என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன்
- முதல் உலகப் போர் வருவதை முன் கூட்டியே சொன்னவர் அவர்.
- ஆந்திரபிரதேசம், தெலுங்கானா பிரிவினை பற்றியும் அவர் முன்னதாகவே எடுத்துரைத்தார்.
இன்று உதிக்கின்ற நாள் நல்ல நாளாக நமக்கு அமைய வேண்டும் என்று விரும்பாதோர் இல்லை. அது நல்ல நாள் தானா என்று அறிய விரும்புவோர் பலரும் ஜோதிடத்தை அணுகுவதில் வியப்பே இல்லை.ஆனால் அதே சமயம் ஜோதிடத்தை நம்பாதே என்று சொல்வோரும் உண்டு.
ஜோதிடத்தை உலக அரங்கில் புகழோங்க வைத்து அதை அறிவியல் ரீதியாக உயரத்தில் ஏற்றி பிரமிக்க வைத்தவர் பெங்களூர் வெங்கட் ராமன் ஆவார். பி.வி.ராமன் என்ற பெயரை ஜோதிட ஆர்வம் கொண்டோரில் அறியாதார் யாரும் இல்லை.
பிறப்பும் இளமையும்: பி.வி.ராமன் பெங்களூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1912-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று பிறந்தார். கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தவர் பெங்களூரில் பட்டப்படிப்பை முடித்தார். ஆனால் இயல்பான ஆர்வம் இவருக்கு ஜோதிடத்தின் மேலேயே இருந்தது. இதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தவர் இவரது பாட்டனாரானசூர்யநாராயண ராவ் என்னும் பிரபல ஜோதிடரே.
சூர்யநாராயண ராவ்: 1885-ம் ஆண்டு ஒரு நாள் தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் கர்நாடகத்தில் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த போது ஒரு இளைஞர் குப்பி ரெயில் நிலையத்தில் இறங்கினார்.
அப்போதுதான் ஷிமோகாவுக்கு எஸ்.எம். ரெயில்வே, ரெயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே அவர் மாட்டு வண்டியில்தான் ஷிமோகாவுக்குச் செல்ல வேண்டும். 150 மைல் தூரத்தில் உள்ள ஷிமோகாவை அடைய நாள் ஒன்றுக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்.
மாட்டு வண்டியில் ஏறிய இளைஞருக்கு நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஏழை வைதிகர் தென்பட்டார். அவரிடம் "நீங்கள் எங்கே போக வேண்டும்" என்று கேட்ட இளைஞருக்கு, "ஷிமோகாவுக்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்சைப் பார்க்கப் போகிறேன். அவரிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன். என் பெயர் சுப்பராய சாஸ்திரி" என்ற பதில் வந்தது.
அவரை, "என்னுடன் வண்டியில் வாருங்கள்" என்று அழைத்தார் அந்த இளைஞர். அடுத்த எட்டு நாட்களில் அவருடனான உரையாடல் அந்த இளைஞரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.
சகல வித கலைகளையும் நுட்பங்களையும் கூறும் இந்து மத நூல்களை அவர் அப்படியே ஒப்புவித்து அர்த்தமும் சொன்னார். இந்து மத நூல்கள் அனைத்தும் தற்காலத்திய அறிவியலுக்கு ஒத்து வராதவை என்ற எண்ணம் திடமாக இருந்த அந்த இளைஞரின் மனம் மாறியது.அந்த இளைஞர்தான் பி.வி.ராமனின் பாட்டனாரான சூர்யநாராயண ராவ்.
வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் ஜோதிடக் கலையை நன்கு கற்று பிரபலமான ஜோதிடராக ஆனார். முதல் உலகப் போர் வருவதை முன் கூட்டியே சொன்னவர் அவர். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தன் பேரனான பிவி.ராமனுக்கு ஜோதிடத்தின் நுட்பத்தை விவரித்து அவரைப் பெரும் ஜோதிடராக ஆக்கியவர் இவரே.
ச. நாகராஜன்
அஸ்ட்ராலஜிகல் மாகசைன்: 1895-ல் அஸ்ட்ராலஜிகல் மாகசைன் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஜோதிட சம்பந்தமான கட்டுரைகளை வெளியிட்டு உலகின் பார்வையை ஜோதிடத்தின் பக்கம் திருப்பினார் சூர்யநாராயணராவ். பல்வேறு ராஜாக்களும் மந்திரிகளும் வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டு பிரமித்தனர். இருபது வருடங்களுக்கும் மேலாக நடந்து வந்த பத்திரிகை அவரது உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது.
மிகுந்த கஷ்டப்பட்டு தன் பாட்டனார் ஆரம்பித்த பத்திரிகையை மீண்டும் 1936-ம் வருடம் ஆரம்பித்த பி.வி.ராமன் 1998 முடிய அதன் ஆசிரியராக தான் மறையும் வரை 62 ஆண்டுகள் இருந்தார். அதில்தான் அவரது கணிப்புகள் இடம் பெற்று வந்தன.அதில் அவர் குறிப்பிட்ட ஏராளமான கணிப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கு கீழே பார்க்கலாம்.
பாகிஸ்தான் பிரிவினை: 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினை ஏற்படும் என்பதை அவர் முன்னதாகவே உரைத்தார். ஆந்திரபிரதேசம், தெலுங்கானா பிரிவினை பற்றியும் அவர் முன்னதாகவே எடுத்துரைத்தார்.
காந்திஜி மறைவு: மகாத்மா காந்திஜியின் மறைவு குறித்து 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே அவர் சூசகமாகக் குறிப்பிட்டு விட்டார். "மாபெரும் இந்தியத் தலைவர் சனி கிரகம் கடகத்தில் நுழையும்போது கொல்லப்படுவார்" என்ற அவரது வரிகள் 1948, ஜனவரி 30-ம் நாள் காந்தியடிகள் சுடப்பட்டபோது மெய்யானது.
ஹிட்லரின் முடிவு: இரண்டாம் உலகப் போரால் நாளுக்கு நாள் உலகை ஹிட்லர் பயமுறுத்தி வந்த நேரம். உலக மக்கள் ஹிட்லருக்கு ஒரு முடிவு வராதா என்று ஏங்கி இருந்த நேரத்தில் 1943-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் எழுதினார் இப்படி: 11-10-1944 முதல் ஒன்பது மாதங்கள் சந்திரனின் தசாபுக்தி காலத்தில் ஹிட்லரின் முடிவு ஏற்படும். ஹிட்லரின் முடிவு கொடூரமாக அமையும்".
அவர் கூறியபடியே ஹிட்லர் 30-4-1945 அன்று தற்கொலை செய்து கொண்டார். ஹிட்லரைப் பற்றி அவர் எழுதிய கணிப்பைக் கூறும் புத்தகங்கள், கட்டுரைகள் ஜெர்மனியில் நாஜிக்களால் எரிக்கப்பட்டன. அவை அங்கு ஹிட்லரால் தடை செய்யப்பட்டன.
சீன ஆக்கிரமிப்பு, இந்தியா- பாகிஸ்தான் போர்: இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கும்: போர் உருவாகும் என 1962-ல் அவர் முன்னதாகவே உரைத்தது அப்படியே மெய்யானது.
அதே போல இந்தியா-பாகிஸ்தான் போர் பற்றி 1965-லும் 1973-லும் அவர் எழுதியது அப்படியே பலித்தது. பங்களாதேஷ் விடுதலை, அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் வீழ்ச்சி, சுகர்ணோவின் வீழ்ச்சி, அயூப்கானின் ராணுவ ஆட்சி, கென்னடி சுடப்பட்டது, மார்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட ஏராளமான விவரங்களைத் துல்லியமாகக் கணித்து அவர் முன்னதாகவே எழுதியதும் உரைத்ததும் உலக மக்களை வியக்க வைத்தது.
அரபு – இஸ்ரேல் போர்: 1973 ஜனவரி மாதம் அராபிய – இஸ்ரேல் போர் வரப்போவதை அவர் எழுதி விட்டார். அதாவது பத்து மாதங்களுக்கு முன்பே கூறி விட்டார்.
ஜோதிடருக்கான தகுதிகள்:
ஒரு நல்ல ஜோதிடருக்கான தகுதிகளை நமது அறநூல்கள் விவரிக்கின்றன.
இந்தக் கலை அகன்றது, ஆழமானது, நுட்பமானது. ஆகவே இதை தகுந்த வல்லுநர் ஒருவரிடமிருந்து முறையாகக் கற்க வேண்டும்.அத்துடன் உள்ளுணர்வு இருப்பவர்களே இதைத் திறம்பட கற்று பலன்களைச் சொல்ல முடியும்.
மனிதர்களின் பலகீனங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆபத்து வருவதாக பயமுறுத்தி பரிகாரம் செய்கிறேன் என்று பணம் பறிப்பவர்களால் ஜோதிடம் ஒரு இழிநிலையை அடைந்தது.
இப்படி ஒரு இழிநிலை இருந்த காலத்தில் தோன்றி அதை புகழோங்கச் செய்தவர் வராகமிகிரர்.
அதைப் போலவே தாழ்ந்து கிடந்த ஜோதிடக் கலையை உயர ஏற்றியதால் பி.வி.ராமனுக்கு நவீன வராஹமிஹிரர் என்ற பொருளில் அபிநவ வராகமிஹிரர் என்ற கவுரவப்பட்டப் பெயர் அளிக்கப்பட்டது.
இது தவிர ஏராளமான விருதுகள் அவரை வந்தடைந்தன. 1947-ல் பிதகோரியன் பல்கலைக்கழகம் அவருக்கு பி.எச்.டி அளித்து அவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது. 1947-ல் ராயல் அஸ்ட்ரானமிகல் சொஸைடியில் அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976ல் ஜூன் மாதம் குமாவோன் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.
ஐ.நா.வில் உரை: ஜோதிட மேதையின் புகழ் பெருகப் பெருக அவருக்கு உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து அழைப்புகள் வர ஆரம்பித்தன. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் ஜோதிட மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அவர் பங்கேற்றார். நியூயார்க்கில் நடந்த பன்னாட்டு ஜோதிட மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ஹாலந்து கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு சங்கங்களும் பல்கலைக் கழகங்களும் அவரை உரையாற்ற அழைத்தன. ஜோதிஷ ரத்னா, ஜோதிஷ பானு, ஜோதிஷ விஞ்ஞான மார்த்தாண்ட போன்ற பல பட்டங்கள் அவருக்கு அளிக்கப்பட்டன.
1970-ம் ஆண்டு நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபையில் நவீன யுகத்தில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் ஜோதிடம் பற்றி அவர் ஆற்றிய உரை பன்னாட்டுத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றது. ஜோதிடமும் ஒரு அறிவியல் துறையே என்ற அவரது ஆணித்தரமான சொற்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோரை அவர் பால் ஈர்த்தது.
ஏராளமான புத்தகங்களை அவர் ஆங்கிலத்தில் எழுதினார். அவை கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின.
அவரது பத்தொன்பது புத்தகங்களில் அவரது சுயசரிதையான ஆடோ பயாகிராபி ஆப் எ வேதிக் அஸ்ட்ராலஜர் புகழ் பெற்ற ஒன்றாகும். வடமொழியில் இருந்த பல ஜோதிட நூல்களை அவர் ஆங்கிலத்தில் அழகுறத் தரவே ஜோதிட ஆர்வலர்கள் உற்சாகத்துடன் அவற்றை வரவேற்றனர்.
குடும்பம்: மிக இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது.
ஆறு மகன்களும், இரு மகள்களும் கொண்ட பெரிய குடும்பத்தைத் திறம்பட இவரது மனைவி ராஜேஸ்வரி ராமன் நிர்வகித்ததோடு தானே யோகா பள்ளி ஒன்றையும் நிறுவி யோகா பயிற்சியையும் அளித்து வந்தார்.
ராமன் கடுமையான உழைப்பாளி. காலை முதல் நள்ளிரவு வரை தினமும் சுமார் 18 மணி நேரம் அவரது பணி தொடர்ந்தது.
கர்நாடக இசை மற்றும் நடனத்தில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். யோகாவும், டென்னிசும் அவர் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருக்க உதவின.
மறைவு: பிறருக்குப் பலன்களைத் துல்லியமாக உரைத்த ஜோதிட மேதை தன் இறுதி பற்றியும் சரியாகக் கூறிவிட்டார்.
1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே தனக்கு இறுதி நெருங்கி விட்டதை அவர் அறிவித்தார். அது போலவே முதல் நாள் ஏற்பட்ட மாரடைப்பால் மறுநாள் 1998, டிசம்பர் மாதம் 20-ம் நாள் அவர் மறைந்தார்.
ஜோதிடம் உண்மையா, பொய்யா?
நவீன யுகத்தில் பெரிதும் கேட்கப்படும் ஒரு கேள்வி ஜோதிடம் உண்மையா? பொய்யா என்ற கேள்வி.
இதற்கு உலகமே போற்றும் ஜோதிட மேதையின் பதில் இது தான்:-
இந்துக்களின் வானவியல் மற்றும் ஜோதிடக் கலை அற்புதமானது. உதாரணத்திற்கு கிரகணத்தைச் சொல்லலாம். எவ்வளவு துல்லியமாக அது கணிக்கப்பட்டு வந்தது!
போலி ஜோதிடர்களாலும், கத்துக்குட்டிகளாலும், பிதற்றல் பேர்வழிகளாலும் அது தன் மகிமையை இழந்து கூலிக்கு மாரடிக்கும் இழிநிலையை அடைந்து விட்டது.
பலன்களைத் துல்லியமாகக் கூறும் ஜோதிடம் மிக பிரமாதமானது. துல்லியமான சரியான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்பதை அதன் எதிரிகளும் கூட உணர்ந்து அது அறிவியல் பூர்வமானது என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.
நவீன வராகமிஹிரர்: ஜோதிடத்தை அறிவியல் ரீதியானது என்பதை சுட்டிக்காட்டி அதை அறிவியல் அங்கீகாரம் பெற வைத்த மாமேதை டாக்டர் பி.வி.ராமன் அவர்களை நவீன வராகமிஹிரர் என்று கூறுவது பொருத்தம் தானே!






