த பாரி` என அவன் வள்ளல்தன்மையைப் போற்றிப் புகழ்கின்றன பழந்தமிழ் இலக்கியங்கள்.

    சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருவதாகத் தெரிவிக்கின்றன புராணங்கள்.

    சூரியக் கிரணங்களிலிருந்து ஏழு நிறங்கள் பிரதிபலிப்பதாகத் தெரிவிக்கிறது இன்றைய அறிவியல்.

    சூரியனின் தேர் ஒற்றைச் சக்கரத் தேர். அந்தத் தேர் ஒருபோதும் பின்னோக்கிச் செல்லாது.

    சூரியனால்தானே நாள் கணக்கிடப் படுகிறது? அது காலத்தின் அடையாளம். காலம் முன்னோக்கிச் செல்லுமே அல்லாது ஒருபோதும் பின்னோக்கிச் செல்வதில்லையே?

    மனுநீதிச் சோழன் கதையில் அந்த மன்னனின் மகன் வீதிவிடங்கன் தேரிலேறி உலாச் செல்கிறான். அப்போது ராஜகுமாரன் செலுத்திய தேரின் அடியில் ஒரு பசுங்கன்று அகப்பட்டு இறந்து போகிறது.

    அந்தக் கன்றை ஈன்ற தாய்ப்பசு அரண்மனை சென்று ஆராய்ச்சி மணியை அடித்து அரசனிடம் நீதி கேட்கிறது.

    அரசன் தன் மகன்மீது தான் தேரைச் செலுத்தி, தன் மகனைத் தானே கொன்று, அந்தப் பசு அடைந்த துயரத்திற்கு நீதி வழங்குகிறான் என்கிறது மனுநீதிச் சோழன் கதை.

    பின்னர் சிவபெருமான் அருளால் தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்த பசுவின் கன்றும் அரச குமாரனும் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததையும் அந்த வரலாறு விவரிக்கிறது. வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம் என்ற தலைப்பில் இந்த வரலாற்றை ஓர் உரைநடைக் காப்பியமாக எழுதியிருக்கிறார்.

    புத்தர் வரலாற்றிலும் தேருக்கு ஓர் இடம் உண்டு. சன்னா என்ற தேரோட்டி மூலம் முதல் முறையாக வெளியுலகத்தில் தேரில் வீதியுலா போகிறான் ராஜகுமாரன் சித்தார்த்தன். பிணி மூப்பு சாக்காடு ஆகிய மூன்றையும் மனிதர்கள் தவிர்க்க இயலாது என்பதை நேரில் கண்டு புரிந்து கொள்கிறான்.

    சித்தார்த்தன் மனத்தில் ஞானத் தேடல் பிறக்கிறது. அன்றிரவே மனைவி யசோதரையையும் மகன் ராகுலனையும் பிரிந்து மறுபடியும் நள்ளிரவில் தன் தேரிலேறி தேரோட்டி சன்னா தேரை ஓட்ட கானகம் வருகிறான்.

    சன்னாவைத் திரும்ப அனுப்பி விட்டு கானகத்தின் உள்நடந்த சித்தார்த்தன் போதி மரத்தடியில் ஞானம் பெற்றுப் பின் புத்தராக மலர்கிறான் என்பதை விவரிக்கிறது புத்தர் திருச்சரிதம்.

    புத்தர் என்ற மெய்ஞ்ஞானியை உருவாக்கியதில் போதி மரத்திற்கு மட்டுமல்லாமல் அவரைக் கானகம் வரை கொண்டுவிட்ட தேருக்கும் பங்கிருக்கிறது!

    திருவள்ளுவர் காலத்திலேயே தேர் புகழ்பெற்ற வாகனமாக இருந்து வந்திருப்பதைத் திருக்குறள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. `கடலோடா கால்வல் நெடுந்தேர்' என்றும் `உருள்பெருந் தேர்க்கு அச்சாணி அன்னார்' என்றும் இரண்டு குறட்பாக்களில் தேர் உவமைப் பொருளாகப் பேசப்படுகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவரே அழகிய கல் தேரில்தான் காட்சி தருகிறார்.

    நம் இல்லத்து மகளிர் அவரவர் இல்ல வாயிலை அலங்கரிக்கும் வகையில் தீட்டும் கோலங்களில் புள்ளி வைத்து இழையிழுத்துப் போடும் தேர்க்கோலம் புகழ்பெற்றது.

    நம் தெய்வங்களின் புகழை வீதியெல்லாம் ஓடி ஓடிப் பிரசாரம் செய்து பக்தியை வளர்க்கும் தேர்கள் நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவை என்பதில் சந்தேகமில்லை.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • விவசாயத்தில் விஞ்ஞானி ஆனார்.
    • புது ரக கோதுமையை அறிமுகப்படுத்தினார்.

    பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் குடபுலவியனார் என்ற புலவர் அருமையான ஒரு கருத்தை நம் முன் வைக்கிறார்..

    "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது அவரது வாக்கு (புறநானூறு 18)

    உணவை அளித்தவர் உயிரை அளித்தவரே என்று அவர் போற்றுவதை கருத்தில் கொள்ளும் போது 24.5 கோடி பேர்களுக்கு உணவை அளித்த ஒரு மாமனிதரை என்னவென்று சொல்லிப் போற்றுவது? தன் வாழ்வு முழுவதையும் மக்களின் பசிப்பிணி தீர்க்கும் நல்ல பணிக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவர் விஞ்ஞானி நார்மன் போர்லாக் ஆவார்.

    மணிமேகலை கூறும் ஆருயிர் மருந்து!

    பழம் பெரும் தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலையிடம் அள்ள அள்ள அன்னம் வரும் அமுதசுரபியைக் கொடுப்பதையும் அதை வைத்து புகாரிலும் கச்சி மாநகரிலும் மணிமேகலை அனைவரின் பசிப்பிணியைப் போக்குவதையும் பார்க்கிறோம்.

    "ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து

    வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது

    தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்"

    என்ற காப்பிய வரிகளில் உணவே உயிர் காக்கும் மருந்து என்ற பொருளில் ஆருயிர் மருந்து என்று எடுத்துரைக்கப்படுகிறது. தொலைவு இல்லாமல்' அதாவது குறையாமல் வழங்கும் அமுதசுரபியின் மகிமையையும் அதனால் தான் அறிகிறோம்.


    ச.நாகராஜன்

    ச.நாகராஜன்

    பழைய காலக் கதை என்று விட்டு விடாமல் இதில் இருக்கும் அறநெறி தமிழர் தம் நெறி என்பதை நினைத்து உள்ளம் பூரிக்கும் வேளையில் இப்படி வாழ்வு முழுவதையும் பசிப்பிணி தீர்க்கும் நலப்பணிக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விஞ்ஞானியாகத் திகழ்ந்தார் நார்மன் போர்லாக்

    பிறப்பும் இளமையும்: நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 1914-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி அமெரிக்காவில் ஐயோவாவில் சவுடே என்ற இடத்தில் ஹென்றி ஆலிவர் என்பவருக்கும் கிளாரா போர்லாக்கிற்கும் மகனாகப் பிறந்தார். நான்கு குழந்தைகளில் இவரே முத்தவர். மற்ற மூவரும் பெண்கள்.

    இவர் தனது பாட்டனாரின் 106 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பண்ணையில் வளர்ந்தார். 'ஒற்றை ஆசிரியர் ஒரே ஒரு அறை' என்ற ரீதியில் இருந்த பள்ளியில் அவர் படிப்பு ஆரம்பித்தது.

    அவரது தாத்தா, "இப்போது நீ படிக்கப் போ. உன் மூளையை இந்த வயதில் நன்கு நீ நிரப்பி விட்டால் உன் வயிறைப் பின்னால் நன்கு நிரப்ப முடியும்" என்றார்.

    தாத்தா சொல்லைத் தட்டாத பேரன் தன் மூளையை நன்கு நிரப்பி விவசாயத்தில் விஞ்ஞானி ஆனார். பல கோடி பேர்களின் பசியைப் போக்கி அவர்களின் வயிறை நிரப்ப வழியையும் கூறினார்.

    மல்யுத்த வீரர்: போர்லாக் பள்ளியில் மல்யுத்தத்தை ஆர்வத்துடன் கற்றார். "அது என்னை வலுவுள்ளவனாக ஆக்கியது" என்று அவர் கூறினார்.

    வனவளத்தில் 1937-ல் ஒரு பட்டத்தைப் பெற்ற போர்லாக், , மின்ன சோட்டா பல்கலைக் கழகத்தில் மரபணுவியலிலும் தாவர இயலிலும் பிஹெச்.டி பட்டத்தைப் பெற்றார். விவசாயத்தில் விளைச்சலை மேம்படுத்துவதில் அவர் மனம் ஈடுபட்டது.



    மெக்சிகோ அழைப்பு: 1940-களில் மெக்சிகோ நாட்டில் இருந்து இவருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. தங்கள் நாட்டில் கோதுமை விளைச்சல் குறைவாக இருப்பதோடு விளையும் கோதுமையும் தரமானதாக இல்லை என்று மெக்சிகோ தெரிவித்தது. உடனே தன் கர்ப்பிணியான மனைவியையும் 14 மாத பெண் குழந்தையையும் விட்டு விட்டு மெக்சிகோ சென்று இவர் அதை ஆராய ஆரம்பித்தார்.

    அங்குள்ள கோதுமை, நோய்களை எதிர்க்கும் தடுப்பு சக்தி உள்ள ஊட்ட சத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்தார்.

    10 ஆண்டுகள் கடினமாக உழைத்து விளைச்சல் நிலம் தோறும் சோதனைகளை மேற்கொண்டார். அதன் பலனாக மிக அதிக விளைச்சலைத் தரும் நோய் பீடிக்காத கோதுமைப் பயிரை உற்பத்தி செய்து விளைச்சலை அமோகமாக ஆக்கினார். "அங்கு பயிற்சி பெற்ற விஞ்ஞானிகளோ சாதனங்களோ ஒன்றும் இல்லை. உள்ளூர் விவசாயிகளோ தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்" என்றார். கடுமையான எதிர்ப்புகளைச் சமாளித்து ஆயிரக்கணக்கான சோதனைகளைச் செய்து இறுதியில் வெற்றியைக் கண்டார் அவர்.

    1960-களில் ஆசியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தது. ஜனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப விவசாயிகளால் உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை. அதனால் லட்சக்கணக்கானோர் பட்டினி கிடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். உடனே போர்லாக் அழைக்கப்பட்டார்.

    பஞ்சம் வந்து பசி பட்டினியால் நிச்சயம் ஆயிரக்கணக்கானோர் அவதியுற நேரிடும் என்ற நிபுணர்களின் வாக்கை தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவர் பொய்யாக்கினார்.

    1968-ம் ஆண்டு அமெரிக்க முகமையான இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் டைரக்டர் வில்லியம் காட் என்பவர் போர்லாக்கின் பணியை "பசுமைப் புரட்சி" என்ற வார்த்தைகளால் புகழ்ந்தார்.

    ஊட்டச்சத்து சாப்பிட்டு வளரும் குழந்தைகளை ஒப்பிடும் போது ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் கடும் நோய்களால் பீடிக்கப்பட்டு 8 மடங்கு அதிகமாக இறக்கும் அபாயம் உள்ளவையாக ஆகின்றன. குழந்தைகளின் மென்மையான உடல் கடும் நோய்களை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்காது. போர்லாக் புது ரக கோதுமையை அறிமுகப்படுத்தினார். போர்லாக் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை உலகின் மொத்த ஊட்டச்சத்து கலோரிகளில் 23 சதவீதம் என்ற அளவு இருந்தது.

    1980-ல் ஆரம்பித்த பெரும் பசுமைப் புரட்சி உலகில் எல்லா நாடுகளுக்கும் பரவி லட்சக்கணக்கான குழந்தைகளை நோய் அபாயத்தில் இருந்து தடுத்தது. 2000-ம் ஆண்டில் இதன் பலன் வெளிப்படையாக அனைத்து நாடுகளிலும் தெரிய வந்தது. அமி பியர்ஸ் என்ற புள்ளியியல் நிபுணர் சுமார் 24½ கோடிப் பேர் இதனால் வளம் பெற்ற ஊட்டச் சத்தைப் பெற்றதாகக் கூறுகிறார்.

    ஏராளமான தனியார் நடத்திய ஆய்வுகள் போர்லாக்கினால் உயிர் காப்பாற்றப்பட்டோர் 100 கோடிக்கும் அதிகமாகவே இருப்பர் என்று தெரிவிக்கின்றன.

    எதிர்ப்புகள்: இவர் உரங்களை உபயோகிப்பது பற்றி சில விஞ்ஞானிகள் கடுமையாக விமரிசித்தபோது அவர்களை நோக்கி, "60 ஆண்டுகளாக மண்ணில் காலை ஊன்றி பணி செய்து வருகிறேன். வீட்டில் அமர்ந்து இதை விமர்சிக்கிறீர்களே" என்று பதிலடி கொடுத்தார்.

    கடுமையாக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர், "நான் பூட்ஸ் காலுடனேயே (அதாவது வயல்வெளியில் வேலை செய்தவாறே, இறக்க விரும்புகிறேன் என்று தனது 90-வது வயதிலும் கூறிக் கொண்டிருந்தார்.

    இந்தியாவிற்கு உதவி: 1963 மார்ச் மாதம் அவர் இந்தியாவிற்கு வந்தார். டெல்லி. லூதியானா, கான்பூர், பூனே, இந்தூர் ஆகிய இடங்களில் அவர் தங்கி தனது கோதுமை விளைச்சல் உத்தியை அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார். 1975 வரை இந்தியாவில் இருந்து இந்திய கோதுமை விளைச்சலில் வெற்றியைக் கண்டார் அவர்.

    அவருக்கு இந்திய அரசு 2006-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை அளித்துச் சிறப்பித்தது. அவருக்கு 2013-ல் டெல்லியில் ஐ.சி.ஏ.ஆர். கட்டிட வளாகத்தில் ஒரு சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

    நோபல் பரிசு: 1970-ல் அவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நார்வேயில் இருந்து அவர் நோபல் பரிசு பெற்ற செய்தியானது அவருக்கு மெக்சிகோவில் காலை நான்கு மணிக்கு அவரது மனைவியிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போர்லாக்கோ அதற்கு முன்பேயே நாற்பது மைல் தள்ளி உள்ள டோலுகா பள்ளத்தாக்கு என்ற தனது சோதனை வயல்களத்திற்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். மனைவி விரைந்து சென்று அவரிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்தார். போர்லாக் இதை நம்பவில்லை. அனைவருமாகச் சேர்ந்து ஒரு புரளியைக் கிளப்பி தன்னைக் கிண்டல் அடிக்கிறார்கள் என்றே நினைத்தார்.

    டிசம்பர் 10-ந் தேதி பரிசைப் பெற்ற பின் தனது உரையில், " பசியால் வாடும் உலகம் ரொட்டிக்காகவும் சமாதானத்திற்காகவும் ஏங்கும் போது விவசாயமும் உணவு உற்பத்தியும் எவ்வளவு முக்கியமானது என்பதை அடையாளப்படுத்த ஒரு தனிமனிதனான என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது" என்று எளிமையாகக் குறிப்பிட்டார்.

    உலகின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அவர் போற்றிப் புகழப்பட்டார்.

    எஸ்.ஏ.ஏ: சசகாவா ஆப்பிரிக்கா சங்கம் (எஸ்.ஏ.ஏ.) என்ற சங்கத்தை உருவாக்கி 1989 முதல் 2009 முடிய அதன் தலைவராக அவர் இருந்தார். 15 ஆப்பிரிக்க நாடுகளில் 80 லட்சம் விவசாயிகளுக்கு அவர் அமோக விளைச்சலுக்கான பல உத்திகளைக் கற்றுக் கொடுத்து நல்ல பயிற்சி கொடுத்தார். அதனால் விளைச்சல் இரண்டு மடங்காகவும் மூன்று மடங்காகவும் ஆனது. அனைவரும் மகிழ்ந்தனர்.

    குடும்பம்: கல்லூரியில் படிக்கும் போது டிங்கிடவுன் பல்கலைக்கழகத்தில் ஒரு காப்பி விற்கும் பெட்டிக் கடையில் மார்கரெட் ஜிப்சன் என்ற பெண்மணியைச் சந்தித்த போர்லாக் அவரை 1937-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்று குழந்தைகள், ஐந்து பேரக் குழந்தைகள் ஆறு கொள்ளுப் பேரக் குழந்தைகள் என குடும்பம் வளர்ந்தது. 69 வருட மண வாழ்க்கை நீடித்த பின்னர் 2007-ல் மார்கரெட் தனது 95-ம் வயதில் தடுக்கி விழுந்ததால் மரணமடைந்தார்.

    விருதுகள்: வாழ்நாள் முழுவதும் அவர் பெற்ற விருதுகளுக்குக் கணக்கே இல்லை. 2004-ல் 18 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் அவருக்கு 49கவுரவ பட்டங்களை அளித்துக் கவுரவித்தன. அமெரிக்காவில் நோபல் பரிசு, விடுதலைக்கான அமெரிக்க தலைவரின் பதக்கப் பரிசு மற்றும் அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் ஆகிய மூன்றையும் இதுவரை பெற்றவர் ஐவர் மட்டுமே. அதில் போர்லாக்கும் ஒருவர்.

    மறைவு: இறுதி வரை உழைப்பை மேற்கொண்ட போர்லாக் பழுத்த 95-ம் வயதில் 2009, செப்டம்பர் 12-ம் நாளன்று அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் மரணமடைந்தார்.

    அவரது கல்லறையில் பொருத்தமான ஒரு வாசகம் பொறிக்கப்பட்டது இப்படி:

    "உலகிற்கு உணவளித்த மனிதர் இவர்."

    சமூக நீதியின் முக்கிய அம்சம்!

    ஏராளமான அவரது பொன்மொழிகளில் முக்கியமான கூற்று இது தான்:

    "சமூக நீதியின் முக்கியமான முதல் அம்சம் மனித குலம் முழுவதற்கும் போதுமான உணவை வழங்குவது தான்!"

    அமெரிக்காவில் பிறந்தாலும் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்ற குறளின் அடிப்படையில் வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய போர்லாக்கை உலகம் மறக்க முடியுமா என்ன?

    • லட்சியத்துடன் வாழ்க்கை பயணத்தை நடத்துபவர்கள்.
    • பிறருக்கு உதவி செய்யும் தன்மை நிறைந்தவர்கள்.

    27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அஸ்வினியாகும். இந்த நட்சத்திரம் மேஷ ராசியில் அமைந்துள்ளது. அஸ்வினி என்ற பெயர் அஸ்வம் என்ற சொல்லில் இருந்து உருவானது. சமஸ்கிருதத்தில் அஸ்வம் என்றால் குதிரை என்று பெயர். வானில் குதிரை தலை போல் காட்சியளிப்பதால் இதற்கு அஸ்வினி என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் தமிழ் பெயர் புரவி. இதன் அதிபதி கேதுவாகும். இதில் உச்சமடையும் கிரகம் சூரியனாகும். மனித உடலில் தலை பாகத்தையும் மூளையையும் ஆளுமை செய்யும் நட்சத்திரம்.

    இது கேதுவின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரம் என்பதால் இதில் பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிக்கும். வல்லமை மனோதிடம் உள்ளவர்கள்.

    நியாய, தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள். உண்மைக்குப் புறம்பாக பேசமாட்டார்கள். முன்கோபத்தால் உற்றார் உறவினர்களைப் பகைத்துக் கொள்வார்கள். லட்சியத்துடன் வாழ்க்கை பயணத்தை நடத்துபவர்கள். பிறருக்கு உதவி செய்யும் தன்மை நிறைந்தவர்கள்.

    நல்ல சுறுசுறுப்பும், துடிப்புடன் செயல்படும் குணத்தைப் பெற்றிருப்பவர்கள். மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் எளிதாக புரிந்து கொண்டு முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். எதிரிகளை சமாளிப்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். எதையும் ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். எந்த கடினமான சூழலிலும் பொறுமையையும், தெய்வ பக்தியையும் கைவிடமாட்டார்கள். பாரம்பரியமான விஷயங்களை விரும்புபவராக இருந்தாலும் கூட நவீனத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். மன உறுதியும், உடல் வலிமையும் கொண்டவர்கள். இவர்களின் கண்களில் எப்போதும் பிறரை ஈர்க்கும் கவர்ச்சி இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பதில் வல்லவர்கள். சுயகவுரவத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதவர்கள். எந்த விஷயத்தையும் நன்கு ஆராய்ந்த பிறகே ஏற்றுக் கொள்வார்கள். நண்பர்கள் குறைவாக இருப்பார்கள். பல மொழி பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். நுட்ப அறிவு மற்றும் அதிர்ஷ்டம் நிரம்பியவர்கள். பூர்வீகச் சொத்து கிடைக்கும். குல தெய்வ அனுகிரகம் இருக்கும்.

    அசுவினி நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி என்பதால் மிகச்சிறந்த உயர் கல்வி கற்கும் யோகத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஞானம் பெற்றிருப்பார்கள். கலையில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். மருத்துவம். கணிதம், வானவியல், ஜோதிடம் அமானுஷ்யம், மந்திர தந்திரங்களில் ஆர்வம் உள்ளவராகவும் இருப்பார்கள்.

    எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மையையும், கண்ணியத்தையும் கடைப்பிடிப்பார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எதிலும் வேகமாக செயல்பட எண்ணுபவர்கள்போலீஸ், ராணுவம், மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், தீயணைப்பு, மாந்திரீகம், ஆராய்ச்சி, ஜோதிடம், விஞ்ஞானம், வானியல், வங்கி, ரசாயனம், மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட், கட்டிடக்கலை போன்ற துறைகளில் ஈடுபடக் கூடியவர்கள்.

    ஐ.ஆனந்தி

    ஐ.ஆனந்தி

    பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று பொருள் திரட்டும் வல்லமை நிரம்பியவர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்று படக் கூடியவர்கள். தந்தை வழி குலத்தொழில் மூலம் ஆதாயம் உள்ளவர்கள். அரசாங்க உயர் பதவியை அடைய விரும்புபவர்கள். அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். தொழில் உத்தியோகத்தின் மூலம் நிலையான நிரந்தரமான பெயர், புகழ், அந்தஸ்து உண்டு. ராசி அதிபதி செவ்வாயும், தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரனும் பலம் பெற்றால் காதல் திருமணம் நடக்கும். சுக்ரன் பலம் குறைந்தால் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணைவியிடமும், பிள்ளைகளிடமும் பாசமாக இருப்பார்கள். அவர்கள் தன்னைப் போலவே நீதி, நேர்மை தவறாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். பெரிய நோய்கள் அண்டாது. எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் விளங்குவார்கள். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பார்கள். பூமி, மனை, வீடு, வாகனம் யாவும் வாங்கும் யோகம் இவர்களுக்கு கிடைக்கும்.

    கேது தசா: அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசா முதலில் வரும். கேது தசா மொத்தம் 7 ஆண்டுகள். செல் இருப்பு நீக்கி பிறந்த நேரத்தைக் கணக்கிட்டு கேது தசா எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பதை அறியலாம். குழந்தை பருவ ஜென்ம கேது தசா என்பதால் தாய் மற்றும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். சோம்பல் காரணமாக கல்வியில் மந்தம்

    சுக்கிர தசா: இரண்டாவது தசையாக வரும். சுக்கிர தசை மொத்தம் 20 ஆண்டுகள் நீடிக்கும். சுக்ரன் சம்பத்து தாரையின் நட்சத்திரம் என்பதால் சுக்ரன் கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் மேன்மையான பலன்கள் உண்டு. ஆரோக்கியமான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை தரும். வாழ்க்கைத் தரம் உயரும்.

    சூரிய தசா: சூரிய தசை 6 ஆண்டுகள் மட்டுமே நடக்கும் சிறிய தசையாகும். மூன்றாவது தசாவான சூரிய தசை விபத்து தாரையின் தசை என்பதால் சுமாரான முன்னேற்றத்தை மட்டுமே தரும். புதிய ஒப்பந்தங்கள், டாக்குமென்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஜாமீன், கடன் போன்றவற்றை எதிர்த்து நீந்த வேண்டியிருக்கும். இது மன உளைச்சல் மற்றும் பிரச்சனைகளை கொடுக்கும், உஷ்ண சம்பந்தமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.

    சந்திர தசா: நான்காவது தசா வரும் சந்திர தசை காலங்கள் 10 ஆண்டுகள் ஆகும். சேஷம தாரையின் நட்சத்திரம் என்பதால் இந்த காலத்தில் வீடு, வாகன யோகம் தொழில், உத்தியோக முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

    தாய், தாய் வழி உறவுகளின் ஆதரவும், ஆசியும் உண்டு. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வளத்தையும் தரும்.

    செவ்வாய் தசா: ஐந்தாம் தசாவாக வரும் செவ்வாய் தசை மொத்தம் 7 ஆண்டுகள் நீடிக்கும். பிரத்தியத் தாரையின் நட்சத்திரம் என்பதால் உடல் நிலையில், மன நிலையில் சிறுசிறு பாதிப்புகள் இருக்கும்.

    செவ்வாய் பலம் பெற்று சிறந்த பார்வையுடன் இருந்தால் பொருளாதார மேன்மையும், யோகமும் உண்டாகும். நிலம் வாங்கும் யோகத்தையும், நல்ல சுக வாழ்க்கையையும் பெறுவார்கள்.

    ராகு தசா: 6ம் தசையாக வரும் ராகு தசை சாதக தாரையின் நட்சத்திரம். மொத்தம் 18 வருட தசையில் ராகு சுபர் பார்வையுடன் சுபர் வீட்டில் வலுவாக அமைந்திருந்தால் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்கள் வசதி வாய்ப்புகளைப் பெறலாம்.

    குரு தசா: 7-வது தசையாக வரும் குரு 16 ஆண்டுகள் தசை நடத்துவார். இது வதை தாரையின் நட்சத்திர தசை என்பதால் ஆரோக்கிய கேடு, வயோதிகம் காரணமாக வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். குரு தசை முடியும் போது 80 வயதை கடந்து விடுவார்கள். கேதுவின் நட்சத்தி ரத்தில் பிறந்தவர்களுக்கு சனி, புதன் தசைகள் வரும் வாய்ப்புகள் குறைவு.


     அஸ்வினி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்:

    இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை சரஸ்வதி. சமநோக்கு நட்சத்திரம். இதன் அதிபதி கேது ஞான காரகன் என்பதால் ஆலய வழிபாடு மற்றும் சாஸ்திர பயிற்சியில் ஈடுபடுவதற்கும் ஏற்ற நட்சத்திரமாகும். அன்று தங்கம், வெள்ளி, வைரம், போன்ற ஆபரணங்கள் வாங்க லாம். இந்த நட்சத்திரம் மனித உடலில் தலைப் பகுதியை குறிக்கும் செவ்வாயின் மேஷ ராசியில் தலைமுடியைக் குறிக்கும் காரக கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் மொட்டை அடித்துக் கொள்பவர்கள் இந்த நட்சத்திரத்தில் அடித்துக் கொள்வது சிறப்பு. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க, அரைஞான் கயிறு கட்ட, பூணூல் போட திருமணத்திற்கு உகந்த நட்சத்திரமாகும். வண்டி, வாகனம், ஆடு, மாடு கால்நடைகள் வாங்க, மாட்டு வண்டி வாங்க, வயல்களை உழுவதற்கும், மரம் நடுவதற்கும் ஏற்ற நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் சிவபெருமானை வணங்கிவிட்டு அரசு சம்பந்தமான காரியங்களில் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி உண்டாகும். அரசாங்கத்தில் உயர் பதவியை அடைய விரும்புபவர்கள் அரசியல் செல்வாக்கு பெற விரும்புபவர்கள் பெயர் புகழ் அடைய விரும்புபவர்கள் தொடர்ந்து ஆறு மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் திருவண்ணாமலை சென்று அங்குள்ள அருணாசலேஸ்வரரை வழிபட்டு வந்தால் நினைத்த பதவியை அடையலாம். இவர்கள் மஞ்சள், சாதம்,பொன் தானம், செய்வது மிகச் சிறப்பு.

    நட்சத்திர பட்சி: . இராஜாளி

    யோகம் : விஸ்கம்பம்.

    நவரத்தினம் : வைடூரியம்

    உடல் உறுப்பு : மேல் பாதம்

    திசை: கிழக்கு

    பஞ்ச பூதம் : நிலம்

    அதி தேவதை : விநாயகர், சரஸ்வதி

    நட்சத்திர மிருகம் : ஆண் குதிரை

    நட்சத்திர விருட்சம் : எட்டி

    நட்சத்திர வடிவம்: குதிரை தலை

    அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

    அஸ்வினிக்கு நன்மை தரும் நட்சத்திர தாரைகள்.

    சம்பத்து தாரை : பரணி, பூரம், பூராடம்

    சேம தாரை: ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்.

    சாதக தாரை : திருவாதிரை, சுவாதி, சதயம்.

    பரம மித்ர தாரை: ஆயில்யம், கேட்டை, ரேவதி.

    பொதுவான பரிகாரங்கள்

    இது கேதுவின் நட்சத்திரம் என்பதால் தினமும் எமகண்டத்தில் விநாயகர் வழிபாடு செய்ய மேன்மையான பலன்கள் உண்டு.

    தினமும் பச்சை கிளிகளுக்கு தானியம் வழங்கிட பொருளாதா ரத்தில் தன்னிறைவு உண்டாகும். ஜென்ம நட்சத்திர நாளில் ஊர வைத்த கொள்ளு அல்லது கோது மையை குதிரைகளுக்கு வழங்க வாழ்க்கை வளமாகும். ஜென்ம நட்சத்திர நாளில் குல தெய்வ வழிபாட்டை தவறாமல் கடைபிடிப்பதுடன், முன்னோர்களின் நல்லாசியை பெற வேண்டும். இவர்களின் சாதக தாரையான 6 வது நட்சத்திரமான திருவாதிரை நாளில் நடராஜரை வழிபட வாழ்வில் வெற்றி பெற முடியும்.

    செல்: 98652 20406

    • நான் புகழின் உச்சத்தில் இருந்த 1990 கால கட்டம்.
    • நான் ஒருத்தி மட்டும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்ததை இப்போதும் நினைத்து கர்வப்பட தவறுவதில்லை.

    கண்ணே மீனா...

    என் நினைவெல்லாம் நீயே!

    கனவிலும் நீயே வருகிறாய்!

    உன் இதயத்தில் எனக்கொரு இடம் தருவாயா?

    கனவில் குடும்பம் நடத்துகிறேன். நனவில் நாம் குடும்பம் நடத்துவது எப்போது...?

    அடடே காதல் ரசம் சொட்ட எழுதி இருக்கிறாரே! இது மீனாவின் காதலர் எழுதிய கடிதமோ என்று நினைத்து விடாதீர்கள். எல்லாம் என் அன்புக்குரிய ரசிகர்கள் தான்.

    இது மட்டுமல்ல. இன்னும் எப்படியெல்லாமோ வர்ணித்து இருக்கிறார்கள். அவர்களின் வர்ணனையை பார்க்கும் போது காளிதாசன், கம்பன் முதல் இந்த கால புலவர்கள் வரை தோற்றுப் போவார்களோ என்று தான் நினைக்க தோன்றும்.

    நான் புகழின் உச்சத்தில் இருந்த 1990 கால கட்டம். அது கம்ப்யூட்டர் காலம் கிடையாது. கடித காலம். செல்போன்கள் வராததால் நிஜ காதலர்கள் கூட கடிதங்கள் மூலம் தான் காதலை பரிமாறி கொள்வார்கள்.

    நான் ஒருத்தி மட்டும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்ததை இப்போதும் நினைத்து கர்வப்பட தவறுவதில்லை.

    எல்லா ரசிகர்களுக்கும் மீனாவோடு பேச வேண்டும். போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அதை என்னால் தான் நிறைவேற்ற முடியவில்லை.

    காலில் சாதாரண சக்கரம் அல்ல. விமான சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்த கதை.

    ஒரு நாளில் தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஒன்றிரண்டு மணி நேரம் கிடைத்தால் போதும் என்று எண்ணுவேன். அந்த அளவுக்கு பிசி.

    எப்போதாவது வீட்டுக்கு வருவேன். குளித்து விட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவதற்குள் அடுத்த ஷூட்டிங் செல்வதற்கு நேரமாச்சு என்று எழுப்புவார்கள்.

    அம்மா என்னோடு ஷூட்டிங் வந்திருந்தால் என்னுடன் பேசுவதற்காக அப்பா காத்திருப்பார். அவரோடு கொஞ்சநேரம் பேசுவதற்கு கூட நேரம் கிடைக்காது. அதேபோல் தான் அப்பா வந்திருந்தால் அம்மாவின் நிலையும்.

    இப்படி நான் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் ரசிகர்கள் கடிதம் எழுதுவதில் இயந்திரத் தனமாக இருந்தார்கள்.

    அப்போதெல்லாம் தபால் கார்டு, தபால் உறை, இன்லேன்ட்டில் தான் கடிதம் எழுதுவார்கள். தினமும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். தபால் காரர் தினமும் சைக்கிளில் வியர்க்க விறுவிறுக்க கடிதங்கள் கொண்டு வருவார்.

    ஒரு கட்டத்தில் தினமும் வேண்டாம். வாரத்தில் 2 நாட்கள் எடுத்து வாருங்கள் என்றேன். அவ்வாறு அவர் சேகரித்து எடுத்து வருவதே இரண்டு மூன்று மூட்டைகள் தேறும்.

    என் மீது அன்பு வைத்து எழுதிய ஒவ்வொரு கடிதத்துக்கும் பதில் எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் முடிய வில்லையே? என்ன செய்வது?

    இதற்காகவே இரண்டு உதவியாளர் நியமித்தேன். தினமும் கடிதங்களை படித்து விட்டு அதற்கு உரிய பதிலை எழுதி அனுப்ப வேண்டும். அது மட்டும் தான் அவர்கள் வேலை.

    அதிகமாக தமிழ் நாட்டில் இருந்தும் அதற்கு அடுத்ததாக தெலுங்கு, மலையாளத்தில் இருந்தும் ரசிகர்கள் கடிதங்களை எழுதி குவித்தார்கள்.

    காதல் கொண்ட நெஞ்சங்கள் என் மீது அக்கறை கொண்டவர்கள் என் நடிப்பை பார்த்து, வியந்து பாராட்டியவர்கள் என்று பல ரகங்களில் ரசிகர்களை பார்த்தேன். பெரும்பாலும் பல ரசிகர்கள் போட்டோ கேட்டிருப்பார்கள். அவர்களுக்கு கையெழுத்து போட்டு போட்டோக்களையும் அனுப்பி வைப்பேன்.


    இதற்காகவே ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும், 'குளோஸ் அப்பில்' நூற்றுக்கணக்கான புகைப்பட பிரதிகளை எடுத்து வைத்திருப்பேன். அந்த வகையில் ஆயிரக்கணக்கான புகைப் படங்களை அனுப்பி இருக்கிறேன்.

    எவ்வளவோ ரசிகர்கள் ரத்தத்தில் கடிதம் எழுதி இருப்பார்கள். அவற்றை பார்க்கும் போது இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.

    ஆனால் ஒவ்வொருவருடைய ஆசையும் வித்தியாசமானது. ஒருவர் அவர்கள் வீட்டுக்கு அழைத்திருப்பார். இன்னும் சிலர் வீட்டுக்கு வந்து சந்திக்கலாமா என்று கேட்டிருப்பார்கள்.

    ரசிகர்கள் இவ்வளவு வெறித்தனமாக இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டதும் உண்டு.

    ஷூட்டிங் நடக்கும் இடங்களிலும் ரசிகர்களின் அன்புத்தொல்லை அதிகமாக இருக்கும். அதை சமாளிக்க பெரும்பாடுபட்டு இருக்கிறேன்.

    சென்னை திருவொற்றியூர் அருகே சிட்டிசன் படப்பிடிப்பு நடந்தது. காரில் தான் செல்வேன் என்று வழி நெடுக கும்பல் கும்பலாக நிற்பார்கள். எத்தனை இடத்தில் இறங்கி அவர்களுக்கு கை காட்ட முடியும்?

    எப்போதும் தான் படப்பிடிப்புக்கு செல்வது? ரசிகர்கள் கண்ணில் இருந்து தப்பிப்பதற்காக படப்பிடிப்பு குழுவினர் செல்லும் பெரிய வேனில் ஏறி சென்றதும் உண்டு.

    அப்போதெல்லாம் 'ஆட்டோகிராப்' வாங்கும் பழக்கம் அதிகமாக உண்டு. ரூபாய் நோட்டு, துண்டு காகிதங்களில் கூட கையெழுத்து வாங்கி செல்வார்கள்.

    ஸ்கூல் பசங்க புத்தகத்தில் கையெழுத்து கேட்பார்கள். பள்ளியில் திட்டுவார்கள் என்று சொல்லி புத்தகத்தின் கடைசி பக்கத்தில் கையெழுத்து போடுவேன்.

    நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம். அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம் என்று பழைய பாடல் ஒன்றை கேட்டிருக்கிறேன். நிஜத்திலும் அதை போலவே ரசிகர்களும் இருக்கிறார்கள்.

    பொதுவாக நடிகைகள் திருமணமானதும் ஈர்ப்பு குறைந்துவிடும். ஆனால் இன்று வரை ரசிகர்கள் எழுதும் அன்பு கடிதங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

    இன்னும் பல ஆச்சரியமான தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்...)

    • பொருட்கள் பெறுபவருக்கு பலன் அளிப்பதாக இருக்க வேண்டும்.
    • கொடுப்பதனை மகிழ்வோடு ஏற்க வேண்டும்.

    வீட்டில் கல்யாணம், கிரக பிரவேசம், பிறந்த நாள் இப்படி விழாக்கள் நடைபெறும் போது உற்றார், உறவினர், நட்பு வட்டாரம் அனைவராலும் பரிசுப் பொருட்கள் குவியும். இதில் ஒரே மாதிரிப் பொருட்கள் பல இருக்கும். இப்போது மக்கள் சற்று சிந்தித்து அவர்கள் தேவை என்ன என்பதனை முன்கூட்டியே அறிந்து வாங்கிக் கொடுக்கின்றனர்.

    கொடுக்கும் பொருட்கள் பெறுபவருக்கு பலன் அளிப்பதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை அனைவருக்கும் உள்ளது. பலர் பணமாக கொடுப்பர். தேவைக்கேற்ப பெறுபவரே வாங்கிக் கொள்ளட்டும் என்று நினைப்பர். ஆனால் பரிசினை பெறுபவர்கள் கொடுப்பவரின் அளவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொடுப்பதனை மகிழ்வோடு ஏற்க வேண்டும்.

    ஆயினும் எல்லா நாடுகளிலும் மக்களுக்கு சில சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் இருக்கின்றன.

    * கூர்மையான பொருட்கள் கத்தி, கத்திரிக்கோல் இவற்றினை யாரேனும் பரிசாக தந்தால் உதாரணமாக சமையலறை கத்தி, கத்திரி கோல், வரவேற்பறையில் அலங்கார மாக சுவற்றில் மாட்டும் போர்வாள், ஈட்டி இவற்றினை கண்டிப்பாய் பரிசாகப் பெறக்கூடாது. இது வாங்குபவர், பெறுபவர் இரு வருக்கும் இடையே பிரிவினை, மனஸ்தாபத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பரவலாக இருகின்றது. மாறாக இதனை உரிய பணம் கொடுத்து ஏற்றுக் கொள்ளலாம்.

    * பல கலாச்சார பிரிவுகளில் ஷூ, செருப்பு இவற்றினை பரிசாக அளிப்பது என்பது 'நீ என்னிடம் இருந்து சென்று விடு' என்று மறைமுகமான பொருளினை அளிக்கின்றது என்று நம்புகின்றனர். எனவே அநேகர் இத்தகு ஷூ, செருப்பு போன்றவற்றினை பரிசளிப்பதும் இல்லை, பெறுவதும் இல்லை.

    * கடிகாரங்கள்- கையில் கட்டுவது, சுவற்றில் மாட்டுவது, மேஜையில் வைப்பது போன்ற கடிகாரங்களையும் சிலர் பரிசு அளிப்பதில்லை. இதனை நல்ல சகுனமாக கருதுவ தில்லை.

    * முன்பெல்லாம் அழகிய எம்ப்ராய்டரி செய்த கைக்குட்டைகளை பெண்ணை விரும்பும் ஆணா ஆணை விரும்பும் பெண்ணோ பரிசுப் பொருட்களாக கொடுப்பர். ஆனால் தற்போது பல வருடங்களாக இது இல்லை. காரணம் கை குட்டை கண்ணீைர துடைக் கும் பொருள் என்று கூறப்பட்டதால் நம்பாத வர் கூட நமக்கேன் வம்பு என்று அதன் பக்கமே செல்ல மாட்டார்கள்.

    * முத்துக்கள் பரிசளிக்கும் போது நம் ஊரில் கூட அதிக கவனம் கொடுப்பார்கள். ஏனெனில் முத்துக்கள் சிலருக்கு அதிர்ஷ்டமாக அமையும். சிலருக்கு அதிர்ஷ்டம் இல்லாது அமையும் என்பது அவர்களது நம்பிக்கை.

    இதனால் தான் நம் ஊரில் மங்களகரமாக வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ என அனைவரும் விரும்பும் மங்களப் பொருட்களை சேர்த்தே அளிக்கின்ற னரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    மேற்கூறப்பட்டவைகள் சிலருக்கு நம்பிக்கை இருக்கலாம். சிலர் மூட நம்பிக்கை எனலாம். இவை அவரவர் மனநிலையினைப் பொறுத்தது. இருந்தாலும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது.

    சிலருக்கு ஒரு பழக்கம். சதா சர்வ காலமும் ஏதா ஒரு நிகழ்வு, செய்தி, இப்படி ஏதோ ஒன்றினைப் பற்றி விடாது நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களால் எந்த ஒரு செயலினையும் முழுமை யாக செய்ய முடிவதில்லை. இவர்கள் சில விஷ யங்களை பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.

    * நம் எண்ண ஓட்டங் களை நாமே ஆராய வேண்டும். அவை உப யோகமானதா? முன்னேற்றத்திற்கானதா? அல்லது பயத்தின் காரணமாக ஏற்படுகின்றதா? என்று ஆராய வேண்டும். இது ஒருவரின் முன்னேற்றத் திற்கு பெரும் உதவியாக இருக்கும்.

    * எந்த ஒரு வேலையை செய்தாலும் அதிலேயே முழு கவனம் இருக்க வேண்டும். அந்த நொடி யில் இருந்து ஒவ்வொரு நொடியிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

    * ஒரு பிரச்சினை தொடர்ந்து இருக் கின்றதா? அதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம்- ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஒதுக்கி அதற்காக செயல் படுங்கள், சிந்தியுங்கள். மற்ற நேரத்தில் அன்றாட பணிகளை முறையாய் செய்யுங்கள்.

    * தேவையில்லாத செய்திகளை, ஊர் வம்புகளை தலையில் போட்டுக் கொள்ளக் கூடாது. இவற்றையெல்லாம் முயற்சி செய்யலாமே.

    விஷ்ணுசகஸ்ர நாமம்- பொதுவில் இந்து மத நிகழ்ச்சிகளில் விஷ்ணு சகஸ்ர நாமமும், லலிதா சகஸ்ர நாமமும் ஒலி நாடா மூலமாவது ஒலித்துக் கொண்டே இருக்கும். அம்மன் கோவில்களில் கூட விஷ்ணு சகஸ்ர நாமம் ஒலிக்கச் செய்வார்கள். அம்பிகைக்கு விஷ்ணு சகஸ்ர நாமம் கேட்பதில் அத்தனை விருப்பம் என்பர்.

    விஷ்ணு சகஸ்ர நாமத்தின் சிறப்புகள் என்ன என்பதனைப் பார்ப்போம்.

    * மூன்று மிக உயர்ந்த ஆச்சார்யர்கள் இதற்கு பாஷ்யம், விளக்க உரை எழுதியுள்ளனர் அவர்கள் ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜ சார்யா, ஸ்ரீ மத்வாச்சார்யா ஆகியோர் ஆவர்.

    * வைஷ்ணவர்கள் இல்லாத வர்களும் தங்கள் வீடுகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் ஒலிக்கச் செய்வதோ, பாராயணம் செய்வதோ நடைமுறையில் உள்ளது.

    * பிரிந்த ஆத்மா நற்கதியாகவும் இதனை பாராயணம் செய்கின்றனர்.

    * நோய்கள் தீர, பிரச்சினைகள் தீர, நல்ல வாழ்வு அமைய சங்கல்பம் செய்து சிலர் பாராயணம் செய்வர்.

    * இதன் உச்சரிப்பால் நரம்பு மண்டலம் பலப்படுவதாகக் கூறுகின்றனர்.

    * தூக்கமின்மை, தூக்கத்தில் கெட்ட கனவு போன்றவை நீங்குகின்றது.

    * மாலை 5 மணி முதல் 7 மணி வரை உள்ள நேரமே இதனைக் கேட்க உசிதமான நேரம் என்று கூறப்படுகின்றது.

    இப்படி பல நன்மைகள் கூறப்படுகின்றன. இது போல் மற்ற மதங்களிலும் அவரவர் வழிமுறைக் கேற்ற மத பிரார்த்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மன வலிமைக்கு நம் மனம் ஈடுபடும் ஒன்றினை இறுகப் பிடித்துக் கொள்ளலாமே. மீண்டும் குறிப்பிடுகிறோம். இது ஒருவரின் தனி உரிமை, நம்பிக்கை சம்பந்தப்பட்டது மட்டுமே. எந்த நிர்பந்தமும் இல்லை.

    சிவன் கோவிலை தரிசிப்பதன் பலன்கள்

    * திருத்த லங்காடு-பணி யாட்களின் சாப தோஷம் நீங்க

    * திருவள்ளியூர்- சோமாஸ்கந்தரை குலதெய்வமாகப் கொண்டவர்கள் வழிபட வேண்டிய தலம்

    * திருநன்ன லம்-ஞானம் பெற

    * திருமண தீச்சுரம்- கணவரும் தேவையின்றி சந்தேகப்படும் மனைவிமார்க ளும் வழிபட வேண்டிய தலம்

    * திருமருகல்- கணவன் மனைவி மகிழ்ச்சியாய் வாழ

    * திருச்சிக்கல்- பண்டு தாரர்களின் மனசு நீங்க

    * திருச்சேரி-மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு

    * திருக்குவளை- நவக்கிரக தோஷம் நீங்க

    * திருவைமூர்- பல தோஷங்கள் இருப்பவர்கள் வழிபட வேண்டிய தலம்

    * திருநெலிக்கா- கல்வியில் சிறந்து விளங்க

    * திருகடிக்குளம்- பிரச்சினைதீர

    * திருஆலங்குடி- புத்ர தோஷம் நீங்க

    * கொட்டாரம்- மன நிம்மதி பெற

    * திட்டை- சந்திரன் தோஷம் நீங்க

    * பசுபதி கோவில்- ராகு தோஷம் நீங்க

    * கோட்டையூர்- பாபங்கள் நீங்க

    * ஒமப்புலியூர்-சனி தோஷம் நீங்க

    * தர்மபுரம்- சிவ பக்தர்களை அவ மதித்த தோஷம் நீங்க

    * மயிலாடுதுறை- பாவங்கள் நீங்க

    * உத்திர தோச மங்கை- கெட்ட விதி மாற

    * ராமேஸ்வரம்- பித்ரு தோஷம் நீங்க

    * காளையார் கோவில் -இப்பிறப் பின் பயன் பெற மீத முள்ள 8 கோவில்கள் அடுத்த தொடரில் இடம் பெறும்.

    இவை அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. நீங்கள் அறிந்து கொள்ளவே பகிரப்பட்டுள்ளது.

    • நம்பிக்கை என்பது ஒரு மனநிகழ்வு.
    • பகட்டான வாழ்க்கை வாழ்வதிலேயே ஆர்வமும் காட்டுகிறார்கள்

    நம்பிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கும் நம்பிக்கைக்குரிய வாசகர்களே! வணக்கம்!.

    'வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்தும் மூலதனம்!' என்கிற கவிஞர் தாரா பாரதியின் கவிதை முத்திரை வரி, நம்பிக்கையின் வலிமையை எடுத்துரைக்கும் உறுதிமிக்க வரியாகும். `இழப்பதற்கு இனி ஏதுமில்லை!; கையிருப்பு என்பதும் ஒன்றுமில்லை!' என்று சோர்ந்து போய் உட்கார்ந்து இருப்பவர்களைச் சொடுக்கி, எழுந்து உழைக்கத் தூண்டும் வார்த்தைகள்தாம் இவை.

    வெறுங்கையோடுதான் வந்தோம்!; வெறுங்கையோடுதான் போகப் போகிறோம்! என்றாலும் அவற்றைப் பயன்படுத்தி நாள்தோறும் பொருளீட்டுவதற்கும், புகழீட்டுவதற்கும் கைகளின் விரல்களை மூலதனமாகப் பயன்படுத்துங்கள்! என்கிறார் கவிஞர் தாராபாரதி.

    விரல்கள் என்றால் உழைப்பு; ஈட்டுவதற்கும், ஈட்டிய பொருளை ஈந்து இசைபட வாழ்வதற்கும் அவை பயன்படுத்தப்பட வேண்டும்.

    நம்பிக்கை என்றால் நம்புவது!; உறுதியாக நம்புவது!; தமிழில் `நம்பு' என்றால் விரும்புவது என்று பொருள்; ஒரு செயல் அல்லது பொருளை அடைந்து வெற்றி காண வேண்டுமென்றால் அந்தச் செயலின்மீதும், அந்தப் பொருளின்மீதும் குறையாத ஆர்வமும் மாறாத விருப்பமும் உடையவர்களாக நாம் திகழ வேண்டும்.

    நமது விருப்பமும் ஆர்வமும் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கும்போது, நம்பிக்கையாக மாறி, வெற்றியை எட்டிப்பிடிக்கும் வரை போராட வைக்கின்றன.

    கடவுள் நம்பிக்கை தொடங்கி அன்றாட வாழ்வியல் நம்பிக்கை வரை ஆழ்ந்த விருப்பத்தோடும் உறுதியான மனோதிடத்துடனும் கையாளாதப்படாதவரை அவை உரிய பலன்களைத் தருவதில்லை.

    மழை வேண்டி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறு யாருமே கையில் குடைகொண்டுவரவில்லை என்று ஒரு பழைய கதை உண்டு.

    கையில் குடையோடு வந்த குழந்தையை பார்த்து மற்றவர்கள் ஏளனமாய்ச் சிரித்ததோடு, கடவுள் என்ன அவ்வளவு விரைவாக நமது வேண்டுதலுக்குச் செவிசாய்த்து விடுவார் என்கிற நம்பிக்கையா? எனக் கேட்கவும் செய்தனர்.

    ஆனால் பிரார்த்தனை முடிந்து ஆலயத்தை விட்டு அனைவரும் வெளியேறும்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டி அந்த குழந்தை தவிர்த்து மற்ற அனைவரையும் நனைத்துவிட்டது;

    முழுநம்பிக்கையோடு எதைச் செய்தாலும் நிச்சயம் பலனுண்டு என்பதற்கு, அந்தச் சிறு குழந்தையின் நம்பிக்கை மற்ற எல்லோருக்கும் பெய்த மழையாகி விட்ட கருணை சிறப்பானது.

    நம்பிக்கை என்பது ஒரு மனநிகழ்வு; அதற்கு எதிரான சொல் அவநம்பிக்கை. சிலருடைய வாழ்க்கைச் செயல்பாடுகள் எப்போதும் அவநம்பிக்கையிலேயே தொடங்கும். அவர்களிடம் `மணி என்ன ஆகிறது?' என்று கேட்டால், ' இப்போது மணிகேட்டு என்ன செய்துவிடப் போகிறாய்? என்ன கலெக்டர் உத்தியோகமா பார்க்கப் போகிறாய்?' என்று எரிந்து விழுவார்கள்.

    எந்த வேலையில் ஈடுபட வேண்டுமென்றாலும், உடனே ஈடுபடாமல் அப்புறம் பார்த்துக் கொள்வோமே! என்று தள்ளிப் போடுவார்கள்; உடனே ஈடுபட்டாலும் `என்னத்தைச் செய்து! என்னத்தை ஆகப்போகிறது?' என்று நொந்துகொண்டே செயல்படுவார்கள். இப்படி அவநம்பிக்கையோடு ஈடுபடுபவர்களுக்கு சாதாரணமாக நடக்கிற காரியம்கூட நடக்காமல் போய்விடும்.

    எவ்வளவு கடினமான செயலாக இருந்தாலும், இனிமேல் நடக்கவே நடக்காது என்று முடிவுகட்டப்பட்ட செயலாக இருந்தாலும், நம்பிக்கை வைத்து மெய்வருத்தத்தோடு ஒரு செயலைச் செய்தால், அதற்கேற்ற கூலியாக வெற்றியின் பலன் கிட்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

    சிலருக்கு வாழ்க்கையில் யாருமே துணைக்கு இல்லாதது போன்றதொரு நிலைமை ஏற்படும். குடும்பத்தில் பெற்றவர், உற்றவர், பிள்ளைகள், கணவன், மனைவி என்று உள்ள உறவுகள் அத்தனையும் உதவிக்கு வராமல் கைவிட்டு விட்டார்கள் என்று வருந்தாதீர்.

    சமூகத்தில் நண்பர்கள், மனிதர்கள், வள்ளல்கள், படிப்பிற்கேற்ற பணிவாய்ப்பு என எவருமே துணையாக வரவில்லை எனக் கவலைப்படாதீர். பணிபுரியும் அலுவலகத்தில், மேலதிகாரிகள், கீழதிகாரிகள், சக அலுவலர்கள் என யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் போய்விட்டாலும் நொந்துபோகாதீர்.

    யார் இல்லாமல் போனால் என்ன? நம்பிக்கை என்ற ஒன்று மட்டும் இருந்தால் போதும்; அதைப்பற்றிக்கொண்டு இழந்த பொருள்கள், பிரிந்த சொந்தங்கள், கைநழுவிப்போன ஆட்சி அதிகாரம் பதவி சொத்து சுகம் அத்தனையையும் எளிதில் மீட்டுக்கொண்டு வந்து விடலாம்.

    ஓர் அருமையான உருவகக் கதை. ஓர் அழகான அறை. அந்த அறையின் இருளைப்போக்கி ஒளிமயமாக ஒளிரவைக்க நான்கு மெழுகுவர்த்திகள் ஏற்றிவைக்கப் பட்டுள்ளன. `அமைதி', `அன்பு', `வாய்மை', `நம்பிக்கை' என்பவை அங்கு எரிந்துகொண்டிந்த மெழுகுவர்த்திகளின் பெயர்கள்.

    `அமைதி' என்கிற மெழுகுவர்த்தி பேசத் தொடங்கியது," வன்முறை எண்ணம் பெருகிய மனிதர்கள் வாழுகிற உலகமாக இந்த உலகம் மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் வஞ்சக எண்ணம் கொண்டு ஒருவரையொருவர் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருக்கும் மனிதர்கள்; அதனால் உலக நாடுகளிடையே சண்டைகள்; போர்கள்.

    தனித்திருக்கும் மனித மனங்களிடையேயும் குடும்ப மனிதர்களிடையேயும் அமைதியில்லா நிலைகள் சண்டை சச்சரவுகள். எனவே 'அமைதி' யாகிய நான் ஒளிர்ந்து பிரயோசனமில்லை; நான் அணைந்து போகிறேன்" என்று அணைந்துபோனது.

    அடுத்து, 'அன்பு' என்ற மெழுகுவர்த்தி பேசியது." என்னுடைய இன்றியமையாமையை எல்லோரும் பேசுகிறார்கள்! ஆனால் யாரும் யாரோடும் அன்புடையவர்களாக நடந்து கொள்வதில்லை. உலகமெங்கும் மனிதர்களிடம் கோபமும் பொறாமையும் வன்முறையும் தலைவிரித்தாடுகிறது.

    அடுத்த உயிர்களிடம் அன்பும் கருணையும் காட்டும் மனிதநேயம் எவரிடமும் தென்படவில்லை. எனவே நானும் விடைபெற்றுக்கொள்கிறேன் என்று 'அன்பு' அணைந்து போனது.

    அமைதியும் அன்பும் அணைந்த அடுத்த வினாடியே, 'வாய்மை' பேசத் தொடங்கியது. பொய்யும் சூதும் போலியும் புனைவுகளும் பெருகிவிட்ட உலகில் வாய்மைக்கு ஏது இடம்?. உண்மை பேசினாலோ, உண்மையாக நடந்துகொண்டாலோ உரிய மரியாதையை யாரும் கொடுப்பதில்லை. வீண்பகட்டுக்கே மக்கள் அதிக மதிப்பளிக்கிறார்கள்!.

    பகட்டான வாழ்க்கை வாழ்வதிலேயே ஆர்வமும் காட்டுகிறார்கள்!. இப்படிப்பட்ட உலகில் உண்மைக்கு ஏது மரியாதை? நானும் மாய்ந்து போகிறேன்! என்று அணைந்துபோனது 'உண்மை'.

    மூன்று விளக்குகளும் அணைந்து போனதால் இருள் பெருகிப்போன அறைக்குள் ஒரு சிறுமி நுழைந்தாள். " ஐயோ! நான் என்ன செய்வேன்! அமைதி! அன்பு! உண்மை! ஆகிய மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்து போயினவே! ஒளிவிட்டுப் பிரகாசித்த அறையில் தற்போது இருள் சூழ்ந்து காணப்படுகிறதே! " என்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள்.

    அப்போது எஞ்சியிருந்த 'நம்பிக்கை' என்னும் மெழுகுவர்த்தி பேசத் தொடங்கியது," சிறுமியே! கலங்காதே! மூன்று விளக்குகளும் அணைந்துபோனால் என்ன? அவற்றை மீண்டும் ஒளியேற்றி வைக்க 'நம்பிக்கை' எனும் விளக்கு நான் இருக்கிறேன்.

    வாழ்க்கையில் எதை இழந்தாலும் பரவாயில்லை; நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் அதுபோதும்; இழந்த மற்ற எல்லாவற்றையும் மீட்டுக் கொண்டுவந்து விடலாம்!".

    சிறுமி 'நம்பிக்கை' என்னும் விளக்கின் உதவியோடு, அமைதி, அன்பு, உண்மை ஆகிய மெழுகுவர்த்திகள் மூன்றையும் ஏற்றிவைத்து அறை முழுவதையும் மீண்டும் ஒளிமயமாக்கினாள். ஆம் அன்பர்களே நம்பிக்கையே துணையாய்க் கொண்டோர்க்கு இந்த உலகில் வெல்வதற்கு அரிதான செயல் என்று எதுவுமில்லை.

    துன்பப்பட்டே ஆக வேண்டும் என்பதுபோன்ற செயலில் ஈடுபடும்போதும் நம்பிக்கை மகிழ்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தித், துன்பத்தை இன்பமாக்கிடும் கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.

    உழைக்கும் உடம்பு சோர்வடையும் போதெல்லாம் நம்பிக்கைமனம் ஊக்கபானமாக உற்சாகம் தருகிறது. காற்றுப் புகமுடியாத அறைக்குள்ளும் ஒரு பெரிய யானையைப் புகுத்திவிடும் ஜாலத்தை நம்பிக்கை நிகழ்த்திக்காட்டும். எல்லா வெற்றிகளிலும் உழைப்புக் கால்பகுதியாக இருந்தாலும் பரவாயில்லை; மீதமுள்ள முக்கால் பங்கு நம்பிக்கையால் நிரப்பி வையுங்கள்; முடிவு அபார வெற்றியாகவே இருக்கும்.

    ஒரு பெரிய மலையை ஏறிச் சிகரம் தொடுவதற்கும், பலமைல் தொலைவுப் பாதையை நடந்து கடப்பதற்கும் முதலில் நாம் எடுத்து வைக்கவேண்டியது நமது ஒரு சிறு அடிமட்டுமே!. அந்த அடியும் நம்பிக்கை கலந்த அடியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். எல்லை தொடுதல் அப்போதே நிகழ்ந்துவிட்டதாய் முடிவுகட்டி விடலாம்.

    தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் சிலர் என்ன படித்தாலும் எப்படிப் படித்தாலும் மனத்தில் தங்க மாட்டேன்கிறது என்று வருத்தப்படுவார்கள். நம்பிக்கையோடு படித்தால் எந்தக் கடினப் பாடத்தையும் நொடியில் மனத்தில் தங்கும்வண்ணம் செய்துவிடலாம்; நம்பிக்கையோடு என்பது விருப்பத்தோடு படிப்பது; வேண்டா வெறுப்போடு படித்தால் நமது பெயர்கூடச் சமயத்தில் மறந்துபோகும்.

    சில மாணவர்கள், நன்றாகப் படித்திருப்பார்கள்; ஆனால் தேர்வுக்கூடத்திற்குள் சென்று அமர்ந்து, கேள்வித்தாளை வாங்கியவுடன் படித்த எல்லாமே மறந்துவிட்டது என்பார்கள். விருப்பப்பட்டு நம்பிக்கையோடு படித்த எதுவும் தேர்வுக்கூடத்தில் மறந்து போகாது.

    தேர்வுபயம் பற்றிக்கொள்ளும்போது இப்படித் தற்காலிகமான மறதிபோன்ற தீங்கு நிகழ்வதுண்டு. ஆயினும் கேள்வித்தாளை வாங்கும்போதே எளிமையான கேள்விகளே வரும்! அப்படி மாறி வந்தாலும் அவற்றிற்கு எளிமையாக விடையளித்துவிட என்னால் முடியும் என்கிற நம்பிக்கையோடு அமர்ந்தால், தேர்வுபயம் அகன்று போகும்.

    வாழ்க்கையில் வாய்ப்பு என்பது நமது வீட்டு வாசல் வழியாக வரும் என்று சிலர் வாசலைநோக்கி மட்டுமே காத்திருப்பர்; ஆனால் பலருக்கு ஜன்னல்கள் வழியாகவும் எட்டிப் பார்க்கலாம்; புழக்கடை வழியாகவும் புகுந்து பார்க்கலாம். கதிரவன் உதிப்பது கிழக்குத் திசையில்தான் என்றாலும் உலகில் ஒளி எல்லாத் திசைகளிலும் பரவிக்கிடப்பதுபோல நம்பிக்கையோடு பார்த்தால் எங்கும் ஒளிமயம்தான்.

    நம்பிக்கை பூரணமாக இருப்பவர்களுக்கு மனமும் உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும்; ஏனெனில் அவர்கள் எந்த இழப்பிற்கும், எந்தத் தோல்விக்கும், எந்தத் துன்பத்திற்கும் சோர்ந்துபோவதில்லை. எந்தச் செயலிலும் துளியளவு நம்பிக்கை இருந்தாலும் அதனைக் கடலளவு பெருக்கும் மகிழ்ச்சி உபாயம் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

    நம்பிக்கையாளர்களுக்கு, வெற்றி தோல்விகள் வெறும் எண்ணிக்கைகளே தவிர சாதனைக் கணக்குகள் அல்ல.

    நம்பிக்கையோடு கல்லைத் தின்றாலும் சீரணித்து விடும் திறமை பெற்றவர்கள் நம்பிக்கையாளர்கள். மருந்து மாத்திரைகளைத் தாண்டி நம்பிக்கையால் குணமடைந்து வந்தவர்களும் உண்டு. எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவரும் மாயவித்தையை நம்பிக்கை மட்டுமே தரக்கூடியது.

    தளர்ந்து போகாத முயற்சி, தோல்விகளைப் புறந்தள்ளிவிடும் அசாத்தியத் துணிச்சல், வலிகளைத் தாங்கிக்கொள்ளும் வலிமை, குறைந்து போகாத மகிழ்ச்சி இவையே நம்பிக்கை நமக்குத் தரும் அமிர்த ஊற்றுகள்.

    தொடர்புக்கு 9443190098

    ×